மார்பின் குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு, “எனக்கு இப்போது பதில் வந்தே ஆக வேண்டும்” என்ற பார்வையுடன் நின்றுக் கொண்டிருந்தவனை பார்க்கையில் சுப்ரியாவின் தொண்டைக் குழி தானாக ஏறி இறங்கியது.
வேலையில் சிறு தவறையும் பொறுத்துக் கொள்ளாதவன் என்பதால் சின்ன பயத்தோடு தான் பார்த்தாள்.
“இல்ல சார்” என்று அவள் தயக்கத்துடன் இழுக்க, வீரா பார்வையை மாற்றிக் கொள்ளவே இல்லை.
“யாரை கேட்டு க்ரிஸான்தமம் வாங்கினீங்க சுப்ரியா? நான் தான் அதை லிஸ்ட்டில் இருந்து எடுத்துட்டேன் இல்ல? அப்புறம் எப்படி அந்த பூ டெலிவரி ஆகுது? அதை நீங்க சேர்த்தீங்களா?”
“ஆமா சார். நான் தான் சேர்த்தேன். அது வந்து, ஒரு கஸ்டமர் டெய்லி கேட்டுட்டே இருந்தாங்க. இல்லைனு சொல்ல முடியல. அதான், ஆர்டர் பண்ணேன் சார். சாரி” சுப்ரியா சொல்ல, வீராவால் கோபப்படக் கூட முடியவில்லை.
வாடிக்கையாளர் கேட்டால், வாங்கிக் கொடுக்கத் தான் வேண்டும்.
ஆனால், அதே வாடிக்கையாளருக்கு அந்தப் பூவை கொடுத்து விடக் கூடாது என்று தானே அவன், “க்ரிஸான்தமம்” வாங்குவதை அடியோடு நிறுத்தினான். முன்தினம் மலர் கேட்கும் போது அந்த பூவை எடுத்து அவளிடம் நீட்டுவதற்குள் அவன் பட்ட பாடு.
‘ம்ம், யாருக்கும், எதையும் சொல்லி புரிய வைக்க முடியாது.’
அவனுக்கே அவன் நிலை புரியாத போது, மற்றவருக்கு என்ன சொல்லி விளக்குவான் அவன்.
“ஓகே, சுப்ரியா. இந்த டைம் ஓகே. ஆனா, இனி வாங்க வேண்டாம். யாரும் கேட்டா, இல்லைனு சொல்லுங்க. பார்த்துக்கலாம். சரியா?” அவன் சொல்ல,
“சரிங்க சார்” என்றாள் சுப்ரியா.
மனதில் ஒரு வித நிம்மதி பரவ, தனது வேலையை கவனிக்க ஆரம்பித்தான் வீரா. வேலைக்கு இடையில் அலைபேசி அடித்துக் கொண்டேயிருக்க, யாரென்று பார்த்தவன், அழைப்பை ஏற்கவேயில்லை.
அதுவாக அடித்து ஒயட்டும் என்று விட்டுவிட்டு தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
அவனது பெற்றோர் அவனுக்கு கொடுத்த கெடு முடிந்து விட்டிருக்க, நேராக வந்து நின்றிருந்தனர்.
“எவ்வளவு நேரமா கால் பண்றேன். துரைக்கு போனை எடுத்து பேச முடியாதோ? அப்படி என்ன புடுங்கற வேலை பார்த்துட்டு இருக்க? பத்து ரூபாய்க்கு பூ வித்துட்டு இருக்க பய…” ருத்ரமூர்த்தி அறை கதவை திறந்த வேகத்தில், வந்து விழுந்தன வசவுகள்.
வீரா பார்த்துக் கொண்டிருந்த அலுவலக கோப்பில் இருந்து பார்வையை உயர்த்தாமல், “அப்படியே வெளிய போய்டுங்க. அவுட்” என்றான் கர்ஜனையாக.
“டேய், அப்பாக்கு மரியாதை கொடுத்து பேசு டா” கணவனை சொன்னதும் பொறுக்க முடியாமல், கத்தினார் கலையரசி.
“மரியாதை கொடுத்தா தான், மரியாதை திரும்ப கிடைக்கும். அப்பன், சுப்பன் என்ன? அது எந்த கொம்பனா இருந்தாலும் சரி தான்.” இருக்கையில் சாய்ந்து அமர்ந்து முகத்தை மட்டும் நிமிர்த்தி அவன் சொல்ல, ருத்ர மூர்த்தியின் கழுத்து நரம்புகள் கோபத்தில் துடித்தது.
“என்னடா ரொம்ப துள்ளிட்டு இருக்க? மகனாச்சேன்னு கொஞ்சம் இடம் கொடுத்தா, ரொம்ப ஆடுற?” பல்லைக் கடித்தபடி அவர் கேட்க,
“ருத்ரமூர்த்திக்கு ஒரே பையன் தானே? உலகத்தை பொறுத்த வரை உங்களுக்கு ஒரே பையன் தான். அந்த பையன் நானில்ல. அதனால…”
“டேய். என்னடா பேசுற?” கலையரசி கத்த,
“பிளீஸ். தயவு செஞ்சு என் நிம்மதியை கெடுக்காம ரெண்டு பேரும் இங்கிருந்து கிளம்புங்க. உங்க கூட பேசவோ, சண்டை போடவோ எனக்கு சத்தியமா தெம்பில்ல. ஒரே விஷயத்தை பேசி, பேசி எனக்கு அலுத்து போச்சு.” சலிப்புடன் அவன் சொல்ல,
“ஏன்டா, சாக கிடக்கும் போது மட்டும் நாங்க உனக்கு தேவைப் பட்டோமோ? ஹாஸ்பிடல் செலவு, வெளிநாடு போய் மேல படிக்க, பிசினஸ் தொடங்க, எல்லாத்துக்கும் அப்பா தேவைப்பட்டார். அவர் பணம் தேவைப்பட்டுச்சு. அவரோட பவர் தேவைப்பட்டுச்சு. ஆனா, அவருக்கு ஒன்னுன்னா, நீ செய்ய மாட்ட. அப்படித் தானே?” தீர்க்கமாக கலையரசி கேட்க, அவரையே பார்த்தது பார்த்த படி அமர்ந்திருந்தான் வீரா.
சில நிமிட அமைதிக்கு பின், “என்னை அப்படியே சாக விட்டிருக்கலாம்ல? ஏன் காப்பத்துனீங்க? ஏன் ட்ரீட்மென்ட் பார்த்தீங்க? நான் கேட்டேனா? இல்ல நான் கேட்டேனா? அன்னைக்கே நிம்மதியா செத்து தொலைஞ்சு இருப்பேன்.”
“என்ன பேச்சு பேசுறான் பாருங்க?” கொதித்துக் கொண்டு வந்தார் கலையரசி.
“என்ன பேசறேன்? உண்மையை தானே பேசறேன்?” வீரா அழுத்தமாக கேட்க, இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“நீங்களே ட்ரீட்மென்ட் பார்த்தீங்க. நீங்களே வெளிநாடு அனுப்பி வச்சீங்க. நான் விரும்பி மேல படிச்சேன். அவ்வளவு தான். அதுல என்ன தப்பு? நீங்க செலவு பண்ண பணத்தை எல்லாம் ஒரு நாள் மொத்தமா கொடுத்துடுவேன். இப்பவும், உங்க புருஷன் கிட்ட கொஞ்சம் கொஞ்சமா கொடுத்துட்டு தான் இருக்கேன். வேணும்னா அவரையே கேளுங்களேன்.” அப்பாவை கண் காட்டி அவன் சொல்ல,
“கடவுளே. என்ன வேணும் உங்க ரெண்டு பேருக்கும்..” தலையை கையில் தாங்கிக் கொண்டு கத்தினான் வீரா.
“ஐயோ, என்னப்பா பண்ணுது வீரா? தலை வலிக்குதா?” கலையரசி, இம்முறை மகனுக்காக உண்மையாக பதறவே செய்தார். அதுவும் நடிப்பாக தான் தெரிந்தது அவன் கண்களுக்கு.
அவனுக்கு நன்றாக நினைவு தெரிந்த நாளில் இருந்து தனியா தான் இருக்கிறான். பெற்றவர்களின் பாசத்தை பெரிதாக அனுபவித்தே கிடையாது அவன். பள்ளி படிப்பு முழுவதும் ஹாஸ்டல் வாசம். கல்லூரி படிப்பு தனி வீட்டில் தங்கிப் படித்தான். அதன் பின்னர் நடந்தது எல்லாம் கொடும் கனவு. அவன் வாழ்வின் இரண்டு நீண்ட வருடங்களை முழுதாக தொலைத்தவன் அவன்.
அவனிடம் இன்றும் என்ன எதிர்பார்க்கிறார்கள் அவனை பெற்றவர்கள்? இன்னும் இழக்க அவனிடம் என்ன இருக்கிறது?
இருக்கிறதே! அவனது மிச்ச சொச்ச வாழ்க்கை. அரசியல் ஆதாயத்திற்காக இம்முறை மகனையே பகடை காயாக மாற்ற முடிவு செய்திருந்தார் ருத்ர மூர்த்தி.
அம்மா, மகன் பேச்சை கைக் கட்டி அமைதியாய் கவனித்துக் கொண்டு அமர்ந்திருந்தார் அவர்.
“நான் கல்யாணத்துக்கு தேதி குறிக்க சொல்லிட்டேன். சீக்கிரமே பத்திரிக்கையில் செய்தி வரும். அதுக்குள்ள நீ கல்யாணத்துக்கு ரெடியாகறது நல்லது” கட்டளையாக சொன்னார் ருத்ர மூர்த்தி.
திமிராக இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான் வீரா. கால் மேல் கால் போட்டு கொண்டான். லேசாக காலை ஆட்டத் தொடங்கி இருந்தான்.
ருத்ர மூர்த்தியின் கண்களில் சிவப்பு ஏறுவதை உதடு சுளித்து சிரிப்புடன் பார்த்தான் வீரா.
“கல்யாண பொண்ணு இதுக்கு எப்படி சரின்னு சொன்னா? மாப்பிள்ளை பையனை பார்க்கணும், பேசணும்னு சொல்லல? அதுவும் அமைச்சர் பொண்ணு வேற? ஏதோ இடிக்குதே?” நக்கலாக அவன் கேட்க,
எதிரில் இருந்தவரின் முகம் வெளுத்து தான் போனது.
அதை பார்த்து ஒரு திருப்தியான, சத்தமாக சிரிப்பு சட்டென வீராவிடம் இருந்து வெளிப்பட, “காரணம் இல்லாம நீங்க எதுவும் செய்ய மாட்டீங்களே? இந்த கல்யாணத்துக்கு பின்னாடி ஏதோ விஷயம் இருக்கு. ம்ம், என்ன கதை? அதை சொல்லுங்க. கேட்போம்” புருவம் உயர்த்தி நக்கலாக அவன் சொல்ல, ஆடிக் கொண்டிருந்த அவன் காலையே வெறித்து பார்த்தார் அந்த தந்தை.
இதே வேறு ஒருவன் என்றால், என்ன செய்திருப்பார் என்று அவருக்கே தெரியாது. அடுத்த நொடி ஆட்ட காலே இல்லாமல் கூட செய்திருப்பார். ஆனால், மகனிடம் அந்த முகத்தை காட்ட முடியாதே. மனிதர் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருக்க, வீராவோ அவரை சீண்டிக் கொண்டே இருந்தான்.
“என்ன வில்லி மேடம்? உங்களுக்கும் விஷயம் தெரியாதா?” மேஜையில் விரலை தட்டிக் கொண்டே அவன் கேட்க, மகனை முறைத்தார் கலையரசி.
பட்டென சத்தத்துடன் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டான் வீரா. அவன் எழுந்த வேகத்தை பார்த்து ருத்ர மூர்த்தி ஒரு நொடி மிரண்டு தான் போனார். அவர் கண்ணில் மின்னலாய் வந்து போன பயத்தை பார்த்த வீராவிற்கு வாழ்க்கையின் மேலிருந்த பிடிப்பு இன்னுமே நழுவிக் கொண்டு தான் போனது.
“நீங்க சொல்றீங்களா? நான் சொல்லவா?” கத்தியின் கூர்மையுடன் வந்தது அவன் கேள்வி.
“என்னடா சொல்ற?” அதிர்ச்சியுடன் கேட்டார் கலையரசி.
“அந்த மாஜி கல்வி அமைச்சர். அவனோட மருமகளையே இன்னும் நினைச்சுட்டு இருக்கப் போல.. என்ன பேரு.. மலர்… அவளுக்கு கல்யாணமாகி..”
“ஏய், ருத்ர மூர்த்தி. எழுந்து வெளிய போயா.. இன்னும் ஒரு வார்த்தை பேசின அப்பன்னு கூட பார்க்காம, கழுத்தை பிடிச்சு நானே வெளில தள்ளிடுவேன். போயா வெளில..” சிவ தாண்டவம் ஆடத் தொடங்கி இருந்தான் வீரசிவம்.
ருத்ரமூர்த்தி கண்ணிமையை கூட அசைக்காமல் அப்படியே அமர்ந்திருந்தார். அவரது அனுபவத்தின் முன், இந்த பேச்சு எல்லாம் ஒன்றுமே கிடையாது என்பதை வீரா தான் அறியவில்லை.
“டேய். அப்பாவை ..” மகனை அடிக்கப் போகும் வேகத்தோடு எழுந்தார் கலையரசி. அப்படியே அவரை கைப் பற்றி தடுத்து இருக்கையில் அமர வைத்தார் ருத்ரமூர்த்தி.
“பேசட்டும் விடு” என்று மனைவியிடம் கண் காட்டினார்.
“அவளை பத்தி பேச, ஏன் அவ பேரை சொல்ல கூட உங்களுக்கு அருகதை கிடையாது.” ஆவேசமாக சொன்னான் வீரா.
“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க என்னை பத்தி? என்னைப் பத்தி என்ன தெரியும் உங்களுக்கு?. ஒரு மண்ணும் தெரியாது. இன்னொருத்தர் மனைவி அவ. அவளை போய் தப்பா பேசிட்டு…” அடிக் குரலில் சீறினான் வீரா.
அவனுக்கு வாழ்க்கையில்… ப்ச், உங்களுக்கு எதுக்கு அந்த கவலை எல்லாம்..”
“இதென்னடா பேச்சு? எப்ப பாரு செத்து, கித்துனு…”
“மா.. பிளீஸ்..” வீரா கத்த, அந்த மா என்ற ஒற்றை வார்த்தை விளிப்பில் அந்த தாயின் முகம் அவரையும் அறியாமல் மலர்ந்து தான் போனது. அவனிடம் இருந்து எளிதாக அம்மா என்ற அழைப்பை வர வைக்க முடியாது என்று அவருக்கும் தெரியும் தானே.
“வர முடியாது. பெங்களூரை விட்டு நான் வர்றதா இல்ல. கல்யாணமும்.. ம்ஹூம். அப்படி ஒரு ஐடியாவே எனக்கில்ல. உங்களால முடிஞ்சதை பார்த்துக்கோங்க.” தீர்க்கமாக சொன்னான் வீரா.
“அவனை எப்படி வர வைக்கணும்னு எனக்குத் தெரியும்” மகனை பார்த்து அவர் சொல்ல, வீரா உள்ளுக்குள் உதறல் எடுத்ததை வெளிக்காட்டி கொள்ளவில்லை.
“தங்கச்சி மேல கை வச்சீங்க. கொலை பண்ணவும் தயங்க மாட்டேன். உங்க ரெண்டு பேரையும் உயிரோட கொளுத்திடுவேன்.” செய்து காட்டும் உறுதி அவன் குரலில் இருக்க, அதிர்ந்து தான் போனார்கள் பெற்றவர்கள்.
“கொஞ்சமாவது பெத்தவங்க…”
“ஏய்… உன் நடிப்பு வேலையை என்கிட்ட காட்டாத…” அறை அதிர கத்தினான். அதிர்ச்சியில் வாயை அப்படியே மூடிக் கொண்டார் கலையரசி.
அவனது கோபத்தில், அவன் சொன்ன வார்த்தையில், மரியாதை தேய்ந்து போனதில் அவருக்கு கண்ணீர் எட்டிப் பார்த்தது.
“அமைச்சர் பொண்ணு. ம்ம், அவ காதலிச்ச பையனை அடிச்சு படுக்க வச்சிட்டு, அவளுக்கு என்னை தாலி கட்ட வைக்க பிளான் பண்றீங்க இல்ல?” சுவரில் ஒற்றை காலை உயர்த்தி வைத்து, தீர்க்கமான பார்வையுடன் அவன் கேட்க, இருவர் முகத்திலும் அதிர்ச்சியின் ரேகைகள்.
அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. அத்தனை ரகசியமாக வைத்திருந்த செய்தி. வெளியில் கசிந்து விடாமல் இருக்க எத்தனை கட்டுப்பாடுகள். ஆனாலும், மகன் மோப்பம் பிடித்து, உண்மையை கண்டுக் கொண்டானே என்று அதிர்ச்சியுடன் பார்த்தார்கள் இருவரும்.
“ஜாதி வெறி. ம்ம், அது என்னல்லாம் பண்ண சொல்லுது இல்ல? பெத்த மகனை பத்தி, அவன் சந்தோசத்தை பத்தி கவலையோ, அக்கறையோ எதுவுமே இல்ல. என்னைக்கு இருந்தது? இன்னைக்கு புதுசா வர?” தலையை அப்படியே சுவரில் முட்டிக் கொண்டான்.
“டேய், தலையில அடிபட போகுது டா” கலையரசிக்கு மகன் மேல், துளி அன்பு இருக்கத் தான் செய்தது போலும், அம்மாவை திரும்பி பார்க்கவே இல்லை அவன்.
“ரெண்டு பேரையும் கட்டாயப் படுத்தி கல்யாணம் பண்ணி வச்சு? என்னவாகிட போகுது? என் வாழ்க்கையை இதுக்கு மேலயும் நாசமாக்க முடியும்னு நினைக்கிறீங்களா? பிடிக்காத ஒருத்தரோட சேர்ந்து வாழுறதை விட கொடுமையான ஒரு விஷயம் இருக்கா என்ன? என்னை ஏன் நிம்மதியா இருக்கவே விட மாட்டேங்கறீங்க? நான் என்ன பண்ணா என்னை உயிரோட விடுவீங்க?” கண்களை மூடிக் கொண்டு, இயலாமையுடன் அவன் பேச பேச, கலையரசி கணவனின் கையை பற்றிக் கொண்டு அறையை விட்டு வெளியேறி இருந்தார்.
கதவு மூடும் சத்தத்தில் கண்களை திறந்தான் வீரா. மனதும், உடலும் களைத்துப் போய் இருந்தது.
பொத்தென இருக்கையில் சரிந்து அமர்ந்தான். மேஜையில் இருந்த மலர்களை வருடிக் கொடுக்கத் தொடங்கினான். மனம் மெல்ல மெல்ல தனது இறுக்கத்தைத் தளர்த்தியது.