“டெய்லி காலேஜிக்கு கார்ல தான் வருவியா? உனக்கு ட்ரைவ் பண்ண தெரியுமா?”
“இல்ல, இல்ல. ஸ்கூட்டில வருவேன். அது கூட இந்த வருஷம் தான் வீட்ல வாங்கிக் கொடுத்தாங்க. இன்னைக்கு புடவை கட்டவும், கார்..”
அவள் முடிக்கும் முன் அவன், “ஓ…” என்று இழுக்க,
“என் கார் இல்ல. எங்க சின்ன அண்ணா கார். மார்னிங் அண்ணா தான் ட்ராப் பண்ணாங்க. இப்போ என் ப்ரெண்ட் ராகவன் கிட்ட காரை கொடுத்து அனுப்பினார்.” அவன் புன்னகைக்க,
“வீட்ல தனியா எல்லாம் எங்கயேயும் போக விட மாட்டாங்க. ரெண்டு அண்ணாவும் அவங்க காரை தொட…”
“ம்ம், இறங்கு” என்று சொல்லிக் கொண்டே அவனும் இறங்க, தானும் இறங்கினாள் மலர்.
“இங்க வா” என்றான். அவனுக்கு பக்கத்தில் போய் மலர் நின்ற கணம், சட்டென அவளை ஓட்டுநர் இருக்கையில் திணித்திருந்தான். மறு நொடி அவனும் காரை சுற்றி வந்து அவளது பக்கத்தில் அமர,
திகைப்பில் இருந்து விலகாமல், “ஜீவா…” என்று திணறலாக அழைத்தாள் மலர். கண்களை மூடி உதடு மடித்து புன்னகைத்தான் ஜீவா.
“உன் குரல்ல கூட பனியும், மலரும் தான் பொழியுது. சில்லுனு இருக்கு. ஃபர்ஸ்ட் டைம் என் பேர் சொல்ற இல்ல?” சிலிர்த்தபடி, சிரித்தான்.
கண்களை உருட்டினாள் மலர். அதற்கும் சிரிக்கவே செய்தான் அவன்.
“நீங்களே ட்ரைவ் பண்ணுங்க பிளீஸ்…” தயக்கத்தோடு அவள் சொல்ல,
“ஜீவா…” என்று இழுத்தான் அவன்.
“ஓகே, ஜீவா” என்று அவள் சொன்னதும்,
“அதான் ஓகே சொல்லிட்டியே, காரை எடு.” என்றான்.
“நான் அதுக்கு ஓகே சொல்லல ஜீவா..”
“அப்புறம் நம்ம கல்யாணத்துக்கு சொன்னியா? அது, ஏற்கனவே வீட்ல சொல்லி இருப்ப தான?” அவன் இங்கிருந்து, எங்கோ தாவ, இமைக்கும் நேரத்திற்குள் காரை இயக்கி, சாலையை தொட்டிருந்தாள் மலர்.
சத்தமாக சிரித்துக் கொண்டே, “நல்லா ட்ரைவ் பண்றியே” இருக்கையில் வாகாக சாய்ந்து, தலையை திருப்பி அவளை பாராட்டினான் ஜீவா.
மனம் படபடத்து கைகள் நடுங்கத் தான் செய்தன. அவனிடம் அதை காட்டிக் கொள்ளாமல், புன்னகையுடன் காரை கவனமாக செலுத்தினாள் மலர்.
அவளின் வீட்டிற்கு செல்லும் வழியில் இருந்த உணவகத்தின் முன் சென்று காரை அவள் நிறுத்த, இருவரும் ஒன்றாக இறங்கி உள்ளே சென்றனர்.
அலைபேசியை எடுத்து வீட்டினருக்கு அழைத்து, அவனோடு இருப்பதை அவள் தெரியப்படுத்த, இருவருக்குமான “காஃபி, ஸ்நாக்ஸ்” சொல்லிக் கொண்டிருந்தான் ஜீவா.
“வீட்ல ரொம்ப ஸ்ட்ரிக்ட் போல?” அலைபேசியை அணைத்து மேஜையின் மேல் வைத்தாள் மலர்.
“இல்ல, ஓவர் பாசம் தான். கொஞ்சம் கண்டிப்பு, கண்காணிப்பு எல்லாமே உண்டு.” மலர் சொல்ல, தலையை அசைத்துக் கொண்டான்.
ஆழ்ந்த மூச்சொன்றை உள்ளிழுத்தான். அவளுக்கு நெருக்கமாக அவனது இருக்கையை நகர்த்திப் போட்டு அமர்ந்தான்.
“நிஜமா இந்த கல்யாணத்தில் உனக்கு விருப்பம் தானா பனி? உன்னை யாரும் கட்டாயப் படுத்தலையே? இன்னும் படிப்பே முடியல, அதுக்குள்ள கல்யாணம். கஷ்டம் தான். வீட்ல ஃபோர்ஸ் பண்ணாங்களா? உனக்கு மேல படிக்க ஆசையா? வேலைக்கு போக ஆசையா? நிறைய ஆசை, கனவு எல்லாம் இருக்கும் இல்ல? இந்த கல்யாண பேச்சு வார்த்தை அதை எல்லாம் கலைச்சு போட்டுடுச்சா பனி? என்னை நம்பி தைரியமா சொல்லலாம் நீ. என்னைப் பிடிச்சு தானே ஓகே சொன்ன?” அவனது ஒவ்வொரு கேள்விக்கும் அவளது விழிகள் விரிந்துக் கொண்டே போனது.
அவளது மௌனத்தை பார்த்து விட்டு, அவனே தொடர்ந்து பேசினான்.
“பொறுமையா பதில் சொல்லு போதும். ஒன்னும் அவசரமில்ல” என்றவன்,
“எனக்கு இது கட்டாய கல்யாணம் தான்” எனவும்,
“என்ன?” என்பது போல அவள் பார்க்க,
“எஸ். என்ன ஷாக் ஆகுற போல? நீ நம்பித் தான் ஆகனும் பனிப் பூவே..” அந்த அழைப்பிற்கே அவள் முகம் தன்னிச்சையாக மலரத் தான் செய்தது.
“ஜீவா புட் புராடக்ட்ஸ், நம்ம குடும்பத்தோடது. தெரியும் தானே?” அவள், “தெரியும்” என்று தலையசைக்க,
“எங்க அப்புச்சி சின்ன அளவுல ஆரம்பிச்சது. அப்பா அதை பெருசா கொண்டு வந்தார். மசாலா பொருள், மாவு, ரெடி மேட் புட்ஸ் இப்படி. இப்பவும் அப்பா தான் பார்த்துக்கறார். எனக்கு எப்பவும் கார் மேல தான் க்ரேஸ். சோ, என்ஜினியரிங் படிச்சேன்”
அவன் பேச்சில் இடையிட்டு, “படிப்பு முடிஞ்சதும், ஜப்பான் போய் ஒவ்வொரு கார் கம்பெனியா அலைஞ்சு, திரிஞ்சு கார்களை பத்தி நிறைய தெரிஞ்சுக்கிட்டு, சென்னை வந்து கார் ஷோ ரூம் ஓபன் பண்ணீங்க. ஆனா, வீட்ல மாமாக்கு நீங்க ஃபேமிலி பிசினஸ் பார்க்கணும்னு ஆசை. பட், அத்தை உங்களுக்கு ஃபுல் சப்போர்ட். அவங்க மகனுக்கு பதிலா, மருமகனை.. அதாவது, உங்க தங்கச்சி வீட்டுக்காரரை குடும்ப தொழில்ல இறக்கி, உங்க அப்பா கோபத்தில் இருந்து உங்களை காப்பாத்தி விட்டுட்டாங்க.”
“ஆத்தாடி, நிறுத்து நிறுத்து..” சிரித்துக் கொண்டே கத்தினான் ஜீவா.
“உனக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்?”
“தெரிஞ்சுக்கிட்டேன். எப்படினு அப்புறமா சொல்றேன். முதல்ல, நீங்க சொல்லி முடிங்க.” ஒரு நொடி அவளை இமைக்காமல் பார்த்து விட்டு தொடர்ந்தான் ஜீவா.
“ரெண்டு மூணு வருசமா அம்மா கல்யாணம் பண்ணிக்க சொல்லிக்கிட்டே இருந்தாங்க. இப்போ கொஞ்ச நாளா, அப்பாவும் அவங்க கூட சேர்ந்துட்டார். நான் பிடி கொடுக்கவே இல்ல. இன்னும் கொஞ்சம் நாள், ஒரு ரெண்டு வருஷம் போகட்டும்னு நினைச்சேன்.”
“அப்பா, இதுலயாவது நான் சொல்றதை கேளுடான்னு கத்தினார். அவரை சமாதானப் படுத்த, சரி பொண்ணு பாருங்கன்னு சொன்னேன். அந்நேரம் உங்க அப்பாவை ஒரு விஷேஷத்தில் பார்த்து, பேசி, தூரத்து சொந்தம்னு தெரிஞ்சு.. பசங்களை பத்தி விசாரிச்சு.. உன்னை பார்த்ததும்.. எங்கம்மா, என் பக்கத்தில நிரந்தரமா உன்னை நிற்க வைக்க முடிவே பண்ணிட்டாங்க.” அவன் சொன்ன விதத்தில் மலரின் முகத்தில் மெலிதான புன்னகை.
“கார் இறக்குமதி விஷயமா ஜப்பான் போய் இருந்தேன். எங்கம்மா இது தான் சான்ஸ், இதை விடக் கூடாதுன்ற முடிவோட காய் நகர்த்திட்டாங்க. ஒரு முக்கியமான மீட்டிங்ல நான் இருக்கும் போது உன்னைப் பத்தி பேசவும், “நல்லா தான் இருக்கா மா. சரிம்மா, சரிம்மான்னு” அவங்களை சமாளிச்சு போனை வச்சதா, நான் நினைச்சுட்டு இருக்க, எங்கம்மா கிடைச்ச கேப்பில் உன்னை வந்து பொண்ணு பார்த்து, பூவே வச்சுட்டு வந்தாச்சு.”
“இதான், கல்யாண தேதின்னு என்கிட்ட இன்னைக்கு காலையில தான் சொல்றாங்க. கேட்டா, “நீ தானே டா, சரிம்மான்னு சொன்ன? அழகா இருக்காங்கன்னு வேற சொன்ன” அப்படினு தோசையை திருப்பி போட்டுட்டாங்க. உனக்கு விருப்பம் இல்லனா, அப்பா கிட்ட பேசிக்கோன்னு மிரட்டல் வேற…”
அப்பொழுது அவர்கள் சொல்லி இருந்த உணவு வர, காஃபி கூடவே சமோசா, சிக்கன் கட்லட் இருந்த தட்டை அவள் புறமாக நகர்த்தி வைத்தான் ஜீவா.
“சாப்பிடு பனி” என்று அவள் முகம் பார்த்தவன்,
“ஓ, சாரி” என்று அவளின் கையைப் பிடித்தான்.
“உன்னை குழப்பறேனா?” என்று கேட்க, மலரிடம் மௌனம் மட்டுமே.
“உன் ஃபோட்டோ பார்த்ததும் என்னால நோ சொல்ல முடியல. அதே நேரம் அழுத்தமா எஸ்ஸும் சொல்ல முடியல. கல்யாண தேதி வரை குறிச்சுட்டு, எப்படி முடியாது, பிடிக்கலைன்னு சொல்றது? அதான், சரினு சொல்லிட்டேன். ஆனாலும், படிக்கற பொண்ணு, இருபது வயசு தான். இன்னும் நேர்ல பார்த்து பேசல, நமக்குள்ள ஒத்து வருமா? இப்படி நிறைய சந்தேகங்கள் எனக்கு இருந்தது. அதனால, அம்மா கிட்ட சண்டை போட்டுட்டு தான் உன்னை பார்க்க வந்தேன்.” சிறிய இடைவெளி கொடுத்தான், அவஸ்தையுடன் அவன் முகம் பார்த்திருந்தாள் மலர்.
“ஒரு கையில உன் ப்ரெண்ட் தோளை பிடிச்சிட்டு, நின்ன இடத்தில இருந்து.. அப்படியே சாய்ஞ்சு, தலையை திருப்பி என்னை ஒரு பார்வை பார்த்தியே.. பச்சக்குனு ஒட்டிக்கிட்ட..” கன்னம் கடித்து வெட்கத்தை மறைக்க முயன்றாள் மலர்.
“எதிர்பார்க்கவே இல்ல. உன்னை முதல் பார்வையிலேயே பிடிக்கும்னு நினைக்கவே இல்ல. இந்த பட்டு சேலை, பூ, உன் புன்னகை, உன்னோட அந்த கண்கள். உன் கண்ணைப் பார்த்து உன்னை பிடிக்கலனு.. ப்ச், சொல்லவே முடியாது. எனக்கான, உன்னோட இந்த வெட்கம் கூட என்னை மொத்தமா மயக்குது.” அதற்கும் வெட்கப்படவே செய்தாள் மலர்.
“காஃபியை குடி” அவன் சொல்லவும், பார்வையை அவனிடம் இருந்து கோப்பைக்கு மாற்றினாள் மலர்.