“பார்ரா, அதிசயந்தேன்…”
“இன்னைக்கு வீட்டுக்கு முக்கியமானவக வருவாகல்ல. அதுக்குத்தேன்…” என ஜீவனும் இகழ்ச்சியாய் உதடுவளைத்து சலிப்பாய் சொல்ல,
“ப்ச், இந்தா இப்ப என்னத்துக்கு மூஞ்சிய முட்டிக்கிற? நாந்தேன் இருக்கேனில்ல. வரட்டும். நா பாத்துக்கிடுதேன்…”
சண்டைக்கு கிளம்புவதை போல முந்தானையை இடுப்பில் சொருகிக்கொண்டு தீவிரபாவத்துடன் அகல்யா சொல்லியதை பார்த்த தேன்மொழி மிரண்டு நிற்க ஜீவன் பக்கென்று சிரித்துவிட்டான்.
“அவ அரண்டுட்டா…” என சிரிக்க,
“அதெல்லாம் பழகிப்பா. நீ மொத சட்டைய மாத்து. நா போறேன்…”
“ஆத்தா எங்க?…”
“படுத்திருக்கு…”
“என்ன சொணங்கிட்டே கெடக்கு? இரு பாக்கறேன்…” என வெளியேற போக,
“அடேய், அலுப்பு இருக்கும்லடா. அப்பறமா எழுப்பிக்குவோம்னுதேன் இருக்கேன். நீ கெளம்பு…” என்று தம்பியை அதட்டி சொல்லி வெளியே சென்றாள் அகல்யா.
“ஹ்ம்ம்…” என்ற பெருமூச்சுடன் திரும்பியவன் தேன்மொழியை பார்த்து,
“கால் இன்னும் வலிக்கா?…” என்றான் அவளருகே அமர்ந்து.
“ஹ்ம்ம், கொஞ்சம். சரியாகிடும்…”
“நான் குடுத்த ஆயின்மென்ட்டை அப்ளே பண்ணினியா?…” என்றதும் அவள் முழிக்க,
“ப்ச்…” என எழுந்து சென்று இன்னொரு மருந்தை எடுத்துக்கொண்டுவந்து அவளின் கால்களை தூக்கி மருந்திட போக,
“நீங்க முதல்ல கிளம்புங்க. அண்ணி வந்து உங்களை திட்ட போறாங்க…”
“மருந்து அப்பவே போட்டிருக்கலாம்ல…” என கடிந்தவன் அவளின் பாதத்தை பார்க்க லேசாய் வீங்கி இருந்தது. சுண்டுவிரலில் இருந்து மேல் பாதம் வரை எதுவோ உரசி இருக்க சிராப்புடன் இருந்தது.
“என்ன இது? முள்ளு இப்படி கிழிச்சிருக்கு. சொல்லமாட்டியா நீ?…” என இப்பொழுது இன்னும் சத்தமாய் அவன் கத்த வேகமாய் அவனின் வாயை மூடினாள்.
“சும்மா இருக்கமாட்டீங்க? இப்ப எதுக்கு இந்த கத்து? எல்லாரும் வந்து பார்த்தா இன்னும் பதறுவாங்க. பேசாம போய் கிளம்புங்க…” என அதட்டலாய் சொல்ல,
“இதை கூட சொல்லமாட்டியான்னு கேட்டா நீ அதட்டுற?…”
“எனக்கே இப்ப கொஞ்சம் நேரம் முன்ன தான தெரியும். சேரி மாத்தறப்போ தான் பார்த்தேன். சுத்தமா பீல் ஆகவே இல்ல எனக்கு. தெரிஞ்சா தான சொல்ல முடியும்?…”
“இத்தனை நீளமா காயம் இருக்குது. உன்னை…” என முறைத்தவனின் கையில் இருந்த மருந்தை வாங்கிக்கொண்டவள்,
“நான் போட்டுக்கறேன். நீங்க போங்க…” என அவனை விரட்டவும் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு குளிக்க சென்றான்.
அவன் தந்த மருந்தை திறந்தவள் குப்பென்ற நெடியில் மீண்டும் அதை மூடிவைத்தாள். அந்த வாசனையே சுத்தமாய் பிடிக்கவில்லை.
வந்ததும் போட்டுவிட்டாயா என்று கேட்பானே என நினைத்து வேகமாய் அங்கிருந்து செல்ல போனவள் பின் உடை எடுக்க சொல்வதை போல அழைத்து கேட்டால் என்ன செய்வது என அவனுக்கான உடையையும் தேர்வு செய்துவிட்டு வெளியேறினாள்.
வரவேற்பறையில் பெரிய ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்க ஏற்கனவே வீட்டில் இருந்த மர நாற்காலிகளுடன் மேலும் சில பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டிருந்தது.
கார்மேகத்துடன் திருமூர்த்தி பேசிக்கொண்டு இருக்க தியாகு தனியே மொபைலுடன் அமர்ந்திருந்தான்.
பெண்கள் எல்லாம் ஒருபக்கம் கீழே அமர்ந்திருந்தனர். தெய்வா பத்மாவுடன் பேசிக்கொண்டிருக்க அவர்களுடன் புதிதாய் இரண்டு பெண்மணிகள் அமர்ந்திருந்தனர்.
“வா வா தேனு. இங்க வந்து உட்காரு…” என அழைத்த அகல்யா,
“பாரு பூவுக்கு சொல்லி இப்பத்தேன் வந்துச்சு. திரும்பு, வச்சிவிடறேன்…” என்று சொல்லவும் அகல்யாவுக்கு வாகாய் திரும்பி அமர்ந்தாள் தேன்மொழி.
அவளுக்கருகே சுலோச்சனாவும், வைதேகியும், ஆதிக்கும் இதை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
“மதினி, பொண்ணு அந்த பொண்ண விட நெறத்துல மட்டந்தேன்….” என மெல்லிய குரலில் வந்திருந்ததில் ஒருவர் பேச,
“அட ஆமாதேன், மூத்ததாரம் என்ன கலரு, மின்னலு வெட்டினாப்புல…”
“ஆமா அது ஒசரமாவும் இருக்கும். இந்த ரெண்டாந்…” என்று பேச,
“என்ன பெரியாத்தா ஒம்மவ புருசென்கூட மல்லுக்கு நின்னு ஒம்வீட்டுக்கு வந்து மாசக்கணக்காச்சு. மறுக்கா அனுப்பறதா இல்லியோ? என்ன சங்கதியாம்? ஊருக்குள்ள அரசபுரசலா என்னத்தையோ பேசிக்கிதாக. நெசந்தானா?…” என அகல்யா பட்டென திரும்பி கேட்க எச்சிலை கூட்டி விழுங்கினார் அந்த பெண்மணி.
உடன் பேசியவர் அடுத்த வார்த்தை பேச வாய் திறக்கவில்லை. அகல்யாவின் தீ பார்வையில் பேச்சின்றி அமர்ந்துகொண்டார்.
“அகலு…”
“நாந்தேன். ரொம்ப பேசிட்டீக. போயி காப்பித்தண்ணி கொண்டாறேன். குடிச்சுப்போட்டு இன்னும்க்கா தெம்பா பேசத்தான…” என்று அவள் எழுந்துகொள்ள,
“இல்லாத்தா, வாரப்பத்தேன் முழுங்கிட்டு வந்தோமாக்கும். பொறப்படுதோம்…” என சொல்லி கிளம்ப பார்க்க,
“அட செத்த இருங்க. ரெண்டுமடக்குத்தேன். குடிச்சுப்புட்டு பலகாரத்த உங்கலாம். அப்பத்தேன் வாசல தாண்டறப்ப வெறுவாய மெல்ல மாட்டீகள…” என நக்கலாக சொல்லி உள்ளே செல்ல தேன்மொழி அவர்கள் இருவரையும் பார்த்தபடியே இருந்தாள்.
மனதில் அத்தனை கோபம். தன்னை வர்ஷாவோடு அவர்கள் ஒப்பிட்டு பேசியதை அவளும் கேட்டாளே. இது என்ன ஒப்பீடு? என எரிச்சலுடன் அமர்ந்திருந்தாள். அவளின் பார்வையை உணர்ந்து,
“ஒம்பேரு என்னத்தா?…”
“தேன்மொழி…” என்று அவள் சொல்ல,
“அட சத்தமாத்தேன் பேசேன்…” என அவர்கள் இடக்காய் அகல்யா அருகில் இல்லாத தைரியத்தில் பேச சுலோச்சனா தேன்மொழியின் கையை பற்றிக்கொண்டாள் அமைதியாக இருக்கும்படி.
“பெரியத்தாவுக்கு காது போச்சா?…” என்றபடி வந்தமர்ந்தான் ஜீவன்.
அவனை பார்த்ததுமே இவனுக்கு அகல்யாவே தேவலையே என நினைத்து அவனையும் தேன்மொழியையும் மாறி மாறி பார்த்தனர்.
“அவ பேரு தேன்மொழி. இப்ப கேட்டுச்சா?…” என சிரிப்போடு ஜீவன் கேட்க,
“நல்லாவே…” என பெரிதாய் தலையாட்டினார்கள். அகல்யாவும் வந்துவிட டீயையும், இனிப்பு, காரத்தையும் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட அடுத்தடுத்து ஆட்கள் வந்து சென்றவண்ணமாய் இருக்க அதிலேயே மலைத்துபோய் அமர்ந்திருந்தார்கள் மற்றவர்கள்.
இரவு உணவு சொடலை கொண்டுவந்துவிட மறுநாள் வந்து பார்ப்பதாய் அத்தை சொல்லியதாய் சொல்லிவிட்டு அவரும் அங்கேயே இருந்து சாப்பிட்டுவிட்டு தான் சென்றார்.
மறுநாள் அகல்யாவின் வீட்டில் வைத்து விருந்துக்கு ஏற்பாடாகி இருந்தது. சமைக்க ஆட்களுக்கு ஏற்கனவே சொல்லிவிட்டதால் அதற்கு பார்க்கவேண்டும் என திருமூர்த்தி கிளம்பிவிட்டார்.
அதற்கு மேலும் அமர்ந்திருக்க முடியாமல் அனைவரும் அவரவர்களுக்கான அறைகளுக்கு சென்று படுத்துவிட அகல்யா தெய்வாவுடன் அமர்ந்திருந்த தேன்மொழி அவர்களிடம் சொல்லிக்கொண்டு தன் அறைக்கு சென்றாள்.
மாமியாரும், நாத்தனாரும் அவளை வெகுவாய் சமாதானம் செய்திருந்தனர். வந்தவர்கள் நிறையப்பேர் பொடிவைத்து பேசியிருக்க, சில நக்கலாகவே நேரடியாய் பேச என்று வார்த்தை தடிக்காமல் இருந்தாலும் மனது வலித்தது அவர்களின் பேச்சுக்கள் என்னும் போர்வையில் இருந்த ஏச்சுக்களால்.
மனிதர்கள் எப்படியெல்லாம் இருக்கிறார்கள் என்ற எண்ணத்துடன் இதுவரை இருந்தவள், இப்படியும் கூட இருப்பார்கள் என்ற எண்ணமும் சேர்ந்துகொண்டது.
அவர்கள் பேசியதை விட அதை அகல்யாவும், ஜீவனும் கையாண்டவிதம், திருமூர்த்தியின் ஒற்றை வார்த்தையில் பேச்சுக்கள் அடங்கிய விதம் என்று நிறையவே இந்த ஒற்றை நாளில் கற்றுக்கொண்டாள்.
உள்ளே வந்ததில் இருந்து அதை பற்றியே அவள் நினைத்துக்கொண்டு இருக்க லுங்கியை மாற்றிவிட்டு முகம் கழுவி வந்த ஜீவன் அவளின் சிந்தனையை கண்டு,
“நாளைக்கு மதுரையை பிடிச்சுடுவேன்னு நம்பலாமா?…” என்றான் கிண்டலாக.
“என்ன?…” என தன் எண்ணங்களில் இருந்து விடுபட்டு பார்க்க,
“இல்ல ஆழ்ந்த சிந்தனையா இருக்கே. அதான் மதுரைக்கு மீனாட்சியா மாறலாம்னு யோசனையோன்னு நினைச்சேன்…” என கேலியாய் ஜீவன் சொல்ல அவனை முறைத்து பார்த்தவள்,
“ப்ச், அப்படியே கேட்டதும் வாங்கி குடுத்திருவீங்க. போங்க பாஸ்…” என்று சோர்வாய் கட்டிலில் அமர்ந்தாள்.
“கதவை கூட பூட்டிட்டு வர முடியாதளவுக்கு என்ன யோசனை உனக்கு?…” என கேட்டுக்கொண்டே கதவை மூடியவன்,
“இரு நான் வெளில எல்லா கதவும் லாக் பண்ணியாச்சான்னு பார்த்துட்டு வரேன்…” என சொல்லி மீண்டும் கதவை திறந்துகொண்டு கூடத்திற்கு சென்றான்.
ஏற்கனவே அனைத்தையும் சரிபார்த்துவிட்டு தான் அகல்யா தாயின் அறையிலேயே படுத்துக்கொண்டாள். வந்து பார்த்தவன் மீண்டும் அறைக்கு செல்ல அங்கே தேன்மொழி தலையை பிடித்தபடி கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.
“அக்கா பெர்பெக்ட். எல்லாமே பண்ணிட்டா…” என சொல்லி அவளருகே வந்து அமர்ந்தவன்,
“என்னாச்சு மொழி? என்ன செய்யுது?…” அவளின் முகம் பார்த்தே உடலுக்கு முடியவில்லை என கணித்துவிட்டான்.
“தலை ரொம்ப வலிக்குது. தூங்க முடியலை. டேப்லட் இருந்தா தாங்களேன்…” என இரு கைகளாலும் தலையை அழுத்தியபடி முணங்க,
“ஓஹ், இவ்வளோ தானே? தலைவலிக்கு எல்லாம் சும்மா டேப்லட் போட கூடாது. இரு…” என தலைவலி மருந்தை எடுத்து நெற்றியில் போட்டுவிட,
“ஐயோ எனக்கு இந்த மருந்து வாசனையே பிடிக்காது. ப்ச்…” என்று போட்டுவிட்டதை புடவை தலைப்பால் துடைத்தாள்.
துடைத்தாலும் அதுவே இன்னமும் ஒருவித எரிச்சலை தர இன்னமும் வலித்தது தேன்மொழிக்கு.
“நான் படுக்கறேன்…” என்று சரிந்து படுத்தவள் கண்களை இறுக்கமாய் மூடினாள். தூங்கிவிட்டால் போதும் என்று இருந்தது அவளுக்கு.
உடல் களைப்பு, கால் வலி, மாலை வீட்டில் நடந்தவைகள், இப்பொழுது தலைவலி என அவளை படுத்தியது.
தேன்மொழி படுத்ததுமே சில நொடிகள் மட்டுமே அவளை பார்த்தவன் விடிவிளக்கை போட்டுவிட்டு வந்து தானும் படுத்துக்கொண்டான். உறக்கம் வந்தாலும் அவனால் தூங்கமுடியவில்லை.
தேன்மொழி புரண்டு புரண்டு படுக்க அதுவே அவனை உறங்கவிடவில்லை. சிறிது நேரம் பார்த்தவன் எழுந்தமர்ந்து,
“மொழி இங்க பாரு. இப்படி தலையை வச்சுக்க. நான் கொஞ்சம் பிடிச்சுவிடறேன். பெட்டரா இருக்கும்…” என்று சொல்ல,
“என்ன?…” என கண்விழித்து அவனை நிமிர்ந்து பார்க்க,
“என்ன என்ன? என் மடில தலை வச்சுக்கன்னு சொன்னேன். காதுல விழலயா உனக்கு?…” என்றான் சற்று காட்டமாக.
“ஒன்னும் வேண்டாம். நீங்க தூங்குங்க…” என்று மறுக்கவும் இன்னுமே கோபமானவன்,
“மனுஷனை தூங்க விட்டாதானே? சும்மா சுத்தி சுத்தி உருண்டுட்டு. என்னால தூங்க முடியலை. சொல்றதை செய்ன்னா ஆர்க்யூ பண்ணிட்டு இருக்க…”
“சரி அசையலை, நீங்க…” என்று அவள் சொல்லும் பொழுதே இழுத்து தன் மடி சாய்த்திருந்தான்.
“விடுங்க…” என்று தேன்மொழி கூச்சத்துடன் திமிற,
“அடங்குடி…” என்றான் கோபமாய்.
அவனின் உரிமையான செயலிலும், பேச்சு தொனியிலும், கோபத்திலும் கப்பென்று வாயை மூடிக்கொண்டாள் அவள்.
“பேசாம இருக்கனும். அன்டர்ஸ்டேன்ட்…” என்று மிரட்ட அதில் லேசாய் சிரித்தவள்,
“அண்டர்வேர்…” என்றாள் பழைய நினைவில்.
“இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை…” என்றவன் அவளுடன் பேசிக்கொண்டே அந்த மருந்தை லேசாய் எடுத்து தன் விரல்களில் தடவி அவளின் நெற்றியை மிதமான அழுத்தத்துடன் பிடித்துவிட ஆரம்பித்தான்.
மருந்தை எடுத்திருக்கிறான் என்று தெரிந்தும் அதை பற்றி மூச்சு விடவில்லை அவள். அதற்கும் கோபப்பட்டால் என நினைத்து அவனோடு பேசியபடி இருந்தாள்.
பேச்சுக்கள் பேச்சுக்களாக இருந்தாலும் ஜீவனின் தீண்டல் செய்த மாயம் அவளின் வலிகளை கொஞ்சம் கொஞ்சமாய் களைந்தது.
நேரம் செல்ல செல்ல நெற்றியில் தொடங்கி கண்கள், கன்னக்கதுப்புகள், மூக்கு, காது மடல்கள், நாடி, கழுத்து என்று அவனின் விரல்கள் அவளின் முகத்தில் கோலமிட பெண் திண்டாடி போனாள்.
லேசாய் அவனை விட்டு நகர்ந்து திரும்பிக்கொண்டாலும் அவனின் அருகாமை மூச்சடைத்தது.
“தலைவலி போய்டுச்சா மொழி? திரும்பிட்ட?…” என அவளின் காதருகே கிசுகிசுப்பாய் வினவியவனின் குரல் அவளை அடைந்தாலும் பதில் பேசவிடாமல் இதழ்கள் வார்த்தைகளை சிறைசெய்து தாழ் போட்டுக்கொண்டது.
“மொழி…” என்றவன் தன் புறம் திருப்ப நாணம் மேலிட அவனின் கழுத்துவளைவில் தன் முகத்தை புதைத்துக்கொண்டாள்.
“இதான் உங்க ட்ரீட்மென்ட்டா? கல்ப்ரிட்…” என சீண்டல் குரலில் கேட்டவள் அவனின் சட்டையை இறுக்கமாய் பற்றி தன்னை நிலைப்படுத்திக்கொள்ள பார்க்க,
“இந்த தூதர்ஷனுக்கு மட்டும் இது ஸ்பெஷல் ட்ரீட்மென்ட். உனக்கு தெரியாதா மொழி? தலைவலிக்கு இதைவிட பெஸ்ட் ட்ரீட்மென்ட் இந்த உலகத்துலையே இல்லையாம்…” என்றவன் மொத்தமாய் அவளை தன் கை வளைவிற்குள் கொண்டு வந்தான்.
மங்கலான வெளிச்சத்தில் வரிவடிவமாய் தெரிந்தவளின் முகத்தை நிமிர்த்தியவன் அவளின் விழிகளுக்கு முதல் இதழொற்றலை பரிசாக்க, அதை தடுக்கவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் தவிப்புடன் வியர்த்தாள்.
“ஆர் யூ ஓகே மொழி?…” என கேட்டு கேட்டு அவளின் பதில்களுக்கு எதிர்பாராமல் தனது முத்தத்தாலே மொழியின் மொழியை தடை செய்தான்.
அந்த இதழ் ஊர்வலம் இருவருக்குள்ளும் பலவித மாற்றங்களை உருபெற செய்ய அந்த அரூப உணர்வுகளை ஸ்வீகரிக்க சித்தமாகினர்.