“கொஞ்சம் வண்டியை நிறுத்துங்க எனக்கு வாமிட் வருது” என்றாள் திலோ, அவன் கார் கண்ணாடியை இறக்கிவிட்டு “ப்ளீஸ்” என்க அவளுக்குப் புரிந்துவிட்டது தன்னுடைய மடத்தனம்.
சுஜித் கொஞ்சம் உற்சாக மனநிலையிலே இருந்தான் எப்படியும் கண்டுபிடிக்க முடியாது, தனி ஒருவனாகச் சேனாபதியால் என்ன செய்ய இயலும் என்ற தைரியம்.
காரைப் பின்தொடர்ந்து வந்த பைக் ஒன்று இவன் வண்டியை முந்திச் சென்று சிறிது தூரத்தில் ரோட்டின் குறுக்கே நின்றது, அவசரமாகப் பிரேக் அடித்து வண்டியை நிறுத்திய சுஜித் கண்ணாடியை இறக்கி அவனைப் பார்த்துக் கத்தினான்.
“ஏய் அறிவிருக்கா என்ன பண்ற” என்றான் எரிச்சலோடு, மெதுவாகக் காரின் அருகில் வந்த அவன் “அதேயேதான் நானும் கேக்குறேன் நீ என்ன பண்ற” என்றவன் பார்வை திலோத்தமாவை தொட்டு மீண்டது.
தன்னுடைய அலைபேசியை எடுத்தவன் யாரையோ அழைத்தான், அந்தப் பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டவுடன் “அண்ணே இவங்களா பாருங்க” என்றான் திலோவின் முகத்திற்கு நேரே போனை பிடித்தபடி, அனல் தெறிக்கும் விழிகளோடு திரையில் நிறைந்து நின்றான் சேனாபதி.
“மாரி ஒன்னும் பிரச்ச்னையில்லயே” என்றான் சேனா, அலைபேசியை தன் பக்கம் திரும்பியவன் “இல்லண்ணே நல்லா இருக்காங்க” என்றவன் “என்னண்ணே செய்ய” என்றான் சுஜித்தை பார்த்துக்கொண்டே.
“வெய்ட் பண்ணு மாரி அஞ்சே நிமிஷம்” என்றவன் அழைப்பைத் துண்டித்தான், சுஜித்தின் கார் கீயை கையில் எடுத்துக்கொண்ட மாரி அதன் அருகிலே நிற்க மேலும் சில பைக் அங்கு வந்து சேர்ந்தது.
‘யாருடா நீங்கல்லாம்’ என்று இவன் விழி பிதுங்க அமர்ந்திருந்தான், சொன்னதுபோல வந்து சேர்ந்தான் சேனா காரிலிருந்து சுஜித்தை இழுத்து வெளியில் நிறுத்தினான் மாரி, பேச்சுக்களே இல்லை வெறியோடு வந்தவனின் கரம் சுஜித்தின் கன்னத்தைப் பதம் பார்த்தது.
அடி விழுந்த சத்தத்தில் கண்களை இறுக மூடிக்கொண்டாள் திலோ, இடது கன்னத்தில் தோல் பிய்ந்து ரத்தம் சொட்டியது நிற்கமுடியாமல் தோய்ந்தான் சுஜித்.
“இவன் காஸ்டலி காரைப் பள்ளத்துக்குச் சாப்பிட குடுத்துட்டு இந்த நாயைச் சரக்கு வண்டியில பார்ஸல் பண்ணுங்க” என்க.
“சரிண்ணே” என்றவர்கள் அவனை இழுத்துச்செல்ல பின்கதவை திறந்து திலோத்தமாவை பிடித்து இழுத்து சென்று ஜீப்பில் ஏற்றியவன் மொத்த கோபத்தையும் ஸ்டெயரிங்கில் காட்டினான், கதவை ஒண்டி அமர்ந்துகொண்டாள் அவள் ‘போச்சு இன்னைக்கு உனக்குச் சங்குதான்’ என்றது உள்மனது.
அவனின் அமைதியே அவளுக்கு வயிற்றில் புளியை கரைத்தது, அவனிடம் பேசவும் பயமாக இருந்தது வெகுநேரம் ஒன்றும் பேசாமல் வந்தவன் மலைமுகட்டின் ஒரு ஓரத்தில் வண்டியை நிறுத்தி இறங்கிவிட்டான் கொஞ்சம் முன்னே நடந்து அதன் ஓரத்தில் சென்று நின்றுகொண்டான்.
அசையாமல் அவன் அங்கேயே நிற்கத் திலோத்தமாவால் அதற்குமேல் முடியவில்லை தானும் இறங்கியவள் அவனை நோக்கி நடந்தாள், அவன் அருகில் நெருங்க “தள்ளிப்போடி” என்றான் கர்ஜனையாக.
அறியாமல் ஒரு அடி பின்னே சென்றவள் அங்கிருந்தே “நான்… நான் ஏன் இப்படிலாம் பண்றேன்னு எனக்கே தெரியல தப்புதான் சாரி” என்று முடிக்கும் முன்பே சேனாபதி பாண்டியனின் இறுகிய அணைப்பில் இருந்தாள் அவள்.
எலும்பு உடைந்துவிடும் அளவு இருந்தது அணைப்பு, அவன் கொஞ்சம் அழுத்திப் பிடித்தாலே அவள் உடல் சிவந்து விடும், அவனின் அணைப்பில் மூச்சுமுட்டியது அவளுக்கு என்றாலும் அந்த அணைப்பும் வலியும் அவளுக்குத் தேவையாய் இருந்தது.
அவன் பேசியது திட்டியது அவமானப்படுத்தியது அனைத்தையும் மறந்துவிட்டாள், அந்தநொடி சேனாபதி மட்டுமே அவளுள் அவனின் வாசம் அந்த இதயத்தின் துடிப்பு அதுமட்டுமே.
இரண்டே நொடிகள் அவளைத் தள்ளி நிறுத்தியவன் “போ… போயிடு என்னை விட்டுத் தள்ளிப்போ என் கண்முன்னாடியே இல்லாம தூரமா போ… போடி” என்றவன் அவளுக்கு எதிர்புறம் திரும்பி நின்றான், சில நொடிகள் பிடித்தது அவளுக்குத் தன்னை மீட்டுக்கொள்ள.
அவன் முன்னில் சென்று நின்றவள் அவனின் சட்டையைப் பிடித்து “ஏன் போகணும்? ஏன் உங்களுக்கு என்னைப் பிடிக்கல ஒரு காரணம் சொல்லுங்க, என் அப்பா அம்மாவை நெனச்சு என்னை வெறுக்குறீங்களா? உங்க தகுதிக்கு நான் சமமில்லைன்னு நினைக்குறீங்களா எனக்குக் காரணம் சொல்லுங்க”.
“பிடிக்காத காரணத்தை எனக்கு வலிக்கிற மாதிரி சொல்லுங்க அப்போவாது இந்த மானங்கெட்ட மனசு உங்கள தேடாம இருக்கட்டும்” என்றவள் மொத்தமாக உடைந்திருந்தாள் ‘ஏன் இவனுக்கு என்னைப் பிடிக்கவில்லை’ என்ற கேள்வி முள்ளாய் குத்தியது.
அவளை அதிகம் பிடித்ததாலேயே விலக நினைக்கிறான் என்று புரியவில்லை அவளுக்கு, தன் சட்டையைப் பற்றியிருந்த அவள் கரங்களைப் பற்றியவன் “காசுக்காக உடம்பை விக்கிற பெண்ணை விபச்சாரின்னு சொல்ற இந்தச் சமுதாயம் உடல் சுகத்துக்காக அந்தப் பெண்களைத் தேடி போறவனை என்ன சொல்லும்” என்க.
அவனைப் புரியாமல் பார்த்தாள் அவள் “அந்த மாதிரி ஒருத்திகூட மூணு நாள் வாழ்ந்தவன் நான்… உன் காதலுக்கு நான் தகுதியானவன் இல்லை” என்றவன் ஸ்தம்பித்து நின்றவள் கரங்களைத் தன்னிலிருந்து விடுவித்து “என் வாழ்க்கைல நீ வராமலே இருந்திருக்கலாம்” என்று அவளை விட்டு விலகிச் சென்றான்.
வாசலிலே அமர்ந்திருந்த பாண்டியம்மா ஜீப்பின் சத்தத்தில் எழுந்துநின்றார், முன்னில் யாரேனும் நின்றிருந்தால் அடித்துத் தூக்கிவிடுவேன் என்பதாக வந்து நின்றது வாகனம், கீழே இறங்கியவன் வேக எட்டுக்களில் தன் அறைநோக்கி சென்றான்.
ஜீப்பிலிருந்து இறங்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள் திலோ “அம்மாடி என்னடா இப்படி பண்ணிட்ட எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா” என்ற பாண்டியம்மா அவள் இறங்க உதவினார், அமைதியாக அவருடன் உள்ளே நடந்தவளுக்கு தான் எப்படி இங்குவரை வந்து சேர்ந்தோம் என்பது கூடத் தெரியவில்லை.
அவள் உலகம் சுழல்வதை நிறுத்தியிருந்தது நிற்காமல் கண்ணீர் வழிந்துகொண்டிருக்க சுவாசம் வராமல் நெஞ்சை அடைத்தது, இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த உனர்வுகள் வெடிக்க வாசலிலே மடங்கி அமர்ந்து பெருங்குரலில் அழுதவளை அதிர்ச்சியோடு பார்த்து நின்றார் பாண்டியம்மா.
“அம்மாடி…” என்று அவளை அவர் ஆதரவாக அணைக்க அவர் மடியில் குழந்தையாகத் தஞ்சமடைந்தவள் அழுகை சத்தம் அவன் மனதை குத்திக்கிழித்தது, தன் அறையில் இரும்பாக இறுகி நின்றான் ‘அழுது தீர்க்கட்டும் தெளியட்டும் தன்னை வெறுக்கட்டும் அதனபிறகு தேறிவிடுவாள்’ என்று எண்ணியவனுக்கு அந்த நினைவே உயிர்வதை தந்தது.
அவள் அழுகை மெல்ல மெல்ல தேம்பலாக மாறக் கைத்தாங்கலாக அவளை அழைத்துச் சென்று சோபாவில் அமரவைத்தவர் “ரொம்ப பயந்துட்டியா அந்தப் பையன் உன்கிட்ட ஏதாவது தப்பா நடந்துக்கிட்டானா? அப்படிலாம் இருக்காது தம்பி வந்துருச்சுல அதுக்குள்ள…”.
“ஒன்னும் பிரச்சனை இல்லையேமா தம்பி ரொம்ப டென்சன் ஆயிடுச்சு பாவம், நான் கூப்பிட்டவுடனே எல்லாத்தயும் அப்படியே விட்டுட்டு ஓடி வந்துடுச்சு இன்னைக்கு சம்பளம் குடுக்குற நாள் இனிமே நாளைக்குத்தான் கொடுக்க முடியும் போல” என்ற அவர் பாட்டிற்கு பேசிக்கொண்டே அவளுக்குக் குடிக்க தேநீர் எடுத்து வந்து கொடுக்க “வேண்டாம்” என்று மறுத்தவள் அவன் அறையைப் பார்த்திருந்தாள்.
ஒரு முடிவோடு எழுந்தவள் அதை நோக்கி முன்னேற “மா என்ன பண்ற அது இருக்குற கோவத்துக்கு என்ன பண்ணனும்னே சொல்ல முடியாது, இப்போ போகதமா நீ உள்ள போய்க் கொஞ்சம்நேரம் தூங்கு” என்றுவிட்டு அங்கேயே அமர்ந்துவிட்டார்.
அவருக்குப் பயம் வந்துவிட்டது மீண்டும் இந்தப் பெண் இதுபோல் ஏதாவது செய்துவிட்டால் என்ன செய்ய என்று,
அவளுக்கு அங்கே இருக்க முடியவில்லை போக வேண்டும் இவர்கள் யாருமே இல்லாத இடம் போக வேண்டும் என்று தோன்ற அதை அவரிடம் சொல்லக்கூட அவளால் முடியவில்லை, அவளுக்குப் பேச்சே மறந்துவிட்டதை போல வார்த்தைகள் வெளிவரவில்லை.
மனம் தளர்ந்திருக்க அவளுக்குத் தந்த அறையின் தரையிலே சுருண்டு கிடந்தாள் அன்று முழுதும், ஒரு மிடறு தண்ணீர் கூட இறங்கவில்லை, அதுதான் மொத்தமாக இறக்கிவிட்டானே நெஞ்சில் கடப்பாரையை உடல் நீரின்றி வறண்டபோதும் கண்ணீர் மட்டும் பஞ்சமின்றி வழிந்தது.
பாண்டியம்மாள் சென்று பார்த்தபோதெல்லாம் அப்படியே படுத்திருந்தாள் இரவு அவர் உன்ன அழைத்தபோதும் மறுத்துவிட்டாள் “மேலே ஏறிப் படுமா ரத்தம் ஓரஞ்சு போய்டும் இந்த ஊர் குளிருக்கு கீழ இப்படி படுத்தா” என்றவர் வலுக்கட்டாயமாக அவளைப் பிடித்துக் கட்டிலில் கிடத்தினார்.
மறுநாள் பொழுது விடியும் முன்பே வந்துவிட்டான் கதிரவன் “அவளைப் பத்திரமா கொண்டுபோய் ஹாஸ்டல்ல விட்டுரு கதிர்” என்ற சேனாவை பார்த்தவன் “சொல்லிடீங்களா” என்க.
இவன் அமைதியாக விழிமூடி அமர்ந்திருந்தான் அவனின் தோற்றமே கூறியது அவன் இரவெல்லாம் உறங்கவில்லை என்று “அதுக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்குன்னா” என்க.
ஒரு கசந்த முறுவல் அவனிடம் “அந்தத் தகுதியை நான் இழந்துட்டேன் கதிர்” என்றவன் “போ” என்க கதிர் கணக்கும் மனதுடன் திலோவின் அறைக்குச் சென்றான்.
கட்டிலில் சாய்ந்தமர்ந்து கால் முட்டியில் முகம் புதைத்து அமர்ந்திருந்தாள் “திலோ” என்ற அழைப்பில் அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு மீண்டும் அழுகை வந்தது “வாமா போலாம் உன்னை ஹாஸ்டல்ல விட்டுர்றேன்” என்றான்.
தயாராகி வெளியில் வந்தவளை பிடித்து இழுத்து சென்று இரண்டு இட்லிகளை சாப்பிட வைத்தார் பாண்டியமா “நீ நேத்துல இருந்து ஒன்னும் சாப்பிடல இப்போவும் சாப்பிடாம போய் மயக்கம் போட்டு விழுந்துட்டா அந்தத் தம்பி என்ன பண்ணும்” என்க அமைதியாக அமர்ந்து உண்டாள்.
தன்னுடைய பேக்பாக் எடுத்துக்கொண்டவள் பாண்டியம்மாவை அனைத்துநிற்க அவருக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது ‘என்ன பிரச்சனை என்றே புரியவில்லை நேற்றிலிருந்து சேனாவும் இப்படித்தான் இருக்கிறான், இப்படி மனதொடிந்து அவள் போவதை பார்க்க மனதே ஆறவில்லை.
“பத்திரமா போமா” என்றார் வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை.
அவளை ஹாஸ்டலில் விட்டவன் “திலோ உனக்குத்தான்” என்று புதிய போன் ஒன்று கொடுக்க “வேண்டாம்ணா எனக்குப் பேசறதுக்கு யாருமில்ல” என்றுவிட்டு உள்ளே சென்றாள், கதிரவன் விடுதியின் உள்ளே செல்லவில்லை கீர்த்திக்கு தெரியாமலே வந்துசென்றான்.
திலோவை பார்த்த நட்புகள் “எங்கடி போன போனும் எடுக்கல உன்வீட்டுக்கு கூடப் போன் பண்ணினோம் நீ ஏதோ டூர் போய்ட்டன்னு சொன்னாங்க உங்க செர்வேன்ட், ஏன் இப்படி டல்லா இருக்க என்னாச்சு” என்று ஆளாளுக்கு கேள்வியெழுப்ப ஒருவரையும் கவனத்தில் கொள்ளாமல் அறைக்குள் சென்று கட்டிலில் விழுந்தாள்.
அவள் அழைக்காமல் அவளிடம் பேசுவதில்லை என்று பிடிவாதமாக இருந்தார் அவள் தந்தை “என்னை அவமானப்படுத்திட்டு போனாதானே, போய் அவஸ்தப்படட்டும் அவ அம்மாமாதிரியே திமிர் பிடிச்சவ ஓடுகாலி” என்று தினமும் அவளைக் கரித்துக்கொட்டினார்.
வந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு வீட்டின் லேண்ட்லைனுக்கு அழைத்தவள் ‘தான் ஹாஸ்டல் வந்துவிட்டதாக’ கூறி வைத்துவிட்டாள்.
அவள் எங்கிருக்கிறாள் என்று தெரியாமல் கொஞ்சம் டென்சன் இருந்தது கரணுக்கு அது மகளைப் பற்றிய பயம் அல்ல ஏதாவது நேர்ந்துவிட்டால் சொத்துக்கள் கிடைக்காதே என்ற பயமே.
ஹாஸ்டல் வந்துவிட்டாள் என்று தெரிந்தபிறகு நிம்மதிவந்தது தகப்பனுக்கு “எங்குப் போகப்போகிறாள் பரீட்சை முடிந்ததும் வீட்டிற்குதானே வர வேண்டும் அப்பொழுது கவனித்ததுக்கொள்ளலாம்” என்று மனைவியிடமும் சமாதானம் கூறினார்.
கரனைவிட அவனின் இரண்டாம் மனைவியே அதிகம் கோபத்தில் இருந்தாள் “ஏங்க இவ யார்கூடயாவது ஓடிப்போயிருப்பாளோ அதனாலதான் நாம காட்டின எல்லாரையுமே வேண்டாம் வேண்டாம்னு சொன்னாபோல”.
“இல்லனா எவனாவது கடத்திட்டு போய் ஏதாவது செஞ்சுட்டா சொத்துக்காக நாமதான் கொன்னுட்டோம்னு எல்லாரும் சொல்லுவாங்க அதோட நமக்கும் சொத்து கிடைக்காது” என்றாள்.
“நீ சும்மாயிரு அப்படிலாம் எதுவும் நடக்காது வந்துடுவா, எக்ஸாம் முடியறவரைக்கும் பொறுமையா இரு இங்க வரட்டும்” என்று அவளைச் சமாதானம் செய்துவைத்தான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.