அன்று பகல் மூன்று பேர் மட்டுமே வந்திருந்தனர் கிளினிக்கிற்கு, அவர்களும் சென்றுவிட சிறிது நேரம் மருந்துகளை எழுதி வைத்தவள் அந்த அறையை உள்பக்கமாகப் பூட்டிவிட்டு ஹாலில் நுழைந்து வீட்டின் கதவைத் திறந்து வைத்தாள்.
இன்னும் சமைக்கவில்லை சாதம் மட்டும் காலையிலே வைத்துவிட்டாள் ரசம் வைத்து வாழைக்காய் வறுத்து எடுத்துக்கொண்டு சாப்பிட அமர்ந்தாள் திலோத்தமா.
டிவி ஒன்றும் கிடையாது வீட்டில், அவளுக்கு அதில் நாட்டமும் இல்லை கையில் தட்டோடு வீட்டின் பின்னில் சென்று அமர்ந்துவிடுவாள் அந்த மலை முகடுகளையும் இயற்கையையும் பார்த்துக்கொண்டே சாப்பிட்டு முடித்துவிடுவாள்.
‘எப்படி இருந்த மனுஷன இப்படி ஆக்கிட்டியேம்மா திலோ’ என்றவனுக்கு மனதிற்குள் மகிழ்ச்சியே.
கதவை யாரோ அடைக்கும் சத்தத்தில் பதறித் திரும்பினாள் திலோ, அங்கு நின்றவனை கண்டு உறைந்து நின்றாள் கதவைத் தாழிட்டவன் அவளை மெல்ல நெருங்கக் கால்கள் வேரோடி நின்றது திலோவிற்கு.
அவளை இடையோடு அப்படியே அள்ளிக்கொண்டவன் தன்னோடு சேர்த்து இறுக்க, உணர்வு வந்தவள் அவனிடமிருந்து விடுபட முயன்றாள் “விடுங்க… விடுங்க…” என்று கைகள் கொண்டு அவனை அடித்தாள்,
அவனுக்கு அதெல்லாம் தெரியவேயில்லை.
இன்னும் இன்னும் அவளைத் தன்னுள் இறுக்கினான் “யு ஆர் ஹர்டிங் மீ” என்றவளின் மெல்லிய குரலில் நிதானத்திற்கு வந்தான் என்றாலும் அவளைத் தன் அணைப்பிலிருந்து விடுவிக்கவில்லை.
“இப்படித்தான் அவளையும் கட்டிபிடிச்சியா” என்றவள் கேள்வியில் சட்டென்று தன் பிடியை விட்டான்.
தடுமாறி நின்றவள் கன்னத்தை அழுந்தப் பற்றித் தன்னை நோக்கி இழுத்தவன் “தெரிலடி கட்டிப்பிடிச்சேனா முத்தம் குடுத்தேனா என்ன எழவு பண்ணினேன்னு எதுவும் தெரியல, ஆனா நீ… உன்னைப் பாத்த நொடிலயிருந்து எல்லாமே இங்க இருக்கு” என்றான் நெஞ்சில் கைவைத்து.
அந்த அறையில் ஒரு ஒற்றை சோபா மட்டுமே கிடந்தது அதில் சென்று அமர்ந்தான் தளர்வாக, சில நொடிகள் கடந்து “இங்க வா” என்று கைநீட்டி அவளை அழைக்க அவனை முறைத்துக்கொண்டு நின்றாள்.
கையை நீட்டி அவளை இழுத்து தன் மடியில் அமர்த்தியவன் அவள் கழுத்துவலைவில் முகம் புதைத்தான்.
அவள் திமிறிக்கொண்டிருக்க “அஞ்சு நிமிஷம் அப்படியே இருக்குற இல்ல… என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது, சும்மா இருந்தவனை காதலிக்கிறேன் உன்னைப் பிடிச்சுருக்குனு பின்னாடியே சுத்திட்டு பாதியிலே விட்டுட்டு போயிட்ட, உன்னைத் தேடி அலைஞ்சு கண்ணா பின்னான்னு காஞ்சுபோய் இருக்கேன் என்னை உசுப்பேத்தாத” என்றான் மீசை முடிகள் அவள் மேனியில் குறுகுறுக்க அப்படியே ஸ்தம்பித்து அமர்ந்துவிட்டாள் திலோ அதன்பிறகு அசைவேயில்லை அவளிடம்.
“ரொம்ப தேட வெச்சுட்ட… எதுக்குமே பயந்ததில்லைடி முதல்முறையா பயந்தேன் உன்னைத் தொலைச்சுருவேனோன்னு, நான் நல்லவன் யோக்கியன் அப்படிலாம் உன்கிட்ட சொல்ல வரல”.
“தப்புதான் அதை இல்லன்னு சொல்லமாட்டேன் ஆனா அது முடிஞ்சு போச்சு அவளைப்பத்தி எனக்கு ஒண்ணுமே இல்லை, அவ என்கிட்டே கேட்ட ஒரு கேள்வி அதுதான் என்னைக் கல்யாணத்துல இருந்து தள்ளி நிறுத்திச்சு” என்றவனை அவள் புரியாமல் பார்க்க.
“சொல்றேன் எல்லாம் சொல்றேன் ஆனா இப்போயில்ல” என்றவன் தன் பிடியை விட அதை உணராமல் அப்படியே அமர்ந்திருந்தாள் அவள்.
“எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை உன்ன அப்படியே தூக்கிட்டு கூடப் போவேன்” என்க அப்பொழுத்துதான் அவளுக்குப் புரிந்தது உடனே அவனிடமிருந்து துள்ளி எழுந்து தள்ளி நின்றாள்.
“ரொம்பத்தான்… வாடி உன்னைப் பாத்துக்குறேன்” என்று மனதில் கூறியவன் கதவைத் திறந்து வெளியில் சென்றான்.
‘போய்விட்டானா! அவ்வளவுதானா’ என்று அவள் மனம் சினுங்க கையில் ஒரு கவரோடு உள்ளே நுழைந்தான், கவரிலிருந்து பத்திரிக்கையை எடுத்து அவள் கையில் வைத்தவன் “கீர்த்திக்கு அடுத்தவாரம் கல்யாணம் நீ கண்டிப்பா வரணும்”.
“மாட்டேன்” என்றாள் உடனே.
ஆழ மூச்செடுத்து தன்னை சமன் செய்தவன் “நீ வருவன்னு அவ எதிர்பார்க்குறா, உன் பிரெண்ட்ஸ் எல்லாரும் வராங்க நீ வரனும், இல்லனா கல்யாண நாள் காலைல நான் இங்க இருப்பேன்” என்றவனை எதைக் கொண்டு அடிக்க என்று பல்லைக்கடித்தாள் திலோ.
“ஏன் என்னை இப்படி டார்ச்சர் செய்றீங்க நான் எங்கேயும் வரமாட்டேன், நான் எதுக்கு வரணும் நீங்க எனக்கு யாரும் இல்ல உங்க வீட்டு கல்யாணத்துக்கு நான் ஏன் வரணும், நீங்கச் செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றி அதுக்குமேல எதையும் என்கிட்டே எதிர்ப்பாக்காதீங்க, எனக்கு உங்களைப் பிடிக்கல நீங்கத் தொடுறது பிடிக்கல…” என்றவளை சில நொடிகள் பார்த்து நின்றவன் கையில் இருந்த கவரை சோபாவில் வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினான் மனம் ரணமாய் வலித்தது.
‘ஏன் அப்படி பேசின, ஏன்… ஏன்…’ என்று அவள் வாயில் அவளே அடி போட்டுக்கொண்டாள் ‘போய்ட்டாங்க ஏன் வார்த்தையை விட்ட திலோ, அமைதியா இருந்திருக்கலாமே… ஏன் காயப்படுத்தின உன்கிட்ட உண்மையா இருக்கணும்னு நினைச்சுத்தானே சொன்னாங்க அதையே நீ சொல்லிக்காமிக்கலாமா”.
‘நீதானடி பிடிச்சுருக்குனு பின்னாடியே போன ஒரு தப்பு செஞ்சிட்டார்ன்னு இப்போ பிடிக்காம போய்டுச்சா’ என்று இரவெல்லாம் அவள் மனசாட்சி உறங்கவிடாமல் கேள்விகளால் குத்துக்கிழித்தது.
பத்திரிக்கையைக் கையில் ஏந்தியவள் அதை ஆசையாய் வருடினாள் நல்ல அரக்கு நிறத்தில் தங்க இழை கொண்ட கார்டு, சொந்தங்களின் பெயர்கள் அச்சிடப்பட்டு மணமகன் மணமகள் புகைப்படத்தோடு அழகாக இருந்தது.
தனக்கு இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பில்லை தாயும் தந்தையும் நடந்த நினைக்கும் தன் திருமணத்தைக் கூடப் பதிவு திருமணமாகவே நடத்த நினைக்கிறார்கள், இப்படி சடங்குகள் செய்த்து மண்டபம் பிடித்து முறைப்படி நடத்த அவர்கள் தயாரில்லை, இருவருமே அடுத்தவரின் அருகாமையை விரும்பவில்லை அதனாலே வந்தோமா கையெழுத்திட்டோமா என்று வேலையை முடிக்கப் பார்க்கிறார்கள்.
அவன் வைத்துச்சென்ற கவரில் கிளிப்பச்சை நிறத்தில் பட்டுப் புடவை இருந்தது அதை நெஞ்சோடு இறுக்கமாக அனைத்துக்கொண்டவளுக்கு நிற்காமல் கண்ணீர் வழிந்தது.
கல்யாண வேளைகளில் முழுவதுமாக மூழ்கிப் போனான் சேனா, அனைத்து வேலைகளையும் அவனே செய்தான் உறக்கம் அவனை விட்டு எங்கோ சென்றிருந்தது, உள்ளே என்ன நடந்தது என்று கதிரவனுக்கு தெரியவில்லை என்றாலும் காயப்பட்டிருக்கிறான் என்று புரிந்தது.
மகனின் மாற்றத்தைப் பெற்றோரும் கவனித்து கொண்டுதானே இருக்கிறார்கள் “என்னடா ஆச்சு சேனாவுக்கு? குன்னூர்ல இருந்து வராம இருந்தானே அப்போதான் ஏதோ நடந்திருக்கு, என்னனு சொல்லு” என்று கதிரைப் போட்டு உலுக்கினர்.
என்னவென்று சொல்லுவான் எப்படியெல்லாமோ இதுவரை சமாளித்துவிட்டான் இப்பொழுது மீண்டும் பிடித்துக்கொண்டார் பூபதி “என் பேரனுக்கு என்னடா பிரச்சனை, தங்கச்சி கல்யாணத்துக்கு வேலையை இழுத்துப்போட்டு செய்றான் ஆனா அவன் முகத்துல நிம்மதி தெரியலையே என்னடா வாட்டுது எங்க புள்ளைய” என்றார் அவர் வேதனையோடு.
பேரன் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதே அவருக்கு மனவருத்தம், இதில் முன்பு இருந்த உற்சாகமும் அவனிடம் காணப்படவில்லை வெண்மதியும் கதிரவணைத்தான் பாத்திருந்தார்.
“என் புள்ளைக்கு காலகாலத்துல கல்யாணம் ஆகியிருந்தா இப்போ அவன் பொண்டாட்டி புள்ளையோட நின்னு தங்கச்சி கல்யாணத்தை நடத்தியிருப்பான், இப்படி தனியா நிக்குறான் மனசுல இப்போ என்ன கவலைன்னு தெரியல சரியா சாப்பிடுறதுகூட இல்ல மாமா, கேட்டாலும் எதுவும் பதிலில்லை” என்றவர் கண்ணீரை பார்த்தவனுக்கு அதற்குமேல் முடியவில்லை.
“அண்ணா ஒரு பொண்ணை விரும்புது” என்றவன் கூறிமுடிக்கும் முன் “என்ன? யாரு? எங்கேயிருக்கா?” என்ற கேள்விகள் வந்து விழுந்தது.
“ஏன்யா அந்தப் புள்ள எதுவும் பிடிக்கல அப்படினு…” என்ற வெண்மதிக்கு அதற்குமேல் வார்த்தை வரவில்லை, மகன் விருப்பம் சொல்லி அந்தப் பெண் மறுத்திருப்பாளோ மகன் வாழ்வு மலராதா என்றவர் கலங்கி நிற்க.
மனைவியின் அருகில் நெருங்கிய முத்துப்பாண்டி அவரைத் தோளடு அணைத்துக்கொண்டு “இரு வெண்மதி என்னனு கேப்போம்” என்றவர் “சொல்லு கதிர் என்ன பிரச்சனை பொண்ணு யாரு முதல்ல அதைச் சொல்லு” என்றார்.
“பொண்ணு…” என்று அனைவரையும் ஒருமுறை பார்த்தவன் “திலோத்தமா” என்க அனைவருக்குமே அதிர்ச்சிதான்.
“அந்தப் பெண்ணா! எப்படி? அன்றுதானே பார்த்தான் அவளை, ஒருவேளை முன்பே தெரிந்திருக்குமோ அதனால்தான் உடனே அழைத்துவரச் சென்றானோ” என்று பலவாறாக யோசனை செய்ய அது அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தான் கதிர்.
“திலோவுக்கும் அண்ணனைப் பிடிக்கும்மா” என்க அவர்களுக்குக் குழப்பமே, அவளுக்கும் பிடித்திருக்க பின் என்ன என்ற கேள்வியை அவர்கள் முகங்கள் பிரதிபலிக்க.
“ரெண்டு பேருக்கும் இடையில ஒரு சின்ன மனஸ்தாபம், திலோ யார்கிட்டயும் சொல்லாம எங்கேயோ போய்டுச்சு ஒன்றரை வருஷமா தேடி இப்போதான் எடப்பள்ளில கண்டுபிடிச்சோம், அண்ணா போய்ப் பேசினார் ஆனா இன்னும் ஒன்னும் சரியாகல போல” என்றான் கதிர்.
“வேண்டாம் மதி என்ன பிரச்சனைன்னு நமக்குத் தெரியாது அவனே பாத்துப்பான் இதுல நாம தலையிடக் கூடாது அவங்களே பேசிச் சரிபண்ணட்டும்” என்றுவிட்டார் முத்துப்பாண்டி, என்றாலும் எப்படியாவது சரியாகிவிட வேண்டும் என்ற வேண்டுதல்தான் அனைவருக்கும்.
‘அவளை விட்டுவிடும் எண்ணமெல்லாம் இல்லை, நீ என்னைத் தொடுவது பிடிக்கவில்லை’ என்பவளை கட்டாயப்படுத்த முடியவில்லை அவனால்.
இதே வார்த்தைகளைத்தான் அன்று அவள் சொன்னாள்,
“என்னைமாதிரி ஒருத்திகூட இருந்தேன்னு சொல்லிப்பாரேன்” என்று மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகள் அவன் மண்டைக்குள் குடைய மொத்தமாகக் குடித்துவிட்டு தன்னையே மறந்து கிடந்தான் ஹோட்டல் அறையில்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.