அரைமணி நேரமாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்கிறான், அருகில் சென்றால் தன்னை இன்று சூப் வைத்துவிடுவான் என்பதால் ஜீப்பின் மறுபக்கம் நின்று எட்டி எட்டி பார்த்திருந்தான் கதிரவன்.
திலோத்தமா மானசீகமாக இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருந்தாள், எட்டு மணி நேரத்தில் தன்னை விட்டுச் சென்றுவிடுவான் என்று ஒரு ஒரு மணி துளியையும் எண்ணிக்கொண்டிருந்தவள் இப்பொழுது முழுதாக அவனை ரசிப்பதை மட்டுமே வேலையாக வைத்திருந்தாள்.
கல்லூரியிலிருந்து புறப்பட்டு இரண்டுமணி நேரம் எந்தப் பிரச்னையும் இல்லாமல் சென்றது அலைபேசியில் பேசுவது கதிரவனுடன் பேசுவது ரோடில் கவனம் வைப்பது என்றே இருந்தான்.
வலப்பக்கம் ஜன்னலின் அருகில் சாய்ந்து அமர்ந்திருந்தவள் விழிகள் அவன் முகத்தை விட்டு நகராமல் இருந்தது, தன்னை அவள் பார்க்கிறாள் என்ற உந்துதத்தில் அவன் திரும்பிப் பார்க்க அவள் விழிகள் நேரே பார்த்திருந்தது.
தனக்கு ஏன் அப்படி தோன்றுகிறது என்ற ஆராய்ச்சியில் இறங்கிவிட்டான் சேனாபதி.
மழையில் நனைந்து கிடக்கும் சாலையில் சிதறிக்கிடக்கும் பூக்களின்வழியே மண்வாசத்தை நுகர்ந்து, சில்லென்ற காற்று மேனி வருட மெல்லிசையை கேட்டுக்கொண்டே நடக்கும் மனநிலையில் குளிர்ந்துகிடந்தது மனது, இந்தப் பயணம் முடியக்கூடாது அப்படியே அவனுடன் சென்றுகொண்டே இருக்க வேண்டும் என்ற பேராசை நெஞ்சை முட்டியது.
சேனாபதியும் கதிரவனும் காலை உணவை உண்டுவிட்டே ஹாஸ்டெல் சென்றனர், ஆனால் திலோத்தமா…நாளை அவனுடன் பயணம் என்ற தித்திப்பிலும் என்ன உடை அணிய வேண்டும் எப்படி கூந்தலை முடிய வேண்டும் என்ற பதட்டத்திலும் சாப்பிடுவதையே மறந்திருந்தாள்.
மணி இரண்டை நெருங்கி நிற்கப் பசி வயிற்றை கிள்ளியது பேகில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்துக்கொண்டாள்.
நண்பனை மீண்டும் அலைபேசியில் அழைத்தவன் விவரத்தைக் கேட்க “மாப்ள நல்லா ஒரு இடம் பாத்து தங்கிடுங்க இன்னைக்கு பார்டர் கிராஸ் பண்றதெல்லாம் நடக்காது, முக்கியமா சேபா இருடா அதும் இந்த நேரத்துல,எல்லாம் காட்டானுங்களா வெறியாட்டம் ஆடுறானுங்க” என்றான் நண்பன்.
சேனாபதியின் விழிகள் திலோத்தமாவில் பதிந்தது அவளும் அவனைத்தான் பார்த்திருந்தாள் ஆழ்ந்துமூச்செடுத்தவன் எதிர்பக்கம் இருந்த அந்தச் சிறிய கடைக்குள் நுழைந்தான்.
ஒரு மணி நேரத்திற்கு முன்:
பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வண்டி சென்றுகொண்டிருக்க ஆங்காங்கே ஆட்கள் கூட்டமாக நின்று பேசுவதும் பதட்டமாகத் திரும்பிப் போவதுமாவாக இருந்தனர், வண்டியை நிறுத்தசொன்னவன் வழியில் ஒருவரிடம் என்னவென்று விசாரிக்க.
“அத ஏங்க கேக்குறீங்க கட்சி ஆபிஸ்ல வெச்சுஆளுங்கட்சி மந்திரியை வெட்டிட்டாங்க உயிர் பொழைக்குறது கஷ்டமாம், வெட்டினவங்க தப்பிச்சு வேற ஸ்டேட் போறதா தகவல் வந்திருக்குஎல்லா பக்கமும் வண்டிகளை மறிச்சு தேடுறானுங்க, மொத்தமா கலவரமா கிடக்கு”.
“பாக்குற எல்லாத்தயும் அடிச்சு நொறுக்குறானுங்க, தீ வெக்குறாங்க உயிருக்கு உத்தரவாதம் இல்ல எங்கயும் போக முடியாது வீட்டில போய்ப் பூட்டிட்டு இருக்க வேண்டியதுதான்” என்றவர் கடந்துசெல்ல சரியாக அவன் அலைபேசி ஒலியெழுப்பியது.
பெங்களூரில் இருக்கும் அவன் நண்பன் “மாப்ள எங்க இருக்க?”என்றான் பதட்டமாக.
ஓசூரை நெருங்கிவிட்டதாகக் கூறினான் சேனாபதி.
“சிட்டி புல் கலவரமா இருக்கு, கடை ஹோட்டல்எல்லாம் மூடிட்டாங்க இப்போ நீங்க ரிட்டர்ன் வர முடியாது அப்படியே போறதும் கொஞ்சம் ரிஸ்க்” என்றவன்.
“ஒன்னு பன்னு உள்ள கட் பண்ணிக்கோ வில்லேஜ் உள்ள நுழைஞ்சுட்டா கொஞ்சம் சேப், ஜிகானிஅனேகல் வழிஓசூர்போலாம்அங்கஇருந்துகிருஷ்ணகிரிடச்பண்ணலாம்,இல்லனாஉள்ளேயேபோய் ராயக்கோட்டைவழிகிருஷ்ணகிரிபோகணும்” என்க.
“சரி நாப்பாத்துக்குறேன்” என்றவனுக்கு நிலைமையின் தீவிரம் புரிந்தது, போலீஸ் வாகனம் கடந்து சென்றது மக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க சொல்லி, இனி கலவரம் பெரிதாக வெடிக்கும் அடியாட்கள் இறங்குவார்கள் உடைமைக்கும் உயிருக்கும் பாதுகாப்பில்லை, லாட்ஜ் ஹோட்டல் என்று அனைத்திலும் தேடுதல் வேட்டையும் நடக்கும்.
நெற்றியை பிடித்துக்கொண்டு சிறிது நேரம் யோசித்தவன் “ஏறு” என்றான் கதிரவனிடம், இவனே வண்டியை எடுத்தான் வண்டி ஓட்ட மிகவும் பிடிக்கும் சேனாபதிக்கு அதிக தூர பயணம் செல்லுகையில் கதிரவனை அழைத்துக்கொள்வான், உடன் ஆள் இருந்தால் ஓய்வெடுத்துக்கொண்டு வண்டி ஓட்டலாமே.
“என்னண்ணா?” என்ற கதிரவனை பார்த்தவன் நிலைமையின் தீவிரத்தை விளக்கி “இன்னைக்கு போகமுடியும்னு தோணலபாதுகாப்பாஒரு இடம் பாக்கணும்” என்றவன் கிளை சாலை ஒன்றின் உள்ளே நுழைந்தான்.
நண்பன் கூறிய வழிதான் கொஞ்சம் சுற்று ஊருக்குள் நுழைந்து செல்ல வேண்டும், பரவாயில்லை கிருஷ்ணகிரி தொட்டுவிட்டால் அங்கே நிறைய ஆட்களைத் தெரியும் தங்குவதற்கு பிரச்சனை இருக்காது, திலோத்தமா உடன் இருப்பதாலே இத்தனை யோசனை இல்லையேல் தங்களின் வழியே சென்றிருப்பான்.
தன்னை நம்பி உடன் வருகிறாள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் அழைத்துச்செல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே “கிருஷ்னகிரி போயிட்டு முடிவு செய்யலாம்” என்று சொல்லிமுடிக்க.
பெரிய அதிர்வோடும் சத்தத்தோடும் கட்டுப்பாட்டை மீறித் தறிகெட்டு ஓடி, அவன் அடித்த சடன் பிரேக்கில் குலுங்கி நின்றது ஜீப் ‘என்ன நிகழ்ந்தது?’ என்று யோசிப்பதற்குள் அனைத்தும் முடிந்துவிட நன்றாக முன்னில் இருந்த சீட்டில் தலையை இடித்துக்கொண்டாள் திலோ.
சில பல கிளிகள் பறந்தது சுற்றிலும், தலை சுற்றல் ஒரு கட்டத்தில் நின்று சுற்றம் பிடிபட அருகில் நின்று அவள் முகத்தைக் கைகளில் தாங்கித் தண்ணீரை தன் கைக்குட்டையில் நனைத்து நெற்றியில் வைத்துக்கொண்டிருந்த சேனாபதியை விழிவிரித்து பார்த்தாள்.
“இப்போ ஒகே வா” என்றவன் குரலில் மெல்ல தலை ஆட்டினாள், தலை வலியை இப்பொழுது உணர முடிந்தது மெல்ல மெல்ல வலி மண்டை முழுதும் பரவியது அவள் முகம் சுருங்க “வலிக்குதா” என்றான் மென்மையாக.
ஏனோ திலோத்தமாவிற்கு அவனை அப்படியே கட்டிக்கொள்ள வேண்டும் போல ஆசை எழுந்தது, அந்த மார்பில் தலை சாய்ந்துகொண்டால் வலிகள் காணாமல் போய்விடும் என்று திடமாக நம்பினாள் அவள்.
அவன் தன்னையே பார்த்திருப்பதை உணர்ந்தவள் “ஹ்ம்ம்” என்றாள் மெல்ல.
நெற்றி நன்றாகக் கன்றி வீங்கி இருந்தது, உதட்டின் ஓரத்தில் பல் தட்டி ரத்தம் வந்தது “தொடச்சுக்கோ” என்று கைக்குட்டையை அவளிடம் நீட்டினான்.
“என்ன செய்ய வேண்டும்” என்று தெரியாமல் அவள் விழிக்க “உதட்ல ரத்தம் வருது” என்று அவன் இதழில் தொட்டு காண்பிக்க கைக்குட்டையை அவன் இதழருகே கொண்டு சென்றாள் திலோ.
இன்னும் அவளுக்குத் தெளிவுவரவில்லை என்று புரிந்தது, அவனே அவளுக்குத் துடைத்துக் கொடுத்தான் அவள் விழிகள் அவன் முகத்தில் எதையோ தேடியது.
‘என்னைக் கூட்டிட்டு போறிங்களாஉங்களோட இந்தக் கைக்குள்ள அணைப்புக்குள்ள இருக்கணும்’ என்று யாசித்தது,
அவள் விழிகளின் மொழியை அவனால் படிக்க இயலவில்லை.
“உங்களுக்கு ஒன்னும் இல்லையே” என்றவள் பார்வை மொத்தமாக அவனை ஆராய்ந்தது “ஐம் குட்” என்றவன் முன்னில் சீட்டிற்கு பக்கத்தில் வைத்திருந்த சிறிய பேகை எடுத்தான் கையில் எப்பொழுதும் மருந்துகள் இருக்கும்.
தந்தைக்கு அழைத்து மேலோட்டமாக விஷயத்தைக் கூறியவன் என்ன மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டறிந்து அவளுக்கு அதைக் கொடுத்தான்,அவளே மருத்துவம் படிக்கிறாள் என்பதெல்லாம் நினைவு வரவில்லை அவனுக்கு.
ஏதோ ஒரு பதட்டம் உள்ளுக்குள், அவளை அப்படி பார்க்க இயலவில்லை அவனால் அவன் கவனத்தை ஈர்த்த தெத்துப்பல் சிரிப்பைத் தேடியது மனது.
“படுத்துக்கோ” என்றவன் அங்கிருந்து அகன்று, கதிரவனின் அருகில் சென்றான்.
“நீ ஒகே வா” என்க.
“எனக்கு ஒண்ணுமில்லண்ணா கால் கொஞ்சம் இடிச்சுடுச்சு, உங்களுக்கு” என்க.
“ஒண்ணுமில்ல” என்றவன் வண்டியைப் பார்க்க டயர் வெடித்திருந்தது “மச்.. திங்ஸ் எடு டயர் மாத்தணும்” என்றவன் அதைப் பரிசோதிக்கக் கதிரவன் தயக்கமாக அவன் முன்னில் வந்து நின்றான்.
“அண்ணே சர்வீஸ்க்கு குடுத்தப்போ கார் ஜாக்கியை வெளில எடுத்தேன் திரும்ப வைக்க மறந்துட்டேன் கவனிக்கல” என்றவனை முறைத்த முறைப்பில் அவனுக்குக் கிலி பிடித்தது.
‘என்ன செய்ய?’ என்று யோசித்தவன் தூக்கி பிடித்து மாற்ற முடியுமா என்று யோசனை செய்து கொண்டிருக்க “அண்ணே ஸ்டெப்னி காணும்ண்ணே” என்றான் கதிரவன்.
கையில் கிடைத்த கல்லை எடுத்து அவனை நோக்கி வீச ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்தவன் வண்டியின் சைடில் மறைத்துக்கொள்ள அதைப் பார்த்து வாயை மூடிச் சிரித்தாள் திலோத்தமா.
சுற்றிலும் பார்வையை சுழலவிட்டான் நெடுஞ்சாலையிலிருந்து கொஞ்சமே உள்ளில் வந்திருந்தனர் ஒரு சிறிய கடை பார்வைக்கு கிடைத்தது, சமையல் பாத்திரங்கள் வாடைக்கு கொடுக்கும் கடை அதோடு சேர்ந்து சிறிய மாவு அரைக்கும் மில்.
கொஞ்சம் தூரத்தில் ஒரு மளிகைகடை, அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில வீடுகள் கடையை நெருங்கியவன் “ஏங்க இங்க மெக்கானிக் ஷாப் இருக்கா” என்று கேட்க.
எழுந்து வெளியில் வந்தவர் “இங்க கிடையாதுங்களே ஹைவேல ஒரு ஆறுகிலோமீட்டர் போனா இருக்கும்” என்றார்.
‘ஆறு கிலோமீட்டர் எப்படி போக?’ அவரிடம் ஒரு பைக் இருந்தது இந்தச் சூழ்நிலையில் வண்டியைத் தரமாட்டார் அணைத்து வழிகளும் அடைபட்டு கிடந்தது.
அவனுடன் வந்தவர் திலோத்தமாவை பார்த்துவிட்டு “ஐயோ அடிபட்டுருக்கே ஹாஸ்ப்பிட்டல் போணும்னா கூட ரொம்ப தூரம் ஆச்சே” என்க.
“இல்ல பரவாயில்ல மருந்து சாப்பிட்டேன்” என்றாள் அவள் சிறிதுநேரம் பேசியவர் திரும்பிச் சென்றுவிட்டார், நேரம் கடந்துகொண்டிருக்க தலைவலியோடு பசியும் சேர்ந்துகொண்டது அவளுக்கு.
மளிகை கடையில் அதிகம் பொருட்கள் இல்லை கொஞ்சம் பிஸ்கட் வாழைப்பழம் வாங்கியவன் தேடிப்பார்க்க குடிக்க எதுவும் இல்லை, சிறிய சிறிய குப்பிகளில் இருந்த நிறம் சேர்த்த குளிர்பானங்கள் அவனுக்குப் பிடிக்காது தண்ணீர் கேட்டபோது இல்லை என்றார் அவர்.
மெல்ல வெளிச்சம் மறைய எங்கும் நிசம்பதம், கடைக்காரரும் கடையை அடைத்துக்கொண்டிருந்தார்.
திலோத்தமாவின் முகமே சரியில்லை ஏதோ ஒரு அவஸ்தையில் நெளிந்தாள் “என்னாச்சு ரொம்ப வலிக்குதா” என்று கேட்டுக்கொண்டே சேனா அருகில் வர “பாத்ரூம் போகணும்” என்றாள் தயங்கி தயங்கி, அச்சோ இதை மறந்து போனோமே என்றிருந்தது அவனுக்கு.
இவர்களின் அருகில் வந்தவர் “இங்க எங்கயும் தங்க வசதி இல்லைங்க ஏதா இருந்தாலும் காலைல தான் பாக்க முடியும்,சாப்பாடு எல்லாம் பெருசா இருக்காது கஞ்சியோ கூழோதான் எடுத்துட்டு வரவா சாப்பிடுவீங்களா” என்க நெஞ்சம் நெகிழ்ந்துவிட்டது அவர்களுக்கு.
“இல்லங்க பரவாயில்ல ஒரு நாள்தானே ரொம்ப நன்றி” என்றவன் கூற, “படுக்கணும்னா கடை வாசல்ல இடம் இருக்கு அங்க படுத்துக்கோங்க” என்க.
“சரிங்க” என்றவன் அவரிடம் கழிவறை பற்றி விசாரிக்க “நா இப்படி பின்னாடியே போய்டுவேன்” என்று சிலநொடிகள் யோசித்தவர் “வாங்க” என்று அழைத்துச்சென்று பின்னில் இடம் காண்பித்தார்.
கொஞ்சம்கூட மனமில்லை என்றாலும் வேறு வழியும் இருக்கவில்லை, அங்கே பெரிய ட்ரம்மில் தண்ணீர் இருந்தது அதை எடுத்துக்கொண்டவள் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் பின்னில் சென்றாள்.
கொஞ்சம் நிம்மதி வந்தது கை கால் முகம் கழுகிக்கொண்டாள்.
“அப்போ நா கிளம்புறேங்க” என்றவர் சைக்கிளை மிதிக்கத் தொடங்க “அண்ணா” என்று அழைத்து அவரை நிறுத்தினாள் திலோ.
“சமைக்க பாத்திரம் குடுப்பீங்களா?” என்க.
“என்ன பண்ற! பாத்திரத்தை மட்டும் வெச்சு என்ன செய்ய சமைக்க நம்மகிட்ட ஏதும் இல்ல” என்றவன் அவள் உடல்நிலையை எண்ணி “வேண்டாம் கஷ்டம்” என்றான் அவளிடம்.
“ரொம்ப பசிக்குது காலைல இருந்து சாப்பிடல ரொம்ப தலை வலிக்குது,நா ஒன்னு யோசிச்சுருக்கேன் அவர்கிட்ட கேளுங்களேன்” என்றாள்.
யோசித்தவர் “என்ன வேணும்” என்று முன்னே நடக்க அவளுடன் இவர்களும் இனைந்து நடந்தனர், இரண்டுசிறிய குண்டான் கரண்டி தோசைக்கல்எடுத்தவள் தட்டையும் கத்தியையும் தேடி எடுத்துக்கொண்டாள்.
“இங்க தண்ணி கிடைக்குமா” என்க அவர் ஊருக்குப் பொதுவான குடிநீர் குழாயைக் காண்பித்தார், கதிரவன் வண்டியில் இருந்த பாட்டில்கள் எடுத்துச் சென்று பிடித்துக்கொண்டான்.
இதுவரை இப்படியொரு சம்பவம் நடந்ததில்லை முதன்முறையாக இப்படி வழியில் நிற்கிறார்கள் அதுவும் ஒரு பெண்ணை அழைத்துவந்து அடிபட வைத்து அவனுக்கு மிகவும் குற்றஉணர்வாக இருந்தது.
“இல்ல மிக்ஸில அரைக்கத்தான் போறேன் வேற ஒன்னும் இல்ல” என்றவள்அங்கேயே அவர்களிடம் கேட்டு மிக்ஸியை வாங்கினாள், தேங்காயை உடைத்து வெட்டிக்கொடுத்தான் கதிரவன்.
அவனுக்குமே ஏதாவது சாப்பிட்டால் போதும் என்றிருந்தது,ரவை தயிர் தேங்காய் தேவையான தண்ணீர் உப்பு வெங்காயம் சிறிதுசேர்த்து அரைத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொண்டாள்.
தேங்காய் வரமிளகாய் உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக்கொண்டாள் தொட்டுக்கொள்ள, அவர் கேட்டதைவிட கொஞ்சம் அதிகமாகவே பணம் கொடுத்தான் சேனா.
அனைத்தையும் எடுத்துக்கொண்டு அந்தக் கடையின் முன்னில் வந்து அமர்ந்தனர் “எப்படி சமைக்க” என்று அவள் சேனாவை பார்க்கக் கல்லை எடுத்து வைத்துச் சிறு குச்சிகள் ஓரத்தில் கிடந்த இலைகள் கொண்டு கொஞ்சம் பெட்ரோல் ஊற்றி எப்படியோ அடுப்பை எரிய வைத்துக்கொடுத்தான்.
மாவை சிறிய சிறிய கட்டியான ஊத்தப்பமாக ஊற்றினாள் அதனோடு காரமான தேங்காய் துவையலும் அமிர்தமாக இருந்தது.
இருந்த மாவை மொத்தமாகக் காலி செய்துவிட்டார்கள் மூவருக்கும் நல்ல பசி வயிறு நிறைந்தது, ஆண்கள் இருவருமே பாத்திரங்களைக் கழுகி வண்டியில் வைத்துவிட்டனர்.
‘எங்கே உறங்க என்ன செய்ய?’ என்ற யோசனை அடுத்து மண்டை உடைத்தது, திலோவை வண்டியில் படுக்கச் சொல்லலாம் என்று யோசனை செய்தவன் “கதிர் நீ அங்க படுத்துக்கோ” என்றான் கடையைக் காண்பித்து.
திலோவை வண்டியில் படுக்கச் சொல்லச் சீட்டில் நன்றாகப் படுத்துக்கொண்டாள் அவன் உடன் இருக்கும் தைரியத்தில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள் திலோ.
முன்னில் அமர்ந்தவாக்கிலே கண் மூடியவனுக்கு உறக்கம் வரவில்லை அவன் புலன்கள் எல்லாம் விழித்தே கிடந்தது