மூன்று பேர் பயணம் செய்கிறார்கள் என்பதே தெரியாத அளவுக்கு ஆழ்ந்த அமைதி அந்த வண்டியில், கதிரவன் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தான்.
‘தாய் தந்தை சரியில்லை, தன்னை பற்றிக் கவலையில்லை, அதோடு விருப்பமில்லா திருமணம் அனைத்தும் சேர்ந்து அவள் இப்படி வருத்தத்தில் இருப்பதாக அவன் நினைத்துக்கொண்டான்.
காரணம் புரிந்தவன் ஏதும் அறியாதவனை போல வேடிக்கை பார்த்து அமர்ந்திருந்தான், அவள் இடையிடையே தலையைப் பிடிப்பதை கவனித்தவன் கதிரவனுக்கு கண் காண்பித்தான் வண்டியை நிறுத்தச்சொல்லி.
ஒரு சாலையோர கடையில் நிறுத்தினான் கதிரவன், அழைத்துவரச் சொல்லிவிட்டு சேனாபதி முன்னில் நடக்க “அம்மாடி வா ஒரு டி குடிப்போம்” என்றான் கதிரவன்.
“வேண்டாம்ண்ணா நீங்கக் குடிச்சுட்டு வாங்க” என்றவள் குரலே சோர்ந்து போய் எப்பொழுது வேண்டுமானாலும் உடைந்துவிடுவேன் என்னும் நிலையில் இருந்தது.
“பிடிக்கலைன்னா ஏன் வீட்டுக்குப் போற அவங்களுக்கு சொத்து கிடைக்க நீ பிடிக்காத கல்யாணம் செஞ்சுக்க வேண்டிய அவசியம் இல்லையே” என்றவனை பார்த்து அவள் மெலிதாகப் புன்னகைபுரிந்தாள்.
“இப்போ எவ்ளோ நல்லா இருக்கு வா கொஞ்சம்நேரம் அப்படியே காத்தாட ஒக்காந்து பேசலாம், இனிமே பாக்க முடியுமோ என்னமோ! இன்னும் கொஞ்ச நாள்ல படிப்பு முடிஞ்சுடும் அப்புறம் எல்லாம் பெரிய டாக்டர் ஆகிடுவீங்க” என்றவனுடன் சேர்ந்து நடந்தாள்.
மூவரும் வட்டமாக அமர்ந்து தேநீர் அருந்தினர் அருகில் இருந்த பார்க்கில் மகளை ஊஞ்சலில் அமர்த்தி ஆட்டிக்கொண்டிருந்த தந்தையை பார்த்திருந்தாள் திலோத்தமா, இப்படி தன்னிடம் தன் தந்தை நடந்துகொண்டதாக அவளுக்கு நினைவில்லை.
உண்மையில் கரண் அவளுடன் நான்கு வயது வரை இருந்தார், தாயை அவளுக்கு நினைவு கூட இல்லை.
“என் தாத்தாக்கு அம்மா ஒரே பொண்ணு, ரொம்ப செல்லம்… பாட்டி கொஞ்சம் கட்டுப்பாடு போடுவாங்க பொண்ணுங்க நல்லா உடை உடுத்தனும் தலை பின்னிக்கனும் பூ வெக்கணும் அப்படிலாம்… அதெல்லாம் அவங்க கட்டளையா சொன்னதில்லை அப்படி இருந்தா நல்லா இருக்கும் அப்படின்னு சொல்லி வளத்தாங்க”.
“பொண்ணு ஆசைப்பட்டது எல்லாம் வாங்கி குடுத்தாங்க ஆசைப்பட்டதை படிக்க வெச்சாங்க” என்றவள் நினைவுகள் பின்னோக்கி சென்றது.
சுந்தரன் கமலா தம்பதிக்கு ஸ்வேதா ஒரே மகள் சென்னையில் மேற்படிப்பு முடிந்து வீட்டிற்கு வந்திருந்தாள்.
“சென்னைல எப்படி வேனா டிரஸ் போடு ஊருக்கு வந்தா கொஞ்சம் கவனமா இருமா இது கிராமம் அப்பாக்கு ஊர்ல நல்ல மதிப்பிருக்கு நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க” என்றார் கமலா, முட்டிக்குமேல் உள்ள குட்டி உடுப்போடு வந்துநின்ற மகளைப் பார்த்து.
அது அவரின் மகள் ஸ்வேதாவிற்கு தாயின் மீது இன்னும் வெறுப்பை கூட்டியது, உடன் படித்தவனுடன் காதலில் இருந்தவள் அவனுடன் திருமணம் செய்யாமல் வாழப்போவதாக அலைப்பேசி மூலம் தகவல் கொடுத்தாள்.
‘என்ன குறை வைத்தோம் இவளுக்கு ஏன் இப்படி தடம்மாறிப்போனாள்’ என்று மனம் வருந்தினர் பெற்றோர், எப்படியும் அவளுக்காகச் சேர்த்துவைத்த சொத்து அனைத்தும் வந்து சேர்ந்துவிடும் என்று நம்பியிருக்க அனைத்து சொத்துக்களையும் தானம் கொடுக்கப்போவதாக அறிவித்தார் சுந்தரர்.
ஆடம்பர செலவுகளுக்கு அந்தப் பணம் இல்லாமல் எப்படி என்று பதறிய ஸ்வேதா நியாயம் கேட்க வீட்டிற்கு வந்தாள், லிவிங் டுகெதர் என்பதை பற்றிக் கேள்விக்கூட படாத காலம் அது.
அவனைத்தான் பிடித்திருக்கிறது என்றால் போய்த்தொலை அவனுக்கே திருமணம் செய்து வைக்கிறோம் என்றனர் ஆனால் திருமணம் என்பது கட்டுப்பாடு அதில் சிக்கிக்கொள்ள விருப்பமில்லை என்று அதற்கும் அவள் மறுத்துவிட இந்தமுறை தந்தை தன் பிடிவாதத்தை காட்டினார்.
உன் விருப்பப்படி இருந்துகொள் எதற்கும் எங்களைத் தேடி வரக் கூடாது என்றுவிட்டார் அவர், நான்கு மாதங்களுக்குள் லிவிங் டுகெதர் கசந்துவிட, தனியே தங்கிக்கொண்டு வேலைக்குச் சென்றாள், மகாராணியாக அமர்ந்து மற்றவர்களை அதிகாரம் செய்யும் வாய்ப்பிருந்தும் எதற்காக இப்படி கஷ்டப்பட வேண்டும் என்ற என்ன பிறக்கத் தந்தை சொல்வதைப் போலத் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தாள்.
அதிலும் ஒரு நிபந்தனை வைத்திருந்தாள் ஸ்வேதா, தனக்கு பிடித்ததைப் போல மாப்பிளை அமைய வேண்டும் அதாவது தன்னுடைய சுதந்திரத்தில் தலையிடுபவனாக இருக்கக் கூடாது என்று.
“நான் சொல்பவனை மனப்பதானால் இங்கே இரு இல்லையேல் வீட்டைவிட்டு போ” என்றுவிட்டார் சுந்தரர்.
போராடி முடியாமல் திருமணத்திற்கு சம்மத்தித்தாள், திருமணம் செய்யாமல் ஒருவனுடன் வாழ்ந்துவிட்டு வந்த பெண்ணை யார் மணந்துகொள்ள… அவர்கள் முன் பேசவில்லையென்றாலும் புறம் பேசினர், தலைமுறை தலைமுறையாகச் சேர்த்து வைத்திருந்த பெரு புகழ் எல்லாம் ஒற்றை மகளால் காற்றில் பறந்தது.
தூரத்து சொந்தத்தில் இருந்த கரணை இறுதியாகத் தேடிப்பிடித்தனர், படித்துவிட்டு சரியாக வேலை கிடைக்காமல் படுக்கையில் கிடக்கும் தாயின் உயிரைக் காப்பாற்ற ஸ்வேதாவை திருமணம் செய்ய ஒத்துக்கொண்டான் கரண்.
தண்டவாளம்போல ஒட்டாமலே ஓடிக்கொண்டிருந்தது அவர்கள் வாழ்க்கை, அவளின் ஆடம்பரம், உடை பழக்கவழக்கங்கள் எதுவும் பிடிக்கவில்லை என்றாலும் ஒருவார்த்தை கூறாமல் கடந்துசெல்வான் கரண்.
அவனுடைய உடை பழகும் விதம் எதுவும் இவளுக்கும் பிடிக்காது, ஒருவருடமாக இப்படியே சென்றுகொண்டிருந்த வாழ்க்கை மெல்ல மெல்ல மாறத் தாம்பத்தியத்தில் இணைந்தனர்.
குழந்தை வேண்டும் என்று அவனும் முடியாது என்று அவளும் நிற்க மீண்டும் முட்டிக்கொண்டது.
“நான் எதற்க்காக வலி தாங்க வேண்டும் வாடகைத்தாய் மூலம் பெற்றுக்கொள்ளலாம்” என்றாள் அவள்.
“உன்னால் முடியாதபோது அதைப் பற்றி யோசிக்கலாம்” என்று அவனும் நின்றான்.
மாமனாரின் சொத்துக்களை பார்த்துக்கொண்டாலும் தனக்கென்று ஒரு அடையாளம் வேண்டும் என்று எண்ணினான் கரண், அவன் விரும்பிய தொழில் தொடங்க உதவினார் சுந்தரர், மெல்ல மெல்ல தன் தொழிலை மட்டும் பார்க்கத் தொடங்கினான் கரண்.
வயதான காலத்தில் அனைத்து இடத்திற்கும் ஓடி ஓடிப் பார்த்துக்கொண்டார் சுந்தரர், இப்படியே எத்தனை காலம் போவது என்ற சிந்தனையில் குழந்தை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தாள் ஸ்வேதா.
அனைவரும் சேர்ந்து அவர்களுடைய இஷ்டத்திற்கு தன்னை வலைப்பதாகக் கோபம் வந்தது அந்த வெறுப்பு அப்படியே மனதில் தங்கியது.
கட்டாயத்தின் பேரில் சுமக்க தொடங்கிய குழந்தை பெரும் பாரமாகத் தோன்றியது அவளுக்கு, திலோத்தமா பிறந்தபிறகு பால் கொடுப்பதிலிருந்து பிள்ளையைப் பார்த்துக்கொள்வது வரை அனைத்திலும் பிரச்சனை.
தன்னுடைய தொழில் நல்ல வளர்ச்சியில் செல்லக் கரணின் குணத்தில் மாற்றம் வந்தது, எப்பொழுதும் சண்டை சச்சரவு என்று இருவருக்கும் இடையில் குழந்தை அல்லாடினாள், அடிக்கடி உடல்நிலை பாதிக்கத் தொடங்கியது பிள்ளைக்கு.
நிம்மதி என்பதே இல்லாமல் போக விவாகரத்து கேட்டு நின்றாள் ஸ்வேதா, கொடுப்பதற்கு கரணும் தயாராக நின்றான், குழந்தை மட்டும் இருவருக்கும் வேண்டாத பொருளாகக் கிடந்தாள்.
பேத்தியின் நிம்மதியை கருத்தில்கொண்டு இருவரும் பிரிந்துசெல்ல எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை சுந்தரர், தன்னுடைய நகைகள் மற்றும் தந்தையிடமிருந்து கோடி ரூபாயையும் வாங்கிக்கொண்டு தன்னுடைய கனவுதேசமான ஆஸ்திரேலியாவுக்கு பறந்துவிட்டாள் ஸ்வேதா.
ஒருவருடத்திற்கு பிறகு அங்கு ஒரு வெளிநாட்டவனை விரும்புவதாகக் கூறினாள், இவர்கள் எந்தப் பதிலும் சொல்லவில்லை விசாரிக்கவுமில்லை சேர்ந்து வாழத் தொடங்கினாள், இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவனைத் திருமணம் செய்துகொண்டாள்.
அவள் விரும்பியபோலச் சுதந்திரமான வாழ்வு… ஒருகட்டத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று அவர்கள் முடிவு செய்யப் பிள்ளை வரம் கிடைக்கவில்லை, இறுதியில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆன் பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டாள்.
இங்கே கரண் தன் தாயின் விருப்பப்படி சொந்தத்தில் குடும்பப்பாங்கான பெண்ணை மணந்துகொண் டான், கணவன் குடும்பம் பிள்ளைகள் என்று அவன் எதிர்ப்பார்த்த மனைவி, அவர்களுக்கும் இரு ஆண் பிள்ளைகள் அந்தக் குடும்பத்தின் ஒற்றை பெண் வாரிசாக மாறினால் திலோத்தமா அவளுடைய எட்டு வயதில் பாட்டி இறந்துவிட அவளுக்கு எல்லாமுமாக மாறினார் சுந்தரர்.
விழிகள் மூடிச் சீட்டில் சாய்ந்தமர்ந்திருந்த சேனாபதியின் மனதில் கரண் ஸ்வேதா மீதான கோபம் எரிமலையாகத் தகித்துக்கொண்டிருந்தது, அடுத்த ஒருமணி நேரத்தில் கரணின் வீட்டை அடைந்துவிட்டனர்.
பெரிய பங்களா “வீடு பெருசா இருக்க அளவுக்கு இவனுங்க மனசு இல்ல” என்றான் கதிரவன், தன்னுடைய பையை எடுத்துக்கொண்டவள் “வாங்க” என்றாள் இருவரிடம்.
சத்தம் கேட்டுச் சமையல் வேலை செய்யும் பெண்மணி வெளியில் வந்தார் “வா பாப்பா நேத்தே வருவேன்னு பாத்திருந்து வரலைன்னதும் பயந்துட்டேன்” என்றவள் உடன்நின்றவர்களை பார்த்து “வாங்க வாங்க” என்று வீட்டிற்குள் நடந்தாள் உடனடியாகக் கரணுக்கு தகவல் பறந்தது.
அனைவருக்கும் தேநீர் தயாரிக்க அவர் உள்ளே செல்ல “ஒன்னும் வேண்டாம் நாங்க கிளம்பனும் இப்போவே நேரம் ஆச்சு” என்றான் சேனாபதி.
“ப்ளீஸ் ஒரு ஜூஸ் மட்டுமாவது குடிங்க” என்ற திலோத்தமாவின் விழிகள் ‘கொஞ்சம் நேரம் இரேன்’ என்று கெஞ்சியது, இளகத்துடித்த மனதை இழுத்து கட்டியவன் “பரவாயில்ல” என்றுவிட்டு “கதிர் போலாம்” என்றான். “திலோ வந்துட்டாளா” என்ற குரலில் திரும்பிப் பார்க்கக் கரணின்தாயார் அங்கு வந்து நின்றிருந்தார், அவசரமாக அடுக்கலைக்குள் சென்ற திலோத்தமா அரேஞ் ஜூஸ் போட்டு இருவருக்கும் எடுத்துவந்து கொடுத்தாள்.
அவளைக் கண்டனப்பார்வை பார்த்தான் சேனாபதி, மீண்டும் மீண்டும் மறுப்பது சரியாப்படவில்லை அதனால் அதைக் கையில் வாங்கிக்கொண்டான்.
“கொஞ்சம் நேரம் ஒக்காருங்கப்பா” என்ற கரணின் தாயார் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க “வந்துர்றேன்” என்ற திலோத்தமா படியேறி மேலே சென்றாள், சிறிது நேரத்தில் இருவரும் புறப்படத் தயாராகி நின்றனர்.
திலோத்தமாவை பலமுறை கீழே நின்று அழைத்தார் கரணின் தாயார், ஆனால் அவளிடம் எந்தப் பதிலும் இல்லை சமையல் செய்யும் பெண்மணி மேலே சென்று பார்த்துவிட்டு வந்து அவள் குளிப்பதாகக் கூற ‘என்ன இந்தப் பெண் அழைத்துவந்தவர்கள் புறப்படத் தயாராகி நிற்க இப்பொழுது குளிக்கப் போயிருக்கிறாளே என்று பார்த்தான் கதிர்.
“அவ எப்போவும் அப்படிதான் யாரோடவும் ஓட்டமாட்டா அவ அப்பாகூடவும் சரியா பேசமாட்டா என்கூடவும் பேசமாட்டா கேக்குறதுக்கு மட்டும் பதில்” என்று மீண்டும் புலம்பத் தொடங்கினார் காரணின் தாயார்.
‘ஏன் இப்படி செய்தாள்’ என்று கதிரவன் யோசித்து நிற்க “வா” என்று முன்னில் நடந்த சேனாபதிக்கு அவள் குளிக்கச் செல்லவில்லை என்று தோன்றியது, தான் விட்டுச்செல்வதை அவள் விரும்பவில்லை ஆகையால் வராமல் இருக்கிறாள் என்று புரிந்தது.
“நான் ஓட்டுறேன்” என்று ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான் சேனாபதி, தன்னிச்சையாக விழிகள் பின்னில் அவளைத் தேடியது, அவர்கள் புறப்பட்டபோது இரவு மணி ஒன்பதை நெருங்கியிருந்தது எப்படியும் அதிகாலையே குன்னூர் சென்று சேர இயலும்.
“இந்தப் பொண்ணு இப்படி செய்யும்னு நான் நினைக்கவேயில்லை” என்றான் கதிரவன், அவள் வராமல் இருந்தது அவனுக்குக் கொஞ்சம் வருத்தமளித்தது, சேனாபதி ஒன்றும் பேசவில்லை சிந்தனை முழுதும் திலோத்தமா நிறைந்திருந்தாள்.
பின்னல் திரும்பிப் பார்த்தவன் கொஞ்சம் நன்றாக எட்டி பார்த்திருக்கலாம் பின்னால் இருந்த சீட்டின் கீழே இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு படுத்திருந்த திலோத்தமாவை நேரிலே பார்த்திருக்கலாம்.