அத்தனை அழகாக இருந்தது அந்தப் பழ தோட்டம் பேரிக்காய், குழிப்பேரி, கொத்துப்பேரி, தாட்பூட், நீர் ஆப்பிள் எனப்படும் ரோஸ் ஆப்பிள் சப்போட்டா என்று பழங்கள் எங்கும் நிறைந்து இருந்தது, காண கண் இரண்டு போதவில்லை கால் வலியையும் பொருட்படுத்தாமல் வேகநடையில் உள்ளே நுழைந்தாள் திலோ.
“அம்மாடி பாத்து மெதுவா” என்றார் பாண்டியம்மா.
“ஹும் ஹூம்… இவங்க சொன்னதும் உடனே கேட்டுருவா அவசரக்குடுக்க” என்று மனதில் சொல்லிக்கொண்டவன் அவர்களின் பின்னே சென்றான், ஆட்கள் வேலை செய்துகொண்டிருந்தனர் பல பல நிறங்களில் பனித்துளிகளோடு கொள்ளை அழகாக இருந்தது பழங்கள்.
பாண்டியம்மாள் சில பழங்களைப் பறித்துக் கொடுக்க உடையில் தேய்த்துவிட்டு சாப்பிட்டு பார்த்தாள் உண்மையில் அத்தனை சுவையாக இருந்தது, ரசித்து உண்டவள் அவளே சில பழங்களைப் பறித்தாள், சப்போட்டா மரத்தில் ஒரு பழத்தை எடுக்க அவள் முயலப் பின்னிலிருந்து அவளைப் பிடித்து இழுத்தான் சேனா.
என்னவென்று திரும்பிப் பார்த்தவள் “ஒரே ஒரு பழம்தானே எடுக்குறேன் அதுக்குகூட கணக்கா” என்க.
அவளை முறைத்தவன் “எதையுமே யோசிச்சு செய்ய மாட்டியா” என்றுவிட்டு அவள் கைவைக்கப்போன இடத்தைக் காட்டினான், சூவ எறும்பு, செஞ்சுளுக்கை என்று பல பெயர்களில் அழைக்கப்படும் பெரியவகை எறும்பு… ஒன்று கடித்தால் போதும் வலி உயிர் போகும்.
இரண்டடி பின்னே நகர்ந்தாள் திலோத்தமா, அங்குப் பழங்கள் பறித்துக்கொண்டிருந்தவர்களை திரும்பிப் பார்த்தாள், சிலர் வெறும் கையிலும் சிலர் கையில் உறையும் அணிந்திருந்தனர், ஒன்றும் பேசாமல் அமைதியாக நின்றுகொண்டாள்.
அவனே பார்த்து நல்ல பழமாக எடுத்துக்கொடுத்தான் அதோடு “போதும் உள்ள ரூம்ல போய் ஒக்காரு ரொம்ப நேரம் பனில நிக்க வேண்டாம்” என்றான்.
“ஏன்…” என்றவளை திரும்பிப் பார்த்தவன் “ஏன்… மறுபடியும் ஜுரத்துல படுத்து உருளுனுமா” என்றவன் வேலை நடப்பதை பார்க்கச் சென்றான்.
“அதைக் கொஞ்சம் அக்கறையா சொன்னா என்ன?” என்று நினைத்துக்கொண்டே இவளும் அமைதியாக உள்ளே சென்று அமர்ந்தாள்.
ஒரு பக்கம் முழுவதும் கண்ணாடி பாதிக்கப்பட்ட அறை கொஞ்சம் உயரமாக இருந்தது, அங்கிருந்து பார்த்தால் தோட்டம் நன்றாகத் தெரியும், சிறிது நேரத்தில் சூடாகத் தேநீர் வர அருந்திமுடித்து அங்கிருந்தே வேடிக்கை பார்த்திருந்தாள்.
நேரம் சென்றுகொண்டே இருந்தது உடன் யாரும் இல்லாமல் சும்மாவே அமர்ந்திருக்க கடுப்பாக இருக்க, சோபாவில் அமர்ந்தவள் மெல்ல மெல்ல அப்படியே சரிந்து நன்றாகப் படுத்து உறங்கினாள், மதிய உணவு இவர்களுக்குச் சொல்லியிருக்க எடுத்துவந்த மேனேஜர் அவள் உறங்குவதை பார்த்துச் சத்தம் எழுப்பாமல் வைத்துச் சென்றார்.
தோட்டத்தை முழுதாகச் சுற்றிவர சிரியவகை வண்டி ஒன்று வைத்திருந்தான் ஆங்காங்கே நிறுத்தி வேலை செய்வதை பார்த்துப் பழங்களின் தன்மையைப் பரிசோதனை செய்து என்று அவன் திரும்பி வரும்போது நேரம் மூன்று மணியை நெருங்கியிருந்தது, அறைக்குள் நுழைந்தவன் பார்த்தது சோபாவில் முகத்தைப் புதைத்துக்கொண்டு உறங்குபவளைத்தான்.
உணவு நேரம் கடந்திருந்தது இனியும் தாமதிக்க வேண்டாம் என்று எண்ணியவன் அவளைத் தட்டி எழுப்பினான், நல்ல உறக்கம் அவளுக்கு “மணி மூணாச்சு வாச்சாப்பிடலாம்” என்றவன் கைக்கழுகி வந்து அமர.
அவளும் சென்று முகம் கழுகி வந்தாள், இருவருக்கும் அவனே பரிமாறினான், அவளுக்கு அவள் உண்ணும் அளவை சரியாக எடுத்து வைத்தான் ஆச்சர்யமாக இருந்தது திலோவிற்கு ‘எப்படி தெரியும்’ என்று.
உண்மையில் அவன் சாப்பிடுவதில் கால் வாசி மட்டுமே அவளுக்கு வைத்தான், அதேயே அவள் சாப்பிடுகிறாளா பார்க்கலாம் என்பது அவன் எண்ணம், வேகமாக உண்டுமுடித்தவன் அவள் உண்ணட்டும் என்று வெளியில் சென்றான்.
நேரமாகவே இருள் சூழ தொடங்கிவிடும், அதிகபட்சம் ஐந்து மணி அதற்குமேல் பழங்கள் பறிப்பதில்லை, ஐந்து மணிபோல ஆட்கள் வெளியேறத் தொடங்கினர்.
பாண்டியம்மா ஆபிஸ் அறைக்கு வந்து நின்றார் “நீங்க வீட்டுக்குப் போய்டுங்க நாங்க வர நேரம் ஆகும்” என்றான் சேனா.
“சரி தம்பி” என்றவர் திலோவை பார்த்துத் தலை அசைத்து விடைபெற ‘இவள் என்ன நடக்கிறது’ என்று பார்த்திருந்தாள்.
பாண்டியம்மாவின் மனதில் இருவரை பற்றியும் ஒரு எண்ணம் வந்திருந்தது, எங்கேயோ ஒரு விருப்பம் இருவருக்கும் இருப்பதாக அதனால் மனதிற்குள் நல்லது நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டே சென்றுவிட்டார்.
“வாப்போலாம்” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு பத்து நிமிட பயணத்தில் ஒரு மலை முகட்டில் வண்டியை நிறுத்தினான்.
“வா” என்று முன்னில் நடக்க அவன் பின்னாலே சென்றாள், வாராய் நீ வாராய் என்று அவன் அழைத்துச்செல்வதை அறியாமல் ஆடு தலையாட்டிக்கொண்டே பின்னில் சென்றது.
அதன் முனையில் சென்று நின்றவன் எட்டி பார்த்துவிட்டு “சரியா இருக்கு சீக்கிரம் வா” என்க அவளும் வந்து எட்டி பார்த்து “என்ன” என்றாள் யோசனையாக.
“குத்திக்கறதுக்கு இதைவிட நல்ல இடம் கிடைக்காது சீக்கிரம் குதி எனக்கு வேலை இருக்கு” என்றான்.
அவனை முறைத்து பார்த்தவள் “என்ன விளையாடுறீங்களா நான் ஏன் குத்திக்கணும்” என்றாள் ரோஷமாக.
நிமிர்ந்து பார்த்தவள் “உங்களுக்கு என் காதல் புரியவேயில்லையா?” என்றாள் நெஞ்சை முட்டும் வேதனையோடு.
“இது காதல் இல்ல வெட்டிவேலை, நா எப்படின்னு சொன்னதும் என் மேல வெறுப்பு வந்துதுதானே அதோட எல்லாம் முடிஞ்சுடுச்சு, இந்தக் காதல் கத்தரிக்காய் எல்லாம் மூட்டைகட்டி இங்கேயே தூக்கி போட்டுட்டு ஒழுங்கா ஊர் போய்ச் சேறு, நீ நம்பினாலும் இல்லனாலும் நான் அப்படிதான் உனக்காக என்னை மாத்திக்க முடியாது புரிஞ்சுதா” என்க.
கோபத்தில் என்ன செய்ய என்று தெரியாமல் விறுவிறு என்று திரும்பி நடந்தாள், பத்தடி வைப்பதற்குள் கல் தடுக்கி விழுந்து வாரினாள் பின்னில் வந்தவன் “சொல்ற எதையும் கேக்குறதில்ல” என்றவன் அவளையே பார்த்து நிற்க.
“யாரும் எனக்கு ஹெல்ப் பண்ண வேண்டாம் நானே வந்துப்பேன்” என்றாள்.
“சரி” என்றவன் வந்த வழியே திரும்பி நடந்து வண்டியில் சென்று அமர்ந்தான்.
மனதின் சோர்வோடு காலில் வலியும் சேர்ந்துகொள்ள அசைக்கவே முடியவில்லை, என்றாலும் பல்லைக் கடித்துக்கொண்டு மரத்தைப் பிடித்து எழுந்தவள் ஒரு ஒரு அடியாக வைத்து எப்படியோ வண்டியில் ஏறிவிட்டாள்.
தாங்கமுடியா வலி நேற்று சுளுக்கிய அதே கால் இப்பொழுது நன்றாக வீங்கவும் செய்தது “நீ டாக்டருக்குப் படிக்கிறது வேற யாருக்கும் யூஸ் ஆகுதோ இல்லையோ உனக்கு நல்லா யூஸ் ஆகும்” என்றவன் ஒரு மருத்துவமனை உள்ளே வந்து நிறுத்தினான்.
கொஞ்சம் சிறிய அளவிலான மருத்துவமனை வெளியில் பெரிதாக ஆட்கள் யாரையும் காணவில்லை, யாருடைய உதவியாவது வேண்டும் இல்லையேல் நடக்க முடியாது.
‘என்ன செய்ய’ என்று யோசித்து அமர்ந்திருக்க, அவள் பக்கம் வந்தவன் மீண்டும் அவளைக் கைகளில் ஏந்தினான் “வேண்டாம் நானே…” என்றவளை “பேசாம வாடி” என்றுவிட்டு நேரே ராகவன் என்ற பெயர் பலகை இருந்த அறைக்குள் நுழைந்தான்.
‘யார்’ என்று நிமிர்ந்து பார்த்தார் ராகவன்.
“ஹாய் சேனா” என்றவர் அவன் கையில் இருப்பவளை பார்த்துவிட்டு அவனைக் கேள்வியாகப் பார்த்தார்.
“தெரிஞ்சவங்க டாக்டர், நேத்து நைட் அப்புறம் இப்போ ரெண்டு தடவை ஒரே கால்ல அடி கொஞ்சம் பாருங்க” என்றவன் அவளை அங்கிருந்த பெட்டில் கிடத்தினான்.
“எப்போவும் யாரையாவது அடிச்சுதான அனுப்புவ இன்னைக்கு என்ன தூக்கிட்டு வந்துருக்க” என்றவர் “பெருசா ஒண்ணுமில்ல பேண்டேஜ் போட்டுக்கலாம், பெயின் கில்லர் தரேன் நாளைக்கு சரியா போய்டும், காலுக்குப் பெருசா அழுத்தம் கொடுக்க வேண்டாம்” என்றார் அவளிடம்.
“அப்படியே அந்தக் கண்ணையும் கொஞ்சம் டெஸ்ட் பண்ணுங்க டாக்டர், எப்போப்பாத்தாலும் விழுந்து வைக்குறா” என்றவனை ஆச்சர்யமாகப் பார்த்தார் ராகவன்.
அவருக்குத் தெரிந்த சேனாபதி இப்படி வந்து நின்றதுமில்லை அதிகம் பேசியதுமில்லை.
வந்த சிரிப்பை அடக்கிக்கொண்ட ராகவன் “கண்ணுல ஒன்னும் பிரச்சனை இல்ல மனசுல என்னனு நீ தான் பாக்கணும்” என்றார் சேனாவை நெருங்கி, ராகவன் பல வருடங்களாகப் பழக்கமானவர் ஒருவிதத்தில் குடும்ப நண்பர் கூட.
“நாங்க கெளம்பலாமா டாக்டர்” என்க.
“ஷுர்” என்றவர் “பேர் என்னம்மா” என்றார் அவளிடம்.
“திலோத்தமா” என்றான் சேனா.
“நல்ல பேர், டேப்லெட் எழுதியிருக்கேன் ரெண்டு நாள் மட்டும் எடுத்தா போதும், நடக்கலாம் ரொம்ப ஸ்ட்ரைன் பண்ண வேண்டாம் ஒகே” என்றவர் மருந்துகளை எழுதிக் கொடுத்தார்.
அங்கிருந்து வெளியேறி மெடிக்கலில் மருந்துகளை வாங்கிக்கொண்டார்கள், பிறகு நேரே அழகான ஒரு ரெஸ்டாரண்ட் அழைத்துச் சென்றான், மெனுகார்டை அவளிடம் தள்ள ஒன்றும் சாப்பிடும் மூட் இல்லை அவளுக்கு.
“வேண்டாம்” என்றால் அதற்கும் ஏதேனும் சொல்லுவான் என்று ஒரு “வெஜ் நூடுல்ஸ்” என்றாள்.
அவன் பிரைட் ரைஸ், சிக்கன், நான், மட்டன் டெசர்ட் என்று நன்றாக உண்டான், மிகவும் கஷ்டப்பட்டு சாப்பிட்டு கொண்டிருந்தவளை பார்த்தவன் “வேண்டாம்னா விடு கிளம்பலாம்” என்க வேகமாக எழுந்துகொண்டாள்.
“வெய்ட்” என்றவன் பாக்கெட்டிலிருந்து டேப்லெட் எடுத்துக் கொடுத்து “சாப்பிடு” என்க.
“இதெல்லாம் எதுக்குடா செய்ற” என்று அவன் சட்டையைப் பிடிக்கத் தோன்றியது, அதைக் கையில் வாங்காமல் அவனையே பார்த்திருக்க.
“கீர்த்திக்கு இதெல்லாம் நான் செய்வேன்தானே அந்தமாதிரி…” என்றவுடன் அவன் கையிலிருந்து மருந்தைப் பறித்துக்கொண்டாள்.
“நான் கீர்த்தி இல்லை, எனக்கு யாருக்கும் தங்கச்சியாக விருப்பமுமில்லை ஒரு அண்ணண் போதும்” என்றவள் மெல்ல நடக்கத்தொடங்கினாள்.
“என்ன பிளான்” என்றான் அவளிடம் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
“என்ன பிளான்! புரியல” என்றாள் அவள்.
“எனக்கு இன்னும் மூணு நாள் வேலை இருக்கு, இங்க கதிரும் இல்லை உன்னை வேதாளம் மாதிரி தூக்கிட்டே சுத்த முடியாது என்னால, என்ன பண்ணப்போற” என்றதும் மறுபக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் திலோத்தம்மா.
உதடு கடிபட்டதில் எரிந்தது, அழும் சத்தம் வெளியில் கேட்க்காமல் இருக்க முயன்றதில் கழுத்து நரம்புகள் இறுகி முகம் சிவந்தது.
“உன்னைத்தான் கேக்குறேன் என்ன பண்ணப்போற” என்றான் மீண்டும்.
“போயிடுறேன்” என்றாள் திரும்பாமலே.
“எப்படி?” என்றான் மீண்டும்.
‘எப்படி என்றால்? தெரியவில்லை!’, “பஸ்ல?”.
சிறிது நேர அமைதிக்குப் பிறகு “கேப் புக் செஞ்சுதரேன் நாளைக்கு, பாண்டியமா துணைக்கு வருவாங்க உங்க வீட்டுக்குப் போய்டு, அங்கேயிருந்து காலேஜுக்கு உங்க அப்பாவே கூட்டிட்டு போயிடுவார்” என்க.
அவளிடம் எந்தப் பதிலும் இல்ல மறுக்கவோ சம்மதிக்கவோ இல்லை ஆழந்த அமைதி, திலோவின் மனதில் அவள் எடுத்த முடிவு தீவிரமடைந்தது.
‘திமிர் திமிர் ஏதாவது சொல்றாளா பாரு’ என்று மனதில் திட்டிக்கொண்டே வந்தான்.
வீட்டிற்குள் நுழைந்தவர்கள் முகத்தைப் பார்த்த பாண்டியம்மாவிற்கு குழப்பமானது, ஆளுக்கு ஒரு பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றனர்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.