“இப்போ எல்லாரும் நார்மலாகியாச்சா?…” என பேச்சை ஆரம்பித்து மூவரின் உடல்நலனை கேட்டு தெரிந்துகொண்டவன்,
“இந்த ப்ரோக்ராம் யார் அரேஞ்ச் பண்ணினது?…” என ஆரம்பித்தான்.
“மீ ஸார்…” என விசாலி கையை தூக்க,
“ஓஹ், எஸ். உங்க பேச்சிலர் பார்ட்டி. ரைட்?…” என கேட்க விசாலி மௌனமாய் முகம் மாறினாள்.
“லீவ் இட். உங்கள்ல எத்தனை பேர் உங்க வீட்டுல சொல்லிட்டு வந்தீங்க? ஐ மீன் ரெஸார்ட்ல இப்படி ப்ரென்ட் வெடிங்கை செலிபரேட் பன்றதுக்கு தங்க போறோம்ன்னு உண்மையை சொல்லிட்டு வந்தது?…” என செழியன் கேட்க பாதிபேரின் மௌனமே பதிலானது அவன் கேள்விக்கு.
“சுதந்திரம்ன்ற பேர்ல என்னவேணா பண்ணலாம்ன்னு ஐடியா? ஹ்ம்ம். என்னமாதிரியான உலகத்துல வாழ்ந்துட்டு வரோம். நீங்க வந்தது தங்கினது எல்லாம் ஓகே. அது ஏன் தனி, தனி ரூம்? எல்லாரும் சேர்ந்து சந்தோஷமா இருக்க தானே வந்தீங்க?…” என்றவனிடம்,
“ப்ரைவேஸி வேணும்னா அங்க தங்கியிருக்க வேண்டிய அவசியமே இல்லையே. சந்தோஷமா இருக்க அங்க போய் இப்படியெல்லாம் இருந்தா தான்னு அவசியமில்லை. இருக்கற இடம் மனசுக்கு நிம்மதியை குடுக்கனும். அது தான் என்ஜாய்மென்ட்….”
“இது உங்க சுதந்திரத்துக்கான முட்டுக்கட்டை இல்லை. துப்பட்டா போடுங்க தோழி கான்செப்ட் இல்லை. எங்க போனாலும் விழிப்புணர்வோட இருங்க தோழின்னு சொல்றேன். என்னடா இவ்வளோ அட்வைஸ் பன்றானேன்னு நினைச்சாலும் ஐ டோன்ட் கேர். சொல்லவேண்டிய கடமை எனக்கு இருக்குன்னு நம்பறேன்…”
“அப்படியான உலகத்துல தான் நாம இருக்கோம். நம்மளை தவிர யாரையும் நம்பிட கூடாதுன்ற சூழ்நிலை தான் பெருகிட்டு வருது. அப்பா வயசுல இருக்கார். பக்கத்துல உக்கார்ந்தா என்ன தப்புன்ற மனநிலை உங்களோடதா இருக்கலாம். ஆனா அவங்களோட மனநிலை என்னன்னு உங்களுக்கு தெரியாதே?…”
“இங்க உங்களை பாதிப்புக்குள்ளாக்க வந்தவங்க வயசு என்னன்னு இப்ப தெரிஞ்சிருக்குமே? உங்க ப்ரெண்ட்ஸ் சொன்னாங்களா?…” என்றான் மற்ற அனைவரையும் பார்த்து.
“அதுக்காக எல்லாருமே அப்படின்னு சொல்லலை. யாரும் எப்படியும் இருக்கட்டும். நாம நம்மை பார்த்துக்கனும். அதுவும் இப்படி தனியா போகும் போது அதிகபட்ச கவனம் அவசியம். வேலை விஷயமா, வேற தனிப்பட்ட விஷயமா எதுக்காக எங்க போனாலும் எச்சரிக்கையா இருங்க…”
“நல்லவங்களை விட தப்பை செய்யற வல்லவங்க தான் அதிகமா நம்மை சுத்தி உலவிட்டு இருக்காங்க. நம்மோட எச்சரிக்கை உணர்வு தான் நம்மோட பாதுகாப்பு கவசம். அந்த தண்ணியை குடிக்காம இருந்திருந்தா அதிகபட்சம் உங்க அறைக்கு வரவங்களை எதிர்த்து போராட கூடிய திறன் இருந்திருக்கும்…”
“தண்ணி தானே? என்னாக போகுதுன்ற அலட்சியம் எவ்வளவு பெரிய பாதிப்பை தந்திருக்கு? இப்பலாம் ரயில்வே ஸ்டேஷன். பஸ் ஸ்டாப்ன்னு நாம அவசரமா கிளம்பற இடங்கள்ல பயணத்துக்கு தண்ணீர் பாட்டில் வாங்கறோம். எத்தனைபேர் அதோட பிராண்ட் நேம் சரியான்னு செக் பண்ணி பார்த்திருப்பீங்க?…”
“ஒரு ரூம், சின்னதா ஒரு மிஷின். இது போதும் போலியை உருவாக்கறதுக்கு. அந்த போலி இப்ப எவ்வளவு பெரிய விபரீதத்துக்கு வந்து நின்னுருக்கு…” என்றான்.
அவன் பேச பேச அத்தனைபேரின் உள்ளமும் பெரும் திடுக்கிடலை சந்தித்துக்கொண்டிருந்தது.
“உங்களை தனியா ப்ரெண்ட்ஸ் கூட சுதந்திரமா இருக்க வேண்டாம்ன்னு சொல்லலை. இப்படி வரும் போது உங்களை நீங்க தான் காப்பாத்திக்கனும். எல்லாத்துலையும் கவனம் இருக்கனும். சப்போஸ் நாங்க அங்க வராம இருந்திருந்தா?…” என்ற கேள்வியில் அனைவருக்கும் தூக்கிவாரி போட்டது.
“ஓகே, ரொம்பவும் பயம் காட்டிட்டேன் போல. ரிலாக்ஸ்…” என்று இருக்கையில் சாய்ந்தமர்ந்தவன்,
“விமல்…” என அழைத்தான்.
“ஸார்…” என உள்ளே வந்து நின்றவன் கையில் ஒரு கோப்பு.
“இங்க வச்சிடுங்க…” என்றதும் அவன் வைத்துவிட்டு வெளியேற,
“இந்த கேஸ் விஷயமா கம்ப்ளைன்ட் எழுதனும். என்ன நடந்ததுன்னு எழுதி கையெழுத்து போடுங்க….” என்றான்.
“ஸார்…” என அத்தனைபேரும் அதிர்ந்து பார்க்க,
“உங்க பயம் எனக்கு புரியுது. ஆனா உங்களோட எந்தவித தகவலும் வெளில வராது. உங்க பேர் கூட வெளிய வராம நான் பார்த்துக்கறேன்…” என்று சொல்ல அத்தனைபேரும் பின்வாங்கினார்கள்.
“எனக்கு அடுத்தவாரம் கல்யாணம் ஸார். எங்க வீட்டுல நிச்சயம் இதுக்கு சம்மதிக்க மாட்டாங்க….” என விஷாலி வாயை திறக்கவும் மற்றவர்களும் அதையே பாட்டாய் படிக்க நெடுஞ்செழியன் முகத்தில் மிதமான எள்ளல்.
“இந்த ரெஸார்ட்ல இப்படி ஒரு விஷயம் நடந்திட்டிருக்குன்னு இதனால பாதிக்கப்பட்ட ஒரு பொண்ணு மூலமா தான் எங்களுக்கு தெரிய வந்தது….” என்றவன்,
“போலீஸ், கேஸ்ன்னு இதுக்கெல்லாம் பயந்து யோசிச்சோ, இல்லை சுயநலமாவோ அந்த பொண்ணு இதை வெளில சொல்லாம இருந்திருந்தா இன்னைக்கு என்னாகிருக்கும்?…” என்று கேட்க,
“நான் கம்ப்ளைண்ட் தரேன்…” என்றாள் சுபஷ்வினி.
“சுபா வேண்டாம். இதனால நிறைய பிரச்சனை வரும்…” என விசாலி சொல்ல,
“என்ன பிரச்சனை வந்தாலும் பேஸ் பண்ணுவேன். பண்ணுவோம்…” என்றவள் நெடுஞ்செழியனை பார்த்தாள்.
எவ்வித மாறுதல்களும் இன்றி நடப்பதை வேடிக்கை பார்க்கும் பாவனை தான் அவன் முகத்தில்.
“ஸார், வேண்டாம் ஸார். அவ ரொம்ப சாதாரண குடும்பம். விட்டுடுங்க. அவளோட ப்யூச்சர் ஸ்பாயில் ஆகிடும். நீங்க சொல்றது எங்களுக்கு புரிஞ்சாலும் எங்களால எதுவும் பண்ண முடியாது. அவ எதோ உணர்ச்சிவசப்பட்டு பேசறா. விட்டுடுங்க…” என விசாலி கெஞ்ச,