“என்னோட எண்ணமெல்லாம் எப்படியாச்சும் நிகிதாவையும், மாமாவையும் இதுல இருந்து காப்பாத்திடனும்ன்றது மட்டும் தான். எங்கம்மாவோட முயற்சியும் நிகிக்குட்டியோட விருப்பமும் நிறைவேறனும். அந்த ராஸ்கல்ஸ் மணிகண்டனும், சரத்தும் தண்டனை அனுபவிக்கனும். அதுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லைன்னு காரை ஒடிச்சு திருப்பினேன்…” என்ற தனா,
“எத்தனை முயற்சி பண்ணியும் நிகிக்கும், மாமாவுக்கும் இப்படி ஆகிடுச்சு. இதுக்கு காரணமானவங்களை நான் சும்மா விடபோறதில்லை….” என சொல்லி கண்ணில் நீரை தேக்கிக்கொண்டு விசும்பினான்.
சில நொடிகள் மௌனம் சூழ்ந்துகொள்ள இன்ஸ்பெக்டரை பார்த்த நெடுஞ்செழியன் மீண்டும் தனாவின் புறம் திரும்பினான்.
“ரிலாக்ஸ். என்ன பன்றது இப்பலாம் நாம ஒன்னு நினைச்சா நடக்கறது ஒண்ணா இருக்கு ஜெயதனபாலன். அதுக்காக உங்க முயற்சி தோத்துச்சா என்ன?…” என்று நெடுஞ்செழியன் கேட்கவும் திடுக்கிட்டு தனா பார்த்தான்.
“ஐ மீன் நிகிதாவுக்கு கால்ல தான் அடி தவிர உயிருக்கு ஆபத்து இல்லை. அதனால அந்த பொண்ணோட போராட்டமும் எந்தவிதத்திலையும் பாதிக்கப்பட போறதில்லை…” என்று சொல்ல தனாவின் விழிகள் நெடுஞ்செழியனை ஆராய்ந்தது.
என்ன அர்த்தத்தில் பேசுகிறான் என தனா ஒருநொடி குழம்பி அவனை பார்க்க நெடுஞ்செழியன் முகத்திலிருந்து எதையும் கணிக்க முடியவில்லை.
“சரி விடுங்க. ஆமா, லாரி உங்களை தான் டார்கெட் பண்ணி வருதுன்னு உங்களுக்கு எப்படி தெரிஞ்சது?…” என அவன் கேட்க,
“இவ்வளோ ஹார்ஷா டேர்ன் பண்ணியிருக்கீங்க. என்ன ஸ்பீட்ல போனீங்க நீங்க? அன்ட் மணிகண்டன் தான் இதை பண்ணியிருப்பான்னு நீங்களும் நம்புறீங்களா? இது மர்டர் அட்டம்ப்ட் அப்படின்னு?…” என வளைத்து பிடிக்க தனாவுக்கு உண்மையிலேயே தலை சுற்றியது.
“வேற யார் ஸார் பண்ணுவா? அதோட என் ட்ரைவிங் எப்பவும் ரேஷ் ட்ரைவிங் இல்லை. அதுவும் நான் தனியாவும் இல்லை. ஒரு வயசானவரும், எங்க வீட்டு பொண்ணும் கூட இருக்கும் போது நிதானமா தான் போனேன்….” என்று சொல்லும் பொழுதே தலையை பிடித்துக்கொண்டான்.
“ஓகே, ஜஸ்ட் இது கேட்கனுமே? இதை எல்லாம் பைல் பண்ணனும். இது வழக்கமான கேள்விகள் தான்…” என சொல்லியவன் அருகில் இருந்த இன்ஸ்பெக்டரிடம்,
“நீங்க ஏதாவது கேட்கனுமா? கேளுங்க….” என சொல்ல,
“நத்திங் ஸார். நீங்க கேட்ட எல்லாமே எழுதியாச்சு. தேங்க் யூ…” என்று அவரும் எழுந்துகொண்டார்.
“வெளில டாக்டர் இருக்காங்க. வர சொல்லுங்க. தனாவுக்கு தலை சுத்துது போல. ரொம்ப நேரமா தலையில கை வைச்சிருக்கார்…” என நெடுஞ்செழியன் சொல்லியபடி தானும் எழுந்துகொண்டான்.
“இல்லை டாக்டர் வேண்டாம். ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும் ஸார். ப்ளீஸ் கொஞ்சநேரம் நான் தனியா இருக்கனும்…” என்றான் தனா முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு.
“ஓகே. டேக் ரெஸ்ட்…” என தனாவின் தோளில் தட்டிவிட்டு,
“தலை பத்திரம் தனா. எதுக்கும் டிஸ்சார்ஜ் ஆகறதுக்குள்ள ஸ்கேன் எடுத்து பார்த்திடுங்க…” என்று சொல்லி கதவை திறந்துகொண்டு வெளியேறினான்.
வெளியே வந்தவன் வேதா எங்கே என தேட அருகிருந்த அறையிலிருந்து வெளியே வந்தார் அவர்.
“என்ன செழியன், பேசியாச்சா?…” என சோர்வுடன் அவர் கேட்க,
“பேசிட்டேன் மேம். நார்மல் என்கொயரி தான். அப்பறம் இங்க செக்யூரிட்டி டைட் பண்ணியிருக்கேன். நிகிதாவுக்கு இனி பாதுகாப்பு அதிகமிருக்கனும்…” என்றான்.
“என்னை மீறி யார் என்ன பண்ண முடியும்ன்னு நானும் பார்த்திடறேன் செழியன். தனாவை பாதுகாப்பு இல்லாம அனுப்பினது தப்பா போச்சு. அவனை விட யார் பாதுகாப்பு தந்துட முடியும்ன்னு அனுப்பி வச்சேன். இனி நான் பார்த்துக்கறேன். நீங்க மணிகண்டனை என்ன செய்யனும்ன்னு பாருங்க…” என்ற வேதா,
“இவங்களுக்கு நாம நேரம் குடுத்தா அடுத்து என்ன செய்யன்னு தான் குறுக்குபுத்தியோட யோசிப்பாங்க. அதுக்கு வாய்ப்பு குடுக்கக்கூடாது. மணிகண்டனும், சரத்தும் தனியா இதை செஞ்சிருக்க வாய்ப்பு இல்லை. அதே மாதிரி இதுல சம்பந்தப்பட்ட எல்லாரும் உள்ள வரனும்…”
வேதாவின் குரல் இரும்பின் கடினத்தை ஒத்திருந்தது. விழிகள் கனலில் கனன்று வெம்மை தெறித்தது.
“கண்டிப்பா மேம். இதுக்கு பின்னாடி யார் இருந்தாலும், யார் யாருக்கு உதவியா இருந்தாலும் ஒருத்தரையும் விட போறதில்லை….” என நெடுஞ்செழியன் ஸ்திரமாய் சொல்ல வேதாவும் தலையசைத்தார்.
“நான் இங்க தான் இருப்பேன் மேம். எதுவானாலும் கால் பண்ணுங்க…” என்று சொல்லி அவன் நகர வேதா தனா இருந்த அறைக்குள் சென்றுவிட்டார்.
நெடுஞ்செழியன் அந்த தளத்தின் கடைக்கோடிக்கு வந்து நின்றான். விமல் அவனுக்காகவே காத்துக்கொண்டிருந்தான்.
“என்ன விமல் நான் கேட்ட விபரமெல்லாம் கலெக்ட் பண்ணியாச்சா?…” என நெடுஞ்செழியன் கேட்க,
“எஸ் ஸார். இப்ப என்னென்ன கலெக்ட் பண்ண முடியுமோ எல்லாம் ஆக்ஸிடென்ட் ஸ்பாட்ல விசாரிச்சாச்சு. மத்த டீடெய்ல்ஸ் பர்தர் இன்வெஸ்டிகேஷன்ல கிடைச்சிடும். லாரி கரெக்ட் சைட் தான் வந்திருக்கு. கார் தான் ரைட்ல மூவாகி பேக்கடிச்சிருக்கு. அதோட கார் ஓவர் ஸ்பீட்ல போய்ருக்கலாம்ன்னு சொல்றாங்க…” என்றான் விமல்.
“ஓவர் ஸ்பீடா? கார்ல ஏதாவது ப்ராப்ளமா? ப்ரேக் வொயர் கட்டாகி இப்படி ஏதாவது?…” என நெடுஞ்செழியன் கேட்க,
“நோ ஸார், ப்ரேக் பிடிக்காமலோ, வேற எந்த பிரச்சனையும் காருக்கு இல்லை. அதோட ஏர்பேக் தான் ஜெயதனபாலனை காப்பாத்தியிருக்கு. பின் பக்கமிருந்து மோதினதால தான் பின்னாடி இருந்தவங்களுக்கு இந்தளவுக்கு விபத்து. அதுவுமே அவங்க பக்கமும் ஏர்பேக் ஓபனானதால உயிருக்கு ஆபத்தில்லாம இதோட தப்பிச்சிட்டாங்க…” என்றான் விமல்.
“அப்போ லாரி கரெக்ட் சைட்ல தான் வந்திருக்கு. இதை கேட்க கேட்க இன்னும் தப்பாயிருக்கு விமல்….” என நெடுஞ்செழியன் சொல்ல,
“ஆமா ஸார். நடந்த விபத்தை வச்சு பார்க்கும் போது கார் தான் போய் மோத இருந்து கடைசி நேரத்துல திரும்பியிருக்கு. சொல்ல போனா லாரி தான் ஆக்ஸிடன்ட் நடக்காம அவாய்ட் பண்ண திரும்பியிருக்கு. அதுல லாரி ட்ரைவருக்கு பலத்த அடி. உயிர் பிழைக்கிறது கஷ்டம்ன்னு சொல்றாங்க…” என்றான் விமல்.
சில நொடிகள் நெடுஞ்செழியன் இங்குமங்குமாய் யோசித்தபடி நடந்தான். அவனுக்கு எத்தனை யோசித்தும் தனாவிடம் தவறு இருப்பதாகவே தான் தோன்றியது.
கண்ணை பார்க்காமல் பதில் சொல்லியது, பார்த்த நேரமும் எதையோ தவறவிட்டுவிட்ட ஒருவித ஆவேசம் அந்த கண்களில் தெரிந்தது, என பெரிதாய் அங்கே ஏதோ உள்ளதாகவே தோன்றியது.
“காரை லெப்ட்ல, இல்லை ரைட்ல திருப்பிருந்தா பாதிப்பு நிச்சயம் அந்த தனாவுக்கு தான். ஆனா ஏன் காரை ஒடிச்சு பின்னாடி ஆக்ஸிடன்ட் பண்ண வைக்கனும்? அது அத்தனை சுலபம் இல்லை விமல். ரொம்ப நல்லா ட்ரைவிங் தெரிஞ்சவங்க, ரொம்ப ஈஸியா இப்படி பேக் டேர்ன் எடுக்கறவங்களுக்கு கை வந்த கலை…”
“பேக் டேர்ன் எடுக்க தெரிஞ்சவனால இந்த ஆக்ஸிடென்ட்டை லெப்ட் ஆர் ரைட்ல டேர்ன் பண்ணி அவாய்ட் பண்ணியிருக்க முடியாதா? அங்க தான் எனக்கு டவுட்…” என்றான் நெடுஞ்செழியன் நெற்றியை தட்டிக்கொண்டே.
“ஸார்…” விமல் அதிர்ந்து பார்க்க,
“ஆமா விமல், தனாவுக்கு நிகிதா தான் அந்த சாட்சின்னு தெரியாது. இப்படி ஒரு கேஸ்ல நிகிதா இன்வால்வ் ஆகியிருக்கறதே தெரியாது. அப்படி இருக்கும் போது எப்படி மணிகண்டன் தான் கொலை முயற்சி பண்ணியிருப்பான்னு சொல்ல முடியும்?…” என்றான் நெடுஞ்செழியன்.
“அதுவும் நிகிதாவை மணிகண்டன் ஏன் கொலை பண்ண முயற்சி பன்றான்னு சொல்லனும். மணிகண்டனுக்கும், நிகிதாவுக்குமான சம்பந்தம் என்னன்னு தெரியாதப்போ இதை தனா எப்படி சொல்ல முடியும்? அதுவும் கோர்ட்ல தனா நிகிதா கூட உள்ள போகவே இல்லை….” என்றும் கூறினான்.
“ஒருவேளை நிகிதாவே கோர்ட்ல இருந்து கிளம்பும் போது சொல்லியிருந்தா?…” விமல் சந்தேகமாய் கேட்க,
“ம்ஹூம், நோ நோ. அதுக்கு வாய்ப்பே இல்லை. நிகிதா சொல்லனும்ன்னு இருந்திருந்தா கோர்ட்க்கு வர வழில சொல்லியிருக்கலாம். வேதா மேம் சொல்லாம நிகிதா இதை சொல்ல வாய்ப்பில்லை. ஐ’ம் சூர்…” என்றவன்,
“அவங்களை கோர்ட்டுக்கு இதுக்கு தான் கூட்டிட்டு வந்தோம்ன்னு தனாவுக்கு தெரிய வாய்ப்பில்லை. மேம் தனா வீட்டுக்கு வந்ததும் தான் இதை பேசனும்னு சொன்னாங்க. அப்போ அவங்களும் இன்னும் சொல்லலை. இங்க தான் எனக்கு அவன் மேல இன்னும் சந்தேகம் அதிகமாகுது விமல்….” என கூறினான்.
“இருக்கலாம் ஸார்…” என்ற விமல்,
“ஒருவேளை நிஜமாவே மணிகண்டன், சரத் யாராவது இந்த அட்டம்ப்ட்டை பண்ணியிருந்தா?…” என்றான்.
“அதுக்கு சான்ஸ் கம்மி. அப்படியே இது கொலை முயற்சியா இருந்தா இதுலையே தெரியுது மணிகண்டனுக்கும் மேல ஒரு கேங் இருக்கறது கன்பார்ம். ஏனா மணிகண்டன், சரத் யாருமே யாரையும் தொடர்புகொள்ள கூடிய சூழ்நிலையில் இல்லை. அவங்க பண்ண வாய்ப்பே இல்லை…” என நெடுஞ்செழியன் சொல்ல,
“ரைட் ஸார்…” என்றான் விமல்.
“இப்ப என் சந்தேகம் இதுக்கும் தனாவுக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை தனா மறைஞ்சிருக்கற குற்றவாளிகளுக்கு உதவி செய்யிற மோட்டிவ்ல இதை பண்ணினானா? இல்லை அதுல தனாவும் ஒரு ஆளா?…” என நெடுஞ்செழியன் சொல்லி முடிக்கும் முன்,
“ஸார் அவர் வேதா மேம் பையன்…” என்றான் விமல்.
“காரணம் இருந்தா நான் வேதா மேமையே சந்தேகப்படுவேன். யாரா இருந்தா என்ன?…” என நெடுஞ்செழியன் சொல்ல தூரத்தில் வேதாவும், தனாவும் ஐஸியூ நோக்கி சென்றனர்.
“என்னாச்சு?…” என நெடுஞ்செழியன் வேகமாய் ஓட மற்ற மருத்துவர்களும் உள்ளே சென்றனர்.
“என்ன டாக்டர்?…” என்று நெடுஞ்செழியன் உள்ளிருந்து வந்தவரிடம் கேட்க,
“பேஷன்ட் வெங்கடேசன் கண்ணு முழிச்சிட்டார். அதான் மேமை பார்க்கனும்ன்னு சொல்லவும் உள்ள போயிருக்காங்க. இப்பதான் ஜட்ஜ் வந்தார்…” என்றார்.