ஒரு உயிர் பரிதவிப்பிலேயே பிரிந்திருக்க அவரின் அந்த கடைசி பார்வை கூட எவ்வித தாக்கத்தையும் தனாவின் மனதில் தோற்றுவிக்கவில்லை.
வேதசௌந்தரியின் வீட்டின் முன்பகுதியின் நடுமத்தியில் வெங்கடேசனின் பூத உடல் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது.
சக்கர நாற்காலியில் கால்களுக்கு கட்டு போடப்பட்டு இடுப்பில் மாட்டியிருந்த பெல்ட்டுடன் அமர்ந்திருந்தாள் நிகிதா.
நிகிதாவிற்கு நினைவு திரும்பி அவள் வரும்வரை வெங்கடேசனின் உடலை பதப்படுத்தி வைத்திருந்தனர் வேதாவின் வேண்டுகோளுக்கு இணங்க.
“ம்மா, நிகி இந்த நியூஸ் கேட்ட ஷாக்ல திரும்ப மயங்கிட்டா. அவ நினைவு எப்போ திரும்பும்ன்னு தெரியலை. அதுக்காக நாம வெய்ட் பண்ண வேண்டாம். மாமாவோட காரியத்தை முடிச்சிருவோமே…” என தனா சொல்ல,
“என்ன பேசற தனா? நிகிக்கு இருந்த ஒரே ரத்த உறவும் இப்ப இல்லை. அவளோட அப்பாவை கடைசி தடவை பார்க்கனும்னு அவ நினைக்க மாட்டாளா? எத்தனை நாளாகட்டும், நிகிதா வந்த பின்னாடி தான் காரியம்…” என்று சொல்லிவிட்டார் வேதா கடுமையாக.
தனாவிற்குள் அத்தனை உதறல். அன்று விபத்தான காருக்குள் தன்னை வெங்கடேசன் கண்டுகொண்டதை போல நிகிதாவும் கவனித்திருப்பாளோ என்று.
மருத்துவமனையிலும் எந்த நேரமும் வேதாவோ, சங்கீதாவோ மாற்றி மாற்றி இருந்தனர். அவர்கள் இருவரும் இல்லாத நேரம் சுரேந்திரன் இருந்தார்
“நல்ல சான்ஸ் ஜெய், நீ அந்த பொண்ணை முடிச்சிடு…” என்று கதிர் அங்கே ஆர்ப்பரிக்க,
“வாய மூடுடா ராஸ்கல். எல்லாம் உன்னால. எல்லாத்தையும் கோட்டை விட்டுட்டு இப்ப வந்து அதை செய் இதை செய்ன்னு. நான் என்ன செய்யனும்ன்னு நீ சொல்லாத…” என கதிரிடம் எரிந்து விழுந்தான் தனா.
“நீ மட்டும் என்ன? உன் வீட்டுல என்ன நடக்குதுன்னு கூட உன்னால கண்டுபிடிக்க முடியலை. உங்கம்மா தான் இந்த கேஸை செழியன்கிட்ட குடுத்தாங்கன்னு நான் சொல்லித்தானே உனக்கே தெரிஞ்சது…” என்று கதிரும் பதிலுக்கு எகிறினான்.
“நீ மட்டும் என்ன? நிகிதாவை மணிகண்டன் திரும்ப கேட்டதும் என்கிட்ட சொல்லலை. அப்பவே சொல்லியிருந்தா நான் யார் என்னன்னு கவனிச்சிருந்திருப்பேன். அது நிகிதான்னும் எனக்கு தெரிஞ்சிருக்கும்…” என மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர்.
“நீ தான் ரெண்டுமாசமா இங்க நடக்கறதை கேட்கறதோட சரி. உன் வொய்ப்க்கு முடியலைன்னு உன்னோட கவனம் எல்லாம் அங்க தான இருந்துச்சு. குழந்தை பிறக்கற வரைக்கும் என்னை மொத்தமா பார்த்துக்க சொன்ன. உனக்கு டென்ஷன் தரவேண்டாமேன்னு நான் நினைச்சேன்…” என்ற கதிர்,
“அதோட அந்த நிகிதா கமுக்கமா இருந்துட்டு வெளில போய் இந்த வேலையை செய்வான்னு யாருக்கு தெரியும்? இப்ப உங்கம்மா உன் வீட்டுலையே கொண்டுவந்து வச்சிருக்காங்க உனக்கு எதிரியை…” என்றான் கோபத்துடன்.
“முட்டாள் மாதிரி பேசிட்டிருக்க நீ. இப்ப நடந்ததை பேசறதுக்கான நேரமா?…” என தனா கேட்க,
“பேச நேரமில்லை தான். முதல்ல ஹாஸ்பிட்டல்ல வச்சே அந்த பொண்ணு கதையை முடி ஜெய்…” என்றான் கதிர்.
“நோ, நோ. ஏற்கனவே அவசரப்பட்டு கார் ஆக்ஸிடென்ட் பண்ணி ஒரு தப்பு பண்ணிட்டேன். வேற மாதிரி டீல் பண்ணியிருக்கலாமோன்னு தோணுது. அதையே திரும்ப பண்ணினா அது சரிவராது….” என மறுத்தான் தனா.
“ஹ்ம்ம், நீ சொல்றதும் சரி தான். ஓகே, பார்த்துக்கோ….” என்று வைத்துவிட்டிருந்தான் கதிர்.
நிகிதா கண் திறக்க அத்தனை பேரும் காத்திருக்க தனா உயிரை கையில் பிடித்துக்கொண்டு நின்றான்.
அவன் நினைத்ததை போல எதுவும் நடக்கவில்லை. நிகிதாவிற்கு அவனின் சுயரூபம் தெரிந்திருக்கவில்லை. அதில் அத்தனை நிம்மதி தனாவிற்கு. அதுதானே வேண்டும் அவனுக்கும்.
வெங்கடேசனின் மறைவிற்கு துக்கம் விசாரிக்க வந்திருந்த அவளின் சொந்தங்கள் சிலர், நண்பர்கள் சிலர் என அவரின் இறுதி யாத்திரைக்கு செல்ல காத்திருந்தனர்.
வேதா ஒருபுறமும், சங்கீதா ஒருபுறமும் நிகிதாவின் அருகே தான் அமர்ந்திருந்தனர்.
மற்ற வேலைகள், ஏற்பாடுகள் எல்லாம் சுரேந்திரனும் தனாவும் பார்த்துக்கொண்டிருந்தனர்.
நிகிதாவின் விழிகள் அழுது வீங்கி, களைத்து, நீர் வற்றி போயிருந்தது. இனி அழுவதற்கும் கண்ணீர் இல்லை என்பதை போல.
இந்த ஒன்றரை மாதங்களாக அவள் அனுபவித்துவரும் வேதனைகள் கொஞ்சம் நஞ்சமில்லை.
அனைத்திற்கும் உச்சமாக இதோ இன்று அவளின் உயிரான தகப்பனையும் இழந்து நிற்கிறாள்.
‘அன்னைக்கு நான் அந்த ட்ரிப்க்கு போயிருக்க கூடாது டாடி. ரெஸார்ட்க்கு போயிருந்திருக்கக்கூடாது. இங்கயும் நாம வந்திருக்க கூடாது. இல்லைன்னா என் கூடவே எப்பவும் நீங்க இருந்திருப்பீங்க தானே?’ என அவளின் விழிகள் அவரிடம் மன்றாடிக்கொண்டிருந்தது.
என்றைக்கு அந்த விடுதிக்கு சென்று வந்தாளோ அன்றிலிருந்து இன்றுவரை நிம்மதி என்பது அப்பெண்ணின் வாழ்வில் இருந்து இரக்கமற்று எட்டி நின்று வேடிக்கை தான் பார்த்தது.
சங்கீதாவின் பெற்றோர்களும் அங்கே தான் இருந்தனர். அவர்களும் விஷயம் கேள்விப்பட்டதும் வந்துவிட, மகள் வேறு இப்படி நிகிதாவுடனே இருக்க அதில் மனத்தாங்கல் வேறு.
“என்னம்மா கீதா, உன் உடம்பு இருக்கற சூழ்நிலைக்கு இப்படி அவ கூடவே உக்கார்ந்து இருந்தா ஆச்சா? உனக்கெதுவும்ன்னா என்ன பன்றது?…” என மகளை கடிந்தனர் தனியே அழைத்து.
“அதுமட்டுமில்லை, நீ நாளைக்கு நம்ம வீட்டுக்கு கிளம்பு. இங்க உன்னை எப்படி பார்த்துப்பாங்கன்னு தெரியலை. அந்த நிகிதா பொண்ணு கேஸ் அது இதுன்னு பேசறாங்க. அதனால உன்னை இங்க விட்டுவைக்க முடியாது…” என்றார் சங்கீதாவின் அப்பா.
“பேசி முடிச்சாச்சா? இனி இந்த வீட்டை பத்தி, நிகியை பத்தி யாரும் ஒருவார்த்தை பேச கூடாது. முதல்ல நீங்க இங்க இருந்து கிளம்புங்க…” என்று பட்டென்று முகத்திலடித்தார் போன்று சங்கீதா பேசிவிட இருவரும் விக்கித்து நின்றனர்.
“நான் அப்பா ஸ்தானத்துல வச்சிருந்த மனுஷன் பிணமா இருக்கார். தாய்க்கு தாயா, தகப்பனுமா இருந்த மனுஷனை பறிகுடுத்துட்டு அந்த சின்ன பிள்ளை தவிச்சு நிக்கிறா. இதுக்கு நாம தான் காரணமோன்னு என் புருஷன் குற்றவுணர்ச்சில நிகி பக்கத்துல வரவே தயங்கி உள்ளுக்குள்ள மருகிட்டு இருக்காரு. என்னை மட்டும் உங்களோட சொகுசா வர சொல்றீங்க? மனசாட்சி வேண்டாமா உங்களுக்கு?…” என்றவள்,
“என் அத்தைக்கு தெரிஞ்சா நல்லா இருக்காது. துக்கத்துக்கு வந்தோமா விசாரிச்சோமான்னு நல்லவிதமாவே கிளம்புங்க….” என்று சொல்லிவிட்டாள் சங்கீதா.
மகள் பேசிவிட்டாள் என அவர்களால் கிளம்பிவிட முடியுமா? அவர்களும் கடனே என்று அங்கே அமர்ந்திருந்தனர்.
நேரம் செல்ல செல்ல நிகிதாவிற்கு தந்தையின் உடலை தூக்கிக்கொண்டு சென்றுவிடுவார்களோ என்ற பதட்டம் அதிகமானது.
அதற்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவரின் உருவத்தை விழிகளுக்குள் நிரப்பிக்கொண்டாள்.
“ப்பா நேரமாகிருச்சு. எல்லாம் தயார். இன்னும் கால்மணிநேரத்துல புறப்படனும்…” என தனா சுரேந்திரனிடம் கூற,
“சரிப்பா நான் உள்ள போய் சொல்லிட்டு வரேன்…” என்று நகர்ந்தார்.
தனாவும் ஓரிடத்தில் சென்று வந்திருப்பவர்கள் அமர போடப்பட்டிருந்த சேரில் தானும் அமர்ந்துகொண்டான்.
தன்னிச்சையாக சுழன்ற தனாவின் பார்வை வட்டத்திற்குள் நெடுஞ்செழியன் தன்னை பார்ப்பதும் விழுந்தது.
என்ன ஒரு பார்வை? தனாவின் தண்டுவடமே சில்லிட்டு போக சட்டென ஒரு தடுமாற்றம் அவன் முகத்தில்.
நெடுஞ்செழியனின் பார்வை தன்னையே வட்டமிடுவதை கவனித்த தனா ஒருகட்டத்தில் தானாகவே பதட்டத்தில் ஆழ்ந்துவிட்டான்.
அறிமுக நாளன்று தன்னிடம் பேசிய நெடுஞ்செழியனின் பார்வையில் இருந்த மரியாதை துளியும் இன்றி இப்போது தன்னை எச்சரிக்கை விடுப்பதை தாங்கி நிற்க தனாவிற்கு உள்ளூர உதைத்தது.
அவ்விடம் விட்டு எழுந்து செல்ல முயன்று நின்றவனை துக்கம் விசாரிக்க என சுரேந்திரனின் நண்பர் வந்து பிடித்துக்கொண்டார்.
“மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்குது தம்பி. அடுத்த வாரம் வெங்கட்டை எங்க வீட்டுக்கு கூப்பிட்டிருந்தேன். இதை எதிர்பார்க்கலை நாங்க. எல்லாம் விதி…” என்று சொல்லிவிட்டு செல்ல, தனாவும் அங்கிருந்து நகரும் முன்,
“விதி எப்படியெல்லாம் வேலையை காமிக்குது இல்லையா தனா?…” என வந்துவிட்டான் நெடுஞ்செழியன்.
“ஹலோ ஸார்…” என தானா வலிய புன்னகைக்க முயல,
“ரொம்ப வருத்தத்துல இருந்தாலும் வரவேற்பு பலம் தான். அப்பறம் நீங்க எப்படி இருக்கீங்க தனா? உங்க தலை இப்ப ஓகே வா?…” என நெடுஞ்செழியன் கேட்டான்.
அவனின் கேள்வியில் தனாவிற்கு சுள்ளென்று இருக்க தன் பதட்டத்தை சட்டென ஒதுக்கியவன்,
“நீங்க இங்க என்ன பன்றீங்க ஸார்?…” என்றான் பதிலுக்கு தனா திமிராய்.
“எனக்கென்ன? நான் நார்மலா தான் இருக்கேன்…” என்றான் தனா.
“பார்த்தாலே தெரியுது. வேதா மேம் சொல்லும் போது கூட நான் பெருசா நினைக்கலை. ஆனா நீங்க பெரிய ஆள் தான் தனா…” நெடுஞ்செழியன் சொல்லவும் ‘எதை சொல்கிறானோ?’ என தனா கேள்வியாய் பார்த்தான்.
“நீங்க கார் ஓட்டறதுல கிங்ன்னு சொன்னாங்க. எப்படியான சூழ்நிலையிலையையும் ஈஸியா சமாளிப்பீங்கன்னு. அது நிஜம் தான் போல….” என்றதும்,
“வாட் யூ மீன்?…” என்றான் தனா.
“நானும் என் சர்வீஸ்ல எத்தனையோ கேஸ் ஹேண்டில் பண்ணியிருக்கேன். இவ்வளோ பெரிய ஆக்ஸிடென்ட் நடந்தும் உங்க மொபைல் கார்ல எங்கையும் விழாம உங்க கூடவே இருந்திருக்குன்னு நினைக்கும் போது ஆச்சர்யமா இருக்கும் தானே?…” என்று சொல்ல தனாவின் விழிகள் சட்டென இடுங்கியது.
“ஆக்ஸிடென்ட் நடந்த இடத்துல எங்கையும் உங்க மொபைல் சிக்கலை. ஆனா வெங்கடேசன், நிகிதா போன், ஹேண்ட்பேக் எல்லாம் அங்க தான் இருந்திருக்கு. உங்களோட கோல்ட் ரிங் கூட கீழ கிடந்திருக்கு. ஆனா பாருங்க உங்க மொபைல் இல்லை…” என்று சொல்ல சொல்ல தனாவிற்கு வியர்த்தது.
அவனின் அந்த தங்க மோதிரமும் கூட வெங்கடேசன் தன் மகளை தனா கொள்ள முயலும் போது தடுக்க நடந்த போராட்டத்தில் கீழே விழுந்தது.
“என்ன திரும்ப விசாரணையா? அதான் அன்னைக்கே முடிஞ்சதே? அப்பறம் என்ன?…” என எகிறிக்கொண்டு பேசினான்.
“விசாரணை முடிஞ்சதுன்னு யார் சொன்னா? இப்ப தான் ஆரம்பிச்சிருக்கு. எப்போலாம் எனக்கு சந்தேகம் வருதோ அப்போலாம் நான் கேட்பேன். அன்ட் நெக்ஸ்ட் கொஷின், அன்னைக்கு நீங்க மூடவுட்ல எதுவும் இருந்தீங்களா? லாரில போய் காரை விட பார்த்திருக்கீங்க?…” என்றான் நெடுஞ்செழியன்.
“ஹலோ என்ன ஸார், என்ன பேசறீங்க?…” தனா இன்னும் கோபமாகிவிட்டான்.