“நல்லா அழட்டும். அழாம மனசுக்குள்ள வச்சு அழுத்தினா அதுவே பெரிய பாதிப்பை குடுக்கும்….” என்றார் சாலாட்சி.
“இப்ப வேற எதுவும் இல்லையே த்தை?…” என சுபஷ்வினி கவலையுடன் கேட்க,
“தூங்கட்டும். இப்ப டாக்டர் குடுத்திருக்கற மாத்திரைக்கு தூக்கமும் ரொம்ப அவசியம். தூங்கி எழுந்துக்கட்டும்…” என சொல்லவும் சுபஷ்வினி அவளருகே அமர்ந்தாள்.
“நீ கிளம்பலையா?…” நெடுஞ்செழியன் கேட்க,
“இப்படி இந்த பொண்ணை விட்டுட்டு எப்படி போவேன் நான்?…” என சொல்லிய சுபஷ்வினி பார்வை நிகிதாவின் முகத்தில் தான் நிலைத்திருந்தது.
நிகிதாவிற்கு இன்னும் குழந்தை தன்மை மாறாத ஒரு அழகு. வயதை சொல்லிவிட்டாலும் பள்ளி சிறுமி என்று தான் பார்ப்பவர்கள் சொல்வார்கள்.
இந்த வயதிற்கு அவள் அனுபவித்த, அனுபவிக்கின்ற வேதனைகள் மிகவும் அதிகமே.
“இத்தனை கஷ்டத்தை தாங்கற வயசா நிகிதாவுக்கு? எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை…” என விழிகள் கலங்க அவளின் முகத்தை மெல்ல வருடினாள் சுபஷ்வினி.
“நான் பார்த்துக்கறேன் சுபா. நீ கிளம்பு. நேரமாச்சு. அப்பவே உன் அப்பா போன் பண்ணிட்டார். இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா அவரே உன்னை கூட்டிட்டு போக இங்க வந்திருவார்…” என்று சாலாட்சி சொல்ல,
“சுபா நேரமாகுதும்மா…” என வந்தார் காஞ்சனா.
“செழியா நீ கூட்டிட்டு போய் விடுப்பா….” என்றார் தன் மகனிடம்.
“சித்தப்பா எங்க?…” என நெடுஞ்செழியன் வீரேந்தரை கேட்க,
“நீங்க தனியா வரட்டும்ன்னு அவர் முன்னாடியே கிளம்பிட்டார். நீங்க கிளம்புங்க முதல்ல…” என சொல்லிய காஞ்சனா,
“சோபியா…” என மருமகளை அழைத்தார்.
சோபியா ஒரு கையில் போனுடனும் இன்னொரு கையில் பாலுடனும் வந்து நின்றவள்,
“வந்துட்டேன்…” என புன்னகைக்க,
“என்ன உன் புருஷன் சொன்னானா? பாலை கையில வச்சிட்டு நிக்கிற. அப்ப நாங்க சொல்றதெல்லாம் கேட்கமாட்ட. அவன் சொன்னா உடனே கேட்டுடறது…” என நெடுஞ்செழியன் முறைத்தான் சோபியாவை.
“ண்ணா, நீங்க இப்ப தான வந்தீங்க. அதுக்கு முன்னாடி அவர் சொல்லிட்டார். அதான் குடிச்சிட்டிருக்கேன். ஆமா என்ன எல்லாரும் இங்க?…” என கேட்டு,
“நிகிதா அதுக்குள்ள தூங்கியாச்சா? என்னோட கல்யாண ஆல்பம் பார்க்கறேன்னு சொன்னா…” என்றாள் சோபியா.
“அதை காலையில காமிச்சுக்கோ. இன்னைக்கு நாம இந்த ரூம்லயே தூங்கிப்போம். உனக்கு ஓகே வா? நீ நிகிதா பக்கம் படுத்துக்கோ…” என காஞ்சனா சொல்ல,
“எனக்கு ஓகே. எல்லாரும் அப்போ ஒரே ரூமா? பேசிட்டே தூங்கலாம்…” என்றாள் சந்தோஷமாக.
“தூங்கனும் சோபி. ஆனா பேசிட்டே இல்லை. புரியுதா?…” என மனுரஞ்சனின் குரல் ஒலிக்க சோபியா போனை பார்த்தாள்.
நெடுஞ்செழியன் தான் சோபியா கையில் இருந்த போனின் அழைப்பை ஸ்பீக்கரில் போட்டிருந்தான்.
“சோபி, நான் சொன்னது புரிஞ்சதா?…” என மீண்டும் மனுரஞ்சன் அதட்ட,
“ஹ்ம்ம், டன் டன்…” என்றாள் சோபியா முகத்தை சுருக்கியபடி நெடுஞ்செழியனை முறைத்து.
“ஓகே சொல்லனும். டன் இல்லை…” நெடுஞ்செழியன் திருத்த அவனுக்கு பலிப்பு காட்டினாள் சோபியா.
“போம்மா போ, போய் மிச்ச பாலையும் அவனோட பேசிட்டே குடிச்சு முடிச்சுட்டு வந்து தாச்சுக்கோ…” என்று வேறு நெடுஞ்செழியன் கிண்டல் பேச,
“எனக்கு தெரியும். நீங்க பேசாதீங்க ண்ணா…” என அவனை முறைத்துவிட்டு சென்றாள் சோபியா.
அவள் செல்லவும் சாலாட்சி புனகையுடன் சுபஷ்வினியை கிளம்புமாறு தலையசைக்க,
“வெய்ட் பண்ணு அஷ்வினி. நான் இவங்களுக்கு பெட் மேட்ரஸ் எடுத்து போட்டுட்டு வரேன்…” என்றவன் மடக்கு கட்டில் இரண்டை எடுத்து வந்து விரித்து அதற்கு மெத்தையை கொண்டுவந்து போட்டான்.
“சில நேரம் மனு வந்தான்னா எங்க தூக்கம் மோஸ்ட்லி மொட்டைமாடி தான். சோபிக்கண்ணு ஆட்டம், பாட்டம்ன்னு கையில பிடிக்க முடியாது….” என்றான் சுபஷ்வினியிடம்.
“எடுத்து வச்சா நாங்களே போட்டுக்க மாட்டோமா? என்ன தம்பி நீங்க?…” என சாலாட்சி சொல்ல,
“ம்ஹூம் இல்லம்மா, ஒருவேளை இவங்க உண்மையாவே சந்தேகப்படக்கூடிய ஆளா இல்லாமலும் போகலாம். நம்பிக்கையானவங்கள இருந்து நாம அனுப்பிட்டு வேற யாரையும் வரவழைச்சு அவங்களால எதுவும் பிரச்சனைன்னா?…” என்றான் சற்றே டென்ஷனுடன்.
“நீ ரொம்ப ரெஸ்ட்லெஸா இருக்க செழியா. கொஞ்சம் நிதானமா இரு. எப்பவும் எந்த கேஸ்லையும் நீ இப்படி இல்லையே?…” என தாயாய் அவர் கவலையாக,
“இது டென்ஷன்னு இல்லை. முன்னெச்சரிக்கைன்னு சொல்லலாம். நீங்க நான் சொன்னதை ஞாபகம் வச்சுக்கோங்க. எப்பவும் கவனம் இருக்கட்டும். இந்த கேஸ் முடியனும். நிகிதாவோட பாதுகாப்பு ரொம்ப ரொம்ப அவசியம்…” என்றவன்,
“கிளம்புவோம் அஷ்வினி…” என சொல்லியவன்,
“நான் நைட் வரமுடியாதும்மா. வெளிய வேலை இருக்கு….” என்றுவிட்டு கிளம்பினான்.
காரில் அமர்ந்ததுமே சுபஷ்வினி அவன் முகத்தையே தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.
நெடுஞ்செழியன் கருத்தில் பட்டது தான். ஆனாலும் என்னவென்று திரும்பி கேட்கும் நிலையில் அவனில்லை.
யோசனையுடனே தான் வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தான். அவன் முகத்தில் ஆயிரம் சிந்தனைகள்.
“ப்ச்…” என்ற எரிச்சலில் ஸ்ட்ரியரிங்கை தட்டியவன் ஓரிடத்தில் காரை நிறுத்தியேவிட்டான்.
“செழியன் என்னாச்சு?…” என அவனின் கை பிடித்து கேட்க நெடுஞ்செழியனின் கண்கள் அவளின் கரத்தில் பதிந்தது.
“வாட்ச் எங்க அஷ்வினி?…” என்றான் கடுமையாக.
“ஹாங், வாட்ச்…” என அவளும் அப்போது தான் அவளின் கையை கவனித்தாள்.
“ஈவ்னிங் முகம் கழுவும் போது கழட்டிவச்சேன். திரும்ப போட…” என்று முடிக்கும் முன்,
“ஏய்…” என கையை ஓங்கியிருந்தான் அவன்.
ஒருகணம் இருவருமே ஸ்தம்பித்துவிட்டனர். தான் செய்யவிருந்ததை எண்ணி தன் தலையில் அடித்துக்கொண்டவன் அப்படியே ஸ்டியரிங்கில் தலையை கவிழ்க்க சுபஷ்வினி செய்வதறியாமல் பார்த்தாள்.
“செழியன்…” என இருநிமிடங்கள் விட்டு அவனின் தோளை தொட,
“அறிவிருக்கா உனக்கு?…” என கேட்டவன் குரலில் கோபமில்லாத ஆதங்கம்.
“இல்ல, பேக்ல தான் வச்சிருக்கேன். இப்ப போட்டுடறேன்…” என தன் ஹேண்ட்பேக்கில் இருந்து வாட்சை எடுத்து கையில் மாட்டினாள்.
அதை இமைக்காமல் பார்த்தவன் பார்வையில் சுபஷ்வினியின் முகத்தில் கலவரம் கூடியது.
“என்னாச்சு செழியன்? வீட்டுக்குள்ள நல்லாதானே இருந்தீங்க? எதுவும் பிரச்சனையா?…” என்றவள் கேள்விக்கு முகத்தை இருகைகளாலும் அழுத்தமாய் தேய்த்துக்கொண்டவனுக்கு கண்கள் சிவப்பேறி இருந்தது.
“இதை கழட்டவே கூடாது நீ. தனியா வெளில எங்கயும் போகவேண்டாம்….” என்றவன்,
“ஆபீஸ் போகனும் இல்லையா?…” என்று கேட்டவன் விழிகளில் பரிதவிப்பு மிதமிஞ்சியே இருந்தது.