“எனக்கு நம்பிக்கை இல்லாம நான் நிக்கியை அங்க அனுப்பலை செழியன். என்னை நம்பறீங்களா?…” என்றவரின் பேச்சில் உண்மைக்கும் நொறுங்கி போனான் நெடுஞ்செழியன்.
‘இந்த தாயின் மகன் மீதான நம்பிக்கைஉடையும் பொழுது என்ன செய்வாரோ?’ என பதறியது நெடுஞ்செழியனுக்கு.
“செழியன் இன்னைக்கு உங்களுக்கு முக்கியமான நாள். இருந்தும் நிகிக்காக நீங்க பேசினது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியா, நெகிழ்ச்சியா இருக்கு. உண்மையை சொல்லனும்னா உங்களை வேற்று ஆளா என்னால பார்க்க முடிஞ்சதில்லை….” என்றதும்,
“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை மேம். ஆனா சந்தோஷம். உங்க நம்பிக்கையை நான் காப்பாத்துவேன்…”
“ஓகே செழியன், நீங்க கீதாக்கிட்ட போனை குடுங்க. நான் பேசறேன்…” என்று சொல்ல சங்கீதாவும் வந்துவிட்டாள்.
நெடுஞ்செழியனிடமிருந்து போனை வாங்கி பேசியவள் முகமும் கூட மலர்ந்திருந்தது.
“நானே சொல்லலாமேன்னு தான் இருந்தேன். இங்க ஆளுங்களா இருக்கவும் நிகியும் கலகலன்னு இருப்பா…” என்று சொல்லி,
“நான் மட்டும் கிளம்பி வரேன். அவர் அப்பவே கிளம்பியாச்சான்னு கேட்டார் த்தை…” என்றாள்.
“ஓகே, நீ வந்த பின்னாடி நிகி வரலைன்னு சொல்லிக்கலாம். அவன்கிட்ட சொன்னா இப்பவே வந்து உங்க ரெண்டுபேரையும் கூப்பிட்டு வந்திருவான். விசேஷ வீட்டுல சங்கடமா போயிரும்…” என்றார் வேதா.
“ஓகே த்தை. வைக்கறேன்…” என்றவள் நெடுஞ்செழியனை பார்த்து புன்னகைக்க,
“தேங்க்ஸ்…” என்றான் அவன்.
“இல்லை ஸார், நாங்க தான் தேங்க்ஸ் சொல்லனும். அவளும் உங்க குடும்பத்தோட ரொம்ப அட்டாச் ஆகிட்டா. அதான் சட்டுன்னு கிளம்ப மனசில்லை…” என சொல்ல தலையசைத்தான் நெடுஞ்செழியன்.
“சரி நான் புறப்படறேன், பார்த்துக்கோங்க. நாளைக்கு வரேன்…” என்று கிளம்பிய சங்கீதா சுபஷ்வினியிடம் வந்தாள்.
“அதுக்குள்ள கிளம்பிட்டீங்களா நீங்க?…” என சுபஷ்வினி கேட்க,
“ஆமா, அவர் எதிர்பார்த்திட்டு இருப்பார். நாளைக்கு வரேன்…” என்ற சங்கீதா,
“அன்ட் வாழ்த்துக்கள் சுபா. சந்தோஷமா இருங்க…” என்று புன்னகைக்கவும் சுபஷ்வினியும் தலையசைத்து ஆமோதித்தாள்.
“ஓகே நிகி, நான் கிளம்பறேன்…” என அடுத்ததாக நிகிதாவிடம் வந்து சொல்ல,
“ஸாரி கீதாக்கா…” என்றாள் மெல்லிய விம்மலுடன்.
“அட, எதுக்குடா இது? எங்களுக்கு உன் சந்தோஷம் தான் முக்கியம். நீ நிம்மதியா, சந்தோஷமா இருப்பன்னா அதைவிட வேற என்ன வேணும்?…” என்றாள் அவளிடம் சங்கீதா.
“தனா மாமா…” என நிகிதா கேட்க,
“அவருக்கு உன்னை பக்கத்துல வச்சு பார்த்துக்கனும், கவனிச்சிக்கனும்ன்னு ஆசை. இப்படி இங்க விட்டிருக்கொமே? நம்மால பார்த்துக்க முடியாதான்னு தான் கொஞ்சம் கோவமா இருக்கார். நீ இங்க நல்லா இருக்கண்ணா அவருமே சந்தோஷப்படத்தான் செய்வார்டா…” என்று சொல்ல கசந்த முறுவல் நிகிதாவின் முகத்தில்.
“ஓகே, நிம்மதியா தூங்கு. உன்னோட டேப்லெட் எல்லாம் எடுத்து பேக்ல வச்சிட்டேன். திரும்ப எடுத்து போடு…” என்று சொல்லியவள்,
“இல்ல நானே தரேன்….” என சொல்லி பேக்கை பிரித்து மாத்திரைகளை எடுத்து தந்துவிட்டு நிகிதா விழுங்கவும் அவளிடம் சொல்லிவிட்டு அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினாள் சங்கீதா.
“உங்களையும் பார்த்துக்கோங்க கீதாக்கா. பத்திரமா இருங்க…” என நிகிதா வறண்ட குரலில் சொல்ல,
“அதான் என்னை பார்த்துக்க உன் மாமா இருக்காரே? என்னைவிட என்னை நல்லா பார்த்துப்பார்…” என வெள்ளை மனதுடன் பேசினாள் சங்கீதா தன் கணவனை பற்றி.
அதற்குள் தனாவே அவளுக்கு அழைத்துவிட ஒரு நொடி திகைத்து பின் அழைப்பை ஏற்றவள்,
“இதோ கிளம்பியாச்சு…” என்றாள் சங்கீதா அவன் பேசும் முன்பே.
“நிகிதாவும் தானே?…” என தனா உறுமலுடன் கேட்க,
“ஆமா, நாங்க ரெண்டுபேரும் தான். ஏன் நீங்க வந்து கூட்டிட்டு வர போறீங்களா என்ன?…” என சங்கீதா இலகுவாய் கேட்க,
“வாட்? போயும் போயும், அவன் வீட்டு வாசலுக்கு வந்து நிக்கிறதா? நீங்க போனதே எங்களுக்கு பிடிக்கலை. இதுல நான் வேறையா?…” என அவன் கத்துவது இங்கே சுபஷ்வினி, நிகிதாவிற்குமே கேட்டது.
சங்கீதாவிற்கு அதனை தர்மசங்கடமாகி போனது இப்படி பேசிவிட்டானே என்று.
“எங்கம்மாப்பாவை சொல்றீங்களா?…” என்றதும் தான் தனாவிற்கு நிம்மதியானது.
“ஆமா ஆமா, அவங்களுக்கு இப்படி நீ இங்கயும் அங்கயும் அலையறது சுத்தமா பிடிக்கலை. உன்னோட உடல்நிலை தெரியும் தானே?…” என அவன் சத்தம் போட,
“என்ன உடல்நிலை. அதைவிட என் மனசு என்ன நினைக்குதுன்னு யோசிக்கமாட்டீங்களா?…” என பதிலுக்கு குரலை உயர்த்திவிட்டாள் சங்கீதா.
“கீதா…” என தனா அதட்ட,
“சொல்லபோனா முன்னைய விட நான் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் இங்க….” என்றவள்,
“இல்லைன்னா வீட்டுக்குள்ள காவலுக்கு இருந்தது மாதிரி எந்த நேரமும் மனசை எப்படி அமைதிப்படுத்தன்னு யோசிச்சு குழந்தை நல்லபடியா பிறக்கனுமேன்னு பயந்து பதட்டத்தோடவே இருந்தவ நான். இங்க நிகி வந்தபின்னாடி நானும் வந்து உண்மையில இப்ப எனக்கு அந்த பயமே இல்லை. பதட்டம் இல்லை. மனசு அமைதியா இருக்கு…” என்றாள் குரல் தளர்ந்து.
“இல்ல கீதா, நான் உனக்காக தான் சொன்னேன்…” என்று அவன் தான் இறங்கி வரவேண்டியதானது.
தன் குழந்தை வார வளர அவனின் கனவுகளும் எந்தளவிற்கு விரிந்துகொண்டிருந்தது என அவன் மட்டுமே அறிந்திருந்தான்.
மனைவியிடம் கூட அத்தனை பகிர்ந்திருக்கவில்லை. தன்னுடைய வாரிசு, தன் அத்தனைக்குமான சொந்தம் என பூரித்திருந்தான்.
நிஜத்தில் சங்கீதாவை விட குழந்தை நன்றாக பிறக்கவேண்டுமே என்ற பயம் அவனுக்கு தான் மிக அதிகம்.
இப்போது அவள் சொல்லியதை கேட்டவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
எந்த சூழ்நிலையிலும் மனைவிக்கு எதுவும் தெரிந்துவிட கூடாதென தவியாய் தவித்துக்கொண்டிருந்தான்.
“சரி நீ கிளம்பி வா. டென்ஷன் எடுத்துக்காத…” என சொல்லிவிட்டு அழைப்பை துண்டிக்க சங்கீதாவிற்கு ஒருவிதமாய் படபடவென்று வந்தது.
“உட்காருங்க நீங்க…” என அவளை அமரவைத்தாள் சுபஷ்வினி.
அவள் முகம் பார்க்கவே வருத்தமாய் இருந்தது. கூடவே தனாவின் மேல் ஆத்திரம் மிகுந்தது.
“தண்ணி குடிங்கக்கா…” என நிகிதா சொல்ல,
“பேசியாச்சா? நிகி இங்க தான் இருக்காளாமே? தேங்க்ஸ் க்கா…” என உள்ளே வந்த சோபியா சங்கீதாவை கட்டியணைத்து கன்னத்தில் முத்தம் வைக்க அனைவருக்கும் முகத்தில் இளமுறுவல்.