“என்னண்ணா காலையிலையே ட்யூட்டியா?…” என மனுரஞ்சன் படித்துக்கொண்டிருந்த நாளிதழை மடக்கி வைத்துவிட்டு கேட்டான் தன் அண்ணனிடம்.
“படிக்கிறது பேப்பர், இதுல பொண்டாட்டி என்ன எடுத்து வைக்கிறான்னு தான் கரெக்ட்டா கவனிக்கிறது….” என்று சிரித்தபடி டைனிங் டேபிளில் அமர்ந்தவன்,
“அஷ்வினி எனக்கொரு காபி…” என்றான்.
“இன்னும் சாப்பிடலையே நீங்க? சாப்பிட்டு குடிங்க. தோசை போடறேன்…” என்றவள் உள்ளே செல்ல காஞ்சனா மகனை திரும்பி பார்த்ததும் நெடுஞ்செழியன் அவரை பார்க்காததை போல திரும்பிக்கொண்டான்.
“ம்மா உங்களுக்கு எதுவும் ஞாபகம் வருதா?…” என மனுரஞ்சன் கேலியாய் பேச,
“ஹ்ம்ம், எனக்கு நல்லாவே ஞாபகம் வருது. கேட்டதை முதல்ல குடுங்கம்மா. அப்பறம் நீங்க நினைச்சதை குடுங்கன்னு அண்ணா சொல்லுவாங்களே?…” என சோபியா சொல்லவும்,
“வெஷம், வெஷம், வெஷம்…” என்று அவளை இழுத்து வைத்து வலிக்காமல் தலையில் குட்டு வைத்தான்.
“ம்மா பாருங்கம்மா…” என நெடுஞ்செழியன் மீது சோபியா புகார் வாசிக்க,
“அடடா, ஹாஸ்பிடல் கிளம்பும் போது இதென்ன கலாட்டா?…” என்றார் காஞ்சனா.
“என்னம்மா, என்ன செய்யுது?…” என்றவன் தாய் தன்னிடம் சொல்லியதையே மறந்திருந்தான்.
“ண்ணா அம்மா சொன்னாங்களே? மறந்துடுச்சா?…” என சோபியா கேட்க நெடுஞ்செழியன் முகமே மாறிவிட்டது.
ஆம், அவன் மறந்திருந்தான். இருக்கும் வேலையில் அவனுக்கு அந்த ஞபாகமே இல்லை.
அதிலும் முதல்நாள் தனா வந்து சென்றதில் இருந்து சுத்தமாக நினைவில் இல்லை எதுவும்.
சங்கடத்துடன் தாயை பார்த்தவன் நெற்றியை தேய்த்துக்கொண்டான். மகன் இப்படி வருந்த கூடாது என்று தான் காஞ்சனா அப்போது சொல்வதை போல கூறியிருக்க இதை கண்டு அவருக்கும் வருத்தமானது.
“இதுக்கேன் முகத்தை வாட வச்சுட்டு? இப்ப இருக்கற சூழ்நிலை எனக்கு தெரியாதா செழியா? நீ பீல் பண்ணாத. நாங்க போய்ட்டு வரோம்…” என்றார் அவனிடம்.
“சாப்பிட்டு வருத்தப்படலாம். முதல்ல சாப்பிடுங்க…” என்ற சுபஷ்வினி அவனுக்கு தட்டில் தோசையை வைத்து சட்னியை ஊற்ற,
“இன்னும் ஒன்னு போதும் அஷ்வினி. காபி வேணும்…” என மீண்டும் மனைவியிடம் சொல்லிவிட்டு சாப்பிட மனுரஞ்சன் அண்ணனுக்கு தலைவலி மாத்திரையை கொண்டுவந்து தந்தான்.
“நிகிக்கு இங்க வேற ஒரு முக்கியமான வேலை இருக்கும்மா. நீங்க கிளம்புங்க. பத்திரம்…” என்ற நெடுஞ்செழியன்,
“மனு உங்க கூட பாதுகாப்புக்கு மூணு பேர் வருவாங்க. ஷேடோவும் இருக்கு. சேர்ந்தே போய்ட்டு வாங்க….” என சொல்லி,
“சோபி…” என்றான் தம்பி மனைவியை.
“நான் எங்கயும் போக மாட்டேன். அம்மாவை, மனும்மாவை விட்டு நகரமாட்டேன். அவங்க கண்ணு முன்னாடியே கூடவே இருப்பேன். ஓகே…” என்றாள் அவளும்.
இந்த வழக்கு விபரமும், அதன் அழுத்தமும் சோபியாவுக்கு தெரிந்திருந்தாலும் அவர்களுடனே இருக்கையில் தனக்கு என்னவாகிவிடும் என்ற மனப்பான்மையில் தான் இருந்தாள் சோபியா.
அதுவும் காவலுக்கு இத்தனைபேர் இருக்கையில் யார் தங்களை நெருங்கி என்ன செய்துவிடுவார்கள் என எண்ணிக்கொண்டிருந்தாள்.
உண்மையில் அவளுக்கு பயம் என்பது இல்லவே இல்லை. பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதில் அத்தனை உறுதியாய் இருந்தாள்.
“நான் பார்த்துக்கறேன் ண்ணா…” என மனுரஞ்சன் சொல்ல,
“ஓகே, பத்திரம் பத்திரம்…” என பேசிக்கொண்டே சாப்பிட்டவனுக்கு சட்டென புரையேற அப்படி ஒரு இருமல்.
கண்ணில் நீரே வந்துவிட்டது. அருகில் நின்ற சோபியா அவனின் தலையில் தட்டி தண்ணீரை எடுத்து தந்து,
“ஒண்ணுமில்லை, ஒண்ணுமில்லை. போயிருச்சு ண்ணா. அவ்வளோ தான்…” என சிறுபிள்ளையை போல சொல்ல நெடுஞ்செழியனுக்கு சிரிப்பு தாளவில்லை.
“ஆமாமா, இத்தனை அடி அடிச்சா இருமல் போயே போச்சு…” என்று கிண்டல் பேச,
“இன்னும் நாலு சேர்த்து கொட்டு வை சோபி. சாப்பிடும் போதும் பேசிட்டே சாப்பிடறது…” என காபியை கொண்டுவந்து வைத்தாள் சுபஷ்வினி.
“அதெல்லாம் நீங்க கொட்டுங்க. வலிக்கும்…” என சோபியா சொல்ல,
“பார்ரா, அண்ணனுக்கு வலிக்கும்ன்னு பாசத்தை…” என நிகிதா கூட கிண்டலாய் சொல்ல,
“ம்ஹூம், அவளுக்கு கை வலிக்குமாம். அதை சொல்றா…” என்றான் நெடுஞ்செழியன்.
“சரிதான், இன்னைக்கு செக்கப்க்கு போன மாதிரி தான்…” என காஞ்சனா சொல்ல நெடுஞ்செழியன் காபி கப்புடன் எழுந்துகொண்டான்.
வாசலுக்கு அனைவரும் வர காரில் ஏறும்முன் பூச்சியப்பன் பைக்கில் வந்துவிட்டான் நெடுஞ்செழியனை காண.
“வா பூச்சி…” என அவன் அழைக்கவும் நிகிதா சிரித்துவிட அதை கண்டு உடன் பேசும் அளவிற்கு அவன் முகத்தில் இலகுவான தன்மை இல்லை.
“நீங்க வேதா மேம்கிட்ட பேசறப்போ இன்னும் ஸ்ட்ராங்கா இருக்கும்…” என சொல்ல,
“தனா எங்க இருக்கான்னு தெரிஞ்சதா?…” என விசாரித்தான்.
அவனின் அருகில் நின்றிருந்த சுபஷ்வினிக்கு என்ன நடக்கிறது என எதுவும் புரியவில்லை.
“நோ ஸார். எங்க இருக்கான்னு தேடிட்டிருக்கோம். கேஸ் பைல் பண்ணினா வாரண்டோட அபிஷியலா தேட இன்னும் ஈஸியா இருக்கும்…” என்று சொல்ல இன்னும் அச்சத்தில் அவள் விழிகள் விரிந்தது.
“ஓகே…” என்றவன் திரும்பி பார்க்க காஞ்சனா காரில் ஏறி இருந்தார். அடுத்ததாய் சோபியா ஏறவிருக்க கால் இடறியது அவளுக்கு.
“ஹேய் சோபி பார்த்துடா…” என்று மனுரஞ்சன் அவளை பிடித்துக்கொள்ள காபி கப்பை வைத்துவிட்டு வேகமாய் அங்கே சென்றான் நெடுஞ்செழியன்.
“என்னாச்சு? சோபி என்னடா?…” என்றான் அவளின் காலை பார்த்து.
“கார்ல ஏறும் போது கல்லு குத்திருச்சு ண்ணா. வேற ஒண்ணுமில்லை….” என்று அவள் சொல்ல காலில் இரு துளி ரத்தம் சொட்டாய் துளிர்த்து நின்றது.
நெடுஞ்செழியனுக்கு மனதே சரியில்லை. என்னவோ அத்தனை சஞ்சலம். அவர்களை அனுப்பவே மனதில்லை.
வேண்டாம் என சொல்ல விழைந்த மனதை காஞ்சனாவின் சோர்ந்த முகம் கட்டிப்போட்டது.
“சோபி, நீ வீட்டுல இரு. நாங்க போய்ட்டு வரோம்…” என காஞ்சனா சொல்ல,
“அதெல்லாம் முடியாது. உங்களுக்கு என்னன்னு நானும் தெரிஞ்சுக்கனுமே? எனக்கு தெரியாம நீங்க எதோ சேட்டை பன்றீங்கம்மா. அதான் பிரஷர் கூடிருக்கு. சுகர் லெவல் எல்லாம் எவ்வளோன்னு பார்க்கனும்…” என பிடிவாதமாய் சோபியா ஏறி அமர்ந்துகொண்டாள்.
“லேசா தானே? நான் பார்த்துக்கறேன்…” என்று மனுரஞ்சனும் சொல்ல,
“ஹ்ம்ம்…” என்ற நெடுஞ்செழியன்,
“அஷ்வினி கொஞ்சம் தண்ணி கொண்டுவாயேன்…” என அனுப்பினான் மனைவியை.
“என்னாச்சு செழியா? இதெல்லாம்…” என்றவர் மகனின் முகம் கண்டு அமைதியாகிவிட்டார்.