சுபஷ்வினி அழைத்த அடுத்த நிமிடம் நடக்கவிருக்கும் விபரீதம் புரிந்துபோனது நெடுஞ்செழியனுக்கு.
“உன் ரூம் நம்பர் சொல்லு அஷ்வினி…” என்றவன் அவளின் அழைப்பு நின்றதும் உடனே தன்னுடைய வேலையை துவங்கிவிட்டான்.
தொடர்பில் இருந்த அத்தனைபேரையும் முடுக்கிவிட்டவன் பூபாலனுக்கு அழைத்து ஒரு வேலையை சொல்லிவிட்டு,
“பூச்சி நான் சொல்லும் போது ஜாமரை ஆக்டிவேட் பண்ணு. இங்க இருந்து யாருக்கும் ஒரு கால் கூட போகக்கூடாது. எல்லாமே நம்ம கண்ட்ரோலுக்கு வரனும்…” என சொல்லி பிஸ்டல் ஒன்றை தற்காப்பிற்கு எடுத்துக்கொண்டான்.
“விமல் என்னோட வா…” என அழைத்தவன் ஜாமரை உயிர்ப்பிக்கும் முன் தனக்கு அழைக்கும் அந்த நபரிடம் விஷயத்தை தெரியப்படுத்தியவன்,
“உடனடியா எனக்கு ஒரு டீம் அரேஞ்ச் பண்ணுங்க. அப்படியே ரெண்டு ஆம்புலென்ஸ் வேணும் மெடிக்கல் டீமோட. கூடவே லேப் டெஸ்ட்டிங் இங்க பன்ற மாதிரியான ஏற்பாட்டோட வரவழைங்க. க்விக்…” என்று சொல்லியதும்,
“இப்ப ஜாமரை ஆக்டிவேட் பண்ணிடட்டுமா ஸார்?…” என்ற பூச்சியிடம் தலையசைத்துவிட்டு அறையிலிருந்து வெளியேறினான்.
அவனிருந்த இடத்திலிருந்து சுபஷ்வினி இருந்த அறைக்கு செல்லும் முன் விமலிடம்,
“இங்க இருந்து ஒருத்தரும் வெளில போக கூடாது விமல். அது யாரா இருந்தாலும். அலார்ட் பண்ணிடு. ரெஸார்ட்க்கு வெளில நம்ம பாய்ஸ் பத்துபேர் இருப்பாங்க. மெசேஜ் பண்ணிட்டேன். இப்ப வந்திருவாங்க. டேக் சார்ஜ்…” என சொல்லிக்கொண்டே நடந்தவன் அவளறைக்கு முன் வந்துவிட்டான்.
“சுபாஷ் அங்கிள் இந்த ரெஸார்ட்டோட கண்ட்ரோல் ரூம்ல இருப்பார். நான் சொன்னதை முடிச்சிட்டு அவரை பார்த்துட்டு நீ இங்க வந்திரு…” என சொல்லவும் விமல் நகர அந்த அறையின் கதவை தட்டினான் நெடுஞ்செழியன்.
“அஷ்வினி கதவை திற. நான் தான்…” என்று தட்ட அவள் திறக்கவே இல்லை.
“அஷ்வினி கதவை திறன்னு சொன்னேன். அஷ்வினி…” என்று மீண்டும் பலமாய் தட்டியவன் விடாமல் பேச,
“நிஜமாவே நீங்க தானா?…” என கேட்டு உறுதி படுத்துக்கொண்டு தட்டு தடுமாறி கேட்டு அதன் பின் கதவை திறந்தாள்.
அவன் உள்ளே வந்த அடுத்த நொடி சுபஷ்வினி வேக எட்டுக்களுடன் பின்னே படுக்கைக்கு மறுபுறம் தள்ளாடி சென்று நிற்க பார்த்தவனுக்கு உயிரெல்லாம் துடித்தது.
அவள் உடல் அவளின் கட்டுப்பாட்டில் இல்லை. கண்களில் செந்தூரம் பாய்ந்து போதையில் மிதந்தது.
இரவு உடை அபாயமாக இறங்கியும் ஏறியும் இருக்க அதனை கூட சரிசெய்ய முடியாத நிலையில் சுபஷ்வினி.
“அஷ்வினி…” என்றவனுக்கு குரலே எழும்பவில்லை.
“ப்ளீஸ் செழியன் கிட்ட வராதீங்க…” என சொல்லும் பொழுதே கண்ணீர் அவளின் விழிகளில் பெருக்கெடுத்தது.
“என்னம்மா? நான் தான். நத்திங் வொர்ரி. பயப்படாத. என்னாச்சு? என்ன பண்ணுது?…” என அருகே அவளை நெருங்க முன்னேற அங்கிருந்த பூ ஜாடியை தூக்கி வீசியவள்,
“கிட்ட வராதீங்கன்னு சொல்றேன்ல. அங்கயே நில்லுங்க…” என கத்தி இரைந்துகொண்டே குளியலறை பக்கம் நின்றாள்.
“என்னால முடியலை செழியன். என்னமோ பண்ணுது. சொல்ல கூச்சமா இருக்கு. உங்க பக்கத்துல போன்னு என்னோட உணர்வு சொல்லுது. தப்பு…” என்று சொல்லியவள் மயக்க நிலைக்கும் செல்லவில்லை.
அவள் சொல்லியதன் அர்த்தம் புரிய நெடுஞ்செழியன் நெற்றியில் அறைந்தபடி திரும்ப அங்கே அந்த தண்ணீர் பாட்டில்.
அதனை அவள் பருகியிருந்ததை கவனித்துவிட்டவன் விழிகள் சுபஷ்வினியை கண்டு சிவந்துபோனது.
“அஷ்வினி உனக்கு ஒன்னும் இல்லை. இப்ப டாக்டர்ஸ் வந்திருவாங்க…” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்க தன் கன்னத்தை தானே அறைந்துகொண்டாள் சுபஷ்வினி.
“ஹேய் என்னம்மா பன்ற நீ? அஷ்வினி…” என அலறலுடன் நெடுஞ்செழியன் முன்னே செல்ல,
“ஹ்ம்ம், வாக்கிங் ரூம்க்கு வந்ததும் ட்ரெஸ் மாத்திட்டு வீட்டுக்கு கால் பண்ணிட்டே இந்த தண்ணியை கொஞ்சமா குடிச்சிட்டேன். பேசி முடிக்கிறதுக்குள்ள என்னவோ பண்ணிருச்சு. அதான் உங்களுக்கு கால் பண்ணேன்….” என்று மெல்ல மெல்ல சொல்லிக்கொண்டிருக்க கேட்டுக்கொண்டிருந்தவன் ரத்தமெல்லாம் கொதித்தது.
“மத்தவங்களுக்கு என்னாச்சோ? பயமா இருக்கு செழியன்….” என்று விழிகள் சொருக சொல்லியவள் அருகே அவன் எழுந்து செல்ல,
“ஏய் கிட்ட வராதன்னு சொல்றேன்லடா. புரியாதா?…” என்றவள் மீண்டும் உச்சஸ்தானியில் பலம் திரட்டி கத்தினாள்.
“அஷ்வினி நான் தான்ம்மா. ஒன்னும் ஆகாது. அங்க உன் கையில என்னன்னு…” என்று சொல்லி முடிக்கும் முன்,
“நான் தான் கிள்ளி வச்சுக்கிட்டேன். அடிச்சுக்கிட்டேன். இந்த வலி தான் என்னை சுயநினைவுல வச்சிருக்கு. அதான்…” என்று தன்னிரு கைகளையும் காண்பிக்க ஆங்காங்கே சிறு ரத்த துளிகள்.
சுபஷ்வினி கையை பார்த்துக்கொண்டே இருக்க மீண்டும் அவளின் தலை லேசாய் தளர்ந்து போனதும் தானாகவே எழுந்து நின்றாள்.
உள்ளுக்குள் அவளின் ரத்தவோட்டம் எங்கெங்கோ பாய்ந்தது. அவளை எதற்கோ செலுத்தியது. அதனை உணரமுடிந்தது அவளால்.
“செழியன்….” என்றவள் முகத்தில் மிதமாய் புன்னகை.
மெல்ல தானாகவே அவனிடம் நெருங்க அசையாமல் நின்றவனின் அருகே வந்தவள் கைகள் அவனை தீண்டும் முன்,
“தப்பு தானே?…” என்று கேட்க நெடுஞ்செழியன் விழிகள் கலங்கிவிட்டது.
“இல்லம்மா…” என மெல்ல கூறவும் அவனை இழுத்து அணைக்க துடித்த தன் கைகளை பலம் கொண்டமட்டும் இறுக்கி நெரித்து பிடித்தவள்,
“ப்ளீஸ் தனியா விட்டுட்டு போய்டாதீங்க…” என சொல்லி மீண்டும் பின்னே செல்ல கண்ணீர் கண்ணீர் மட்டுமே அந்த முகத்தில்.
மனம் விரும்பியவன் முன் இப்படி ஒரு நிலை. சுபஷ்வினி அறவே வெறுத்த அந்த சூழ்நிலை.
“அஷ்வினி…” என்றவன் கைகள் அவளை பற்றிய நொடி அவனை படுக்கையில் தள்ளிவிட்டாள்.
நேரம் செல்ல செல்ல அவளால் அங்கே அவனின் முன் செழியனை நெருங்காமல் தள்ளியிருக்க முடியவில்லை.
தன்னுணர்வுகள் இங்கே கடைவிரிக்க அகோர பசி கொண்டு தலைவிரித்தாட அங்கிருந்து தன்னை தானே அப்புறப்படுத்தவேண்டிய நிலை சுபஷ்வினிக்கு.
“இன்னும் ரெண்டுநிமிஷமானாலும் நான் எல்லை மீறிடுவேன் செழியன்…” என்றவள் தடுமாறி குளியலறைக்குள் நுழைந்துகொண்டாள்.
“அஷ்வினி உனக்கு ஒன்னும் இல்லை. சரியாகிடும். முதல்ல இப்படி பண்ணாத. கதவை திறம்மா…” என வேகமாய் வந்து நெடுஞ்செழியன் கதவை தட்ட,
“இந்த எண்ணம் குறையட்டும். நான் நானாகவும் வரேன். ப்ளீஸ் செழியன், எங்கயும் போய்டாதீங்க. எங்கயும் போய்டாதீங்க. கதவை வெளில பூட்டிடுங்க…” என்று குழறலாய் அழுதுகொண்டே கூற,
“ஐயோ…” என மீண்டும் முகத்தில் அறைந்துகொண்டவனுக்கு இதனை செய்தவர்களை கொன்றுபோடும் வேகம் பிறந்தது.
அங்கிருந்து அவன் எழுந்து செல்ல முயன்றதுமே மீண்டும் சுபஷ்வினியின் குரல் உள்ளிருந்து.
“செழியன்…” என அவனின் இருப்பை பயத்துடன் அவள் பரிசோதிக்க,
“இங்க தான் இருக்கேன் அஷ்வினி. எங்கயும் போகலை…” என்றான் கதவோடு ஒன்றி நின்று.
ஒவ்வொரு பேச்சுக்களுக்கும், ‘செழியன் வெளில வந்திருவேனோன்னு பயமா இருக்கு’ என்று ஒரு அரற்றல்.
“நான் தான்டா. நீ வா. நான் பார்த்துக்கறேன்…” என்றும் அவன் சொல்ல சில நொடிகள் நிசப்தம்.
“செழியன் என் ப்ரெண்ட்ஸ் எல்லாம்….” சுபஷ்வினி வினவ,
“யாருக்கும் எதுவும் இல்லை. எல்லாரும் சேஃப். யாரும் இன்னும் அந்த தண்ணியை குடிக்கலை…” என்றான் அவன்.
வெளியில் செல்லாமல் கதவை திறக்காமல் எதையும் தெரிந்துகொள்ளாமல் இதனை அவளுக்காக அவளின் பயத்தை போக்கவென்று அவன் கூறிவைத்தான்.
“நான் தான் அவசரப்பட்டு குடிச்சிட்டேன்….” என்று வேறு தன்னை தானே கடிந்துகொண்டாள்.
“செழியன் ஸ்ருதி கூப்பிடுவா. சொல்லாதீங்க…” என்றும் அவனிடம் சொல்லி வைத்தாள்.
இங்கே பேசிக்கொண்டிருக்க கதவு தட்டப்படும் சத்தம் கேட்க எழுந்துகொண்டான் செழியன்.
சுபஷ்வினி இருந்த அந்த குளியலறை கதவை சத்தம் காட்டாமல் வெளிப்பக்கமாக பூட்டியவன்,
“அஷ்வினி நான் இங்க தான் இருக்கேன்…” என்று சொல்லிவிட்டு வேகமாய் அறை கதவை நோக்கி சென்றான்.
திறந்ததுமே விமலும் பூச்சியும் நுழைந்தனர். அவர்களின் முகத்தை வைத்தே எல்லாம் அவர்களின் கட்டுப்பாட்டில் என்பதை கண்டுகொண்டான் நெடுஞ்செழியன்.
“எல்லாமே நம்ம கண்ட்ரோலுக்கு வந்தாச்சு. டாக்டர்ஸ் வந்திட்டிருக்காங்க. இங்க இருக்கற சிசிடிவி கேமரா கண்ட்ரோல் ரூம் எல்லாம் ப்ளாக் பண்ணிட்டோம்….” என விமல் சொல்ல,
“நம்ம கண்ட்ரோல் எடுத்ததும் ஜாமரை டி-ஆக்டிவேட் பண்ணிட்டோம் திரும்ப. ரெஸார்ட்குள்ள நம்ம பர்மிஷன் இல்லாம யாரும் நுழையமுடியாது. இங்க இருந்து யாரும் எந்த தகவலும் தர முடியாது…” என்றான் பூச்சி.
“இங்க வந்திருந்த மேடமோட டீம்ல இன்னும் மூணுபேருக்கு அந்த வாட்டர் பாட்டிலை குடுத்திருக்காங்க. அடையாளத்துக்கு தான் வெளில கதவுல அந்த பேப்பர்ஸ் ஒட்டியிருக்காங்க. அதுல ரெண்டுபேர் அதை குடிச்சிட்டாங்க. இதே நிலைமை தான் அங்கயும். அவங்களோட மத்த ப்ரெண்ட்ஸ் இப்ப கூட இருக்காங்க…” விமல் சொல்ல,
“வேற யாருக்கும் குடுக்கலை. அப்பறம் புதுசா மூணு பேர் தங்கி இருக்காங்க ஸார். அவங்க வந்ததுக்கான புக்கிங் எதுவும் ரிஜிஸ்டர் புக்ல இல்லை. ஒருத்தர் மார்னிங்கே வந்தாச்சு. மத்த ரெண்டுபேர் மூணுமணி போல வந்திருக்காங்க….” பூச்சி விவரங்களை ஒப்பித்தான்.
“ஹ்ம்ம்…” என்று சொல்லிய செழியன் ஓய்ந்ததை போல அமர்ந்துவிட்டான்.
குளியலறை கதவு தட்டப்படும் சத்தம் கேட்க விமலும், பூச்சியும் அங்கே பார்த்தனர்.
“டாக்டர்ஸ் வரவும் வரோம் ஸார். வெளில வெய்ட் பன்றோம்…” என்று சொல்லிவிட்டு இருவரும் வெளியேற நெடுஞ்செழியன் சோர்ந்து அமர்ந்தது சில நொடிகள் மட்டுமே.
முகத்தை இரு கைகளாலும் அழுத்தமாய் தேய்த்துக்கொண்டவன் கை முஷ்டி இறுகியது.
நெடுஞ்செழியனின் அகமெல்லாம் வெறி பிடித்திருந்தது. என்ன நடந்துகொண்டிருக்கிறது இங்கே என முழுதாய் புரிந்துகொண்டான் அவன்.
அவனின் ஆவேசத்தை கூட்டுவதை போல சுபஷ்வினியின் அனத்தல்கள் ஓயாமல் வந்துகொண்டே இருக்க அடுத்த கால்மணி நேரத்தில் மருத்துவர்கள் குழுவாய் வந்து சேர்ந்திருந்தனர்.
அத்தனைபேரையும் விசாரித்து பாதிக்கப்பட்ட மூன்று பெண்களையும் உடனடி சிகிச்சைக்கு அனுப்ப முயல,
“செழியன்…” என அவனின் கைகளை பிடித்துக்கொண்ட சுபஷ்வினியின் விரல்கள் இறுக்கம் பெற்றது.