ஊடகவியல், பத்திரிக்கையாளர் கூட்டம் நடந்ததை அறிந்துகொள்ள என மருத்துவமனையை சுற்றி வளைத்துவிட்டனர்.
மருத்துவமனையை சுற்றி காவல் மிகவும் கடுமையாக போடப்பட்டடிருந்தது. அத்தனைபேருக்கும் ஒரே தளத்தில் சிகிச்சை வழங்கப்பட்டது.
ஆனால் ஒருவரையும் உடனடியாக விசாரணைக்கு ஆட்படுத்த கூடிய சூழ்நிலை இல்லை. இன்னும் முழுதாய் அங்கே என்ன நடந்தது என தெரியவில்லை.
சங்கீதாவிற்கு மனஅழுத்தம் அதிகமாக இருப்பதனால் சுகபிரசவத்திற்கு வழி இல்லை என்று சொல்ல வேதா தான் கையெழுத்தை பதிந்தார்.
கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது அவருக்கு. அழும் திராணி கூட இல்லை அப்பெண்மணிக்கு.
ஒருவித விரக்தி நிலை. எங்கே தான் தவறினோம் என்ற கேள்வி மனதில் வண்டாய் குடைய மகனின் பேச்சுக்குரல் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
மகன் உயிருடன் இல்லை என்றிருந்த சுரேந்திரனுக்கு அதனை நம்பவும் முடியவில்லை. துடிதுடித்து போனார்.
நிகிதாவிற்கு காலில் அறுவைசிகிச்சை உடனடியாக நடத்தப்பட்டது. சுபஷ்வினி சோபியா இருவருக்கும் முதலுதவி வழங்கப்பட்டது.
சிலமணி துளிகளில் சங்கீதாவிற்கு குழந்தை பிறந்தது என்னும் செய்தியை கேட்டதும் தான் வேதாவிடம் ஒரு திடம் வந்தது.
சுரேந்திரனால் மகனின் உடலை பார்க்க செல்ல முடியவில்லை. வேதாவும் அவரை எங்கும் செல்லவிடவில்லை.
“இப்ப அனுமதிக்கமட்டாங்கன்னு உங்களுக்கு தெரியாதா? விசாரணை முடியனும்…” என்றவர் குழந்தையை காண ஆவலுடன் இருந்தார்.
“பெண் குழந்தை…” என மருத்துவர் தூக்கி வந்து தரவும் அதனை வாங்கும் போதே வேதாவின் கைகள் பெரிதாய் நடுங்கியது.
‘பிறக்கும் போதே தந்தையில்லாமல்’ என்ற எண்ணம் தலைதூக்கி கழிவிரக்கத்தை தூண்ட சட்டென தலையை உலுக்கி உதறி தள்ளினார் வேதா.
“பிறக்கும் போதே என் பேத்தி ஒரு குற்றத்துக்கு முடிவு கட்டிட்டு பிறந்திருக்கா. தைரியமா தாயோட உன்னதமா வந்திருக்கா…” என்றார் பெருமிதமாக வேதசௌந்தரி.
“வேதா…” என சுரேந்திரன் பேசும் முன்,
“முதல்ல பேத்தியை பிடிங்க…” என்று அவரின் கையில் தந்துவிட்டு,
“சங்கீதா எப்படி இருக்கா?…” என்றார் மருத்துவரிடம்.
“மயக்கத்துல இருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல மயக்கம் தெளிஞ்சிடும். அப்பறம் நீங்க பார்க்கலாம் மேம்…” என்று சொல்லியவர் மீண்டும் குழந்தையை வாங்க கை நீட்ட,
“அப்படியே உன்னை மாதிரியே இருக்கா பாரேன். அழவே இல்லை…” என்ற சுரேந்திரன்,
“இந்த குழந்தைக்காக எவ்வளோ ஆசையா காத்திருந்தான் நம்ம தனா. பார்க்க குடுத்து வைக்கலையே?…” என கண்ணீர் விட,
“அவங்கவங்களோட பிறவி பயன் எதுவோ, அதுக்கான பலனை ஏத்துக்கத்தான் வேணும்….” என்றவர் தூரத்தே அமர்ந்திருந்த சுபஷ்வினியை திரும்பி பார்த்தார்.
சோபியாவுடன் காஞ்சனாவும், அவளின் குடும்பத்தினரும் பார்க்க சென்றிருக்க சுபஷ்வினி அருகில் பூபாலன் நின்று பேசிக்கொண்டிருந்தான்.
சற்று தள்ளி நெடுஞ்செழியனுடன் மற்ற காவலர்களும் இருக்க அவனுடன் மனுரஞ்சனும் நின்றிருந்தான்.
வேதா பார்ப்பதை சுபஷ்வினியும் கவனிக்க தலையசைத்து அவளை வரும்படி அழைத்தார்.
“விசாரணையை ஆரம்பிக்கலாம்…” என்று அவளிடம் சொல்ல அதோ இதோவென்று மாலையாகிவிட்டது.
“இப்ப உங்க யாரையும் பார்க்கமுடியாது. அதனால வரவேண்டாம்ன்னு சொல்லிட்டேன். நீங்க ஸ்பாட்ல இருந்திருக்கீங்க. (www.stellardental.my) விசாரணை முடியற வரைக்கும் போன்ல கூட பேசமுடியாது…” என்றிருந்தான்.
அவர்களை பார்க்க வந்த உறவுகளும் பார்த்து விசாரித்துவிட்டு தூரத்தில் சென்று நின்றுகொண்டனர்.
அந்த காவலை தாண்டி யாரும் உள்ளே நுழைய முடியவில்லை. அவர்களை பத்திரிக்கையாளர் யாரும் தொடர்புகொண்டுவிடாமல் வேறு கண்காணிக்க வேண்டிய கட்டாயம்.
தமிழகமெங்கும் நடந்துகொண்டிருந்த கலவரம். மாநில அரசாங்கத்தில் நடப்பதை மத்திய அரசாங்கத்திடம் விவரிக்கவேண்டிய சூழ்நிலை.
அரசாங்கத்தோடு காவல்துறையினரும் நிலைமையை கட்டுக்குள் வைத்து பார்த்துக்கொள்வதற்குள் தள்ளாடி போனார்கள்.
நிலைமை கை மீறினால் எந்த நேரத்திலும் இராணுவத்தை அணுகிவிடவேண்டும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கை எல்லாம் தயார் நிலையில்.
சிறு கல்லை எறிந்தால் கூட கேள்விகள் கேட்காமல் அள்ளி சிறைக்கு உள்ளே போடுமாறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.
விசாரணைகள், கேள்விகள் எல்லாம் இரண்டாவது என்று உத்தரவு போடப்பட்டுவிட்டது.
அப்படியும் களஞ்சியத்தின் அடியாட்கள் அடங்கவில்லை. ஒருவழியாக ஊரடங்கு உத்தரவின் பெயரில் பொது சொத்துக்களும், பொதுமக்களின் சொத்துக்களும் பாதுகாக்கப்பட்டது.
விழிப்புணர்வுடனும் செயல்படவேண்டிய தருணம். இன்னொருபக்கம் மக்களின் கொதிப்புநிலை.
இருவர் தீக்குளிப்பதாக மிரட்டல் செய்தி வந்திருக்க காவலர்களுக்கு கட்டளையிட்டான்.
“எவனாச்சும் கொளுத்திக்கறேன்னு நின்னானுங்கன்னா அந்த வேலையையும் அவனை செய்யவிடாதீங்க. வீடு எங்கன்னு கேட்டு கூட்டிட்டு போய் குடும்பத்தோட சேர்த்து வச்சு கொளுத்துங்க. அப்பத்தான் அடங்குவானுங்க…” என கர்ஜித்தான் நெடுஞ்செழியன்.
“இவன் எவனுக்காகவோ செத்துட்டு, அந்த குடும்பம் வீதில நிக்கனும். அதுக்கு சேர்த்தே கூட்டிட்டு போவட்டும். அப்பத்தான் கட்சி, அரசியல்ன்னு இந்த தீக்குளிப்பு நடத்தாம இருப்பானுங்க…” என்று வெடித்தான்.
இன்னொருபக்கம் மக்களின் ஆவேசம். ஒரு முதலமைச்சரும், அவரின் மகனும், காவல்துறையில் பெரும் அதிகாரத்தில் இருந்த சாருகேஷும் செய்திருக்கும் இந்த ஈனச்செயலுக்கு அரசாங்கம் என்ன செய்ய போகிறது என்று கேள்வி மேல் கேள்வி.
அதன் போராட்டங்கள் என்று நடக்க அதற்குள் கூட அரசியல் ஆதாய புல்லுருவிகளின் ஊடுருவல்.
போராட்டத்தை திசைமாற்றும் விதமாக வன்முறையில் இறங்குவது, காவலர்கள் மேல் கல்லெறிவது என அவற்றை களை எடுத்து மக்களை அமைதிப்படுத்துவது என்பது பெரும் சவாலாய் இருந்தது.
இப்படி இத்தனைக்கும் நடுவில் மருத்துவமனையில் இருந்தவர்களிடம் விசாரணையை துவங்க வேண்டும்.
நெடுஞ்செழியன் நிகிதாவும் கண்விழிக்க காத்திருந்தான். அவர்களிடம் மாட்டியிருந்த பெண்களான மற்றவர்களுக்கும் ஒய்வு தேவையாய் இருந்தது.
மருத்துவர் அவர்களை பரிசோதித்து சற்று ஓய்வெடுக்கட்டும் என்று கூறியிருந்ததனால் அங்கேயே காத்திருந்தார்கள்.
இருந்த இடத்தில் இருந்தே நெடுஞ்செழியன் வெளியில் நடப்பதை கண்காணித்துக்கொண்டு இருந்தான்.
வழக்கறிஞர் கனுஷாந்த் களஞ்சியம் ராஜாங்கத்தை பெயிலில் எடுக்க முன்வந்திருப்பதாக வேறு தகவல்.
“எவ்வளவு தைரியம்? தலைமை செயலகத்திலையே அந்த எலெக்ட்ரானிக் டிவைஸ் எல்லாம்சர்ச் பண்ணி கண்டுபிடிச்சிருக்கோம். அவ்வளோ எவிடென்ஸ் காமிச்சிருக்கோம். எந்த நம்பிக்கையில இந்தாள் ஜாமீன்ல எடுக்க முயற்சி பன்றார்?…” என ஆவேசத்துடன் பேசியவன்,
“கதிரவனை பார்க்கனும்ன்னு சொல்லி வேற மனு குடுத்திருக்கானாம்….” என்று வேறு கொதிப்புடன் நெடுஞ்செழியன் சொல்ல விமல் ஆமோதித்தான்.
கதிரவன் ராஜாங்கத்தை கைது செய்ததோடு அவன் எங்கே இருக்கிறான் என்பதை யாருக்குமே இன்னும் தெரிவிக்கவில்லை நெடுஞ்செழியன்.
அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பவனை அத்தனை சுலபத்தில் பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை என்றுவிட்டான்.
“இங்க முடிச்சிட்டு விசாரணையில அவனை புழிஞ்சிடறேன். நிகிதா எழுந்தாச்சா?…” என்றான் விமலிடம்.
“இன்னும் இல்லை…” என்ற விமலின் குரலில் ஏகத்திற்கும் வேதனை.
“சரியாகிடுவா. விடு…” என அவனின் தோளில் தட்டி கொடுத்தவன் மருத்துவரை பார்த்தான்.
“நிகிதா இப்ப நல்லா இருக்காங்க. கான்ஷியஸ் வந்திருச்சு. நீங்க பேசலாம்…” என்று சொல்லிவிட்டு செல்ல வேகமாய் நெடுஞ்செழியனுக்கு முன் செல்ல பார்த்து பின் நிற்க,
“போடா போ…” என்றான் நெடுஞ்செழியன்.
ஒருவழியாக விசாரணை நேரம். முதலில் மற்ற நால்வரையும் தான் விசாரித்தான் நெடுஞ்செழியன். இறுதியாக வேதாவிடம் வரலாம் என்று.
அதுவரை கூட அவர் தான் டிஜிபி, தனாவை சுட்டிருப்பார் என்று நினைக்கவில்லை.
மற்ற நால்வரும் கூட இதனை சொல்லவில்லை. நிகிதா அங்கேயே மறுத்திருந்தாள்.
காவல்துறை அதிகாரிகள் வரும் முன்னரே அரை மயக்கத்திலும் மற்றவர்களிடம் சொல்லியிருந்தாள் தனாவும் டிஜிபியும் அவர்களுக்குள்ளேயே சுட்டுக்கொண்டதாக சொல்லும்படி.
அவளுக்கு இதில் வேதா மாட்டவேண்டாம் என்றிருந்தது. வேறு யார் சொல்லிவிட முடியும் என நினைத்தாள்.
சோபியா அந்த நேரம் மயக்கத்தில் இருக்க சங்கீதாவிற்கு தெரிந்திருந்தாலும் மௌனம் மட்டுமே அவளிடம்.
சுபஷ்வினியிடம் இதனை கேட்க மனதறிந்து பொய் சொல்ல அவளால் முடியவில்லை.
“எனக்கு தெரியலைண்ணா, நான் மயக்கமாகிட்டேன்…” என்றாள் சோபியா.
அவளை பார்க்கவே அத்தனை கொடுமையாக இருந்தது. தலை, கை, கால்கள் என்று அத்தனை கட்டுக்கள்.