“ஹாஸ்பிட்டல் தான் போற அஷ்வினி. ஒன் டே ரெஸ்ட். சரியாகிடும். நான் கொஞ்ச நேரத்துல அங்க வந்திருவேன்….” என்றான் அவளிடம்.
சுபஷ்வினி கூட பரவாயில்லை. மற்ற இரு பெண்களும் அதிகளவு நீரை அருந்தி இருக்க அவர்களை தீவிர மயக்க நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டிய கட்டாயம்.
ஆழ்ந்த உறக்கத்திற்கு ஆட்படாமல் அவர்களின் உடல்கள் தூக்கிவாரி போட்டது.
அதனை கண்டு திகைத்த நெடுஞ்செழியன் மருத்துவரிடம் கவலையுடன் விசாரித்தான்.
“அப்படித்தான் இருப்பாங்க. ஸ்லீப்பிங் டோஸ் அளவா தான் செலுத்தனும் ஸார். இல்லைன்னா இவங்க கோமா நிலைக்கு கூட போக வாய்ப்பிருக்கு. நாங்க பார்த்துக்கறோம்….” என்றார் மருத்துவர்.
அங்கிருந்து மருத்துவமனைக்கு அவர்களை அழைத்து சென்றதும் அந்த பாட்டில்களையும் சேர்த்தே அனுப்பி வைத்தான்.
தனியே சிலதை எடுத்து வைத்த நெடுஞ்செழியன் தனக்கு தெரிந்த நம்பிக்கையானவரை வரவழைத்து தனியே அதனை ஆராயும்படி கொடுத்தனுப்பினான்.
எல்லாம் முடிந்து பாதிக்கப்பட்ட பெண்களுடன் வந்திருந்த மற்றவர்கள் அனைவரின் கலவரமான முகம் கண்டவன்,
“இப்ப இங்க இருந்து நீங்க யாரும் போக முடியாது. எல்லாரோட சேஃப்டிக்கு தான் சொல்றேன்…” என பொதுவாய் நெடுஞ்செழியன் கூற,
“நாங்க என்ன பண்ணோம் ஸார்? ப்ளீஸ், இதுக்கு மேல இந்த ஸ்ட்ரேஞ்ல எங்களால இருக்க முடியாது. எங்களை அனுப்பி வைங்க…” என்று குடும்பமாய் வந்திருந்த ஒருவர் இறைஞ்ச,
“நோ, முடியாது. உங்க பாதுகாப்புக்கு இங்க எந்த இடைஞ்சலும் இருக்காது. இன்னைக்கு நைட் மட்டும் தான்….” என்று அதனை மறுத்துவிட்டான்.
அனைவருமே அவர்களின் கண் முன்னே தான் அந்த பெரிய நடன அறையில் இருந்தனர்.
அன்று மதியம் செயற்கை மழையின் நடனம் நடந்த இடம் அது. அனைவருமே அங்கே தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
“குழந்தைங்க தூங்க வேணும்னா பெட்ஷீட் தலையணை யூஸ் பண்ணிக்கோங்க. நீங்க எல்லாரும் எங்க கண் முன்ன இருக்கறது தான் உங்களுக்குமே பாதுகாப்பு. புரிஞ்சுக்கோங்க…” என்றவன் அவர்களுக்கு வேண்டியவற்றை செய்துவிட்டு திரும்பினான்.
“விமல் போகலாம்…” என்றவன்,
“பூபாலன் கேர்ஃபுல்…” என சொல்லிவிட்டு அங்கிருந்த மேனேஜரின் அறைக்குள் நுழைந்தான்.
தற்போது தான் அவன் இயல்புநிலைக்கே திரும்பி இருந்தான். உணர்ச்சியின் பிடியில் இருந்தவனின் மனது இப்போது வழக்கத்திற்கு திரும்பி இருக்க முகத்தில் ரௌத்திரம் மிதமிஞ்சி இருந்தது.
வேக எட்டுக்களுடன் வந்தமர்ந்தவனின் தோற்றத்தில் விடுதியின் தரையில் கிடந்த மேனேஜர் பின்னே நகர்ந்தமர்ந்தான்.
“ஹ்ம்ம், ஏதாவது சொன்னானா?….” என நெடுஞ்செழியன் கேட்க,
“எவ்வளோ அடிச்சாலும் வாயை திறக்கமாட்டேன்றான்….” என்றான் விமல் மீண்டும் மேனேஜரின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டு.
“திறக்காம எங்க போவான்? மெதுவாவே திறக்கட்டும். அப்பறம் எங்க அந்த ஸ்பெஷல் கெஸ்ட்?…” என்று நெடுஞ்செழியன் கேட்க, உள்ளறையில் இருந்த அந்த மூவரும் பூச்சியப்பனால் அழைத்துவரப்பட்டனர்.
வந்து நின்ற மூவரில் ஒருவர் வடநாட்டை சேர்ந்தவர். மற்றவர்கள் தமிழகத்தில் பிரபலமான முக்கிய தொழிலதிபர்கள்.
“வன்கிழட்டு நாய்ங்களா…” என எழுந்து அவன் விட்ட அறையில் தடுமாறி கீழே விழுந்தனர் மூவரும்.
“ஒரு அடிக்கு எழுந்து நிக்க முடியலை. உங்க வயசுக்கு என்ன கேவலமான புத்தி? பொறுக்கிங்களா…” கட்டுப்பாடின்றி அடித்து நொறுக்க,
“ஸார் விசாரணைக்காவது உயிரோட இருக்கனும் இவனுங்க…” என பூச்சியப்பன் பிடித்து நிறுத்தினான்.
அவர்களை பேசவே அனுமதிக்கவில்லை நெடுஞ்செழியன். அதில் ஒருவன் விமலிடம் பேரம் பேசி வைத்திருக்க,
“உசுரு முக்கியமில்ல போல? பணத்த எங்கிட்ட குடுத்துட்டு பரலோகம் போறியா?…” என்று உச்சிமுடியை பிடித்து ஆட்டிவிட்டான்.
“இவனுங்களை அந்த ரூம்க்குள்ளையே கட்டி போடுங்க…” என மூன்றுபேரையும் விமலிடம் ஒப்படைக்க பூபாலன் வந்துவிட்டான்.
“டான்ஸ் ஹாலை மேஜர் உமேஷ் டேக்கோவர் பண்ணியிருக்கார்…” என்று சொல்லிவிட்டு,
“கிட்சனுக்கு பின்னாடி சின்னதா ஒரு பேக்டரி மாதிரி நடத்தறாங்க. அந்த டான்ஸிங் ஹால் அளவு தான் இருக்கு. அங்க தான் இவங்க இந்த போதை மருந்து கலந்த தண்ணியை பில் பன்றாங்க ஸார்…” என்றவன்,
“அங்க சீஸ் பண்ணின பொருட்களோட தண்ணில கலக்க பயன்படுத்தற மருந்து என்னன்னும் தெரிஞ்சிடுச்சு. நைட் நமக்கு ரூம்க்கு டீ கொண்டுவந்தவன் எல்லா விஷயத்தையும் சொல்லிட்டான். அப்ரூவராகிட்டான்…” என்று சொல்லி ரூம் பாயுடன் சேர்த்து மேலும் இருவரை இழுத்துவந்து கீழே தள்ளினான் பூபாலன்.
“இவங்க ரெண்டுபேரும் தான் உள்ள இருக்கற அந்த மூணு தொழிலதிபர்களை கூட்டிட்டு வந்தது….” என அவர்களை சுட்டி காண்பிக்க இளைஞர்கள் இருவரும் அப்போதும் அச்சமின்றி தெனாவெட்டாக நின்றனர்.
“இதை கடந்த ரெண்டு வருஷமா ஒரு பிஸ்னஸா பண்ணிட்டிருக்காங்க ஸார். மருந்து கலக்கப்பட்ட தண்ணியை குடிச்சதும் பொண்ணுங்க அவங்களை அறியாமலே உணர்வுகள் தூண்டப்பட்டு அவங்களா தேடி வர மாதிரி…” என்று பூபாலன் சொல்லவும் நெடுஞ்செழியன் பற்கள் நெறிபட்டது.
“எல்லாரையும் பயன்படுத்திக்கறது இல்லை. ஃபேமிலியா வரவங்க இவங்க டார்கெட் இல்லை. ப்ரெண்ட்ஸ் கூட தனியா வர பொண்ணுங்க தான் இவங்க டார்கெட். வீடியோவாவும் இதை பதிவு பன்றாங்க. வெளில தெரிஞ்சா அசிங்கம்ன்னு யாரும் இதுவரை கம்ப்ளைன்ட் பண்ணலை…”
“அதுக்கப்பறம் காண்டேக்ட் பன்றதோ, மிரட்டலோ எதுவும் பன்றதில்லை. அதனால விஷயம் வெளில வரலை இவ்வளோ நாள். அதே நேரம் இது அடிக்கடியும் நடக்கறதில்லை. இதுக்கு பின்னால யார் இருக்கான்னு யாரும் சொல்ல மாட்டேன்றாங்க. ஆனா ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இதை நடத்திட்டு வராங்க…”
“கண்டிப்பா அவங்களை கண்டுபிடிச்சே ஆகனும். இது இன்னும் எங்கலாம் நடக்குதுன்னு நமக்கு தெரியலை ஸார்….” என்றான் பூபாலன்.
இன்னும் சில விஷயங்கள் எல்லாம் அவர்களுக்கு அத்தனை அதிர்ச்சியாக இருந்தது.
சில நொடிகள் அசாத்திய மௌனம் அந்த அறையுனுள் நிலவ இதனை ஜீரணிக்கவே சில நொடிகள் ஆகியது.
“இப்ப என்ன ஸார் பன்றது? ஒருத்தரும் வாயை திறக்கலை….” விமல் கேட்க,
“ஆமா ஸார், அந்த ரூம் பாய் எல்லாத்தையும் சொன்னவன் மேனேஜர் சொல்றதை தான் செய்வோம். அவருக்கு யார் சொல்றாங்கன்னு எல்லாம் தெரியாது. இது தான் நடக்கும்ன்னு மட்டும் தெரியும்ன்னு சொன்னான். மேனேஜருக்கு போன் தான் வரும். நேர்ல யாரையும் பார்க்கலைன்றான்….” என்றான் பூபாலன்.
“பாய்ஸ், எந்த சிக்கலுக்குமே ஒரு நுனி ஒன்னு இருக்கும். ஆரம்பம் ஒன்னு இருக்கும். அது கிடைக்கிற வரைக்கும் தான் கஷ்டம். கிடைச்சிட்டா போதும். பிடிச்சிடலாம். இப்ப இவனுங்க கிடைச்ச மாதிரி…” என்றான் நெடுஞ்செழியன் நம்பிக்கையுடன்.
“நீங்க என்ன பண்ணாலும் நீங்க நினைக்கிறது நடக்கவே நடக்காது. அத்தனை பேரும் வேலையில்லாம போக போறீங்க பாருங்க. இப்படியே எங்களை விட்டுட்டு கிளம்பிட்டா தப்பிச்சீங்க…” என்று மாட்டிக்கொண்டிருந்த இரு இளைஞனில் ஒருவன் கெக்கலிக்க,
“மரியாதை குடுத்து மரியாதை வாங்கனும்ன்னு சொல்றேன்…” என அப்போதும் அடி வாங்கியவன் துள்ளிக்கொண்டு பேச,
“எவனோ குடுக்கற தைரியத்துல பேசற போல? மரியாதை தான குடுத்துட்டா போச்சு…” என்றவன் தலையை கோதியபடி பளாரென அவன் எதிர்பாராத நேரம் இழுத்து காதோடு அறைவிட அலறிக்கொண்டு பின்னே சென்றான் அடி வாங்கியவன்.
“எங்கிட்ட வந்துட்டு எவ்வளோ தெனாவெட்டு பேச்சு? தப்பாச்சே. பார்ப்போம் எவன் வந்து உங்களை கூட்டிட்டு போறான்னு…” என மீண்டும் அறைந்தவன்,
அவர்களின் வலியும், அலறலும் நெடுஞ்செழியனை கிஞ்சித்தும் அசைக்கவில்லை. அது போதவில்லை என்பதை போலத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
மனதிற்குள் சுபஷ்வினி தான் வந்து நின்றாள். அவளை என்ன செய்ய காத்திருந்தார்கள் என நினைக்கையில் நரம்புகள் புடைத்தது.
அவ்விருவர் வாங்கிய அடியில் உள்ளிருந்த பெரிய தலைகள் மூவரும், மேனேஜரும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு கிலியுடன் பார்த்தனர்.
நடுநிசியில் ஒதுக்குப்புறமான அவ்விடத்தில் ஊடகங்களின் வெளிச்சமும், காவல்துறையின் சைரன் விளக்குகளும் வந்து நிறைந்தது.
அவ்விரவிலேயே செழியனின் தற்காலிக பணிநீக்கம் செல்லாததாகி ஏசிபி நெடுஞ்செழியனாக மீண்டும் அப்போதே பொறுப்பேற்றுவிட்ட விஷயத்தை ஊடகங்கள் தலைப்பு செய்தியாக்கி செய்தியை பரபரப்பாக்கினார்கள்.
மீண்டும் பணியில் சேர்ந்ததுமே நெடுஞ்செழியன் எடுத்த முதல் வழக்கின் கைது நடவடிக்கைகள் அந்த இரவில் தீயாய் பரவ விடுதியின் பெயருடன் செய்தி அம்பலமாக திருடன் கையில் தேள் கொட்டிய தினுசில் ஒருவன் ஸ்தம்பித்து போயிருந்தான்.