“நாங்க போய்ட்டு வரோம். நீயும் சாப்பிட்டுடு” என்றபடி அணிந்திருந்த டாக்டர் கோட் டை கழற்றி அங்கிருந்த ஸ்டாண்டில் மாட்டினாள்.
“அப்பிடிங்குற? ஹ்ம்ம்… பாக்கலாம்” உதட்டுக்குள் சிரிப்பை மறைத்து கெத்தாக சொன்ன பத்ரி,
“என்ஜாய் ஜாமூன்… பை மாம்ஸ்” என்று, ஹர்ஷனைப் பார்த்து கண்ணைச் சிமிட்டியபடி அறையிலிருந்து வெளியேறினான்.
‘க்ராதகா… ஒரேயொரு செகண்ட்ல என்னையே ஜெர்க் ஆக வச்சிட்டியே டா.’ சிரித்தபடியே மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்ட ஹர்ஷனின் பார்வை, ஜமுனாவின் மீது ஆவலாக பதிந்தது.
மாம்பழக்கலரில் அழகான காட்டன் சுடிதார் அணிந்திருந்தாள் ஜமுனா. அவளை நேரில் பார்த்த இருமுறையுமே புடவையில் கண்டிருந்த ஹர்ஷனுக்கு, இந்த உடையில் சிறு பெண்ணாக தெரிந்தாள். உச்சிமுதல் உள்ளங்கால் வரை அவளைக் கூர்ந்து பார்த்தவன்,
அவனுடைய பார்வையில் சிலிர்த்துப் போனவள், “நீங்க சொல்லுற அளவுக்கு நான் ஒண்ணும் சின்னப் பொண்ணா தெரியல.” நொடித்தபடியே அவசர அவசரமாக அறையை விட்டு வெளியே வந்தாள். உல்லாசமான சிரிப்போடு உடன் வந்தான் ஹர்ஷன்.
தங்களின் டாக்டரோடு இளைஞன் ஒருவனைக் காணவும், அதுவும் உரிமையாக அவளோடு இணைந்து நடை போடுபவனைக் காணவும் மருத்துவமனை ஊழியர்களின் கண்களில் கேள்வியே.
அதை ஒரு புன்சிரிப்போடு கடந்தவள், மருத்துவமனையை விட்டு வெளியே வரவும், “நாளைக்கு எல்லோரும் கேட்பாங்க, நான் எப்பிடி சமாளிக்கப் போறேனோ தெரியல?” என்று உதட்டைப் பிதுக்கினாள்.
“உனக்கு கஷ்டமா இருந்தா, நான் இப்பவே போய் சொல்லட்டுமா தேவி?” என்று, மறுபடியும் உள்ளே செல்ல திரும்பிய ஹர்ஷனின் கையை எட்டிப் பிடித்து தடுத்த ஜமுனா,
“என்னன்னு சொல்லுவீங்க?” என்றாள் முகம் கொள்ளா புன்னகையோடு.
“இப்பிடி… இப்பிடி… உங்க டாக்டருக்கும் எனக்கும் கல்யாணம் பிக்ஸ் பண்ணியாச்சு, கூடிய சீக்கிரமே கல்யாணம், இன்வைட் பண்ணுறேன், எல்லோரும் வந்துடுங்கன்னு சொல்லிட்டு வந்துடுறேன்” என்றான் அப்பாவியாக விழிவிரித்து.
அது ஹோட்டலா இல்லை மாளிகையா என்ற பிரம்மிப்பே ஜமுனாவின் கண்களில். அந்த அளவுக்கு உள்ளும் புறமும் பிரம்மாண்டமாக தன்னை அழகுபடுத்திக் கொண்டு நின்றது அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல்.
“சென்னைவாசின்னு தான் பேரு, ஆனா ஒருதடவைக் கூட இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் நாங்க வந்ததே கிடையாது தெரியுமா?” எந்தவித ஒளிவுமறைவுமின்றி உண்மையைச் சொன்னாள் ஜமுனா.
அவளின் இந்த குணத்தில் ஈர்க்கப்பட்டவன், “எல்லோரும் எல்லா இடத்துக்கும் போயிருக்கணும்னு அவசியம் இல்ல தேவி” என்றான்.
பேசியபடியே இருவரும் லஞ்ச் புஃபே ஏற்பாடாகியிருந்த ஹோட்டலின் மூன்றாவது தளத்திற்கு வந்து சேர்ந்திருந்தார்கள்.
சாப்பாட்டு நேரம் தொடங்கிவிட்டதால் அந்த ஹாலில் குடும்பமாக, நண்பர்களாக, இவர்களைப் போல ஜோடியாக என்று, மக்கள் நடமாட்டமும் தொடங்கிவிட்டது.
எல்லோரும் கைகளில் வைத்திருந்த தட்டில் தங்களுக்கு தேவையான உணவுகளை எடுத்துக் கொண்டு அந்த ஹாலில் கிடந்த டைனிங் டேபிளில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தார்கள்.
அங்கிருந்த உணவு வகைகளை பார்த்தே வயிறு நிறைந்து விடும் போலிருந்தது ஜமுனாவுக்கு.
ஜமுனாவோடு ஒரு டைனிங் டேபிளில் போய் அமர்ந்த ஹர்ஷன், கைபேசியை எடுத்து ஏதோ டைப் செய்ய ஆரம்பிக்க, “அப்பவே பசிக்குதுன்னு சொல்லிட்டு என்ன பண்ணுறீங்க ஹர்ஷன்?” என்றாள் ஜமுனா.
பதிலுக்கு ஒரு மயக்கும் புன்னகையே அவனிடம். டைப் செய்து முடித்து கைபேசியை பேண்ட் பாக்கெட்டில் வைத்தவன், “வா…” என்றழைத்து சூப், சாலட், சாண்ட்விச் நிறைந்திருந்த உணவு கவுண்டரின் முன் போய் நின்றான்.
கிட்டத்தட்ட ஏழெட்டு ஃபூட் கவுண்டர்கள் அங்கே இருந்தது. இந்தியன், இத்தாலியன், சைனீஸ் என்று எல்லாவகையான உணவு வகைகளும் அங்கே நிரம்பி வழிந்ததைக் கண்டவள்,
“ஷ்யாம் சரியான ஃபூடி(foodie) தெரியுமா? அவன் மட்டும் இப்போ இங்க இருந்தா நல்லா என்ஜாய் பண்ணிருப்பான்” என்றபடியே சாலட்டை சிறிய பௌலில் எடுத்துக்கொண்டாள்.
ஹர்ஷன் சிக்கன் சூப் எடுத்துக் கொள்ள, மறுபடியும் தாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் வந்தமர்ந்து கையிலிருந்ததை உண்ண ஆரம்பித்தார்கள்.
“என்னதான் சொன்னாலும் அவன் சாப்பிடுறதை குறைக்கவும் மாட்டான், அம்மா அவனுக்கு ஊட்டி ஊட்டி விடுறதை நிறுத்தவும் மாட்டாங்க.” மறுபடியும் தம்பியைப் பற்றியே சிறு புன்னகையோடு ஜமுனா பேசிக்கொண்டிருந்த நேரம்,
“ஹாய் அக்கா, ஹாய் மாமா” என்றபடி ஷ்யாம், ஷர்மிளா இருவரும் அவர்களுக்கு முன் வந்து நின்றார்கள்.
அவர்களை அங்கே கொஞ்சமும் எதிர்பார்க்காத ஜமுனா, “எப்பிடி டா?” என்று ஆச்சர்யத்தில் எழும்பியே விட்டாள்.
“மாமா கேப் அனுப்பி வரச்சொன்னாங்க க்கா.” முகமெங்கும் மத்தாப்பு சிதறலாக புன்னகை பூத்திருக்க பதில் சொன்னான் ஷ்யாம்.
“அம்மாகிட்ட சொல்லிட்டு தானே வந்தீங்க?” இயல்பாக கேட்க ஆரம்பித்தவள், “அதான் காலையிலயே அவங்ககிட்ட பெர்மிஷன் வாங்கியாச்சே” செல்லமாக அலுத்தபடி உக்கார்ந்தாள்.
“வெல்கம் டியர்ஸ்” இருவரையும் பொதுவாக வரவேற்ற ஹர்ஷன், “வாழ்த்துகள் சாம்பியன்” என்று ஷ்யாமோடு கைகுலுக்கிக் கொண்டான்.
வேறொன்றுமில்லை, கடந்தவாரம் ஷ்யாமின் போதுத்தேர்வு முடிவுகள் வந்திருந்தது. நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தான். ஃபோன் மூலம் ஹர்ஷன் ஏற்கனவே வாழ்த்தியிருந்தாலும், நேரில் காணவும் மறுபடியும் ஒரு பாராட்டு.
“தேங்ஸ் மாமா, எனக்காகவா இந்த செலிபரேஷன்?” ஆவலோடு கேட்டான் ஷ்யாம்.
“ஆமா டா.” ஹர்ஷன் சொல்ல, பொங்கி வந்த சிரிப்பை கையால் மறைத்தாள் ஜமுனா.
பின்னே, தன்னிடம் உன்னைப் பார்க்கத்தான் வந்தேன் என்று சொல்லிவிட்டு, ஷ்யாமிடம் உனக்காகத்தான் எல்லாம் என்று சொன்னால் சிரிப்பு வராதா என்ன?
அதைப் புரிந்து கொண்டவன் போல ஜமுனாவை செல்லமாக முறைத்த ஹர்ஷன், பிராண்டட் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றையும் ஷயாமுக்கு பரிசளித்தான்.
“இப்பிடியெல்லாம் சர்ப்ரைஸ் பண்ணுவீங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கல மாமா.” வாயெல்லாம் பல்லாக சொன்னான் ஷ்யாம். அவன் தோளில் லேசாக தட்டிய ஹர்ஷன்,
“போங்க… போய் என்ன வேணும்னாலும் எடுத்து சாப்பிடுங்க” என்றான் இளையவர்களிடம். ஒரு துள்ளலோடு கிளம்பினர் இருவரும்.
இவர்களும் சிக்கன் பிரியாணி, மட்டன் சுக்கா, என்று கொஞ்சம் வெரைட்டியாக எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தார்கள்.
ஷ்யாமோ, விதவிதமாக எடுத்துக் கொண்டு வந்தவன், ஒவ்வொன்றையும் ருசி பார்த்து, “க்கா, இது நல்லாயிருக்கு, சாப்பிட்டு பாரேன்” என்று ஜமுனாவோடு பகிர்ந்து உண்ண ஆரம்பித்தான்.
“நீ சாப்பிடு டா, நான் பாத்துக்கறேன்” என்று சொன்னாலும் தம்பி தருவதை சாப்பிடத் தான் செய்தாள் ஜமுனா.
ஷ்யாம் தருவதும், ஜமுனா சாப்பிடுவதுமாக, அந்த காட்சி பார்ப்பதற்கே ஒரு காவியம் போலத்தான் இருந்தது.
அதை ரசித்துக் கொண்டாலும் கூட, ‘நம்மை பெர்ஃபார்மென்ஸ் பண்ண விடமாட்டான் போலவே’ என்று ஹர்ஷனின் உள்மனது முணுமுணுக்கத்தான் செய்தது.
அது ஷர்மிளாவுக்கு கேட்டதோ என்னவோ? , “டேய், அக்காவை மாமா பாத்துப்பார் டா. நீ வா, நாம வேற ஐட்டம்ஸ் எடுத்துட்டு வரலாம்” என்று தம்பியை அங்கிருந்து அழைத்துச் சென்றாள்.
ஷர்மிளாவுக்கு மானசீகமாக நன்றி சொல்லிய ஹர்ஷன், ஷ்யாம் விட்டுச் சென்ற பணியைத் தொடங்க, இப்போதும் கண்ணுக்கினிய காட்சியே அங்கே.
“தேவி, நாளைக்கு நான் ஃபாரின் போறேன்.” தன் முன்னே இருந்த கிரில் சிக்கனை லாவகமாக பிய்த்துக்கொண்டே சொன்னான் ஹர்ஷன்.
“ஃபாரினுக்கா? எதுக்கு?” கேள்வி வேகமாக வந்தது அவனுடைய தேவியிடமிருந்து.
“இல்ல… தாத்தா சொத்துல சொகுசா இருக்குறேன்னு என்னைப் பார்த்து நீ சொல்லிடக்கூடாதுல்ல, நானும் பறந்து பறந்து வேல பாக்குறேன்னு உனக்கு காட்டத்தான் ஃபாரின் போறேன்.”
ஹர்ஷனின் வார்த்தைகளில் திக்கென்று ஆகிப்போனது ஜமுனாவுக்கு. சில வினாடிகள் யோசித்தவள்,
“ஹேய்… இது சீட்டிங், என் தம்பி வாயை பிடுங்கியிருக்கீங்க” என்றாள் கண்களை உருட்டி.
“ஹ்ம்ம்… சொன்னேன் தான், அப்போ கல்யாணம் வேண்டாம்னு சொல்ல, எனக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது. அதுவும் இல்லாம, எனக்கு இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் இருந்துருக்கும் போல. அதான் அப்பிடி சொல்லிட்டேன்” என்றாள் தன் தவறை ஒப்புக்கொடுத்து.
“அந்த எண்ணத்துல இப்போ சேன்ஜ்ஜஸ் இருக்கா?”
“ம்ம்… ஃபோன் பண்ணும் போதெல்லாம் உங்க வீரதீர பிரதாபங்களை உங்க அம்மா சொல்லச் சொல்ல கேட்டு கொஞ்சம் சேன்ஜ்ஜஸ் இருக்கத்தான் செய்யுது. மீதியை, நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் உங்களை பக்கத்துல இருந்து வாட்ச் பண்ணிட்டு சொல்லுறேன்” என்றாள் ஜமுனா.
“ஆனாலும் உங்களுக்கு குசும்பு கொஞ்சம் அதிகம் தான் டாக்டரே” சிரித்தான் ஹர்ஷன்.
உண்மையில், வேண்டுமென்றே ஷ்யாம் எதையும் சொல்லவும் இல்லை. ஹர்ஷனும் எதையும் தூண்டித் துருவவும் இல்லை.
தன்னை வாழ்த்துவதற்காக ஃபோன் செய்து பேசிய ஹர்ஷனிடம், அக்காவின் வருங்காலக் கணவர் என்ற முறையில் பேசிக்கொண்டிருந்த ஷ்யாம், இயல்பாக அக்கா பேசியதை சொல்லிவிட்டான்.
ஷ்யாமின் வாயிலிருந்து இயல்பாக வந்தது அவனது அக்கா பேசிய வார்த்தைகள் மட்டுமல்ல…
ஹர்ஷனின் சென்னை வருகையும், இவர்களுக்கானது மட்டும் இல்லை…