உத்ராவை சென்னையில் செட்டில் செய்து விட்டு, அவளின் குடும்பம் ஊருக்குத் திரும்பி இருந்தனர். இவர்கள் சென்னை வந்தது வெள்ளிக்கிழமை. அன்றைக்கு நல்ல நாள் என்பதால் அன்றே வீடு பால் காய்ச்சி விடும்படி சுந்தரம் சொல்லியிருக்க , அவரின் பேச்சிற்கு மறுப்பு என்பதே கிடையாதே. வசுமதி மட்டுமே அவ்வப்போது குரல் கொடுப்பார். அதுவும் கூட எல்லா விஷயத்திற்கும் கிடையாது. அவரின் மகன், மருமகள் விஷயத்திற்கு மட்டுமே குரல் உயரும். மற்றபடி சுந்தரத்தின் வார்த்தையை மீற மாட்டார்.
ஒருநாள் மட்டும் உத்ராவோடு இருந்து விட்டு, மறுநாள் இரவு கிளம்பி விட்டனர். சுந்தரம் தனியாக இருப்பார் என்பதோடு , இவர்கள் இருந்தால் அவளோடு தங்கும் பெண்ணிடம் உத்ராவால் சரியாகப் பழக முடியாது.
ஞாயிறு ஒருநாள் தான் அந்த பெண்ணிற்கும் விடுமுறை என்பதால், வெளியில் செல்ல வேண்டி இருக்கும். ஓய்வு எடுக்க வேண்டி இருக்கும். அவளுக்குத் தொந்தரவாக இருக்க வேண்டாம் என கிளம்பி விட்டனர்.
உத்ராவோடு தங்கி இருக்கும் பெண்ணின் பெயர் அகிலா. அவளும் தென் தமிழகப் பகுதியைச் சேர்ந்தவளே. சி.ஏ படிப்பிற்காக சென்னை வந்து தங்கி இருக்கிறாள். இத்தனை நாள் விடுதியில் தங்கி இருந்தவள், சென்ற வாரம் அவள் அலுவலக மேலாளர் இப்படித் தங்க விருப்பமா எனக் கேட்க, அகிலாவும் சம்மதித்து விட்டாள்.
விடுதி அவளுக்குச் சரிப்படவில்லை. ஒன்று அலுவலகத்தில் இருந்து தூரம். மற்றது கூடத் தங்கியிருந்தவளுக்கு இவள் படிப்பது தொந்தரவாக இருக்க , எரிந்து விழுந்துக் கொண்டிருந்தாள்.
வாடகை என்று அகிலா இழுக்க, தனக்கு மிகவும் வேண்டிய குடும்பத்தினரின் பெண் என்பதால் பாதுகாப்பு மற்றும் நல்ல துணையாக இருப்பது தான் அவசியம். விடுதிக்குக் கொடுக்கும் அமெளண்ட்டே கொடுக்குமாறும், மற்றதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றும் அவர் கூறவே , சந்தோஷமாக சம்மதித்தாள்.
வெள்ளிக்கிழமை பால் காய்ச்சும் போது வந்து பெரியவர்களிடமும், உத்ராவிடமும் அறிமுகம் செய்து கொண்ட பின் அலுவலகம் கிளம்பி விட்டாள். சனிக் கிழமை மதியத்திற்கு மேல் விடுதியைக் காலி செய்துக் கொண்டு வருவதாகக் கூறினாள்.
உத்ராவின் வீட்டினரும் எளிமையாய் சமைத்துக் கொள்ளும்படி சில பொருட்கள், உத்ராவிற்கு தேவையான சில உடைகள் எல்லாம் கடைக்குச் சென்று வாங்கி வந்தனர். அருகிலேயே நல்ல மெஸ் பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினர். அவசரம் , நேரம் ஆகி விட்டது என்றால் பயன்படுமே என்றனர்.
மறுநாள் மாலை அகிலா வரவும், அவளிடமும் , உத்ராவிடமும் ஆயிரம் பத்திரம் கூறிவிட்டுக் கிளம்பினர். அவர்களை வழி அனுப்பியதும், பிறந்ததில் இருந்து அறியாத தனிமையை உணர்ந்த உத்ராவிற்கு அழுகை வந்தது.
தன்னைச் சமாளித்துக் கொள்ள எண்ணி, தன் அறைக்குச் சென்று விட்டாள். அகிலாவும் உத்ராவை உணர்ந்தவளாகத் தனியே விட்டாள். அவளும் இதை எல்லாம் அனுபவித்தவள் தானே. (victory.org)
மறுநாள் காலை அகிலா எழுந்து வரும்போதே உத்ரா குளித்து சமையல் அறையில் இருந்த சிறு பூஜை அலமாரியின் முன் நின்று ஏதோ ஸ்லோகம் சொல்லிக் கொண்டிருந்தாள். அகிலாவைக் கண்டு சிறு முறுவல் செய்தாள்
“மார்னிங் அகிலா. எப்போதும் எழுந்திருக்கிற டைம் தான். “என்றவள்,
“காபி சாப்பிடுவேளா?” எனக் கேட்டாள்,
“ஐயயே. என்னை மரியாதையா எல்லாம் கூப்பிடாதீங்க. என்னவோ ஆன்ட்டி பீல் வருது” என்றாள் அகிலா
“ஹலோ. உங்க வயசு என்ன மேடம்?”
“யா. ஜஸ்ட் டுவென்டி ஃபைவ் கம்ப்ளீடட் “என,
“எனக்கு இப்போ தான் டுவென்டி ஃபைவ் ஆரம்பிக்கிறது” என்றாள்.
“வாட். அப்போ என்னை விட சின்னப் பொண்ணா நீ? அதுக்காக நோ அக்கா? ஓகே வா ” என ஆர்ப்பரித்தாள்.
அகிலாவின் கல கலப் பேச்சில் வெகு நாட்களுக்குப் பின் நன்றாகச் சிரித்தாள் உத்ரா .
“உனக்குக் கல்யாணம் ஆகி எத்தனை நாள் ஆச்சு?” என அகிலா கேட்க, உத்ரா முகம் மாறியது.
“பிளீஸ். அதைப் பற்றி பேச வேண்டாமே?” என்றாள்.
உத்ராவின் மாற்றத்தைப் பார்த்த அகிலா
“இட்ஸ் ஓகே. நம்ம வேறே பேசலாம்.” என்றவள், காபி கேட்டு வாங்கிக் குடித்தாள்.
“டேஸ்டி. அம்மா கையால சாப்பிட்ட மாதிரி இருக்கு, இத்தனை நாள் ஹாஸ்டலில் ஒரு வெந்நீரக் குடிச்சேன். “ என்றாள்.
“நீங்க எந்த ஊர் ? அம்மா அப்பா பற்றி எல்லாம் நான் தெரிஞ்சிக்கலாமா ?” என உத்ரா கேட்க,
“அது சிதம்பர ரகசியமா என்ன? அப்பா திருநெல்வேலி பக்கத்தில் ஊர். அங்கேயே அப்பளம் , வடாம் , ஊறுகாய்ன்னு போட்டு சின்னதா கடை வைச்சு வியாபாரம் பண்ணின்டு இருக்கார். பெரிசா வருமானம் கிடையாது. எனக்கு ஒரு தம்பி இருக்கான். இப்போ பிளஸ் டூ படிக்கிறான். மேற்கொண்டு டாக்டர் ஆகணும்ன்னு ஆசை. நீட் எல்லாம் ஆன்லைன் கோச்சிங்லே படிக்கிறான். நான் ஆடிட்டர் ஆகணும்னு ஆசையில் ரெண்டு வாட்டி இன்டர் அங்கேயே எழுதினேன். வேலைக்கு ஆகலை. இப்போ இங்கே வந்து படிக்கலாம்ன்னு வந்துட்டேன். பி.காம் முடிச்சு இருக்கிறதால் ஆர்டிகில்ஷிப் பார்த்துட்டே இன்டர் எழுதலாம்ன்னு யோசனை”
“ஓ. உங்க அப்பா சம்பாத்தியம் இது எல்லாத்துக்கும் காணுமா? தப்பா எடுத்துக்காத. “ எனக் கேட்டாள் உத்ரா.
“இதில் என்ன இருக்கு? கொஞ்சம் கஷ்டம் தான். ஸ்டில் எனக்கு நான் பார்த்துட்டா அவாளுக்கு அங்கே போதும்” என்றாள்.
“இட்ஸ் ஓகே. அப்போ என்ன ஹெல்ப்னாலும் என்கிட்ட கேளு. அதுக்காக உன்னோட ஷேர் வேணாம், நானே பார்த்துக்கறேன் அப்படின்னு எல்லாம் சொல்ல மாட்டேன். அது உனக்குக் கஷ்டமா இருக்கும். முக்கியச் செலவு இருந்தா அதை முடிச்சிட்டு இதைக் கொடு போறும். முக்கியமா படிப்பு சம்பந்தமா உள்ளதை முதலில் பாரு. அப்புறம் வீட்டு செலவு பார்த்துக்கலாம் சரியா” என்றாள் உத்ரா.
அகிலா திகைத்துத் தான் போனாள். உத்ராவின் குடும்பத்தினரைப் பார்த்த போது பணக்காரர்களாகத் தெரியவில்லை தான். ஆனால் உத்ராவின் சம்பாத்தியம் அவசியம் என்ற நிலையில் அவர்கள் இல்லை என்று தோன்றியது. உத்ராவின் வசதி , பாதுகாப்பு மட்டுமே முக்கியம் என்ற உணர்வே அவர்களின் பேச்சில் தெரிந்தது. அதைக் கொண்டு அவளை டாட்ஸ் லிட்டில் பிரின்சஸ், குழந்தைத்தனமான பேச்சுக்கள் இருக்கும் என்று நினைத்து இருந்தாள்.
ஆனால் உத்ரா மிக இயல்பாக அதே சமயம் அகிலா காயப்படும் படியான வார்த்தைகள் வராமல் தெளிவாகப் பேசினாள்.
தன்னை விடச் சிறியவள் என்றாலும் நல்ல மெச்சூரிட்டி இருக்கிறது என்று எண்ணிக் கொண்டாள் அகிலா. சிறு நன்றியோடு உத்ராவின் கைகளைப் பிடித்துக் கொண்ட அகிலாவிற்கு சிறிது நேரம் பேச்சு வரவில்லை .
பின் “உத்ரா, நான் குளிச்சுட்டு வரேன். “ என,
“சரி, நீ கார்த்தால டிபன் சாப்பிடுவியா? இல்லை டைரக்ட்டா லஞ்ச் சாப்பிடலாமா?” எனக் கேட்டாள் உத்ரா.
“எனக்கு எதுவானாலும் ஓகே தான். இன்னிக்கு டைரக்ட்டா லஞ்ச் சாப்பிடலாம். மற்ற நாள் எப்படி போறதோ அப்படி சமாளிச்சிக்கலாம். அதோட நீ உடனே ஆரம்பிக்காத. நானும் வந்துடறேன்.” என்றாள் அகிலா.
“சரி.” எனக் கூறி அனுப்பி வைத்தாலும், உத்ராவின் கைகள் தன் பாட்டிற்கு தேவையான காய்கறிகளை எடுத்து வைத்து நறுக்க ஆரம்பித்தாள் .
இவர்கள் அபார்ட்மெண்டு ஃபுல் ஃபர்னீச்சர்டு வகைதான். கேஸ், ஃபிரிஜ், ஏசி சோபா என எல்லாவிதமான வசதிகளும் கொண்ட அபார்ட்மெண்ட். அதனால் முதல் நாளே உத்ராவின் குடும்பத்தினர் காய்கறிகள், பால், தயிர் என எல்லாமே வாங்கி வைத்து விட்டுத் தான் சென்றனர்.
மதியம் எளிதாக ஒரு சாம்பார் சாதம் , உருளைக் கிழங்கு , தயிர் சாதம் என்று செய்தவர்கள், முதல் நாள் என்பதால் அக்காரவடிசல் செய்தாள் உத்ரா.
சிறு குரலில் இருவருமே பேசிக் கொண்டே செய்து இருக்க , நேரம் போனதே தெரியவில்லை.
சாப்பிடும்போது “வாவ். பாயாசம் ரொம்ப நல்லா பண்ணிருக்க உத்ரா. உன் அம்மாக்கிட்டே கத்துக்கிட்டியா?” எனக் கேட்டாள்.
“இது பாயாசம் இல்லை அகிலா. அக்காரடிசல். பச்சரிசி , பயத்தம் பருப்பில் பண்ணினது. என் மாமியார் தான் சொல்லிக் கொடுத்தா.” என்றாள்.
“பயத்தம் பருப்பா ? அப்படின்னா ?”
“ஹா. ஏன் உனக்குத் தெரியாதா?” என்றபடி பருப்பு டப்பாக்களில் ஒன்றில் இருந்து எடுத்துக் காட்டினாள் உத்ரா.
“ஓ. இது எங்க பக்கம் பாசிப் பருப்பு அல்லது சிறு பருப்புன்னு சொல்லுவோம். நமக்கு இனிப்பா இருந்தாப் போதும். பேரா முக்கியம் “ என அகிலாகூற, உத்ரா சிரித்தாள்.
பின் மாலையில் அவர்கள் அபார்ட்மெண்ட் வாட்ச்மேனிடம் கேட்டு அருகில் இருந்த கோவிலுக்குச் சென்று வந்தனர். அங்கிருந்து சூப்பர் மார்க்கெட் சென்று அகிலா தனக்குத் தேவையான சில பொருட்கள் வாங்கிக் கொண்ட பின் வீடு திரும்பினர்.
இரவு உணவு செய்து சாப்பிட்டு வந்த பின், அகிலா டிவி போட, உத்ராவும் அவள் அருகில் அமர்ந்தாள்.
அப்போது நடிகர் அபிமன்யு நடித்தப் பாடல் ஒலிபரப்பாக அகிலா ஆராவாரம் செய்தாள்.
உத்ரா அவளை ஒரப் பார்வையால் பார்க்க, அகிலாவோ கண்டுகொள்ளவே இல்லை. பாடல் முடிந்த பின்பே உத்ராவின் புறம் திரும்பினாள்.
“அபி செம சார்மிங் இல்ல” எனக் கேட்க, உத்ரா பதில் எதுவும் சொல்லவில்லை.
“ஏன் உனக்கு அபி பிடிக்காதா?” என அகிலா மீண்டும் கேட்க, அதற்கும் பதில் கூறவில்லை.
சற்று பொறுத்து “நான் டிவி பார்க்க மாட்டேன் அகிலா” என உத்ரா கூற,
“மூணு எழுத்து வார்த்தை. இது உனக்கு நீளமாஆஆ இருக்கா?”
“முழு பேர் சொன்னா ஒரு குளோஸ் பீலே கொடுக்க மாட்டேங்குது “ என அகிலா கூற,
“அது சரி. எப்படி வேணா கூப்பிடு. அதுக்காக ஐந்தறிவு ஜீவ ராசி பேர் எல்லாம் சொல்லிக் கூப்பிடாத. “ என்றாள் உத்ரா.
“சரி சரி. உதி. உன் பொழுதுபோக்கு என்ன? “
“மோஸ்ட்லி டைம் இருக்காது. அப்படி டைம் கிடைச்சா, புக்ஸ் படிப்பேன்”
“என்ன மாதிரி புக்ஸ்? “காதல் வைபோகமே.. காணும் நன்னாளிலே அந்த மாதிரியா? “
“அட ராமா . அது எல்லாம் இல்லை. சும்மா மேகஸின்ஸ். ஃப்ரீ டைம்லே நீ என்ன பண்ணுவ? புக்ஸ் படிப்பியா?” என உத்ரா கேட்க,
“படிக்கிறதா? அதுலர்ந்து வெளிலே வர்றதுக்கு தான் ஹாபின்னு ஒண்ணு இருக்கு. அதில் திருப்பி படிப்பியா ? நான் எல்லாம் டிவி தான். “
“அப்போ சீரியலா ?”
“ஐயோ அது படிப்பை விட கொடுமை. ஏதாவது சினிமா பார்ப்பேன். அதை விட பாட்டு கேட்பேன். “
“ஓ அதான் இப்போ அந்த பாட்டிலே ஐக்கியமாகிட்டியா?”
“ஹ ஹ. அது பாட்டும் பிடிக்கும். அதை விட நம்ம அபிய ரொம்ப பிடிக்கும்.”
“ஓ” என்ற உத்ரா, வேறு எதுவும் சொல்லவில்லை. அகிலாவோ மேலும் மேலும் அபி பற்றியே பேச, உத்ராவிற்கு எப்போது முடிப்பாள் என இருந்தது.
ஒரு கட்டத்தில் உத்ரா அகிலாவிடம் அலுவலகம் செல்வது எப்படி எனக் கேட்டாள். இருவரும் அதைப் பற்றி கலந்து ஆலோசித்து, அதன்படி ஷேர் ஆட்டோவில் செல்வதாக முடிவு செய்தனர்.
பின் இருவரும் உறங்க சென்றனர். உத்ராவின் மனதில் அகிலாவோடு பேசியததே மனதில் ஓடியது. உத்ரா டிவி பார்ப்பதில்லையா என்ற கேள்விக்கு தன் பதில் பற்றி எண்ணியவளுக்கு, முன்னொரு காலத்தில், குறிப்பாக திருமணத்திற்கு முன் லீவுநாள் என்றால் டிவியில் தான் அமர்வாள். முக்கியமாகப் பண்டிகை நாள் நிகழ்ச்சிகள் எதையும் விட மாட்டாள்.
ஆனால் திருமணம் முடிந்த பிறகு பொதுவாக உத்ரா டிவி பார்ப்பதில்லை. நேரம் இருக்கவில்லை என்பதோடு, அவள் மாமனாருக்குப் பிடிக்காது என்பதும் ஒரு காரணம்.
உத்ராவின் மாமியார் வசுமதி மட்டும் அவ்வப்போது டிவி போட்டுக் கொண்டு அமர்வார். அவர் அப்படி போடும் நேரம் எல்லாம் எதை மறக்க வேண்டும் என்று இவள் முயற்சி செய்வாளோ , அதை மீண்டும் நினைவுப் படுத்துவதாக இருக்கும். அப்படி நடந்தது தான் அபிமன்யு வாங்கிய அவார்ட் பார்த்து மாமியார் அங்கலாய்த்ததும், அதற்கு அவளின் பதிலும்.
அவள் மாமியார் வேண்டும் என செய்கிறாரோ என்றும் கூட உத்ரா நினைப்பதுண்டு. ஆனால் அது தற்செயலாக நடப்பது போலவும் தோன்றும். இதை எல்லாம் எண்ணியபடி உறங்கினாள்.
மறுநாள் இருவரும் பேசியபடி அலுவலகம் சென்றனர். முதலில் அவர்கள் மேனேஜரிடம் ஏற்கனவே ஃபோன் மூலம் அறிமுகம் செய்து கொண்டிருந்தாலும், நேரிலும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். அவர் அலுவலகம் பற்றி மேலோட்டமாக சொல்லி விட்டுத் தங்கள் முதலாளியிடம் வீடியோ கால் மூலம் இன்ட்ரொடியூஸ் பண்ணுவதாகக் கூற, சரி என்றாள்.
அடுத்த பத்து நிமிடத்தில் , “அவங்க பேர் மிஸஸ் உத்ரா சர்” என்றபடி தன் போனை மணிவண்ணன் உத்ராவிடம் கொடுத்தார். உத்ராவும் “வணக்கம் சர்” என்று தன்னை பற்றி சொன்னபடி மொபைல் பார்த்தவள் திகைத்து நின்றாள்.
தன் அன்னையிடம் போனில் பேசி அபிமன்யு உத்ரா சென்னை வந்தது பற்றிய விவரம் வாங்கி இருந்தாலும், தன் அலுவலகத்திலேயே சேர்ந்து இருப்பாள் என்று எண்ணியிருக்கவில்லை. ஆனந்த அதிர்ச்சியில் போனைப் பார்த்துக் கொண்டிருந்த அபிமன்யு அவள் தன்னை அறிமுகப்படுத்தியதும், தன்னையும் அறியாமல் வாயசைவில் கூறிய “மிஸஸ் உத்ரா அபிமன்யு” என்றதைக் கேட்டு பதில் கூறாமல் திகைத்து நின்றாள் உத்ரா .