அவன் வீட்டினரை பார்த்து “இங்க பாருங்க நீங்க பொண்ணு பாக்க வரதோ, அதுவும் என்னைப் பாக்க வரதோ எனக்கு தெரியாது”.
“இதுல எனக்கு விருப்பமும் இல்ல” என்றவள் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டாள்.
அங்கேயே சிறிது நேரம் நின்றவர்கள் ஒன்றும் பேசாமல் படி இறங்க, கிஷோர் அருணாவை பார்த்து நின்றான் , அவனும் வெளியேற.
அருணாவின் “அம்மா” என்ற அலறல் அவன் செவிகளை தீண்டியது.
அருண் விட்ட அறையில் மூலையில் போய் விழுந்திருந்தாள் , “என்ன நெஞ்சழுத்தம் உனக்கு , நீங்களே எல்லாம் முடிவு பன்னிப்பீங்களோ, அப்படி பண்றவ உன் வாழக்கையை பத்தி மட்டும் முடிவெடுத்து போக வேண்டியது தானே”.
“எங்களுக்கு காசு மிச்சம் எவ்ளோ சுயநலம் டி உனக்கு” என்றவனுக்கு ஆத்திரம் அடங்கவே இல்லை.
நேரே தந்தையிடம் வந்தவன் “நீங்களாம் ஒரு மனுஷனா வெக்கமா இல்ல, காசு இல்லனு பொண்ண இப்படி தள்ள பாக்குறீங்க உங்களால கல்யாணம் செஞ்சு வைக்க முடியாதுனு எங்களுக்கே தெரியும்”.
“உங்கள நாங்க எதுக்கும் எதிர்ப்பார்கல அப்புறம் என்ன அதிகாரத்தில இத பண்ணீங்க” என்க.
அவர் ஒன்றுமே பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்.
அவரை அப்படி பார்க்க பார்க்க அவனுக்கு வெறி ஏறியது , கையில் கிடைத்த அனைத்தையும் எடுத்து வீசி அடித்தவன் தோட்டத்தில் சென்று அமர்ந்துவிட்டான் .
கொற்றவை எங்கு சென்றாள் என்று தெரியவில்லை, எப்பொழுதும் பெருமாள் கோவிலின் வெளியிடம் தான் அவளின் தியானத்தின் இடம்.
தன் சைக்கிள் எடுத்தவன் அங்கு சென்று பார்க்க அங்கு தான் அமர்ந்திருந்தாள் அவனும் ஒரு ஓரமாக அமர்ந்துவிட்டான்.
அவளிடம் எதுவும் பேசவில்லை வெகு நேரம் கழித்து “குட்டி” என்ற அழைப்பில் அவள் புறம் திரும்பினான்.
“நான் ஏதாவது ஹாஸ்டல்ல போய் தங்கிக்கவா , என்னால இவங்களோட போராட முடியல , என் தைரியம் எல்லாம் எங்கயோ காணாம போன மாதிரி இருக்கு”.
“அக்கா நீ போ , உனக்கு எங்க நிம்மதியோ அங்க போ , உன் சம்பாத்தியம் அத நீ யாருக்கும் குடுக்காத”.
“பென்ஷன் பணம் இருக்கு அத வெச்சு சமாளிக்கட்டும் , நானும் வேல பாக்குறேனே , இப்போ அது போதும் எப்படியும் கொஞ்ச மாசத்துல நல்ல வேலைக்கு போய்டுவேன் அப்பறம் நா பாத்துக்குறேன் நீ போய்டு” என்றான்.
சில நாட்களாகவே இதைப் பற்றி யோசிக்கிறாள் இவர்களை விட்டு தள்ளி சென்று விட வேண்டும் என்று.
“இவ எதுக்கு டா இப்படி பண்ணா , இதுல லவ் வேற பண்றா ஆனா நா எப்படி கேள்வி கேக்க, நானும் தானே பண்றேன்” என்க.
“நீ பண்றதும் அவளுதும் ஒண்ணா , உன்னோடத லவ்வுன்னு சொல்லாத, இன்னும் அந்த பக்கம் இருந்து சிக்னல் வரல , நான் பேசிப் பார்க்கவா அவர்கிட்ட” என்க.
“என்ன பிச்சை கேக்கப் போறியா , எனக்கு யாரும் வேண்டாம் அவர் கொள்கை அத அவர் கெட்டியா பிடிச்சுட்டு இருக்கட்டும் , காதலும் வேண்டாம் கல்யாணமும் வேண்டாம்” என்றவள் முகத்தில் வருத்தத்தை மிஞ்சிய கோவம்.
அப்படி எளிதாக அவனை தூக்கி எறிந்துவிட முடியுமா அவளால் , அது முடியாமல் தானே சுமந்து கொண்டு நடக்கிறாள் , அவனோடு ஒரு வாழ்வு வேண்டும் ஆனால் இனியும் அதற்காக அவனின் முன் சென்று நிற்க அவள் தயாரில்லை .
அனைத்தில் இருந்தும் சில நாட்கள் விலகி இருக்க முடிவு செய்துவிட்டாள்.
குட்டி வீட்டுக்கு போலாம் அவகிட்ட சிலது கேக்கணும் என்க இருவரும் வீட்டிற்கு சென்றனர்.
ராதாவும் அருணாவும் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
உள் சென்று இருவருக்கு மட்டும் டீ வைத்தவள் , அருணிடம் ஒன்று கொடுத்து விட்டு அவளும் அவன் அருகில் அமர்ந்துவிட்டாள்
தயங்கி தயங்கி அவளை நெருங்கிய ராதா “அம்மாடி” என்க.
“அப்படி கூப்பிடாதீங்க , உங்கள என்ன சொல்றதுன்னே எனக்கு தெரியல”.
“இவரு என்ன மனுஷன்னு இவரை நம்பி இத்தனை புள்ளைங்கள வேற பெத்துக்கிட்டிங்க”.
“பாட்டி உங்க அம்மா தானே , முதுகு வளைஞ்சு நடக்க முடியாத அப்போவும், தாத்தா இல்லாம இருவத்தஞ்சு வர்ஷம் தனியா சுய சம்பாத்தியத்துல வாழ்ந்தவங்க”.
“அவங்களுக்கு இப்படி ஒரு பொண்ணு , உங்ககிட்ட பேச ஒன்னும் இல்ல , ஏய் இங்க வா” என்றாள் அருணாவிடம்.
“எப்படி தெரியும்” என்று எந்த முகவுரையும் இன்றி கேட்டாள்.
“சினிமா தியேட்டர்ல பாத்தேன்” என்க.
“எப்போ??” , “ஆறு மாசம் முன்னாடி”.
“நீ சினிமாக்கு போனது யாருக்கு தெரியும் வீட்ல”.
“யாருக்கும் தெரியாது” .
“காசு?”.
“பொய் சொல்லி வாங்கினேன் அம்மாகிட்ட” சிறிது நேரம் அமைதியாக இருந்தவள்.
“ஒஹ்ஹ அதனால உங்களுக்கு அவர் மேல காதல் வந்துடுச்சு , ஹ்ம்ம்… சரி என்ன வேலைப் பார்குறார்”.
“காலேஜ் அட்மின்ல ஒர்க் பண்றார்”.
“சூப்பர் , இதுல என்ன எதுக்கு கோர்த்து விட்டன்னு நா தெரிஞ்சுக்கலாமா” என்க.
“அவங்க அண்ணன் லைப் பத்தி சொன்னாங்க , உங்களுக்கும் இவ்ளோ வயசு ஆகி கல்யாணம் ஆகல” என்று முடிக்கும் முன் மீண்டும் கன்னம் எரிந்தது .
“என்ன.. என்ன வயசு இந்த மாதிரி ஒரு குடும்பம் இருந்தா போதும், பொண்ணுங்க வாழ்க்க நாசமா போக” என்று அருண் சத்தமிட்டு கொண்டு இருக்க.
இவள் அவளுடைய அறைக்கு சென்று விட்டாள் , அந்த வார்த்தையிலே நின்று விட்டாள்.
“இத்தனை வயசு ஆகியும் கல்யாணம் ஆகல” , ஆம் இருபத்தியெட்டு நிறைவடைய போகிறது , இன்னும் ஒரு வாரத்தில் இருபத்தி ஒன்பது.
கண்ணாடியில் தன்னை பார்த்துக்கொண்டாள் , சத்தியம் செய்தால் கூட யாரும் நம்ப மாட்டார்கள் இத்தனை வயது என்று , வயதை அறிந்தவர்கள் பலமுறை கூறி இருக்கிறார்கள் “உன்னப் பாத்தா யாருமே வயசு சொல்ல முடியாது சின்ன பொண்ணு மாதிரி தான் இருக்க” என்று.
வயது தெரியவில்லை என்றால் அவளுக்கென்று கனவுகள் இல்லையா, அந்த வயதிற்க்கான தேடல் இல்லையா , நெஞ்சம் முட்ட அவன் மீது காதலை சுமந்து நான்கு வருடமாக காத்திருக்கிறாளே.
அவன் அனைப்பையும் முத்தத்தையும் கனவு கண்டதில்லையா, உணர்ச்சிகள் அற்ற மரமா என்ன.
இளமைக் கனவுகளை இறக்கி வைக்க யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ள முடியுமா.