தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு யாரேனும் கஸ்டமராக இருப்பார்கள் என்று எண்ணி அதை எடுத்தவன் “ஹலோ” என்க “மிஸ்டர் இன்பநிலவன்” என்றது ஒரு பெண் குரல்.
கொஞ்சம் பழகிய குரல் போல ஆனால் தெரியவில்லை “எஸ்” என்க .
“நான் **** ஸ்கூல் சேர்மன் கிருஷ்ணமூர்த்தி சார் பி.எ கொற்றவை பேசுறேன்” என்க ஒரு நிமிடம் அவனிற்கு ஒன்றுமே புரியவில்லை.
நிச்சயம் அவள் அழைப்பை எதிர் பார்க்கவில்லை அதுவும் இப்படி, யாரோ போல.. “நீ அவளுக்கு யாரோ தானே அப்படித்தானே அவளிடம் இத்தனை நாட்கள் நடந்து கொண்டாய் இப்போது மட்டும் என்ன” என்றது மனச்சாட்சி.
சிறிது நேரம் யோசித்தவன் “சரி எப்போ வரணும்” என்றான்.
“சார்.. இன்னைக்கு ஈவினிங் நாலு மணிக்கு திரும்ப வருவார் , முடிஞ்சா அப்போ வாங்க இல்லனா உங்களுக்கு எப்போ முடியும் சொல்லுங்க நான் சார்கிட்ட பேசுறேன்” என்றாள்.
மூன்று தினங்கள் ஆகிறது அவளை பார்த்து இந்த பக்கம் அவள் வருவதில்லை , அவனும் காலை மாலை எதிர்பார்த்தான்.
நேற்று மாலை கண்டுபிடித்தான் அவள் சுற்றிக் கொண்டு செல்வதை தன்னை தவிர்க்கிறாள் என்று புரிந்தது , அந்த யோசனையில் இருக்க இன்று அவளின் அழைப்பு.
“இல்ல நான் இன்னைக்கே வரேன்” என்றான்.
“தேங்க்யூ” என்றவள் அழைப்பை துண்டித்து விட்டாள்.
அவள் அலைப்பேசி எண்ணை எந்த பெயரில் சேமித்து வைக்க என்ற யோசனையில் நின்றவன் , அதை அப்படியே கிடப்பில் போட்டு அவன் வேலையை பார்க்க சென்றான்.
மாலை கண்ணாடி முன்பு நின்று தன்னை பார்த்துக் கொண்டிருந்தான் அவளிற்கு பிடித்த கருநீல ஷர்ட் கருப்பு ஜீன்.
“ஏன் வேறு வழியில் செல்கிறாள்” என்ற சிந்தனை தான் நேற்று மாலையில் இருந்து.
நேராக ஸ்கூல் சென்று நின்றான் கேட் கீப்பர் அவனிடம் விவரங்களை கேட்டுவிட்டு ஆபீஸ் ரூமிற்க்கு அழைக்க , முன்பே கொற்றவை சொல்லி வைத்திருந்ததால் அவனை அனுப்ப சொன்னார்கள்.
உள்ளே வந்து பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தியவன் ஆபீஸ் ரூம் செல்ல அவனை அங்கே அமர வைத்தவர்கள் அவளுக்கு தகவல் சொல்ல சிறிது நேரத்திலே அங்கு வந்தாள்.
உடன் வேறு ஒரு நபரும் “வாங்க” என்றவள் அவனை பார்க்காமல் தன்னுடன் நின்றவரை பார்த்து “ரமேஷ் , இவர் மிஸ்டர் இன்பநிலவன் நம்ம கார்டன் ஒர்க் சம்பந்தமா வந்திருக்காங்க , நீங்க கூட்டிட்டு போய் காட்டுங்க முடிஞ்சதும் சார் ரூமுக்கு கூட்டிட்டு வாங்க” என்றவள்.
“இவர் உங்க கூட வருவார் பாத்து முடிச்சுட்டு வாங்க” எண்று விடைபெற.
அவர்கள் இருவரும் கை குலுக்கி அறிமுகம் ஆனார்கள், ரமேஷுடன் நடந்தவன் தலை தானாகவே திரும்பி அவளை பார்க்க ஏதோ தீவிரமாக ரிஸ்ப்ஷன் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
சென்றவன் பார்த்து முடித்து திரும்ப வந்தவுடன் சேர்மேன் அறையில் இருந்து வெளியில் வந்தவள் “வாங்க” என்று உள்ளே அழைத்து சென்று சேர்மேனுக்கு அறிமுகப்படுத்தி வைக்க .
அவருடன் கைகுலுக்கி அமர்ந்தவன் , அவர்கள் என்ன எதிர் பார்க்கிறார்கள் எப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று தன்னுடைய ஐடியா அனைத்தையும் சொன்னான்.
அவருக்கு திருப்தி “கொற்றவை சொன்ன கரெக்ட்டா இருக்கும் , எனக்கு ஒகே” என்றவர்.
“எஸ்டிமேஷன் எவ்வளவு” என்பதை கேட்டு தெரிந்து கொண்டு ஒப்புதல் அளித்தார்.
“இன்னும் இரு தினங்களில் வேலை தொடங்கிவிடுவேன்” என்று அவன் கூற “நல்லது எதுவா இருந்தாலும் கொற்றவையை கேளுங்க, இங்க எல்லாம் அவங்களுக்கு தெரியும்” என்றவர்.
வெளியில் சென்றவனுக்கு அவளுடன் பேச வேண்டும் என்ற எண்ணம் இப்பொழுது இன்னும் ஆழமாக , ஆனால் அவள் வரவில்லை. வண்டியின் அருகில் கொஞ்ச நேரம் நின்றவன் வெளியேற , அவன் நிற்பதை கேமிராவில் பார்த்திருந்தவள் அவன் வெளியேறியப் பிறகு தன்னுடைய வண்டியை எடுத்துக் கொண்டு வேறு வழியில் சென்றாள்.
அனைவர் மீதும் ஒரு கோவம் ஆற்றாமை , தன்னுடைய உணர்வுகளை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்ற ஏமாற்றம்.
தனக்கு அவன் மீது விருப்பம் இருப்பதை போல அவனுக்கு வேறு யாரையேனும் பிடித்திருக்கலாம் , இல்லையேல் அவனிற்கு தான் பொருத்தம் இல்லை என்று நினைக்கலாம்.
அதற்க்கு மதிப்பு கொடுக்க வேண்டும் யாசகமாக பெற விரும்பவில்லை அன்பை , யாரும் வேண்டாம் இப்படியே இருந்து கொள்கிறேன் என்று முடிவு செய்து கொண்டாள்.
இரு தினங்களில் அவனின் அசிஸ்டன்ட் மற்றும் வேலை ஆட்க்களுடன் வந்துவிட்டான் , அவளை தேடிய விழிகளை அடக்க முடியவில்லை.
இவர்கள் வந்த சிறிது நேரத்தில் ரமேஷ் வந்து சேர்ந்து கொண்டான், முதலில் அங்கு இருந்த அனைத்தையும் எடுத்துவிட்டு சுத்தம் செய்யும் பணி தொடங்கியது.
அவர்களுக்கு உத்தரவுகளை கொடுத்தவன் மாலை வருவதாக சொல்லி சென்றுவிட , அவன் சென்ற பிறகே அவள் வந்தாள்.
வேலை நடப்பதை பார்த்தவள் அவனின் அசிஸ்டென்டிடம் பேசிவிட்டு அவர்களின் உணவு மற்றும் தண்ணீர் தேவைகளை கவனிக்க ரமேஷிடம் சொல்லி சென்றாள்.
மாலை வந்தவரிடம் பேச்சுவாக்கில் ரமேஷ் கொற்றவை வந்து பார்த்துவிட்டு தங்களின் தேவைகளை கேட்டறிந்து சென்றதை கூற , ஏன் என்றே அறியாமல் ஒரு சிறு கோபம் முளை விட தொடங்கியது இன்பனுக்கு.
நான் இருக்கும்போது வேண்டும் என்றே வராமல் இருக்கிறாள், உரிமையுணர்வும் பொறாமையும் தலை தூக்க தொடங்கியது.
இதை அறியாதவள் அவனை தவிர்த்து மற்றவரிடம் பேசிக்கொண்டிருந்தாள் நான்கு நாட்களாக.