மாலை வீட்டிற்கு வரும்போது ஒரு வித இனிமையான மனநிலை கொற்றவைக்கு, அவள் வண்டியில் பறந்துகொண்டு இருப்பதை போல மனமும் உடலும் லேசாக இருந்தது.
கடத்தி செல்ல தோணுவதாக சொன்னவன் அப்படி ஒன்றும் செய்யவில்லை , ஆனாலும் அவள் மனம் மிக மிக சந்தோஷமாக இருந்தது .
அவன் அழைத்து சென்றது அவனின் நர்சரிக்கு , துறையூர் செல்லும் ரோட்டில் வேறு ஒரு இடத்தில் பெரிதாக இருந்தது , மிக ரம்யமான சூழலில்.
அங்கு சென்று நிறுத்த , வேறு ஒருவன் வந்தான் அவனிடம் என்ன என்ன தேவை என்று கூறி இவனே பார்த்து பார்த்து எடுத்துவைத்தவன் அனைத்தையும் வண்டியில் ஏற்றி அனுப்ப சொன்னான்.
“கடத்தி செல்ல தோணுது” என்ற கூற்றில் அவள் கற்பனை குதிரை கண்டம் தாண்டி சென்றிருந்தது , அதன் வாலைப் பிடித்து இழுத்து தலையில் தட்டி உள்ளே கட்டி போட்டாள்.
அதன் விளைவாக அவள் தலையிலும் தட்டிக் கொள்ள , அவள் அருகில் நின்று கைகட்டி அதை பார்த்திருந்தான் அவன்.
அவனை பார்த்தவுடன் அப்படியே சிலையாக நின்றுவிட “யாரை இப்போ தட்டி உள்ள அனுப்பினனு தெரிஞ்சுக்கலாமா” என்றவன் கேள்வியில் , “ஐயோ” என்று விழிகளை மூடி திரும்பி நின்று கொண்டாள்.
“இன்னைக்கு ஸ்கூலுக்கு மட்டமா” என்றவன் குரலில் நிமிர்ந்து பார்க்க, வண்டியில் அமர்ந்திருந்தான் “கொற்றவை ஏன் டி இன்னைக்கு இவ்ளோ பல்பு வாங்குற , அத்தனைக்கும் கரண்ட் பில் நீதான் கட்டணும்” என்று எண்ணியவள் வேகமாக சென்று ஏறிக்கொண்டாள்.
ஸ்கூல் சென்று நிறுத்தியவுடன் அவள் இறங்கி நடக்க தொடங்கினாள், அவனிடம் ‘தேங்க்ஸ்’ சொல்லவில்லையே என்று எண்ணியவள் திரும்பி அவனை பார்த்தாள்.
ஏனோ அதை சொல்ல தோன்றவில்லை , பணியாளரிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தவன் சட்டென்று திரும்பி அவளை பார்த்தான்.
“ஏதாவது சொல்லனுமா” என்க ஆம் என்று தலை அசைத்தாள் , என்ன என்று அவளின் அருகில் வர .
“ஏண்டா உன்ன இவ்ளோ பிடிக்குது” என்று வாய் வரை வந்த வார்த்தைகளை விழுங்கியவள் இதழ்கள் புன்னகையில் விரிய திரும்பி நடக்க தொடங்கினாள்.
அதே பூரிப்போடு வீடு செல்ல , அங்கே ஹாலில் அவளை காத்து கிடந்தார் ராதா காலில் கட்டுடன் , கண்டவுடன் பதட்டம் வந்து ஒட்டிக் கொண்டது.
ஸ்டூலை தள்ளி விட்டு எழுந்துவிட்டாள் “அவங்க வயசு என்ன , உன் வயசு என்ன தண்ணி கூட எடுத்துட்டு போக முடியாதா உன்னால” என்றவள் , “நீங்களும் ஏன்தான் இப்படி பண்றீங்களோ” என்று ரிபோர்ட்ஸ் எடுத்து பார்த்து எவ்வளவு ஆயிற்று என்று கேட்டு அறிந்து கொண்டாள்.
அவள் சென்று குளித்து வந்து அனைவருக்கும் டி வைத்து எடுத்து வந்தாள் , அனைவரும் குடிக்க “நைட் ஏதாவது பண்ணிடு” என்று அருணாவிடம் கூற.
“நான் மட்டும் ஏன் பண்ணனும் , எல்லாரும் தான சாப்பிடுறாங்க ஆளுக்கு ஒரு வேல பண்ண சொல்லு” என்றாள்.
அன்றைய நாளின் இனிமை அனைத்தும் போய் விட்டது , தலை வலி மண்டையை பிளக்க அருணிற்கு அழைத்து உணவு வாங்கி வர ஏற்பாடு செய்தாள்.
உணவு உண்டு அனைவரும் அமர “என்ன பண்ண போறோம்” என்றாள் கொற்றவை
“அம்மாக்கு இன்னும் கொஞ்ச நாள் ரெஸ்ட் தேவ , அருணாவும் அப்பாவும் பாத்துக்கிட்டும் நா முடிஞ்ச வரைக்கும் ஹெல்ப் பண்ணிட்டு போறேன்க்கா” என்றான் அருண்.
“ஏன் டா நான் பண்ண மாட்டேனா” என்றாள் தமக்கை.
“நீ ஏன்க்கா பண்ற , உன்ன வீட்ல ஒரு ஆளா இவங்க மதிச்சாங்களா, ஒன்னும் தேவ இல்ல”.
“சும்மா இருடா , காலைக்கும் மதியத்துக்கும் நானும் அருணும் பண்ணிடறோம் , அம்மாக்கு எல்லா ஹெல்பும் நீங்க ரெண்டு பேர் பாருங்க , அப்படியே சாயந்திரம் நைட் நீ சமச்சுடு” என்றாள் அருணாவிடம்.
“என்னால முடியாது” என்றவள் கூற.
“சரி நான் லீவு போட்டு வீட்ல இருந்து பாதுர்க்குறேன் நீ ஒரு பத்துநாள் வேலைக்கு போயிட்டு வா” என்றவள் எழுந்து கொள்ள அருணும் எழுந்துவிட்டான்.
“அருணா” என்ற தந்தையின் அழைப்பில் அவரை பார்த்தவள் “சரி பண்றேன்” என்றாள்.
போன் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தவள் சேவ் செய்து வைத்த அவன் நம்பரை வாட்சப்பில் பார்க்க அவனும் ஆன்லைன் என்று காட்டியது.
“இன்பா” என்ற அந்த எழுத்துக்களை தடவி பார்த்துக்கொண்டாள், அவனும் அவளின் டிபி பார்த்துக்கொண்டிருந்தான் , நிலவில் பெண் அமர்ந்திருக்கும் புகைப்படம் இதழ்கள் மெல்ல விரிந்தது.
ஏதேனும் பேசுவானா என்று அவள் காத்திருக்க நேரம் கடந்தது, அவனிடம் இருந்து எந்த மெசேஜும் வரவில்லை .
அவன் ஆப்லைன் என்று காண்பிக்க அவள் உறங்கிவிட்டாள் , ஒருவன் உறக்கம் தொலைத்து விழித்திருந்தான் அவள் நினைவுகளுடன்.
மறுநாள் காலை அணைத்து வேலைகளும் முடித்து கிளம்பிட்டாள் நேற்றுவரை வேறு வழியில் சென்றவள் , ஏதேதோ யோசனையில் அவன் இடம் சென்று சேர்ந்தாள்.
உள்ளே வந்தவளை கண்ட லட்சுமி “பார்ரா மேடம்க்கு இந்த வழிலாம் ஞாபகம் இருக்கு” என்று கொஞ்சம் வருத்தத்தோடு சொல்ல.
“சாரி கொஞ்சம் மனசு சரி இல்ல அதான்” என்றாள் கொற்றவை, “பரவாயில்ல விடு வந்துட்டியே” என்றவள் சென்று மணக்க மணக்க காபிகொண்டு வந்தாள்.
கொற்றவையின் விழிகள் நாலாபுறமும் அவனை தேடியது , “இன்னைக்கு வரல” என்றாள் லட்சுமி.
“ஹ்ம்ம்” என்றவள் காபி குடித்துவிட்டு “நாளைக்கு வரேன்” என்று வண்டியை எடுத்து சென்றுவிட்டாள் , பள்ளி செல்ல அங்குதான் நின்றிருந்தான்
அவனை நோக்கி செல்ல துடித்த கால்களை அடக்கி தன் அறை நோக்கி சென்றாள் , ஏனோ இன்று அவன் அழைக்கவில்லை , வேலை ஒன்றும் ஓடவில்லை.
அவனின் அழைப்பிற்காக அலைபேசியையே பார்த்திருந்தாள் , மீண்டும் மனம் சோர்ந்தது , டேபிளில் தலை சாய்த்து படுத்துவிட சில நொடிகள் கடந்து கதவில் யாரோ தட்டும் ஓசை , இங்கிருப்பவர்கள் யாரேனும் இருக்கும் என்று எண்ணியவள் அப்படியே இருக்க.
“நைட் தூங்கலையா” என்ற குரலில் அடித்துபிடித்து எழுந்தாள்.
“ஏய் பாத்து…. என்ன ஆச்சு” என்றவன் வினவ , திரு திரு என்று விழித்தாள், அவனை இங்கே சத்தியமாக எதிர்ப்பார்க்கவில்லை “சாரி உக்காருங்க” என்றவள் தானும் அமர.
“ஒகே தான ?” என்றவன் கேள்விக்கு தலை ஆட்டினாள்.
அப்பொழுதுதான் பார்த்தாள் அவன் முகமே சிவந்து ஏதோ போல “என்னாச்சு உடம்பு சரி இல்லையா” என்றவள் கேட்க “இல்ல ஒன்னும் இல்ல , ரொம்ப நேரமா வெயில்ல நின்னது கொஞ்சம் தலை வலிக்குது , நான் எல்லா விஷயமும் சொல்லிட்டேன் அவங்க பாத்துப்பாங்க , நான் ஈவினிங் வந்து பாக்குறேன் வேற எதும்னா எனக்கு போன் பண்ணு” என்றவன் எழுந்துகொண்டான்.
கதவின் அருகில் சென்றவன் ஒரு நொடி தயங்கி “கொற்றவை” என்று அழைக்க மீண்டும் அவள் சிலையான நொடி அது.
தயக்கத்தோடு நெற்றியை நீவியவன் “எனக்கு மெஸேஜ்ல பேசுறது வராது” என்று வெளியேறிவிட.
“என்ன சொன்னான் இப்பொழுது , பேச விருப்பம் இருக்கிறது ஆனால் வரவில்லை என்கிறானா , இல்லை நான் பேசுவேன் என்று காத்திருக்காதே என்கிறானா ? ஆண்டவா எனக்கு எப்போவுமே தெளிவா எந்த விஷயமும் நடக்காதா” என்று புலம்பினாள்.