காலையிலே வீட்டில் வந்து நின்ற மருமகனை பார்த்து பதட்டம் வந்தது ராதாவிற்கு.
கணவர் எதுவும் பிரச்சனை செய்த்திருப்பாரோ , வேறு ஏதும் பிரச்சனையோ என்று .
“என்ன அத்த அப்படி பாக்குறீங்க” என்ற வெங்கடேசன் அங்கிருந்த சேரில் அமர , ராதா மருமகனுக்கு காபி எடுத்து வர அடுப்படி சென்றார்.
அனைவரும் அங்கு ஹாலில் கூட ராதா காபியோடு வந்தார், “நீங்களும் வாங்க அத்த ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்க.
“என்ன விஷயம் மாப்பிள” என்றார் கோபாலன்.
“நம்ம கொற்றவைக்கு ஒரு நல்ல சம்பந்தம் வந்திருக்கு, பையனுக்கு பிடிச்சு வந்து கேட்டான் , நல்ல பையன்” என்க.
“யாரு மாப்பிள” என்றார் ராதா.
“எல்லாம் தெரிஞ்ச பையன் தான் , என் சொந்தம் நம்ம இன்பநிலவன்” என்க.
“என்ன மாப்பிள சொல்றீங்க !! அவன் தங்கச்சி தான் ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டா , அவன் குடும்ப மானமே சிரிப்பா சிரிச்சுச்சே” என்க.
கொற்றவையின் விழிகள் நிறைய தொடங்கியது , தங்கையை பற்றி பேசும்போதே அவன் எத்தனை வேதனை அடைந்தான் , எந்த தவறும் செய்யாமல் அவனை வார்த்தைகளால் எப்படி எல்லாம் அனைவரும் காயப்படுத்தினார்கள்.
யாரும் அறியாமல் விழி நீர் துடைக்க , “பாத்து பேசுங்க மாமா யாரோ சொல்றத எல்லாம் நீங்க என்கிட்டே சொல்லாதீங்க , அவனை எனக்கு பதினஞ்சு வருஷமா தெரியும்”.
“எவன் தயவும் இல்லமா போராடி வளந்தவன் , நான் வழிதான் காமிச்சேன் எப்படி ஜெயிச்சு வந்துருக்கான் , ஐ. டி.ல வேல பாக்குறவன விட அதிகம் சம்பாதிக்குறான்”.
“சொந்தமா கடை , இடம் இருக்கு இப்போ தான் போன வருஷம் பெரிய வீடு கட்டினான் , குணம் தங்கம் இத விட என்ன வேணும்” என்றவன் .
“நேத்து சாயந்திரம் பேசணும்னு கேட்டான் , நம்ம பெருமாள் கோவில்ல வெச்சு தான் பேசினோம் , கொற்றவையை பிடிச்சுருக்கு கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்படுறேன் அப்படினு சொன்னான்”.
“நீங்க சம்மதம் சொன்னா அவங்க வீட்ல இருந்து வந்து பேசுவாங்க” என்க.
“என்ன மாப்பிள சட்டு சட்டுனு எப்படி முடிவு எடுக்க யோசிச்சிச்சு சொல்லலாம்”.
“என்ன யோசிக்க போறீங்க , உங்க சின்ன மக யாரையோ விரும்புறேன்னு வந்து சொன்னதும் எந்த கேள்வியும் கேக்காம அவன் அண்ணனுக்கு ரெண்டாம் தாரமா அனுப்ப பாத்தீங்க இவளை , இப்போ இவ்ளோ நல்ல சம்மந்தம் உங்களுக்கு யோசிக்கணுமோ ??” என்றான் சூடாக.
கொற்றவையால் நம்பவே முடியவில்லை , அவள் தானே முதலில் விருப்பத்தை சொன்னது , அவளின் காதலைப் பற்றி எங்கேயும் பேசவில்லை.
அவன் விரும்பி கேட்டதாக மட்டுமே சொல்லப் படுகிறது , “அழைத்து செல்ல வாருங்கள் காத்திருப்பேன்” என்று சொல்லி மூன்று நாட்கள் தான் ஆகிறது ஆளை அனுப்பிவிட்டான்.
இப்பொழுதே அவனிடம் போக வேண்டும் என்று தோன்றியது.
“உடனே கல்யாணம்னா செலவு இல்லையா , நகை நட்டு சீருன்னு” என்றார் கோபாலன் .
“அப்புறம் அப்படியே எறக்கி விடலாம்னு நினைசீங்களா , மாமா நீங்க வர சொல்லுங்க நாம பாக்கலாம்” என்றான் அருண்.
“என்ன பாக்கலாம் கொஞ்சம் பொறுமையா இருக்கலாம்” என்று கோபாலன் சொல்ல.
“அவளுக்கு வயசு என்ன வரப்புல படுத்து தூங்குதா , வாய்க்காலோட ஓடிட்டு இருக்கு , இப்போ முடிவா என்ன சொல்றீங்க” என்றார் வெங்கடேசன்.
“மாப்பிள நீங்க அவங்கள வர சொல்லுங்க உறுதி பண்ணிக்கலாம்” என்றார் ராதா மகளின் முகத்தை பார்த்துக் கொண்டே.
“ஆமா மாமா நீங்க வர சொல்லுங்க” என்றான் அருணும்.
அருணாவின் முகத்தில் கோபம் எரிமலையாய் வெடிக்க காத்திருந்தது “என் கல்யாணம் பத்தி பேசி ஒரு முடிவு எடுக்கல , அவன் என்னனா வீட்ல ஒதுக்கலன்னு சொல்றான் , இவங்க இப்படி பண்றாங்க” என்று ஆத்திரமாக வர .
“மாமா அக்காவுக்கு மட்டும் பேசுறீங்க எனக்கும் கொஞ்சம் பேசுங்க, இப்போ அக்காவுக்கு சீர் செய்றேன்னு அருண் சொல்றான் அப்போ எனக்கும் செய்ய சொல்லுங்க , அவங்க வீட்ல வேற பொண்ணு பாக்கறதுக்குள்ள” என்க
அவளை கேவலமான ஒரு பார்வை பார்த்த வெங்கடேசன் “நீயா தேடிகிட்ட மாப்பிள அப்போ நீயே தான் சரி பண்ணிக்கணும் , இவ்ளோ பேசுறியே எனக்கு இந்தமாதிரி இவரை பிடிச்சுருக்கு அப்படினு வீட்ல எல்லார்கிட்டயும் சொல்லி அவங்க பேசி அப்பறோம் பொண்ணு பாக்க வர சொல்லியிருக்கணும் , இதுல ஏதாவது நீ பண்ணியா ? அதோட மூத்தவ இருக்கும்போது உனக்கு என்ன அவசரம் “.
“நீ பாத்த மாப்பிள மாதிரி இல்ல இன்பன் , பொண்ண மட்டும் குடுங்கன்னு தான் கேக்குறான் , ஏன்னா அவன் ஆம்பள கட்டிட்டு போற பொண்ண கவுரவமா வெச்சு காப்பாத்துவான், இவன் எப்படினு நீயே யோசிச்சுக்கோ”.
“இது என் மூலமா வந்த சம்பந்தம் நல்லபடியா நடந்து கொற்றவைக்கு ஒரு நல்ல வாழ்கை அமையனும் அவ்ளோதான்” என்றவன் “நான் அவங்ககிட்ட பேசுறேன் இந்த வாரமே நல்ல நாள் பார்த்து வர சொல்றேன்” என்று சென்று விட்டார்.
“அப்போ என் கல்யாணம் , அதைப் பத்தி யாருமே பேசமாட்ரீங்க” என்ற அருணாவை பார்த்த அருண்.
“இப்போ பொண்ண பிடிச்சு இருக்குனு உடனே தட்ட தூக்கிட்டு வராம, முறையா மாமாகிட்ட பேசி நம்ம வீட்ல கேட்டு சொல்ல சொன்னாருல்ல அது மரியாதை , அந்த மாதிரி மொறயா வந்து பேச சொல்லு யோசிக்கலாம்”.
“அதும் ரெண்டு வர்ஷம் கழிச்சு , படிச்சு முடிச்சுட்டல்ல வேலைக்கு போய் கொஞ்சம் காசு சேத்துவை , சீதனமா அத அப்படியே கொண்டு போ , உனக்காகலாம் ஓடா உழைக்க நான் ஒன்னும் முட்டாள் இல்ல, அப்போ என்னால என்ன முடியுமோ அத செய்வேன் , மிச்சம் நீயே தான் பாத்துக்கணும்” என்றான் அருண்.
தந்தையை பார்க்க அவர் அமைதியாக நின்றிருந்தார் , கோபத்தில் சிவந்த முகத்தோடு அறைக்குள் சென்றால் அருணா.
வேலைக்கு கிளம்பி வந்தவள் அவசரமாக சாப்பிட்டுவிட்டு வேகமாக வண்டியை எடுத்து புறப்பட்டாள் , நேரே சென்று அவனின் கடையில் நிறுத்த.
யாரோ கஸ்டமரிடம் பேசிக் கொண்டிருந்தவன் இவளை பார்த்துக் கொண்டே அவரிடம் பேசி முடித்தான்.
அவர் போகும் வரை ஒரு வித டென்ஷனில் நின்றவளை தலை ஆட்டி அவன் அழைக்க அவனின் சிறிய அறைக்குள் நுழைந்தாள் , அவள் முன் கை நீட்ட கையை பற்றியவள் அவன் நெஞ்சில் முட்டி நின்றாள்.
நிமிர்ந்து பார்த்தவள் “ஏன் நான் தான் உங்கள விரும்பினேன்னு சொல்லல” என்க.
“எதுக்கு சொல்லணும்” என்றவன் , அவளை அழைத்துச்சென்று அங்கிருந்த பெஞ்சில் அமர்த்தி தானும் அருகில் அமர்ந்து கொண்டான்.
அவளின் கையை பிடித்துக் கொண்டு “இப்போ நான் பிடிச்சு கேட்டதா முடிச்சுடுச்சு , இதுல உன்ன இழுத்திருந்தா காலத்துக்கும் அத வெச்சு உன்ன குத்தி காட்டுவாங்க , இவ்ளோ நாள் பட்டதெல்லாம் போதும்”.
“அந்த வீட்ல இருந்து சகல மரியாதையோடு நீ என் பொண்டாட்டியா வரணும் , உன்ன அவங்க ஏதும் பேசறதை இனிமேல் என்னால அனுமதிக்க முடியாது”.
“வீட்ல பாத்து பண்ணினா ஒரு கல்யாணம் எப்படி நடுக்குமோ அதே மாதிரி நம்ம கல்யாணம் நடக்கும் நான் நடத்துறேன் , உனக்கு இதுவரைக்கும் அவங்க எதுவும் செய்யல , நம்ம கல்யாணத்துல அவங்க முறையா எல்லாம் செஞ்சு உன்னை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விடணும்” என்க.
மெல்ல இதழ்கள் விரிந்தது அவளுக்கு “நீ எதுவும் டென்ஷன் ஆகாத எல்லாம் நான் பாத்துக்குறேன்” என்றவன் விரல்கள் அவள் கன்னத்தில் மெல்ல வருடியது.
அவளை விட்டு விலகியவன் “நீ கெளம்பு” என்றான் திரும்பி நின்று.
சிரிப்பை கட்டுப்படுத்தி நின்றவள் “என்னாச்சு” என்க “கெளம்புடி” என்றவன் உடனே வெளியில் சென்றுவிட , அவனின் தடுமாற்றத்தை பார்த்து ரசித்துக்கொண்டே அவளும் வெளியேறினாள்.
வியாழன் அன்று நாள் நன்றாக இருப்பதால் அன்றே வருவதாக தகவல் வந்தது வெங்கடேசன் மூலம்.
இரவு அவள் அறையில் ஜன்னலின் வழி நிலவை பார்த்திருக்க மெசேஜ் வந்த சத்தம் , இந்த நேரத்தில் யார் என்று சென்று பார்க்க அவனின் பெயர் தாங்கி நின்றது அலைபேசி.
அவனிடம் இருந்து முதல் முறையாக ஒரு குறுந்தகவல் , பரவசம் கூட அதை திறந்து பார்த்தாள் .