“இப்படியே பேசிட்டு இருந்தா எப்படி முடிவா என்னதான் சொல்றீங்க” என்ற வெங்கடேசனின் கேள்விக்கு , “திரும்ப திரும்ப எத்தனை தடவ சொல்றது , இந்த கல்யாணம் நடக்கணும்னா இந்த வீட்டு ரெண்டாவது பொண்ண என் மூத்த மகனுக்கு கட்டி கொடுங்க” என்று பிடிவாதமாக நின்றார் கிஷோரின் தாய்.
வெகு நேரமாக வெளியிலே நின்றிருந்தவன் விறு விறு என்று உள்ளில் வந்து “உங்க பையன் கல்யாணம் பத்தி மட்டும் பேசுங்க , எனக்கு நிச்சயம் பண்ண பொண்ண பத்தி பேச உங்களுக்கு உரிமை இல்லை” என்றான் இன்பன்.
“அப்போ இந்த வீட்டு பொண்ணு அருணா வாழ்க்கையை பத்தி அவ அக்காவுக்கு கவலை இல்லியா”.
“அருணா லைப் பத்தி அவளுக்கே கவலை இல்லாதப்போ என் பொண்டாட்டி எதுக்கு கவலைப் பாடணும்” என்றான் நக்கலாக.
“இன்னும் கல்யாணம் முடியல அதுக்குள்ள பொண்டாட்டின்னு சொல்றீங்க , என்ன தம்பி இதெல்லாம்” என்றார் கிஷோரின் தாய்.
“நான் என்னங்க பொண்டாட்டின்னு வெறும் வாய் வார்த்தையாய் தான் சொல்றேன், ஆனா உங்க புள்ள தாலி கட்டாம பொண்டாட்டின்னு உரிமை எடுத்துக்கிட்டான்.
அத பத்தி பேசத்தான் வந்திருக்கீங்க அத மட்டும் பேசிட்டு போங்க” என்றவன் கொற்றவையின் கைபிடித்து அழைத்து சென்றான் வெளியில்.
“இங்கயே இரு அந்த அம்மா பார்வையே எனக்கு பிடிக்கல” என்றான் அவன்.
அன்று இவர்களை ஆட்டோவில் அனுப்பிவிட்டு நர்சரி சென்றவன் இரண்டு மணி நேரம் சென்று வீடு செல்ல அப்பொழுதுதான் அவள் அழைத்தாள்.
“அருணா ப்ரெக்னென்ட்டா இருக்கா என்ன பண்ணணு ஒன்னும் புரியல” என்றவள் குரலில் முழுதும் வேதனை, அவனுக்கே ஒன்றும் புரியவில்லை.
ஹோட்டலில் அவள் அழுதது இதற்குத்தானா என்று யோசித்தவன் “யார்லாம் இருக்காங்க அங்க” என்றான்.
“சரி ஏதாவது பிரச்சனைன்னா உடனே போன் போடு நான் வரேன், இப்போ வந்தா சரியாவராது, வெங்கடேசன் அண்ணன் வந்து பேசட்டும் பாக்கலாம், எத இருந்தாலும் எனக்கு உடனே கூப்புடு” என்று சொல்லி வைக்க.
ராதா ஓய்ந்து போய் அமர்ந்திருந்தார் , விஷயத்தை அருணா கூறியவுடன் அவளை அடித்தவர் அப்படியே அடுக்களையில் முடங்கினார்.
மூத்த மாப்பிள்ளைக்கு பதில் சொல்ல வேண்டும், மூத்த மகளின் மாமியார் பேசப்போகும் வார்த்தைகளை நினைத்தால் இப்படியே தூக்கில் தொங்கிவிடலாம் போல இருந்தது.
இன்பனின் வீட்டில் என்ன சொல்வார்கள், கொற்றவையின் கல்யாணம் இதனால் நின்றுவிட்டால் என்று அது வேறு ஒருபக்கம் வயிற்றில் புளியை கரைத்து.
வெங்கடேசன் மனைவியோடு வந்த சேர்ந்தபோது ஏதோ இழவு வீடு போல இருந்தது மாமியார் வீடு.
“ஏன் டி இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் நடக்க போற வீடு மாதிரியா இருக்கு இது , உன் வீட்டு ஆளுங்களுக்கு எங்க இருந்து தான் புதுசு புதுசா பிரச்சனை வருமோ” என்று சாதாரணமாக உள்ளே நுழைந்தான்.
இப்படி ஒரு விஷயம் இருக்கும் என்று அவன் கனவிலும் எண்ணவில்லை “அருணா கர்பமாக இருக்கிறாள்” என்று சொன்னவுடன் , தான் சரியாகத்தான் கேட்டோமா என்று அனைவரின் முகத்தையும் மாறி மாறி பார்த்தான்.
கோபத்தில் முகம் எல்லாம் சிவந்துவிட இருக்கையில் இருந்து எழுந்தவனை பார்த்து ஆராதனா பயந்து இரண்டு அடி தள்ளி நின்றாள்.
“மச்சினிச்சியா போயிட்ட கை நீட்ட முடியல” என்க கூனி குறுகி நின்றாள் அருணா.
“ஒட்டுமொத்த குடும்ப மாணத்தையே வாங்கிட்டியே, எல்லார் முன்னாடியும் நாங்க இப்படி நிக்குணுமே என்ன ***** துக்கு, நீ கொழுப்பெடுத்து போய் பண்ணதுக்கு நாங்க பதில் சொல்லனுமா” என்று ஆத்திரத்தில் கத்தியவன்.
“டேய் மாப்ள” என்று அழைக்க அருண் அங்குதான் நின்றான்.
“என்னடா இதெல்லாம் , இத என்னனு இப்போ நாம சரி பண்றது” என்றவன் மனைவியை பார்த்து “அடியே உன் தொங்கச்சிட்ட என்ன எழவுனு கேட்டு சொல்லு” என்று வெளியில் சென்று அமர்ந்து கொண்டான்.
அருணாவை அறைக்குள் அழைத்து சென்றவள் “என்னடி இது என்ன பண்ண, எப்படி இதெல்லாம்…” என்று பதற.
“அக்கா கிஷோர் தான் சொன்னான்”.
“அவன் சொன்னா உன் புத்தி எங்க புல்லு மேய போச்சா, பொம்பள பிள்ளைக்கு இவ்ளோ தைரியம் எங்க இருந்து டி வந்துச்சு , என்ன கருமத்துக்கு இப்படி பண்ண” என்று அவள் உலுக்க.
“அவங்க வீட்ல எங்க கல்யாணத்துக்கு ஒதுக்க மாட்டறாங்க, இப்படி பண்ணிட்டா வேற வழி இல்லாம நமக்கு கல்யாணம் பண்ணி வெச்சுருவாங்க அப்படினு சொன்னார்”.
“அப்பவும் நான் வேண்டாம் சொன்னேன், உனக்கு என்ன கல்யாணம் பண்ண விருப்பம் இல்ல அதனால தான் இப்படிலாம் பண்றன்னு ரொம்ப வருத்தப்பட்டார்”.
“அப்படி ஒரு நாள் பேசும்போது தெரியாம நான்…” என்று அவள் அழ.
“இவளை என்ன செய்ய” என்று ஆராதனாவிற்கு தலை சுற்றியது, அவளுக்கும் முதலில் மனக்கண்ணில் வந்தவர் அவளின் மாமியார் “ஆண்டவா என் கல்யாண வாழ்க்கைக்கு சங்கூதிடுவா போலயே” என்று புலம்பியவள் கணவனிடம் சென்று விவரத்தை கூற
அவன் நேராக கிஷோரை அழைத்துவிட்டான் “இன்னும் ஒரு மணி நேரத்துல உன் பெத்தவங்கள கூட்டிட்டு இங்க வர” என்று மிரட்டலாகவே சொல்லி வைத்தான்.
வந்ததில் இருந்து பெரிய மகனுக்கு கொற்றவையை கல்யாணம் செய்ய வேண்டும் என்றே பேசிக்கொண்டிருக்கிறார் , வெங்கடேசன் அழைத்ததால் அங்கு வந்திருந்த இன்பன் உள்ளே செல்ல விருப்பம் இன்றி வெளியில் நின்றிருந்தான்.
எத்தனை நேரம் அவர் உளறுவதை கேட்க “இங்க பாருங்க தப்பு உங்க பையன் மேலயும் இருக்கு பொண்ண மட்டும் நீங்க எப்படி பேசலாம், அதே மாதிரி கொற்றவை கல்யாணம் முடிவு செஞ்சாச்சு, அத பத்தி பேச வேண்டாம் இந்த கல்யாணம் பத்தி மட்டும் பேசுங்க” என்றான்.
தங்களுக்குள் பேசிக் கொண்டனர் , அந்த அம்மாவின் முகமே கடு கடு என்று இருந்தது .
ஒரு வழியாக பேசி முடித்து “சரி பொண்ணுக்கு முப்பது பவுன் நகை , மூணு லச்சம் ரொக்கம் அப்புறம் பையனுக்கு கார் ஒன்னு வாங்கி குடுத்துடுங்க” என்க.
“என்ன பகல் கொள்ளை இது” என்று அருண் அவர்களை வெறுப்போடு பார்த்தான்.
“லோன் போட்டு ஒரு கார் கூட வாங்க முடியாதா உங்க புள்ளைக்கு” என்று வந்த இன்பன் “தப்பையும் பண்ணிட்டு வரதட்சிணை வேற வேணுமா உங்களுக்கு” என்றான் ஆத்திரத்தோடு.
“கல்யாணம் நடக்க வேண்டியது உங்க தேவ அத மறந்துடாதீங்க” என்றார் கிஷோரின் தந்தை.
“ஓஹ்… எங்களுக்கு மட்டும் தேவ உங்களுக்கு தேவ இல்லைல” , என்ற வெங்கடேசன் “அப்போ இனிமே எங்க பேசணுமோ அங்க பேசலாம்” என்றான்
“என்ன மிரட்டுறீங்களா” என்று கிஷோரின் தந்தை சண்டைக்கு நிற்க, “இங்க பாருங்க என்ன தீர்வோ அத மட்டும் பேசுங்க” என்ற இன்பன்.
“ இது வெளில எல்லார்க்கும் தெரிஞ்சு தேவ இல்லாம ஒரு ஸீன் வேண்டாம் , நம்மால என்ன முடியுதோ செஞ்சு அனுப்பிடலாம்” என்றான் வெங்கடேசனிடமும் அருணிடமும்.
“நகை , ரொக்கம் அதும் ரெண்டு லச்சம் மட்டும், அப்புறம் கல்யாண செலவு அதுக்கு மேல எதுவும் முடியாது” என்று அருண் தீர்மானமாக சொல்ல .
சிறிது நேரம் அப்படி இப்படி என்று வாதம் புரிந்தவர்கள் இறுதியில் சம்மதித்து சென்றனர்.
அவர்கள் அனைவரும் சென்றவுடன் அருணை அழைத்த கொற்றவை, அவனிடம் தங்க காசுகள் வாங்கி வைத்திருக்கும் விவரத்தை கூறினாள்
“எப்படிக்கா” என்றவன் வினவ , “எல்லா காசையும் இவங்க கிட்ட கொடுத்துட்டா செலவு பண்ணிடுவாங்க அதான் சீட்டு போட்டு சேர்த்து வெச்சேன் , ஒரு பன்னெண்டு பவுன் இருக்கு மிச்சம் நீ பாரு” என்க.
“வேண்டாம் அத நீ வெச்சுக்கோ , உன் கல்யாணத்துக்கு நான் வட்டிக்கு காசு கேட்டிருந்தேன் ஆனா இப்போ அத வெச்சு இவளுக்கு மட்டும் தான் பண்ண முடியும் , உனக்கு கண்டிப்பா அப்புறம் செயிறேன்க்கா” என்க.
“போடா பெரிய மனுஷா எனக்கு நீ ஒன்னும் செய்ய வேண்டாம் , உன் மாமா அதெல்லாம் ஏதும் கேக்க மாட்டார் , நீ என்ன பத்தி யோசிக்காத என்ன வேணும் சொல்லு நானும் முடிஞ்சது செய்றேன்” என்றாள்.
இதில் எதிலுமே பங்கு பெறாமல் அமர்ந்திருந்தார் கோபாலன், தன்னால் முடியாது என்று மகள் அவள் வழியை பார்த்துக்கொண்டாள் இதற்க்கு சந்தோஷப் பட வேண்டுமா இல்லை வருந்தவேண்டுமா என்று பாவம் அவர் மனம் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தது