காந்திமதி பேரனுக்கு பல இடங்களில் பெண் பார்த்துவிட்டார், முதலில் அனைத்தும் அவன் தங்கையின் பெயர் சொல்லி தட்டிப் போனது.
அவனிடம் கேட்ட போது இப்பொழுது வேண்டாம் இப்பொழுது வேண்டாம் என்றே சொல்லிக் கொண்டிருந்தான்.
ஆனால் ஒரு மூன்று வருடமாக “நானே சொல்கிறேன் எனக்காக யாரும் பெண் தேடாதீர்கள்” என்றுவிட்டான்.
இருந்தாலும் அவன் பாட்டி முயன்றுக் கொண்டிருந்தார் , ஆறு மாதம் முன்பு வசந்தன் மூலம் கொற்றவையின் மேல் அவனுக்கு விருப்பம் இருக்கலாம் என்ற எண்ணம் வந்தது.
அதையும் கேட்டு பார்க்க “சபையில அசிங்கப் பட்டது மறந்துடுச்சா” என்றான்.
வெங்கடேசன் ஆராதனாவிற்கு சக்தி பிறந்து பதினோரு வருடம் கழித்து பிறந்தான் சபரி.
மகனின் பெயர் வைக்கும் சடங்கிற்கு இன்பநிலவனை அழைத்திருந்தார் வெங்கடேசன் , பத்துவருடங்கள் துபாயில் கழித்துவிட்டு வந்திருந்தான்.
தங்கையின் செய்கையை அனைவரும் இரண்டு வருடம் கழித்தும் விமர்சனம் செய்து கொண்டிருந்தனர், அதனால் அதிகம் யாரோடும் பேசுவதில்லை .
வெங்கடேசன் அழைப்பை மறுக்க முடியாதே பாட்டியுடன் தம்பியையும் அழைத்து சென்றிருந்தான், அங்கும் இதே பேச்சுக்கள் தான், இதை பற்றி பேசுவதால் இவர்களுக்கு என்ன கிடைக்கும் என்று தான் புரியவில்லை.
கொஞ்சம் நேரம் சென்று காந்திமதி “போலாம் இன்பா எனக்கு ஒரு மாதிரி இருக்கு” என்க “சரி” என்றவன் வெங்கடேசனிடம் சொல்லுவதற்கு சென்றான்
அங்கு நின்றிருந்த சிலரிடம் கோபாலன் “இவங்க எல்லாம் எப்படி தான் நாலு ஆளுங்க முன்னாடி வந்து வெக்கமே இல்லாம நிக்குறாங்களோ, பொட்டப்புள்ள அத ஒழுக்கமா வளக்க தெரில , மாப்பிள்ளைக்கு ஏதோ சொந்தமாம், அவர் கூப்பிட்டா இவனுங்க வந்துறதா”.
“அவளை ஒதுக்கி வெச்சாகூட பரவாயில்ல வீட்டுக்கு வந்து போய் இருக்காலாம்” என்க.
“எதுக்கு அந்த பொண்ண சேத்துக்கிறாங்க” என்றார் ஒருவர் .
“நீங்க வேற ஆதாயம் இருக்கும், அங்க இருந்து இவனுக்கும் பொண்ணு கட்டிப்பானா இருக்கும் , துபாய் காசு நிறைய வரும் இவனும் திரும்ப போய் சம்பாரிக்க அவங்களே ஏற்பாடு எல்லாம் செய்திடுவாங்க” என்க.
“என்ன மனிதர் இவர் சினிமா கதை போல அவர்களின் நிலை என்ன என்றே அறியாமல் இவர் எதை எதோடு முடிச்சிடுகிறார்” என்று எண்ணியவன் .
அவரை நெருங்கி “எங்க வீட்ல நடக்குற விஷயத்தை பேசுறதுக்கு உங்களுக்கு யாரு அதிகாரம் குடுத்தது” என்க.
“பாத்தீங்களா நா சொல்லல இவன் குடும்பத்துக்கே மரியாதை தெரியாது” என்றவர் வார்த்தைகள் தடித்தது.
அனைவரின் முன்பும் அவன் குடும்பத்தை கேவலப்படுத்தினார், முன்பே ஒரு வித படபடப்பில் இருந்த காந்திமதி நெஞ்சை பிடித்துக் கொண்டு அங்கேயே சரிந்தார்.
அந்த சம்பவத்திற்கு பிறகு வெங்கடேசன் அழைத்தாலும் இவன் எந்த விசேஷத்திற்கும் போனதில்லை , இந்த முறை ஏனோ போக தோன்றியது அவளைக் காண.
வீட்டிற்கு வந்த கொற்றவை படுத்தவுடன் உறங்கி விட்டாள் , யோசித்து யோசித்து மண்டை வலித்தது , தூங்காவிடில் மண்டை வெடித்து விடும் போல.
வீட்டில் அனைவரும் திரும்பி வந்த போது அக்கா தம்பி இருவரும் நல்ல உறக்கம்.
எப்பொழுதும் போல அந்த வாரம் கடந்து கொண்டிருந்தது, கோபாலன் மட்டும் எப்பொழுதும் ஏதோ யோசனையில் இருந்தார்.
“இவர் யோசனை செய்தாலே நமக்கு ஏதோ ஆப்பு தயார் செய்கிறார் என்று அர்த்தம் , இப்பொழுது என்ன என்று தெரியவில்லையே” என்ற யோசனையிலே அவளும் இருந்தாள்.
சரியாக அந்த நாளும் வந்தது, ஞாயிறு காலை அவளை வந்து எழுப்பினார் ராதா , சலிப்போடு எழுந்தவள் “என்ன?? ஏன் இன்னைக்கு கூட தூங்க விட மாட்டறீங்க”.
“வீட்டுக்கு விருந்தாளி வராங்க மா, கொஞ்சம் எழுந்து குளிச்சு தயாராகு” என்க.
“உங்களுக்கு தான வராங்க , நா ஏன் ரெடி ஆகணும் எனக்கு தூங்கணும் , நீங்களும் உங்க பொன்னும் பாருங்க” என்று மறுபடியும் படுத்தாள்.
“அம்மாடி அவங்க எல்லாரையும் பார்க்கணும் சொல்லுவாங்க, இன்னைக்கு ஒரு நாள் மட்டும்” என்று அவளை கெஞ்சி கெஞ்சி தயார் படுத்தினார்.
ஆனால் அவள் எப்பொழுதும் போல சாதாரண ஒரு சுடிதார் மட்டும் அணிந்து நின்றாள்.
அருணா நல்ல உடை அணிந்து அழகாக நின்றிருந்தாள், வீட்டுக்கு விருந்தாளி வராங்களா ? இவளை பொண்ணு பார்க்க வராங்களா என்று யோசனை செய்தவள்.
“சொல்லமுடியாது இவரு பொண்ண கரை சேர்க்க ஏதும் பண்ணுவாரு, என்ன பிளான் ஒன்னும் புரியலையே” என்றவள் அருணை பார்த்து புருவம் உயர்த்த , அவன் தோள்களை குலுக்கினான் தெரியவில்லை என்று.
“சரி கத்திரிக்காய் முத்தினா சந்தைக்கு வந்து தானே ஆகணும் , வரட்டும்” என்று அவள் நிற்க.
ஒரு காரில் வந்து இறங்கினார்கள் அவர்கள்.
விஷேஷ வீட்டிற்கு வந்தது போல தயாராகி கையில் பூ பழம் அடங்கிய தட்டோடு, அவள் கண்கள் கூர்மை அடைய அக்காவும் தம்பியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அறிமுகப் படலம் முடிய “எங்களுக்கு பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு, போட்டோல பார்த்தே பிடிச்சுது.. , எல்லாம் பேசிட்டோமே இன்னைக்கே பூ வெச்சு உறுதி பண்ணிக்கலாம்” என்க.
கொற்றவை திரும்பி தாயை பார்த்தாள் “என்ன நடக்கிறது இங்கே” என்று .
அவர் எப்பொழுதும் போல கையை பிசைய இவளுக்கு ஆத்திரம் உச்சம் தொட்டது , அவள் வாய் திறப்பதற்குள் “தப்பா எடுத்துக்காதீங்க , நீங்க வரதப் பத்தி எங்ககிட்ட சொல்லல” என்றான் அருண்.
அவர்கள் கோபாலனை பார்க்க “நா சொன்னா கேப்பாங்க அதெலாம் ஒன்னும் பிரச்னை இல்ல” என்க .
“என்ன கேப்பாங்க , என்ன நடக்குதுன்னு இன்னும் எங்களுக்கு புரியல, இங்க பாருங்க எங்ககிட்ட தெளிவா பேசுங்க அப்புறம் பாக்கலாம்” என்றான் அருண்மீண்டும்.
அதற்கு மேல் வெளி ஆட்கள் முன் அவரை கடிய முடியவில்லை.
“ஒன்றும் வேண்டாம் என்றால் இவர்களின் மூலம் எனக்கு சொர்க வாழ்வு என்று நான் போய் விட வேண்டுமா, என்ன பேச்சு இது “ என்று அன்னையை அதிர்ப்தியாய் பார்த்தாள் அவள்.
“ஏன்மா ரெண்டாம் தாரம்னு யோசிக்கிறியா, அவனுக்கு குழந்தைங்க இல்ல அதால உனக்கு பிரச்சனை இருக்காது” என்றபோது கொற்றவையை விட ராதா அதிர்ந்து நின்றார்.