வேலுச்சாமி நாச்சியம்மை தம்பதியின் மகள் வழிப் பேரனும், சிதம்பரத்தின் ஒரே தங்கையும், யுவாவின் செல்ல அத்தையுமாகிய சுபவாணியின் ஒரே தவப்புதல்வன் தான் நம் வேங்கை அஸ்வின்வர்மா.
பெற்றோரோடும் தன் காதல் மனைவி வெண்மதியோடும், தங்கள் காதல் வாழ்வுக்குச் சான்றாக இரண்டு வயது மகன் ஆதித்யவர்மாவோடும், அவன் வாசம் செய்யும் இடமோ அவனது தந்தை ஊரான ஊட்டியாக இருந்தாலும் தொழில் சாம்ராஜ்யத்தின் டைக்கூன் என்ற செல்லப் பெயர் கொண்டவனின் புகழோ நாடுகள் கடந்தும் படர்ந்திருக்க, வருடத்தின் பாதி நாட்களில் அவன் அதிகமாக இருப்பது என்னவோ வெளிநாடுகளில் தான்.
தன் காதல் மனைவி வெண்மதியை ஒரு நாள் கூட விட்டுப் பிரிந்திருக்க முடியாதவன் அவனுடைய அனைத்து தொழில்களிலும் அவளையும் ஒன் ஆப் தி சேர்மன் ஆக்கி இருப்பவன், அவளோடும் தன் மகனோடும் இணைந்தே தன் அனைத்து வெளியூர்ப் பயணங்களையும் மேற்கொண்டு வரும் அஸ்வினின் திறமையும், நேர்மையும், ஆளுமையும் பிடித்துப்போய் அவனோடு தொழில் தொடர்பு வைத்திருக்கும் பல அமெரிக்க நண்பர்களில் இன்று அவனோடு வந்திருக்கும் லீசாவும் எட்வட்டும் அவனுக்கு சற்று நெருங்கிய நண்பர்கள் என்று கூடக் கூறலாம்.
அமெரிக்கவிலேயே பிறந்து வளர்ந்து அங்கு விரல் விட்டு எண்ணக் கூடிய பணக்காரர்களில் ஒருவராக இடம் பிடித்திருந்த, லீசா எட்வட் உடன்பிறப்புகளோ, தங்கள் ஓய்வு நாளை மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டி, அஸ்வினோடு சேர்ந்து இந்தியாவிற்கு வருகை தந்திருக்க, வாழக்கையில் முதல் முறை தமிழ்நாட்டில் கால் வைத்திருக்கும் லீசா திருநெல்வேலி விமான நிலையத்தில் இறங்கியதிலிருந்தே நம் தமிழ் மக்களின் பேச்சு, பாவனை, நடை உடை என்று அனைத்தையும் ஒரு ஆச்சர்யமாகவே பார்த்துக் கொண்டு வந்தவள், அதே ஆச்சர்யத்தோடுதான் யுவாவின் குடும்பத்தினரையும் அணுகினாள்…
கிராமத்து, மண் மனம் மாறாத யுவா வீட்டு உறுப்பினர்கள் அனைவரிடமும் கை குலுக்கி அறிமுகமாகியவள்…
அங்கு ஆண்மையின் சின்னமாக பெயருக்கு ஏற்றார் போல் ராஜ தோரணையில் இறங்கி வந்த யுவாவைப் பார்த்து மயங்கித்தான் போனாள். அந்த வெள்ளைக்கார வெண்ணிலா.
அமெரிக்கக் குடிமகளான லீசா, பெரும்பாலும் வெள்ளை வெளீரென்ற மொழு மொழு முகம் கொண்ட ஆண்களையே பார்த்துப் பழகியவள், யுவாவின் தேன் வண்ண நிறத்தில், தேக்கு மர தேகத்தில், அணிந்திருந்த பருத்திச் சட்டையை மீறி வெளிப்போந்த அவனின் முறுக்கேறிய புஜத்தில், சற்றே அடர்ந்து மேல் நோக்கி வளைந்திருந்த அவனின் முறுக்கி விட்ட மீசையில், அலை அலையான அடங்கா கேசத்தில், அதை கோதி அடக்கும் காப்பு அணிந்த கரத்தில் என்று இப்படி மொத்த யுவாவையும் பார்த்த நிமிடமே அவனைத் தன் க்ரஸ்ஸாகவே ஏற்றுக் கொண்டவளோ, யுவாவின் மீசையை தொட்டுப் பார்த்து….
“இதுக்கு என்ன போட்டு வளக்குற ராஜ்” என்று கேட்டவளின் செயல் அங்கிருந்த இளம் ஆண்களுக்கு பெரிதாகத் தெரியவில்லையானாலும், அங்கிருந்த பெரிய ஆண்களுக்கும், ஒட்டு மொத்த பெண்களுக்குமே கொஞ்சம் ஒரு மாதிரியாகத்தான் இருக்க…
லீசா உள்ளே நுழைந்ததிலிருந்தே அவளின் பளிங்கு போன்ற வெற்றுத் தோள்களையும், அவளின் நுனி நாக்கு ஆங்கிலத்தையும் பார்த்தே இமைக்க மறந்து நின்ற மலருக்கோ, அவள் தன் கணவனை நெருங்கி அவன் மீசையை உரிமையாய் தொட்டுப் பார்க்கவும், அவள் வயிற்றுக்குள் பல அமிலக் கலவையின் சுரப்புதான்.
நம் வேங்கை அஸ்வின், “இது என்னோட பிஸ்னஸ் பிரண்ட்ஸ்” என்று லீசாவையும் எட்வட்டயும் அறிமுகப் படுத்திய நிமிடம் யாரிடமும் அளவாகப் பேசும் எட்வட்டோ “ஹாய் ராஜ், கிளாட்டூ மீட் யூ” என்று ஓரிரு வரிகளில் தன் உரையை முடித்துக் கொள்ள, அனைவரிடமும் சட்டென்று நெருங்கி விடும் லீசாவோ தன் வழக்கமான இயல்பாய் சட்டென்று யுவாவின் மீசையத் தொட்டுப் பேசியதுமே அன்னிச்சையாக அவளை விட்டு இரண்டடி தள்ளி நின்ற யுவா, தற்சயலாக மலரை நிமிர்ந்து பார்க்க, அவளின் முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடிக்க, அதைப் பார்த்தவன் உள்ளத்திலோ அத்துணை குதூகலம்.
தன்னை வேறு பெண் தீண்டியது தன் மனைவிக்குப் பிடிக்கவில்லை, என்பதை அவளின் பொறாமை விழிகளில் கண்டு கொண்டவனுக்கு மனதுக்குள் அந்தி மழைச் சாரல்தான். தனக்கே தனக்கான மனைவியின் பொறாமைப் பார்வையில், ‘இவன் தன்னவன், தன்னைத் தவிர அவனை யாரும் தீண்டக் கூடாது’ என்ற உரிமை உணர்ச்சியே அப்பட்டமாக வெளிப்பட, அதை மென் மேலும் கூட்டும் முயற்சியாக…
“பயணம்லா சவுரியமா இருந்திச்சா மச்சான்.?” என்று அஸ்வினையும், மதியையும் பார்த்து வினவியவன் “ஆதிக்குட்டி எப்படியிருக்கீக.?” என்று அஸ்வினின் மகனையும் வாங்கிக் கொஞ்சியவன், மலரின் மலர்ந்த விழிகளைப் பார்த்தவாறே, “நைஸ் டூ மீட் யூ லீசா அண்ட் எட்வட், வெல்கம் டூ அவுர் ஹோம்” என்று வேண்டுமென்றே அந்த லீசாவின் கரத்தைப் பற்றிக் குலுக்க… இங்கே மலரின் வயிற்றிலோ புகை வராத குறைதான்.
மலர்விழியைப் பார்த்துக் கொண்டே லீசாவின் கையை சற்று அதிகமாகவே குலுக்கி முடித்து விடுவித்தவனோ அவனே தன் குடும்பத்தினரை அவர்கள் பேர், உறவு என்று அனைத்தையும் சொல்லி அவளிடம் பேச்சை வளர்க்க. அவர்களைப் பார்த்திருந்த தனாவோ, “நானும் முறுக்கு மீச வச்சிருக்கலாம்” என்று சொல்லிக் கொள்ள, அதைக் காதில் வாங்கிய காயுவோ, “மவனே நீ ரூமுக்கு வா நா உன்ன முறுக்குறேன்” என்று தான் சொல்லிக் கொண்டாள்.
“ஷீ இஸ் மை கிராண்ட்மா” என்று அஸ்வின் அறிமுகப்படுத்திய நாச்சியின் செவியில் ஆடிய தண்டட்டியை ஆச்சரியமாகப் பார்த்த லீசாவோ, “வாட் ஆர் யூ டூயிங் கிரேண்மா.?” என்று கேட்க… அவரோ புரியாமல் பார்க்க, அருகில் நின்ற யுவா அவள் கேட்டதை விளக்கினான்.
அவரோ தான் கூட இது வரை தொட்டுப் பார்த்திடாத தன் ஆசைப் பேரனின் மீசையைப் பிடித்து இழுத்த லீசாவின் மேலும், வீட்டிற்குள் நுழைந்த கணத்தில் இருந்தே தன் வீட்டுப் பெண்களை ஒரு மாதிரியாகவேப் பார்த்திருந்த அவள் சகோதரன் எட்வட் மேலும் கோபத்தில் இருந்தவர்…
“அது வந்து சீசாப்புள்ள… இதுக்குப் பேரு தண்டட்டி, அந்தக் காலத்துல உங்கள போல வெள்ளக்கார பயலுவள எல்லாம் இத கழட்டி எரிஞ்சே, ஓட வச்ச பரம்பர என்ற பரம்பர” என்று சற்று கடுப்புடனே கூறியவரின் பேச்சை நல்லவேளை நம் வேங்கை கேட்கவில்லை.
‘ஆளுகலயும், உடுப்பையும், பேரையும் பாரு… சீசாவாம், எருவாட்டியாம்’ என்று அவர்கள் இருவரையுமே உள்ளூற திட்டிக் கொண்டவர்… தன் மூத்த பேரன் அஸ்வினுக்காக அதை வெளியே காட்டாமல் தான் மறைத்துக் கொண்டவருக்கு.
அழகை, ஆர்வமாக ரசிக்கும் தன்மையும், அதை அதிகப்படியாகவே பாராட்டும் செயலும் கொண்ட அந்த அமெரிக்கர்களைப் புரிந்து கொள்வது சற்று சிரமமான விஷயமாகத்தான் இருந்தது.
அப்பத்தாவுக்கு மட்டுமல்ல மலர்விழிக்கும் கூட லீசாவை கொன்று போடும் அளவிற்கு கோபம் இருந்தாலும், அவளை அழைத்து வந்தது தங்கள் வீட்டு மூத்த வேங்கை அஸ்வின் என்பதால் மட்டுமே பல்லைக் கடித்து பொறுமை காத்தனர் பாட்டியும் பேத்தியும்.
அப்பத்தாவின் பேச்சில் “அது சீசா இல்ல அப்பத்தா, லீசா” என்று முத்துப் பற்கள் தெரியும் வண்ணம் சிரித்துக் கொண்ட யுவா, நாச்சியின் பதிலில் விழித்த லீசாவிடம்…
“இட்ஸ் ஜஸ்ட் எ இயர்ரிங்க்” என்று மட்டும் சொல்ல. அவளோ, “இது மாறி எனக்கும் வேண்டும்” என்றாள் ஆங்கிலத்தில்.
யுவாவோ, “ஓகே வாங்கலாம்” என்றவன் மலரைக் காட்டி, “ஷீ இஸ் மை லவ்லி ஒயிப்” என்று அவளைப் பார்வையாலே மேய்ந்த வண்ணம் சொல்ல, அதைக் கேட்ட லீசாவின் முகமோ அப்பட்டமான அதிர்ச்சியைக் காட்டியது.
“ராஜ்… ரியலி? ஐ கான்’ட் பிலிவ், யூ ஆர் மேரிட்…..?” என்று ஒரு நொடி அதிர்ச்சியாகவே அவனைப் பார்த்தவள்…
மறுநொடியே, “எனிவேஸ் ஹாப்பி மேரிட் லைப் ராஜ்” என்று மீண்டும் அவன் கரம் பற்றிக் குலுக்கியவளைப் பார்த்த மலரோ…
ஆ ஊன்னா என் மாமா கையவே புடிச்சிக்கிறா, வெள்ளக்கார வெள்ளரிக்கா” என்று உள்ளூற நொடித்துக் கொண்டு, அவளை வெட்டவா குத்தவா என்பது போலப் பார்த்தவள்…
“ராஜ், யுவர் ஒயிப் இஸ் சோ கியூட்” என்று மலரைக் காட்டிப் புகழ்ந்து கொண்டிருந்த, லீசாவை நோக்கி வேகமாகச் சென்றவளோ, அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கூடப் புரியாதவளாய்….
சற்று முன்னர் தன் கணவனின் மீசையைத் தீண்டிய லீசாவின் கரத்தைப் பற்றி அவள் கையே துண்டாகி விடுமளவு குலுக்கியவள், “நாந்தே யுவா மாமாவோட சம்சாரம், மலர்விழி” என்று பல்லைக் கடித்துக் கூற, அந்தோ பரிதாபம் லீசாவுக்கோ அது புரியவே இல்லை.
யுவாவை கேள்வியாக நோக்கியவளிடம்,
“நீ ரொம்ப அழகாயிருக்கன்னு சொல்றா” என்று அவன் வேண்டுமென்றே சொல்ல…
லீசாவோ, “யூ ஆர் ஆல்சோ லுக்கிங் வெரி பியூட்டிபுல் டார்லிங்” என்று அவளும் மலரைப் புகழ, அது புரியாத மலரோ…
“நீ ரொம்ப பொட்டிபுல்லா (பியூட்டிபுல்) இருந்தா எனக்கென்னடி, அதுக்காக இப்டி அரையும் குறையுமா அலையனுமா.?” என்று அவளுடைய வெற்றுத் தோள்களையும், அவளின் மேல்சட்டைக்கும் காற்சட்டைக்கும் இருக்கும் அதிகப்படி இடைவெளியையும் பார்த்துக் கொண்டே கூறியவள், எங்கே தான் தள்ளிச் சென்றால் அந்த லீசா மீண்டும் தன் கணவனின் கரத்தை பற்றிக் கொள்வாளோ என்று பயந்தவள் போல், யுவாவின் கரத்தில் இருந்த நம் குட்டி வேங்கையை கொஞ்சும் சாக்கில் கணவனின் கரத்தை பற்றிக் கொண்டு, அளவுக்கதிகமாகவே அவனை ஒட்டி நின்று கொண்டவளின் இந்த புதிய அவதாரத்தில் கிறங்கியது என்னவோ யுவாதான்.
சுற்றி இத்துணை பேர் இருக்கிறார்கள் என்ற எண்ணம் கூட இல்லாதவள் போல் கணவனை மிக மிக ஒட்டி நின்றிருந்தவளை “ஏய் மலரு இங்க கொஞ்சம் வாடி” என்று அவள் அக்கா காயத்ரி அழைக்கவும், கணவனை விட்டுவிட்டு எப்படி செல்வது என்று திருதிருவென விழித்தவளோ…
“டீ மலரு” என்ற காயுவின் இன்னொரு அழைப்பில் வேறு வழியில்லாது யுவாவை விட்டு விலகிச் சென்றவள், கணவனை ஒரு மருகல் பார்வை பார்த்துக் கொண்டே விலகிச் செல்ல, அவளின் மான்விழியிலே தொலைந்த யுவா…
“டீ மொசக்குட்டி, பயப்புடாமப் போடி, இந்த யுவராஜோட உசுரு உனக்கு மட்டும்தேண்டி” என்றே முணுமுணுத்துக் கொண்டவன், அதை அவளிடம் கூறாததுதான் பெரும் பிழையாகிப் போனதோ..??
சில வருடங்கள் கழித்து சந்தித்த தாய் மாமன் குடும்பத்தினரோடு மிகவும் சுவாரசியமாகவே உரையாடிக் கொண்டிருந்த அஸ்வினை நோக்கிய சிதம்பரமும் மீனாட்சியும், “ரொம்ப தூரம் பயணம் செஞ்சதுல எல்லாரும் களப்பா இருப்பீக, போய் ஒரு வெந்நீக் குளியல் போட்டு வந்தீகன்னா, மணமணக்க மதியச் சாப்பாட்ட சாப்புடலாம்” எனக் கூறி புன்னகைக்க,
“சரிங்க மாமா” என்ற அஸ்வினோ தன் நண்பர்களை நோக்கி அதையே ஆங்கிலத்தில் கூற…
“எஸ் அஸ்வின், வேர் இஸ் மை ரூம்.?” என்ற எட்வட்டோ அருகில் நின்ற கதிரைக் கூட கவனியாது, “இந்தியப் பெண்கள் எல்லாருமே ரொம்ப அழகு” என்று ஜானுவை ரசித்தவாறே ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டே செல்ல, அதைக் கேட்ட கதிரின் கரமோ அவனையும் அறியாமல் இறுக்க மூடித் திறந்தது.
“லீசா… வாங்க உங்க ரூம காட்டறேன்” என்றழைத்த ஜானுவிடம் “ஐ நீட் மை ட்ராவல் பாக்” என்று லீசா கூறிக்கொண்டிருக்கும் பொழுதே வேகமாக வெளியே விரைந்த கதிரோ அவர்கள் வந்த காரிலிருந்து அனைவரின் பையையும் எடுத்து வந்து கொடுக்க, அதை வாங்கிக் கொண்ட லீசாவோ, “தேங்க்ஸ் டார்லிங்” என்று கதிரின் கன்னத்தில் தட்டி விட்டுச் செல்ல, அதைப் பார்த்த ஜானுவோ, அவனை எரித்து விடுவது போல் முறைத்தவள், “தோட்டதுக்கு வாடா” என்று உதடசைத்துச் சென்றாள்.
லீசாவும் எட்வட்டும் அவரவர் அறைகளுக்குச் செல்லவும் அங்கு காயுவோடும் மலேரோடும் பேசிக் கொண்டிருந்த வெண்மைதியை நோக்கிய அஸ்வினோ…
“பேபி என் ட்ரெஸ்ஸஸ் கொஞ்சம் வந்து எடுத்துத் தர்றியா.?” என்று சற்றே குழைந்த குரலில் கேட்க….
அவளோ, “ஆரம்புச்சிட்டீங்களா” என்பது போல் கணவனை நோக்கியவள்…
‘கல்யாணமாகி இத்தன வருசமாச்சு ஆனா இந்தப் பழக்கம் மட்டும் இன்னும் மாறவே இல்ல’ என்றெண்ணியவாறே அவன் பின்னோடு சென்ற மதிக்குத் தானே தெரியும், அவன் எதற்காக இப்படி வரவழைப்பான் என்று.
லீசாவை அவளுக்கென்று ஒதுக்கியிருந்த அறையில் விட்டுவிட்டு வந்த ஜானுவோ தோட்டத்தில் கதிருக்காகக் காத்திருக்க, ‘இந்த ஜானுக்கு இதே வேலையாப் போச்சு’ என்று புலம்பிக் கொண்ட கதிரோ வேறு வழியில்லாது அவளைப் பார்க்க விரைந்தான்.
“இங்க தான வரச் சொன்னா” என்றவாறே மல்லிகைப் பந்தலின் அருகே சென்றவனை ஒரு கரம் அந்த மல்லிகைப் பந்தலுக்குள் இழுத்துக் கொள்ள, அவனோ மல்லிகைப்பூவை விடவும் மெல்லிய மென்மைகளில்தான் மோதி நின்றான்.
தன் மேல் மோதி நின்றவன் கழுத்தில் கரம் போட்டு வளைத்துக் கொண்ட ஜானுவோ… “டேய் கதிரவா… என்னடா வெள்ளத்தோளப் பாத்ததும் மயங்கிட்டியா, அவ பேக்குன்னதும் நீ குடுகுடுன்னு ஓடற” என்று கடுப்பாகவே கேட்டவளிடம்…
“ஏன் ஜானு இப்டிலாம் பேசுற நம்ம வீட்டுக்கு வந்தவகள நாமதான கவனிக்கணும்” என்று அமைதியாகவே பதில் கூறினான் கதிரவன்.
அதற்கு அவளும், “அது என்னமோ சரித்தேன், ஆனா வந்தவகளக் கவனிக்குறீன்னு நீ அந்த வெள்ளப்பணியாரம் பின்னாடி அலஞ்ச, அப்றம் நா பொல்லாதவளாகிடுவீன் ஆமா” என்று அவன் சட்டையை உலுக்கி மிரட்டியவளோ, “நீ வேணா அந்த வெள்ளக் கொரங்கோட (குரங்கு) மட்டும் பேசிக்கோ” என்று எட்வட்டை குறிப்பிட்டுக் கூறியவளைப் பார்த்த கதிரோ அவனையும் மீறிச் சிரித்து விட, அவன் சிரிப்பில் மயங்கிய ஜானுவோ….
“சரி சரி விருந்தாளுகல கவனிக்கறது இருக்கட்டும் இப்ப வீட்டாள மொதோ கவனி” என்று மீசைக்கடியில் நெளிந்த அவனின் அழகிய அதரங்களைப் பார்த்தவாறு கூற, அவள் நோக்கத்தைப் புரிந்து கொண்ட கதிரோ, தனை விட்டு வேகமாக அவளை விலக்கியவன்…
“ஜானு வர வர நீ நடந்துக்கறதெல்லாம் ரொம்ப தப்பாருக்கு ஜானு, உன் தகுதிக்கேத்த ஆள் நா இல்ல ஜானு, ப்ளீஸ் ஜானு என் கிட்ட இப்டிலாம் பழகாதடீ” என்று உணர்ச்சியற்ற குரலில் கூறியவனின் முகத்தைத் தாங்கிய ஜானுவோ…
“நீ மொதோ இப்டி பேசுறத நிறுத்துக் கதிரவா, இந்த தகுதி, அது இதெல்லாம் எனக்குத் தெரியாது, எனக்கு நீதே வேணும், நீ மட்டும்தே வேணும்” என்றவள் அவனை இதழ் தீண்டியே விடுவிக்க… அவளவனோ அவள் அன்பில் நெகிழ்ந்தாலும், அவன் முகம் என்னவோ தெளிவில்லாமல் தான் இருந்தது.
ஆழ்ந்த முத்தமதில் தன் நேசத்தை உணர்த்திய பெண்ணவளோ, “எந்தக் காரணத்தக் கொண்டும் உன் கண்ணு அந்த லீசாப் பக்கம் போக்கூடாது” என்று கதரவனை எச்சரித்து விட்டே விலகிச் செல்ல, தனை உயிராய் நேசிக்கும் அந்த அரண்மனை வீட்டு இளவரசிக்கு, தான் தகுதியானவனில்லை என்ற தாழ்வு மனப்பான்மையில் தான் தவித்தான். அந்த அன்பிற்கினிய ஆணவன்.
விருந்தினர்கள் அனைவரும் குளித்து முடித்து வந்ததும் அறுசுவை உணவோடு,
சேர்த்து, பல பல கதைகளும், பேச்சும் சிரிப்பும் என்று யுவாவின் வீடே களைகட்டி இருக்க, அவர்களின் பேச்சில் நாளை நடக்கப் போகும் திருவிழா பற்றிய பேச்சும் அடங்க….
தன்னருகில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த யுவராஜைப் பார்த்த லீசாவோ “ராஜ்… வாட் அபௌட் இட் தெருவிழா. (திருவிழா)?” எனக் கேட்டவள் வந்த மூன்று மணி நேரத்தில் முன்னூறு தடவை யுவாவிடம் “ராஜ் ராஜ்” என்று உருகி வழிய, அதைப் பார்த்த மலர்விழிதான். உள்ளுக்குள் எரிமலையாய் குமுறிக் கொண்டிருந்தாள்.
“இந்த டிஷ் ரொம்ப நல்லாயிருக்கும் பேபி, போட்டுக்கோ” என்று தன்னருகில் அமர்ந்திருந்த மதியின் தட்டில் பல உணவுகளை எடுத்து அடுக்கிய அஸ்வினைப் பார்த்த காயுவோ “அண்ணா… அண்ணிய மட்டும் கவனிச்சாப் பத்தாது, உங்க ப்ரண்ட்ஸையும் கொஞ்சம் பாருங்க” என்று கிண்டலாகக் கூற,
மதியோ, “நா போட்டுக்கறேன் அஸ்வி” என்று முகம் சிவக்க,
“ஆமாத்தா… அந்த சீசாக்கும் எருவாட்டிக்கும் இந்த இறாத் தொக்க கொஞ்சம் எடுத்து வைத்தா” என்ற நாச்சியம்மையின் பேச்சில், அனைவரும் கொல்லென்று சிரித்து விட, அவர்கள் எதற்கு சிரிக்கிறார்கள் என்று புரியாத வெள்ளையர்களோ திருதிருவென முழித்துக் கொள்ள, அன்றைய பொழுது அனைவருக்கும் அப்படியே இதமாகவே கழிய, திருவிழா நாளும் மிகவும் இனிமையாகவே விடிந்தது.
பல பல சிந்தனைகளில் உளன்று, இரவு வெகுநேரம் கழித்தே உறங்கிய மலர்விழியோ தோட்டத்தில் கேட்ட பறவைகளின் கீச்சொலியில் கண் மலர்த்தியவளின் பார்வையோ அன்னிச்சையாக யுவாவின் படுக்கையை நோக்க அதுவோ காலியாக இருக்க, ஏதோ ஞாபகம் வந்தவளாய் ஓடிச் சென்ற பெண்ணவளோ கணவன் வழக்கமாக யோகா செய்யும் இடத்தைத் தான் பார்த்தாள்.
அங்கோ, தினசரி வழக்கமாக தோட்டத்தில் நின்றிருந்த யுவராஜ், அவன் அணிந்திருந்த உடலை ஒட்டிய இரவு உடையில், பரந்து விரிந்து மாரோடும், வெயிலில் பளபளத்த தோளோடும், ஆண்மையை பறை சாற்றும் அங்கமெல்லாம் வேர்வையாகி வழியும் நீரோடும், இடது காலை மடக்கி, முக்கோண வடிவில் வலது காலின் மேல் வைத்து, இருகையும் மேலே உயர்த்தி, விழிகள் மூடி சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருக்க…
லீசாவும் அப்பொழுதுதான் அங்கு வந்தவள் அவனைப் பார்த்து காணாததை கண்டவள் போல் விழி விரித்தவள்…
“ஹேய் ராஜ், வாட் ஆர் யூ டூயிங் மேன்.?” என்று ஆர்ப்பரித்தும் அவள் பேச்சு காதில் விழாதவன் போல் சற்று நேரம் கழித்தே மெல்ல தன் நடைமுறை வழக்கத்தை முடித்துக் கொண்டு இயல்புக்குத் திரும்பிய யுவா அவளை கண் மலர்த்திப் பாரத்தவன் அவளுடைய உடையின் அளவில் சற்றே முகத்தைத் தான் சுளித்தான்.
அவளுடைய கவர்ச்சித் தோற்றத்தில் ஒரு வித அருவருப்புடனே “ஹாய் லீசா குட் மார்னிங்” என்றவனோ
“இது சூரிய நமஸ்காரம்” என்று ஆங்கிலத்தில் கூறியவன், அதைச் செய்வதால் ஏற்படும் நன்மைகளையும் அவளுக்கு விளக்க,
அதை ஆர்வமாக செவிமடுத்த லீசாவோ வேகமாக அவனை நெருங்கியவள், “டெய்லி இது பண்ணா எனக்கும் மசில்ஸ் இப்டி போல்டா இருக்குமா.?” என்று, இரு குன்றுகள் போல் இருக்கும் அவன் வெற்றுத் தோள்களைப் பற்றிக் கேட்க…
அவனும், “ம்ம்ம் கண்டிப்பா” என்று சொல்ல… அவளோ, “இது எப்டி செய்றதுன்னு எனக்கு சொல்லிக்குடு ராஜ்” என்க…
அதைப் பார்த்த மலர்விழியோ ‘அய்யய்யோ மாரியாத்தா, இந்த வெள்ளக்கார வெல்லுளுக என் மாமான விடாது போடலையே’ என்று உள்ளூற எண்ணிக் கொண்டவளுக்கு லீசாவின் கரம் யுவாவின் மேல் படிந்திருந்த இடத்தைப் பார்த்து, அவளிதயம் ஒரு நொடி நின்றுதான் துடித்தது.
தூங்கி விழித்தவள் முகம் கூடக் கழுவாது மூச்சிரைக்க ஓடி வந்து தன்னருகில் நின்ற மனைவியைப் பார்க்காவிடில் யுவா லீசாவிடம் பேச்சை முடித்திருப்பானோ என்னவோ…
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தனை நெருங்கிய மனைவி “மாமா இங்கன என்ன பண்றீக.?” என்று படபடப்பாக வினவியவளைக் கண்டு உற்சாகம் கொண்டவனோ…
“கம் லீசா” என்று அவளின் கையைப் பற்றப் போக, அதற்குள் அவன் கரத்தை தான் பற்றிக் கொண்ட மலர்விழியோ…
“எனக்கும் யோகா சொல்லிக் குடுங்க மாமா” என்க…
அவனோ, “இதெல்லாம் உனக்கு பிடிக்காதே விழி” என்றான்.
அதைக் கேட்ட மலரோ, ‘அவ ராஜ் ராஜ் ன்னு உங்களக் கொஞ்சுறது கூடத்தே எனக்குப் புடிக்கல’ என்று வழக்கம் போல் புலம்பியவள்…
“அப்போ புடிக்காது, இப்போ புடிக்குது, எனக்கு சொல்லித் தருவீகளா மாட்டீகளா.?” என்று பிடிவாதக் குழந்தையாக வினவியவளின் பாவத்தில் அவளை குழந்தை போலவே அள்ளிக் அணைத்துக்கொள்ள யுவாவின் கரங்கள் அத்துணை பரபரக்க, இருந்தும் அசராது நின்ற அரிமாவோ…
“சரி சரி, சொல்லித்தர்றேன் ஆனா இன்னக்கில்ல நாளக்கி” என்றவன், “இன்னக்கி லீசாக்கு” என்று முடிக்கும் முன் அவனை மொத்தமாக அணைத்துக் கொண்டவளோ…
“இல்லயில்ல எனக்குதே இன்னக்கி சொல்லிக் குடுக்கனும்” என்று தவிப்புடன் கூறியவளின் முகம் பார்த்து சற்றே இறங்கியவனாய்…
லீசாவிடம், “சாரி லீசா, நீ கேட்டத என்னால செய்ய முடியாது” என்று ஆங்கிலத்தில் கூறி அனுப்பி வைத்தவன், தன் மேல் சரிந்திருந்த மலர்விழியை சூரியதிசை நோக்கித் திருப்பி நிறுத்தியவன் அவள் கரத்தோடு கரம் கோர்த்து, அவள் காலோடு கால் சேர்த்து, அவள் பின்னங்கழுத்தில் தன் உஷ்ண மூச்சைப் படர விட்டவன்….
அவனே இதுவரை செய்தறியாத யோகா முறையெல்லாம் அவளுக்குக் கற்றுக் கொடுக்க, அந்தக் கள்வனின் புது வித யோகாப் பாடத்தில் அவளின் பாலாடை மேனியோ நாணிச் சிவக்க, அதைப் பார்த்த ஆணவனின் பிடிவாதம் தான் தாக்குப் பிடிக்க முடியாது திணறத் தொடங்கியது.
ஒருவழியாக காலையில் லீசாவிடமிருந்து கணவனை காப்பாற்றிய மலர்விழி, கணவன் காலையில் கற்றுத் தந்த யோகாப் பாடத்தையும்…
“இனிமேல் டெய்லி யோகா கிளாஸ் இருக்கு” என்று அவன் தன் காதில் கிசுகிசுத்த வார்த்தைகளையுமே அசை போட்டவண்ணம் குடும்பத்தினரோடு சேர்ந்து மகிழ்ச்சியாகவே திருவிழாவிற்கு கிளம்பியவளுக்கும், அவளோடு ஆடு புலி ஆடும் அரிமாவுக்கும் அந்தத் திருவிழா நாளை மறக்க முடியாத நாளாகத் தான் மாற்றி விட்டாளோ அந்த வெள்ளைக்காரி லீசா.