பூஞ்சோலை கிராமத்தில் வருடம் தவறாது சித்திரை மாதத்தின் நல்லதொரு சுப நாளில் நடைபெற்று வரும் மாரியம்மன் கோவில்த் திருவிழா தமிழ் திரைப்படங்களில் எல்லாம் வரும் திருவிழா காட்சிகளுக்கு சிறிதும் குறைவில்லாத ஆர்ப்பாட்டத்தோடு ஊர் முழுதும் வான வேடிக்கைகளும், வீடுதோறும் மாவிலைத் தோரணங்களும், கோவில் முழுக்க ஜெக ஜோதியாக மின்னும் சீரியல் விளக்குகளும், செவித்திரையை கிழிக்கும் பக்திப் பாடல்களும் என்று களைகட்டத் தொடங்கியிருக்க.
அதற்கு மேலும் மெருகூட்டும் விதமாகவும், வருடமெல்லாம் உழைக்கும் விவசாய மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் பொழுதாகவும் அந்த திருவிழாவில் ஒயிலாட்டம் மயிலாட்டம் கலந்த ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும், உணவுப்பொருளில் தொடங்கி உடுத்தும் உடுப்பு வரை பலதரப்பட்ட கடைகளும், சிறுவர் சிறுமியருக்கு சுத்து ராட்டினம் தொட்டி ராட்டினம் போன்ற மகிழ்வூட்டும் சாதனங்களும், இன்னும் இளசுகளுக்கென்று கபடி, சிலம்பம், சைக்கிள் ரேஸ் போன்ற, பொழுதுபோக்கு அம்சங்களும் என்று அந்தத் திருவிழா நாளில் பூஞ்சோலை கிராமத்து மக்களுக்கு நிற்க நேரமில்லாது இனிமையான பொழுதுகள் வரிசை கட்டித் தான் நின்றது…
திருவிழா நாளின் காலை வேலையில் அனைத்து வீடுகளிலும், உள்ள சிறிசுகள் முதல் பெருசுகள் வரை ஆண்கள் முதல் பெண்கள் வரை, அனைவரும் சேவல் கூவும் முன்னரே எழுந்து, கூடவே அந்த சேவலையும் எழுப்பிவிட்டு மாதம் ஒருமுறை குளிப்பவர்கள் கூட அன்று நல்லெண்ணெய்க் குளியல் போட்டுவிட்டு, வருடத்தில் விசேஷ நாட்களில் மட்டுமே தங்கள் வீட்டில் செய்யப்படும் தோசை, இட்டலி, பணியாரம், இடியாப்பம் போன்ற காலை உணவுகளை ஒரு பிடி பிடித்த ஏழை எளிய மக்களுக்கு இப்படி ஒரு சில நாட்கள் மட்டுமே உழைப்பிலிருந்து சற்றே ஓய்வு. இது போல ஓய்வு நாட்களை ஓய்வென்று கூடக் கூறி விட முடியாது, அடுத்த ஒரு வருட உழைப்பிற்கு அவர்களுக்குத் தேவைப்படும் பூஸ்ட் என்று தான் அந்த கொண்டாட்டங்களைக் கூற வேண்டும்.
ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாது, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இல்லாது, அந்த பூஞ்சோலை கிராமத்து ஒட்டுமொத்த மக்களும், தங்களுக்குள் இருக்கும் சொந்த விருப்பு வெறுப்புகள் அனைத்தையும் ஒத்திவைத்து, ஒன்றுக்குள் ஒன்றாக கலந்து கொள்ளும் அந்த மாரியம்மன் கோவில்த் திருவிழாவில் குழுமியிருந்த அனைத்து மக்களும்…
தாங்கள் அனைவரும் யுவராஜனாக நினைக்கும் யுவாவையும், அவன் குடுபத்தினரின் வருகையையும் எதிர்பார்த்துக் காத்திருக்க, அங்கே யுவாவின் வீட்டிலோ அனைவரும் அவரவர் அறையில் திருவிழா செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்க, எப்பொழுதும் முதல் ஆளாகக் தயாராகும் மலர்விழியோ நாச்சியம்மையின் முன்னால் தான் அமர்ந்திருந்தாள்.
லீசா யுவாவுடன் நடந்து கொள்ளும் முறையில் எந்த விகல்பமும், உள்நோக்கமும் இல்லையென்றாலும், அந்த அமெரிக்கப் பாவை லீசாவைப் பார்க்கும் பொழுதெல்லாம் அன்று கணவன் கூறிய “உன்ன விவாகரத்துப் பண்ணிட்டு ஒரு வெள்ளக்காரப் பொண்ணக் கூட கட்டிக்குவேன்” என்ற வார்த்தைகளே மலரின் செவியில் ரீங்காரமிட, அவளைத் தன் எதிரியாகவே நினைத்தவளோ நாச்சியிடம்…
“அப்பத்தா அந்த வெள்ளக்கார வெறாமீன எனக்கு சுத்தமா புடிக்கல அப்பத்தா, எப்படியாச்சும் அவள நம்ம வீட்ட விட்டு தொரத்தணும், முக்கியமா அவ இந்த திருவிழாக்கு வரவே கூடாது, அதுக்கு ஏதாச்சும் பண்ணனும் அப்பத்தா” என்றவளின் பேச்சில் தீவிரமாக யோசனை செய்த நாச்சியோ மலரின் காதைக் கடிக்க, அவளோ லீசாவின் குளியலறைக்குச் செல்லும் தண்ணீர் வால்வை அடைத்தாள்.
கழிவறைக்குள் இருக்கும் லீசா கதவைத் திறந்து சுத்தம் செய்வதற்கு தண்ணீர் கேட்பாள் என்று அவளுக்காக மிளகுப்பொடி கலந்த தண்ணீரை வாளியில் நிரப்பிக் கொண்டு பாட்டியும் பேத்தியும் காத்திருக்க, அவளோ டிஸுப் பேப்பரை சுருட்டி குப்பையில் போட்டவண்ணம் கதவைத் திறக்க, அதைப் பார்த்த மலரோ நாச்சியை முறைத்தாள்.
தனை முறைத்துக் கொண்டிருந்த மலரிடம், “ஏத்தா மலரு, எல்லாரும் அமெரிக்கா அமெரிக்கான்னு பெருசா பேசுறாகளே, அங்கன இருக்கவக பூரா
இந்த வேலையத்தே செய்றாகளா.?
ச்சீ ச்சீ” என்று முகத்தைச் சுழித்தவர், “இந்த ஒரு விஷயத்துக்காகவே இவள இந்த வீட்ட விட்டு தொரத்தணும் ஆத்தா” என்றவருக்கு லீசாவும் ஜானுவும் உரையாடுவது கேட்க…
அவரோ, ஜானுவிடம் “என்னவென்று.?” கேட்டார்.
அவளோ, “நா போட்டுருக்க மாதிரியே பாவாட தாவணி உடுத்தணுமாம் அப்பத்தா” எனக்கூற, அதைக் கேட்ட நாச்சிக்கு ஒரு யோசனை தோன்ற, ஜானுவிடம் உடையை வாங்கி அதில் அரிப்புச் செடியை வைத்துத் தேய்த்தவர் அதைக் கொண்டு சென்று லீசாவிடம் கொடுக்க, அவளும் அதை அணிந்து கொண்டு வந்து காரில் ஏறினாள்.
அரிப்புச் செடியால் அவள் உடம்பு அரிப்பெடுக்கும், அதைச் சாக்கிட்டு அவளை வீட்டிலேயே விட்டுவிட்டுச் செல்லலாம் என்று பாட்டியும் பேத்தியும் கணக்குப் போட்டிருக்க, காருக்குள் அமர்ந்தவளும் அவர்கள் நினைப்புப் படியே மேனி அரிப்பால் நெளிய ஆரம்பிக்க, அதைப் பார்த்த மதியோ “லீசா எனி ப்ராப்லம்.?” என்று வினவ, அவளும் அவள் பிரச்சனையைக் கூற…
இப்பொழுது நாச்சியோ லீசாவை வீட்டில் இருக்கும் படி சொன்னார்..
ஆனால் எதற்கும் அசராத லீசாவோ,
“நோ நோ, ராஜ் எப்பவோ திருவிழாக்கு போயாச்சு நானும் கண்டிப்பா வருவேன், இந்த உடை தான் பிரச்சினைன்னு நினைக்கிறேன்” என்று ஆங்கிலத்தில் கூறியவளோ காரில் இருந்தபடியே தான் அணிந்திருந்த பாவாடை தாவணியின் சட்டையை மட்டும் கழற்றி எறிந்து விட்டு வெறும் தாவணியை மட்டுமே உள்ளாடையின் மேல் போட்டுக் கொண்டவள்…
“ம்ம்ம் சீக்கிரம் வண்டியை எடுக்கச் சொல்லுங்க” என்று அதே ஆங்கிலத்தில் கூற….
இப்பொழுது லீசாவின் செயலால் காரிலிருந்த அனைத்து பெண்களும் அதிர்ந்து போய் தங்கள் நெஞ்சில் தான் கை வைத்துக் கொண்டனர்.
நல்ல வேலையாக ஆண்கள் அனைவரும் வேறு காரில் ஏறியிருக்க, ஓட்டுனர் கூட இன்னும் வராதிருக்க, சூழ்நிலை உணர்ந்த மதியோ “ஒரு நிமிஷம்” எனக் கூறிவிட்டு லீசாவை அழைத்துச் சென்று அவளை வேறு உடை மாற்ற வைத்து அழைத்து வர, தங்கள் பாச்சா எதுவும் அந்த அமெரிக்க அழகியிடம் பலிக்காததால் மலரோ முகத்தை உம்மென்று வைத்துக் கொள்ள, நாச்சியோ தலையைத் தாழ்ந்து கொள்ள, அந்த மகிழுந்தும் மெல்லக் கிளம்பி அனைவரையும் சுமந்து கொண்டு மாரியம்மன் கோவிலை நோக்கி வேகமெடுத்தது.
அங்கு மாரியம்மன் கோவிலில் பூஞ்சோலை மக்கள் மட்டுமல்லாது சுத்துப் பட்டியில் இருக்கும் பல கிராமத்து மக்களும் குழுமி இருந்தவர்கள், திருவிழா ஏற்பாட்டை பற்றிப் பெருமையாக பேசிக் கொண்டும், ஜெக ஜோதியாக ஜொலித்திருந்த அம்மனை பிரமித்துப் பார்த்துக்கொண்டும் இருந்தவர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பில் அனைவரின் விழிகளும் ஒருமித்து கோவில் வாயிலை நோக்கிப் பாய, அங்கு வந்து கொண்டிருந்தது என்னவோ யுவாவும் அவன் குடும்பத்தினரும் தான்.
ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் புத்தம் புதிய பட்டு வேஷ்டி சட்டையில் யுவராஜ், தன்ராஜ், கூடவே நம் வேங்கையும், அவரவர் ஜோடிகளோடு முன்னே விரைய, அவர்களோடு கதிரும் ஜானுவும், லீசாவும் எட்வட்டும் கூட சேர்ந்து தொடர, சிறியவர்களைத் தொடர்ந்து சென்றனர் யுவா வீட்டுப் பெரியவர்கள்.
யுவாவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கோவிலுக்குள் நுழையவும் அனைத்து மக்களும் அவர்களுக்கு கைக்கூப்பி வணக்கம் தெரிவிக்க, அனைவரிடமும் தலையசைத்து புன்சிரிப்புகளை உதிர்த்த வண்ணம் சென்றனர் யுவராஜும் அவன் வீட்டினரும்.
அவர்கள் வருகைக்காகவே காத்திருந்த அர்ச்சகரோ சிதம்பரத்தின் “சாமி ஆரம்பிங்க” என்ற வார்த்தையில் அவர்கள் கொண்டுவந்த பூஜைத் தட்டுகளோடு கருவறைக்குள் நுழைந்தவர் அங்கே வீற்றிருந்த அம்மனுக்கு, சிறப்பு பூஜைகளை நடத்தத் தொடங்க, அங்கு குழுமியிருந்த அனைத்து மக்களும் தங்கள் தெய்வத்தை விழி மூடி மனமுருக பிரார்த்திக்கத் தொடங்கினர்…
பூஜை செய்து முடித்த அர்ச்சகரோ சாமி பாதத்தில் வைத்து எடுத்து வந்த பரிவட்டத்தையும் ஊர்த் தலைவர் என்கிற முறையில் யுவாவுடைய அப்பாவின் தலையில் சூட்டி விட்டு, அத்தோடு இருந்த மாலையையும் அவருக்கு அணிவித்து விட, ஊர்மக்கள் அனைவரும் யுவாவின் அப்பாவையும் தாத்தாவையும் வணங்கி விட்டுச் செல்ல, ஒருவழியாக பூஜை புனஸ்காரங்களும், மாலை மரியாதைகளும் எல்லாம் முடிந்து திருவிழா கொண்டாட்டங்களும் ஆரம்பமாகியது.
அம்மனை தரிசித்து முடித்து பிரசாதமும் பெற்றுக் கொண்ட ஊர் மக்கள் அனைவரும் ஒருபக்கம் அன்னதானமும், மறுக்கம் கேலிக்கைகளும் நடந்து கொண்டிருந்த இடங்களை நோக்கிக் கலைந்து செல்ல… யுவா வீட்டுப் பெண்களும் ஊர் மக்களோடும், உறவினர்களோடும் அளவளாவிக் கொண்டிருந்தனர்.
ஆண்களும் பிரசாதத்தோடு வெளியே வந்தவர்கள் அப்படியே பேசியபடியே நின்றிருக்க அஸ்வினோ “திருவிழா ஏற்பாடெல்லாம் ரொம்ப சூப்பரா செஞ்சிருக்கீங்க யுவா” என்று யுவராஜிடம் கூற…
அவனோ, “நன்றி மச்சான்” என்றவன், “அம்மன் தரிசனமும் ரொம்ப நல்லா இருந்ததுல மச்சான்” என்று சொல்லிக் கொள்ள, அஸ்வினும், “ஆமா யுவா” என்று ஆமோதிப்பாய் தலையசைக்க…
அவர்களோடு நின்ற தனாவோ,
“சரி நீங்க பேசிக்கிட்டிருங்க நா போய் அன்னதானம் எல்லாம் சரியா நடக்குதான்னு பாத்துட்டு வர்றேன்” எனக் கூறி விலகிச் சென்றான்.
அங்கு சிதம்பரத்துடனும் மீனாட்சியுடனும் வந்த அவருடைய உறவினர்கள் ஒரு சிலர், அஸ்வினைக் காட்டி “ஏப்பா சிதம்பரம்… இது நம்ம சுபாம்மா பையன் தானே.?” என்று கண்ணைச் சுருக்கி வினவ.
“ஆமாப்பா, என்ற மருமவன்தே, இதுதே அவுக சம்சாரம், மூணு வருஷம் முன்ன என்ற பேரனுக்கு மொட்ட போட வந்தப்போ பாத்தீகள்ளப்பா, மறந்துட்டீகளா.?” என்றவர் அஸ்வினையும், மதியையும் அழைத்து அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க, ஹிந்திப் பட ஹீரோ ஹீரோயின் போல இருந்த அஸ்வினையும் மதியையும், மற்ற உறவினர்களும் வந்து சூழ்ந்து கொள்ள… அதைப் பார்த்த யுவா “மாட்டிகிட்டீக அஸ்வின் மச்சான்” எனக் கூறிச் சிரித்தவனோ, மெல்ல அங்கிருந்து நழுவி “இந்தக் கதிர்ப் பய எங்க” என்று தேட, அவனோ கையில் ஒரு கைபேசியும், காதில் ஒரு கைபேசியுமாய் அலைய, எட்வட்டும் அவன் பின்னால் தான் அலைந்தான்.
திருவிழாவை முன்னிட்டும், அஸ்வினின் வருகையாலும் இரண்டு நாட்களாக யுவா தொழிற்சாலைப் பக்கம் செல்லாததால் அவன் தொழில் அழைப்புகளை எல்லாம் கதிரவன் தான் ஏற்றுப் பேசிக் கொண்டிருக்க, அங்கு பெண்களோடு இருந்த ஜானுவோ அவனையே பார்த்துக் கொண்டிருக்க…
அவனோடு இருந்த எட்வட்டோ, “ஒய் போர் தி டிலே காதிர், நா ஜானுகிட்ட இப்பவே பேசணும், ப்ளீஸ் ஹெல்ப் மேன்” என்று ஜானுவை தனிமையில் சந்திக்கத்தான் கதிரின் உதவியைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
கைபேசியில் பேசி விட்டு வந்த கதிரிடம் யுவா தொழில் விஷயம் பற்றி சிறிது பேசிக் கொண்டிருக்க, அப்படியே ஒரு சில உறவுக்காரர்களும் வந்து அவனிடம் உரையாடலைத் தொடங்க, பொழுதும் மெல்ல நகர்ந்தது.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.