திருவிழாவைப் பற்றியும், இன்னும் பல விஷயங்கள் பற்றியும் உரையாடி முடித்த உறவினர்களும், கதிரும் சற்று நேரம் கடந்தே யுவாவை விட்டு விலக, அதற்காகவே காத்திருந்தவள் போல் அவனை நோக்கி வந்த லீசாவோ, “அது என்ன ராஜ்.?” என்று யுவாவின் அப்பா தலையில் இருந்த பரிவட்டத்தைக் காட்டிக் கேட்க, அவனும் அதை விளக்க, அதைப் பார்த்த மலரோ, இத்துணை நேரம் கணவனைக் கண்டு கொள்ளாது திருவிழாக் கொண்டாட்டத்தில் மூழ்கி இருந்தவள் லீசா யுவாவை நெருங்கவும் அவளும் வேகமாக ஓடிவந்து, கோவில் என்றும் பாராமல் கணவனின் கரத்தை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள்.
மலரின் செய்கையில் ஒரு நொடி மகிழ்ந்த யுவா சுற்றி முற்றிப் பார்த்து விட்டு…
“டீ விழி இது கோவில்டீ, எல்லாரும் பாக்குறாங்க பாரு கைய விடுடி” என்று அவள் காதில் கிசுகிசுக்க…
அவளோ, “யாரு பாத்தா என்ன மாமா, என் புருஷன் கைய நா புடிக்கிறேன்” என்றவள் இன்னும் அவன் கையை அழுத்தமாகப் பற்ற, யுவாவுக்கோ ஆறடி மேனியில் நூறு கோடி பூக்கள் கொட்டிய உணர்வுதான்.
அவர்களோடு நின்ற லீசாவோ, அடுத்ததாக அங்கு அரச மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த சிறிய அளவிலான தொட்டில்களையும் மஞ்சள்கயிறுகளையும் காட்டி
“இதெல்லாம் என்ன ராஜ்.?” என்று மீண்டும் வினா எழுப்ப…
யுவாவோ மலரை வெறுப்பேத்தவென்றே லீசாவின் கேள்விக்கு மிக விளக்கமாகவே பதில் கொடுத்துக் கொண்டிருக்க, அவன் செயலில் கடுப்பாகிய மலரோ பொறுமை இழந்தவளாய்…
“மாமா இப்போ அவள போகச் சொல்றீகளா இல்லியா.?” என்று முறைப்பாகக் கேட்க…
அவனோ, “ஏண்டி நா அவ பின்னாடியே போயிருவேண்டு உனக்கு பயமாயிருக்கா.?” எனக் கேட்டான்.
மலரோ, “பயமா.? எனக்கா.? இல்லியே” என்று தன் உணர்வுகளை வெளிக்காட்டாது மிடுக்காகவே கூறியவள்… கூடவே, “என் மாமா அப்படிலா எந்த தப்பும் பண்ண மாட்டீக, எனக்குத் தெரியும்” என்றும் சேர்த்துக் கூற, யுவாவோ அவளை நோக்கி ஒரு நக்கல் சிரிப்பைச் சிந்தியவன்….
“ஒரு பொம்பளக்கி கொஞ்சமாச்சும் பயம் வேணும்டி… நா நெனச்சத நடத்த நான் எந்த எல்லைக்கும் போவேன்” என்றும் சற்று கர்வமாகவே கூறியவன் அந்த நிமிடம் அதை விளையாட்டாகவே கூறியிருந்தாலும், அவன் வார்த்தைகள் வினையாகப் போவதை ஆணவன் அறிந்திருக்கவில்லையோ…???
லீசாவின் வருகை மலருக்குப் பிடிக்கவில்லை என்றாலும், திருவிழா நினைவில் அத்துணை நேரமும் மகிழ்ச்சியான முகத்துடனே வளைய வந்த மலர்விழியோ திடீரென்று அந்நியன் போலப் பேசிய யுவாவின் கூற்றில் அவன் போட்ட நிபந்தனையும் அவன் கூறிய விவாகரத்தும் பெண்ணவளுக்கு ஞாபகம் வர, கணவனை ஏறிட்டு ஒரு அடிபட்ட பார்வை பார்த்தவள் மெல்ல அவன் கரத்திலிருந்த தன் கரத்தை பிரித்தெடுக்க முயல, அவளவனோ அதற்கு விட்டால் தானே.
வழக்கம் போல் கர்வம் கொண்டு அவளைக் காயப்படுத்தியவன், இப்பொழுது அவள் முகத்தில் படர்ந்த கலக்கம் கண்டே தலை கோதி தன்னைத் தானே நிலைப்படுத்திக் கொண்டவனோ, தன் கையை விட்டு விலக முயன்ற மனைவியை, அவள் இடையோடு வளைத்துப் பிடித்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவனுக்கு, இப்பொழுது அது கோவில் என்று ஞாபகத்தில் இல்லை போல…
தன் சுடு சொற்களால் சட்டென்று பொலிவிழந்து வாடிய மலரின் மலர் முகத்தை, மலர வைக்க நினைத்த யுவாவோ தன் அணைப்பில் இருந்தவளின் செவியில், “உனக்குப் பிடிச்ச ராட்டணம் சுத்தலாம் வா விழி” என்று குரல் குழைய அழைக்க…
அவளோ “நா வரல மாமா” என்று உள்ளடங்கிய குரலில் மறுத்து அவனிடமிருந்து விலக போராடிக் கொண்டிருந்தாள்.
சுற்றிலும் நிறையப் பேர் இருந்ததாலோ என்னவோ தான் அணைத்திருப்பது வெளியே தெரியாத வண்ணம் மனைவியின் இடையோர புடவைக்குள் கையை மறைத்து அவளின் உடுக்கையை ஒத்த வெற்றிடையை அழுந்தப் பற்றியிருந்தவனின் அருகாமையில் நெளிந்த வண்ணமும், அடுத்தோர் கவனத்தை ஈரக்காத வண்ணமும்,
“என்ன விடுங்க மாமா நா போணும்” என்று அவனிடமிருந்து விலக போராடிக் கொண்டிருந்தவளின் இடையைப் பிசைந்த வண்ணமே, அவள் மனதை மாற்றும் பொருட்டாய், “நீ வரலன்னா லீசாவக் கூட்டிட்டு போவேன்” என்றவனோ
“கம் லீசா” என்று மறுகையால் லீசாவின் கையைப் பற்றப் போக, ஆணவனின் செயலில் அனைத்தும் மறந்த மலரோ சட்டென்று, “வேணாம் மாமா நானே வர்றேன்” என்று வேகமாக லீசாவின் கையைத் தட்டி விட்டாள் பெண்ணவள்…
அதைப் பார்த்த லீசாவோ அவர்களின் சித்து விளையாட்டைப் புரிந்து கொண்டவளாய் “ராஜ்… என்ன வச்சு காமெடி கீமடி பண்ணலியே.?” என்று ஆங்கிலத்தில் கேட்க, அவனோ, “ச்ச ச்ச” என்று எல்லா பக்கமும் தலையை ஆட்டியதில் இருவரும் சேர்ந்தே சிரித்துக் கொள்ள, “என்ஜாய் ராஜ்” என்ற லீசாவோ யுவாவின் கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டே அவ்விடம் விட்டு விலகிச் செல்ல அதைப் பார்த்த மலரோ, யுவாவைத் தீயாகத் தான் முறைத்தாள்…
அதைப் பார்த்த யுவா, “வர வர உனக்கு ரொம்ப கோவம் வருது விழி, அத குறைக்கணும்னா காலைல நா சொல்லிக் கொடுத்தமாறியே நிறைய யோகா செய்யணும்” என்று அவள் காதில் கிசுகிசுக்க…
அவளோ, “எது, காலைல நீங்க சொல்லிக் குடுத்தது யோகாவா.?” எனக் கேட்டு கண்ணம் சிவந்தாள்…
அவனோ, “ஆமடி அது கபில்ஸ் யோகா அப்டித்தேன் இருக்கும்” என்று கண் சிமிட்டியவனோ அவளை அணைத்தபடியே அழைத்துச் சென்று அவளிடம் கூறியது போலவே அவளை ராட்டினம் சுற்ற வைத்து பார்த்து ரசிக்க, அவர்களையே வன்மமாக பார்த்திருந்தன இரு விழிகள்.
தனக்கும் தன் குடும்பத்திற்கும் கிடைக்காத மதிப்பும் மரியாதையும் யுவாவிற்கும் அவன் குடும்பத்திற்கும் கிடைப்பதில் எப்பொழுதும் யுவாவின் மேல் வன்மத்தோடே இருக்கும் மாயனோ, அங்கே மனைவியோடு உலா வந்த யுவாவையே விழி எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தவனை நெருங்கிய, அவன் கையாளோ,
“அண்ணே பாத்திகளா உங்க பங்காளிய, கட்டிக்க மாமன் பொண்ணு, தொட்டுக்க அமேரிக்கா பொண்ணுன்னு வாழ்றான்னே வாழ்றான், அவனுக்கு எங்கயோ மச்சம் இருக்குண்ணே, கொஞ்சம் முன்ன அவேன் கூட இருந்த வெள்ளக்காரியப் பாத்தீகளா, என்னா கலரு, சுண்டி விட்டா ரத்தம் வரும்னே” என்று அவன் பேசப் பேச மாயனின் கை முஷ்டி இறுகிக் கொண்டே செல்ல, அவனின் வன்ம விழிகளோ இப்பொழுது முற்றிலும் மலரின் மேல் தான் படிந்திருக்க அவன் உதடுகளோ,
“ஆமடா… அவன் மச்சக்காரன் தாண்டா” என்றே முணுமுணுத்துக் கொண்டது.
யுவாவின் மாமன் மகள் மலர்விழியோ மாயனுக்கும் முறைப் பெண் முறையாக இருந்ததில் சிறுவயதில் இருந்தே அவனுக்கும் மலரின் மேல் ஒரு கண் இருக்க, மலரின் தந்தையோ என் மகள்கள் என் தங்கை மகன்களுக்குத் தான் என்று கூறிவிட்டதில் பெருத்த ஏமாற்றம் அடைந்த மாயனுக்கோ அப்போதிலிருந்தே அவன் வன்மம் இன்னும் அதிகமாகித்தான் இருக்க,
இப்பொழுது யுவாவும் மலரும் ஜோடியாகவும், முகம் கொள்ளாப் புன்னகையோடும், கோவில் என்று கூடப் பாராமல் இத்துணை நெருக்கமாகவும் உலா வந்தவர்களைப் பார்த்ததில் அவன் விழிகள் ரெண்டும் தீயாய் தகதகத்தது…
“எனக்கு கிடைக்காதது யாருக்கும் கெடைக்கக் கூடாதுடா உய்யான், அவுத்து வுடுறா அந்தக் கோயில் காளைய” என்று தன் அடியாளிடம் கூறியவனோ….
அவன், “அண்ணே” என்று சற்றே தயங்கவும் அவனே சென்று அங்கு அரசமரத்தில் கட்டப்பட்டு திமிரிக் கொண்டிருந்த காங்கேயம் காளையின் கயிறுகளை அவிழ்த்து விட்டவன் அதனை யுவாவும் மலரும் இருந்த திசை நோக்கி ஓடுமாறு அதன் முதுகில் கம்பு கொண்டு ஓங்கி ஒரு அடியையும் அடித்துவிட….
அதுவோ, “ம்ம்மா” என்ற அலறலோடு யுவாவையும் மலரையும் நோக்கி ஓட ஆரம்பித்தது.
நாலு கால் பாய்ச்சலில் சீறி வந்த காளையைப் பார்த்து அந்த கோவில்த் திடலில் கூடியிருந்த அனைவரும் “அய்யய்யோ, மாடு வருது, மாடு வருது” என்று கூக்குரலிட்டபடியே நாலாபுறமும் தெறித்து ஓட,
அந்த பதட்ட சூழல் உணர்ந்து திரும்பிய யுவாவோ, தங்களை நோக்கிச் சீறி வந்த காளையைப் பார்த்துப் பதறியவன் சட்டென்று மலரின் கரத்தையும் பற்றிக் கொண்டு ஓட ஆரம்பிக்க, அவளும் பின்னே திரும்பிப் பார்த்து காளையைக் கண்டு பயந்தவளும், “மாமா” என்று அவனை ஒட்டியபடியே ஓட, அந்தக் காளையும் அவர்களை விடாது துரத்தியது.
ஒரு கட்டத்தில் மலரின் வேகம் குறையவும், அவளைக் காளையிடமிருந்து காப்பாற்ற எண்ணிய யுவா அவளைப் பிடித்து வேறு திசையில் தள்ளிவிட முனைய, ஆனால் அவனவளோ கணவனுடன் மேலும் ஒன்றினாள்.
மலரின் செயலில் அதிர்ந்த யுவராஜோ ஒரு நொடி நின்று அவள் முகம் பார்க்க, அந்த முகத்திலோ ‘நான் உன்னைத் தனியாக விட்டுப் போகமாட்டேன்’ என்ற அத்துணை தீவிரம்.
எந்த நேசத்தின் காரணமாக அவன் அவளைத் தள்ளி விட முனைந்தானோ அதற்கு சிறிதும் குறைவில்லா நேசத்தோடு, அவள் அவனை விட்டு விலகிப் போக மறுக்க, அந்த ஆபத்தான சூழலிலும் மனைவியின் செயலில் நெகிழ்ந்த யுவா காளை தங்களை சமீபிக்கவும், அவளை இப்பொழுது தன் கரங்களில் ஏந்திக் கொண்டு ஓடத் துவங்க…
மலரும் பயத்தில், “அத்தான் ” என்று கணவன் மார்பில் ஒன்றத் தொடங்கினாள்.
சீறி வரும் காளை தங்களை துரத்துகிறது என்பதையும் மீறி மனைவியின் செய்கையே யுவாவின் நெஞ்சாங்கூடு முழுதும் நிறைந்திருக்க. அந்த ஆறடி ஆணவனோ காதலிக்கப் படுவதின் இன்பம் அதை முதன் முதலாய் உணர்ந்து கொண்டான் யுவராஜ்.
மலரைத் தூக்கிக்கொண்டு ஓடியவன் அங்கிருந்த சூலாயுதத்தை நெருங்கிய சமயம், மலரை இடது தோளில் போட்டுக் கொண்டு அதில் சுற்றப்பட்டிருந்த மஞ்சள் துணியை வலது கரத்தில் உருவிக் கொண்டு ஓடிய யுவா…
ஒரு கட்டத்தில் ஓட்டத்தை நிறுத்தி மலரை இறக்கி விட்டுத் திரும்பி நின்றவன் அந்தக் காளையின் முன்னே தன் கையில் இருந்த மஞ்சள் துணியை விரித்துக் காட்ட, அதற்குள் அவன் வயிற்றுப் பகுதியில் தன் கொம்புகளை உரசியிருந்த காளையோ அந்த மஞ்சள் துணியையும் அதில் தீட்டியிருந்த அம்மன் படத்தையும் பார்த்ததும் இப்பொழுது தன் ஆக்ரோசத்தைக் கைவிட்டு மெல்ல யுவாவை விட்டுப் பின்வாங்க, அதற்குள் அவர்களைப் பின் தொடந்து ஓடி வந்த தனா, அஸ்வின், மற்றும் இன்னும் பிற ஆண்களும் காளையை இழுத்துக் கொண்டு போய் அதனிடத்தில் கட்டினர்.
(சிவப்புக் கலரப் பாத்தா காளைக்கி கோவம் வரும்னு காட்டுறப்போ நம்புனீங்கள்ள, அதேபோல மஞ்சக் கலரப் பாத்தா கோவம் போயிரும்னும் நம்புங்கப்பா, அதுல அம்மன் படம் வேற இருக்கே. நம்பிக்கை தானே எல்லாம். அவ்வ்வ்🙈🙈.)
காளையை இழுத்துச் செல்லவும் உடல் நடுங்க தன்னருகில் நின்றிருந்த மனைவியைப் பார்த்த யுவாவோ
“ஒன்னுமில்ல விழிமா பயப்படாத” என்று விழி மூடித் திறந்தவன், “இங்க வா” என்று தன் கைகளையும் விரிக்க…
அவளோ “அத்தான்…” என்று அவனை நெருங்குவதற்குள்…
“ராஜ்…” என்று கூவியபடியே ஓடி வந்து யுவராஜை அணைத்துக் கொண்ட லீசாவோ, அத்தோடு நில்லாமல், “வாட் எ பெர்ப்பாமன்ஸ் ராஜ்” என்று சொல்லியபடி அவன் கன்னத்தில் தன் சாயமிட்ட இதழ்களையும் அழுந்தப் பதிக்க, யுவாவோ அதிர்ந்து விழிக்க…
அதைப் பார்த்த மலரின் கால்களோ கணவனை நெருங்க முடியாது நின்ற இடத்திலேயே புதைந்து தான் போனது.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.