வாயில் நுரை தள்ளியபடி தன்னிடம் பேசிக் கொண்டிருந்த மனைவியை “உனக்கு ஒன்னும் ஆக விடமாட்டேன் விழிமா” என்று அவள் முகமெங்கும் முத்தமிட்டவனோ, அவள் இதழ் ஓரம் தனக்கு பரிச்சயமான ஏதோ வாசனையை உணர்ந்து துணுக்கமுற்றவன்…
மீண்டும் அவளை நெருங்கி அந்த வாசனையை நன்கு உணர்ந்தவனோ அது கிராமப்புறங்களில் சீகக்காய் அரைக்கும் பொழுது நுரை வருவதற்கு சேர்க்கப்படும் பூந்திக்காயிலிருந்து கிடைக்கும் பூந்திக்கொட்டை என்றொரு பொருளின் வாசனை என்று கண்டு கொண்டவனின் விழிகள் பிரகாசமாக மின்ன, யுவா இப்பொழுது மலர்விழியை கூர்ந்து கவனித்தான்…
அவளோ மயங்கி இருக்கிறேன் என்ற பெயரில் கண்களை சிமிட்டிக் கொண்டும், நாக்கை லேசாக பாம்பு போல் வெளியே துருத்திக் கொண்டும் கணவனின் கைகளில் கிடந்தவளைப் பார்த்தவனோ அவள் விஷம் அருந்தவில்லை, விஷம் அருந்தியது போல் நடித்துக் கொண்டிருக்கிறாள் என்று கண்டு கொண்டவனுக்கு, தன் மனதின் பரவசத்தை வார்த்தையால் விவரிக்க முடியாதளவு இன்பக்கடலுக்குள் தள்ளப்பட்டான் யுவா.
ஆம் மலர்விழி விஷம் அருந்தவில்லை, சற்று முன்னர் தன்னறையில் ஒரு கையில் கடிதத்தையும், மறு கையிலிருந்த பூச்சி மருந்தையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே கண்கலங்கி அமர்ந்திருந்தவளுக்கு, அந்த பூச்சி மருந்தை குடித்து விடலாமா என்றொரு யோசனை இருந்தாலும் அதைச் செய்ய விடாமல் அவளுக்குள் இருக்கும் உயிர்பயமும் தடுத்துக் கொண்டிருக்க, அவளோ ‘நம்ம செத்து போய்ட்டா அப்றம் மாமாவ பாக்க முடியாதே’ என்றும் எண்ணியபடியே அமர்ந்திருக்க வெளியே நாச்சியோ…
“எத்தா மலரு கதவத் தொரத்த” என்று தட்டிக் கொண்டிருந்தார்…
அவளோ வேறு வழியில்லாமல் எழுந்து கதவைத் திறந்தவள், நாச்சியைப் பார்த்ததும், “அப்பத்தா” என்று அழுகத் தொடங்கிவிட்டாள்.
“அப்பத்தா நா தப்பு பண்ணிட்டேன் அப்பத்தா மாமாக்கு நா ஏத்தவ இல்ல அப்பத்தா, மாமாக்கும் என்னய புடிக்கல அப்பத்தா, நா வேணா செத்து போயிர்றீன், நீங்க மாமாக்கு அந்த லீசாவக் கூட கட்டிவச்சுருங்க அப்பத்தா” என்று புலம்பத் தொடங்கியவளை…
“ஏ ஏ கிறுக்குப் பயபுள்ள, லூசு மாறி உலராத.? புருஷன் கோவத்துல நாலு வார்த்த திட்டி ஒரு அடி அடிச்சா அவனுக்கு உன்னய புடிக்கலன்னு அர்த்தமா.?” என்று கேட்க…
அவளோ “அது மட்டும் இல்ல அப்பத்தா, இதப் பாருங்க” என்று கையிலிருந்த கடிதத்தைக் காட்டினாள் மலர்விழி…
“இந்த கடுதாசி லீசா அனுப்பிருக்கா அப்பத்தா என்கூட வாழ்ந்தது போதும்,
நீ உம்னு ஒரு வார்த்த சொன்னா உடனே கிளம்பி வர்றேன் ராஜ்னு” கொஞ்சிருக்கா என்று மூக்கை உறுஞ்சியவளிடம்…
“கொண்டா அத” என்று பிடுங்கிய நாச்சியோ, அந்தக் கடிதத்தை ஒரு நொடி புரட்டி புரட்டிப் பார்த்தவர்….
“அடிப் போக்கத்தவளே… எதையும் ரோசன பண்ண மாட்டியா.?” என்று பேத்தியின் தலையில் செல்லமாக குட்டியவரோ…
“இந்தக் கடுதாசி தமிழ்ல எழுதிருக்கு, அதுவும் கடஞ்செடுத்த தமிழன் மாறி தொடக்கத்துல உ போட்டு ஆரம்பிச்சிருக்கு” என்று காட்டியவர்
“அது மட்டுமில்ல, நாலு மூலைலயும் மஞ்சள் வேற வச்சுருக்கானுக பாரு என் பேரனோட பேரக் கெடுக்குறதுக்கு இது நம்ம ஊருப்பய எவனோ செஞ்ச வேலதேன்” என்று அடித்துக் கூறியவரை…
விழிகள் பிரகாசிக்க “அப்பத்தா, அப்போ இது லீசா அனுப்பலையா” எனக் கேட்டுக் கட்டிக் கொண்டவளிடம்…
“ஆமத்தா… ஒரு குடியக் கெடுக்குற முயற்சிக்கு மஞ்ச ஒண்ணுதே கொறச்சல், கட்டைளபோரவென் எவன் செஞ்ச வேல இதுனு அந்த வள்ளிச் சிறுக்கியோட கொண்டையப் புடுச்சு ஆஞ்சா தெரிஞ்சிபோகும்” என்று கூறிக்கொண்டே சென்றவறோ மீண்டும் சோர்ந்து போன மலர்விழியைக் கண்டு…
“இன்னும் என்னத்தா.?” என்று வினவினார் நாச்சி.
மலர்விழியோ “இல்ல அப்பத்தா… மாமாக்கு நா பொருத்தமானவ இல்ல, உங்களுக்காகத்தே அவுக என்னய புடிக்காமயே கட்டிக்கிட்டாக… அதனாலதே மாமா சத்த முன்ன என்னய அப்டி ஏசிப் போட்டாக, இத லீசா அனுப்பாட்டியும் ஒரு ரோசாவக் கூட பாத்து மாமாவுக்கு கட்டி வைங்க அப்பத்தா, நா செத்துப் போறேன்” என்று மீண்டும் அழுதவளை….
“அடி எவடி இவ சும்மா சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு உன் மாமேன் உன்னய புடிக்காம கட்டிக்கிட்டேன்னு யாருடி சொன்னது, ஒரு ஆம்பள அவன், தாபத்த மட்டுமில்ல கோபத்தையும், இன்னும் எல்லாத்தையுமே அவன் மனசுக்கு ரொம்ப நெருக்கமான பொஞ்சாதி கிட்ட மட்டும்தேண்டி காட்டுவேன், கோவத்துல அடிக்கிற புருனோட கைதேண்டி நாளைக்கி உனக்கு ஒன்னுனா அரவணைக்கவும் வரும்… அடிக்கிற கைதேண்டி அணைக்கும்” என்று அதட்டியவர் இப்பொழுது நறுக்கென்று மலர்விழி தலையில் இரண்டு குட்டு வைத்தவர்… தன் அறுபது கிலோ உடலைத் தூக்கிச் சென்று… யுவாவின் அலமாரியைத் திறந்து ஒரு பையை எடுத்து வந்து அவள் முன்னால் கொட்டினார் நாச்சி.
“பாரு ஆத்தா… என்ற பேரன் உன்ற மேல எம்பூட்டு ஆச வச்சிருக்கேன்னு பாரு, பொஞ்சாதிய புடுச்சுருக்குனு புருஷன்காரேன் நெத்தில எழுதி ஒட்டிக்கிட்டா திரிவேன். உன் மாமன் கண்ணப் பாருடி அது ஆயிரம் காதல் கத சொல்லும், புருஷன கைக்குள்ள போட்டு எனக்கு கொள்ளு பேரன பெத்துப் போடுறத விட்டுட்டு சாகப் போராலாம் சாக” என்று கூற….
மலர்விழியோ அந்த பொருள்கள் வைப்பதற்கென்றே செய்யப்பட்ட சிவப்பு வண்ண வெல்வட் உரையினுள் இருந்து தன் முன்னால் கொட்டப்பட்ட பொருள்களைப் பார்த்தாள்.
அதிலோ அவளது குழந்தை பிராயத்தில் அணிந்திருந்த உடைகள், அவளுக்கு பால் புகட்டிய சங்கு, அவள் கரத்தில் கிடந்த செப்புக் காப்பு, காலில் அணிந்திருந்த வெள்ளிக் கொலுசு, அவள் இடுப்பில் இருந்த அரணைக்கொடி இப்படி சிறுபிள்ளையில் அவளுக்கு உபயோகித்த அனைத்து பொருள்களையும் சேகரித்து வைத்திருந்த யுவா, அதனோடு ஒரு டைரியில் அவளைப் பற்றிய நினைவுகளையும் எழுத்து மூலமாய் பத்திரப் படுத்தியிருந்தான்.
ஆம் அந்த டைரியின் முதல் பக்கத்தில் மலர்விழி பிறந்து நாற்பது நாளய புகைப்படத்தில் தொடங்கி, இப்பொழுது வரையுள்ள புகைப்படம் வரை ஒவ்வொரு பக்கத்திலும் ஒட்டி வைத்திருந்தவன்,
அதன் கீழேயே இரண்டு வரிகளும் கிறுக்கி வைத்திருந்தான்.
முதல் புகைப்படத்தின் கீழே “விழி நீ இந்த போட்டோல அப்டி மொசக்குட்டி மாறியே புசுபுசுன்னு அழகா இருக்கல்ல, நீ பொறந்ததுமே அப்பத்தா “நீ கட்டிக்க போற பொண்ணு ராசான்னு” சொல்லிதே உன்னைய எனக்குக் காட்டுச்சு, அப்போ நா இப்டி மொசக்குட்டி மாறி இருக்க குட்டி பாப்பாவ எப்டி கட்டிக்கிறதுன்னு கேட்டனாம், ஆனா இப்போ உன்ன எப்படா கட்டிக்குவோம்னு இருக்குடி, ஆமாடி விழிக்குட்டி கல்யாணம் கட்டிக்கிட்டாதான உன்னய என் பக்கத்துலயே வச்சுக்க முடியும்” என்று 17 வயதில் தன் முதல் ஆசை வரிகளை எழுதியிருந்தான் யுவா.
அதற்கு அடுத்த புகைப்படமோ அவள் பருவம் எய்திய போது எடுத்ததாக இருக்க..
அதன் கீழே, “நீ வயசுக்கு வந்துட்டியாம், இனிமே நா உன்னய அதிகமா பாக்கக் கூடாதாம் உன்கிட்ட பேசக்கூடாதாம், அப்பத்தா சொல்லுது, ஆனா அது எப்டி என்னால முடியும் விழி… உன்கிட்ட பேசாட்டியும் பரவாயில்ல உன்ன பாத்துட்டே இருந்தா கூட போதும், அதேன் உனக்கு ஓலைக்குச்சி கட்றப்போ உன் முகம் மட்டும் தெரியற அளவு கேப் விட்டு கட்டிட்டேன், எப்டி உன் மாமன்” என்று சட்டை காலரைத் தூக்கி விட்டு 20 வயதில் தான் செய்த கல்மிஷம் முதல் 26 வயதில் அவள் இடை மச்சத்தை தொட்டு சிறிதான சில்மிஷம் செய்யப் போய், அது இசகு பிசகான இடத்தில் பட்டு அவளிடம் பொறுக்கி பட்டமும் வாங்கியது வரை அனைத்தையும் கிறுக்கி இருந்தவனோ,
இறுதியாக… “விழி… நா உன்ன வேணும்னு அங்க தொடலடி தெரியாமதே கை பட்டிருச்சு, ஆனா அதுக்காக நீ என்ன பொறுக்கின்னு சொன்னதக் கூடத் தாங்கிப்பேண்டி ஆனா உன்னத் தொட எனக்கு எந்த உரிமையும் இல்லனு சொன்னத என்னால தாங்க முடிலடி” என்பதோடு யுவாவின் கிறுக்கல்கள் முடிந்திருக்க…
அது அனைத்தையும் படித்து முடித்த மலரோ, இப்பொழுது “அப்பத்தா நா தப்பு பண்ணிட்டேன் அப்பத்தா… மாமா என்னய இம்பூட்டு நேசிக்கிறாகளா, இது தெரியாம நா அவுக மனச ரொம்ப நோகடிச்சிட்டனே, அவக நேசிப்புக்கு கொஞ்சம் கூடத் தகுதியில்லாதவ அப்பத்தா நானு, இன்னிக்கிக் கூட ஆசையா அணச்சவகள எடுத்தெறிஞ்சி பேசிட்டனே, அதே அவுக என்னய பிரிஞ்சி கேரளா போய்ட்டாக” என்று நாச்சியின் மடியில் படுத்துக் கொண்டு கதறினாள் மலர்விழி.
சிறு வயதிலிருந்தே மாமன் தன் மேல் வைத்திருக்கும் ஆழ்ந்த நேசமதை இன்று அப்பத்தா மூலம் நன்கு உணர்ந்து கொண்ட மலர்விழி நாச்சியின் மடியில் தலை சாய்த்து, “மாமா என்ன விட்டுப் போகாதீங்க மாமா” என்று புலம்பியவாறு கண்ணீராலே அவர் மடியை நனைத்தவளின் தலையை வாஞ்சையாக வருடிய நாச்சியோ…
“எத்தா மலரு உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன பிரச்சனன்னு எனக்குத் தெரியாது, ஆனா உன்ற மாமேன் இந்த பூமியே தலகீழா ஆனாக் கூட உன்னப் பிரிஞ்சு எங்கையும் போமாட்டேன்னு மட்டும் எனக்குத் தெரியும்” என்று அழுத்தமாகக் கூறியவர், “செத்த இரு இப்ப ஒரு வேலை செய்வோம் அதுல அந்த கஞ்சி போட்ட காளை எப்டி அலறியடிச்சி ஓடி வருதுன்னு பாரு”
என்றவர் சோப்பு நுரை வாசனையை பேரன் கண்டுபிடித்து விடுவான் என்று கதிர் மூலம் பூந்திக்கொட்டை வரவழைத்து இடித்து நீரில் கலக்கி அதன் நுரையை எடுத்து மலர்விழியின் கடவாயோரம் அப்பியவர் அதே கதிர் மூலம் யுவாவிடம் மலர்விழி விஷத்தை அருந்தி விட்டாள் என்றும் கூற வைக்க…
அவர்களின் திட்டப்படியே அவனும் அடித்துப் பிடித்து ஓடி வந்து தன் காதல் மனைவி நெஞ்சில் பாலை வார்த்தவனோ, மலரை மருத்துவமனைக்கு கூட்டிப் போகிறேன் என்று அவளைத் தூக்கிச் சென்றதுதான் அவர்கள் யாருமே எதிர்பாராத நிகழ்வு…
யுவா மலரைத் தூக்கிச் செல்லவும்…
“என்ன அப்பத்தா பிளான் இப்டி சொதப்பிருச்சு.? நா வேணா புல்லட்ட எடுத்துட்டு போய் அவகள தடுக்கவா?” என்று கேட்ட கதிரிடம்….
“அட புண்ணாக்குக்குப் பொறந்தவனே அதெல்லாம் ஒன்னும் வேணாம்ல, இனி அவகள யாராலையும் தடுக்க முடியாது” என்று அர்த்தத்தோடு சிரித்துக் கொண்ட நாச்சி… பூஜை அறையை நோக்கிச் செல்ல…
அவர் முதுகையே வெறித்த கதிரோ எதுவும் அறியாமலே அப்பத்தாவுடைய நாடகத்தில் பங்கேற்றிருந்தவன், “இந்த பாட்டியையும் பேரனையும் புரிஞ்சிக்கவே முடியலையே” என்று தான் சொல்லிக் கொண்டான்.
மனைவி தன்னால் விஷம் குடித்து விட்டாள் அவள் உயிருக்கு ஆபத்து என்று எண்ணி தன்னுயிரே உருகும் அளவு கலங்கிப் போய் இருந்தவன் அவளுக்கு எந்த ஆபத்துமில்லை என்று உணர்ந்த அந்தக் கணம் வானத்தையே வளைத்து விட்டதைப் போல் துள்ளி, “விழிமா…” என்று அவளை இழுத்து மேலும் மேலும் தன் நெஞ்சாங்கூட்டில் பொத்தி அவளின் பால் வதனமே சிவந்து போகும் அளவு முத்த மழை பொழிய…
கணவனின் அணைப்பில் தெரிந்த மகிழ்ச்சியையும் அவன் தன் கள்ளத்தனத்தை அறிந்து கொண்டதையும் உணர்ந்து கொள்ளாத மலரோ இன்னும் நடிப்பைக் கைவிடாமல் “மாமா, மாமா” என்று அரை மயக்கத்தில் பிதற்றுவது போல் அவளும் அவன் மார்போடு ஒட்டிக் கொண்டு தன்னை அணைத்திருந்தவனின் ஸ்பரிசத்தை ஆழ்ந்து அனுபவிக்கத் தொடங்கினாள் மலர்விழி.
பின்னே கணவனின் இந்த அணைப்புக்கு கிட்டத்தட்ட எழுபது மணி நேரமாய் ஏங்கிக் கிடந்தாள், அல்லவா அந்த பட்டிக்காட்டுப் பைங்கிளி.
அப்பத்தாவின் கைங்கர்யத்தில் விஷம் குடித்தவள் போல் நடித்தபடி தன் அணைப்பில் இருந்தவளைப் பார்க்க பார்க்க இனி அவளுக்கு ஒன்றும் இல்லை என்ற சந்தோசமும், அவள் தன்னை ஏமாற்றி விட்டதற்காக சிறிதான கோபமும், நடிக்கத் தெரியாது அவஸ்தை பட்டுக் கொண்டிருந்த அவள் முகம் காட்டிய பாவமும், அது கொடுத்த கிறக்கமும் என்று இப்படி பல உணர்ச்சிகளின் கலவையில் சிக்கியவனோ, சட்டென்று ஒரு முடிவை எடுத்தவனாய் மலர்விழியை அணைத்துப் பிடித்த படியே, ஜீப்பை மீண்டும் உயிர்பித்து தன் தோட்டத்தை நோக்கி மின்னல் வேகத்தில் விரட்டினான் யுவராஜ்.
ஜெட் விமான வேகத்தில் வண்டியை விரட்டி வந்து புழுதி பறக்க தோட்ட வீட்டின் முன் நிறுத்தி இறங்கியவன், மலர்விழியை இரு கரத்திலும் ஏந்திக் கொண்டு வீட்டிற்குள் நுழையப் போனவனோ அங்கு வேலை செய்பவர்களை திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டுச் செல்ல…
அவன் பார்வையே ‘ஒரு வாரத்திற்கு யாரும் இந்தப் புறம் தலை வைத்துக் கூட படுக்கக் கூடாது’ என்ற செய்தியை சொல்லியதில் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தவாறே அவ்விடம் விட்டு விலகிச் சென்றனர்…
யுவா மலர்விழியோடு தோட்ட வீட்டிற்குள் நுழைந்து காலாலே கதவை அடித்துச் சாற்றிய சத்தம் கேட்டே கண் விழித்துப் பார்த்த மலர்விழியோ அப்பொழுதும் நடிப்பைக் கைவிடாமல் குழறலாக,
“மாமா இது என்ன இடம் மாமா, சொர்க்கமா.?” என்று கேட்டாள்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.