திருநெல்வேலி மாநகரின் மத்தியில் “ராஜ் புட் பேக்டரி” என்ற கொட்டை எழுத்துக்கள் மின்னப்பட்ட பலகையை தன் நெற்றியில் தாங்கியிருந்த நாற்பது ஏக்கர் பரப்பளவுள்ள அந்த உணவுத் தொழிற்சாலையில் ஒரு புறம் பால் பொருட்கள் உற்பத்தியும், ஒரு புறம் எண்ணெய் வகைகளும் மற்றும் ஒருபுறம் சோப்பு மற்றும் வாசனை பொருட்கள் உற்பத்தியும், இன்னும் சர்க்கரை ஆலையும் கூட என்று பன்முகம் கொண்ட அந்த தொழிற்சாலையை யுவாவின் கனவுத் தொழிற்சாலை என்றே கூற வேண்டும்.
தன்னுடைய இருபத்தி மூன்றாம் வயதில் படிப்பை முடித்து வந்த யுவா எதிலுமே புதுமையை விரும்புபவன், தங்களுக்கு இருக்கும் பல்லாயிரக் கணக்கான தோப்பு துறவுகள் வயல் வெளிகளை மட்டுமே நம்பியிராமல் அதில் தாங்கள் விளைவிக்கும் இயற்கை தரம் மாறா ஆர்கானிக் பொருட்களை கொண்டு தான் உருவாக்கிய தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான வேலை ஆட்களை நியமித்து, மக்களுக்குத் தேவைப்படும் பல பொருட்களை சிறந்த முறையில் தயாரித்து விற்பனை செய்து வர, இந்த நான்கு வருடங்களில் கலப்படமில்லா ராஜ் தயாரிப்புகளுக்கு தமிழக அளவில் மட்டுமல்ல ஒரு சில வெளிமாநிலங்களிலும் சிறந்த வரவேற்பே கிட்டி உள்ளது,
கருப்பு நிற பார்மல் பேண்டும், இளம் ரோஸ் வண்ணத்தில் முட்டிக்கு மேல் வரை மடித்து விடப்பட்ட முழுக்கை சட்டையும் அணிந்து தன் ஜீப்பில் இருந்து குதித்து இறங்கிய யுவா, “அய்யா” என்று தனை நோக்கி பதட்டமாக ஓடிவந்த காவலாளியை அவன் கூற வந்த விஷயம் தெரியும் என்பது போல் பார்வையாலே தடுத்தவன், கையில் அணித்திருந்த தங்கக் காப்பை சற்றே மேலே ஏற்றிய வண்ணம், தனக்கு வணக்கம் கூறிய தொழிலாளர்களுக்கு சிறிய தலையசைப்போடு, வேக எட்டுக்கலில் அந்த தொழிற்சாலைக்குள் விரைய, அவன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாத கதிரோ, சற்று ஓடியவாறே அவன் பின்னோடு செல்ல… அங்கு எண்ணெய் மில் பகுதியில் அப்பொழுதுதான் தங்கள் சோதனையை துவங்கி இருந்தனர் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.
நேற்று இரவே தன் தொழிற்சாலையில் சோதனை நடக்கவிருக்கும் விஷயத்தை அறிந்து கொண்ட யுவராஜ் அதற்கு யார் காரணம் என்பதனையும் தெரிந்து கொண்டவன், நினைத்திருந்தால் ஒரே கைப்பேசி அழைப்பில் இந்த சோதனையை நடக்க விடாமல் தடுத்திருக்க முடியும், அப்படிச் செய்திருந்தால் அவன் நம் அரிமா அல்லவே….
எந்த விஷயமாக இருந்தாலும் அவனுக்கு ஒன்றைத் தொடங்கி விட்டால் அதன் இறுதியை பார்த்தே ஆகவேண்டும், அதிலும் அந்த இறுதியில் ஜெயிப்பதுவும் அவனாகவே இருக்க வேணும் என்ற பிடிவாத குணத்தை குத்தகைக்கு எடுத்துப் பிறந்தவன், நேர்மையின் நாயகன், உழைப்பின் தோழனவன் புத்திசாலித்தனத்தின் புத்திரன், முடியாது என்ற வார்த்தையை தமிழ் அகராதியில் இருந்தே அழிக்க நினைப்பவன் எப்பொழுதும் ஜெயித்தே பழக்கப் பட்டவன்…
தான் ஜெயிப்பதற்காகவே பல வருடங்களாக தன்னோடு ஆடுபுலி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கும் தன் ஒன்று விட்ட பங்காளி மாயனை ஒன்றும் செய்யாமல் விட்டு வைத்திருக்கும் யுவா கதிரோடிணைந்து தன் எண்ணெய் மில்லுக்குள் நுழைந்தவன்….
“வெல்கம் ஆபிசர்ஸ்” என்று அங்கிருந்த அதிகாரிகளை வரவேற்றவாறே தன் பிரத்யேக இருக்கையில் அமர்ந்து கொண்ட, யுவாவின் கம்பீரத் தோற்றத்திலும் கணீர்க் குரலிலுமே அங்கிருந்தவர்களில் ஒருவனுக்கோ வயிற்றைப் பிசைய, மற்றொருவனுக்கோ யுவாவின் வசீகர தோற்றத்தையும் அவன் ஆளுமைத் தோரணையையும் பார்த்த உடனே பிடித்துத்தான் போனது…
தவறு செய்தவனிடம் அப்படி ஒரு நிமிர்வு இருக்காதல்லவா.!
அந்த மற்றொருவன் யுவாவை ஒரு புன்னகையுடனே நோக்கி “ஐம் சரத் பிரம் புட் ரெஷலியூசன் டிபாட்மென்ட், மீட் மிஸ்டர் ரகு, மை செகரட்றி” என்று அவர்கள் ஐடி கார்டை காட்டியவனுக்கோ அந்த தொழிற்சாலையின் நேர்த்தியும், சுத்தமும் அதற்கு சொந்தக்காரானான யுவாவையும் பார்த்தே “இங்கு நம் வேலைக்கு அவசியம் இல்லையோ” என்றே தோன்ற, அவனருகில் நின்ற ரகுவோ மாயனிடம் பெரிய தொகையை லஞ்சமாகப் பெற்றவன் யுவாவை சற்றே கடுப்பாகவே பார்த்துக் கொண்டே, அருகில் நின்ற சரத்திடம்…
“நம்ம வேலைய பாக்கலாமா சார்.?” எனக் கேட்க அவனும் “சுயர் ரகு” என்றவன் யுவாவின் அனுமதியோடே அங்கு உலர்த்தப்பட்டிருந்த தேங்காய், கடலைப்பருப்பு, போன்ற பொருள்களின் தரத்தை எல்லாம் ஆராயத் தொடங்கியவன் முகத்திலோ அத்துணை திருப்தி.
அருகில் நின்ற ரகுவிடம் “எல்லாம் பர்பெக்ட்டா இருக்கே ரகு இன்பார்மர் யாரு.?” எனக் கேட்டவனிடம்…. “அது வந்து சார்” என்று திணறிய ரகுவோ மாயன் கூறியதை வைத்து “சார் எனக்கென்னமோ அந்த எள்ளு மூட்டமேல சந்தேகமா இருக்கு” என்றவன் அங்கு நின்றிருந்த யுவாவையும் கதிரையும் ஒரு மாதிரிப் பார்த்து விட்டு எள் மூட்டைகளை நோக்கி விரைய… அவன் பின்னோடு சென்ற சரத்தும் ஒரு கை எள்ளை அள்ளி நாசிக்கு அருகில் கொண்டு சென்றவனோ “ஆஹா ஆஹா” என்று சிலாகித்துத்தான் போனான்…
கையில் அள்ளிய எள்ளோடே யுவாவை நோக்கி விரைந்த சரத்… “மார்க்கெட்ல இருக்க ஃபர்ஸ்ட் குவாலிட்டி எள்ளு கூட இவ்ளோ வாசனையா இருக்காதே, நீங்க எந்த ஸ்டேட்ல இருந்து எள்ளு இறக்குமதி பண்றீங்க.?” என்று ஆச்சரியமாக கேட்டவனுக்கு நாற்காலியில் சாய்ந்திருந்த யுவா ஒரு புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுக்க… சரத் அருகில் நெருங்கிய கதிரோ….
“எள்ளு மட்டும் இல்ல சார் எங்க ஃபேக்டரில தயாராகுற எல்லாப் பொருட்களோட மூலப் பொருளுமே எங்க வீட்டு பெரியவங்களோட ஆலோசனப்படி சுத்தமான தண்ணி பாச்சி இயற்கை உரத்தப் போட்டு எங்கூரு விவசாயிகளோட கைவண்ணத்துல எங்க சொந்த வயல்லையும் தோப்புளையும் வெளஞ்ச பொருள்கள் சார்” என்று கூறி முடிக்கும் முன்…
“இன்ட்ரெஸ்டிங்” என்று கூறிக்கொண்ட சரத்தோ “நா பேக்டரி புல்லா சுத்தி பாக்கலாமா.?” என்று ஆர்வமாக வினவியவனை எரிச்சலாகப் பார்த்த ரகுவுக்கு ‘எள்ளு மூட்டைலத்தான விஷயம் இருக்குன்னு அந்த மாயன் சொன்னான் ஆனா அதுவே இவ்ளோ பஸ்ட் க்ளாசா இருக்கே’ என்று தனக்குள்ளே பேசிக்கொண்டவன் வேறு வழியில்லாது தன் மேலதிகாரியோடு இணைந்து யுவாவின் தொழிற்சாலை முழுவதையும் ஆராய்ந்து கொண்டு வந்தவனுக்கே அந்த தொழிற்சாலையில் தப்பு சொல்லும்படி எந்த விஷயமும் தட்டுப்படாதுதான் போனது…
‘வாங்குன காசுக்கு ஒழுங்கா வேலைய முடிக்க முடியலையே எல்லாத்தையும் இவ்ளோ சுத்தமா, தரமா வெச்சுருக்கானே’ என்று முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தவாறு நடந்து வந்த ரகுவைப் பார்த்த யுவராஜோ…
“சாருக்கு வந்த விஷயம் நடக்கலன்னு ரொம்ப வருத்தம் போல.?” என்று இடக்காக வினவியவன்… “இந்த அட்ரசுக்கு போங்க நீங்க எதிர்பாத்தது உங்களுக்கு கெடைக்கும்” எனக் கூறிய யுவாவிடம் கைநீட்டி அந்த விசிட்டிங் கார்டை வாங்கிப் பார்த்தவனுக்கோ நெஞ்சுக்குள் பக்கென்றாகி முகம் முழுதும் வியர்வை பூக்கள் பூக்க… அதைப் பார்த்த யுவாவோ…
“கதிரு சாருக்கு இந்த கிளைமேட் ஒத்துக்கல போல ரொம்ப வேர்த்துருக்கு அந்த துண்ட எடுத்து குடு தொடச்சிக்கிரட்டும்” என்றவுடன்….
கதிரும் அங்கிருந்த ஒரு துணியை எடுத்து ரகுவிடம் நீட்ட, அவனும் பதட்டத்தில் அதை வாங்கித் துடைக்க, அவன் முகமோ கரியை பூசிக் கொண்டது.
“எனிவே தப்பான இன்பர்மேசன்ல உங்க எடத்துல சர்ச் பண்ண வந்ததுக்கு ரொம்ப ரொம்ப சாரி மிஸ்டர் யுவராஜ், ஆனா உங்கள மீட் பண்ணதுல எனக்கு ரொம்ப சந்தோசம், உண்மையிலயே உங்க தயாரிப்பு எல்லாம் ரொம்ப தரமாவும் பியூராவும் இருக்கு, இதே மாறி இன்னும் நெறைய தயாரிப்புகள் செஞ்சு நம்ம மக்களுக்கு ஆரோக்யமான பொருள்கள கொடுக்கணும்னு நா உங்க கிட்ட ரிக்வஸ்ட் வச்சுக்கிறேன்” என்று யுவாவின் கை குலுக்கி புகழ்ந்து தள்ளிய அந்த மேலதிகாரி சரத்தோ, தன் விசிட்டிங் கார்டை நீட்டி…
“உங்களுக்கு என்ன உதவின்னாலும் தயங்காம என்ன காண்டாக்ட் பண்ணுங்க யுவராஜ்” என்றும் கூறியவன் …
அருகில் நின்ற ரகுவிடம் யுவா கொடுத்த விசிட்டிங் கார்டையும் வாங்கிப் பார்த்தவன் “நமக்கு இன்னும் டைம் இருக்கு ரகு, யுவா சார் சொன்ன இடமும் பக்கத்துலதான் இருக்கு வாங்க… அங்கயும் போய் சர்ச்சிங் முடிச்சிட்டு அப்றம் ஆபிஸ்க்கு போவோம்” என்றவன் யுவாவிடமும் கதிரிடமும் விடைபெற்றுக் கிளம்பி விட… “சார்” என்று அதிர்ந்த ரகுவோ “வேணாம் சார்” என்று இன்னும் ஏதேதோ கூறியபடி சரத் பின்னோடே ஓடிச்செல்ல…
அவனுடைய கரி பூசப்பட்ட முகத்தையும், அவன் ஓடிச்சென்ற வேகத்தையும் பார்த்து வாய்விட்டு சத்தமாகவே சிரித்து விட்ட கதிரோ,, “மச்சான் செம்மடா” என்று யுவாவிடம் கையடித்துக் கொள்ள…
கதிரைப் பார்த்த யுவாவும் இருபக்கமும் தலையை ஆட்டிச் சிரித்துக் கொள்ள… அடுத்த இரண்டு மணி நேரத்தில் தன்னுடைய எண்ணெய் மில் மூடப்பட்ட ஆத்திரத்தில் யுவாவைத் தேடி அவன் தொழிற்சாலைக்கே வந்து நின்றான் மாயன்…
“டேய் யுவா மறுக்கா மறுக்கா என்ன தோக்கடிச்சிக்கிட்டே இருக்கல்ல, இன்னக்கி வேணா நீ ஜெயிச்சிருக்கலாம்” என்றவன் முடிக்கும் முன்…
“இன்னிக்கு மட்டுமில்ல என்னிக்கும் நான்தான் ஜெயிப்பேன்” என்ற யுவாவைப் பார்த்து… “டேய்” என்று சீறிய மாயனை…
செவிக்குள் ஒரு விரலை விட்டுக் குடைந்த வண்ணம்… “கொஞ்சம் மெதுவா பேசு பங்காளி” என்று அடக்கியவன்…
“ஒரு விஷயத்தை தொடங்குற முன்னயே அதோட முடிவ எழுதிட்டு தொடங்குறவேன் நானு…. நீ எனக்கு செய்யணும்னு நெனச்ச நா உனக்கு செஞ்சு முடிச்சேன்…” என்று திமிராகவே மாயனுக்கு பதில் கொடுத்த யுவா, கதிரைப் பார்க்க…
அவனோ முறுக்கிக் கொண்டு நின்ற மாயனை நெருங்கியவன்… “மாயா மொதோ நீதே யுவா கூட மோதுன அவன் அத உனக்கே திருப்பி விட்டான், தப்பு யார் மேல, சொந்தக்காரனா போய்ட்டியேன்னு அவன் பொறுமையா இருக்கான் ஒழுங்கா வீடு போய்ச் சேரு” என்று தன் தோளில் கை போட்டுக் கூறியவனைப் பார்த்து “டேய் அனாதப் பயலே, நீலாம்” என்று ஆரம்பித்த மாயனோ…
யுவா தன் கைகாப்பை ஏற்றிக் கொண்டு, அங்கிருந்த தேங்காய் சீவும் கத்தியை எடுத்தத் தோரணையிலே பயந்து எச்சில் கூட்டி விழுங்கியவன் அழைக்காத கைபேசியை சட்டையில் இருந்து எடுத்து “இந்தா வந்தர்றேன்” எனக் கூறிவிட்டு
“கூடிய சீக்கிரம் நா யாருன்னு உங்களுக்கு காட்றேண்டா” என்று கறுவி, அதற்கு பதிலாக… “ஐம் வைட்டிங் பங்காளி” என்ற யுவாவின் நக்கல் வார்த்தைகளையும் வாங்கிக் கொண்டே ஓட்டமெடுத்த மாயன், வேறு யாருமல்ல, யுவாவின் ஒன்று விட்ட பங்காளி தான்.
மாயனின் தாதாத்தாவும் யுவாவின் தாதாத்தாவும் ஒரு தந்தைக்கும் இரு தாய்க்கும் பிறந்த உடன் பிறவா சகோதரர்கள் யுவாவின் தாத்தா வேலுச்சாமி தன் தந்தையின் இரண்டாவது மனைவியின் மகனான மாயனின் தாத்தாவை சொந்த தம்பியாகவே நினைத்து வந்தும் மூத்த தாரத்து மகனான அவருக்கு கிடைத்த மரியாதையில் பாதி கூட அவர் தம்பிக்கு கிட்டாமல் போனதில் அந்த தலைமுறையிலேயே சிறிது சிறிதாக தொடங்கிய பகை உணர்ச்சி அடுத்தடுத்த தலைமுறையில் பெரும் பகையாகவே மாறி இருக்க… அவர்கள் விதைத்து விட்டுப் போன நஞ்சோ மாயனின் மனசிலும் நிரம்பியிருக்க, சிறு வயதிலிருந்தே தன் வயதையொத்த யுவாவை, அவனின் அழகை, ஆளுமையை, அவனின் கம்பீரத்தை அவனுக்குக் கிட்டும் மரியாதைகளை எல்லாம் கண்டு பொறாமையை வளர்த்துக் கொண்ட மாயனுக்கும் யுவாவின் அளவுக்கு சொத்து பத்துகள் இருந்தும் அடிக்கடி இப்படி ஏதாவது செய்து யுவாவுடன் மோதி அவனே மூக்கறுந்து போவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான்.
யுவா செய்கின்ற அனைத்துத் தொழில்களையும் அவனை ஜெயிக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காகவே அவனும் செய்பவன் அதில் வெற்றி பெற தேர்ந்தெடுக்கின்ற வழியோ குறுக்கு வழியாக இருக்க… அனைத்திலும் அவனுக்குக் கிட்டியது என்னவோ தோல்வியாகத்தான் இருந்தது.
எத்துணை தோல்வியை சந்தித்தாலும் மீண்டும் மீண்டும், தன் வழியில் மூக்கை நுழைக்கும் மாயனை அடித்துத் தோலுரித்து அடக்கிவைக்க நம் அரிமாவிற்கு ஒரு நொடி ஆகாது, அவன் சொந்தக்காரனாகப் போய்விட்டான் என்கிற காரணத்தோடு, அவனிடம் மோதி அவனை தோற்கடிக்கும் விளையாட்டு யுவாவுக்கும் மிகவும் பிடித்துப்போனதாலோ என்னவோ அவனை ஒன்றும் செய்யாமல் விட்டு வைத்திருந்தது நம் அரிமா.
சிறுவயதில் இருந்தே ‘தன்னை மிஞ்ச இந்த உலகில் இன்னொருவன் பிறக்கக் கூட முடியாது’ என்று எண்ணும் அளவுக்கு மித மிஞ்சிய ஆண் கர்வத்தோடு வளர்ந்து வந்தவன், எந்த விஷயத்தையும் ஒரு போட்டி மனப்பான்மையோடே அணுகி வெற்றியை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க விரும்பாத யுவா இதுவரை எதிலும் தோல்வியே சந்திக்காதவன், தனக்கும் தன் மாமன் மகள் மலர்விழிக்கும் நடந்த முந்தைய மனஸ்தாபத்தால் அவளிடம் தோற்று விட்டதாகவே எண்ணிக் கொண்டு அடிபட்ட அரிமாவாய் வலம் வந்தவன், மலரைத் தோற்கடிக்கும் நோக்கத்தோடே திருமண நாள் இரவில் அவளிடம் வீம்புக்கென்றே அப்படி ஒரு நிபந்தனையை முன் வைக்க அதை அவள் ஏற்றுக் கொள்ள மறுத்ததில் அவன் பிடிவாதமோ பல மடங்கு கூடி அவன் நிபந்தனையோ மேலும் வலுப்பெற…
காலையில் இருந்து இரவு வரை தொழிற்சாலையில் அவனின் நேரங்கள் அனைத்தும் நிமிடங்களாய்க் கழிந்தாலும் இரவு எட்டு மணிக்கு மேல் கதிரை அவன் வீட்டில் விட்டு, விட்டு நேற்றிரவு நடந்த விஷயங்களை எல்லாம் அசை போட்டவாறு தன் வீடு நோக்கி தன் ஜீப்பை செலுத்திய யுவராஜ், மலர்விழியின் மேல் இந்த நிமிடம் வரை கடும் கோபத்தில் தான் இருந்தான்…
காலையில் உணவை முடித்த வீட்டு ஆண்கள் அனைவரும் அவரவர் வேலைக்குக் கிளம்பி இருக்க… அப்பத்தா மாட்டு கொட்டைகைக்கும் மீனாட்சி சமையற்கட்டிற்கும் சென்று விட,
முதல் நாள் இரவு தனக்கும் தன் கணவனுக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தை பற்றியோ, கணவன் தன் மேல் கோபமாக இருப்பது பற்றியோ, அவன் நன்கு சாப்பிட்டுச் சென்றானா என்றெல்லாம் கூட சிறிதும் கவலைப் படாது இடியாப்பத்தையும் நாட்டுக் கோழியையும் ஒரு கை பார்த்து முடித்த மலரோ “ஏப்..” என்று ஏப்பம் விட்டபடி முன்னறை சோபாவில் வந்து அமர்ந்தவள் “மியாவ்” என்ற சப்தத்தில் “மீனு, இங்கதா இருக்கியா, திருட்டுப் பூன” என்று தான் வளர்க்கும் பூனைக்குட்டியை சோபாவுக்கு அடியில் இருந்து தூக்கி கொஞ்சிக் கொண்டிருந்தவளை நெருங்கிய அவள் தமக்கை காயத்ரி,
“ஏண்டி உனக்கு இப்போ கல்யாணமாகிருசிச்சுன்னு கொஞ்சமாச்சும் நெனப்பு இருக்கா அறிவு கெட்டவளே” என்று திட்ட…
தமக்கையை நோக்கி சிறு பிள்ளைப்போல் “ஏங்கா நா என்ன பண்ணேன்” என்று சிணுங்கிய மலர்விழியை “பின்ன என்னடி, நேத்துதே உனக்கும் யுவா மாமாக்கும் கல்யாணம் முடிஞ்சுருக்கு, அவருக்கும் புதுப்பொண்டாட்டி பரிமாறி சாப்புடணும்னு ஆச இருக்காதா..?” என்று கடிந்தவள்,
“அத்த, மாமாக்கு கோழிக் கொழம்ப கொண்டு வான்னு சொன்னா கொண்டு வந்து மாமா பக்கத்துலயே நின்னு பக்குவமா பரிமாராமா நீ பாட்டுக்கு திங்க ஒக்காந்துட்ட, உனக்கென்ன சோறு அவ்ளோ முக்கியமாடி.?” என்று நிறுத்திய தமக்கையை…
‘இல்லியா பின்ன’ என்பது போல் பாவமாகப் பார்த்தாள் மலர்.
தங்கையின் பார்வையை புறக்கணித்த காயுவோ அவளிடம், “மாமா பாவம் சரியா சாப்டாமக் கூட போய்ட்டாக, ஏண்டி இப்டி வெவரமில்லாம இருக்க” என்று மேலும் மேலும் திட்டியவளைப் பார்த்து…
மலரோ, ‘ஆமா அவுக காலைல நா குடுத்த காபியவே வாங்கிக் குடிக்கல… நா பரிமாரணுன்னு ஆசப்படுவாகலாக்கும், அவுகளே நைட்டு எம்புட்டு கோவமா பேசுனாக, இவ வேற நிலம புரியாம நம்மள திட்றதுக்குன்னே கெளம்பி வந்துருவா’ என்று வழக்கம் போல் மனதுக்குள்ளே புலம்பித் தீர்த்தவள் தனக்கும் தன் மாமனுக்கும் இடையில் இருக்கும் பிரச்சினைகள் எதையும் யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் அவன் கூறியதையும் மனதில் வைத்து, “அது வந்துக்கா” என்று இழுத்தவள்…
“இனிமே வெவரமா இருக்கேன்கா” என்று முடித்த தன் தங்கையை சிறு பிள்ளையில் இருந்து ஒரு தாயின் பரிவோடே பார்த்து வந்த காயத்ரியும்… யுவாவுக்கும் மலருக்கும் இடையில் இருக்கும் எந்த விஷயமும் அறியாதவள் தன் தங்கைக்கு மேலும் பல புத்திமதிகளைச் சொல்லிக் கொடுக்க… மலரோ அக்காவின் வார்த்தைகள் அனைத்தும் தலையாட்டிக் கேட்டுக் கொண்டவள், குளித்து அலங்கரித்து அமர்ந்திருக்க…
வழக்கம் போல் ஜீப்பில் இருந்து குதித்து இறங்கிய யுவராஜ் கை காப்பை சற்றே ஏற்றி விட்டு, காற்றில் கலைந்த அடர் சிகையை கையால் கோதி அடக்கிய வண்ணம் வீட்டிற்குள் நுழைந்தவன்,
அங்கு தேவதையாய் வீற்றிருந்த மனையாளையும் அவளின் கிறங்கடிக்கும் அழகையும், அதை மெருக்கேற்றிக் காட்டி அசரடிக்கும் இன்றைய அலங்காரத்தையும் கண்டு அப்படியே மலைத்துத் தான் நின்றான்.