யுவாவுக்கும் மலருக்கும் நேற்றுதான் திருமணம் முடிந்திருப்பதால் கிராமப்புற வழக்கமாக புதுமணமக்களைக் காணவரும் உறவினர்களின் வருகையை முன்னிட்டு அப்பத்தாவின் ஆலோசனைப்படி புதுப்பெண்ணான மலர்விழிக்கு அவள் தமக்கை காயத்ரி மணப்பெண் போலவே அலங்காரம் செய்து அமர்த்தியிருக்க… அம்மன் சிலை போல் அமர்ந்திருந்த மலரைப் பார்த்த ஒரு வயதான பெண்மணியோ அருகில் இருந்த நாச்சியம்மையிடம்…
“நாச்சி…. என் பேத்திக்கு மொதோ சுத்திப் போடு எம்பூட்டு அழகா இருக்கா” எனக் கூறவும்…
“ஆமா பேச்சி, சுத்திதேன் போடோணும் மலருப்புள்ள அப்டியே அவங்கத்த மீனாட்சி மாதிரி” என்று இத்தனை வயதிலும் அத்தனை அழகாய் இருக்கும் தன் மருமகளைப் பெருமையாகப் பார்த்தவாறே கூறியவரின் கூற்றை…
“அது என்னமோ நெசந்தேன்” என்று ஆமோதித்த பேச்சிப் பாட்டியோ…
“பொண்ணு மாப்புள்ள ரெண்டு பேத்தையும் சோடியா பாக்கலாண்டு வந்தீ ஆமா என் பேராண்டி எங்க நாச்சி.? நேத்திக்கிதே கல்யாணமாச்சு அதுக்குள்ள பேட்டரிக்கு (பேக்டரி) போயிருச்சா.?” என்று மீண்டும் வினவ…
நாச்சியும், “அட ஆமா பேச்சிக்கா, புள்ளக்கி ஓய்வே இல்ல, ராஜய்யாவ நம்பி எத்தினி குடும்பம் பொழைக்குது, பேட்டரிக்குப் போக கொஞ்சம் மணி ஆனாக் கூட போனு மேல போனு, புள்ள கால்ல சக்கரத்த கட்டிக்கிட்டுதே சுத்துது அப்டியே அவக பூட்டன மாதிரி, காலையிலேயே போன புள்ள இப்ப வர்ற நேரந்தேன்… செத்த இருந்து பாத்துட்டு போ பேச்சிக்கா” என்று கூறிக்கொண்டிருக்கும் பொழுதே அவர்கள் பேச்சின் நாயகன் தன் நீள எட்டுக்கலில் வீட்டிற்குள் நுழைந்த அவர்கள் வீட்டு யுவராஜன்…
அங்கு உறவினர்கள் மத்தியில்…
உடம்பு முழுதும் தங்கச் ஜரிகையால் நெய்யப்பட்ட, இளஞ்சிவப்பு வண்ண காஞ்சிப் பட்டுடுத்தி, நாச்சியம்மை கொடுத்த பரம்பரை ஆபரணங்கள் அனைத்தும் அணிந்து, அடர்ந்த அருவக் கூந்தலில் அளவில்லா மல்லிகைச்சரங்கள் சூட்டி, கள்ளமில்லா சிரிப்புடனும், கரை காணா அழகுடனும், நளினம் சூழ்ந்த நங்கையாய் நாற்காலியில் அமர்ந்திருந்த மலரைப் பார்த்தவன் அப்படியே ஸ்தம்பித்துத்தான் நின்றான்…
நேற்று திருமணத்திலும், அதன் பின்னான நேரங்களிலும் கூட ஒரு வித கோப மனநிலையோடே இருந்தவனோ மலரின் நேற்றைய அலங்காரத்தைக் கூட சரிவரக் கவனியாதவன், விபரம் தெரிந்த நாளில் இருந்து பெரும்பாலும் அவளைப் பாவாடை தாவணியிலே பார்த்திருந்தவன், முதன் முறை தன் மாமன் மகளைத் தழையத் தழைய அவளுடலைத் தழுவியிருந்த பட்டுப்புடவையோடும், இத்துணை நகைகளோடும், மித மிஞ்சிய அலங்காரத்தோடும் பார்த்தவனுக்கு மலரின் அசரடிக்கும் அழகும், முத்துப் பற்கள் தெரியும் வண்ணம் சிரித்துக் கொண்டிருந்த அவளின் பால் நிலா தோற்றமும் அவள் மேல் உள்ள கோபத்தையும், வன்மத்தையும் அவனிடம் நிற்க விடாமல் துரத்தியடிக்க…
வைத்த கண் வாங்காது மனையாளையே பார்த்தபடி வீட்டிற்குள் நுழைந்தவனிடம்…
“ராசா வந்துட்டியாப்பு… பேச்சியப்பத்தாவும், அவ புள்ளைகளும் உன்னைய பாக்கத்தே ராசா காத்திருக்காக” என்று நாச்சியம்மை கூறியதைக் கூட கவனியாது நின்றவனின் ரசிகப்பார்வையோ தன் மீதே இருப்பதை உணர்ந்து கொண்ட மலர்விழிக்கு அவன் பார்வையின் அர்த்தங்கள் புரியாவிடினும், சூழ்நிலை கருதி அவன் பார்வையை திசைதிருப்பும் பொருட்டு தன் கணவனைப் பார்த்து லேசாகக் கண்ணைச் சிமிட்டி விழியாலே… “அப்பத்தா கூப்புடுதுத்தான்” என்று தெரிவித்தாள் மலர்விழி.
அவளின் அழகிய செய்கையிலேயே சுயம் பெற்று, அவளை அப்படிப் பார்த்ததற்காக தன்னைத் தானே திட்டிக் கொண்டு, சுற்றம் உணர்ந்தவன்…
“வாங்க அப்பத்தா, வாங்க ஆச்சி, வாங்க மாமா” என்று தன் உறவினர்களை வரவேற்றவனோ… அடுத்த அரை மணிக்கும் மேலாக அவர்களோடே அமர்ந்து அளவலாவிக் கொண்டிருந்தவனின் உதடுகளோ உறவினரோடு உரையாடினாலும், அவன் உள்ளமோ ‘நேத்து அவமேல அவ்ளோ கோவமா இருந்த, இப்ப இப்டி திங்கிற மாதிரி பாக்குற, உனக்கு வெக்கமாயில்ல’ என்று அவனிடம் கேள்வி கேட்டாலும்… அதையெல்லாம் சட்டை செய்யாத யுவாவின் காந்த விழிகளோ சீனி மிட்டாயை மொய்க்கும் எறும்பாக மலர்விழியைத் தான் மொய்த்த வண்ணம் இருந்தது.
ஆண்கள் அனைவரும் கூடத்து இருக்கைகளில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்க, பெண்கள் கூட்டமோ அவர்களுக்கு நேர் எதிரில் இருந்த உணவு மேஜை இருக்கைகளில் இருந்து பேசிச் சிரித்திருக்க… இத்தனை வருடங்களாக இல்லாத ஒரு கள்ளத்தனத்தோடு மலர்விழி தன்னை பார்க்கும் பொழுது திரும்பிக் கொள்வதும், அவள் பாராத போது அவளை பார்வையாலே பருகிக் கொள்வதுமாக இருந்த யுவா, ‘என்ன இன்னிக்கு இவ இவ்ளோ அழகாயிருக்கா.?’ என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டவன்… அவள் மேல் கோபமாக இருக்கிறானாம். அது கோபமா.? அல்லது தாபமா.?
நேரம் இரவு உணவு வேலையை நெருங்கிக் கொண்டிருந்த சமயம் அரட்டை அடித்து ஓயந்து போன நாச்சியம்மையின் ஒன்றுவிட்ட சகோதரியான பேச்சியின் குடும்பம் மணமக்களை விருந்துக்கும் அழைத்து விட்டு, தங்கள் வீட்டிற்குக் கிளம்ப ஆயத்தமாகினர்.
“நாங்க கெளம்புறம்த்தா” என்று மலரிடம் சொல்லிக் கொண்ட பேச்சிப்பாட்டியை
“சரி அப்பத்தா” எனக் கூறி எழ, அதை லேசாகக் காதில் வாங்கிய யுவாவோ வேகமாகத் தலையைக் குனிந்து கொள்ள, பேச்சி பாட்டியின் பேச்சின் உள்ளர்த்தத்தையும், யுவாவின் செய்கையையும் கண்ட மற்றய பெண்களோ தங்கள் வாய்க்குள்ளேயே கிளுக்கிச் சிரிக்க… அந்த சிரிப்பினூடே வந்த உறவினர்கள் சொல்லிக் கொண்டு கிளம்ப… எஞ்சியிருந்த குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடனே இரவு உணவுக்கு மேஜையில் கூடினர்.
சிறு வயதிலிருந்தே அவள் மேல் கொண்ட நேசமோ, மலரின் இன்றைய அலங்காரமோ, அல்லது அவள் இப்பொழுது தன் மனைவி என்ற உரிமையோ, இல்லை மூன்றும் சேர்ந்தோ மலரின் மேல் பதித்த பார்வையை விளக்க முடியாது தவித்திருந்த யுவா… உணவருந்தும் வேலையில் தமக்கையின் கூற்றின் படி தன்னருகில் நின்று தனக்கு உணவு பரிமாறிய மனையாளின் அருகாமையில் கிறங்கித்தான் போனான்.
கணவனின் பார்வை தன் மேல் பதிந்திருப்பதைக் கூட உணராது வெகு சிரத்தையாக அவனருகில் நின்று அவனக்குப் பிடித்த உணவு வகைகளை எல்லாம் அவன் தட்டில் அடுக்கியவளின் நளினச் செயல்கள் ஒவ்வொன்றும் அவள் மேல் இத்தனை தினங்களாக இழுத்துப் பிடித்து வைத்திருந்த கோபத்தை முழுதும் விரட்டத் துடிக்க, அவள் உணவு வகைகளை எக்கி எடுக்கும் பொழுது சிறிதளவே வெளிப்பட்ட அவளின் அங்க அழகுகளோ இப்பொழுது அவள் மேல் பெரும் தாபத்தையே தான் தூண்டிவிட்டதில், உணவு கூட இரங்காது தட்டை அளந்து கொண்டிருந்தவன்….
டீன் ஏஜ் பையன் போல் தயங்கித் தயங்கி மலர்விழியின் மான் விழிகளை ஏறிட…
அந்தக் காரிகையின் கயல் விழிகளோ அங்கிருந்த பொறித்த கோழித் துண்டைத்தான் ஆவலாக நோக்கிக் கொண்டிருந்தது.
ஒரு நேசப்பார்வையை எதிர்பார்த்து மலர்விழியின் விழிகளைச் சந்தித்த யுவாவுக்கு அவள் பார்வை செல்லும் இடத்தைப் பார்த்து பக்கென்றாகி உணவு தொண்டைக்குள் அடைத்து புரை ஏறத் தொடங்கவும், அருகில் நின்ற மலரோ “பாத்துத்தான், பாத்து பொறுமையா சாப்புடுங்க” என்று தண்ணீரை எடுத்து நீட்டியவள்… அவன் தலையில் கை வைத்துத் தட்டியும் கொடுக்க, அவள் கரத்தின் மேல் தன் கரத்தையும் வைத்து இணைந்து தட்டியவனுக்கு ‘இந்நொடி இப்படியே நீளாதா.?’ என்று தான் தோன்றியது போலும்.
‘நேத்து நீ சொன்னத செய்யாதவ மேல உனக்கு கோபந்தே வரணும்’ என்று அவன் மூளை அவனிடம் மல்லுக்கு நின்றாலும் அவன் உள்ளமும், உடலும் மலரைச் சுற்றும் வண்டாய் தன் மலர்விழியையே சுற்றிச் சுற்றி வர
தமக்கை கூறியதற்காக பொறுப்புள்ள மனைவியாக நின்று, தனக்கு உணவு பரிமாறிக் கொண்டிருப்பவளின் பார்வையை வைத்தே அவளுக்கு உணவின் மேல் உள்ள ஆவலைப் புரிந்து கொண்ட யுவராஜோ மனதுக்குள்….
“எல்லாம் நான் வாங்கி வந்த வரம்” என்று முணுமுணுத்துக் கொண்டாலும் அடுத்த நொடி அவனையும் மீறி அந்த மலரவளின் மலர் கரத்தைப் பற்றி இருந்தான்.
மனைவியின் கையைப் அவளை அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்து “அம்மா மலருக்கும் சாப்பாடு போடுங்க” என்று அன்னையிடம் கூறியவனைப் பார்த்துப் பதறிய காயத்ரியோ…
“மாமா அவளுக்கு இப்போ என்ன அவசரம் அவ உங்களுக்கு பரிமாறிட்டு அப்றம் சாப்புடட்டும், கல்யாண ஆன பொண்ணுக புருஷன் சாப்பிட்ட பின்னாடி சாப்புட்றது தான மாமா நம்மூரு வழக்கம்” எனக் கூறிய காயத்ரியைப் பார்த்து முறைத்த யுவராஜோ…
“அண்ணி நீங்க எந்தக் காலத்துல இருக்கீக, ஆணோ பொண்ணோ பசிக்கும் போது சாப்ட்றணும், புருசனுக்காக பொண்டாட்டி பசிய அடக்கிக்கிட்டு பரிமாறணும்னு எந்த அவசியமுமில்ல” என்றவனோ…
மலரிடமும் நேற்று இரவிலிருந்து கடைபிடித்த மௌன விரதத்தையும் உடைத்து “நீ சாப்புடு மலர்” என்று இலகுவாகக் கூறி அவள் தட்டில் அவளுக்குப் பிடித்த சிக்கன் துண்டுகளையும் எடுத்து வைத்தவனால் தான் அதற்கு மேல் சாப்பிட முடியாது போக, மீண்டும் மலர்விழியின் மேல் பார்வையை பதித்து விட்டே மாடியேறியவனின் விழிகளில் இப்பொழுது சிறிது ஏக்கமும் கூட கலந்திருந்ததோ…???
கணவன் சாப்பிடு எனக்கூறிய மறுநொடியே அவனை ஆச்சர்யம் கலந்த நன்றியோடு நோக்கிவிட்டு, நாற்காலியில் அமர்ந்து கோழித்துண்டை எடுத்து கடிக்கத் தொடங்கியிருந்த மலர்விழிக்கு அவன் பார்வையின் அர்த்தம் புரிந்ததோ இல்லையோ, பேரனின் பார்வையை வைத்தே, நேற்று அவர்களுக்குள் ஒன்றும் நடக்கவில்லை என்பதை உணர்ந்து கொண்ட நாச்சியம்மையோ சாப்பிட்டு முடித்த மலரை…”எத்தா மலரு இங்க வாத்தா” என்று பூஜை அறைக்கு அழைத்துச் சென்றவர் அவளை சாமி கும்மிடப் பணித்து, “பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழனும்” என்று ஆசீர்வாதமும் செய்து… காயத்ரியிடம் கூறி அவளிடம் பால் சொம்பையும் கொடுத்து பேரனின் அறைக்கு அனுப்பி வைத்தார்.
சற்று முன்னர் யுவராஜிடமிருந்து வெளிப்பட்ட நேசச் செயலில், கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்திற்கும் மேலாக அவன் காட்டிய பாராமுகத்தையும் நேற்றிரவு தங்களுக்குள் நடந்த பேச்சு வார்த்தையும் கூட சற்றே ஒதுக்கியவள் கையில் தமக்கை கொடுத்த பால் சொம்பை ஏந்திக் கொண்டு மெல்ல மாடியேறிய மலர்விழியோ….
“இந்த அப்பத்தா நேத்துதே மொத ராத்திரின்னு இதெல்லாம் பண்ணி அனுப்புச்சு, இன்னிக்கும் எதுக்கு வெட்ட போற ஆட்ட மால போட்டு அழட்சிக்கிட்டு போற மாறி, நம்மள சீவி சிங்காரிச்சு பில்டப்லாம் குடுத்து அனுப்பி வக்கிது” என்று வழக்கம் போல் தனக்குள்ளே பேசியபடி சிறிது பதட்டமாகவே தங்கள் அறைக்குள் நுழைந்தாள் மலர்விழி…
உணவு மேஜையில் இருந்து வேகமாக தன் அறைக்குள் வந்து நுழைந்து கொண்டவன் மலர்விழியின் மேல் கோபமும் கொள்ள முடியாது, தாபத்தையும் வெளிப்படுத்த முடியாது தவித்தவனோ தன்னறையில் அங்குமிங்கும் நடந்ததவண்ணம் மலர்விழியின் முகத்தை மனக்கண்ணில் கொண்டு வந்து ரசிப்பதும் பின்னர் அதற்காக கண்ணாடியைப் பார்த்து ‘நேத்து அவ்ளோ வீராப்பா அவகிட்ட கண்டிஷன்லாம் போட்டுட்டு இன்னிக்கு இப்டி வழியிறியே உனக்கு வெக்கமாயில்ல’ என்று தன்னைத் தானே திட்டிக் கொள்வதுமாக இருந்தவனுக்கு ‘நேத்து அப்டி ஒரு கண்டிஷன் போடாமையே இருந்திருக்கலாமோ.?’ என்று கூடத் தோன்றவும் சற்றே அரண்டு தான் போனான் யுவராஜ்….
ஏதேதோ எண்ணத்தோடே அறையை அளந்து முடிந்து ஓய்ந்து இருபுறமும் தலையை உலுக்கி சிகை கோதிக் கொண்டவன், பின்னர் ஒரு வழியாக கைகாப்பை ஏற்றி இறக்கி “காம் யுவா, காம் யுவா” என்று வாரணம் ஆயிரம் சூர்யா போல் தன் நெஞ்சுப் பகுதியை நீவி தன்னைத் தானே நிலைப்படுத்திக் கொண்டவன், விழிமூடி கால் நீட்டி படுக்கையில் அமர்ந்திருந்தவன் மலர்விழியின் வருகையைக் கூட உணராது தான் இருந்தான்.
நேற்றுப் போலவே இன்றும் மெதுவாகவே தங்கள் அறைக்குள் நுழைந்த மலர்விழி தரைக்கு வலிக்குமோ என்பது போல் அன்ன நடையிட்டு யுவராஜின் அருகில் சென்றவள் அவன் அமர்ந்திருந்த தோற்றம் கண்டு துணுக்கமுற்றவளுக்கு காயத்ரி காலையில் கூறிய அறிவுரை எல்லாம் ஞாபகம் வர…
கையிலிருந்த பால் சொம்பை அங்கிருந்த மேஜையில் வைத்தவள் சட்டென்று யுவாவின் அருகில் அமர்ந்து நீட்டப்பட்டிருந்த அவன் நீளக்கால்களைப் பிடித்து விடத் தொடங்க… திடீரென்று கால்களில் மலரைக் கொட்டியது போன்ற ஸ்பரிசத்தை உணர்ந்தவனோ திட்டுக்கிட்டு விழி மலர்த்திப் பார்த்தவன், அந்த அரையிருளில் வெகு அருகில் தெரிந்த மலர்விழியின் முகவடிவில் மயங்கி, சில நொடிகள் தனை மறந்து அவளை ரசித்தவனோ… “தலவலியா யுவித்தான்.? நா வேணா தைலம் தடவட்டுமா.?” என்றவளின் காமரக் குரலால் தான் கலைக்கப்பட்டான்…
மலரின் கேள்வியில் சுதாகரித்தவன் “ஹேய் நீ இங்க என்ன பண்ற” என்று வேகமாகக் கட்டிலை விட்டு இறங்கியவனை சற்று விசித்திரமாகவே பார்த்த மலர்விழியோ, “இல்லத்தான் நீங்க சோந்தாப்ல உக்காந்துருந்திகளா அதான் தலவலியோன்னு நெனைச்சேன், அக்கா வேற தெனமும் நைட்டு புருசனுக்கு கால் அமுக்கி விடணும்னு சொல்லிச்சா… அதான் நீங்க வாங்கத்தான் கால் அமுக்கி விடுறேன்” என்று தன் கையைப் பற்ற வந்தவளை ஏதோ தீண்டத் தகாதவள் போல் ஒதுக்கி விலகிக் கொண்டவன், எத்துணை தகிப்பில் இருக்கிறான் என்று அவனுக்குத் தானே தெரியும்….
ஆனால் தன் தாப உணர்வுக்கு கோப முகமூடி போட்டு மறைத்தவனோ….
“என்னடி கால் அமுக்கி விட்டு என்ன மயக்கப் பாக்குறியா.? எனக்கு அதெல்லாம் ஒண்ணும் தேவல்ல” என்று பல்லைக் கடித்துக் கூறியவனின் குரல் கூட சிறிது குழைந்தே இருக்க… ‘இனிமேல் தான் அவ உன்ன மயக்கனுமாக்கும்’ என்று அவன் உள்ளமே அவனிடம் மல்லுக்கு நின்றது.
“இல்லத்தான் நா கால் அமுக்கதே வந்தீ, அக்காதே சொல்லுச்சுத்தான், காலைல கேக்கும்… அமுக்கிவிடலன்னு சொன்னாத் திட்டும் யுவித்தான்” என்று கூறிய மலருக்கு யுவாவை மயக்கும் நோக்கம் சிறிதும் இல்லை என்றாலும் அவள் பேச்சிலும் பாவனையிலும் அவளின் சிறுபிள்ளையாய் மிழற்றும் உதட்டசைவிழும் பித்தம் தலைக்கேறி சித்தம் கொண்டவனோ அவனையும் அறியாமல் “அது இருக்கட்டும் வேற என்ன சொல்லுச்சு உங்கக்கா.?” என்று வினவினான் யுவராஜ்…
“அதுத்தான்” என்று யோசித்தவளோ அங்கிருந்த பால்சொம்பை எடுத்து “இந்தப் பால நம்ம ரெண்டு பேரையும் குடிக்க சொல்லிச்சுத்தான், குடிங்கத்தான்” என்று அவனை குடிக்கவும் வைத்தவள் மீதியை அவளும் குடித்து முடிக்க… இருவரும் எப்பொழுது கட்டிலில் அமர்ந்தார்கள் என்று கூட அவர்களுக்கு ஞாபகம் இல்லை.
நேற்றிரவு “காலம் முழுசும் கன்னியாவே இரு” என்று அவளை ஏசியவனோ இன்று அவள் விழி வீச்சில் கட்டுண்டு அவள் கொடுத்த பாலை வாங்கிப் பருகி முடித்தவன் கரங்களோ இப்பொழுது மலரின் மலர்க் கரங்களோடு பிண்ணிப் பிணைந்திருக்க… அவன் உதடுகளோ “ம்ம்ம் அப்றம்” என்று கேட்க… மலரின் மிக மெல்லிய விரல் ஸ்பரிசத்தில் தனை மறந்து அவளிடம் உரையாடிக் கொண்டிருந்தான் யுவராஜ்…. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு கிட்டிய ஸ்பரிசமல்லவா…
யுவாவிற்கு பதிலாக “ம்ம்ம், அப்றம்” என்று மீண்டும் மூக்கின் மேல் விரல் வைத்து யோசித்தவள்…
“நீங்க சாப்பிடாம நா சாப்பிடக் கூடாதாம், நீங்க தூங்காம தூங்கக் கூடாதாம், எது செஞ்சாலும் உங்ககிட்ட கேட்டுதே செய்யணுமாம், அப்றம் எப்பவுமே உங்க பேச்சுக்கு மறு பேச்சு பேசக் கூடாதாம்” என்று நீளமாகப் பேசி முடித்தவள் யுவாவின் அருகாமையில் நேற்று அவன் கூறிய நிபத்தனையைக் கூட மறந்தபடி அமர்ந்திருக்க, ஆனால் அதை மறக்க வேண்டிய யுவராஜோ….
“அப்போ நா என்ன சொன்னாலும் செய்வ” என்று கேட்டான்.
கணவனின் கேள்வியில் அவன் குரல் பேதத்தைக் கூட உணராப் பெண்ணவளோ சிறுவயதிலிருந்து தன்னைத் தாங்கிய தன் மாமன் தனக்கு மீண்டு விட்டான் என்றே அகமகிழ்வில் இருந்தவள் வேகமாக…
“ம்ம்ம்… நீங்க என்ன சொன்னாலும் செய்வேன் யுவித்தான், கை அமுக்கட்டுமா, தைலம் தடவட்டுமா?” என்று அடுக்கியவளை… ஒரு உணர்ச்சிகழற்ற பார்வை பார்த்தவன்…. “தாலியக் கழட்டு” என்றான் யுவராஜ் சிறிதும் அசராமல்.
நேற்றிரவு “காலம் முழுசும் கன்னியாவே இரு” என்று அவளிடம் சீறியவன் இன்று ‘அவளை ஆளாமல் முடியாது’ என்று சில மணி நேரங்களுக்கு முன்பே உணர்ந்து கொண்டவனோ, மிக மென்மையாகவே…
“எனக்கு நீ இப்பயே வேணும் விழி, இன்னிக்கு ஒரு நாள் மட்டும் நேத்திக்கு நா சொன்னப்போல தாலியில்லாம எனக்கு உன்னக் குடுடி” என்று அவளை நெருங்கியவாறு கூறியவனின் தாபக் குரலில் அதற்குச் சமமான பிடிவாதமும் நிறைந்திருப்பதை அப்பொழுது தான் உணர்ந்து கொண்டாள் மலர்விழி…
யுவா “தாலியக் கழட்டு” எனக்கூறிய மறுநொடியே நேற்றுப் போலவே இன்றும் “அத்தான்…” என்று அலறி, தன் கழுத்தில் கிடந்த தாலிக் கொடியை இறுகப் பற்றிக் கொண்டவள்….
“வேணாத்தான், இது தப்பு யுவித்தான்” இப்டிலாம் என்ன பண்ண சொல்லாதத்தான், இது தவிர வேற என்ன வேணா சொல்லுத்தான் நா செய்றேன், இது மட்டும் வேணாம் ப்ளீச், என் செல்ல யுவித்தான்ல என் புஜ்ஜிக்குட்டில நா உங்க மொசகுட்டி தான, அதுக்காகவாச்சும் இது வேணாமே” என்று சிறுபிள்ளையில் அவனிடம் கொஞ்சியது போலவே, இன்றும் தன் கை பற்றிக் கெஞ்சியவளைக் கண்டும் கூட, தன் ஈகோவை சிறிதும் தளர்த்த விரும்பா பிடிவாதக்காரன்…
“ஏண்டி இதுக்குப் போய் இவ்ளோ சீன் போடுற, நா கட்டுன தாலி… அத நானே கழட்டச் சொல்றேன் அதுவும் கொஞ்ச நேரம் மட்டும்… தூங்கும் போது கழுத்துல இருக்க நகை உறுத்துனா கழட்டி வக்கிறதில்லையா.? அது போல நெனச்சுக்கடி, என்னால முடிலடி, பிடிவாதம் பிடிக்காம வா விழி” என்று கோபத்தில் தொடங்கி மித மிஞ்சிய தாபத்தில் முடித்தான் யுவா…
தமிழ் மண்ணில் பிறந்த எந்த ஒரு பெண்ணும் கொண்டவன் கொடுத்த தாலியை, தன் உயிரை விடவும் மேலாகப் போற்றிப் பாதுகாப்பாள் என்ற உண்மையை புரியாதவனின் பிடிவாதம் கண்டு கலங்கிய மலர்விழி மற்ற அனைத்து விஷயங்களையும் விளையாட்டுதனமாக எடுத்துக் கொண்டாலும், சிறு வயதில் இருந்தே சாஸ்திரம் சம்பிரதாயங்களுக்கு மிகுந்த மதிப்பளிக்கும் கிராமத்துச் சூழலில் வளர்ந்ததாலோ, அல்லது யுவாவின் அன்னை உட்பட அவளைச் சுற்றி இருக்கும் பெண்கள் தங்கள் கழுத்தில் கிடக்கும் மஞ்சள்கயிறுக்கு கொடுக்கும் மதிப்பைக் கண்டு அது அவள் உள்ளத்திலும் பதிந்திருந்ததாலோ என்னவோ அவளுக்கு யுவா கூறும் விஷயம் மிக மிக தவறான விஷயமாகவே தோன்ற அவளோ இப்பொழுது கெஞ்சலை விட்டு, சற்றே தைரியத்தைக் கூட்டி…
‘நா பிடிவாதம் பிடிக்கறனா.? இல்ல நீங்க பிடிவாதம் பிடிக்கிறீகளாத்தான்.?’ என்று கணவனை நோக்கி அவளும் சிறிது கோபமாகவே கேட்டவள் தொடர்ந்து….
“அன்னிக்கு நா உங்கள பொறுக்கினு சொன்னது தப்புதே அதுக்காக உங்க கால்ல விழுந்த கூட மன்னிப்பு கேக்கறேன், ஆனா இது மட்டும் வேணாம்த்தான் தயவு செஞ்சு என்னய இப்டியே விட்ருங்கத்தான்” என்று கலங்கியவள்
“என்ன ஆனாலும் இப்டி ஒரு நிபந்தனைக்கு ஒரு நாளும் நா சம்மதிக்க மாட்டேன் யுவித்தான்” என்று மலர் கூறிய உறுதியான இறுதி வார்த்தைகளில்…
யுவாவின் ஆண்கர்வம் மொத்தமும் தூண்டப்பட்டு ‘அன்று போலவே இன்றும் மலரால் தான் அவமதிக்கப்பட்டதாகவே’ எண்ணிக் கொண்டவன்
சற்று முன்னர் அவள் மேல் பீறிட்டுக் கிளம்பிய மோக உணர்வுக்கு சடுதியில் அணை போட்டு, மலரைப் பார்த்து ஒரு நக்கல் சிரிப்பைச் சிந்தியவன் அவளருகில் நெருங்கி…
“சேலஞ்ச் பண்றியாடி.?” எனக் கேட்டான் அவளின் உயிர் மாமன் யுவராஜ்.