திருமணம் முடிந்து பத்து நாட்கள் கழிந்தும் கூட ஒட்டாது திரியும் பேரனும் பேத்தியும் தனியாக மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு செல்ல வேண்டுமென்று ஆசைப்பட்ட நாச்சியம்மை, கதிரின் உதவியோடு யுவாவின் ஜீப் டயரை பஞ்சர் செய்தவர் பேரனின் கையில் புல்லட்டின் சாவியையும் கொடுத்து விட்டு குடும்பத்தினரோடு காரில் சென்று ஏறிக்கொள்ள…
பத்து நாட்கள் கடந்தும் கூட தன் நிபந்தனைக்கு செவி சாய்க்காமல், தன்னிடம் சவால் விட்டிருக்கும் மலர்விழி மேல் (அப்படி அவனே எண்ணிக் கொண்டு) மிகுந்த கோபத்தில் இருந்தவன், அப்பத்தாவின் வார்த்தைக்காகவோ அல்லது குதூகலமாக பைக்கில் ஏறி அமர்ந்து கொண்டு “வேகமா வண்டிய எடுங்க மாமா” என்று ஆர்ப்பரித்த மலரின் ஆசைக்காகவோ தன் கோபத்தை எல்லாம் விடுத்து அந்த புல்லட் வண்டியில் ஏறி அமர்ந்த யுவா தன் தோளில் கை வைத்த மலர்விழியைத் திரும்பி எரித்து விடுவது போல் முறைத்துப் பார்த்தவன்,
“என்னடி அப்பத்தா கூட சேந்துகிட்டு ஆட்டம் காட்றியா, அப்பத்தா சொல்லுச்சுன்னுதே நா உன் கூட கோவிலுக்கே வர்றேன் கோவிலுக்கு போய் சேர்ற வரைக்கும் என் மேல கை பட்டுச்சு அப்றம் நான் பொல்லாதவனாகிடுவேன் ஆமா” என்று உறுமி விட்டு வண்டியை உயிர்பித்தவன் அந்த குண்டும் குழியுமான கோவில் சாலையில் மிதமான வேகத்தோடே வண்டியைச் செலுத்த….
யுவாவின் உணர்ச்சிகள் எதுவும் புரிபடாத மலரோ அவனுடைய பிடிவாத குணத்தை கண்டு வழக்கம் போல் “இவக என்ன தொட்டாச் சுருங்கியா நா தொட்டவொன்னையும் சுருங்கியா போயிருவாக…” என்று தனக்குள்ளே பேசிக் கொண்டவளுக்கு யுவாவுடைய இறுக்கமான முகத்தையும் அவன் வண்டியைச் செலுத்தும் வேகத்தையும் பார்த்து ‘ஏண்டா இந்த பைக்ல ஏறினோம்’ என்றே இருந்தது.
மலர்விழி தன் நிபந்தனைக்கு சம்மதிக்கும் வரை அவளிடம் விலகியே இருக்க வேண்டும் என முடிவு செய்திருந்த யுவராஜ் மிக மெதுவாகவே அந்த புல்லட் வண்டியை
செலுத்திக் கொண்டு வர…
கதிரின் கைகளில் குடும்பத்தினர் அனைவரையும் சுமந்து சென்ற அந்த பழைய காலத்து அம்பாசிடர் மகிழுந்து கூட சற்று வேகமாகவே சென்றது…
அனாதைச் சிறுவனாக இருந்த கதிர் அவர்கள் வீட்டில் வந்து சேர்ந்த கொஞ்ச காலத்திலிருந்தே அவனை நேசிக்கத் தொடங்கியிருந்த ஜானவி சில வருடங்களாக அவனிடம் அதை வெளிப்படுத்தவும் தொடங்கியிருக்க, ஆனால் அவளவனோ உறவென்று சொல்லிக் கொள்ள யாருமில்லா தன்னை அழைத்து வந்து தங்கள் வீட்டில் ஒருவனாகத் தங்க வைத்து தன் வாழ்க்கைத் தரத்தை இவ்வளவு உயர்த்திக் கொடுத்திருக்கும் ஜானுவின் குடும்பத்தினரிடம் மிகப் பெரிய மரியாதை வைத்திருப்பவன், அவர்களுக்கு சிறு சிணுங்களைக் கூட கொடுத்து விடக் கூடாது என்பதில் உறுதியோடு இருப்பவனோ மனதுக்குள் ஜானுவை அளவில்லாது நேசித்தாலும் ஒரு பொழுதும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் தான் வலம் வரத் தொடங்கியிருந்தான்.
வெகு நாட்களுக்குப் பிறகு அப்பத்தாவின் தயவால் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த கதிருக்கு நேரெதிரே பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஜானுவோ கதிரின் பிரத்தியேக வாசனையை நாசியிலும், அவனின் பிரதி பிம்பத்தை விழிகளிலும் நிரப்பியவாறு வந்தவளுக்கு காதலனைத் தீண்டவே கைகள் பரபரக்க…
காருக்குள் இருந்த அனைவரையும் சுற்றி முற்றி பார்த்தவள் சற்றே முன்னே சாய்ந்து கதிரின் பிடரியில் “ஊப்” என்று ஊதியவளின் செய்கையில் அவன் உடல் முழுதும் மயிர்க் கூச்செரிய, அவனோ ‘அவள் ஏதோ செய்யப் போகிறாள்’ என்று கண்டு கொண்டவன், எப்பொழுதும் போல் அவள் சில்மிஷங்களை இன்றும் தடுக்க முடியாது அமர்ந்திருந்தவனின் இடையை ஓட்டுநர் இருக்கையின் இடைவெளியில் கையை விட்டு நறுக்கென்று கிள்ளினாள் அந்த குறும்புகாரி ஜானு.
ஜானுவின் செய்கையில்…
“ஆ” என்று அலறிய கதிரோ காரின் நிறுத்து விசையை அழுத்தமாக மிதிக்க, அந்த அம்பாசிடரோ மிகப்பெரிய குலுங்கலோடு நிற்க… முன்னே இருந்த பேனட்டில் தலையை மோதிக் கொண்ட கதிரோ… ‘இவ்ளோ பேர் இருக்கப்போ ஏண்டி ஜானு இப்டிலாம் என்ன படுத்துற’ என்று சொல்லவும் முடியாத மெல்லவும் முடியாத தவிப்புக்குத்தான் ஆளானவனிடம்…
“என்னா கதிரு? என்னல ஆச்சு? ஏம்பா என்னாச்சு?” என்று அனைவரும் பதற…
அவர்கள் அனைவரையும் பார்த்து அசடு வழிந்த கதிரோ…
“நாய் குறுக்க போயிருச்சு அப்பத்தா, அதே” என்று திணறியவாறு கூறி சமாளித்தவன் ஜானுவை முறைக்க முயன்று, அவள் கண் சிமிட்டலில் தோற்றவன், மீண்டும் வண்டியை கிளப்பினான் ஜானுவின் கதிரவன்.
இத்துணை நேரமும் தன்னவனைச் சீண்டி அவன் தவிப்பில் குளிர் காய்ந்த குறும்புக்காரி ஜானுவுக்கு…
“இந்த ராசா ஏன் புல்லட்ட மாட்டு வண்டி போல ஓட்டிக்கிட்டு வருது” என்ற நாச்சியின் கூற்றில் பின்னே திரும்பி மெதுவாக வந்து கொண்டிருந்த அண்ணனையும் மலரையும் பார்த்தவளுக்கோ, தன் சிறுவயது தோழியாக இருந்து இப்பொழுது தனக்கு அண்ணியாக மாறியிருக்கும் மலரையும் சீண்டத்தான் ஆசை வந்தது போலும்.
அவளோ கைபேசியை எடுத்து மலரின் எண்ணுக்கு அழைத்தவள்….
“ஏண்டி மலரு, என் மாமா கூட புல்லட்டுல போறீன்னு பெருமையா பீத்திக்கிட்டுப் போன, இப்ப நீங்க வர்ற வேகத்தப் பாத்தா எப்டியும் அடுத்த வருஷந்தே கோவிலுக்கு வந்து சேருவீக போல, மாட்டு வண்டியில வர்றவன் கூட உங்கள முந்திக்கிட்டு போறாண்டி” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் கூறினாள் யுவாவின் தங்கை.
யுவா வண்டியை மெதுவாக செலுத்தி வருவதில் ஏற்கனவே கடுப்புடன் அமர்ந்திருந்த மலரோ ஜானுவின் கிண்டலில் மேலும் கடுப்பாகியவள் “ஆமடி மாட்டு வண்டிய விட மெதுவா புல்லட்ட ஓட்டிகிட்டு வந்தா என் நாத்திக்கு சீக்ரம் கல்யாணமாகும்னு ஒரு ஜோசியக்காரன் சொன்னான்டி, அதனால உனக்காகத்தேண்டி நானும் என் மாமாவும் இவ்ளோ மெதுவா வாறோம் போதுமா.? போன வச்சுட்டு நீ பாத்துட்டிருக்க வேலைய ஒழுங்கா பாருடி” என்று அப்பொழுதும் யுவாவை விட்டுக்கொடுக்காமல் என் மாமா என்றே விளித்துக் கூறி தனைச் சீண்டிய ஜானுவை பதிலுக்கு வாரிய மலர்விழியோ…
“இங்க இவக பண்றது பத்தாதுன்னு போன்ல இவக தங்கச்சி வேற, ரெண்டு பேத்துக்கும் நம்மள சீண்டலன்னா தூக்கமே வாராது” என்று வழக்கம் போல் நொடித்துக் கொண்டவளின் சாம்பாஷனையில் அடக்கப்பட்ட புன்னகையோடு அமர்ந்திருந்த யுவாவின் உருவத்தை பைக்கின் முன்னே இருந்த குவி ஆடியில் பார்த்தவள்
‘செய்றதையும் செஞ்சுட்டு உனக்கு சிரிப்பு வேறயா மாமா’ என்று மீண்டும் உள்ளூரக் குமுறி அந்த கண்ணாடியில் தெரிந்த அவனின் வசீகர பிம்பத்தைப் பார்த்து “வவ்வவ்வ்வே” என்று மூக்கைச் சுழித்து, உதட்டை வளைத்து கொண்ணை வைத்தவளின் செய்கையில் தனை மறந்து அந்தக் கண்ணாடி வழியாகவே அவளை ரசித்துக் கொண்டு வந்தான் யுவா….
காற்றில் ஆடும் கூந்தலுக்குப் போட்டியாக அவள் உடலைத் தழுவியிருந்த பட்டுப் புடவையின் முந்தியும் சேர்ந்தாட, பட்டாம்பூச்சியாய் படபடக்கும் இமைகளுக்குள் இருந்த அவளின் கருவண்டு விழி வீச்சிலே தன்னை முற்றிலும் தொலைத்தவனுக்கு, அவளின் மலர் முகத்தில் இருந்த சிறு சிணுக்கம் கூடத் தாங்கவில்லை போல….
அந்த சிணுக்கத்தின் காரணத்தை அறிந்தவனோ தன் கைபிடியில் இருந்த ஆக்சிலேட்டரை நன்றாக முறுக்கத்தொடங்க அவர்களைச் சுமந்து வந்த புல்லட் வண்டியோ, மலர் எதிர்பார்த்தது போல மிக வேகமாக பாயத் தொடங்கியது.
திடீரென்று வண்டியின் வேகம் அதிகரிக்கவும் சீட் கம்பியை மட்டும் பிடித்து அமர்ந்திருந்த மலர்விழியோ அதன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது தடுமாறியவள் “மாமா மாமா” என்று கத்தத் தொடங்க, அதற்குள் பல மைல் தூரம் வந்து விட்டிருந்த புல்லட்டை ஒரு ஓரமாக நிறுத்திய யுவாவோ மலர்விழியிடம் திரும்பி…
“வேகமா போனும் தான ஆசப்பட்ட அப்றம் ஏண்டி கத்தற.?” என்று வினவ…
என்று இமை கொட்டியவளை சில நிமிடங்கள் பார்வையாலே மேய்ந்தவன் எதுவும் பேசாமல் வண்டியை கிளப்பியவனோ, மீண்டும் ஆக்சிலேட்டரை உச்ச வேகத்தில் திருக பின்னே அமர்ந்திருந்த மலர்விழியோ இப்பொழுது “மாமா பயமாயிருக்கு மாமா” என்று மீண்டும் அலறத் தொடங்கினாள்.
“மாமா பெரிய பள்ளம் மாமா, பயமா இருக்கு மாமா” என்று கத்திக் கொண்டு வந்தாலும் அவன் கூறியதற்காக அவனைத் தொடாமலே அமர்ந்திருந்த மலர்விழியின் கத்தலை எதுவும் காதில் வாங்காதது போல் புல்லட்டை பாய விட்டவன், அங்கிருந்த பெரிய பள்ளத்தை நெருங்குவதற்குள் ஒரு கையால் வண்டியைச் செலுத்திக் கொண்டே மறுகையால் மலரின் வலது கரத்தை இழுத்து தன் கழுத்தை சுற்றியும், அவளின் இடது கரத்தை தன் இடுப்பைச் சுற்றிலும் படரவிட்டு அவளைத் தன் முதுகோடு அழுத்திக் கொண்டவனோ…
“மாமா இருக்கும் போது உனக்கென்னடி பயம், மாமா மேல சாஞ்சுக்க விழி” என்று குரலில் அத்துணைக் காதல் வழியக் கூறியவனோ அந்த நிமிடம் சிறு வயதிலிருந்தே அவளைத் தன் இதயச்சிறையில் அடைக்காக்கும் அவளின் மாமனாய் மட்டுமே உருமாற்றம் கொண்டிருந்தவன் உல்லாசமாய் வண்டியைச் செலுத்தினான் யுவராஜ்…
சற்று நேரத்திற்கு முன்னால் எந்தப் பள்ளத்திலும் வண்டியை விடாது அழுங்காமல் ஓட்டி வந்தவன் இப்பொழுது “விழி மாமாவ நல்லா இறுக்கிப் பிடிச்சிக்கடி” எனக் கூறிக்கொண்டே அனைத்து பள்ளத்திலும் அந்த புல்லட்டை ஏற்றி இறக்க, அந்த உடல்களின் உரசலோ அந்த அரிமாவின் உள்ளமதில் மாபெரும் வேள்வித் தீயைத் தான் பற்ற வைத்துச் செல்ல….
இப்பொழுது தன் மனையாளின் பின்னே கைகொடுத்து அவள் மோவாயை தன் தோள் மேல் தாங்கிக் கொண்டவன் அவள் மூச்சுக் காற்றை சுவாசித்தவாறு ஒரு மோன நிலையோடே வண்டியைச் செலுத்தியவனின் அருகாமையில் அவனின் காதல் ஊட்டும் குரலில் சற்று முன்னர் இருந்த சுணக்கம் யாவும் மறையப் பெற்றவளோ “மாமா” என்று மேலும் மேலும் அவனை இருக்கிக் கொண்ட மலரும், ஒரு கிறக்க நிலையோடே அவன் தோளில் கிளியாய் தொத்திக் கொண்டாள்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.