சுட்டெரிக்கும் வெய்யோன் மேற்கு நோக்கித் தன் பயணத்தைத் தொடங்கியிருந்த அந்தி மாலைப் பொழுதில் திருநெல்வேலியில் பல ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள கே ஆர் திருமண மண்டபத்தின் முன்புறம் முழுதும் பந்தல் போட்டு வாழை மரமும் கட்டப்பட்டு பந்தல் பகுதியிலும் மண்டபத்தின் வெளிப்புறம் முழுதிலும் சீரியல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜெகஜோதியாக மின்னிக் கொண்டிருக்க, மண்டபத்தின் உள்புறம் பல வண்ண மலர்கள் சரம் சரமாகத் தொங்கவிட்டு வாசனை பரப்பிக் கொண்டிருந்தது.
நாளை நிகழவிருக்கும் கதிர் ஜானுவின் திருமண வைபவத்திற்காகவும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் அவர்களின் வரவேற்பு நிகழ்ச்சிக்காகவும் இயற்கை மலர்களோடு, செயற்கை மலர்கள் கொண்டும் அங்கிருந்த மணமேடையையே ஒரு நந்தவனம் போல் மாற்றி இருக்க… அரண்மனை வீட்டு இளவரசியவள் மனம் விரும்பிய மணாளனை கரம் பிடிக்கும் அந்த தருணத்திற்காக அந்த பிரமாண்ட மண்டபமே விழாக் கோலம் பூண்டிருந்தது.
அன்றைய விழா நாளின் நாயக நாயகியோடு அவர்கள் குடும்ப அங்கத்தினரும் அந்த மண்டபத்தில் குழுமி இருக்க… யுவா வீட்டுப் பெரியவர்களான சிதம்பரமும் மீனாட்சியும் வாசலில் நின்று உறவினர், நண்பர்களை வரவேற்கத் தொடங்கியிருந்தனர்.
இளசுகளோ உள்ளே வரவேற்பு வேலைகளை சரிபார்த்த வண்ணமும், வரவேற்பு நிகழ்ச்சிக்கு தாங்களும் ஆயத்தமாகி மாப்பிள்ளை பெண்ணையும் தயார்படுத்திக் கொண்டும் இருக்க…
அவர்களின் மழலைகளும் மற்றய குழந்தைகளோடு ஓடியாடி விளையாண்டு அந்த மண்டபத்தையே உண்டு இல்லை என்று ஆக்கிக் கொண்டிருக்க, அவர்களைப் பார்த்து ரசித்த வண்ணம் ஆசுவாசமாக அமர்ந்திருந்தனர் அரண்மனை வீட்டின் மூத்த தலைமுறையினரான நாச்சியம்மையும் அவர் கணவர் வேலுச்சாமியும்.
மண்டபத்தின் நுழைவாயிலில் நின்ற சிதம்பரத்தின் அருகில் வந்த அவர் மனைவியோ, “ஏங்க… மாங்கல்யம் வாங்க போன தம்பி இன்னும் வரலியாங்க.?” என்று கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே புழுதி பறக்க மண்டபத்தின் வாயிலில் வந்து நின்றது யுவாவின் ராங்குலர்.
வழக்கம் போல் ஒரே தாவில் ஜீப்பிலிருந்து குதித்து இறங்கிய யுவா வேகநடையில் பெற்றோரை நெருங்கியவனைப் பார்த்து திருப்தியாக புன்னகைத்த சிதம்பரமோ, “வந்துட்டியா தம்பி… ஆசாரிதே மாங்கல்யம் காலைலயே செஞ்சுட்டதா சொன்னாரே… அப்றம் ஏன் தம்பி இவ்ளோ நேரம்.?” என்று வினவ….
யுவாவோ, “மாங்கல்யம் எப்பவோ ரெடி பண்ணிட்டாருப்பா, ஆனா அத நல்ல நேரத்துலதே கொடுப்பேன்னு கொஞ்சம் லேட் பண்ணிட்டாரு” என்று அவனும் புன்னகை முகமாகவே பதிலுரைத்தவன் தங்கையின் திருமணத்திற்காக வாங்கி வந்த தாலிக்கொடியை அன்னையின் கையில் கொடுத்து, “சரியா இருக்கானு பாத்துக்கங்கமா” என்று கூறி மண்டபத்தினுள் நுழைந்தான்.
ஐந்து வருடங்களுக்கு முன்னால் பார்த்த அதே மிடுக்கோடும், கம்பீரத்தோடும், வசீகரத்தோடும் தன் வேக நடையில் மண்டபத்தினுள் நுழைந்தவனின் விழிகளோ மண்டபம் முழுதும் சுழன்று தன்னவளைத் தான் தேட, அவன் தேடிய அந்த யௌன மங்கையோ அவள் விழிகளில் சிக்காமல் போனாலும் அதற்கு பதிலாக “யுவிப்ப்பா” என்று ஓடி வந்து அவனை கட்டிக் கொண்டனர் ராஹித்யா, சாஹித்யா என்ற இரட்டை பூஞ்சிட்டுகள்.
ஆம் யுவாவும் மலர்விழியும் பல போராட்டங்களுக்குப் பிறகு தங்கள் இல் வாழ்க்கையில் நுழைந்திருந்தாலும், அதற்குப் பிறகான அவர்களின் வாழ்க்கை சொர்க்க வாழ்வுக்கு ஒப்பானதாக தெளிந்த நீரோடையாக சென்று கொண்டிருக்க, அதை மேலும் அழகாக்கும் வண்ணம் அடுத்த ஒரு வருடத்திற்குள்ளாகவே மலர்விழியின் மணி வயிற்றில் வந்து உதித்திருந்தனர் அவர்களின் இரட்டை மகள்கள்.
இத்துணை வருடங்களில் மனைவிக்கு காதல் பாடத்தோடு சேர்த்து ஒரு பெண்ணுக்குத் தேவையான கல்விப் பாடமும் கற்றுக் கொடுத்து, தன்னுடைய மடிக்கணினியைக் கூட இயக்கும் அளவு, பொது அறிவிலும் அவளை முன்னேற்றி இருக்கும் யுவாவுக்கு…. தங்கள் காதலின் சின்னமாக தன் மனைவி கொடுத்த இந்த இரட்டைப் பரிசுகளில், அதிலும் அவர்கள் தன்னையே உரித்து வைத்துப் பிறந்திருப்பதில் அத்துணை பெருமிதம், அவ்வளவு மகிழ்ச்சி.
“ப்பா” என்று தன் காலைக் கட்டிக் கொண்ட இரு மலர்களையும், “ராஹிமா சாஹிமா” என்று இரண்டு கரங்களில் ஏந்திக் கொண்டவன் மலர்விழியின் நிறத்தையும், யுவாவின் வசீகரத்தையும் சேர்த்துச் செய்த சிற்பங்களாய் தேவதைகள் போல் இருந்த மகவுகளின் கொள்ளை அழகில் மயங்கியவனாய் அவர்கள் நெற்றியில் இதழ் ஒற்றிய வண்ணம்….
“குட்டிமா ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா.?” என்று வினவ…
அவர்களும், “சாப்டோம்பா” என்று ஒன்று சொன்னார் போல் பதிலுரைத்தவர்களும் மலர்விழி கற்றுக் கொடுத்திருந்த பழக்கப்படி “நீங்க சாப்டீங்களாப்பா.?” என்றும் பதிலுக்கு வினவியவர்கள், தந்தை “சாப்ட்டேண்டா குட்டிமா” என்று கூறவும் இன்னும் ஏதேதோ அவனிடம் பேசியவாறே இருக்க, அவனை நோக்கி வந்தான் தனா.
மகள்களை கையில் சுமந்தபடியே அங்கு மணமேடையில் செய்யப்பட்டிருந்த மலர் அலங்காரங்களை பார்வையிட்டு “முனியா அந்த பூச்சரத்த இன்னும் கொஞ்சம் இறுக்கி கட்டு” என்று பணியாளிடம் சொல்லிக் கொண்டிருந்த யுவாவை நெருங்கிய தனாவோ…
அவன் கரங்களில் இருந்த குட்டி மலர்களிடம் “டேய் பட்டூஸ்… சுஜாக்கா எங்கடா.?” என்று தன் மகளைக் கேட்டவாறே அவர்கள் கண்ணத்தை கிள்ளிக் கொஞ்சியவனுக்கு அவர்களோ, “அக்கா ஆச்சி கூட இருக்காங்க பெரியப்பா” என்று பதில் கொடுக்கவும்…
“சரிடாம்மா” என்று சொல்லியவன் தம்பியிடம், “ஆசாரி தாலிக்கொடிய நம்ம முறப்படி நல்லா செஞ்சு குடுத்துருக்காரா யுவா.?” என்று வினவியவனுக்கு, அவனும், “அருமையா செஞ்சிருக்காருண்ணே” என்று பதில் சொல்லிவன் தொடர்ந்து…
“இங்க மத்த வேலைலாம் நல்லபடியா முடிஞ்சுதா.?” என்று வினவினான்…
தனாவும், “எல்லாம் சூப்பரா முடிஞ்சுது, சமையல் கூட பக்காவா இருக்கு, ஆனா பொண்ணு மாப்புளதே இன்னும் ரெடியான்னு தெரில” என்று சொல்ல….
யுவாவோ, “இன்னுமா ரெடியாகுறான் நம்ம மாப்புள” என்று அங்கு மூடியிருந்த மணமகன் அறையை பார்த்த வண்ணம் கேட்டான்.
தனாவும் “ஆமப்பா… எப்ப உள்ள போனவன் இன்னும் வரல புதுமாப்புளயாகவும் ஓவரா மேக்கப் போடுறான் போல இந்தக் கதிரு” எனக் கூறி சிரித்துக் கொண்டவனோ….
“நா போய் அவனக் கெளப்பி கூட்டிட்டு வர்றேன் நீயும் போய் ரெடியாகிட்டு வா யுவா, எல்லாரும் வர ஆரம்பிச்சிட்டாங்க” என்று கூறியவன் கதிர் இருந்த அறை நோக்கி விரைய…
யுவாவும் கையிலிருந்த மகள்களின் வயிற்றில் கிச்சுகிச்சு மூட்டி அவர்களை சிரிக்க வைத்தபடியே மண்டபத்தில் தனக்கென்று இருந்த அறைக்குள் நுழைந்தவனை வரவேற்றது என்னவோ அவன் உடுத்தவென்று மலர்விழி எடுத்து வைத்து விட்டுப் போயிருந்த உடைகள் தான்.
இன்று மட்டுமல்ல கதிர் ஜானுவின் திருமண வைபவங்கள் தொடங்கிய கடந்த இரண்டு மூன்று தினங்களாகவே வேலை வேலை என்று சுற்றி வரும் மலர்விழி அந்த அரண்மனை வீட்டின் மூத்த மருமகளும் அவள் தமக்கையுமான காயத்ரி வேறு பல வருடங்கள் கழித்து ஐந்து மாதக் கருவைத் தாங்கி இருப்பதால் அந்த அரண்மனை வீட்டின் இளைய மருமகளாக அவளே தன் நாத்தியின் விசேஷத்தில் அனைத்தும் இழுத்துப் போட்டு செய்து வருபவள்
ஆற அமர கணவனுடன் கொஞ்சிக் குலாவவில்லை என்றாலும் அவனுக்கு வேண்டியதை தவறாமல் செய்து விடுபவள்
அவன் கைபேசிக்கும், “யுவித்தானுக்கு… உங்க மொசக்குட்டி நா உடுத்திருக்க அதே கலர்லயே ட்ரெஸ் எடுத்து வச்சுருக்கேன், குளிச்சிட்டு சமத்தா அத போட்டுக்கோங்கத்தான், அப்றம் மறக்காம வாச்சும் கட்டிக்கோங்க” என்று ஒரு குறுஞ்செய்தியும் அனுப்பியிருக்க…
அதைப் படித்த நம் அரிமாவுக்கு மனைவியை இந்தக் கணமே பார்க்க வேண்டும் என்று பேராவல் கிளம்பியது போலும்….
அவனோ உடனே மனைவியின் கைபேசி எண்ணிற்கு அழைக்க, அதுவோ கேட்பாரற்றுக் கிடந்தது…. மீண்டும் மீண்டும் மனைவிக்கு அழைத்து ஓய்ந்து போனவனோ தன் கையிலிருந்த மகள்களிடம், “அம்மா எங்கடா.?” என்று வினவ…
அந்த பூஞ்சிட்டுக்களும் “அம்மா ஜானத்த ரூம்ல ரொம்ப பிஸியா இருக்காங்கப்பா” என்று பதில் கூறினர்.
மகள்கள் காதில் ஏதோ சொல்லி அனுப்பி வைக்க… அவர்களும் அன்னை இருந்த அறை நோக்கிச் சென்றனர்.
ஜானுவின் அறையில் இருந்த மலர்விழியோ கைபேசி ஒலித்தது கூடத் தெரியாமல் காயுவோடு இணைந்து ஜானுவை வரவேற்புக்கு ஆயத்தமாக்கிக் கொண்டிருந்தவள்…
“அக்கா… ஜானு உடுத்திருக்க லெகங்காக்கு இப்டி பின்னல் போட்டா நல்லா இருக்குமா இல்ல க்ளிப் வச்சு பின்னவா.?” என்று காயுவோடு மிகப்பெரிய ஆலோசனையில் இருந்தவள் மகள்கள் தன்னை “ம்ம்மா” என்று அழைக்கவும்…
“பாப்புமா என்னடா… எதுவும் வேணுமா.?” என்று கேட்க…
அவர்களோ, “எங்களுக்கு ஒன்னும் வேணாம்மா… அப்பாக்குத்தான் தல ரொம்ப வலிக்குதாம் தைலம் வேணுமாம்” என்று தந்தை சொல்லி அனுப்பியதை அப்படியே கூறினர் அவனின் இரட்டைகள்…
மகள்களின் கூற்றில் ‘மாமாக்குத் தலைவலியா.?’ என்று கலங்கிய மலர்விழி அவன் எண்ணியது போலவே அடுத்த ஐந்து நிமிடத்தில் கணவன் இருந்த அறைக்குள் நுழைந்தவளை “விழிமா” என்று ஆவலோடு அள்ளி அணைத்துக் கொண்டான் யுவா.
இரண்டு தினங்களாகவே மனைவியின் அருகாமை கிட்டாது தவித்துப் போய் இருந்தவன் தனக்கு தலைவலி என்றதும் ஓடி வந்தவளை வாரி அணைத்து…
“மிஸ் யூடி மொசக்குட்டி” என்று அவள் கழுத்தில் முகம் புதைத்தவனின் செயலிலேயே கணவனுக்குத் தலைவலி இல்லை என்று கண்டு கொண்டவளோ…
“யுவித்தான் என்ன விளையாட்டு இது” என்று தொடங்கியவளின் மீதி வார்த்தைகளை தன் இதழ்களுக்குள் வாங்கிக் கொண்டவன் அவளின் இடையை அளந்த வண்ணம் அவளிதழில் பதித்த ஆழ்ந்த முத்தமதில் தன் இதழ்களுக்குள் இருந்த சுவிங்கத்தை அவள் இதழ்களுக்குள் இடம் பெயர்த்து விட்டு நிமிர…
அவளோ கணவன் செயலில் வெட்கியவாறே, “ச்சீ போங்க யுவித்தான் லிப்ஸ்டிக்லாம் அழிஞ்சு போச்சு… இதுக்குத்தே தலவலின்னு பொய் சொல்லி வரவச்சிங்களாக்கும்” என்று செல்லமாக அவன் மார்பில் குத்தினாள்.
அவனோ மனைவியின் சிணுங்களை ரசித்த வண்ணமே “மொசக்குட்டிதே கல்யாண பிஸில இந்த மாமாவையே மறந்துட்டிங்க, ரெண்டு நாளா பூஸ்டும் கொடுக்கல, அப்றம் நா பொய் சொல்லாம என்ன செய்றதாம்” என்று அவள் சிணுங்கியது போலவே அவனும் சிணுங்கி மேலும் மேலும் அவள் முகமெங்கும் முத்தாடி முடித்தவனை காதல் வழியப் பார்த்தவளும்…
“ம்ம்ம் சரித்தான், உங்க பூஸ்ட் எல்லாம் முடிஞ்சுதுள்ள இப்ப நா போலாமா.?” என்று தலை சரித்து வினவியவளைப் பார்த்து “ம்ம்ஹும்” என்று தலை அசைத்தவன்…
தன் கரத்தில் இருந்த முத்துமாலையை அவளின் சங்கு கழுத்தில் அணிவித்து…
“மாகல்யம் வாங்கப் போனப்போ இந்த முத்து மாலைய பாத்தேன் விழி, உன் கழுத்துக்கு ரொம்ப அழகாயிருக்கும்னு தோணுச்சுடி, அதான் வாங்கிட்டேன்… வாங்குனதுல இருந்து இத உன் கழுத்துல போட்டு பாக்கணும்னும் ஒரே ஆசடி, அதான் உன்னய பொய் சொல்லி வரவச்சேன்” என்றவனோ “மாலை நல்லாயிருக்கா மொசக்குட்டி.?” என்றும் வினவினான்.
அவளும், “ரொம்ப சூப்பரா இருக்குத்தான்” என்று விழிகள் மின்னக் கூறியவளும் சற்று தயங்கியவாறே…
“இத நா அப்றம் போட்டுக்கட்டுமாத்தான்.?” என்று அந்த மாலையை கழட்டப் போனவளின் உள்ளமதை உணர்ந்திருந்தவனோ…
“மம்ம்ஹும்” என்று அவளைத் தடுத்து அவள் கரங்களில் அதே போல் இன்னும் இரண்டு மாலைகளை வைத்தவன்…
“ஜானுக்கும் காயுக்கும் கொடுத்துரு” என்றும் கூறினான் யுவா.
தன்னை போலவே எண்ணம் கொண்டு, அனைத்தையும் முன்கூட்டியே யோசித்துச் செய்யும் கணவனின் செயலிலும், உறவுகளுக்கு அவன் கொடுக்கும் முக்கியத்துவத்திலும் அகம் மகிழ்ந்து போன மலரோ…
“என் யுவித்தான்னா யுவித்தாந்தே” என்று கணவனை கட்டி அணைத்து அவனின்
சொரசொரத்தக் கண்ணத்தில் தன் இதழ்களையும் ஒற்றி எடுத்து விட்டு ஓடிச் செல்ல…
அங்கு காயூவோ ஜானுவை தயார்படுத்தியே முடித்திருந்தாள்.
கையில் இரண்டு முத்து மாலைகளோடும் முகம் கொள்ளாப் புன்னகையோடும் ஜானுவின் அறைக்குள் நுழைந்து கணவன் வாங்கி வந்ததை “மாமா குடுக்க சொன்னாங்க” என்று அவர்களிடம் கொடுத்தவளோ…
“எல்லாம் முடிஞ்சுதாக்கா” என்று ஜானுவின் அலங்காரத்தையும் பார்வையிட…
அவர்கள் இருவரும் மலர் கொடுத்த முத்துமாலையை “செம்மயா இருக்குடி” என்று சொல்லிய வண்ணம் மகிழ்ச்சியாகவே பெற்றுக்கொண்டவர்கள் அவள் முகம் பார்த்ததும் சட்டென்று சிரித்து விட்டனர்…
மலரோ இருவரையும் புரியாது பார்க்க…
காயுவோ, “நீ போன வேல சிறப்பா முடிஞ்சது போல” என்று கிண்டல் குரலில் சொல்ல…
ஜானுவும், மலர்விழியிடம் ஒரு டிஸ்யூவை நீட்டியவள், “லிப்ஸ்டிக் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு கொஞ்சம் தொடச்சுக்கடி” என்று கூறி கிளுக்கிச் சிரித்தாள்.
நாத்தியின் கூற்றில் கண்ணாடியில் தன் முகம் பார்த்த மலரோ… மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவள்….
“இந்த மாமாவால என் மானமே போச்சு” என்று காயுவையும் ஜானுவையும் பார்த்து அசடு வழிந்தவாறே தன் இதழ்களையும் துடைத்துக்கொள்ள….
அந்த அறைக்கதவோ மெல்ல தட்டப்பட்டது.
“காயூமா மலருமா… இன்னுமா ஜானு ரெடியாகல.?” என்று கதவைத் தட்டிய மீனாட்சிக்கு…
“எல்லாம் முடிஞ்சத்த” என்று குரல் கொடுத்தவாறே கதவை திறந்தவர்கள் ஜானுவையும் அழைத்துக் கொண்டு வெளியே வர, அங்கு யுவா தனாவோடு கதிரவனும் ஆயத்தமாகிக் காத்திருந்தான்.
மரூன் நிற லெகங்கா சோளியில், அதற்கேற்ற அணிகலன்களும் அணிந்து அளவான ஒப்பனையில் தேவதை போல் ஜொலித்த ஜானுவைப் பார்த்த கதிரவன் வாய் பிளந்து நின்றான் என்றால், அவள் உடைக்குப் பொருத்தமான அதே நிற செர்வாணி அணிந்து பேரழகனாய் நின்ற தன் கதிரவனைப் பெண்ணவளும் வெட்கம் மறந்து இமைக்காமல் பார்த்திருக்க…
அவர்களைச் சூழ்ந்திருந்த இளசுகளோ
“ம்ம்ம்… ம்ம்ம்… இன்னும் அரை நாள்தான்” என்று தொண்டையைச் செருமிய வண்ணம் அவர்களை அழைத்து வந்து மணமேடையில் நிறுத்த, வரவேற்பு வைபவமும் இனிமையாக நடந்தேறத் தொடங்கியது.
கதிரவனையும் ஜானுவையும் வரவேற்பில் நிறுத்தி விட்டு இறங்கிய யுவா மணப்பெண்ணிற்கு ஈடான ஒப்பனையில் தன்னருகில் நின்ற மனைவியை பார்வையாலே கபளீகரம் செய்து கொண்டிருந்த வேளை அவனை நெருங்கிய நாச்சியோ….
“எய்யா ராசா… அஸ்வின் கண்ணும் புள்ளகளும் இன்னும் வந்து சேரல அவுகளுக்கு போன் போட்டியாப்பு.?” என்று கேட்க…
யுவாவோ, “போட்டீன் அப்பத்தா, இப்ப வந்துருவாக” என்று சொல்லியவன் நுழைவாயிலில் கிரீச்சிட்டு நின்ற மகிழுந்தின் சத்தம் கேட்டு வெளியே விரைய அதற்குள் மகிழுந்தில் இருந்து தனக்கே உரிய வேகத்தோடு இறங்கிய அஸ்வினும் அவன் குடும்பமும் மண்டபத்தின் உள்ளே நுழைந்திருந்தார்கள்.
ஒன்பது மற்றும் ஆறு வயதில் இரு ஆண் குழந்தைகளுக்குப் பெற்றோர் என்று கூற முடியாதளவு அத்துணை வசீகரத்துடனும் கவர்ச்சியுடனும் மண்டபத்தினுள் நுழைந்த அஸ்வினையும் மதியையும் அவர்களோடு இணைந்து நுழைந்த…
ஒன்பது வயதிலேயே தந்தையின் உயரத்தில் முக்கால்வாசியை அடைந்து அவனின் ஒட்டு மொத்த கம்பீரத்தையும் தனதாக்கியிருந்த ஆதித்யவர்மாவையும் அவன் கை பிடித்துக் கொண்டே வந்த அவனின் தம்பி மதியின் மென்மையை கொண்டு பிறந்திருந்த ஆத்விக்வர்மாவையும் ஒரு நிமிடம் மலைத்துப் பார்த்த யுவாவின் குடும்பத்தினர் அடுத்த கணம் அவர்களைச் சூழ்ந்து கொண்டு…
“வாங்க வாங்க அஸ்வின் மாப்ள… வாயா அஸ்வின் கண்ணா… வாமா மதிமா… என் பேராண்டிகளா வாங்க வாங்க…” என்று அவர்கள் நால்வரையும் வரவேற்றனர்.
அவர்களும் “வணக்கம் மாமா அத்தை… தாத்தா பாட்டி எப்படியிருக்கீங்க.?, ரிசப்ஷன் தொடங்கி ரொம்ப நேரமாச்சா யுவா.?” என்று அவர்களோடு இணைந்து கொள்ள, ரிசப்ஷன் நிகழ்ச்சியும் வெகு இனிமையாக களைகட்டத் தொடங்கியது.
மதியோ மலர்விழியின் அருகில் நின்றிருந்த யுவாவின் இரட்டைப் புதல்விகளிடம் தன் மகன்களை அறிமுகப்படுத்தி வைக்க அவர்களோ அஸ்வினின் நகலாக வாட்டசாட்டமாக நின்ற ஆதித்யாவை ஒரு வித மிரட்சியோடும் அவன் கையைப் பற்றியிருந்த ஆத்விக்கை ஆர்வத்தோடும் பார்த்திருக்க… ஆத்விக்கும் அவர்களைப் பார்த்து அழகாகப் புன்னகைக்க, ஆனால் பெற்றோருக்காக மட்டுமே இங்கு வந்திருந்த ஆதித்யாவோ “திஸ் வில்லேஜ் இஸ் சோ ஹாட்” என்று சொல்லிக் கொண்டவன்… அங்கிருந்த அனைவரிடமும் ஒரு ஹாய் மட்டும் கூறியவனோ குட்டி தேவதைகள் போல் இருந்த யுவாவின் இரட்டைகளையும் கல்லையும் மண்ணையும் பார்ப்பது போலத்தான் பார்த்து வைத்தான் நம் குட்டி வேங்கை.
மகப்பேரு மருத்துவராகி, தன் கிராமப் பெண்களுக்கு இலவச மருத்துவம் பார்க்க வேண்டும் என்ற தன்னவளின் உன்னத லட்சியத்திற்காக கடந்த ஐந்து வருடங்கள் திருமணத்தை தள்ளிப் போட்டு காத்திருந்த கதிரவனுக்கு ஐந்து வருடத்திற்கு முன் அவன் விஷம் குடித்த அன்று யுவா குடுத்த சாபம் கதிரின் வாழ்க்கையில் நன்கு விளையாடியது போலும்…
அவனோ தான் காதலித்த பெண்ணை கரம் பிடிப்பதற்கே ஐந்து வருடங்கள் மனம் விரும்பியே காத்துக் கிடந்தவனின்
மதிப்புமிக்க காத்திருப்பிற்கு இன்று பலன் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் கதிரவனோ சூழ இருந்த சுற்றத்தாரைக் கூட மறந்து வரவேற்பு மேடையில் தன்னருகில் நின்றிருந்த ஜானுவின் கரத்தை ஆவலோடு பற்றித் தன்னருகில் இழுத்துக் கொள்ள….
அவனவளும் தன்னுடைய ஆசைக்காக, தன் பெற்றோரிடம் பேசி திருமணத்தை தள்ளிப் போட்டு தன் லட்சியப் படிப்பை படித்து முடிக்க உந்துதலாக இருந்ததோடு மட்டுமல்லாமல், தன் அண்ணனோடு இணைந்து தனக்கென்று பிரத்தியேக மருத்துவமனையும் கிராமத்திலேயே கட்டிக் கொடுத்திருக்கும் தன்னவனின் அன்பில், அக்கறையில் நெகிழ்ந்திருந்த பெண்ணவளும் ஆணவனின் மகிழ்ச்சிக்கும் பரவசத்திற்கும் சிறிதும் குறைவில்லாது அவனுடைய கைவளைவில் மிக பாந்தமாகப் பொருந்திக் கொள்ள…
அவர்களின் ஜோடிப் பொருத்தம் கண்டு அவர்கள் குடும்பத்தினர் மட்டுமல்லாது அந்த வரவேற்பில் குழுமியிருந்த உறவினர்களும், ஊர்காரர்களும் கூட அந்த ஜோடிப் புறாக்களை மனமார வாழ்த்தினர்.
மாமன் குடும்பத்தினரோடு உள்ளே நுழைந்த அஸ்வினும் சிறிது நேரம் அனைவருடனும் அளவளாவிக்கொண்டிந்தவனை நோக்கிய மதியோ, “அஸ்வி கபில்ஸ விஷ் பண்ணிட்டு வந்துரலாமா.?” என்று வினவ….
அவனும் “ஓகே பேபி” என்று மனைவியோடு இணைந்து மேடையேறியவன், தேவ ஜோடியாக நின்ற கதிர் ஜானுவிடம் தாங்கள் வாங்கி வந்திருந்த பரிசைக் கொடுத்து,
“பெஸ்ட் விசஸ்… பார் பியூட்டிபுல் அண்ட் ரொமான்டிக் மார்றிட் லைப்” என்று வாழ்த்த…
அவர்களும், “தேங்க்ஸ் அண்ணா, தேங்க்ஸ் அண்ணி” என்று சொல்லிக் கொள்ள… அந்த வரவேற்பு நிகழ்வும் மிகச் சிறப்பாக முடிந்து மறுநாள் காலை திருமணவைபவமும் கோலாகலமாகத் துவங்கியது.
விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் ஜனக்கூட்டத்தின் சலசலப்போடு மேளதாள இசைகளும் விடாமல் ஒலித்திருந்த திருமண மண்டபத்தில் பூஞ்சோலை கிராமத்தின் ஒட்டுமொத்த மக்களும் குழுமியிருக்க… அவர்களோடு, யுவாவை எதிரியாகவே எண்ணிய மாயனும் கூட அவன் மனைவி மக்களோடு வந்து கலந்திருந்தான்.
ஆம் கடந்த ஐந்து வருடங்களில் பெண்ணவளின் இணைவும் மலரவளின் அருகாமையும் ஆணவனின் பிடிவாத குணத்தை பெரிதும் மாற்றியிருக்க… யுவாவோ தனக்கு தீங்கிழைத்த மாயனைக் கூட மன்னித்து பெற்றோர் இல்லாத அவனுக்கு தன் பெற்றோர் மூலம் இல்வாழ்க்கையும் ஏற்படுத்திக் கொடுக்க மாயனும் அந்த வாய்ப்பின் மூலம் தன் செயல்களை திருத்திக் கொண்டவன், யுவாவின் குடும்பத்தினரோடு ஒன்றுக்குள் ஒன்றாகத்தான் இணைந்திருந்தான்.
மேளதாளம் ஒலிக்க திரண்டிருந்த ஜனக்கூட்டத்தின் முன் பட்டு வேஷ்டி சட்டையில், மணமேடையில் அமர்ந்திருந்த கதிரோ….
“கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்ற ஐயரின் கூற்றில் மணமகள் அலங்காரத்தில் தேவதையாய் ஒளிர்ந்த ஜானுவின் கழுத்தில் மங்கள நாணைப் பூட்டி அவளைத் தன் சரிபாதியாக ஏற்றுக் கொண்ட சமயம்… அதைப் பார்த்த மற்ற இளைய ஜோடிகளும் தத்தம் இணைகளோடு கரம் கோர்த்துக் கொண்டவர்களும் அவர்களுக்கு அட்சதை தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.