அத்தை என்ற முறையில் குழந்தையில் கூட இவளை தூக்கி சீராட்டியதில்லையே, பெரியவளான பின்னேயும் விஷேச நாட்களில் இங்கு வரும்போதும் கூட இயல்பாய் பேசியது கிடையாது. தன் மீது எப்படி இவ்வளவு பாசம் வந்தது? என பார்த்திருந்தார் தனலஷ்மி.
எதாவது கோபமாக வாதாடினால் திட்டலாம். குடும்ப முன்னோர்களின் அனைத்து தவறையும் ஒப்புகொண்டு நியாயமாய் பேசுபவளிடம் என்னவென்று வாதாடுவது? இந்த குடும்பத்தில் தனது மனைவி குணத்தை போல இன்னொருவள் என சிவப்ரியாவை வாஞ்சையாய் பார்த்திருந்தார் சங்கர்.
தான் வருகிறோம் என அரைமணி நேரம் முன்பாகவே சொல்லியாகிற்று. இவளின் தந்தை கண்டிப்பாக இவளிடம் சொல்லியிருப்பார். ஆனாலும் தலையை கூட பின்னாமல் கலைந்த பின்னலோடு சிறு ஒப்பனையுமில்லாமல் இருந்தவளைப் பார்த்தவனிற்கு, தன்னை திருமணம் செய்துகொள்ளும் ஆசையெல்லாம் இவளிடம் இல்லை. உண்மையில் தன் அம்மாவிற்கு நியாயம் செய்ய நினைத்துதான் அப்படி பேசியிருக்கிறாள் எனப்புரிந்த அருட்செல்வனும் சிவப்ரியாவையே பார்த்திருந்தான்.
இத்தனை பேசியும் சொத்து வாங்கிக்கிறேனு சொல்லலையே என அவ்விடம் நிற்க பிடிக்காமல் உள்ளே செல்ல எத்தனிக்க, சங்கர், “சொத்தை எதிர்பார்த்து நான் தனத்தை கட்டிக்கலம்மா, எனக்கு பிடிச்சிருந்ததாலதான் கட்டிக்கிட்டேன். அதனால தேவையில்லாம மனசைபோட்டு உழட்டிக்காத.” என்றார் கனிவாக.
“பிடிச்சு கட்டிக்கலனா சரோஜா ஆயாவும், அவங்க தம்பி கோவிந்தனும் செய்த பிரச்சனைக்கெல்லாம் என் அத்தையை இங்கையே விட்டுட்டு போயிருப்பிங்க. உங்களுக்கு என் அத்தையை எவ்வளோ பிடிக்கும்னு என்னால புரிஞ்சுக்கு முடியுது மாமா. நீங்க ஜென்ட்டில்மேன்.” என்றாள் பெருமையாக.
தந்தையின் கனிவான பேச்சும், அதற்கு அவளின் பாராட்டான பதிலையும், அதில் கரைந்த தந்தையின் பாசப்பார்வையையும் பார்த்திருந்தவன், அப்பாவை கவுத்துட்டா. இப்படியே போனா சொத்தை வாங்க வச்சிடுவா போலயே என, “இத்தனை வருசத்துக்கப்புறம், அதுவும் உன் தாத்தா பாட்டி கொடுக்க மறுத்ததை அவங்க போனதுக்கப்புறம் வாங்குறது எங்களுக்கு அசிங்கமில்லையா?” என்றான் அருட்செல்வன்.
“என் தாத்தா சுயமா சம்பாதிச்சது வெறும் அஞ்சு ஏக்கர் மட்டும்தான். மத்ததெல்லாம் என் தாத்தாவோட அப்பா சம்பாதிச்சது. அத்தைக்கான சொத்தை மறுக்க என் தாத்தா பாட்டிக்கே உரிமையில்லைனு உங்களுக்கும் தெரியும், நானும் அப்போவே சொல்லிட்டேன். உரிமையானதை வாங்கிக்க எதுக்கு அசிங்கப்படனும்?”
கோபம் வந்தாலும் விசயத்தை வளர விடவேண்டாமென, “நாங்க யாரையும் குறை சொல்லல, எங்களுக்கு சொத்து வாங்கிக்க பிடிக்கல, அதனால வேணாம். இதை வச்சு எங்களை கார்னர் பண்றதை நிறுத்திடு.” என்றான் அருட்செல்வன்.
“நீங்க எங்களை குறை சொல்றிங்க, உங்களுக்கு சொத்து வாங்க பிடிச்சிருக்குனெல்லாம் நான் சொல்லவேயில்லை. நீங்கபாட்டுக்கு உங்க வேலையுண்டுதான் இருக்கிங்க. அதுக்காக உங்களுக்கு சொத்து வாங்கிக்க பிடிக்கலன்றதையெல்லாம் என்னால ஏத்துக்க முடியாது.
“எங்க வீட்டு பொண்ணு மட்டும் உங்களுக்கு அம்மாவா, மாமாக்கு பொண்டாட்டியா, உங்க பாட்டிக்கு மருமகளா வேணும். அவங்க சொத்து மட்டும் வேணாமா? எங்க அத்தைக்கான சொத்தை வேணாம்னு சொல்ல நீங்க யாரு?” என்றாள்.
“சிவா.” என கல்யாணி அதட்ட, “ம்மா நான் என்ன தவறா சொல்லிட்டேன்? அத்தைக்கும் நமக்கும் எதுவுமேயில்லன்ற மாதிரி பேசுறாங்க. அத்தை இந்த வீட்டு பிள்ளையில்லைனா இவங்க எதுக்கு இங்க வந்து சண்டை போடனும்? எந்த உரிமையில ஷிவாங்கிக்கு முன்ன என்னை கல்யாணம் செய்துக்க சொல்றாங்க? உறவில்லாதவங்க சொல்றதை கேட்டு நான் ஏன் கல்யாணம் செய்துக்கனும்?” என அன்னைக்கும் பதில் கொடுத்து,
“நீங்க என்ன கத்தினாலும் சொத்து விசயத்துல என் முடிவை நான் மாத்திக்கப்போறதில்ல. இவ்வளோ நாளா என் அத்தையை தப்பா நினைச்சிட்டிருந்தேன். இப்போதான் அவங்க பக்கம் இருக்க நியாயம் தெரிய வந்தது. இதுக்கு மேல அவங்க சொத்தை என்னால அனுபவிக்க முடியாது.
இங்க சொத்து வாங்கி உங்களுக்கு கொடுப்பாங்கனு வேணாம்ன்றிங்களே? அப்போ என் அத்தைக்கான சொத்தை எப்படி நான் அனுபவிக்க முடியும்? உங்களுக்கான சொத்தை என் வாரிசுகளுக்கு எப்படி கொடுக்க முடியும்? முப்பது வருசமா எங்கப்பாம்மா குற்றவுணர்வுல வெந்துட்டு இருக்க மாதிரி என்னால இருக்க முடியாது.
நீங்க சொத்து வாங்கிக்காததுனாலதான் கல்யாணம் செய்துக்க வேணாம்னு நினைச்சேனே தவிர, உங்களை கார்னர் பண்ணவும் இல்ல, கல்யாணம் செய்துக்க நினைச்சும் இல்ல. இதுக்கு மேலயும் சொத்து வேணாம்னா விடுங்க. உங்க வேலையை நீங்க பாருங்க. என் வேலையை நான் பார்க்குறேன். என் விசயத்துல நீங்க தலையிடக்கூடாது.” என்றாள் தெளிவாக.
சிவப்ரியாவின் விட்டுக்கொடுக்காத பேச்சிலும், அருட்செல்வனின் கோபப்பார்வையிலும் பயந்த தனலஷ்மி, இவளிடம் தனியே இன்னொருநாள் பேசலாம், இப்போதைக்கு விபரீதம் நடக்கும் முன் மகனை அழைத்துக்கொண்டு கிளம்பிடலாம் என, கணவனிடம், “ஏங்க வாங்க போலாம்.” என எழுந்தார்.
அண்ணாமலையையும் அருணாச்சலத்தையும் பார்த்தவாறு, “முப்பத்தஞ்சு வருசத்துக்கு முன்ன எப்படி கல்லாட்டம் நின்னு என் அம்மாவை தனியாளாக்குனாங்களோ? அதேபோலத்தான் இப்போவும் நின்னுட்டிருக்காங்க.
மகளுக்கு இத்தனை சொல்லிக்கொடுத்தவங்க, என் அம்மா வயித்துல நான் இருந்தப்போ என்ன நடந்ததுனும் சொல்லியிருக்கலாமில்ல?” என ஆத்திரத்தோடு கத்தி, சிவப்ரியாவிற்கு எதிரே வந்து நின்றான்.
இவனின் வேகத்தில் பயந்த சிவப்ரியா ஐந்தடி பின்னே செல்ல, பார்த்திபன் சிவப்ரியா அருகே வந்து அவளின் கைப்பிடிக்க, பார்த்திபனையும் முறைத்து, “ஒரு பொண்ணுக்கு என்னலாம் செய்யக்கூடாதோ அத்தனையும் என் அம்மாக்கு செய்திருக்கு உன் பாட்டி. தப்பு செய்தவங்க செத்துட்டாலும், அவங்க உண்டாக்கின வடு மாறாது.
எங்களால சொத்தை வாங்கிக்க முடியாது. ஒழுங்கா கல்யாணம் செய்துக்கிற வழியைப் பாரு. உன்னால என் அம்மா நிம்மதி போச்சு… நான் கொலைகாரனாகிடுவேன்.” என நேர்கொண்ட பார்வையோடு சிவப்ரியாவை எச்சரித்து வெளியேறினான் அருட்செல்வன்.
தனலஷ்மியும் சங்கரும் வெளியே வர, அவர்களின் பின்னோடு வேகமாய் வந்து நின்றாள் சிவப்ரியா.
காரில் அமர்ந்தவன், கண்ணாடி வழியாக சிவப்ரியாவின் கலங்கிய முகத்தை பார்த்திருந்தான். காருக்கருகே வந்த சங்கர் மீண்டும் சிவப்ரியா அருகே சென்று, “நீ கல்யாணம் செய்துக்காம என் மகன் செய்துக்கமாட்டான்ம்மா, உன் முடிவை மாத்திக்கப்பாரு. இல்ல உன் அத்தையும் நானும் நிம்மதியை இழந்திடுவோம்.” என்க, சிவப்ரியா கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க, அதைப் பார்த்த அருட்செல்வனிற்கு மேலும் கோபம் வர, ஹாரனை ஒலிக்கவிட்டான் இடைவெளியின்றி.
“அருணா, என் மகனுக்கு பொண்ணு கொடுக்க ரெடியா இருக்காங்க, அவனுக்கும் பொண்ணை பிடிச்சிருக்கு. ஜாதகம் பொருந்தி வந்தா கல்யாணத்தை வச்சிடலாம்னு சந்தோசத்துல இருந்தேன். இந்த நேரம் பார்த்து உன் மக இப்படி பண்ணிட்டிருக்கா.” என வருந்த, “ம்மா.” என கத்தினான் அருட்செல்வன்.
“இதோ வரேன்டா.” என்று, “எடுத்து சொல்லு அருணா. நல்லது கெட்டதுக்காவது வந்து போயிட்டிருக்கேன், அதுவும் இல்லாம ஆகிடப்போகுது.” என கெஞ்சலாய் சொல்லியவாறு காரருகே சென்றார் தனலஷ்மி.
காரை கிளப்பியவன், “நான் வெளில வந்ததும் வரவேண்டியதுதானே? இருக்கிறது பத்தாம இப்போ பாரு தேவையில்லாத பேச்சு.” என அன்னையிடம் காய்ந்தான்.
“நீ எதுக்கு ஹாரனை அப்படி அடிச்ச? அதனாலதான் பக்கத்துலயிருக்கவங்கள்லாம் வந்துட்டாங்க.” என தனலஷ்மி திட்ட, சிவப்ரியாவின் பாவனையில் திருமணம் செய்துகொள்வாள் என்ற நம்பிக்கை வராமல் போக, வந்த விசயம் தோல்வியில் முடிந்த கோபத்திலிருந்த அருட்செல்வன், “அண்ணன் தம்பிகிட்ட பேசி அவளை கன்வின்ஸ் பண்ண முடியல. என்கிட்ட எகுறுங்க.” என்றான் கோபத்தோடு.
“ப்ச். இரண்டு பேரும் அமைதியா இருங்க.” என்றார் சங்கர்.
கார் மறையும் வரை பார்த்திருந்த சிவப்ரியா உள்ளே வந்ததும், “அவங்க பிறந்தப்போ என்ன நடந்ததுப்பா?” என்றாள் தந்தையிடம்.
“பார்வதி பிறந்ததுக்கப்புறம் தனம் இங்க வரதை நிறைய குறைச்சிடுச்சு. அவங்க கொழுந்தன் கல்யாணத்துக்கு போகும் போதுதான் அருள் வயித்துலயிருந்ததே ஆயாக்கு தெரிய வந்தது. ஒன்பதாவது மாசத்துல எங்கப்பாவும் அம்மாவும் பிரசவத்துக்கு அழைக்க போயிருந்தாங்க.
கோவிந்தன் குடும்பத்தோட ஒட்டு உறவு வச்சிக்கலனா அங்க குழந்தை பெத்துக்க வரேன். இல்லனா இங்கயே இருந்துடறேன்னு சொல்லியிருக்கு தனம்.
இப்போல்லாம் யாரும் வரதில்லம்மா, உன் அம்மாதான் எப்போவாவது அவ அப்பமூட்டுக்கு போய் வருவானு தாத்தா சொல்லியிருக்கார்.
அவங்க உறவை மொத்தமா வெட்டிவிட்டா நான் வரேன், இல்ல இங்கேயே இருந்துடறேனு அத்தை சொல்லியிருக்காங்க. அப்படிலாம் ஒட்டுமொத்தமா என் அப்பமூட்டை தலை முழுக முடியாது, நான் செத்தா கோடி துணி போட அவங்க வேணும்னு எங்கம்மா சொல்லியிருக்கு.
அப்போ அவங்களையே பாருங்க, நான் வரலனு தனம் சொல்லிடுச்சாம். அருள் அவங்க வீட்டுலயேதான் பிறந்தான். இன்னைக்குத்தான் முதல் முறையா நம்ம வீட்டுக்கு வந்தான்.” என்றார் வேதனையோடு.
அன்னையிடம், “நானிருக்கேன்னு அத்தையை போய் அழைச்சிட்டு வந்திருக்கலாமில்லம்மா?” என சிவப்ரியா சோர்வாய் கேட்க,
“கூப்பிட்டாலும் சங்கர் அண்ணா அனுப்பியிருக்கமாட்டார் சிவா, பார்வதி பிறந்தப்ப தனத்தை கோவிந்தன் வந்து பார்த்தது தெரிஞ்ச பின்ன எப்படி அனுப்புவார்? அதோட இங்க அழைச்சிட்டு வந்த பின்ன கோவிந்தன் எதாவது செய்தா அது தனத்துக்கு இன்னும் அசிங்கமாகிடும்னுதான் விட்டுட்டோம்.” என்றார் கல்யாணி.
சிவப்ரியா, “அவர் பிறந்த பின்ன கூட நம்ம வீட்டுல யாரும் போய் பார்க்கலயா?” என்றாள் தந்தையிடம்.
“இல்ல சிவாம்மா, தனத்துக்கு பிடிக்காம நான் கல்யாணம் செய்துகிட்டதால தனத்தை பார்க்குற தைரியம் எனக்கு அப்போ வரல.” என்றார் அருணாச்சலம்.
பாட்டியின் செயல் மிகுந்த வேதனைதான் என்றாலும், எத்தனை காரணமிருப்பினும் உடன் பிறந்தவளின் மகனை பார்க்க போகாதது அப்பா அம்மாவின் பெரும் தவறு. பெரியப்பாவாவது எடுத்துரைத்திருக்கலாமே, எப்படித்தான் இப்படி இருந்தார்கள் என தன் குடும்பத்தை நினைத்து மிகுந்த வேதனையடைந்தாள்.
இதில் பெருமகிழ்ச்சி அடைந்தது மோகனா மட்டுமே. சிவப்ரியா அறைக்கு சென்று, “இப்போ சந்தோசமா? இல்லாத ஊருக்கு வழிதேடாதேனு நான்தான் சொன்னேன்ல? கேட்டியா? அம்மாவும் மகளும் ஆடுனிங்க… இப்போ என்னாச்சு?
அந்த பக்கத்து வீட்டு ராணி, உன் அத்தைக்காரி என்னவோ உன்னை பொண்ணு கேட்க வந்ததா நினைச்சிட்டு போறா. யார் யார்கிட்ட போய் என்னென்ன சொல்லப்போறாளோ?” என புலம்பினார் மோகனா.
“யாரோ என்னவோ சொல்லட்டும். முதல்ல உன் வாயை மூடும்மா.” என அதட்டினான் பார்த்திபன்.
மோகனாவின் புலம்பல்கள் கோபத்தை உண்டாக்கிய போதும், அவருக்கு பதிலளிக்கும் மனநிலையில் இல்லை சிவப்ரியா. மனம் முழுதும் தனலஷ்மியின் நினைவுகள்தான்.
இத்தனை சிரத்தை எடுத்தும் சொத்தை வாங்கிக்கொள்வது சாத்தியமேயில்லை என்ற தோரணையில் அருட்செல்வன் கிளம்பியிருக்க, தனமும் அதுதான் சரி என்பதுபோல் தந்தையிடம் பேசிச் சென்றதால் நினைத்த காரியம் தோல்வியில் முடிந்ததில் மனம் வலித்தது.
என் பாட்டி சரியில்லைன்றதுதான் உங்களோட சேர்த்து ஊருக்கே தெரியுமே அத்தை. திரும்ப திரும்ப அதையே நினைச்சா என்னதான் பண்றது? என அயர்ந்து போனாள் சிவப்ரியா.