காலை ஆறு மணிக்கே அருணாச்சலத்திற்கு அழைப்பு வந்தது. நேற்று நடந்த பிரச்சனைகள் மனதை வலிக்க செய்திருக்க, நித்திஷ் அன்னையின் அழைப்பு உற்சாகத்தை தரவில்லை. அழைப்பை ஏற்று, “என்னம்மா இந்த நேரத்துலயே போன் பண்ணியிருக்கிங்க?” என்றார் சலிப்போடு.
“சின்னவளுக்கு சம்மதம்னுதான் சொன்னுச்சு, ஆனா கல்யாணம் இப்போ வைக்கிற நிலைமைல நாங்க இல்லம்மா” என அருணாச்சலம் தனது பேச்சினை முடிக்கும் முன்னே, “நானும் என் மகனும் மட்டும்தான் வரோம். எதுனாலும் நேர்ல பேசிக்கலாம்.” என இணைப்பை துண்டித்தார் நித்திஷ் அன்னை.
சின்னவள் பிடித்தம் என்பதால் பட்டென வார்த்தையை விட அருணாச்சலத்தால் முடியவில்லை. பெரியவளுக்கு திருணம் ஆகும்வரை காத்திருந்தால் சின்னவளை தருகிறோம், இல்லை வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட நேற்றே முடிவெடுத்திருந்தார்.
தற்போது மனதிலுள்ளதை பேசும் முன்னே நேரில் வருகிறோம் என்றதும், உடனே செய்தாக வேண்டும் என்பார்களா? என தவித்திருந்தார் அருணாச்சலம்.
கணவன் முக வாட்டம் கண்டு, “என்னங்க? யார் போன்ல?” என்றார் கல்யாணி.
விசயத்தை சொல்ல, “நேத்துதான் அவ்வளோ பிரச்சனை நடந்தது. நானே சின்னவளுக்கு இப்போ கல்யாணம் தேவையா? ரொம்ப அவசரப்பட்டுட்டோமானு யோசிச்சிட்டிருக்கேன். இந்த நேரம் பார்த்து இந்தம்மா வேற வருதா?” என்றார் கவலையாக.
“வீட்டுக்கு வரன்றவங்களை வேணாம்னு எப்படி சொல்றது? அதுவும் நம்ம ஷிவாங்கிக்கு பிடிச்சிருக்கும்போது.”
“கல்யாணத்தையேது சீக்கிரம் வைக்க சொல்லிடப்போறாங்கங்க.” என தவித்தார் கல்யாணி.
“வரட்டும் பேசிக்கலாம். நீ போய் ஷிவாங்கியை எழுப்பி குளிக்க சொல்லு. நான் போய் அண்ணனை கூட்டிட்டு வரேன்.” என அண்ணாமலை வீட்டிற்கு சென்றார்.
இருவர் வீடும் அருகருகேதான் உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் காட்டிற்கு சென்றிடுவார் என்பதாலும், அவர்கள் முன் மோகனா ஏதேனும் அதிகப்படியாய் பேசிவிடாமல் இருக்க அறிவுருத்தவும் சென்றார்.
ஏழு மணிக்கெல்லாம் நித்திஷும் அவனின் அன்னையும் வந்திருந்தனர்.
“வாங்கம்மா.” என வரவேற்க, “கல்யாணம் இப்போதைக்கு இல்லன்னவும் எனக்கு பதட்டமாகிடுச்சுங்க. அதான் நேர்லயே வந்துடலாம்னு வந்தேன்.” என்றார் நித்திஷ் அன்னை.
உண்மையை விளக்கி, “இதுவரை தனத்துக்கு நாங்க எந்த நல்லதும் செய்ததில்ல, தங்கை மகன் கல்யாணம் எங்களால நிக்க வேணாம்னு நினைக்கிறோம்.” என்றார் அண்ணாமலை.
நித்திஷ் அன்னை, “இவ்வளோதானா? நான் பயந்தே போயிட்டேன்.” என ஆசுவாசமடைந்து, “அக்காவை பார்க்க வந்தவனை தங்கைக்கு எப்படி பிடிச்சது? வீட்டுல கம்ப்பல் செய்தாங்களா? இல்ல உண்மையாவே பிடிச்சிருக்கானு என் மகனுக்கு தெரியனுமாம். மதியம் பெங்களூர் கிளம்பிடுவான். அதான் இந்த நேரத்துக்கே வந்தோம்.” என்றார்.
“உடனே கல்யாணம் வைக்க முடியாதது எனக்கு வருத்தம்தானுங்க. ஆனா உங்களுக்கு சம்மந்தி ஆகறதுக்காக வெய்ட் பண்றோம். அதோட என் மகனுக்கும் கல்யாணம் தள்ளி வைக்கிறதுல சம்மதம். ஏன்னா இன்னும் மூனு மாசம் கழிச்சு அமெரிக்கா போறான். கம்பெனியில ஆஃபர் பண்ணியிருக்காங்க.
அமெரிக்காவுக்கானு யோசிச்சேன். இரண்டு வருசம்தான்ம்மா. அதுக்கப்புறம் இந்தியா வந்துடுவேன். இது பெரிய வாய்ப்புனு ரொம்ப கேட்டுக்கிட்டான். சரி ஒரேடியா கல்யாணத்தை முடிச்சு அனுப்பி வைச்சிடலாம், அவங்களும் அமெரிக்காக்கு ஹனிமூன் போன மாதிரியும் இருக்கும். எனக்கும் மகனை பார்த்துக்க மருமகள் இருக்கான்ற தெம்பிருக்கும்னு நினைச்சேன். ஆனா முடியல, பரவால்ல இருக்கட்டும். இதுயிது இப்படித்தான் நடக்கனும்னு இருக்கும்ல? கல்யாணம் இவன் அமெரிக்கா போய்ட்டு வந்த பின்ன வச்சிக்கலாம். இப்போதைக்கு சொந்தபந்தம் முன்ன நிச்சயம் பண்ணிடலாம்.” என்க,
பின்னே ஷிவாங்கியை அழைத்து கேட்க, “அக்கா கல்யாணத்துக்கு முன்ன நாம பண்ணிக்கனுமான்ற கவலை இருந்தது. இரண்டு வருசம் கழிச்சு கல்யாணம் செய்துக்கிறது எனக்கு டபுள் சந்தோசம்.” என்று இன்முகத்தோடு சம்மதம் தெரிவித்தாள் ஷிவாங்கி.
“எங்க உன் அக்காவை காணோம்?” என நித்திஷ் அன்னை கேட்க, “நைட்டெல்லாம் அம்மாப்பா ஒரே அட்வைஸ். இரண்டு மணிக்கு மேலதான் தூங்கினா. எழுந்துக்க லேட் ஆகும்.” என்றாள் இயல்பாக.
ஷிவாங்கியின் தந்தையும், வீட்டு விசயங்கள் எதையும் மறைக்காமல் சொன்னதும், பெற்றோர்களைப் போலவே ஷிவாங்கியும் தனது அக்காள் பற்றி உண்மையை சொன்னதும் மிகவும் பிடித்திட, நித்திஷ் மனம் நிம்மதிகொண்டது.
அன்னை ஏன் இக்குடும்பத்தில் பெண்ணெடுத்தாக வேண்டும் என்று பிடிவாதம் செய்தார் எனப்புரிந்த நித்திஷ் ஷிவாங்கியை பார்க்க, நித்திஷையே பார்த்திருந்த ஷிவாங்கி நாணி தலைகுனிந்தாள் சிவந்த முகத்தோடு.
“ம்மா இரண்டு வாரம் கழிச்சு இரண்டு நாள் லீவ்ல வரேன். அப்போ நிச்சயம் வச்சிக்கலாமா?” என அன்னையிடம் கிசுகிசுத்தான் நித்திஷ்.
மகிழ்ந்த நித்திஷ் அன்னை மகன் சொன்னதை அருணாச்சலத்திடம் சொல்ல, அண்ணன் தம்பி இருவரும் சந்தோசமாய் ஒப்புகொண்டனர்.
டீ அருந்திய பின்னே, “சரிங்க நாங்க கிளம்பறோம்.” என இருவரும் விடைபெற, “ஒரு எட்டு மணிபோல தனத்துக்கு போன் பண்ணி சொல்லிடு அருணா. நான் காட்டுக்கு கிளம்பறேன்.” என கிளம்பியிருந்தார் அண்ணாமலை.
“நேத்து நைட் ஒரு மணி வரைக்கும் எடுத்து சொன்னோம் தனம். என்னால யார் கல்யாணமும் நிக்க வேணாம். அத்தை மகனை கல்யாணம் செய்துக்க சொல்லுங்க. பி.ஜி முடிச்ச பின்ன சொத்து எதிர்பார்க்காம மனசுக்கு பிடிச்சவன் வரும்போது கல்யாணம் செய்துப்பேன்னு சொன்னுச்சு தனம்.” என்றார் அருணாச்சலம்.
“சொத்து எதிர்பார்க்காதன்னா?” என தனம் யோசனையாய் கேட்க, “பரம்பரை சொத்தை வாங்கிக்காதாம். பொண்ணு கேட்டு வரவங்ககிட்ட முன்னாடியே சொல்லிடனும்னு கண்டிஷன் போட்டுருக்கு.
சிவாப்பொண்ணு கல்யாணத்துக்கு சம்மதிச்சதே பெரிய சந்தோசம். அதனால சொத்து பத்தி அப்புறம் பேசிக்கலாம்னு நாங்களும் சம்மதம் சொல்லியிருக்கோம்.”
இதுக்கு மேல வற்புறுத்தினா வேற எதாவது முடிவெடுத்திடுமோனு பயமாயிருக்கு. அதனாலதான் படிப்பை முடிச்சதுக்கப்புறம் பண்ணிக்கிறேனு சொன்னதுக்கு சம்மதிச்சோம்.” என்றார்.
“ம்.” என தனலஷ்மி உற்சாகமின்றி சொல்ல, “வர வெள்ளி இல்லாத அடுத்த வெள்ளிக்கிழமை ஷிவாங்கிக்கு நிச்சயம் வச்சிருக்கோம் தனம். மாமாவை கூட்டிக்கிட்டு கண்டிப்பா வந்திடு.
தனலஷ்மி, “இரண்டு வருசம் கழிச்சு நடக்குற கல்யாணத்துக்கு இப்போவே நிச்சயம் செய்யனுமா? பெரியவ இருக்க சின்னவளுக்கு என்ன அவசரம்னு சொந்தபந்தம் கேட்டா என்ன சொல்வ?” என்றார் சிவாவை மனதில் கொண்டு.
“அவங்க விடமாட்டுக்கிறாங்க தனம். மூனு மாசம் கழிச்சி பையன் அமெரிக்கா போய்டுவானாம். வர இரண்டு வருசம் ஆகுமாம். அதுக்குள்ள வேற இடம் பார்த்துட்டோம்னா என்ன பண்றதுனு யோசிக்கிறாங்க. முக்கியமா ஷிவாங்கிக்கு நித்திஷை ரொம்ப பிடிச்சிருக்கு. அதனாலதான் நிச்சயத்துக்கு சம்மதிக்க வேண்டியதாகிடுச்சு.
சிவாக்கு முடிக்காம ஷிவாங்கிக்கு என்ன அவசரம்னு இப்போவே இரண்டொருத்தர் கேட்டாங்க. பெரியவ ஜாதகம் ஒத்து வரல, சின்னவளுக்குத்தான் பொருந்தி வந்தது. நல்ல இடம்ன்றதால பொண்ணு கொடுக்க சம்மதிச்சிருக்கோம். கல்யாணம் இரண்டு வருசம் கழிச்சுதானு சொல்லியிருக்கோம்.”
தனலஷ்மி, “நான் வரேன்.” என்க, மரியாதை நிமித்தமாக கல்யாணியும் அழைப்பு விடுத்து, சங்கரிடமும் சொல்லி, “போன்ல சொல்றோம்னு தப்பா நினைக்காதிங்க. அருள் எங்கமேல கோபமா இருக்கான். அதனாலதான் நேர்ல வந்து சொல்லல. நிச்சயத்துக்கு வந்துடுங்க.” என்று இணைப்பை துண்டித்தார்.
தனலஷ்மியை பார்த்தவாறு அருட்செல்வன் நின்றிருக்க, போனில் பேசியதை கேட்டிருப்பான். அதோடு இது மறைக்கும் விசயமும் இல்லை என்பதால், சிவப்ரியாவின் மனமாறுதலை சொல்லி ஷிவாங்கியின் நிச்சயத்தைப் பற்றியும் சொன்னார் மகனிடம்.
“ம்.” என்று தனதறைக்கு சென்றவன், பி.ஜி முடிச்சிட்டு கல்யாணம் பண்ணிக்கிறாளாமா? அன்னைக்கு பேசினதை நினைச்சா அவங்கப்பா சொல்றதை நம்ப முடியலையே என யோசித்திருந்தான் அருட்செல்வன்.
“அருள்.” என்றபடி சங்கர் உள்ளே வர, “என்னப்பா?” என்றான்.
“இன்னைக்கு போய் ஜாதகம் பார்த்துட்டு வரோம். தரகர்வேற ஜாதகம் பார்த்துட்டிங்களானு கேட்டுட்டே இருக்கார்.” என்றார்.
“இந்த இடம் வேணாம்ப்பா. கொஞ்ச நாள் ஆகட்டும், அப்புறம் பார்த்துக்கலாம்.”
“இப்போவே இருபத்தொன்பது. இன்னும் எட்டுமாசம் போய்டுச்சினா முப்பது தொடங்கிடும். இன்னும் எப்போ தோணும்?” என்றார் சங்கர்.
“ப்ச்.. இப்போ வேணாம்ப்பா.” என்றான் காரணம் சொல்லாமல்.
சாப்பிட அழைக்க உள்ளே வந்த தனலஷ்மி, “சிவா பேசினதை நினைச்சு குழப்பிக்கிறியா அருளு.” என்றார்.
“குழப்பிக்கிறதுக்கு நானென்ன சின்ன பையனா?” என முறைத்து, “குழப்பம்லாம் இல்ல. நேத்து அவ பேசின பேச்சுக்கு ஒரே நைட்ல இத்தனை மாற்றம்னு என்னால நம்ப முடியல. அத்தனை பேர் முன்ன அப்படி சொல்லியிருக்கா. அவ வீட்டுகிட்ட ஒரு அம்மா நல்ல விசயமா வந்திங்களானு வேற நேத்து கேட்டுட்டாங்க. முதல்ல அவ கல்யாணம் முடியட்டும். நான் அப்புறம் பண்ணிக்கிறேன்.” என்றான்.
“அவ கல்யாணம் பண்ணிக்க இரண்டு வருசம் டைம் கேட்டுருக்காடா, அதுவரை நீ எப்படி பண்ணாம இருக்க முடியும்?” என்றார் தனலஷ்மி.
“ஏன் முடியாது?” என முறைக்க, “அவளுக்கு இப்போதான் இருபத்தியொன்னு. அதனால இரண்டு வருசம் டைம் கேட்டது ஒகே. உனக்கு இப்போவே இருபத்தியொன்பது. இன்னும் இரண்டு வருசம் போனா முப்பத்தியொன்னு ஆகிடாதா? இப்போவே உன் மகனுக்கு ஏன் இன்னும் கல்யாணம் செய்யலனு கேட்டுட்டு இருக்காங்க.” என கவலை தெரிவித்தார் தனம்.
“இந்த மாசமே நான் கல்யாணம் செய்துகிட்டா நீ சந்தோசப்படுவியா?”
“ஏன் படமாட்டேன். எனக்கு சந்தோசம்தான்.” என்றார் உறுதியாக.
அதிர்ந்த தனலஷ்மி, “இல்ல அப்படி நடக்காது. அவ பண்ணிப்பா.” என்றார்.
“ப்ச்… பண்ணிக்கலனா என்ன பண்ணுவ?”
தனலஷ்மி பதிலின்றி தவிக்க, சங்கருக்கும் மகன் பேச்சு யோசிக்க வைக்க, “பேசாம உன் அப்பா கொடுக்க நினைச்ச அஞ்சு ஏக்கரை வாங்கிக்கலாமா தனம்?” என்றார்.
தனம் பதில் சொல்லும் முன்னே, “அதெல்லாம் வேணாம்ப்பா.” என மறுத்தவன், “அவ தங்கை நிச்சயத்துக்கு போகும்போது, ஊரார் முன்ன இப்படி பேசிட்டு கல்யாணத்துக்கு இரண்டு வருசம் டைம் கேக்குறது தப்புனு அவளுக்கு புரிய வைங்க. உங்க தம்பிகிட்ட பேசி அவளுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ண சொல்லுங்க.” என்றான்.
தனம் தவிப்பாய் பார்க்க, “நீங்க பேசலனா அவ அப்பாகிட்ட நான் பேசுவேன்.” என்று வெளியே கிளம்பினான்.
“சாப்பிட்டு போடா.” என தனம் குரல் உயர்த்த, “மதியம் வந்து சாப்பிட்டுக்கிறேன்.” என்று கிளம்பியிருந்தான் அருட்செல்வன்.