“என்ன ராகவா சொல்ற?” என அருட்செல்வன் முறைக்க, “அண்ணா நான் என்ன பண்ணட்டும்? இன்டர்னல் இருக்கு படிக்கனும், என்னால வர முடியாது. எனக்கு பதிலா அப்பாம்மா வருவாங்க. உன்னை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திடுவாங்கதானே? வர சன்டே பார்த்திண்ணாவோட வரேன்னு சொல்லிட்டாங்களாம்.” என்றான் ராகவன்.
“உண்மையா இன்ட்டர்னல் எக்ஸாமா?”
“எக்ஸாம் அடுத்த வாரம்தானாம். படிக்கனும்னு மனசிருந்தா ஒரு நைட்ல படிச்சிடுவாங்களாம். வளைகாப்பிற்கு வரக்கூடாதுனே சாக்குபோக்கு சொல்லியிருக்காங்களாம். ஜீவா சொன்னா.”
அருள் அழைக்க வைத்திருப்பான் என்றெல்லாம் சிவப்ரியா யோசிக்கவில்லை. ஜீவிதாவின் திருமணத்திற்கு வந்தவன் வளைகாப்பிற்கும் வருவானோ என யோசனை வர, வளைகாப்பிற்கு வர மறுத்திருந்தாள்.
முக்கிய திருமணம் என்றால் கலந்துகொள்வான், மற்றபடி பூச்சூட்டுவிழா, வளைகாப்பு போன்ற பெண்களின் விழாவிற்கெல்லாம் இதுவரை கலந்துகொண்டதில்லை அருட்செல்வன். சிவப்ரியாவை காண மட்டுமே வந்தான்.
தற்போது அவள் வராமல் போகவே, தன்னை தவிர்ப்பதாய் தோன்றியது. சிவப்ரியாவின் அப்பா வளைகாப்பிற்கு வருகிறார் என்பதால், “க்ளினிக்லயிருந்து கால் வந்தது ராகவா, அம்மாப்பா, சித்தி சித்தப்பா, பவ்யா எல்லாரும் இங்க இருப்பாங்க.” என்று கிளம்பினான் வீட்டிற்கு.
இரண்டு மாதத்திற்கு முன் சிவப்ரியாவின் பங்காளிக்கு கிட்னி அறுவை சிகிச்சை நல்ல படியில் முடிந்திருக்க, சென்ற மாதம் உடல்நலம் நன்கு தேறி வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார்கள்.
அருட்செல்வனின் நண்பனின் அப்பா அவர்களை கனிவாக பார்த்துக்கொண்டதால் வீட்டிறகு வந்ததும், அருட்செல்வனிற்கு அழைத்து நன்றி தெரிவித்தனர்.
உடல்நிலை தேறிவந்தவனை மரியாதை நிமித்தமாக பார்த்து வரவும், சிவப்ரியாவின் நடப்பை அறிந்து கொள்ளவும் அவளின் ஊருக்கு அன்னையோடு வந்திருந்தான் அருட்செல்வன்.
அந்த நேரம் சிவப்ரியா வீட்டில்தான் இருந்தாள். தனலஷ்மி மட்டும் வந்திருந்தால் சென்று பார்த்திருப்பாள். அருட்செல்வனும் வந்திருக்கிறான் என்பதால், “அப்பா அத்தைகிட்ட எனக்கு உடம்பு சரியில்லனு சொல்லிடுங்க.” என்றிருந்தாள்.
சிவப்ரியா தேவையின்றி யார் வீட்டிற்கும் செல்லமாட்டாள் என்பதோடு, அன்று அனைவர் முன்பும் அப்படி பேசியதால் இன்று அதே வீட்டில் தனத்தை சந்திக்க தயங்குகிறாள் என நினைத்து, மகள் பேசியதை நம்பி தனத்தை காணச்சென்றார் அருணாச்சலம்.
நலம் விசாரிப்பிற்கு பின்னே, “சிவாக்கு எதாவது வரன் வந்தாங்களா அருணா.?” என்றார் தனம்.
“வந்தாங்க தனம், நான்தான் டைம் கேட்டேன்லனு சிவா ரூமை விட்டு வெளிலயே வரல. அதுக்கப்புறம் இரண்டு பேர் கேட்டாங்க, திரும்ப வரசொன்னா வேற எதாவது ஏடாகூடம் செய்திடும்னுட்டு இன்னும் ஒரு வருசம் கழிச்சிதான் கல்யாணம் பண்ணப்போறோம்னு பொண்ணு கேட்டவங்ககிட்ட சொல்லிட்டேன்.”
உடல்நிலை சரியில்லையா என தனத்திற்கு மனம் கேளவில்லை, தனம் மகனைப் பார்க்க, உண்மையில் உடல்நிலை சரியில்லையா? இல்லை தங்களை அவாய்ட் செய்கிறாளா என அருட்செல்வனிற்கும் அறிந்துகொள்ள வேண்டியிருக்க, “போய் பார்த்துட்டு வாம்மா, ஆனா சீக்கிரம் வா. வரும்போது அவ நம்பரை வாங்கிட்டு வா.” என்று அனுப்பிவைத்தான்.
சிவப்ரியா வீட்டிற்கு சென்று வந்த தனம், “காய்ச்சல்லாம் இல்ல அருளு, ஏற்கனவே அவளையும் உன்னையும் இணைச்சி ஒன்னு இரண்டு பேர் பேசுறாங்க, திரும்ப அதுக்கு வாய்ப்பு கொடுக்க வேணாமேனு வரலையாம்.” என சிவப்ரியா சொன்னதையே சொன்னார் தனம்.
அன்று அந்த காரணம் சரியென தோன்றியது, ஆனால் இன்று வேறு மாதிரி தோன்ற, எப்படியாவது அவளை சந்திக்க வேண்டுமென யோசித்தபடி வீட்டிற்கு வந்தான்.
நாமக்கலில் படிக்கிறாள். தற்போது சென்றால் பார்க்க முடியுமா என யோசித்தவன், அங்கு சென்றால் வேறு விதமாகிடுமோ? என்றும் யோசித்தான்.
வீட்டிற்கு வரும்போதெல்லாம் பார்த்திபன்தான் இண்டூரில் வந்து அழைத்துச்செல்வான் ஆதலால், ஒருவேளை இந்தவாரம் வீட்டிற்கு வந்தாளானால், அப்பொழுது பார்த்திபனிடம் சொல்லி இண்டூரிலேயே பேசிடலாம் என முடிவெடுத்த பின்னே சற்று நிம்மதியாகி, பின்னேதான் க்ளிக்கிற்கு கிளம்பினான்.
“ஜீவி, உக்காரு, உக்காரு.” என அருகே சென்ற கல்யாணி, “அப்பாக்கு ஒரு முக்கியமான வேலை, சிவாவோட வீட்டுக்கு வந்து பார்க்குறேன்னார்.” என்க, பார்த்தியும் ஜீவிதாவிடம் சென்று, “நல்லாயிருக்கியாம்மா?” என நலம் விசாரித்து தனியே போய் அமர்ந்துகொண்டான்.
யாரும் போகவில்லையென்றால் ஜீவி கோவிப்பா என கல்யாணி புலம்ப, நேத்து நியாபகப் படுத்தியிருக்கலாமில்ல? என, பார்த்தியை அழைத்துப்போக சொல்லியிருந்தார் அருணாச்சலம்.
கல்யாணி தனியே எங்கும் செல்லமாட்டார் என்பதால், சித்திக்காகவும் ஜீவிதாவும் தங்கை போல என்பதாலும் கல்யாணியை அழைத்து வந்திருந்தான்.
பெண்கள் கூட்டமாக இருக்க சிறு சங்கடத்தோடு தனியே அமர்ந்திருந்தான். “ஏய் பார்த்திபன் சார் டி.” என இரு சிறுமிகள் பார்த்திபனிடம் வந்தனர்.
இவன் பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பிற்கு பாடமெடுப்பவன் ஆதலால் இச்சிறுமிகளை யாரென தெரியவில்லை பார்த்திபனிற்கு.
“சார் ஜீவிதாக்கா உங்க சொந்தமா?” என ஒரு சிறுமி கேட்க, “நீங்க எந்த ஸ்கூல் படிக்கிறிங்க? இன்னைக்கு ஸ்கூல் போகலயா?” என்றான்.
“இன்னைக்கு என்ஜாய் பண்ணுங்க, ஆனா இப்படி அடிக்கடி ஸ்கூலுக்கு லீவ் போடக்கூடாது சரியா?” என்றான்.
தனது பள்ளி ஆசிரியர் நமது வீட்டு விஷேசங்களுக்கு வருவது சிறுமிகளுக்கு பிடித்தம்தானே? “ம்.” என்ற சிறுமிகள், “ஏய் வாடி, நம்ம ஸ்கூல் சார் வந்திருக்காருனு நாம போய் அம்மாகிட்ட சொல்லலாம்.” என பெருமையோடு அவ்விடம் விட்டு நகர, சற்று தள்ளி பவ்யா இருக்கவும், “பவ்யாக்கா, எங்க ஸ்கூல் சார் வந்திருக்கார். வாங்களேன் காட்டறேன்.” என பவ்யாவின் கையை பிடித்து இழுத்து குதூகலித்தனர் சிறுமிகள்.
சிறுமிகளின் சந்தோசக்குரல் பார்த்திபனை மகிழ்விக்க, சிறுமிகளை பார்த்தவன் கண்கள் பவ்யாவில் நிலைத்தது.
“ஓ… உங்க சார் வந்திருக்காரா? வாங்க, வாங்க. உங்க வண்டவாளத்தை கேட்கறேன்.” என சிறுமிகளுகளோடு பார்த்திபனிடம் வந்த பவ்யா வணக்கத்தை தெரிவித்து, “இவங்க நல்லா படிக்கிறாங்களா சார்.” என்றாள்.
“அச்சோ அக்கா, பார்த்திபன் சார் பெரிய அக்காங்களுக்குத்தான் சொல்லிக்கொடுப்பார். எங்க கிளாசுக்கு வரமாட்டார்.” என சிரிக்க, இவனும் சிரித்தவன், “அவங்களுக்குத்தான் நான் சார். உனக்கில்ல” என்றான்.
பவ்யா புரியாமல் பார்க்க, “ஹம்… நான் உங்க பெரியம்மாவோட அண்ணன் மகன். நீ எனக்கு முறைப்பொண்ணு. ஸோ மாமா சொல்லனும்.” என்றான் இன்முகத்தோடு.
வாய்பிளந்து இமைகள் படபடக்க நின்றவளைப் பார்த்தவன் சொக்கித்தான் போனான். “ஹே… மாமான்றது அவ்வளோ மோசமான வார்த்தையா என்ன?” என சிரித்து, “என்ன படிக்கிற?” என்றான்.
பதில் சொல்ல முடியாததோடு அவ்விடம் நிற்க முடியாமல் ஓடியே போனாள் பவ்யா.
இதான் நமக்கு புகுந்த ஊர் போலயே என சிரிப்போடு நினைத்து அமர்ந்தவன், பவ்யா சென்ற திசை நோக்க, அங்கே பவானியிடம் எதோ சொல்லிக்கொண்டிருந்தாள்.
‘போச்சுடா, அவ அம்மாகிட்ட நம்மளைப் பத்திதான் சொல்றா. ஷப்பா… அவனவன் அஞ்சாறு வருசம் யாருக்குமே தெரியாம காதலிக்கிறான். இரண்டு வார்த்தை பேசினதும் மாட்டிக்கப்போறியே பார்த்திபா.’ என நொந்துகொண்டான் மனதில்.
அவ்விடம் தனலஷ்மி வர, போச்சுடா அத்தைகிட்ட சொல்லப்போறாங்களா? என பார்த்திருந்தான். ஆனால் பவானி பொது இடத்தில் இதுபற்றி பேசவேண்டாம் என நினைத்து, அவர் பணியினை பார்க்க சென்றிட, அப்பொழுதுதான் பார்த்திபனைப் பார்த்த தனலஷ்மி அவனருகே வந்தார்.
“வா பார்த்தி, கல்யாணியை கூட்டிட்டு வந்தியா?”
“ஆமாம்த்தை.”
“சரி வா சாப்பிடு.” என்க, “இல்லத்தை இருக்கட்டும்.” என்றவன், “பரவால்லையே, அன்னைக்கு ஜீவிதா கல்யாணத்துக்கு வந்தப்போ பேசாம போனதை போல இல்ல. சொத்து கொடுக்கிறதுக்காக சிவா முயற்சி செய்தா, அது நடக்கலனாலும் என்கிட்ட வந்து நீங்க பேசினதே சிவாக்கு பெரிய வெற்றிதான்.” என்றான் பெருமையோடு.
தனலஷ்மி முறைக்க, “உண்மையைதானேத்தை சொன்னேன்.” என்றவன், “எங்க போய்ட்டார் கோவக்காரர்? சிவாதான் கல்யாணம் செய்துக்க சம்மதிச்சிடுச்சே, இனி சொத்து பத்தியும் பேசமாட்டேனுடுச்சு, இப்போவாவது என் தங்கை மேல உள்ள கோபம் போய்டுச்சாமா? இல்ல அப்படியேதான் உர்ருனு இருக்காரா?” என்றான்.
“ப்ச், இதெல்லாம் பேசவேண்டிய இடமா இது?” என கடுகடுக்க, “ஆமா… அப்படியே அண்ணன் தம்பி வீடுனு வாரம் ஒருமுறை வந்து சீராடுறிங்க. நான்தான் அங்க பேசாம இங்க பேசுறேன்.” என்றான் ஆற்றாமையோடு.
சிவாவைப் பற்றி விசாரிக்கலாமென வந்தால் இவன் வாய் இருக்கே என நினைத்து, “உன்னை சாப்பிட கூப்பிட்டேன் பாரு, என்னை சொல்லனும்.” என அவ்விடம் விட்டு நகர்ந்தார் தனலஷ்மி.
சற்று நேரம் கழித்து வந்த சரவணன், “பார்த்திபா சாப்பிட வா.” என்றார்.
யார் இவர்? என் பேரு எப்படி தெரியும்? எனப்பார்க்க, “நான் ஜீவிதாவோட மாமனார். உன்னை சாப்பிட வச்சாகனும்னு மருமக எனக்கு கட்டளையிட்டிருக்கு.” என்றார் இன்முகத்தோடு.
“ஓ… நீங்கதானா அவர்?” என பொலிவோடு சொன்னவன், “நீங்களும் என் மாமாவும் செம க்ளோசாம்.” என சில விசயங்களை பகிர்ந்தான் மகிழ்வோடு.
“என்னைப்பத்தி இத்தனை சொல்ற? ஜீவிதா சொன்னுச்சா?” என்க, “ஜீவிதா என்கிட்ட சொல்லல, என் தங்கைகிட்ட சொன்னுச்சு, என் தங்கை என்கிட்ட எதையும் மறைக்காது.” என்றான் பெருமையோடு.
“ம், நீ கூட நல்ல பையன்தானாம். சங்கர் சொன்னான்.” என அன்று பிள்ளைகளை வம்பு செய்தவனை கண்டித்ததை சொல்ல, “ஓ… என் மாமா என்னைப்பத்திலாம் கூட பேசுவாரா?” என வியந்தான்.
சங்கர் தன்னைப்பற்றி பேசியது வியப்பென்றால், அன்று பள்ளியருகே நடந்ததை அருட்செல்வன் சொல்லியிருக்கிறார் என்பது, அருளும் கூட தன்னை நினைக்கிறாரா என்பது மேலும் வியப்பை தந்தது.
சரவணன் சென்ற சற்று நேரத்தில் வந்த சங்கர், “சாப்பிட்டியா பார்த்திபா?” என்க, இன்னும் வியப்பானான்.
“என்னப்பா பதிலை காணோம்?” என சங்கர் கேட்க, “இல்ல மாமா.” என்றான் பார்த்திபன்.
“என்னடா பார்த்தா பேசக்கூட மாட்டோம், இப்போ வலிய வந்து பேசுறனேனு பார்க்கிறியா?” என இலகுவாய் கேட்டு, “ஹம், என்ன பண்ண? இந்த சிவாப்பொண்ணு எங்களை இப்படி ஆக்கிவச்சிருக்கு.” என்றார்.
“ஓ… சிவாக்காகத்தானா?” என ஏமாற்றத்தோடு கேட்டவன், “ஆனாலும் என் தங்கைக்காக நீங்க யோசிக்கிறது ரொம்ப சந்தோசமா இருக்கு மாமா.” என்றான்.
“நல்ல இடமா கேட்டா கல்யாணம் செய்துக்க எடுத்துசொல்லு பார்த்திபா.” என்றார் மிகுந்த அக்கறையோடு.
எது செய்தும் சொத்து கொடுக்க முடியலன்ற வேதனையில இருக்கா. அவளை நல்லா தெரிஞ்ச நானே இந்தநேரம் கல்யாணத்துக்கு வற்புறுத்தினா ரொம்ப மனசொடைஞ்சிடுவா.
சிவாக்கு யாரையும் நோகடிக்க பிடிக்காது. அவ கல்யாணம் செய்துக்கலனா எல்லாரும் எவ்வளோ வேதனையடைவாங்கனு அவளுக்கும் தெரியும். நானும் இப்படியே விடமாட்டேன். அவளுக்கான டைம் கொடுத்து அதுக்கப்புறம் சொன்னா, கண்டிப்பா புரிஞ்சிப்பா.” என்றான் நம்பிக்கையோடு.
சிவப்ரியா திருமணம் செய்துகொள்ளாமல் தான் செய்துகொள்ளமாட்டேன் என திடமாய் சொல்லிவிட்டான் அருள். சிவாவோ இன்னும் ஒருவருடத்திற்கு மேல் காலஅவகாசம் கேட்கிறாள் என்பதே மனதில் உழல, சிவாவை பொண்ணு கேட்கலாமா அருள் என இரண்டு மாதம் முன்பே மகனிடம் கேட்டிருந்தார் சங்கர்.
“வேணாம்ப்பா.” என அவசரமாய் மறுத்தான்.
“சொந்தப்பகை, சொத்துப்பகையெல்லாம் தாண்டி சிவா ரொம்ப நல்ல பொண்ணுப்பா. இப்போ கொஞ்ச நாளா இதேதான் மனசுல ஓடுது. நீயும் சித்தி சித்தப்பாவை எங்களுக்கு இணையா பார்க்குற பொண்ணுதானே வேணும்ன? சிவா உன் நினைப்புக்கு சரியா இருக்கும்” என இரண்டு மாதம் முன்பு எடுத்துரைத்தார் மகனுக்கு.
“அவ சொத்தை நம்மகிட்ட சேர்க்க என்னை கட்டிட்டு போங்கனு அம்மாகிட்ட சொல்லியிருக்கா, அவளை கட்டிக்கிட்டா அதுக்காகதானு ஆகிடும். இந்த நினைப்பை விட்டுடுங்க.” என கடுமையாய் எச்சரித்திருந்தான் அருட்செல்வன்.
அதன்பின்னே மகன் திருமணத்தை விடுத்து சிவப்ரியா திருமணத்தைதான் எதிர்பார்த்திருக்கிறார் சங்கர். தற்போது பார்த்திபன் சொன்னது ஏமாற்றத்தை வரவழைக்க அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் அவ்விடம் விட்டு விலகினார்.
“இத்தனை வருசத்தில உன் அத்தை இப்போதான் உறவுக்காரிபோல பேசுறாங்க, சித்த நேரம் போய் உக்காரு பார்த்திபா, வந்துடறேன்.” என்றார் கல்யாணி.
தனமும் சிவப்ரியாவின் திருமணம் குறித்துதான் விசாரிப்பது புரிய, “சரி சீக்கிரம் வாங்க.” என அமரப்போக, தனது பெரியம்மாவை அழைக்க எதிரில் வந்துகொண்டிருந்தாள் பவ்யா.
தன்னை கடந்து போக முற்பட்டவளிடம், “பவ்யா பார்த்திபன்” என அழைக்க, ஷாக் அடித்தாற்போல் இவள் அதிர்ந்து விழிவிரிக்க, “என் முறைப்பொண்ணுக்கு என் பேர் தெரியாம இருக்கலாமா? அதான் உன்னை கூப்பிட்டு என்பேரை சொன்னேன்.” என சாதாரணம்போல் சொன்னான் உள்ளுக்குள் சிரித்தபடி.
தப்பித்தால் போதுமென பவ்யா ஓடிட, ம்… இருக்குற தள்ளுமுள்ளுல இன்னும் இவளை கரெக்ட் பண்ணி, அருள், அத்தைகிட்டலாம் சண்டைபோட்டு சம்மதம் வாங்கி, நம்ம அம்மாவை சம்மதிக்க வைக்கிறதுக்குள்ள என்னென்ன நடக்குமோ என அயர்வோடு பவ்யாவை பார்த்திருந்தான் தனது பார்வையிலிருந்து மறையும்வரை.