இரண்டு நாள் கழித்து இன்று வெள்ளிக்கிழமையாதலால் இன்று வீட்டிற்கு வருவாளா என க்ளினிக்கில் காத்திருந்தான் அருட்செல்வன். எப்பொழுதும் கல்லூரி முடிந்து மாலை ஆறரை மணிபோல்தான் இண்டூர் வருவாள். இவ்விடம் வந்து பார்த்திபன் அழைத்துச்செல்வான்.
அவள் தங்கையும் பார்த்திபனும்வேறு வருவார்களே? அவர்கள் முன் சில விசயங்களை எப்படி அறிந்துகொள்வது என யோசித்தவன், தனியே அவளிடம் பேசுவதை விட, இவர்கள் இருப்பது மேல் என நினைத்துக்கொண்டான்.
ஆறுமணிபோல் வெளியே வந்து நின்றிருந்தான் அருட்செல்வன். எப்பொழுதும் இப்படி நிற்பவன் இல்லை அருட்செல்வன் ஆதலால், “என்ன டாக்டரே, கரண்ட் இல்லையா? வெளில நின்னுட்டிருக்கிங்க.?” என்றார் அருகே உள்ள டீ கடைக்காரர்.
எப்படியும் அவர்கள் வந்தால் க்ளினிக்கிற்குள் அழைத்து வரும்போது பார்க்கத்தான் செய்வார்கள் என்பதால், “ஒரு ஃப்ரண்டுக்காக காத்திருக்கேன், அவனுக்கு அடையாளம் தெரிய வெளில வந்தேன்.” என்றான்.
சற்று நேரத்தில் பார்த்திபன் வர, “பார்த்திபா.” என்றழைத்தான்.
அச்சோ இது அருள் குரலாச்சே, அதுக்குள்ள வீட்டுல சொல்லிட்டாளா என, இவன் அழைத்தது அறியாததுபோல் சிவப்ரியாவிற்கு அழைத்தான்.
இண்டூர் பெரிய டவுன் அல்ல ஆதலால், பேருந்து வந்த சத்தம் கேட்டு வெளியே வந்தான் அருட்செல்வன். தான் நினைத்தது போலவே சிவப்ரியா பார்த்திபனோடு வாதாடுவது புரிய, வேக நடையோடு அவர்களை நெருங்கினான்.
“சிவா, தப்பிக்கவே முடியாது” என முணுமுணுக்க, அதற்குள் அருகே வந்தவன், “உன்கிட்ட பேசனும் வா.” என்றான் சிவப்ரியாவை பார்த்தபடி.
பார்த்திபன் பைக்கிலிருந்து சாவியை எடுத்தவன், “கூட பார்த்திபன் இருக்கான்ல? அப்புறம் என்ன? இங்கதான் பேசனும், அழைச்சிட்டு வா பார்த்திபா.” என்று முன்னே நடந்தான்.
அருள் மனதில் வந்தபின்னே, இங்குதான் அவன் பணிபுரியும் மருத்துவணை உள்ளது என, எதேதோ சுற்றி வளைத்து பேசி தன் தந்தை மூலமாகவே அறிந்திருந்தாள். பேருந்தில் வரும்போதே இனமறியாத படபடப்பு இருக்க, தற்போது அவனிடத்திற்கு செல்ல வேண்டுமா என பெரும் அவஸ்த்தைக்கு உள்ளானாள் சிவப்ரியா.
“பைக் சாவியை எடுத்துட்டு போய்ட்டார், எப்படியும் போய்த்தான் ஆகனும், வா சிவா. நான் இருக்கேன்ல?” என அவளின் கைப்பிடித்து அழைத்து வந்தான்.
தனது இருக்கைக்கு அருகே நின்றிருந்த அருட்செல்வன், “உக்காருங்க இரண்டு பேரும்.” என்றான் எதிரிலிருந்த நீண்ட பென்ச்சை காட்டி.
“என்ன பேசனும் சொல்லுங்க. எனக்கு சீக்கிரம் போகனும். பசிக்குது.” என்றாள் தலைகுனிந்த நிலையிலேயே.
கல்லூரி முடிந்ததும் கிளம்பியிருப்பாள். அதனால் உண்மையில் பசிக்குமோ என, “சுரேஷ்.” என அழைக்க, பக்கத்து அறையிலிருந்து வந்த சுரேஷிடம், “எதாவது சாப்பிட வாங்கிட்டு, மூனு டீயும் வாங்கி வா.” என பணத்தை நீட்டினான்.
தன் மீதெல்லாம் இரக்கம் கொண்டு எதுவும் வாங்கிதருவான் என யோசிக்காமல், இங்கிருந்து கிளம்பினால் போதுமென பசி என்றாள் பொய்யாக. ஆனால் இவன் இப்படி செய்ய, “இல்ல, எனக்கெதுவும் வேணாம். நான் டீலாம் குடிக்கமாட்டேன், என்ன பேசனும் சொல்லுங்க. அப்பா எதிர்பார்த்துட்டு இருப்பார்.” என்றாள் மறுப்பாக.
பவ்யாவை தனதாக்க வேண்டுமே என, “என்ன சிவா யாரோ போல அவாய்ட் பண்ற? அரைமணி நேரம் ஆகுமா? பேசிட்டு போலாம். உக்காரு.” என பார்த்திபன் மரபென்ச்சில் அமர,
“இவங்க அத்தை மகன்னே எனக்கு கொஞ்ச நாள் முன்னதான் தெரியும். இப்படி பட்ட உறவுதானே இவங்களுக்கும் நமக்கும். அப்போ யாரோ போலத்தானே? அவங்க காசுல எனக்கு எதுவும் வேணாம். என்ன கேட்கனுமோ கேட்க சொல்லுங்க.” என பார்த்திபனை முறைத்தாள்.
பல்லை நெறித்தபடி சிவப்ரியாவையே பார்த்திருந்தவன், “கல்யாணம் செய்துக்க ஒருவருசம் டைம் கேட்டியாம்? அதெல்லாம் முடியாது. இன்னும் இரண்டொரு மாசத்துல செய்தாகனும்.” என்றான்.
“கல்யாணம் என் தனிப்பட்ட விசயம், அதுல தலையிட நீங்க யாரு?”
“இன்னொரு முறை நான் யாருனு கேட்ட, பல்லு அத்தனையும் கொட்டிடும் பார்த்துக்க.” என முறைக்க, இதற்கெல்லாம் நான் பயப்படுவேனா என அழுத்தமாய் நின்றிருந்தாள் சிவப்ரியா.
“அத்தனை பேர் முன்ன அப்படி சொல்லாம இருந்திருந்தா உன் கல்யாணத்தை பத்தி நானெதுக்கு நினைக்கப்போறேன்?” என கடிந்து பொறுமையை இழுத்துப்பிடித்தவன், “எனக்கு கல்யாணம் ஆனபின்னயும் நீ கல்யாணம் செய்துக்கலனா அது என் அம்மா நிம்மதியை கெடுக்கும்.
என் அம்மா நிம்மதி போய்டுச்சுனா என்னால சந்தோசமா இருக்க முடியாது. சொத்து வாங்கிக்கலனா கல்யாணமே செய்துக்கமாட்டேனு நீ சொன்ன வார்த்தை எங்கம்மாவை ரொம்ப பாதிக்குது. உனக்கு கல்யாணம் ஆகலனா அதுக்கு என் அம்மா மட்டும்தான் காரணம்னு சொல்லியிருக்க.
உண்மையா அப்படி இருந்திடுவியோனு என் அம்மா ரொம்ப பயப்படுறாங்க. அதனால என் பேச்சை நீ கேட்டுத்தான் ஆகனும். உனக்கு கல்யாணம் ஆனாதான் என்னால நிம்மதியா கல்யாணம் செய்துக்க முடியும்.” என்றான்.
“இப்போ கொஞ்சம் டிப்ரஸன்ல இருக்கேன். அது சரியாகவும் பண்ணிக்கிறேன். நீங்க பண்ணிக்கோங்க.” என்றாள் நலிந்த குரலில்.
சிவப்ரியாவின் குரலில் இதுவரை இருந்த திடம் காணாமல் போயிருக்க, வந்ததிலிருந்து தனது முகத்தை பாராமல் பேசிக்கொண்டிருந்தவளை ஊன்றிப்பார்த்தான் அருட்செல்வன்.
“எனக்கு ஒரு பொண்ணை பிடிச்சிருக்கு, ஆனா உன்னால கல்யாணம் செய்ய முடியாம இருக்கேன்.” என்று அவளை ஆழம் பார்க்க, அது வேலை செய்தது போல.
சிவப்ரியாவிற்கு கண்ணீர் பெருக்கெடுத்தது. என்ன முயன்றும் கட்டுப்படுத்த இயலவில்லை அவளால். “வா பார்த்திண்ணா போலாம்.” என காற்று பாதி வார்த்தை பாதியாக சொல்லி வெளியேற எத்தனிக்க, “நில்லு.” என அதிகாரத்தோடு சொன்னவன், அவள் வெளியேறாத வகையில் எதிரே நின்றான் அதிர்வோடு.
ம் அதிர்வோடுதான் நின்றான். அன்று உணர்வுகளை கொன்று, சுயத்தை இழந்து என தன் தந்தையிடம் பிதற்றியது, அன்று அவளின் வீட்டில் அத்தைக்காக அத்தனை பேசியவள், அவளின் ஊருக்கு சென்றபோது தன் அன்னையை காண வராதது, ஜீவிதா வளைகாப்பிற்கு வராதது என அனைத்தும் நினைத்தவனிற்கு தன்னை விரும்புகிறாளோ என்ற சந்தேகம் ஊள்ளூர இருந்ததுதான்.
ஆனால் அது தன்னை திருமணம் செய்துகொண்டால் தான் விருப்பப்படி சொத்து கொடுக்கலாம் என்ற எண்ணத்தால் வந்த காதலாக இருக்கும் என்றுதான் நினைத்தான். அதை அவளிற்கு தெளிவுபடுத்தவே இந்த சந்திப்பையும் நிகழ்த்தினான்.
ஆனால் தனக்கு ஒரு பெண்ணை பிடித்திருக்கிறது என்ற வார்த்தையை கூட சகிக்க முடியாத அளவிற்கு தன்னை காதலிப்பாள் என சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை அருட்செல்வன்.
இவன் குறுக்கே நின்ற கோபத்தில், “எதோ ஒருநாள் அப்படி சொல்லிட்டேன், அதுவும் என் அத்தைக்கு எப்படியாவது சொத்து கொடுக்கனும்ன்ற எண்ணத்துல சொல்லிட்டேன். அதுக்காக அன்னைக்கு எங்க வீட்டுல வச்சி சாரி கேட்டுட்டேன்தான? திரும்ப திரும்ப எதுக்கு அதையே சொல்றிங்க?
அன்னைக்கப்புறம் சொத்து வாங்கிக்கிறதை பத்தி நான் பேசறதில்லைதான? அப்புறம் எதுக்கு என்னை கல்யாணம் செய்துக்க சொல்லி மொத்த குடும்பமும் டார்ச்சர் பண்றிங்க?
நான் கல்யாணம் செய்யிறேன், இல்ல கருமாதி பண்ணிக்கிறேன், அது என் விருப்பம்.” என வெடித்து வெளியேற, மீண்டும் இழுத்து உள்ளே வந்தவன், அவளின் கையை விடாமல் நின்றிருந்தான் அவளையே பார்த்தவாறு.
சிவப்ரியாவின் இந்த பரிமாணம் பார்த்திபனிற்கும் பேரதிர்ச்சியை கொடுக்க, “பார்த்திபா, நான் உன் தங்கைகிட்ட தனியா பேசனும்.” என்றான்.
“போகாத பார்த்திண்ணா, இவர்கிட்ட பேச எனக்கு ஒன்னுமில்ல. பைக் சாவி கொடுக்கலனா ஆட்டோ பிடிச்சி போலாம். என்னை இவர்கிட்டயிருந்து விலக்கி விடு.” என கையை உருவ போராடினாள்.
செய்வதறியாது சில நொடி தாமதித்த பார்த்திபன், “கையை விடுங்க, சிவா நான் இல்லாம போகமாட்டா.” என்றான்.
“உன் தங்கைக்கு கல்யாணம் ஆகனுமா? வேணாமா?” என அருள் பார்த்திபனை முறைக்க, ஷாக்கடித்த உணர்வோடு சிவப்ரியாவை பார்த்தான் பார்த்திபன்.
“ண்ணா, கை வலிக்குது.” என சிவா உதவி கேட்க, “நீ இவரை லவ் பண்றியா?” என்றான் பார்த்திபன்.
சற்று மட்டுபட்ட கண்ணீர் மீண்டும் பெருக… அருள், “அதை நான் கேட்டுக்கிறேன், நீ வெளில போடா.” என்றான் கோபத்தோடு.
“ண்ணா போகாத, அப்படிலாம் ஏதும் இல்ல. என்னை விடச்சொல்லு.” என்று சிவப்ரியா கெஞ்ச, சற்று முன் வெடித்த குரல் தற்போது பலவீனமாய் வந்திருப்பதை உணர்ந்த பார்த்திபன், “சிவா உங்களை விரும்புறாளான்னு நாளைக்கு நானே கேட்டு சொல்றேன். உங்களுக்கு விருப்பம்னா அத்தை மாமாவோட வீட்டுக்கு வந்து பேசுங்க. இப்போ அவளை விடுங்க.” என்றான் தன்மையாக.
அருட்செல்வன் முறைக்க, “ப்ளீஸ், உங்களுக்கு சிவாவைப் பத்தி தெரியாது. அவ மனசுல ஒன்னு வந்துட்டா அவ்வளோ சீக்கிரம் மாத்திக்கமாட்டா. ஒருவேளை உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகலனா, இந்த தனிமை பேச்சு என்னைக்காவது ஒருநாள் அவ உயிருக்கே ஆபத்தாகிடும். அவளை விடுங்க.” என்றான் மன்றாடலாக.
அருள் கண்டிப்பாக தன்னை திருமணம் செய்துகொள்ளமாட்டான் எனும்போது, தன்னைப்பற்றி தெரிய இருவருக்கும் வந்தது அவமானமாக தோன்ற, “விடுங்க.” என கெஞ்சினாள் அருட்செல்வனிடமே.
கல்யாணம் செய்துக்கிற எண்ணமில்லனா கையை எதுக்குடா பிடிக்கப்போறேன் என பார்த்திபனை மனதில் திட்டியவாறு சிவப்ரியாவை பார்த்திருக்க, தற்போதும் அருட்செல்வன் முகத்தை பார்க்கவில்லை சிவப்ரியா. ஆனால் முகம் மொத்தமாய் சிவந்திருந்தது. தன்மீதான இவளின் காதல் தனக்கு தெரிந்துவிட்டது என்ற அவமானத்தால் சிவந்திருக்கிறாள் என அருட்செல்வனிற்கு புரிந்தது.
“சார்.” என்ற சுரேஷின் குரலில் சிவப்ரியாவின் கையை விடுவித்தான் அருட்செல்வன்.