அடுத்த நாள் காலை, “ம்மா, நான் ரெடியாக பத்து நிமிஷம் போதும். மணி நாலுதான் ஆகுது. அஞ்சு மணிக்குத்தான முகூரத்தம்? இன்னும் முக்காமணிநேரம் கழிச்சு எழுப்பு” என புரண்டு படுத்தான்.
“விடிஞ்சா கல்யாணத்தை வச்சிக்கிட்டு நடுராத்திரி இரண்டு மணிவரை பிரண்டுகளோட கூத்தடிச்சா இப்போ எப்படி தூக்கம் தெரியும்?” என கடுகடுத்து தனம் சென்றிட அதற்கு பின்னே எங்க இவனின் தூக்கமும் கலைந்திருந்தது.
அண்ணாமலையிடம் சொத்து வாங்கக்கூடாது என்று சொன்னபின்னே, பவ்யாவை கட்டிக்கிட்டா கணக்கு டேலி ஆகிடும்னா என்ன அர்த்தம்? கணக்கை டேலி பண்ணத்தான் பொண்ணு கொடுப்பாங்களா? பார்த்திபன் அப்படி சொன்னதைவிட சிவப்ரியா அதை ஏற்றுக்கொண்டதை நினைக்க கோபம் குறையவில்லை அருட்செல்வனிற்கு.
பார்த்தி தவறான எண்ணத்துல அப்படி சொல்லியிருக்கமாட்டான் என்று தனம் பலமுறை எடுத்துரைத்துவிட்டார். எந்த எண்ணத்துல சொன்னாலும் அவன் நினைச்சது தப்புதான் என்றான்.
அம்மாவை அவமானம் செய்தாங்கனுதானே சொத்தே வேணாம்னு சொல்லிடுச்சு? கூடப்பிறந்தவங்க மேல மனது கசந்து போகவும்தான பிறந்த வீட்டு சகவாசமே வேணாம்னு ஒதுங்கியிருந்துச்சு. இதெல்லாம் தெரிஞ்சவன் இப்படி பேசலாமா?
சொத்துக்காக கல்யாணம்னா என்மேல உனக்கு ஆசை வந்திருக்காதே? எதோ ஒரு காரணத்துக்காக என்னை பிடிக்கவும்தானே அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல அப்படி வெடிச்ச? நீ மனசை பார்த்து கல்யாணம் செய்துப்ப? என் தங்கையை சொத்துகாரனுக்கு கொடுப்போமா? என்று இருவர் மீதும் கோபத்திலிருந்தான்.
இந்த நிலையில், இதான் போட்டோ ஷுட்டா? என நேற்றிரவு சிவப்ரியா சொன்னதை நினைக்க, சரியான இம்சைடி நீ என நினைத்துக்கொண்டான் கோபமாக.
அரைமணி நேரம்வரை புகைப்படம் எடுத்தார்கள். நேரமும் ஒன்பது மணிதான் என்பதால் ஆங்காங்கே உறவினர்கள் அணியணியாக பேசிக்கொண்டிருக்க, இன்றை காலகட்டத்தில் நடக்கும் போட்டோ ஷுட்போல் நெருக்கமாகவெல்லாம் படம் எடுக்கவில்லை.
“மத்தவங்க பண்றதெல்லாம் நாமும் பண்ண முடியாது. நம்மளை சுத்தி பெரியவங்க, சொந்தபந்தம்னு எல்லாரும் இருக்காங்க” என கோபமில்லாமல்தான் சொன்னான். ஆனாலும் சிவப்ரியாவின் முகம் வாடிவிட்டது. அதற்கு மேல் அவளோடு இருக்க முடியாமல் மீண்டும் நண்பர்களோடு இணைந்துகொண்டான்.
அரைமணி நேரத்திற்கு பின்னே தனம் மீண்டும் வர, அருட்செல்வன் குளித்து தயாராகியிருந்தான். “எழுந்து குளிச்சிட்டியா? சரி சரி” என நிம்மதியாகி, “ராகவனை அனுப்பி வைக்கிறேன், அவனோட வா” என்று கிளம்பினார்.
ராகவனோடு வந்த அருட்செல்வன் மணமேடையில் அமர்ந்தான். பவ்யா, ஷிவாங்கியோடு முக்கிய விசயம்போல் எதையோ தீவிரமாக உரையாடிக்கொண்டிருந்தாள்.
இந்த பவிபொண்ணு நல்லா ஒட்டிக்கிச்சு அவங்களோட. என நினைத்தவன் கண்கள் பார்த்திபனை தேடியது. அவன் யாரிடமோ இன்முகமாக பேசிக்கொண்டிருந்தான்.
நேற்றிரவும் கவனித்தான். சிவப்ரியா வந்ததும் அவளோடு இணைந்த பவ்யா யாரையும் கண்டுகொள்ளவில்லை. பார்த்திபனும் பொறுப்பான அண்ணனாக வந்தவர்களை வரவேற்பது, பெரியவர்கள் அனைவரும் உண்டார்களா? உறங்க இடம் வசதியாக உள்ளதா என பம்பரமாய் சுழன்றுகொண்டிருந்தான்.
இவன் உண்மையாக பவ்யாவை விரும்புகிறானா என அருட்செல்வனிற்கே ஆச்சர்யமானது.
சற்று நேரத்தில் பவ்யா,ஷிவாங்கி மற்றும் நிறைமாத கர்பினி ஜிவிதாவோடும் தங்க பதுமையாய் மணமேடையை நோக்கி வந்துகொண்டிருந்தாள் சிவப்ரியா.
விடிந்தும் விடியா அதிகாலைப் பொழுதில் நிலவாய் ஜொலித்தவளின் மீதுள்ள கோபம் மறந்து கண்களில் நிறைத்தவன், பின்னே ஆழ்ந்த மூச்செடுத்து ஐயர் சொல்வதை செய்வதில் கவனமானான்.
மேலும் சற்று நேர பூஜைக்குப் பின்னே அனைவராலும் ஆசிர்வதிக்கப்பட்ட பொன் மாங்கல்யத்தை ஐயர் நீட்ட, வாங்கியவன் சிவப்ரியாவின் கழுத்தில் பாந்தமாய் பொருத்தி அன்பின் முடிச்சுகளை இட்டான் மூன்றுமுறை.
“ண்ணா மூனாவது முடிச்சு நான்தான் போட்டிருக்கனும்” என அருட்செல்வன் காதில் பவ்யா குறைபட, “வாழ்க்கையில் கிடைக்கும் ஒரே சான்ஸை பங்கு போட முடியாது பவிம்மா” என கண்ணிமைத்து, சிவப்ரியாவை பார்க்க, மகிழ்ச்சியில் மின்னியது அவளின் முகம்.
“குங்குமம் இடுங்க” என ஐயர் நீட்ட வாங்கி நெற்றிக்கிட்டுவிட்டு மாங்கல்யத்திற்கும் இட்டுவிட்டான். சிவப்ரியாவின் உடல் சிலிர்த்திட, “என்னை நீங்க கட்டிக்கலனா என்னவாகியிருப்பேனோ?” என முணுமுணுத்தாள் நன்றியோடு.
“அதான் கட்டிக்கிட்டேன்ல? அமைதியா இருடி” என அதட்டினான் சுற்றிலும் பார்த்தபடி.
மகள் திருமணம் மட்டுமல்ல, பிரிந்திருந்த ரத்த பந்தத்தை மீண்டும் இணைத்துப் பிணைத்த நிகழ்வல்லவா? பெரியோர் அனைவரின் கண்களிலும் ஆனந்த கண்ணீர்.
அக்காள் வீட்டிற்குத்தான் மகளை கொடுக்குறோம் என நேற்றுவரை இருந்த தைரியம் சற்றே மட்டுப்பட்டு, மகள் கழுத்தில் மாங்கல்யம் ஏறியதும் எதையோ பெரிதாய் இழந்த உணர்வு தோன்றிட, அருணாச்சலம் தனலஷ்மி சங்கரை பார்த்தார் தவிப்போடு.
மகளை பெற்ற தகப்பன் நிலையறியாவர்களா… “சிவா என் மருமக இல்ல. என் அம்மா அருணா. அவதான் என்னை பார்த்துப்பா” என தம்பியை தேற்றினார் தனலஷ்மி.
தகப்பனிற்கு இதைவிட வேறென்ன வேண்டும்? தனத்தின் வார்த்தை கல்யாணிக்கு பெரும் நிம்மதியை கொடுத்தது. இரு குடும்பங்களும் மகிழ்ச்சியில் பூரித்திருந்தனர்.
அருட்செல்வன் விரலோடு தனது விரல் கோர்த்து மணமேடையை வலம் வருவது, மாலை மாற்றிக்கொள்வது, என சடங்குகள் அத்தனையையும் மகிழ்வோடு செய்தாள் சிவப்ரியா.
உண்ணும்போது அருட்செல்வனை ஊட்டிவிட நண்பர்கள் வற்புறுத்த, இந்நிகழ்வுகளை இருபது நாட்களாய் எதிர்பார்த்தவள் அல்லவா? ஆவலாக பார்த்தாள் கணவனை.
அருட்செல்வனிடம் தயக்கமின்றி வாங்கிக்கொண்டவள், மற்றவர்கள் சொல்லும் முன்பே அவனிற்கும் உணவை நீட்டினாள். பெற்றுக்கொண்டவனிற்கு புரிந்தது அவளின் அன்பு.
ஆனாலும் இப்படி தன்னையே நொடிக்கொருமுறை பார்த்தால் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று, “சும்மா சும்மா என்னையே பார்க்கக்கூடாது. வீட்டுக்கு போக இன்னும் மூனு மணி நேரம் பக்கம் ஆகும். தெம்பு வேணும்ல? சாப்பிடு” என்றான் அதட்டலாக.
“என் தெம்பு சாப்பாட்ல இல்ல. மனசுல இருக்கு. அதெல்லாம் எத்தனை மணி நேரம்னாலும் தெம்பா இருப்பேன்” என பதில் கொடுத்தாள் மகிழ்வோடு.
“ப்ச் சாப்பிடு, உங்கப்பாம்மா உன்னைத்தான் பார்த்துட்டிருக்காங்க” என முறைக்க, “அவங்க நான் சந்தோசமா இருக்கேனானு பார்ப்பாங்க. பார்க்கட்டுமே” என அதற்கும் பதிலளித்தே தலைகுனிந்தாள்.
பதினொரு மணிபோல் சிவப்ரியா வீட்டிற்கு வந்தனர் அனைவரும். பால் பழம் கொடுப்பது என வழக்கமான சாங்கியம்தான். ஆனால் உறவினர்களின் கேளிக்கைகள் அருட்செல்வனை சங்கடத்திற்குள்ளாக, “நீங்க ரெஸ்ட் எடுக்கிறிங்களா?” என்றாள் அவனின் மனமறிந்து.
“அதென்ன வாங்க போங்கனுட்டு சிவா? மாமா சொல்லு” என்று பக்கத்து வீட்டு ராணி சொல்ல, “சொல்வேனே… என் மாமாவை மாமானு சொல்ல எனக்கு கசக்குமா?” என்று இவள் சொல்ல, அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் சிவப்ரியாவின் அறைக்குள் சென்றுவிட்டான் அருட்செல்வன்.
ஷப்பா… என பெருமூச்சிழுத்த பார்த்திபன், பவ்யாவை தேட, அவள் வெளியில் ஷிவாங்கியோடு பேசிக்கொண்டிருந்தாள். “சித்தி ஷிவாங்கி எங்க? நித்திஷ் அம்மாகிட்ட பேசினாளானு கேட்கவேயில்ல, அவங்க கோவிக்க போறாங்க. கூப்பிட்டு கேளுங்க” என்றான் கல்யாணியிடம்.
கல்யாணி “ஷிவாங்கி” என உரக்க குரல் கொடுக்க, “இரு வரேன்” என்று பவ்யாவிடம் சொல்லி உள்ளே வந்தாள் ஷிவாங்கி.
உள்ளே புதுமணத் தம்பதி இருப்பார்கள் என சங்கடப்பட்டு பவ்யா அங்கேயே மொபைலை பார்த்தபடி நின்றிருக்க, வெளியே சென்ற பார்த்திபன் பவ்யாவிற்கு அழைத்தான்.
யாரோ என இவள் அழைப்பை ஏற்க, “பார்த்திபா” என்றான் சிரிப்போடு.
பவ்யா முகம் பதட்டத்திற்குள்ளாக, “எதுக்கு பயப்படுற? என்ன பண்ணினேன் உன்னை?” என்றான் பாவமாக.
தன்னை பார்த்தபடிதான் பேசுகிறானா என பவ்யாவின் கண்கள் சுழல, “இங்க ரைட்ல பாரு” என லேசாய் கையை உயர்த்தி ஆட்டினான் சிரிப்போடு.
இவள் இணைப்பை துண்டித்திட, அவளருகே சென்றவன், “பார்த்திபனை பிடிக்கலயா பவ்யாக்கு” என்றான்.
இவள் விலகப்பார்க்க, கை நீட்டி அவளை மறித்தவன், “என்கிட்ட சொல்லலைனா பரவால்ல. உன் அண்ணன் கேட்கும்போது தெளிவா சொல்லனும் சரியா?” என எடுத்துரைத்து, “கல்யாணத்தை என்ஜாய் பண்ணட்டுமேனு இவ்வளோ நாளா உன்னை டிஸ்டர்ப் பண்ணல. அதுக்கு நான் பட்ட சிரமம் இருக்கே” என மலைப்பாய் சொன்னவன்,
“காதல் கல்யாணம்லாம் வாழ்க்கையில நடக்கவேண்டிய விசயம். நீ ரொம்ப நல்ல பொண்ணு. நானும் உன்னை கட்டிக்க தகுதியான நல்ல பையன்தான். என்கிட்ட இவ்வளோ பதட்டம் தேவையில்லாதது. நீ டிகிரி முடிச்சதும் உன் வீட்டுக்கு வருவேன். உன்னை கேட்டு வருவேன். என்னை ஏமாத்திடகூடாது. சரியா?” என்றான் தீவிரமாக.
என்ன பதில் சொல்வாள்? ஓடியே போனாள் உள்ளே. அவசரத்தில் அவள் ஓடியது பார்த்திபன் வீட்டிற்குள். “ஹாஹா…” என உல்லாசமாய் சிரித்தபடி தனது வீட்டிற்குள் வந்தவன், “எந்த காலை வச்சி உள்ள வந்த?” என்றான்.
அச்சோ என்றானது பவ்யாவிற்கு. பெரிய தவறிழித்ததுபோல் கண்களும் கலங்கிவிட, “ஹேய் பவி, என்ன இது? பயப்படாத, இங்க யாரும் இல்ல, எல்லாரும் சித்தி வீட்டுல இருக்காங்க. இரு ஷிவாங்கியை அனுப்பி விடறேன்.” என வெளியேறி, சிவா வீட்டிற்கு வந்தவன், ஷிவாங்கியை அனுப்பி விட, அதற்குள் பவ்யா வெளியே வந்திருந்தாள்.
அதன்பின்னே இரண்டு மணிநேரம் கடந்திட, பவ்யா புறம் திரும்பவேயில்லை பார்த்திபன். நல்ல நேரம் முடிவதற்குள் புதுமணத் தம்பதியை அழைத்துச் செல்ல நாகராஜ் பவானி வந்திருக்க, அருட்செல்வன் வெளியே வந்தநேரம் பார்த்திபன் ஹாலில் அமர்ந்திருந்தான் நல்லபிள்ளையாக.
பெற்றோர், பெரியப்பா பெரியம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கி, பார்த்திபன் காலில் விழப்போக, “ஏய் சிவா” என பார்த்திபன் தடுக்க, “ப்ச் ப்ளஸ் பண்ணு பார்த்திண்ணா” என அன்போடு கேட்டு அவனிடமும் ஆசிபெற்று ஆர்பாட்டமின்றி கணவன் வீட்டிற்கு கிளம்ப தயாரானாள் சிவப்ரியா.
“பவ்யா எங்க அருளு?” என பவானி கேட்க, “ஷிவாங்கியோட பேசிட்டிருக்கா” என ஷிவாங்கி அறையிலிருந்து பவ்யாவை அழைத்து வந்தார் கல்யாணி.
“சரி சரி நம்ம வீட்டுக்கு போனதும் ரெஸ்ட் எடுத்துக்கலாம்” என்றான்.
பின்னே அனைவரும் விடைபெற, என்ன முயன்றும் பார்த்திபன் முகம் வாடிவிட்டது. “வாயாடுறதை குறைச்சிக்கனும் சரியா?” என தங்கைக்கு அறிவுருத்தி உள்ளே செல்ல எத்தனித்தவன், அருளோடு நின்றிருந்த பவ்யாவிடமும் “டிகிரியை நல்லபடியா முடி” என்றான் நல்ல வாத்தியாராக.
“இப்போவே நல்லாத்தான் படிக்கிறா” என்று பார்த்திபனை முறைத்தபடி கிளம்பினான் அருட்செல்வன்.
*** *** *** ***
மாலை ஐந்து மணிபோல் கணவன் வீட்டினுள் நுழைந்தாள் மகிழ்வோடு. சோலையம்மாளை பார்த்தவள், “இவங்கதான் உங்க அத்தையா அத்தை? கஷ்ட்டபட்டாவது கல்யாணத்துக்கு அழைச்சிட்டு வந்திருக்கலாமில்ல? பேரன் கல்யாணத்தை பார்க்க ஆசைப்பட்டிருப்பாங்கதானே?” என்றாள்.
“ம்… நான் பேரன் பொண்டாட்டி ஆனது பிடிக்கல போல” என இயல்பாய் சொன்னவள், “பிடிக்க வச்சிடலாம்” என நம்பிக்கையோடு கண்ணிமைத்தாள் தனலஷ்மியிடம்.
“வா உள்ள போலாம். விளக்கேத்தனும்” என மருமகளை பூஜையறைக்கு அழைத்துச்சென்று வணங்க வைத்து, “கண்ணெல்லாம் ரொம்ப சிவந்திருக்கு. போய் கொஞ்ச நேரம் படு.” என்றவர், மகனிடம் “கூட்டிட்டு போ அருளு” என்றார்.
“விளக்கேத்தினதும் படுக்க வேண்டாம்த்த, உங்களோட பேசிட்டிருக்கேன்” என்றவள், ஏழு மணிவரை ஹாலிலேயே அமர்ந்திருந்தாள்.
“டைர்டாதான் மாமா இருக்கு” என ஒப்புக்கொண்டவள், “அத்தை டிரஸ் மாத்தனும்” என்றாள்.
“வா.” என தனதறைக்கு அழைத்துச்சென்று, “குளிக்கிறதுனா குளி, இல்ல முகம் கழுவிட்டு இந்த சேரி கட்டிக்கோ. கல்யாணி கொடுத்தனுப்பினுச்சு” என சாந்தி முகூர்த்த புடவையை எடுத்துக்கொடுத்தார்.
உடல் அசதிக்கு குளித்தால் நன்றாகத்தான் இருக்கும் என, சரியென தலையாட்டி, குளித்து அரக்குநிற பட்டுடுத்தி வெளியே வந்தாள். அருட்செல்வனை அழைத்து இருவரையும் சாப்பிட வைத்து, சிவப்ரியாவை அருட்செல்வன் அறைக்கு அழைத்து வந்த தனம், “ஒன்பது மணிக்குத்தான் நல்லநேரம். அருள் வரதுக்குள்ள குட்டி தூக்கம் போட்டுடு” என்று வெளியே வந்தார்.
இன்பக் கனவுகளோடு அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் படுத்தவள், படுத்த பத்து நிமிடத்திலேயே அவளையறியாமல் உறங்கியிருந்தாள். ஒன்பது மணிக்கு அருட்செல்வன் உள்ளே வந்தான்.
புது இடம் என்றில்லாமல் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் மனைவியை வியப்பாய் பார்த்திருந்தவன், பின்னே தான் படுக்க ஏதுவாக அவளை நேர்படுத்தி படுக்க வைத்து பக்கத்தில் படுத்தான்.
பார்த்திபன் விசயத்தில் இருவர் மீதும் கோபம் குறையவில்லைதான். ஆனாலும் அனைத்தையும் மறக்கவைக்கிறது இவளின் அன்பும் காதலும். என்ன வாய்? மனசுல பட்ட இடம் ஏவல் பார்க்குறதேயில்ல என்று தூங்குபவளை கடிந்தான் செல்லமாக. நேற்றிரவிலிருந்து தற்போது வரை உறங்காமல் திருமணத்தை ரசித்தவளை தானும் ரசித்தபடி கண்ணயர்ந்தான்.