அருட்செல்வன் உறங்கச் சென்றதும், அருணாச்சலத்திற்கு அழைத்து பவ்யாவிடம் பார்த்தி பேசியதை சொல்லி, “என்கிட்ட சொன்னானே, அதோட விட வேண்டியதுதானே? நேரம் வரும்போது நானே பேசியிருப்பேன், காலைலயிருந்து பார்க்காததுக்கே பவ்யா எதாவது சொன்னுச்சா? முகமே சரியில்லையேனு கேட்டான், இன்னைக்கு எதோ சமாளிச்சு தூங்க அனுப்பிட்டேன்.
காலைல எழுந்ததும் பவ்யாவை பார்த்துட்டுதான் வேற வேலை பார்ப்பான். அவ வேற அண்ணன்கிட்ட எதையும் மறைக்கமாட்டா, மோகனாவை நினைச்சே சம்மதிக்கமாட்டான், பார்த்தி மேல உள்ள கோபத்தை யார் சிவாகிட்ட காட்டுவானோனு கவலையாயிருக்கு” என வருந்தினார் தனம்.
தனம் சொன்னதை அருணாச்சலம் அண்ணாமலையிடம் சொல்ல, அண்ணாமலை மகனை விசாரித்தார். தந்தை மகன் உரையாடலை கேட்ட மோகனா, “அந்த புள்ளை என் மகனுக்கு ஈடா? இதுல கொடுக்கவேற மாட்டாங்களாமே” என அங்கலாய்த்து, “உன்னை கட்டிக்க அவளை விட வசதியான புள்ளைங்க தவம் கிடக்குது” என்றார் நொடிப்பாக.
“நீ எதை நினைச்சு சொல்றேனு எனக்கு தெரியும், உன் நினைப்பு நிறைவேறாதும்மா, நான் பவ்யாவைத்தான் கட்டிப்பேன்” என்றான் உறுதியாக.
“அந்த புள்ளையை எத்தனை நாள்டா பார்த்துட்ட? கண்டதும் காதல் கத்திரிக்காலாம் நடப்புக்கு சரிவராது. உன் தங்கைக்கு ஆதரவா இருக்கனும்னு முட்டாள்தனமா முடிவெடுக்காத பார்த்திபா, அப்புறம் பார்கவி வேதனைப்படுவா”
“என் தயவே சிவாக்கு தேவையில்ல, என் விருப்பத்துக்கும் சிவாக்கும் எந்த சம்மதமுமில்ல” என்றவன், “ஆமா நான் பவ்யாவை கட்டிக்கிட்டா அக்கா எதுக்கு வேதனைப்படும்?” என்றான் சந்தேகமாக.
பணத்திற்கு ஆசைப்பட்டு வசதி பார்த்து பெண்ணெடுப்பார் என்றுதான் நினைத்தான். ஆனால் தற்போது பார்கவி வேதனைப்படும் என்பதில், ஒருவேளை அக்காவின் சொந்தத்தில் பெண்ணெடுக்க நினைக்கிறாரோ என்ற சந்தேகம் வர, அர்த்தமாய் பார்த்தான் அன்னையை.
மகனின் பார்வை புரிந்து, “ஆமாம், பார்கவியோட சின்ன மாமனார் மகளை நீ கட்டிக்கனும்னு பார்கவிக்கு ஆசை, எனக்கும் அந்த பொண்ணை பிடிச்சிருக்கு, லட்சணமா இருப்பா. நீ கல்யாணம் இப்போ வேணாம்னு சொன்னதால பொண்ணு கேட்கல. நாம போய் கேட்டா வரமா நினைச்சி பொண்ணு கொடுப்பாங்க” என்றார்.
“வரம் கொடுக்குற சாமியால்லாம் யாருக்கும் நான் இருக்க விரும்பல, யாருக்கும் தெரியாம நித்திஷ் குடும்பத்தை வரவச்ச மாதிரி எதாவது ஏடாகுடம் செய்தேன்னு வைம்மா… அன்னைக்கே பவ்யாக்கு தாலி கட்டி வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திடுவேன்” என்றான் அழுத்தமாக.
மனம் உடைந்த மோகனா “பெத்தவ விருப்பத்துக்கெல்லாம் மதிப்பே இல்லையா?” என்றார் ஆற்றாமையாக.
“கண்டிப்பா இருக்கும்மா, ஆனா அது நியாமான ஆசையா இருக்கனும். எப்படியோ பவ்யா என் மனசுக்குள்ள வந்துட்டா, இனி அவளைத் தவிர யாரையும் என்னால யோசிக்கக் கூட முடியாது. பவ்யா வேணாம்னு சொல்ல எதாவது ஒரு காரணம் சரியா சொல்லு பார்ப்போம்”
வசதியைப் பற்றி சொன்னால் கோபப்படுவான் என, “இத்தனை வருசம் யாரோ மாதிரி இருந்துட்டு இனி என்னால உறவாட முடியாது” என்றார்.
“பார்கவிக்காவோட சின்ன மாமனார் குடும்பத்தோட ரொம்ப உறவோ? அவங்க பொண்ணை எப்படி பார்க்குறேன்ன?”
“உறவில்லனாலும் பகையில்லாம இருக்குல்ல? முப்பது வருசமா உங்கப்பாவும் சித்தப்பாவும் சொத்தை வாங்கிக்க கேட்டுட்டிருந்தாங்க, உன் அத்தை மதிச்சாங்களா? உன் தாத்தா பாட்டி செய்ததுக்கு இவங்க என்ன செய்வாங்க?
பார்கவி கல்யாணத்துக்கு வந்தாங்களே? ஒரு வாய் சோறு திண்ணாங்களா நம்ம வீட்டுல? வாசலோட உக்கார்ந்துட்டு போய்ட்டு மண்டபத்துக்கு வந்து மொய்யை வச்சிட்டு போய்ட்டாங்க, மொய் பணத்துக்காகவா பத்திரிக்கை வச்சோம்? அன்னைக்கெல்லாம் உன் அப்பாக்கும் சித்தப்பாக்கும் எவ்வளோ மன உளைச்சல்?”
“என்னடா பேசுவ? அப்படி என்ன அசிங்கத்தை நான் பண்ணிட்டேன்?” என்றார் கோபமாக.
“ஆயா அத்தைக்குத்தான் பாதகம் செய்துச்சு, உன்னை என்ன பண்ணுச்சு? அவங்க கடைசி காலத்துல நல்லவிதமா ஒரு வாய் சோறு கொடுத்திருப்பியா?”
மோகனா பதிலின்றி நிற்க, “அவங்க சொத்து வேணும், ஆனா முடியாத காலத்துல பார்க்க மாட்டிங்க” என்றான் குற்றப்பார்வையோடு.
“சொத்து அவங்க சம்பாதிச்சதில்ல” என்று சின்னக்குரலில் சொல்ல, “நீயும்தான் சொத்து சம்பாதிக்கல?” என்று பார்த்திபன் பார்த்த பார்வை, உன்னை அப்படி செய்தா பரவாயில்லையா என்பதை உணர்த்த, அதிர்ந்து விழித்தார் மோகனா.
“நீ நினைக்கிற அளவுக்கு கேவலமானவன் இல்லம்மா நான்” என தன்மையாய் சொன்னவன், “பையனுக்கும் பொண்ணுக்கும் பிடிக்கலனா கூட, அந்த காலத்துல சொந்தத்துல எதுக்காக பொண்ணெடுத்தாங்க தெரியுமா?
கடைசி காலத்துல பெரியவங்களை பார்ப்பாங்க, எல்லாரையும் அனுசரிச்சு நடப்பாங்கனுதான். அண்ணின்றவங்க அம்மாக்கு சமம். உன் கல்யாணத்துக்கப்புறம் என்னைக்காவது ஒருநாள் அத்தைகிட்ட அன்பா பேசியிருப்பியா? அத்தை வயித்துல அருள் இருக்கும்போது உன்னோட இயல்பான உறவு இருந்திருந்தா இங்க பிரசவம் பார்க்க வந்திருப்பாங்க. நீ பார்ப்பன்ற நம்பிக்கையை அப்பாக்கு இருந்திருந்தா அத்தையை வரவச்சிருப்பார்.”
அன்று உண்மையில் அண்ணாமலை கேட்டார்தான், நமக்கு இப்போதான் கல்யாணம் ஆகியிருக்கு, பிரசவம் பத்திலாம் எனக்கேதும் தெரியாது, எதாவது அபத்தமாகிடுச்சினா என் மேல குறை வரும் என்று ஒட்டாமல் பேச, இப்படிபட்ட மனைவியிடம் அழைத்து வந்து பிரசவம் பார்த்தால் இன்னும்தான் தனம் மனம் நொந்து போகுமென வேதனையோடு அமைதியானார் அண்ணாமலை.
அன்று நடந்ததை நேரில் பார்த்தது போல் யூகித்து பேசும் மகனுக்கு பதிலளிக்க முடியாமல் மோகனா தடுமாற, “சொத்து பிரச்சனை வராததுக்கு முன்னாடிலயிருந்தே அத்தைகிட்ட ஒட்டாம இருந்திருக்க. அப்பாவை பெத்தவங்களையும் நீ பார்க்கல, கூடப்பிறந்தவங்களையும் பார்க்கல. அப்புறம் எப்படி உன் வீட்டுல வந்து சோறு திண்பாங்க?” என்றான் கடுப்பாக.
“நீங்க ஏன்ப்பா அமைதியா இருக்கிங்க? உங்களுக்கும் பவ்யாவை” எனும்போதே, “மகாலஷ்மியை பிடிக்காம போகுமா? உனக்கு பவ்யாவை பிடிச்சது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமாத்தான் இருக்கு பார்த்திபா, ஆனா உன் அம்மா குணத்துக்கு அவங்க பொண்ணு கொடுப்பாங்களானுதான் யோசனையா இருக்கு” என்றார்.
தந்தையின் பதிலில் பெரும் நிம்மதிகொண்டு அன்னை முகம் பார்க்க, மோகனா முகம் அவமானத்தில் கன்றியிருந்தது. தாள முடியாமல், “ஒருத்தியை மனசுல நினைச்சிட்டு வேற பொண்ணை கட்டிக்க முடியுமாம்மா? என் ஆசையை விட வறட்டு கௌரவமும் பிடிவாதமும்தான் உனக்கு முக்கியமா?” என்றான் ஆற்றாமையோடு.
தன் சம்மதத்தை எதிர்பார்த்து அருணாச்சலமும் கல்யாணியும் தன்னையே பார்த்திருக்க, “அதான் மொத்த குடும்பமும் முடிவு பண்ணிட்டிங்களே? இனி நான் சொல்ல என்ன இருக்கு?” என்றார் வேறு வழியில்லாமல்.
ஷப்பா என நிம்மதியானவன், “எல்லாரையும் விட உன் சம்மதம்தான் ரொம்ப ரொம்ப முக்கியம்னு அர்த்தம்” என்றான் இலகுவாக.
“போடா” என நம்பாமல் முறைக்க, “நிஜம்மாம்மா. யாருக்கு எப்படின்னாலும் நான்னா உனக்கு உயிர்தானே? உன் சம்மதம் இல்லாம நான் எப்படி கல்யாணம் செய்துப்பேன்?” என்றான் கெஞ்சலாக.
யார் சொன்னாலும் அவளை விடமாட்டான் என பவ்யாவை ஏற்றுக்கொள்ள மனதளவில் தயாராக, அன்னையைப் புரிந்தவனாக “நாளைக்கு போய் பேசலாமா?” என்றான் ஆவலாக.
“நாளைக்கேவா?” என முறைக்க, “அங்க பிரச்சனை ஆகிடுச்சும்மா, அருள் அவளை எதாவது சொல்லுவாரோனு டென்ஷனா இருக்கு” என்றான் கவலையாக.
“எதுக்கு சொல்லனும்? உனக்கு கொடுக்க கசக்குதாமா?” என்றார் நொடிப்பாக.
“திரும்ப மலையேறாதம்மா, படிக்கிற பிள்ளைகிட்ட நானும் அப்படி பேசியிருக்கக்கூடாதுதானே? ஒரு அண்ணனா கோபம் வரத்தானே செய்யும்?”
படிக்கிற புள்ளையை எதுக்கு எல்லா அழைப்புக்கும் அனுப்பி விடனும்? அதனாலதானே மகன் மயங்கிட்டான் என மோகனா மனதோடு பொறும, “என்னடா பேசின?” எனப் பதறினார் அண்ணாமலை.
“தப்பா ஏதும் பேசலப்பா, நல்லா படி, டிகிரி முடிச்ச பின்ன பொண்ணு கேட்டு வரேன்னுதான் சொன்னேன். அதை கூட மனசுல வச்சிக்க தெரியாம எல்லார்கிட்டயும் சொல்லி வச்சிருக்கா” என்றான் சிறு கோபத்தோடு.
“பிடிச்சா பெரியவங்ககிட்டதான சொல்லனும்? அதை விட்டுட்டு வயசு பிள்ளைகிட்ட இப்படி பேசலாமா பார்த்தி?” என்றார் கல்யாணி.
வேற எவனும் முந்திட்டா என்ன பண்ணனு சொல்லிட்டேன் என நினைத்தவன், “அத்தை பொண்ணுன்ற ஆர்வத்துல சொல்லிட்டேன், நல்லா மாட்டிவிட்டுட்டா சித்தி” என்றான் பாவமாக.
கல்யாணி, “அண்ணி உனக்குத்தான் சப்போர்ட் பண்ணும், கவலைப்படாத பார்த்திபா” என தேற்றினார் மகனை.
பவ்யாவை ஏதும் திட்டுவாரோ? அருளுக்கு பயந்து எனக்கு விருப்பம் இல்லை என்றிடுவாளோ? என்ற பதட்டத்தோடு எப்பொழுது விடியும் என பார்த்திருந்தான் பார்த்திபன்.
*** *** *** *** ***
அதிகாலை ஐந்து மணிபோல் சிவப்ரியா கண்விழிக்க, எழ முடியாதபடி அணைத்துப் படுத்திருந்தான் அருட்செல்வன். மெல்ல அவனின் கையை விலக்கிவிட முயற்சிக்க, இன்னும் நன்றாக நெருங்கி சேர்த்தணைத்தான் தூக்கத்தோடே.
“ரெஸ்ட்ரூம் போகனும் மாமா” என சிணுங்க, அவளின் அழைப்பில் வியந்து விழித்தவன், நிறைந்த பார்வை பார்த்து “சீக்கிரம்” என்று விடுவித்தான்.
“கண்ணை மூடுங்க” என இவள் சிணுங்க, “ம்” என கண்ணை மூடினான் புன்னகையோடே. அருகிலுள்ள டவலை எடுத்து நைட்டிமேல் போர்த்தியபடி குளியலறைக்குள் ஓடினாள்.
அவஸ்த்தைக்காக சென்றவளிற்கு குளிக்க வேண்டும் போல் இருக்க, குளித்து டவலால் உடலை போர்த்தியபடி மெல்ல எட்டிப்பார்க்க அருட்செல்வன் உறங்கிக்கொண்டிருந்தான்.
கபோர்டிலிருந்து உடையை எடுத்தவள் மீண்டும் குளியலறைக்கே சென்று மாற்றி வந்து தலையை துடைத்தபடி வெளியே வந்தாள். உடை மாற்றும்போது இரவின் சம்பாசனைகள் வலம் வர, உடை மாற்றி வந்தவளிற்கு உறங்குபவனின் முகம் காணவே கூசியது.
சத்தமின்றி கதவை திறந்து அறையிலிருந்து வெளியே வர, அந்த நேரம் கிச்சனில் வெளிச்சம் இருக்கவே அங்கே சென்றாள்.
“இந்த நேரத்துல என்ன பண்ணிட்டிருக்கிங்க அத்த?” என்ற குரலுக்கு திடுக்கிட்டு விழித்தார் பவானி.
அடுப்பில் பால் காய்ந்து கொண்டிருக்க, “பவ்யாக்கு உடம்பு இன்னும் சரியாகலயா? அவளுக்குத்தான் காபி வைக்கிறிங்களா?” என்றாள் அக்கறையாக.
சிவாவிடம் சொல்லலாமா என பவானி யோசனையோடிருக்க, “என்ன யோசனைல அத்தை இருக்கிங்க? முகமெல்லாம் சோர்ந்திருக்கு? பவ்யாக்கு ஏதும் பிரச்சனையா? பவ்யா முகம் சரியில்லனு அவரும் வருத்தப்பட்டார்” என்றாள் தவிப்போடு.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.