“டீ வேணும்தான், ஆனா அதுக்கு முன்ன பவ்யாக்கு என்ன பிரச்சனை சொல்லுங்கத்த” என்றாள்.
தற்போது சொல்லவில்லை என்றாலும் அருட்செல்வன் எழுந்ததும் பவ்யாவிடம் விசாரிப்பான். அதோடு நேற்றிரவு சிவப்ரியா தந்தையிடம் அனைத்தும் சொல்லியிகிற்று, யார் மூலமாவது தெரியத்தான் போகிறது, நாமே சொல்லிடலாம் என, “டீ வைக்கிறேன், குடிச்சிட்டே பேசலாம்” என்று டீ வைத்து எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தனர்.
“லைட் போட்டா எல்லாரும் எழுந்துப்பாங்க”
“லைட் வேணாம்த்தை, உக்காருங்க” என சிவப்ரியா அமர, “முடியை காய வைக்கல?” என்றார்.
“அச்சோ அத்தை, ஏன் சுத்தி வளைக்கிறிங்க, முதல்ல பவ்யாக்கு என்னாச்சு சொல்லுங்க ப்ளீஸ்”
அச்சோ பார்த்திண்ணா ப்ரப்போஸே பண்ணிட்டியா? என பதறியவள், இவளும் இதை அத்தையிடம் சொல்லிட்டாளே? அவருக்கு தெரிய வரும்போது என்னாகுமோ? என்ற கவலையோடு, அத்தை மாமாக்கு பார்த்திண்ணாவை பிடிக்கலயோ என்ற கவலையும் சேர்ந்துகொள்ள, “பார்த்திண்ணா ரொம்ப நல்லவங்கத்த, பவ்யாவை நல்லா பார்த்துப்பாங்க. உங்க பயம் தேவையில்லாதது.” என்றாள் தவிப்போடு.
பவானி முகம் சோர்ந்தேயிருக்க, பிறகுதான் யோசித்தவள், “பவ்யாக்கு பார்த்திண்ணாவை பிடிக்கலயா?” என்றாள் கலக்கத்தோடு.
“நானும் அவரும் விரும்பிதான் கல்யாணம் செய்துக்கிட்டோம். எங்க வீட்டுலயும் அவ்வளோ வசதி கிடையாது, இவர் விருப்பத்தை மாமாகிட்ட (சங்கர்) சொல்லி மாமாதான் எங்களுக்கு கல்யாணம் செய்து வச்சார்.
நாங்க ஏழைன்றதால அத்தைக்கு இந்த கல்யாணத்துல விருப்பமேயில்ல, இவரும் பெருசா ஏதும் சம்பாதிக்கல, நிரந்தர தொழில் கிடையாது. கல்யாணத்துக்கப்புறமும் வேலையில்லாம இருந்தா பார்க்குறவங்க அசிங்கமா நினைப்பாங்கனு மாமாவோட உரக்கடைல வேலைக்கு வச்சிக்கிட்டார்.
இவருக்கு அந்த வேலையும் பிடிக்கல, ஒரு நாள் கடைக்கு போனா இரண்டு நாள் போகமாட்டார். மாமா ஏதும் சொல்லமாட்டாங்க. ஆனா அத்தை அவர்மேல உள்ள கோபத்தை என்கிட்ட காட்டுவாங்க.
இப்படியே வாழ்க்கை இருக்காது, காலம் வரும்போது நாகராஜ் இவரை விட அதிகமா சம்பாதிப்பார்னு தனம் அக்காதான் என்னை சமாதானம் செய்வாங்க.
பதினைஞ்சு வருசமா மாமா உழைப்புலதான் மொத்த குடும்பமும் ஓடுச்சு. கூடப்பிறந்தவனுக்கு இவ்வளோ பார்க்குற, உன் தங்கைக்கு என்னடா செய்யப்போறனு அத்தை கேட்டாங்க.
உன் விருப்பம் என்னனு சொல்லும்மா, செய்துடலாம்னு மாமா சொன்னாங்க, நாலு ஏக்கராவை இரண்டா பிரிச்சி பொண்ணுக்கு கொடுக்க சொன்னா கொடுத்திடுவியானு அத்தை கேட்டாங்க.
கவிதாக்கு (சங்கரின் தங்கை) இல்லாதது என்னம்மானு மாமா ஒத்துக்கிட்டாங்க. நான் சும்மாதான் சொன்னேன், கஷ்டம்னு வரும்போது உன்னால முடிஞ்சதை கொடுத்து கூடப்பிறந்தவங்க இருக்காங்கன்ற நிம்மதியை காலத்துக்கும் கொடுத்தா போதும்னு அத்தை சொன்னாங்க.
அந்த நேரம் நாத்தனார் வீட்டுக்காருக்கு உடம்பு முடியாம இருந்ததால, நீ சொன்னதுக்காக மட்டும் இல்லம்மா, கவிதா வீட்டக்காரனுக்கு முடியாம இருக்கு, இனி உழைக்க முடியுமா தெரியாது. மனுச மனம் எப்போ எப்படி மாறும்னே தெரியாது
அவங்களுக்கு வருமானம் இல்லாதப்போ நான் கொடுக்குற நிலைமைல இருக்கேனா இல்லையோ? நிலத்தை கொடுத்தா பிழைச்சுக்கும், நல்ல விசயத்தை தள்ளிப் போடக்கூடாதுனு அந்த மாசமே இரண்டு ஏக்கரா காட்டை வித்து, அவங்க ஊர்ல காடு வாங்கி கொடுத்தார்.” என பவானி சொல்ல, தனது மாமனை நினைத்த சிவப்ரியா மனம் பெருமையில் ஜொலித்தது.
மாமா எந்த குறையுமில்லாம குடும்பத்தை பார்த்துக்கிட்டாலும் இவருக்கு நாம சம்பாதிக்கலயேன்ற வருத்தம் இருந்துட்டே இருக்கும், அருள் இரண்டாவது வருசம் படிச்சிட்டிருக்கும்போது நிலத்துக்கு குத்தகை தேதி முடியவும் திரும்ப அக்ரிமண்ட் போட கேட்டாங்க.
குத்தகைக்கு விட வேணாம்னு அருள் கோழிப்பண்ணை வைக்க யோசனை சொன்னான். தெரியாத தொழில்ல எப்படி இறங்குறதுனு மாமா யோசிச்சார். இந்த தொழில் உனக்கில்லப்பா, சித்தப்பாக்கு சொன்னேன், நம்ம நிலத்துலயே சின்னதா ஆரம்ப்பிபோம்.
கோழி வளர்ப்பு எப்படினு நான் சொல்றேன், படிக்கிறதை ப்ராக்டிகலா செய்து பார்த்த மாதிரியும் இருக்கும், சித்தப்பாக்கு தொழிலும் அமைஞ்சிடும்னு நம்பிக்கையா பேசினான்.
இந்த யோசனை இவருக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு, சந்தோசத்தோட சம்மதிச்சார். நாமக்கல்ல போய் பண்ணைக்கோழி, நாட்டுக்கோழினு இரண்டுமே வாங்கி வந்தாங்க. வெயில் நேரத்துல கோழிக்கு அம்மை வராம பார்க்குறது, என்ன தீணி போடனும்னு அருள் சொன்னமாதிரி செய்தார்.
முதல் இரண்டு வருசம் வளர்த்து வித்துட்டுதான் இருந்தோம். இங்க உயிரோட கோழி எவ்வளோக்கு வாங்குறாங்க, கறி கிலோ எவ்வளோக்கு விக்குறாங்கனு அருள் விசாரிக்க சொன்னான். இவர் விசாரிச்சதும் நல்ல லாபம் பார்க்குறாங்கனு தெரிய வந்தது, நானே கறியும் போடறேனு கேட்டார், உங்க விருப்பம் சித்தப்பானு அருள் சொல்லிட்டான்.
கறியும் போட ஆரம்பிச்சதுக்கப்புறம் வருமானம் அதிகமானது. உழைப்பை போடுற அளவுக்கு இவருக்கு வரவு செலவுல விபரம் பத்தல, எனக்கும் அவ்வளோலாம் தெரியாது. தனக்கா அதுல விபரமா இருப்பாங்க. வரவு செலவெல்லாம் அக்காதான் பார்த்துப்பாங்க.
இப்போ ஏழு வருசமா அவருக்கு நிற்க நேரமிருக்கிறதில்ல, வியாபாரத்தை இன்னும் எப்படி விரிவாக்கலாம்னு எந்த நேரமும் பண்ணை பத்தின நினைப்புதான். அருள் இங்கயே வேலைக்கு வந்தபின்ன எங்களை அத்தை எதாவது சொல்லிட்டா போதும், சோறாக்க விடாம இரண்டு பேரையும் பண்ணைக்கு கூட்டிட்டு போய்டுவான். மாமாவும் இவரும்தான் சமையல், பாத்திரம் தேய்கிறதுனு எல்லாமும் செய்வாங்க” என்றார் பாவமாக.
“சென்னையில வேலைல இருக்கும்போது, சம்பளம் இல்லாம அருளுக்கு நிறைய வருமானம் கிடைச்சது. மாமா கூட கொஞ்ச நாள் இருந்துட்டு வாடானு சொன்னார். எங்களை பிரிஞ்சிருக்க முடியாம இங்கையே வேலையை மாத்திக்கிட்டு வந்துட்டான்.
இவ்வீட்டு ஆண்களை நினைத்த சிவப்ரியா முகம் மலர்ந்திருக்க, “பவ்யாப்பா நாலு பேரு மதிக்கிற அளவுக்கு இன்னைக்கு இருக்காருனா அதுக்கு முழு காரணமும் அருள்தான். எங்களுக்கு எல்லாமும் அருளும், அக்கா மாமாவும்தான் சிவா” என கண்ணீர் விட்டார் பவானி.
“அச்சோ அத்தை, சந்தோசமான விசயம் சொல்லிட்டு எதுக்கு அழறிங்க?” என பதறினாள் சிவப்ரியா.
அருள் கல்யாணத்துல கூட உன் பெரியம்மா எங்ககிட்டலாம் பேசவேயில்ல, அருளும் இதை கவனிச்சிருப்பான் போல, அவங்களைப் பத்திலாம் யோசிக்காதிங்க சித்தினு சொன்னான். அருள் சொல்லவும் நாங்களும் அதை பெருசா எடுக்கல. ஆனா இப்போ பயமாயிருக்கு” என்றார் கவலையாக.
மோகனாவை நினைத்து பெண் கொடுக்க பயந்துக்கிறாங்க எனப்புரிந்து, “பெரியம்மா கொஞ்சம் சுயநலம்தான் அத்தை, ஆனா பெரியப்பாவை மீறி பெரியம்மா எதையும் செய்ய முடியாது. பார்த்திண்ணாவும் ரொம்ப நல்லவங்க” என்றாள் புரிய வைக்கும் நோக்கோடு.
“அது தெரியும். ஆனா மாமாக்கும் அருளுக்கும் மரியாதை கொடுக்காத இடத்துல பொண்ணு கொடுக்க இவர் விரும்பமாட்டார், அதனால இது சரிவராதுனு பார்த்திகிட்ட நீ சொல்லு சிவா”
சிவப்ரியா அதிர்ந்து விழிக்க, “பவ்யாவை கட்டி கொடுத்தபின்ன அருளுக்கும் பவ்யாக்கும் உறவில்லாம போய்டுமோனு எனக்குமே பயமாத்தான் இருக்கு” என்றார்.
“அப்படிலாம் ஆகாது அத்தை, பார்த்திண்ணா அப்படி விட மாட்டாங்க. தப்புனா யாராயிருந்தாலும் தட்டி கேட்பாங்க. அதேநேரம் உறவுக்குள்ள ஈகோ பார்க்கமாட்டாங்க” என தவிப்போடு விளக்க, தனம் வந்தார்.
“அத்தை” என சிவப்ரியா தவிக்க, “பவ்யா விசயம் பேசிட்டிருந்திங்களா?” என்றார்.
“பார்வதியை கட்டிக்கொடுக்கும்போது அருள் படிச்சிட்டுதான் இருந்தான், நல்ல குடும்பமா? குணாளோட அம்மா நல்ல மாதிரியானு அப்போவே அத்தனை கேள்வி கேட்டான். மோகனாவைப் பத்தி நல்லா தெரிஞ்சதால அருள் என்ன சொல்வானோ தெரியல சிவா.
பார்த்தி விருப்பத்தை என்கிட்ட சொன்னதுக்கே கோபப்பட்டான். பவ்யாகிட்ட சொன்னது தெரிஞ்சா என்ன சொல்வானோ? அருளுக்கு பிடிக்கலனா இந்த கல்யாணம் நடக்க வாய்ப்பே இல்ல” என்றார் வருத்ததோடு.
“என்ன? பவ்யாகிட்ட பேசினானா?” என்ற அருளின் கோபக்குரலில் பயந்துபோனாள் சிவப்ரியா.
“பவ்யா” என குரல் கொடுக்க திடுக்கிட்டு விழித்தாள் பவ்யா.
சங்கர், நாகராஜனும் கூட விழித்து ஹாலுக்கு வந்தனர். அருள் பவ்யா அறைக்கு போக, பின்னோடே அனைவரும் சென்றனர். “பொறுமையா பேசு அருளு” என்றார் சங்கர்.
“அண்ணா” என கண்கலங்க, “எப்போ பேசினான்?” என்றான்.
“நீ போய் முகம் கழுவிட்டு வாடா” என்று மகனை ஹாலுக்கு அழைத்து வந்தார் சங்கர்.
“படிக்கிற பிள்ளைகிட்ட என்ன பேச்சுப்பா இது? இவன்லாம் என்ன பாடம் கத்து தரானோ? எவ்வளோ தைரியம் இருந்திருந்தா பவ்யாகிட்ட பேசியிருப்பான்?” என பொறுமியவன், “இவன்கிட்ட சொத்திருந்தா பொண்ணை கொடுத்திடுவாங்களா? அவன் அம்மாக்கு மரியாதைனா என்னானு தெரியுமா? உறவுகளோட அருமை தெரியுமா?” என்றான் கோபத்தோடு.
அனைவரும் அமைதிகாக்க, தன்னிடம் எதையும் மறைக்காத தங்கை இதை ஏன் மறைத்தாள்? எனில் விருப்பமிருக்குமோ என யோசித்தவன், “போய் பவ்யாவை கூட்டிட்டு வா” என சிவப்ரியாவிடம் சொல்ல, அவளே வந்தாள்.
“என் கல்யாணம் முடிஞ்ச பின்ன சிவா வீட்டுக்கு வரும்போது கூட சந்தோசமாத்தான் வந்த, அங்கயிருந்து ஈவ்னிங் நம்ம வீட்டுக்கு கிளம்பும்போது உன் முகம் சரியில்ல, அப்போ அன்னைக்கு மதியம்தான் எதோ சொல்லியிருக்கான். என்ன சொன்னான்?” என்றான் அழுத்தமாக.
சரியாய் கணித்து கேட்கும் அண்ணிடம் மறுக்க முடியாமல், “டிகிரி முடிச்சதும் பொண்ணு கேட்டு வருவேன், என்னை ஏமாத்திடாதனு சொன்னாங்க” என்றாள் கேவலோடு.
எத்தனை பெரிய விசயத்தை சொல்லியிருக்கிறான்? தங்கை தன்னிடம் சொல்லவில்லையே என்ற கோபத்தோடு “நீ என்ன சொன்ன?” என தீயாய் முறைக்க, “நான் ஒன்னும் சொல்லல, ஷிவாங்கி ரூம்க்குள்ள போய்ட்டேன்” என்றாள் பயத்தோடு.
சம்மதம் தெரிவிக்கவில்லை எனும் தோரணையில் பவ்யா சொல்லியிருக்க, இப்படி பேசாத, எனக்கு பிடிக்கலனு பார்த்திபனிடம் தங்கை சொல்லலையே, தவிர தன்னிடம் மறைக்க போராடியிருக்கிறாள், அதனால்தான் தன் முன் வரவில்லை என கணித்தவன், “அன்னைக்கே ஏன் டல்லா இருக்கேனு கேட்டேன்தான? ஏன் சொல்லல?” என்றான்.
பவ்யா தடுமாற, “கேட்குறேன்ல?” என்ற உயர்ந்த குரலோடு பவ்யாவிடம் நெருங்க, “அ… அன்னைக்கு அவனை அடிச்ச மாதிரி இவங்களையும் அடிப்பிங்களோனு பயமாகிடுச்சு ண்ணா, அண்ணியோட அண்ணனை அடிச்சிங்கனா அண்ணிக்கு என்மேல வெறுப்பாகிடும்னு பயந்துட்டேன், சாரிண்ணா” என அழவே, “ராஸ்கல்… மயக்கிட்டான்” என முணுமுணுத்தான் ஆத்திரத்தோடு.
விளக்கை ஒளிர விட்ட சங்கர், “பவ்யாவை புரிஞ்சிடுச்சா?” என்றார் சிரிப்போடு.
“அவனுக்கு போன் போடுங்கப்பா” என பல்லை நெறித்தான் அருட்செல்வன்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.