“மணி ஆறுதான்ப்பா ஆகுது, நீ முதல்ல கோப முகத்தை மாத்து, பவ்யா சிவா இரண்டு பேரும் பேயறைஞ்ச மாதிரி இருக்காங்க” என்றார் சங்கர்.
“பவ்யாவை கூட்டிட்டு உள்ள போ” என்றான் சிவப்ரியாவிடம்.
அருள் என்ன முடிவெடுப்பான் என சிவப்ரியாவிற்கு தெரிந்துகொள்ள வேண்டியிருக்க, “பவ்யா நீ உள்ள போ” என்றாள்.
அருள் முறைக்க, “ப்ச், எல்லாம் நல்ல முடிவாத்தான் இருக்கும், நீ பவ்யாவோட போய் அவ மனசுல என்னயிருக்குனு கண்டுபிடி, இங்க என்ன நடக்குதுனு நான் சொல்றேன்” என கிசுகிசுத்தார் தனம்.
அருள் சம்மதித்தால் பவ்யா சம்மதித்திடுவாள் என்பதால், அருளின் முடிவே முக்கியமாக தோன்ற “அத்தை” என்றாள் பாவமாக.
சங்கர், “பவ்யா போய் டீ வைடா, அப்படியே உன் அண்ணிக்கும் டீ எப்படி வைக்கனும்னு சொல்லிக்கொடு” என்றதும், பெட்ரூம் செல்வதற்கு கிச்சன் எவ்வளவோ மேல் என பவ்யாவை அழைத்துக்கொண்டு சிவப்ரியா உள்ளே போனாள்.
“எத்தனை பார்த்து கொடுத்தாலும் ஒவ்வொரு குடும்பத்துலயும் இப்படி யாராவது இருக்கத்தான் செய்வாங்க. ஏன் நம்ம குடும்பத்துல உன் ஆயா இல்லையா? எல்லாத்தையும் அரைச்சு கூலாக்குற அத்தனை பல்லுகளுக்கு நடுவுலதான் ஒத்த நாக்கு பலகாலம் பிழைச்சிட்டிருக்கு.
மோகனா ஒரு ஆளைத்தவிர மத்த எல்லாரும் பவ்யாவை பொண்ணாத்தான் பார்ப்பாங்க. முக்கியமா பார்த்தி ரொம்ப நல்ல பையன். இத்தனை நிறை இருக்கும்போது ஒரு குறையை பெருசா நினைக்க வேணாம்” என்றார் தன்மையாக.
மோகனாவை பிடிக்கவில்லை என்பதோடு, சொத்துக்காக பெண் கொடுத்திருவார்கள் என்ற பார்த்திபனின் நினைப்பும் முள்ளாய் குத்த, அருள் முகம் சமாதானம் ஆகவில்லை. “சிவாவை நீ கட்டிக்கலனா நானும் இதுக்கு சம்மதிச்சிருப்பேனா தெரியாது, ஆனா இப்போ சம்மந்தி ஆகிட்டேன், நல்லது கெட்டதுக்கு போகாம இருக்க முடியாது.” என்றார் பொறுமையாக.
அருளுக்கு இவையெல்லாம் ஒரு காரணமேயில்லை. தற்போது பவ்யாவிற்கு அவளின் விருப்பம் புரியவில்லை, பின்னால் புரியும்போது பார்த்திபனை நினைத்து வருந்தினால் தன்னால் தாங்க முடியுமா என ஆழ்ந்த யோசனையிலிருந்தான்.
வார்த்தையை விடக்கூடாதென்பதில் மகன் எப்பொழுதும் முனைப்போடிருப்பான், அதோடு பவ்யா மனம் வருந்தும்படி நடக்கவேமாட்டான் என்றுணர்ந்த சங்கர் அருட்செல்வன் யோசிக்க நேரம் கொடுத்து, தம்பியை பார்த்தார்.
நாகராஜ் முகமும் தவிப்பிலிருக்க, “உனக்கு விருப்பமில்லனா வேணாம் நாகா” என்றார்.
“நம்மளை மதிக்காதவங்க வீட்டுக்கு பொண்ணை கொடுக்கனும்னு நினைக்கும்போது மனசு அறுக்குது. ஆனா பவ்யாக்கு விருப்பம் இருக்கும்போலயே” என வருத்தத்தோடு சொல்லி, “பவ்யாக்காக நான் யோசிக்கிறதை விட நீயும் அருளும் ரொம்ப யோசிப்பிங்க. நீங்க பார்த்து முடிவு பண்ணுங்க” என்றார் நாகராஜ்.
சங்கர் பவானியை பார்க்க, “இரண்டு நாள்களாக மகள் படும்பாட்டை பார்க்கிறார் அல்லவா? நல்லதோ கெட்டதோ… பார்த்திபனுக்கே கொடுத்திட விருப்பம் கொண்டதால், “பவ்யா விருப்பமும் உங்க விருப்பமும் எதுவோ அதையே செய்ங்க” என்றார்.
நாகராஜ் பவானி இருவருமே தன்னைப் போலவே பவ்யாவின் விருப்பத்தைதான் பார்க்கிறார்கள். எதிர்பார்த்த்துதான், திருமண விசயத்தில் இதுதான் சரியும் கூட. அனைத்தும் புரிகிறது. ஆனாலும் மனம் முரண்டியது. எனவே திருமணத்தை தள்ளிப் போடலாம் என முடிவெடுத்தான் அருட்செல்வன்.
சங்கர், பவிம்மா இன்னுமா டீ வைக்கிற?” என குரல் கொடுக்க, “தோ வரேன்ப்பா” என வெளியே வந்தாள். சிவப்ரியா கையில் டீ இருக்க… தனம், “ஊத்தி கொடுக்கவாவது தெரியுமா?” என்றார் கிண்டலாக.
அத்தையின் சிரித்த முகம் கண்டு, ஓகே வா என கணவனை காண்பித்து கண்ஜாடை செய்ய, கவனித்த அருள் “டீயை ஊத்துடி, எழுந்து அரைமணி நேரமாகுது ” என கடுகடுத்தான் மனைவியை.
டீயை ஊற்றி அனைவருக்கும் கொடுத்து பவ்யாவிடமும் கொடுக்க, வாங்கியவள் அன்னையை பார்த்திருந்தாள். “டீ குடி பவி” என்று தனம் சொல்ல, “ஹான் பெரியம்மா” என ஒரு முழுங்கு குடித்தவள் முகம் அஷ்டக்கோணலானது.
“என்ன?” என சிவப்ரியா கிசுகிசுக்க, “டீ நல்லாயில்ல, சக்கரை ரொம்ப அதிகம், அண்ணாக்கு இப்படி பிடிக்காது” என பாவமாய் முணுமுணுத்தாள் பவ்யா.
சிவப்ரியா, “நான்தான் சொன்னேன்ல? எனக்கு டீலாம் வைக்க வராதுனு, நீதான் ட்ரை பண்ண சொன்ன? இப்போ குறை சொன்னா?” என்றாள் சத்தமாக.
என்ன? பவ்யாவை காப்பாத்துறியோ? என்பதாய் அருட்செல்வன் முறைக்க, “தெரியாம நிறைய சக்கரை போட்டுட்டேன், சாரி. அதை கொடுங்க, பவ்யாவை வேற வைக்க சொல்றேன்” என கணவன் முன் நின்றாள்.
ஒரே முழுங்கில் குடித்தவன், “காலேஜ் என்னைக்கு போகனும் பவி” என்றான்.
அனைத்தும் தெரிந்த பின்னும் கோபமில்லாமல் அருட்செல்வன் பேசியது மொத்த பாரத்தையும் காணாமல் போக செய்திருக்க, “நாளைக்கு வரைக்கும் லீவ் போட்டிருந்தேண்ணா, ஆனா இன்னைக்கே கூட்டிட்டு போய் விடுறிங்களா? முக்கியமான க்ளாஸ் இருக்கு” என்றாள் வரவழைத்த இயல்போடு.
“வேணாம், நீ போய் புக்ஸ்லாம் எடுத்து வை, அப்புறம் பாதி தூரம் போனபின்ன அதை மறந்துட்டேன், இதை மறந்துட்டேனு புலம்புவ” என்றான் இவனும் இயல்பாக.
பவ்யா உள்ளே செல்லவும், “என்ன அருள் முடிவெடுத்த? பவானி டென்ஷனா இருக்கா பாரு” என்றார் தனலஷ்மி.
“பார்த்தி அம்மாக்கு கண்டிப்பா இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்காதும்மா, பார்த்தி மேலயும் எனக்கு வருத்தமும் கோபமும் இருக்கு. இப்போதைக்கு பவ்யா படிப்பை பார்க்கட்டும் இனி பவ்யாகிட்ட இதுபத்தி யாரும் பேசாதிங்க” என்று தனதறைக்குள் சென்றான் குளிப்பதற்காக.
பவ்யாவின் விருப்பம் தெரிய அவளின் அறைக்கு செல்ல சிவப்ரியா எத்தனிக்க, “முடியை காய வை சிவா, எவ்வளோ நேரம் துண்டை கட்டிட்டு இருப்ப?” என அதட்டினார் தனம்.
“பவ்யாகிட்ட பேசிக்கிட்டே உலர்த்துறேன்த்த” என சலுகையாய் சொல்ல, “அருள் என்ன சொல்லிட்டு போனான்?” என்றார் முறைப்பாக.
சிவப்ரியா முகம் சுருங்க, “அருள் யோசிச்சிதான் சொல்வான். பவ்யாகிட்ட இதுப்பத்தி பேச வேணாம்னு சொன்னான்ல? போய் முடியை உலர்த்து” என்றார் கட்டளையாக.
சிவப்ரியா வாசலுக்கு வர, காரிலிருந்து அண்ணாமலையும் அருணாச்சலமும் இறங்கினர். “அப்பா… வாங்க வாங்க. என்ன இந்த நேரத்துல? என்னை பார்க்க தோணுச்சா?” என்றாள் ஆசையாக.
“ஆமாடா” என மகளின் தலைகோத, கார் சத்தம் கேட்டு சங்கரும் தனலஷ்மியும் வெளியே வந்தனர்.
“வாங்க” என சங்கர் சொல்ல, அருணாச்சலத்திடம் “இந்த நேரத்துக்கே வரனுமா? அருள்கிட்ட பேசிட்டு நானே போன் செய்திருப்பேனே?” என்றார் தனம்.
“ப்ச் தனம்” என மனைவியை அடக்கி, “முதல்ல உள்ள வாங்க” என்றார் சங்கர்.
“அதான் பொண்ணை கொடுத்துட்டாங்களே, இன்னும் எதை சாதிக்க காலங்காத்தால வந்துருக்கானுங்க” என இருவருக்கும் கேட்கும்படியே முணகினார் சோலையம்மாள்.
“ம்மா” என அன்னையை அதட்டி, “வாங்க” என்றார் சங்கர்.
அனைவரும் உள்ளே செல்ல, நாகராஜன் அமைதியாக இருக்க, “வாங்க வாங்க” என வரவேற்றார் பவானி.
“டீ வைம்மா” என்று பவானியிடம் சங்கர் சொல்ல, உள்ளே சென்ற பவானிக்கு அத்தனை சந்தோசம். பார்த்திபனைப் பற்றி நல் மதிப்பு இருப்பதாலும், அருள் அவ்வீட்டில் பெண்ணெடுத்திருப்பதால் பவ்யாவிற்கு ஒருகுறையும் வராமல் மகன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையிலும் மகிழ்வோடு டீ வைத்து எடுத்து வந்தார்.
குளித்து வந்த அருட்செல்வனிற்கு பேரதிற்சி. இவர்களின் குரல் கேட்டபடி அவனின் அறையிலேயே இருந்தான். பவ்யாவேறு வீட்டில் இருக்கிறாள் என்பதால் கோபத்தோடு யோசித்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தான்.
“சிவா, அருள் குளிச்சிட்டானா பாரு” என்று தனம் சொல்ல தனதறைக்குள் வந்தாள்.
டவலோடுதான் அமர்ந்திருந்தான் ஆகையால் வெளியே செல்ல எத்தனிக்க, “பவ்யாவை உள்ளயே இருக்க சொல்லு, தேவைனா நான் கூப்பிடுவேன்” என்றான்.
“மாமா” என தவிப்போடு கணவனை நெருங்க, “ப்ச் போடி” என்றான் முகம் பாராமல்.
சிவப்ரியா நின்றேயிருக்க, “பவ்யாக்கு பார்த்தியை பிடிச்சிருக்கு, அவனுக்காக இல்லைனாலும் என் தங்கைக்காக யோசிக்கமாட்டேனா?” என முறைக்க, சிவப்ரியா முகம் ஆனந்த தாண்டவமாட, மனைவி அழகை ரசிக்க முடியாத கடுப்பில், “வெளில போடி முதல்ல, உங்கப்பா எதாவது நினைக்கப்போறார்” என்றான் எரிச்சலாக.
“அதெல்லாம் நினைக்கமாட்டார்” என கட்டிலில் அமர, ‘நேரங்காலம் தெரியாம இவவேற இம்சை இம்சை’ என முணுமுணுத்தவன், “இரு கதவை தாழ் போடறேன்” என மிரட்டும் பாவனை செய்ய, “அச்சோ” என வெளியேறினாள் வேகத்தோடு.
உடைபோட்டு மீண்டும் கட்டிலில் அமர்ந்து கால்மணி நேரம் வரை யோசித்திருந்தான். இவர்கள் பேசும்விதம் சரியெனப்பட்டால் நாமும் சற்று நிதானிக்க வேண்டும். பவ்யாக்காக, நம்ம பவ்யா விருப்பத்துக்காக. என தன்னுள் சொல்லிக்கொண்டு வெளியே வந்தவன், “வாங்க” என்றான்.
அருட்செல்வன் இயல்பாய் வரவேற்றதில் அண்ணாமலை, அருணாச்சலம் இருவருக்கும் பெரு மகிழ்ச்சி ஏற்பட புன்னகைத்தனர்.
தனம், “இரண்டு நாளா பவ்யா டென்ஷன்ல இருந்ததால நேத்து நைட் நான்தான் அருணாக்கு போன் செய்தேன் அருளு, சின்ன பிள்ளைகிட்ட பார்த்தி பேசினது பரவால்லையானு கேட்டேன். அதான் காலைலயே வந்துருக்காங்க” என்றார்.
பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்போ ரொம்பத்தான் அக்கறை, அவங்கம்மாகிட்ட பேசாம இவங்களை அனுப்பி வச்சிருக்கான் என பார்த்தியை மனதில் திட்டியவன், “பவ்யாவை எப்படி பார்த்துக்கனும்னு எங்களுக்கு தெரியும்” என்றான்.
யாரோபோல் பேசுவதால்தானே இப்படி பதில் என, “மனசுக்குள்ள வச்சிட்டிருக்கிறதை விட வெளிப்படையா கேட்டுடலாம்னு வந்தேன் கண்ணு, பார்த்திக்கு பவ்யாவை பிடிச்சிருக்கு. எங்களுக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. பாப்பாக்கும் பிடிச்சிருந்து, உங்களுக்கும் விருப்பம்னா பேசி முடிவு பண்ணிடலாம்” என்று அருளிடம் சொல்லி சங்கர் நாகராஜைனையும் பார்த்தார் அண்ணாமலை.
உன் முடிவுதான் என்பதாய் அருளைப் பார்த்தார் நாகராஜன்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.