“நம்பர் தரவா?” என சிவப்ரியா ஆர்வமாக கேட்க, மனைவியை முறைத்தவாறு பார்த்திபனிற்கு அழைத்தான்.
அருட்செல்வன் அழைப்பென்றதும் மாணவர்களிடம் அனுமதி கேட்டு அழைப்பை ஏற்க, “விருந்துக்கு வரலைனு சொன்னியாம்” என்றான் கோபமாக.
“ஏங்க பளஸ் டூ ஸ்டூடண்ட்ஸ்க்கு க்ளாஸ் எடுக்குறேன்ங்க, அடிக்கடி லீவ் போட முடியாது” என்றான் தன்மையாக.
“இப்படி வேற நினைப்பிருக்கா உனக்கு? அடிக்கடிலாம் விருந்து வைக்க மாட்டோம். என்ன பண்ணுவியோ தெரியாது. லன்ச்சுக்கு வர” என்றான் கட்டளையாக.
“இல்லைங்க… அது…” என இவன் இழுக்க, “டேய் டேய் நடிக்காதடா” என பொய்யாய் கடிந்து, “பவ்யா காலேஜ்க்கு போயாச்சு. மரியாதையா வந்து சேரு” என்றான்.
“ஹைய்ய்ய்யோ… எப்படிங்க கண்டுபிடிச்சிங்க. சூப்பர்ங்க நீங்க” என பாராட்டி, “ஈவ்னிங் வரேன்ங்க” என்றான்.
இணைப்பை துண்டிக்க, “என்ன சொன்னார்?” என்றார் சங்கர்.
தந்தையின் மரியாதையான பேச்சில் அருட்செல்வன் ஊன்றிப்பார்க்க, “இனி பார்த்தி உன் மச்சான் மட்டுமில்ல அருளு, நம்ம வீட்டு மாப்பிள்ளை. மரியாதை கொடுக்குறதுதான் சரி” என்றார் சங்கர்.
“பார்த்திண்ணா வராங்களா?” என சிவப்ரியா ஆர்வமாக கேட்க, “ஈவ்னிங் வரானாம். அவனுக்கு என்ன பிடிக்குமோ அம்மாகிட்ட சொல்லு” என்றான்.
“அதை கொஞ்சம் சிரிச்சிட்டே சொன்னாதான் என்னவாம்?” என்க, “போடி” என கடுகடுத்து, “சமையலுக்கு வேண்டியதெல்லாம் வாங்கியாச்சாப்பா?” என்றான்.
“அதெல்லாம் நாகும் பவானியும் பார்த்துக்கிட்டாங்க” என்றார்.
பின்னே பார்வதி குணாளன் குழந்தைகளோடு வர, அவர்களோடு பேசிக்கொண்டிருந்தான். சிவப்ரியா அருள் பின்னோடே சுற்ற, பார்வதியை தனம் அழைத்த நேரம் கிடைத்த தனிமையில், “நைட் வராம இப்போ என்ன பசை மாதிரி ஒட்டிட்டிருக்க? போடி” என முணுமுணுத்தான் கடுப்போடு.
“அது அத்தையோடவும் சின்ன அத்தையோடவும் இப்போதானே பழகுறேன்? கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கலாம்னு நினைச்சா டைம் போனதே தெரியல மாமா. ஒரு மணிக்கு உள்ள வந்தா நீங்க நல்லா தூங்கிட்டிருந்திங்களா? நேத்து நைட்டும் தூங்காம, மதியமும் வேற தூங்கலயா? அதனால உங்களை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு சத்தமில்லாம ஓரமா படுத்துகிட்டேன்”
“அத்தையோட மட்டும்தான் புதுசா பழகுறியா?” என முறைத்தவனுக்கு இவளின் அருகாமை இம்சிக்க, இம்சை இம்சை என மனதினுள் கடிந்து, “அக்கா, உன்கிட்டயும் மாமாகிட்டயும் பேசனும்” என சற்று தூரத்தில் நின்றிருந்த பார்வதியை அழைத்தான்.
பார்வதி கணவனோடு வர, பவ்யாவை பார்த்திபனிற்கு கொடுப்பதாக முடிவு செய்ததைப் பற்றி பேசிகொண்டிருந்தான்.
மதியம் போல் அண்ணாமலை அருணாச்சலம் குடும்பத்தினர் வர சிவப்ரியா நேரம் இனிமையாக சென்றுகொண்டிருந்தது. கல்யாணி பார்வதியிடம் நலம் விசாரிக்கவே, இம்முறை பார்வதி சற்று இயல்போடு பழகினாள்.
பெண் எடுப்பதாக முடிவாகிவிட்டது, இனி விலகிப்போனால் பார்த்திபனோடு விரிசல் வரும் என பார்கவியும் விருந்திற்கு வந்திருந்தாள். “உன் புருசன் வரலையாம்மா?” என நாகராஜும், சங்கரும் இயல்பாய் நலம் விசாரித்தனர்.
பிறந்த வீட்டின் உறவுகள் தந்த வருகையில் மனைவி முகம் மட்டுமல்லாது அன்னையின் முகமும் பூரிப்பில் இருந்ததை கவனித்திருந்த அருட்செல்வனின் மனமும் பெருத்த நிம்மதிகொண்டது.
யாரிடமும் பகிரவில்லையென்றாலும் பிறந்த வீட்டின் பிரிவு தரும் துயரத்தை விஷேச நாட்களில் பலமுறை பார்த்திருக்கிறான். ஆனால் அன்று ஏதும் செய்ய முடியாத நிலைமாறி இன்று தன் திருமணம் மூலம் எல்லாம் சரியாகிவிட்ட உணர்வு தோன்ற அன்னையின் பல வருட மனபாரம் நீங்கியதை போன்ற உணர்வு தோன்ற, இதைவிட வேறென்ன வேண்டும் என பூரணம் ஆனது அருட்செல்வன் மனம்.
பின்னே மனைவியைப் பார்க்க, எல்லாம் இவளால்… இவளின் பிடிவாதத்தால்… சொத்து வேண்டாம் என்றேன், கொடுத்தாக வேண்டும் என்று நினைத்த காரியத்தில் வெற்றியும் கொண்டாள்.
இவளை திருமணம் செய்வேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. சொல்லாமல் காதலை உணர்த்தியதோடு, நான் அவளிற்கு எவ்வளவு முக்கியம் என்பதை கண்ணீரிலேயே புரிய வைத்து தன் வாயாலே திருமணம் செய்கிறேன் என்று சொல்லவும் வைத்தாள்.
சிவப்ரியாவின் கேவலுக்குள் ஒளிந்திருந்த அன்பின் தாக்கம்… விட்டுவிட்டால் செத்துவிடுவேன் என்ற அளவிற்கு இருக்கும்போது எப்படி விட முடியும்? அவளின் அன்பின் அகந்தை முன் தெரிந்தே தோற்றேன். ஆனால் தோற்ற உணர்வல்லாது வெற்றி கொண்ட உணர்வு தோன்றுவதுதான் விந்தையானது.
காலம் கடந்துதான் என்றாலும், அன்னையின் தாய்தந்தை உண்டாக்கிய பள்ளத்தை தனது பாசத்தால் நிரப்ப நினைக்கிறாள். அதன் காரணமே நேற்றிரவு தனது காத்திருப்பையும் மறந்து ஒரு மணிவரை அன்னையோடும் சித்தியோடும் பேசிக்கொண்டிருந்திருக்கிறாள்.
வெட்டப்பட்ட மரத்தின் வேர்… பல வருடம் கழித்து துளிர்த்து வசந்தம் தந்தது போன்றதொரு மகிழ்வை அனைவர் மனதிலும் உண்டாக்கியிருந்தாள் சிவப்ரியா.
என் அத்தைக்கு சொத்து கொடுக்க வேணாம்னு சொல்ல நீ யார்? என்று தன்னிடமே உரிமையாய் சண்டையிட்டு வெற்றியும் கண்டு தனது வீட்டில் அவளின் உரிமையை நிலைநாட்டியவளை தீராத காதலோடு பார்த்திருந்தான்.
சித்தி சித்தப்பாவை தன் பெற்றோர் போல் பாவிக்கும் பெண்தான் வேண்டும் என்று தனது எதிர்பார்ப்பை சொல்லாமலே பூர்த்தி செய்யும் மனைவியை ஆசையாய் பார்த்திருந்தான். அதே நேரம் தனது ஆசை மனைவியாய் இருப்பதில் அவளின் ஆசைகள் புதைந்திடக்கூடாது. விவசாயம்தானே அவளின் பிடித்தம்… அதற்கு வழிவகுக்க யோசித்தபடி அண்ணாமலை அருகே போய் நின்றான்.
அனைவரும் விருந்துண்டுகொண்டிருக்க அதிகம் பேசவில்லை என்றாலும் சரியாய் உண்கிறார்களா என பார்வையிட்டு ஷிவாங்கியோடும், தனது அக்காள் குழந்தைகளோடும் உணவுண்ண அமர்ந்தான்.
“பவ்யாவை இன்னைக்கு லீவ் போட சொல்லியிருக்கலாமில்ல மாமா?” என ஷிவாங்கி குறைபட, “இன்னைக்கு லேப் இருக்காம், போயாகனும்னு சொன்னாம்மா, அதான் வற்புறுத்தல” என்றான் உண்மை காரணமாக.
அண்ணாமலைக்கும் அருணாச்சலத்திற்கும் மருமகனின் இச்செயலே அளவில்லா மகிழ்வை கொடுத்தது.
மாலை ஐந்து மணிபோல் பார்த்திபன் வர, முறைத்தான் அருட்செல்வன். “ஏங்க, மதியம் என் சப்ஜக்ட் டெஸ்ட். வர முடியாதுங்க” என மன்னிப்பு வேண்டி, “சாப்பிடாம கொலை பட்டினில வந்திருக்கேன்ங்க. எதாவது இருக்கா? இல்ல எல்லாம் முடிஞ்சிடுச்சா?” என்றான் பாவமாக.
அருள் “அம்மா” என அழைக்க, வெளியே வந்த தனம் “வா பார்த்திபா” என்று அழைத்து செல்ல, “அத்தை எனக்கு என் முறைப்பொண்ணு கையாலதான் சோறு வேணும்” என்றான் சலுகையாக.
குணாளனிற்கு கேட்டிடுமோ என “டேய்” என்று பதட்டத்தோடு தனம் முறைக்க, சிரித்தவன், “சோறு போடத்தானே கூப்பிடறேன்? வரமாட்டாங்களா?” என உரிமையாய் கேட்டு, “ஏங்க முறைப்பொண்ணே, வந்து சோறு போடுங்க” என்றான் சத்தமாக.
பார்த்திபன் குரல் கேட்டு வந்த சிவப்ரியா, “பார்த்திண்ணா” என ஆவலோடு வர, அந்த நேரம் பார்வதியும் வர, “சிவா, நீ போய் ரெஸ்ட் எடு. எனக்கு என் முறைப்பொண்ணோட கொஞ்சம் பேசனும்” என்றபடி கை கழுவி, வலக்கை சர்ட்டை மேலேற்றியபடி வந்தமர, “அச்சோ பார்த்திண்ணா, அண்ணி சொல்லுங்க” என கடிந்தாள் சிவப்ரியா.
“ப்ச்… எங்க உறவுக்குள்ள நீ ஏன் வர?” என பதிலுக்கு கடிய, சிரித்த பார்வதி, “விடு சிவா, என்னவோ சொல்லிட்டு போறான். உன்னை விட பத்து வயசு சின்ன பையன், என்னை விட பதினைஞ்சு வயசு சின்னபையன், விட்டு போன பாசத்தை எப்படி காட்டனு தெரியாம ஆர்வக்கோளாறுல எதேதோ பிதட்டிட்டு இருக்கான். கொஞ்ச நாள் பழகினா சரியாகிடுவானு அவரே சொல்லிட்டார்” என்றாள் பார்வதி.
“டேய், முறைப்பொண்ணு இப்போ பாரு பொண்ணாகிட்டனா? போனா போகுதுனு பார்த்தா ரொம்ப பண்ற பார்த்தியா?” என பார்வதி முறைக்க, “உங்களை அண்ணினு கூப்பிட எனக்கு வரமாட்டேங்குதுங்க, இதான் லாஸ்ட், இதுக்கு மேல அட்வான்டேஜ் எடுத்துக்க மாட்டேன். ப்ராமிஸ்” என்று பார்வதியின் தலைமீது தன் வலக்கையை வைத்து வாக்களித்து, விருந்துண்டான் மகிழ்வோடு.
விருந்துக்கு அவன் வந்தா பவ்யாக்கு சங்கடத்தை தரும்னுதான் பார்த்தி ஸ்கூல் போயிருக்கான், பவ்யா காலேஜ் போய்ட்டானு சொல்லவும்தான் ஈவ்னிங் வரேனு சொன்னான் என்று அருட்செல்வன் பெருமையாய் சொன்னதில் பார்வதிக்கும் பார்த்திபன் மீது மரியாதை வந்தது.
மாலை ஏழு வரை பேசிக்கொண்டிருந்து அண்ணாமலை அருணாச்சலம் குடும்பம் கிளம்ப ஆயத்தமானார்கள். பார்வதியிடம் சென்ற பார்த்திபன், “அநியாயம் பண்றார்ங்க உங்க தம்பி, அன்னைக்கு வீட்டுக்கு வந்தப்போ பவ்யாவை கண்ணுலயே காட்டல. படிக்கிற பிள்ளைகிட்ட வரம்பெல்லாம் மீறமாட்டேன். கொஞ்சம் மனமிறங்க சொல்லுங்க. பார்வைக்கே பஞ்சமாகிப்போனா பார்த்திபனுக்கு பைத்தியம் பிடிச்சிடும்” என்றான் பாவமாக.
“இப்போவே நீ பைத்தியம்தான்டா, என்னை கேட்காம பவ்யாவை கொடுக்க முடிவு பண்ணிட்டாங்க” என பொய்யாய் முறைத்தாள் பார்வதி.
“என்னங்க நீங்க? முதலுக்கே மோசம் பண்றிங்க? உங்களுக்கு அவர் பரவால்ல போலயே” என தானும் பொய்யாய் பயந்து, “இனி எங்க வீட்டுல சின்ன விஷேசம்னாலும் நீங்களும் குடும்பத்தோட வந்திடனும் பாரு பொண்ணே” என்றான் பாசத்தோடு.
பார்த்திபனின் பாசம் புரிந்தாலும் பெயரை சொன்னதால் மீண்டும் பார்வதி முறைக்க, “பார்த்து முடிச்சிட்டு சொல்லுங்க, அப்புறம் கிளம்பறேன்” என்று பார்த்திபன் சிரிப்போடு நிற்க, “போடா டேய்” என பார்வதி சிரிப்போடு அதட்ட, “ம் இது மரியாதை” என்று தானும் சிரிப்போடு விடைபெற்றான்.
தூக்கம் வருவதாக சொல்லி எட்டு மணிக்கெல்லாம் சிவப்ரியா அறைக்குள் வந்திருந்தாள். அக்காள் குழந்தைகளோடு சற்று நேரம் விளையாடியிருந்து அறைக்குள் வந்தான் அருட்செல்வன்.
சிவப்ரியா நைட்டி மாற்ற மறைவிற்கு செல்ல எத்தனிக்க, கைப்பிடித்திழுத்து நிறுத்தினான். அச்சோ இவங்க முன்னாலேயே டிரஸ் மாத்த சொல்வாங்களோ என்று சிவப்ரியா முகம் சிவக்க, சிரித்தவன், “என் முன்னாடி மாத்த வேணாம், நானே மாத்தி விடறேன், ஆனா அன்னைக்கு உன் வீட்டுல மாதிரி இல்ல, இன்னைக்கு கொஞ்சம் வேற மாதிரி” என்று கண்ணிமைத்தான் காதலோடு.
தாள முடியாத நாணத்தோடு சிவப்ரியா கண்களை மூடிக்கொள்ள, மூடிய இமைகளுக்குள் அவளின் கருமணிகள் நடனம் புரிய, ரசித்தாலும், நேற்றிரவு தன்னை ஏமாற்றிய கோபத்தில், “உள்ள ஒருத்தன் தவிச்சிட்டிருக்கானு நினைப்பே வரலயா?” என கடிந்து, “இனி பத்து மணிக்கு மேல வெளில இருந்த… உள்ளயிருந்தே கூப்பிடுவேன்” என்று எச்சரித்து, கட்டிலில் சரித்து கணவன் ஆசையோடு நெருங்கினான்.
கணவனை சுகிக்கும் ஆசை இவளுள்ளும் எழ, கண்டுகொள்வானோ என பதட்டமான சிவப்ரியாவின் நெஞ்சுக்கூடு அதிவேகமாய் தடதடக்க, கண்களை இறுக மூடினாள். நெருக்கம் தளர்த்து “ப்ரியா” என மென்மையாய் அழைக்க, மெல்ல விழி திறந்தாள்.
நினைச்ச மாதிரியே கண்டுபிடிச்சிட்டாங்க என தன்னையே நொந்து கொண்டவள் உடல் மொத்தமாய் சிலிர்த்திட, அவளின் சங்கடத்தை சில மணித்துளிகள் கூட நீடிக்க விடவில்லை அருட்செல்வன்.
“எல்லாத்துக்கும் உரிமைக் குரல் கொடுப்பியே… இப்போ என்கிட்ட காட்டு உன் உரிமையை” என்றவனின் தீண்டலில் சிவப்ரியாவின் இறுக்கமெல்லாம் சில்லு சில்லாய் உடைந்து காதல் மட்டுமே வெளிப்பட, கண்டுகொண்டவன் புலன்களுக்கு தித்திக்கும் விருந்தானாள் மனைவி.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.