ஒரு வாரம் முடிந்திருக்க, காலை ஏழு மணிபோல் அருட்செல்வன் எழ, அருகில் சிவப்ரியா இல்லையென்றதும் குளியலறையைப் பார்த்தான். அங்கும் சத்தமில்லாமல் போக, எழுந்து கதவைத் திறக்க, “டீ சாப்பிடுறிங்களா மாமா?” என நாகராஜனிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.
“பவானி கொடுத்துட்டாம்மா, நீ போய் குடி” என நாகராஜன் சொல்ல, “அருள் எழுந்துட்டான் போல, அவனுக்கு எடுத்துட்டு போ” என்றார் தனலஷ்மி.
தனதறையை பார்க்க திறந்திருக்கவும், ஓஹ் எழுந்துட்டாங்களா? என அறைக்குள் போக குளியலறையில் இருந்தான். பவானியிடம் டீ வாங்க கிச்சன் சென்றவள், “ஆயாக்கு டீ கொடுத்தாச்சுங்களாத்த?” என்றாள்.
“ஆயாதான் உன்னை பார்த்தா முகத்தை திருப்பிக்குதுல்ல? ஆயாக்கு நான் கொடுத்துக்கிறேன், நீ போய் அருளுக்கு கொடு” என்ற டீயை கையில் திணித்தார்.
“அவர் பாத்ரூம்ல் இருக்கார்த்த, முகத்தை திருப்பினாலும் பதில் கொடுத்துடும். நானே ஆயாக்கு கொடுக்கறேன்” என்று சோலையம்மாளிடம் சென்று “ஆயா டீ கொண்டு வந்துருக்கேன்” என டீயை நீட்டினாள்.
இன்று மறுப்பின்றி வாங்கிக்கொள்ளவும் ஆச்சர்யமானவள் சோலையம்மாவின் கட்டிலில் அமர்ந்தாள் தைரியத்தை வரவழைத்து.
சோலையம்மாள் லேசாய் சிரிக்க, ‘ஹப்பா, ஆயா சமாதானம் ஆகிடுச்சு’ என மனம் நிம்மதி கொள்ள, “ம்க்கூம் உன்னை கொடுமை செய்தா என்னை கொன்னேபுடுவானே என் பேரன். அவன் அம்மாவை சொல்லிபுட்டாவே என் பையனை சோறாக்கவிடுவான்” என நொடித்தார்.
“நீ நினைக்கிறமாதிரிலாம் இல்ல ஆயா. என்னை முதல்முறை பார்த்தப்போ எப்படி திட்டினார் தெரியுமா?” என்றாள் பாவமாக.
“என்ன திட்டினான்?” என்றார் ஆர்வமாக.
“ஜீவிதா கல்யாணத்தப்போதான் முதல் முறையா உங்க பேரனை பார்த்தேன். நீங்க என் அப்பா மாதிரியே இருக்கிங்கனுதான் சொன்னேன்! ஏய் நகருடீ…ன்னு அவ்வளோ கோபமா சொன்னார், எனக்கு ரொம்ப அசிங்கமாகிடுச்சு. அதை நினைச்சு நினைச்சே இரண்டு மூனு மாசம் அழுதேன்” என அருள் சொன்னதை போலவே செய்கையோடு கோபமாக சொல்லிகாட்ட, அவ்விடம் வந்த அருள் முகம் புன்னகை பூத்தது.
“அதானே? என் பேரனாவது அழகுக்கு மயங்குறதாவது” என பெருமையாய் சொன்னவர் அருளைக் கண்டதும், “உன் பொண்டாட்டியை ஒன்னும் சொல்லல சாமி, அதுக்குள்ள வேவு பார்க்க வந்துட்டியா” என்றார் நொடிப்பாக.
பாட்டியிடம் ஏதும் சொல்லாமல், “வா” என மனைவியை அழைக்க, அருளிடம் வந்தவள், “ஏங்க, இப்போதான் ஆயா கொஞ்சம் பேச ஆரம்பிசிருக்கு.” என கிசுகிசுக்க, “வா வெளில போகனும்” என்று சிரிப்போடே உள்ளே போனான்.
உள்ளே வந்தவள் “எங்க போறோம்?” என கேட்க, அவளின் காதைப் பிடித்து லேசாய் திருகியபடி, “என்னை மாதிரி செய்து காட்டிட்டு இருக்க? கொழுப்பாடி?” என்றான்.
“அச்சோ அத்தை, காப்பாத்தாம சிரிக்கிறிங்க” என பொய்யாய் அலறி, “எங்க போறோம்?” என்றாள்.
“சொன்னாத்தான் வருவியா?” என முறைத்து, “சீக்கிரம் போய் ரெடியாகு” என்றான் கட்டைளையாக.
சிவப்ரியா கிளம்பி வெளியே வர, சங்கர் காரெடுக்கவும், பின்னே பவானி நாகராஜ் மற்றும் தனமும் தயாராகி வரவும், “எங்க போறோம்?” என்றாள் மீண்டும்.
“என்னை இமிடேட் செய்தயில்ல? சஸ்பன்ஸோடவே வா” என பைக்கை முறுக்கினான்.
“என்னை இமிடேட் செய்தயில்ல? சஸ்பன்ஸோடவே வா” என மீண்டும் அவனைப் போலவே சொல்லி பைக்கில் அமர்ந்தாள் முறைப்போடு.
*** ***
வழி நெடுக கேள்விகளை அடுக்கிக்கொண்டு வந்தவள், மருத்துவமணையை அடைந்ததும், “ஏங்க, யாருக்கு என்ன ஆச்சு?” என்றாள் பதட்டமாக.
காரிலிருந்து சிரிப்போடு இறங்கிய தனம், பவானியைப் பார்த்ததும் நிம்மதி வர, சில நொடி நிதானமாய் யோசித்தவள், “அத்தை ஜீவிதாக்கு குழந்தை பிறந்திருக்கா?” என்றாள் ஆர்வத்தோடு.
ஆண்கள் வெளியே இருக்க, “ஏங்க நீங்க வரல?” என்றாள் அருட்செல்வனிடம்.
“வா சிவா, அருள் நாம பார்த்த பின்ன வருவான்” என உள்ளே அழைத்துப்போனார் தனம்.
கட்டிலில் சாய்ந்தமர்ந்தபடி ஜீவிதா குழந்தைக்கு பசியாற்றிக்கொண்டிருக்க, “ஜீவா…” என அன்போடு அழைத்து கேசத்தை வருடிவிட்டு, “என்ன குழந்தைடீ?” என்றாள் ஆர்வமாக.
“ம்மா” என்று குழந்தையை தூக்கபணிக்க, ஜீவிதாவின் அன்னை குழந்தையை வாங்கி ஜீவிதா அருகே படுக்கவைத்தார்.
“ஓ… மகனா?” என ஆர்பரித்து “அச்சோ கருகமணியாட்டம் கண்ணை வச்சிட்டிருக்கானே… என் கண்ணே பட்டுடும் போலயே” என்றாள் ரோஜா இதழ்போன்ற கன்னத்தை வருடியபடி.
குழந்தைக்கு பசியாற்றிவிட்டதால் சங்கருக்கு அழைத்த தனம், “உள்ள வாங்க” என்றார்.
மூவரும் உள்ளே வந்து ஜீவிதாவின் நலம் விசாரித்தனர். சங்கர், “கடை ஒன்னுகூட திறக்கலயே பேராண்டி, முதல் முறை பார்க்க வரும்போதே சும்மாம வந்துட்டோம். வீட்டுக்கு வந்ததும் இந்த தாத்தாகிட்ட வட்டியும் முதலுமா வசூலிச்சுடு” என்று குழந்தையிடம் பேசிக்கொண்டிருக்க, சிவப்ரியாவின் முகம் தன்போல் அருளை நோக்கியது.
சிவப்ரியா தன்னை பார்த்ததை அனைவரும் கவனித்திட, இம்சை இம்சை… எல்லார் முன்னவும் இப்படியா பார்த்து வைப்பா? என மனதில் கடிந்து வெளியேறினான் முகச்சிவப்போடு.
அரைமணி நேரம் கழித்து அனைவரும் கிளம்ப, பைக்கில் அமர்ந்தவள், “ஜீவிதா குட்டிபையன் செம்ம க்யூட்ல?” என்றாள் ஆசையாக.
அருட்செல்வன் பதிலின்றி பைக்கை ஓட்டிக்கொண்ருக்க, தான் சொன்னது அவனின் காதில் விழவில்லையோ என, “மாமா” என முதுகை சுரண்டியவள், “ஏன் கோபமா வெளில போய்ட்டிங்க?” என்றாள்.
“அமைதியா வாடி” என்றான் அதட்டலாக.
சிவப்ரியா முகம் வாடிட, கண்ணாடியில் பார்த்தவன், பைக்கின் வேகத்தை குறைத்து, “எல்லார் முன்னவும் அப்படியா பார்ப்ப?” என்றான் கடுப்பாக.
எப்போ என புரியாமல் இவள் பார்க்க, “ராகவன் குழந்தையோட என் அப்பா பேசும்போது” என்றான்.
“இம்சை இம்சை… நீ என்னை பார்த்ததை எல்லாரும் பார்த்துட்டாங்க”
கோபமோ என நினைத்திருந்தவளிற்கு, அது வெக்கத்தால் வந்த முகச்சிவப்பு எனப்புரிந்ததும், “ரூம்க்குள்ளதான் முடியல, வெளிலயாவது வெக்கப்பட வைக்கிறேன்” என்றாள் குறும்பாக.
மேலும் சிவந்தவன், “அடிங்க” என அதட்டி இன்முகத்தோடு பைக்கை விரட்டினான் காட்டிற்கு.
“எங்க போறிங்க?” என கேட்க, “அமைதியா வா” என்றவன் அரைமணி நேரப் பயணத்திற்கு பிறகு வயல்வெளியில் வண்டியை நிறுத்தி, “வா அப்படி போய் உக்காரலாம்” என அழைத்துப்போனான் தண்ணீர் தொட்டியருகே.
பல வருடப் பகையை விடுத்து தனக்காக இவ்விடத்திற்கு வந்திருக்கிறான் என்ற மகிழ்வோடு கணவனை பார்க்க, அவள் பார்வையின் காதலை உணர்ந்தவன், “சும்மா சும்மா இப்படி பார்த்து வச்ச… ரூமை விட்டு வெளிலயே விடமாட்டேன்” என மிரட்டினான் பொய்யாக.
“விடாதிங்க” என்றாள் பாவனையாக.
“இம்சை” என கடிந்து, சுற்றிலும் நோட்டமிட, சற்று தொலைவில் பெண்கள் வேலை செய்துகொண்டிருக்க, “ஓ… இதான் உங்க வீக் பாயிண்ட்டா?” என சிரித்து, அவனின் மூக்கை பிடித்து ஆட்ட, அதில் கவிழ்ந்தவன், “கிளம்பு போலாம்” என முன்னே நடந்தான்.
“சரி சரி… சமத்தா இருக்கேன், வந்த விசயத்தை பேசுவோம்” என்றாள் நின்றயிடத்திலிருந்தே.
அருட்செல்வன் நிற்க, அவனிடம் சென்றவள் “இது குத்தகைக்கு விட்டுருக்காங்க மாமா, இன்னும் ஒரு வருசம் அவங்களுக்கான டைம் இருக்கு” என்றாள்.
“ம் தெரியும், இதுவரை இங்க நீ வந்ததில்லனும் தெரியும். காட்டை பார்த்தா உனக்கெதாவது ஐடியா வருமேனு அழைச்சிட்டு வந்தேன்”
“அப்போ நிஜமாவே நான் விவசாயம் பார்க்கவா?” என்றாள் விரிந்த கண்களோடு.
“ம், படிப்பை விட்டுட்டு விவசாயம் பார்க்குற அளவுக்கு உனக்கு என்னதான் தெரியும்னு எனக்கு பார்க்கனும்”
“பாருங்க பாருங்க” என்று சவாலாக சொன்னவள், “நம்ம கோழிப்பண்ணைக்கு போலாமா?” என்றாள்.
“இப்போ மணி ஒன்பதாகுது, ஈவ்னிங் கூட்டிட்டு போறேன்” என்று சற்று நேரம் காட்டை சுற்றி காண்பித்துவிட்டு வீட்டிற்கு வந்தான்.
உணவுண்ண அமர்ந்தவளிற்கு…
இரண்டு நாட்களுக்கு முன் தலைதீபாவளியின் போது தனது வீட்டில் அறைக்குள்ளேயே அடைந்திருந்தது, வெளியே வந்தால் ஷிவாங்கியோடு மட்டுமே பேசுவது… அதுவும் மாமன் என்ற முறையில் இல்லாமல் பவ்யாவோடு பேசுவதுபோல் பொறுப்பான அண்ணன் போல் பேசுவது, பார்த்திண்ணா எண்ணை தேய்ச்சுவிட வரும்போது எனக்கு இதெல்லாம் ஒத்துக்காது என்று முறைத்தது, இதெல்லாம் மச்சானோட உரிமைங்க, நீங்க மறுக்கவே கூடாது என்று பார்த்திபன் சிரிப்போடு வாதிட்டு வம்பளத்தது…
இவை அனைத்தும் பார்த்திருந்து கணவனிற்கு அங்கே பிடிக்கவில்லை, தீபாவளியை இப்படி கசப்பாக கழிக்கவேண்டாம் என, பவ்யா தனியாக இருப்பாள் என்று தானாக வீட்டிற்கு அழைத்ததும் அன்று மாலையே கிளம்ப சம்மதித்தது அனைத்தும் நினைவில் வர, நாம கூட பழைய கசப்பை மறக்க முடியாம அட்ஜஸ்ட் பண்ணிட்டிருக்காங்கனு பார்த்தா… வெக்கப்பட்டுக்கிட்டுதான் விலகியிருந்தாங்களா என நினைக்க சிரிப்பு வர புரையேறியது சிவப்ரியாவிற்கு.
“ஹேய் பார்த்து” என அருட்செல்வன் பதற, “தலையெல்லாம் தட்டிவிடமாட்டிங்களா?” என்றாள் கண்ணிமைத்து.
சங்கர் தனம் சிரிக்க, முறைத்தவன், “உன் பல்லை தட்டுறேன் இரு” என முணுமுணுத்தபடி உணவுண்டவன், மனைவி மீதான கோபத்தையெலாம் இரவில் காட்டினான் காதலாக.
“இதான் உங்க கோபமா?” என அயர்ந்துதான் போனாள் சிவப்ரியா.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.