“ம்மா அந்த பொண்ணு PWD ல ஒர்க் பண்ணுது, மூனு வருசத்துக்கு ஒருமுறை டிரான்ஸ்ஃபர் ஆகிட்டேயிருக்கும், நான் ஒரு பக்கம் அவ ஒரு பக்கம்னு என்னால இருக்க முடியாது.”
“உனக்கு விருப்பம் இல்லைனா கல்யாணத்துக்கு அப்புறம் வேலையை விட்டுடுறாளாம் அருளு.” என்றார் ஆர்வத்தோடு.
“இது அதை விட மோசம். PWD ல AE போஸ்ட் கிடைக்குறது எவ்வளோ கஷ்டம் தெரியுமா? அப்படி கஷ்டப்பட்டு வேலையை வாங்கிட்டு எதுக்கு விடனும்?”
“என்னடா இது? எப்படி சொன்னாலும் முரண்டு பண்ற?”
“புருசனுக்கு பிடிக்கலன்னதும் வேலையை விடறதுக்கு, கட்டினவன் என்ன ஹை கோர்ட்டா? இல்ல சுப்ரீம் கோர்ட்டா? இருபத்தி அஞ்சு வயசுலயே கெஜட்டட் போஸ்ட் வாங்கியிருக்காங்கனா… அந்த வேலை கிடைக்க எவ்வளோ கஷ்ட்டப்பட்டிருப்பாங்க?
கஷ்ட்டப்பட்டு வாங்கின வேலையை கல்யாணத்துக்கப்புறம் விட்டா காலம்வரை எனக்கு கில்ட்டியா ஃபீல் ஆகாதா?” என முறைத்து, “இப்படி சின்ன வயசுலயிருந்து பட்ட கஷ்டத்தை ஈஸியா தூக்கியெறியற பொண்ணு எனக்கு வேணாம்.” என்றான்.
இதெல்லாம் போக உனக்கு பிடிக்கலனா வேலையை கூட விட்டுருவேன்ற அளவுக்கு அந்த புள்ளைக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. இதை விட வேற என்ன வேணும்?” என்றார் ஆற்றாமையோடு.
“சுயத்தை விட்டுட்டு என்னோட வாழ்ந்து அப்படி என்ன கண்டுட போகுது? அதுக்கு வேலைல இருக்க பொண்ணா பார்க்கிறவங்கள்ல யாரையாவது கட்டிக்கிட்டா சந்தோசமா வாழலாமே.” என்றான்.
“அப்போ உனக்கு வேலைல இருக்க பொண்ணு பிடிக்காதா? அப்படி பார்க்க வேணாமா?”
“வேலைலல இருக்க பொண்ணு பிரச்சனையில்ல, ஆனா தர்மபுரி டிஸ்ட்ரிக்குள்ள இருக்கனும். அப்படி கிடைக்கலனா வேலைல இல்லனாலும் பரவால்ல, என்னை கட்டிக்கப்போற பொண்ணு என்னோட மட்டுமில்ல, நம்ம குடும்பத்தோட சேர்ந்து இருக்கனும். அப்படி பொண்ணா பாருங்க.” என்றான்.
“இப்ப பிள்ளைங்கள்லாம் தனிக்குடித்தனத்துக்குத்தான் ஆசைப்படுறாங்க, கல்யாணத்துக்கப்புறம் இந்த பட்டிக்காட்டுல என்னால இருக்க முடியாதுனு சொன்னா என்ன பண்ணுவ?”
“உனக்கு எங்க விருப்பமோ போய் இருந்துக்கோ, என்னை விட்டுடுனு அனுப்பி வச்சிடுவேன்.” என்றான் அசால்ட்டாக.
“அடப்பாவி, குழந்தை குட்டினு ஆனபின்ன எப்படிடா அப்படி சொல்லுவ? இப்படி எண்ணத்தை விட்டுடு அருளு. சமாதானம் செய்து உன்னோட வாழ வைக்கும் வழியைத்தான் பார்க்கனும்.” என்றார் பதறியவராய்.
மகனின் படிப்பிற்கு ஏற்றவாறு கௌரவமான வேலையில் இருக்கும் பெண்ணை தாம் தேர்ந்தெடுத்திருக்க, வரப்போகும் பொண்டாட்டி எப்படி இருக்க வேண்டும் என மகன் சொன்னதில் மகிழ்ந்த சங்கர், “நீ பதறாத தனம், இப்படி சொல்றவனுங்கதான் பொண்டாட்டி சொல்லை தட்டவே மாட்டானுங்க.” என சிரிப்போடு தேற்றினார்.
“ஹா..ஹா.. கண்டுபிடிச்சிட்டிங்களாப்பா?” என சிரித்தபடி “ம்மா சித்தி எங்க?” என்றான்.
“உள்ள இருக்கா, இரு கூப்பிடறேன்.” என பவானியை அழைத்து வர, “சித்தி, பாப்பா எங்க?” என்றான்.
“குளிச்சிட்டிருக்கா அருளு.”
நாகராஜ் பவானியின் ஒரே மகள் பவ்யா. தர்மபுரியில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்.சி கார்டியாலஜி படிக்கிறாள். இன்று அருட்செல்வனிற்கு பெண் பார்க்க போவதாக அன்னை சொல்லவே நானும் வரேன் என பிடிவாதம் செய்து கல்லூரிக்கு செல்லாமல் இருந்தாள்.
பெண் பார்க்கும் படலம் நடைபெறாமல் போக, சோம்பலாய் மொபைல் பார்த்துக்கொண்டிருந்தவள், அன்னை பவானியின் வசைபாடலுக்கு பின்னே தற்போதுதான் குளிக்கச் சென்றாள்.
“பாப்பா இன்னைக்கு காலேஜ் போகலல்ல?” என முணுமுணுத்தவன், “ம்மா இன்னைக்கு மதியமே வந்துடறேன், எனக்கும் சேர்த்து சமைச்சிடு.” என்று மருத்துவமணைக்கு கிளம்பினான் அருட்செல்வன்.
சோலையம்மாவின் இறுகிய முகம் கண்ட சங்கர், “ம்மா, நான் கிளம்பின பின்ன தனத்தை திட்ட ஆரம்பிச்சுடாத, கல்யாண விசயத்துல அருள் நினைக்கிறதுதான் ரொம்ப சரி.” என அன்னைக்கு எடுத்துரைத்து உரக்கடைக்கு கிளம்பினார்.
மகன் கண் பார்வையிலிருந்து மறையும் வரை காத்திருந்த சோலையம்மாள், “என் பேரன் விபரமில்லாம பேசுவான். அதுக்காக பேரன் மவுசுக்கு ஒன்னுமில்லாதவளையா பார்க்க முடியும்?
பெத்தவ எதுக்கு இருக்க? டாக்டர் மகனுக்கு இப்படி வேலைல இருக்க பொண்ணை பார்த்தாதான் எனக்கு பெருமை. எனக்கு அந்த பொண்ணுதான மருமகளா வேணும்னு சொல்றதுக்கென்ன? லட்சத்துல சம்பாதிக்கிற புள்ளை லட்டாட்டம் கிடைச்சும் இப்படி நழுவ விட்டுட்டியே?
உன்னை மாதிரியே உன் மருமவளும் வரனும்னு நினைசிட்டியா? அப்படியிப்படி ஒன்னுமில்லாதவளை கொண்டுட்டு வர திட்டம்போட்ட… அம்புட்டுதான் பார்த்துக்க.!”
அந்த நேரம் பவானி வர, “எனக்குனு வந்து நேந்துருக்காளுங்க பாரு. சித்தி சித்தினு உயிரை விடுறானே, அவன் உன்மேல வச்ச பாசம் உனக்கு அவன் மேல இருந்திருந்தா, அந்த புள்ளையையே கட்டிக்கோ அருளுனு சொல்லியிருப்ப, சம்பாதிக்கிறவ வந்தா ஏய்க்க முடியாதேனு இரண்டு பேரும் அமுக்குனி மாதிரி இருந்துட்டாளுங்க.” என இன்னும் என்ன சொல்ல வந்தாரோ?
வெளியே வந்த பவ்யா சோலையம்மாவை முறைக்க, “என்னடி பார்க்குற? வம்சம் விளங்கனும்னா, பெத்தவளுக்கு நேக்கு போக்கு இருக்கனும். நானென்ன இன்னும் நூறு வருசமா இருக்கப்போறேன்?
எனக்கு பின்ன குடும்பத்தை கட்டிகாக்க உன் அம்மாளுக்கும் பெரியம்மாளுக்கும் நல்லது கெட்டது தெரியவேணாவா? வரப்போற மருமககிட்ட எப்படி இருக்கனும்னு சொல்லிகிட்டிருந்தேன். அதுவும் அவளுக நல்லதுக்குத்தான்.
இதெல்லாம் உன் அண்ணன்காரன்கிட்ட சொன்ன… பல்லை தட்டிபுடுவேன். பெரியவங்க பேசுற இடத்துல உனக்கென்ன வேலை? போய் படிக்கிற வேலையிருந்தா பாரு.” என அதட்டினார் பேத்தியை.
“நல்லதுக்குத்தானே சொல்ற? அதை அண்ணன்கிட்ட சொன்னா என்னவாம்? நான் சொல்லத்தான் போறேன். அம்மாக்கும் பெரியம்மாக்கும் இன்னும் என்னென்ன நல்லது சொல்லனுமோ சொல்லு, நானும் தெரிஞ்சுக்கிறேன்.” என சோலையம்மாவின் வாயை அடைத்து, மேற்கொண்டு பேசாமல் இருக்க, உள்ளே சென்று புத்தகத்தை எடுத்து வந்தவள், திண்ணையிலேயே படிக்க அமர்ந்தாள்.
** ** ** ** ** ** **
“பார்த்திண்ணா, நாளைக்கு என்னை பார்க்க வரியா?” என்றாள் சிவப்ரியா.
“ஏன்டா? உடம்பு சரியில்லையா?” என்றான் கவலையாக.
“அப்பாவும் பெரியப்பாவும் சொத்து கொடுக்குறேனு சொல்லியும் அத்தை ஏன் வேணாம்னுட்டாங்க? எனக்கு சொல்லுண்ணா.” என பார்த்திபனிடம் பிடிவாதம் செய்தாள் சிவப்ரியா.
“ஃபோன்ல வேணாம் சிவா, வீட்டுக்கு வரும்போது சொல்றேன்.” என பார்த்திபன் சொல்ல, “அவ்வளோ பெரிய கதையா இருக்கு?” என்றாள்.
பார்த்திபன் அமைதிகாக்க, “நீ சொல்ல மறுக்க மறுக்கத்தான் என்னால நிம்மதியா இருக்க முடியல.” என்றான் சோர்வாக.
“விசயம் தெரிஞ்சு என்ன பண்ண போற? சும்மா அதையே பேசிகிட்டு.” என்றான் கோபமாக.
“ஏன் ண்ணா? பொண்ணுங்க வீட்டு விசயம் தெரிஞ்சுக்க கூடாதா?”
“நான் அப்படி சொன்னேனா?”
“அம்மாகிட்ட கேட்டேன், என்னை மிரட்டி அடக்கப்பார்க்குறாங்க. உங்களுக்கு மட்டும் எப்படி சொன்னாங்க? உங்களுக்கு சொன்னவங்க ஏன் எனக்கு சொல்லல? நான் இவ்வளோ கேட்டு நீங்களும் சொல்லலைனா அதானே அர்த்தம்?”
இப்படியாக கால் மணிநேரம் வரை சிவப்ரியா வாதாட, இதற்கு மேல் சொல்லவில்லையென்றால் வருந்துவாள் என, “அத்தைக்கு கல்யாணம் ஆகி மூனு வருசம் கழிச்சு தாத்தாக்கு திடீர்னு முடியாம ஆகியிருக்கு, விசயம் தெரிஞ்சு அத்தையும் மாமாவும் பார்க்க வந்தாங்க.
பார்வதிக்கா பிறந்த பின்ன வந்த பிரச்சனைக்கப்புறம் அத்தை நம்ம வீட்டுக்கு வரதை ரொம்பவே குறைச்சிட்டாங்க,
அம்மாக்கு என்னை விட அப்பமூடுதான் முக்கியம். எனக்கு அவங்க முகத்துல விழிக்க பிடிக்கல. அதான் வரதில்லனு அத்தை சொல்லியிருக்காங்க.
இந்த பிரச்சனையை தீர்க்க முடியாத தாத்தா, மொத்த உசுரும் போறதுக்குள்ள உனக்கானதை கொடுத்துடலாம்னு இருக்கேனு சொல்லியிருக்கார்.
ஹாஸ்பிட்டல்ல வச்சு எதுக்குப்பா இந்த பேச்சு? முதல்ல உடம்பைப் பாருங்கனு அத்தை சொல்லியிருக்காங்க.
நீதான் வீட்டுக்கு வரமாட்டுக்கிறியே? அப்போ இங்கதான பேச முடியும்னு சொல்லி, தாத்தா சுயமா சம்பாதிச்சு வாங்கின அஞ்சு ஏக்கரா காடும், கொஞ்சம் நகையும் கொடுக்கிறதா சொல்லியிருக்கார்.
எனக்கு வேணாம்ப்பானு அத்தை சொல்லியிருக்காங்க.
ஏன் வேணாம்? பொண்ணு பிள்ளைங்களுக்க நம்மூர்ல இவ்வளோ சொத்து யார் கொடுத்திருக்கானு ஆயா கேட்டுருக்காங்க.
அப்போ ஏன் எனக்கு கொடுக்குறிங்க.? நீங்களே வச்சுக்கோங்கனு அத்தை சொல்லியிருக்காங்க.
என்ன தனம் எதிர்பார்க்குறனு தாத்தா கேட்டுருக்கார்.
கௌரவம்ப்பா, எனக்கான கௌரவத்தை எதிர்பார்க்குறேன். பரம்பரை சொத்துல எனக்கு உரிமையில்லனா எனக்கு சொத்தே வேணாம்னு அத்தை சொல்லியிருக்காங்க.
அந்த காலத்துல்லாம் பொண்ணுங்களுக்கு சீர் வரிசைதான் கொடுப்பாங்கன்றதால அத்தை கேட்டது தாத்தாக்கு பிடிக்கல, நான் சம்பாதிச்ச சொத்தை கொடுக்குறது உனக்கு கௌரவமா இல்லையானு கேட்டுருக்கார்.
என் விருப்பத்தை சொல்லிட்டேன். அண்ணன்கிட்டயும் அருணாச்சலத்துக்கிட்டயும் கலந்து பேசிட்டு முடிவெடுங்கனு அத்தை சொன்னாங்களாம்.
பொட்டப்பிள்ளைங்களுக்கு காலம்வரை பிறந்த வீட்டு சீர் செய்ய வேண்டியிருக்கும். அதனாலதான் பரம்பரை சொத்தை பசங்களுக்கு கொடுக்குறது. இது வம்சாவழியா நடக்குறதுதான். வீம்பு பண்ணாம அப்பா கொடுக்குறதை வாங்கிக்கோனு ஆயா சொல்லியிருக்கு.
உன் பேச்சை கேட்டு நடக்குறதுக்கு நான் உன் பொண்ணு மட்டுமில்லம்மா, இன்னொரு வீட்டோட மருமக. பிறந்த வீட்டுலயிருந்து எதை எடுத்துட்டு போனா புகுந்த வீட்டுல கௌரவமா இருக்குமோ அதைத்தான் நான் கேட்குறேன்.
இரண்டு நாள் கழிச்சு அத்தையை வரவச்சு திரும்ப பேசியிருக்காங்க. அப்போ அப்பாவும் சித்தப்பாவும் கூடவே இருந்தாங்களாம்.
கொடுத்தா பரம்பரை சொத்துலயிருந்து கொடுங்க, இல்ல எனக்கு எதுவும் வேணாம்னு அத்தை சொன்னாங்களாம்.
பொண்டாட்டியை தூண்டிவிட்டுட்டு உங்க மாப்பிள்ளைதான் ஒன்னும் தெரியாதவர் மாதிரி இருக்கார்னு ஆயா சொல்லவும் அத்தைக்கு கோபம் வந்துடுச்சு.
சொத்தை எதிர்பார்த்து இவர் என்னை கட்டிட்டு போகல, அவர் உரக்கடையில சம்பாதிக்கிற பணத்துல பொண்ணு பையன்னு பாகுபாடு பார்க்காம என் கொழுந்தனாருக்கு என்ன செய்யிராரோ அதையே என் நாத்தனாருக்கும் செய்யிறார். அவரைப் பத்தி பேசுற வேலை வச்சிக்காதிங்கனு சொல்லியிருக்காங்க.
அப்பாவும் சித்தப்பாவும் ஒரு வார்த்தை அத்தைக்கு சப்போர்ட் பண்ணி பேசல, முடிவா என்ன சொல்ற தனம்னு தாத்தா கேட்டுருக்கார்.
அத்தை பதில் சொல்லும் முன்ன ஆயா ஒரு படி மேல போய், பரம்பரை சொத்தை அனுபவிக்க இந்த பரம்பரைக்குத்தான் உரிமையிருக்கு.
சோலையம்மா வாரிசுகளுக்கு பரம்பரை சொத்துல பங்கு கொடுத்தா அது உங்க பரம்பரைக்குத்தான் அசிங்கம்னு ரொம்ப ஆவேசத்தோட ஆயா பேசியிருக்கு.
இந்த வார்த்தை சங்கர் மாமாவை கோவப்படுத்தவும், அவர் வார்த்தையை விடும்முன்ன நாமளே பேசிடலாம்னு, பரம்பரை சொத்துல பொண்ணுங்களுக்கு உரிமையில்லைனு அப்பாவும் அம்மாவும் சொல்றாங்களே? உங்களுக்கு ஆண்வாரிசு இல்லாம போச்சுனா பரம்பரை சொத்தை அப்போ யாருக்கு கொடுப்பிங்கனு அப்பாகிட்டயும், சித்தப்பாகிட்டயும் கேட்டுட்டு கிளம்பிட்டாங்களாம்.
அப்போ போனவங்கதான், அதுக்கப்புறம் எட்டு மாசம் கழிச்சு தாத்தா சாவுக்குத்தான் வந்தாங்களாம்.” என பெருமூச்சிழுத்தான் பார்த்திபன்.
“சரி பார்த்திண்ணா, நான் வச்சிடறேன்.” என இணைப்பை துண்டித்தாள் சிவப்ரியா.