மனதுக்குள் அப்பத்தாவை கரடி என்று வைதவனோ அதை வெளிக்காட்டாமல் சிரித்தவாறே, “என்ன அப்பத்தா.?” என்று வினவ…
அவரோ ஏதும் சொல்லாமல் அறையின் உள்ளே சற்றே எட்டிப் பார்த்து மலர்விழி அமைதியாக படுத்திருப்பதை அறிந்து கொண்டவர், பேரனின் முகத்தையும் உற்றுப் பார்த்து, அங்கு எந்த களேபரமும் நடக்கவில்லை என்பதையும் உணர்ந்து கொண்டப் பின்னரே…
“அது வந்து ராசா” என்று இழுத்தவரை…
யுவா மீண்டும், “என்ன வேணும் அப்பத்தா.?” என்று சற்றே குரல் உயர்த்தி வினவவும்….
அவரோ, “தைலம் தைலம் தைலம் வேணும் ராசா” என்று தந்தியடித்தார்…
அவனோ, “தைலமா.?” என்று அவரை ஆராய்ச்சியாகப் பார்த்தவன்…
‘இந்த அப்பத்தா கேடியாச்சே, சாதாரண தைலத்துக்கெல்லாம் இப்டி கெளம்பி வராதே’ என்று மனதில் கேட்டுக் கொண்ட யுவராஜோ….
அவர் கேட்ட தைலத்தை தேடி எடுத்துக் கொடுத்து, அவரை அனுப்பி விட்டு படுக்கைக்கு வர, அங்கு மலரோ ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தாள்…
இல்லை இல்லை உறங்குவது போல் படுத்திருந்தாள்.
பத்தாம் வகுப்பு கூடப் பயின்றிராத பெண்ணவள், உணவு உடை இருப்பிடம் தவிர்த்து வேறு எந்த விஷயத்திலும் சரியான புரிதலும் இல்லாத கிராமத்துக் கிளியான மலர்விழிக்கோ என்னதான் கணவனின் அருகாமை இனிமையாக இருந்தாலும், அவனிடம் சற்று முன்னால் கண்ட வேகத்தையும், அவன் கரங்கள் தன் மேனியில் பயணித்த இடங்களையும் நினைக்கையில் அவளுக்கு எதிர்பார்ப்பையும், ஏக்கத்தையும் மீறி இப்பொழுது அவள் உள்ளம் முழுதும் பயமும் பதட்டமும் மட்டுமே நிரம்பி இருக்க… அவளோ இறுக்க விழி மூடி, அசையாது படுத்திருந்தாள்….
அவளை ஒட்டிப் படுத்த யுவாவுக்கோ
மலர்விழியின் மூடியிருந்த விழிகளையும் அந்த விழிகளுக்குள் உருண்டு கொண்டிருந்த கருமணிகளையும், தன்னருகில் கணவனின் அருகாமையை உணர்ந்தவுடன் மீண்டும் அவன் தன்னைத் தீண்டுவானோ என்ற பயத்தில் அவள் கரங்கள் தலையணையை இறுக்கிப் பிடித்த விதத்தையும் பார்க்கப் பார்க்க அவளின் மனநிலை அவனுக்கு அப்பட்டமாகப் புரிபட, அவன் இதழ்களோ…
‘காஞ்ச மாடு கம்பங்கொல்லைல பாஞ்சது போல பாஞ்சு மொசகுட்டிய இப்டி நடுங்க வச்சுட்டியேடா யுவா’ என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டவனோ மோகம் மறந்து, மோகனப் புன்னகையை உதிர்த்தவன், அவள் புறம் திரும்பி, மெல்ல இதழ் கொண்டு அவள் செவிமடலை உரசியவனோ…
“விழிமா மாமாவ பாத்தா உனக்கு பயமாயிருக்கா.?” என்று வினவ….
அவளோ கணவனின் கூற்றில் விழி மலர்த்தி அவனைப் பார்த்தவள் வேகமாக
“இல்லத்தான்…” என்று தலையாட்டினாள்…
அவனோ அவள் வார்த்தையில் மகிழ்ந்தாலும், அவளின் படபடத்த விழிகளில் இருந்த பதட்டத்தைக் கண்டு, அவளை இறுக்கி அணைத்துக் கொண்டவனோ…
“டேய் மொசக்குட்டி மாமா கிட்ட என்னடா பயம் உனக்கு, மாமா உன்ன எந்த விதத்துலயும் கஷ்டப்படுத்த மாட்டேன்னு அப்போவே சொன்னேன்லடா, உனக்கு விருப்பமில்லாததோ, உனக்குப் பிடிக்காததோ எதுவும் இங்க நடக்காது,
நீ சகஜமா இருடா” என்றவனின் வார்த்தைகளில் விழி விரித்த மலர்விழியோ…
“த்தான்…” என்று கணவனை ஏறிட…
அவனோ “தூங்குடா” என்று அவளின் நுதலில் இதழ் பதித்தான் மலர்விழியின் யுவித்தான்…
கணவனின் ஒற்றை நெற்றி முத்தமே பெண்ணவளின் கலக்கத்தை எல்லாம் பின்னுக்குத் தள்ளியதில் அவளோ என்றுமில்லா மகிழ்ச்சியோடு கணவன் மார்பில் இன்னும் இன்னும் ஒன்றியவள் ஆழ்ந்த நித்திரைக்குச் செல்ல…
யுவாவும், “உனக்கு இன்னும் நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகல போலடா” என்றே சொல்லிக் கொண்டு… மனைவியை இழுத்து தன் மார்புக்குள் புதைத்துக் கொண்டவனும்…
“இருந்தாலும் அந்த தாய்க்கெழவி கொஞ்சம் லேட்டாவே வந்துருக்கலாம்” என்று குறைப்பட்டுக் கொண்டவாறே
மெல்ல உறக்கத்தைத் தழுவினான் யுவராஜ்.
ஊனால் இணையவில்லையானாலும் அன்றைய நாளுக்குப் பின் உள்ளத்தால் மிகவும் கணவனை நெருங்கி விட்ட மலரோ, அவனுக்கு வேண்டியதெல்லாம் அவளே பார்த்துப் பார்த்துச் செய்ய,
யுவாவும் முன்பு எதற்குமே மனைவியை அழைக்காதவனும் இப்பொழுது மூச்சுக்கு முன்னூறு முறை “விழி விழி” என்று ஏலமிட அவர்களைப் பார்த்திருந்த குடும்பத்தினர் கூட அவர்களை ஆச்சர்யமாய் நோக்க….
ஆனால் அதை எதையும் கண்டு கொள்ளா இளசுகளோ நேற்று தான் திருமணமானவர்கள் போல் தங்கள் காதல் வானில் சிறக்கடித்துத் தான் பறந்தனர்.
பகல்வேலைகளில் பார்வைகளையும் விரல்களையும் மட்டும் பிணைத்துக் கொள்பவர்களுக்கு, இரவு வேளையில் ஒருவரின் அணைப்பே மற்றவருக்குத் துணையாக மாறிப்போக, காமமில்லா காதலதில் தங்களின் முந்தைய மனக்கசப்பை எல்லாம் மறந்து தான் இருந்தனர் யுவாவும் மலரும்.
முன்பு அவள் மேல் உள்ள கோபத்தால் தன் ஆசைகளை அடக்கி இருந்தவனோ இப்பொழுது அவளுள் இருக்கும் தயக்கத்தால் மட்டுமே பொறுமை காப்பவன், தன் ஒவ்வொரு செயலிலும் அவள் மேல் உள்ள அளவற்ற காதலை அவளுக்கு உணர்த்திய வண்ணம் இருக்க, அவளும் கணவனின் மென்மையான அணைப்புகளிலும், சின்ன சின்ன முத்தங்களிலும் கட்டுண்டு போக, அந்த கிராமத்துக் கிளிகளோ தங்களின் தடைகளையும், தயக்கத்தையும் உடைத்தெறிய நினைத்த தருணமது.
இன்றோடு யுவா தன் நிபந்தனை எனும் கோட்டை அழித்து ஒரு வாரம் கடந்திருக்க,
அன்றைய யுவாவின் வீடு மிகவும் பரபரப்பாகத் தான் இருந்தது.
மூன்று தினங்கள் முன்னர் தான் தனா காயுவின் மகவு வந்து பூமியில் உதித்திருக்க, அதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்த குடும்பத்தினரோ இன்று தான் தாயையும் சேயையும் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தனர்….
தங்கள் குழந்தையை ஏந்திக் கொண்டு காரிலிருந்து இறங்கிய மனைவியை “பாத்து, மொல்லமா இறங்குடா” என்று ஓடி வந்து அணைத்தபடியே அழைத்து வந்த தனாவையும் அவன் கையைப் பற்றியபடி நடந்து வந்த காயுவையும்,
“கொஞ்சம் இருங்கப்பா” என்று நிறுத்திய மீனாட்சியோ, அவர்களுக்கு ஆலம் சுற்றி உள்ளே அழைக்க…
அவர்களைப் பார்த்த நாச்சியோ, “வாத்தா வாத்தா காயூ, என் கொள்ளுப் பேத்தியும் நீயும் சொகமா இருக்கீகளா.?” என்று வினவ…
“நல்லாருக்கோம் அப்பத்தா” என்று அவருக்கு பதில் கூறினாள் காயத்ரி.
அதேநேரம் தனா தம்பதியருடன் உள்ளே நுழைந்த கதிரோ தான் தூக்கி வந்த காயூவின் உடைமைகளை அங்கிருந்த மேஜையில் வைத்தவன், அந்த அரண்மனை வீட்டையே விழிகளால் அலைய, அவன் விழிகள் தேடிய ஜானுவோ அவனைப் பார்க்கக் கூடாதென்றே பல்லைக் கடித்து அறைக்குள்ளே முடங்கியிருந்தாள்.
அந்த அரண்மனை வீட்டின் முதல் வாரிசை ஈன்று வந்திருந்த காயுவை சூழ்ந்து கொண்ட வீட்டினர் அனைவரிடமும் பதில் கூறிக்கொண்டிருந்த தமக்கையை ஓடி வந்து அணைத்து விடுவித்த மலர்விழியோ, “அக்கா உடம்புக்கு நல்லா இருக்காக்கா.?” எனக் கேட்டவாறே…
தமக்கையின் கரத்தில் இருந்த குழந்தையை “அப்டியே உன்ன மாறியே இருக்காக்கா” என்று சொல்லி தன் கரத்தில் ஏந்திக் கொண்டவளோ, ரோஜாக் குவியலாய் இருந்த அந்தப் பெண் மகவை யார் கையிலும் கொடுக்காது, “பட்டு, தங்கம் பொண்ணுக்குட்டி” என்று அவளே வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தாள் மலர்விழி.
அப்பொழுது தான் கீழே இறங்கி வந்த யுவாவோ அவர்கள் அனைவரையும் பார்த்தவன், காயுவிடம் நலம் விசாரித்து விட்டு, “வாழ்த்துக்கள் தனா” என்று அண்ணனிடமும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவன்…
அண்ணனின் குழந்தையைப் பார்க்க மனைவியின் அருகில் வந்தவனோ…
“குட்டி தனா என்ன சொல்றா.?” என்று மலரிடம் கேட்க…
அவளோ, “நா குட்டி தனா இல்ல சித்தப்பா, குட்டி காயுன்னு சொல்றா” என்று கணவனுக்கு பதில் கொடுத்தவள் தன்னருகில் நின்ற கணவனின் கரத்தைப் பற்றி தனை பார்க்கச் செய்தவள்….
“மாமா மாமா இங்க பாருங்க மாமா இந்த பட்டு எப்டி சிரிக்கிறான்னு, இந்த பட்டுக்குட்டியோட கை கால்லாம் பாருங்களேன் அப்டியே ரோஜாப்பூ போல அழகாவும் மிருதுவாவும் இருக்குல்ல மாமா” என்று ஆர்ப்பரிக்க…
மழலையாய் ஆர்ப்பரித்து அந்த மூன்று நாள் மழலையை கொஞ்சிக் கொண்டிருந்த மனைவியின் அழகில், தான் பார்க்க வந்த அண்ணன் குழந்தையை மறந்து மலர்விழியைத் தான் பார்வையாலே பருகியிருந்தான் யுவா.
குழந்தை போல் தலையை ஆட்டி ஆட்டி தன் தமக்கை குழந்தையை கொஞ்சியவளின் அழகில் கிறங்கியவனுக்கோ, ‘தங்கள் குழந்தையையும் கொஞ்ச வேண்டும்’ என்ற பேராசை பெருக்கெடுக்க, அண்ணன் குழந்தையை கொஞ்சும் சாக்கில் மனைவியை நெருங்கி அமர்ந்து கொண்டவன் அவள் செவியோரம் குனிந்து…
“டீ விழி, நம்மளும் இந்த பட்டு மாறி ஒரு பாப்பாவ பெத்துக்கலாமா.?” என்று வினவ…
அவளோ, “அதான் இன்னும் பத்து மாசத்துல பொறந்துருமே மாமா” என்றாள்…
மனைவியின் பதிலில் அதிர்ச்சியாகி அவளைத் தனியாக தள்ளிக் கொண்டு வந்தவன்…
“அதெப்புட்றி பத்து மாசத்துல கொழந்த பொறக்கும், நாந்தே ஒண்ணுமே பண்ணிலியே” என்று நெஞ்சை பிடித்துக் கொண்டு கேட்க…
அவளோ, “பொய் சொல்லாதீகத்தான்” என்றாள்.
மலரின் வார்த்தையில்…
‘நமக்கே தெரியாம எதும் நடந்துருச்சா’ என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டவனைப் பார்த்த மலரோ…
“என்ன யுவித்தான் ஒண்ணுமே தெரியாத மாறிப் பாக்குறீக, அன்னிக்குதே என்னய கட்டிப்புடுச்சு இங்கன முத்தம்லா குடுத்தீகள்ள” என்று தன் இதழ்களை தொட்டுக் காட்டி முகம் சிவந்தவளோ…
“சினிமாப் படத்துலயெல்லாம் புருஷன் பொஞ்சாதிய கட்டிபுடுச்சு முத்தம் குடுத்த பத்து மாசத்துல கொழந்த பொறந்துருமே, அப்ப நமக்கும் சீக்கிரம் கொழந்த பொறந்துரும்லத்தான்.?” என்று தலை சரித்து வினவியவளைக் கண்டு, இப்பொழுது தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் யுவா.
தாம்பத்தியம் பற்றிய மலரின் புரிதலில், “முன்ன நிபந்தனன்ற பேர்ல நா இவள சுத்தல்ல விட்டீன், அதுக்கெல்லாம் சேத்து, இவ என்னய கடைசி வர, கன்னிப் பையனாவே வச்சு செஞ்சுருவா போலயே கடவுளே” என்று உள்ளூறப் புலம்பிய யுவா, அறியவில்லை போலும் அவர்கள் இருவரையும் வச்சு செய்யப்போவது விதி என்று…
மலரின் இந்த அறியாமையில் அவனுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தையும் தாண்டி, ‘இந்தளவுக்கு வெகுளியான அப்பாவிப் பொண்ணுகிட்டப் போய் அப்டி ஒரு கண்டிஷன போட்டு இவ்ளோ நாளா அவள படாத பாடு படுத்திட்டமே’ என்று அவன் உள்ளம் முழுதும் குற்ற உணர்ச்சியே சூழ்ந்து கொள்ள… தன் முகம் பார்த்த மலரை வாஞ்சையாய் வருடிக் கொடுத்தவனோ….
“டேய் மொசக்குட்டி… கொழந்த (குழந்தை) பொறக்கணும்னா முத்தம் மட்டும் குடுத்தா பத்தாதுடா” என்று குழைந்த குரலில் கூறினான் யுவா…
இப்பொழுது கணவனைக் கேள்வியாகப் பார்த்த மலரோ, “அப்றம் என்ன செஞ்சா கொழந்த பொறக்கும் யுவித்தான்.?” என்று புரியாமல் கேட்க….
அவனோ, “அது, அது எப்டி சொல்றது” என்று திணறியவனுக்கு சட்டென்று ஏதோ தோன்ற…
“அதுக்குனு ஒரு ஸ்பெஷல் யோகா இருக்கு விழி, அத நா உனக்கு கத்துத் தரவா.?” என்று அவளின் காதோரம் மீசை முடியை உரசியவனோ, யோகாவை வைத்தே மலரை ஸ்வாகா செய்ய நினைத்தானோ…
“ஸ்பெஷல் யோகாவா.?” என்று விழி விரித்தவளுக்கு அவனின் தினசரி யோகாப் பாடம் வேறு ஞாபகம் வந்து அவளின் கன்னத்தை சிவக்க வைக்க…
நாணமும், எதிர்பார்ப்பும் நிறைந்த விழிகளால் கணவனை ஏறிட்டு நோக்கியவள், “ஸ்பெஷல் யோகா பண்ணா நிஜமாவே புள்ள பொறக்குமாத்தான்” என்று மீண்டும் வினவியவளின்
சிவந்த கன்னத்தை பிய்த்து வாயில் போட்டுக் கொண்டவனோ, மனைவியின் அறியாமைப் பேச்சை ரசித்துக் கொண்டே “ஆமாம்” என்று தலையாட்டவும்…
“அப்பசரி யுவித்தான் நா கத்துக்குறேன்” என்று தயங்கித் தயங்கிக் கூறியவளை….
“என் செல்ல மொசக்குட்டி” என்று இறுக்கி அணைத்து விடுவித்தான் யுவா…
“இதே மாறி யோகா கத்துக்குறப்போவும் சமத்தா இருக்கணும், நைட்டு ரெடியா இரு, மாமா சீக்கிரம் வந்தர்றேன்” என்று
அவள் அதரங்களை விரலால் சுண்டிவிட்டு தொழிற்சாலைக்குச் சென்ற யுவராஜூக்கோ வேலையும் ஓடாமல், நேரமும் ஓடாமல், சிரமப்பட்டு மாலை வரை தொழிற்சாலையில் நேரத்தை நெட்டித் தள்ளியவன்…
மலருக்கு கற்றுக் கொடுக்கப் போகும் ஸ்பெஷல் யோகாவை அசை போட்ட வண்ணமே, மாலையில் உல்லாசமாக வீடு திரும்ப, அவன் கைபேசியோ மெல்ல ஒலியெழுப்பியது.
அதை உயிர்பித்து செவியில் பொருத்தியவனோ, அதில் கூறப்பட்ட செய்தியில் ஜீப்பின் நிறுத்து விசையை பலமாக மிதிக்க, அவன் உதடுகளோ…
“டேய் கதிரவா, ஏன் டா இப்டிப் பண்ண” என்றுதான் முனகியது.