தளிரின் தீர்ப்பு வந்த தினம் கோர்ட்டில் இருந்து கிளம்பிய உதய் ராகவனிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு தொழில்முறை நண்பர் ஒருவரின் திருமண வரவேற்பிற்காக பெங்களூருக்கு சென்றுவிட்டான்.
அதேநேரம் அன்னபூரணி பேசிய பின்னர் திருமணத்தை தாமதமின்றி நடத்தி விட முடிவு செய்திருந்த அண்ணாமலை ஒருவாரம் முன்னதாகவே தளிர் வீட்டிற்கு சென்று திருமண தேதியை உறுதி செய்துவிடலாம் என்று மகன் மற்றும் பேரனிடம் தன் நிபந்தனைகளை முன் வைத்து பேசியிருக்க.. அதில் உடன்பாடு இல்லாத உதய்க்கும் அண்ணாமலைக்கும் மீண்டும் கருத்து முரண் ஏற்பட்டிருந்தது.
இருவருமே அவரவர் நிலையில் இருந்து தர்க்கம் செய்து கொண்டிருக்க இடையிட்ட அம்பலவாணன் தான் மகனிடம் முதலில் திருமணம் நடக்கட்டும் அதனால் விட்டுகொடுத்து பொறுமை காக்குமாறு கூற… உதயாதித்தனோ இருமனதாகவே தந்தைக்கு கட்டுபட்டவன் ‘இன்னும் தீர்ப்பு வராத நிலையில் அவசரப்பட வேண்டாம் தீர்ப்பு வந்த பிறகு பார்த்துகொள்ளலாம்’ என்றுவிட்டான்.
இதோ இன்று தீர்ப்பு வந்து தளிரையும் உதய்யையும் அனைத்து செய்தி ஊடங்கங்களும் கொண்டாடி கொண்டிருக்கும் நிலையில் அண்ணாமலைக்கு உச்சி குளிர்ந்து போனது… இதுநாள் வரை பேரனை பற்றி அவர் காது படவே பேசியவர்களை வீட்டிற்கே அழைத்து ‘இப்போ என் பேரனை பற்றி பேசுங்கடா பார்க்கலாம்’ என்ற ரீதியில் செய்தியை ஓடவிட்டு அவர்களை பார்க்க,அண்ணாமலையை நேருக்கு நேர் பார்க்க முடியாமல், “மன்னிச்சுடுங்க மாமா, பேசினது தப்பு தான் சித்தப்பா மன்னிச்சுடுங்க, தெரியாம பேசிட்டோம்யா” என்று மனதார வருந்தி மன்னிப்பு கேட்டிருந்தனர்.
அவர்கள் செல்லவும் மகிழ்ச்சியோடு மனைவியை தேடி சென்றவர், ‘அதுதான் தீர்ப்பு வந்துடுச்சே பூரணி இனியும் தாமதிக்க கூடாது திருமணத்தை உடனே நடத்திடலாம்’ என்றவர் அன்னபூரணியிடம் கலந்தாலோசித்து அடுத்தநாளே தளிர் வீட்டிற்கு செல்லும் முடிவை எடுத்துவிட்டிருந்தார்.
மருமகளிடம் அதற்கு வேண்டிய ஏற்பாட்டை செய்ய சொல்லிவிட்டு மகன் மற்றும் பேரனின் வரவிற்காக அவர் காத்திருக்க இரவு அம்பலவாணன் மட்டுமே வந்திருந்தார்.
பேரனை விசாரிக்கவும் அவன் பெங்களூர் சென்றிருக்கும் விஷயத்தை சொல்ல உடனே உதய்க்கு அழைத்தார்.
ஆனால் நெட்வொர்க் பிரச்சனையால் இரண்டு மூன்று முறை அவனுக்கு அழைப்பு விடுத்தும் அவனை பிடிக்க முடியாது போனது. அம்பலவாணனுக்கு அடுத்தநாள் முக்கிய கூட்டம் இருப்பதால் மாலை தளிர் வீட்டிற்கு செல்வதாக முடிவு செய்யபட்டு காலை மகள்களுக்கும் சீதாவிற்கும் முறைப்படி செய்தி சொல்லப்பட்டது.
வரவேற்பு முடித்து நண்பர்களோடு வெளியில் சென்றிருந்த உதய் நள்ளிரவு பயணம் வேண்டாம் என்று பெங்களூரிலேயே தங்கிவிட்டு அதிகாலையே கிளம்பி வேலூருக்கு வந்துவிட்டான். வீட்டிற்கு சென்று கொண்டிருந்தவனுக்கு preowned கார்களின் முக்கிய பிரான்சில் இருந்து அவசர அழைப்பு வரவும் நேரே அங்கு சென்றுவிட்டவன் வேலையை முடித்துக்கொண்டு கிளம்ப அதற்குள் ஷோரூமில் இருந்து செல்வம் அழைத்துவிட்டான்.
புதிதாக வந்திறங்கிய கார்களில் இருந்த குறைபாடு குறித்து பேசியவன் அவனை உடனே வரசொல்ல ஷோரூமிற்கு வந்து கார்களை பார்வையிட்டு வீட்டிற்கு கிளம்புவதற்காக உதய் தன்னறைக்கு வந்த போது தான் அம்பலவாணனால் மகனை பிடிக்க முடிந்தது.
இன்று மாலை தளிர் வீட்டிற்கு செல்வது குறித்து அவர் சொல்லவும்,
“ப்பா இப்போதானே கேஸ் முடிஞ்சிருக்கு உடனே கல்யாணமா..? அவளுக்கு ப்ரீதிங் ஸ்பேஸ் கூட கொடுக்காம ஏன் அவசரமா இன்னைக்கே போகணும்…?” என்றவனுக்கு இத்தனை நாள்கள் சரத்தால் ஏற்பட்டிருந்த கோபம், குற்றஉணர்வு, குழப்பம், அழுத்தம் என்று எதையும் தன்னிடம் பகிராமல் தனக்கு பிடி கொடுக்காமல் தன்னை அவள் வாழ்வில் இருந்து விலக்கும் முயற்சியில் இருந்தவளிடம் அனைத்தையும் பேசி தெளிவு செய்து திருமணத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற எண்ணியிருந்தான் உதய்.
ஆனால் நேற்று வரவேற்பிற்கு சென்று விட்டவன் இன்று மாலை தான் தளிரை சந்தித்து பேச முடிவு செய்திருந்தான் ‘அதற்குள் இவர்கள் ஏன் அவசரபடுகிறார்கள்..?’ என்ற கேள்வியுடன் உதய் அமர்ந்திருக்க..,
“நீதானே உதய் கேஸ் முடிஞ்சதும் போகலாம்னு சொன்ன..?” என்றவருக்கு ஏற்கனவே தளிர் நகை, உடைகளை கொண்டு வந்து கொடுத்ததிலேயே சிறு நெருடல்..! அதைவிட திருமண செலவுகள், சரத்தால் ஏற்பட்ட நட்டத்திற்காக என்று வீடு மற்றும் நிலப்பத்திரத்தையும் கொடுத்ததில் அவருக்கு சுத்தமாக உடன்பாடு இல்லை.
ஆனால் தளிரின் சுயமரியாதையை கருத்தில் கொண்டு மகன் வார்த்தைகளில் அப்போதைக்கு அதை ஏற்றிருந்தார்.
இத்தனைக்கும் சரத்தால் ஏற்பட்ட நஷ்டத்தில் பெரும் பகுதியை அலர் சரத் மூலமாகவே அவர்களுக்கு ஈடுகட்ட செய்திருந்தாள். அதோடு அவர்களின் இன்ஷூரன்ஸ் என்று ஓரளவு எல்லாமே கைக்கு வந்து சேர்ந்த பிறகு தளிர் இப்படி உறவை முறிப்பது போல செய்ததில் அவருக்கு அதிருப்தி!
“என்னம்மா இது வாழற வீட்டு பத்திரத்தை கொண்டு வந்து கொடுக்கற..? அப்படி என்ன கட்டாயம் உனக்கு நாங்க யாரும் இதையெல்லாம் உன்கிட்ட கேட்கவே இல்லையே அப்புறம் ஏன்..?” என்றிட தளிரிடம் கனத்த மௌனம்.
“ஏற்கனவே புடவை நகை கொடுத்துட்ட இப்போ பத்திரம்…! இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்..? ஏன் என் பையனை உனக்கு பிடிக்கலையா..? இல்ல எங்க மேல நம்பிக்கை இல்லையா..? இல்ல யாராவது உன்னை ஏதாவது மனச கஷ்டபடுத்தி பேசிட்டாங்களா..? எதுவா இருந்தாலும் என்கிட்டே சொல்லும்மா.. நான் உனக்கு மாமனார் மட்டுமில்ல தாய்மாமாவும் தான்..! பயப்படாம சொல்லு” என்றவருக்கு ஜெகா ராஜியால் இம்முடிவோ என்ற எண்ணமே..!
ஆனால தளிர் பதிலளிக்காமல் அமைதியாக இருக்க அவருக்கு மகன் பேசியது நினைவில் எழ, “சரி நீ இதையெல்லாம் எடுத்துட்டு கிளம்பு தளிர் நாம அப்புறம் பேசலாம் ஆனா கேஸ் முடிஞ்சதும் கண்டிப்பா கல்யாணம் நடக்கும்” என்றபோதும் அவளிடம் மௌனம்.
“நீ எதையும் கேட்க மாட்டியா சீதா..?” என்று அம்பலவாணன் சற்று காட்டமாகவே கேட்க,
“ண்ணா…” என்று கண்ணீரோடு சீதா மகளை தான் பார்த்தார்.
“ப்ளீஸ் மாமா எல்லாமே என்னால தான்..! நான் பாவி..!! என்னால எல்லாருக்கும் எவ்ளோ கஷ்டம்” என்றவளுக்கு இன்னுமே உதய்யின் விபத்து, பள்ளி தொழிற்சாலைகளில் ஏற்பட்ட தீவிபத்து அனைத்தும் மனதை விட்டு அகலாது இருக்க “என்னோட பாவத்துக்கு பிராயச்சித்தம் பண்ண விடுங்க மாமா ப்ளீஸ்…” என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் இமை மீறியது.
“நீ என்னம்மா பாவம் பண்ணின..? ஏன் இப்படி பேசற..?”
“ப்ளீஸ் மாமா என்னை புரிஞ்சுக்கோங்க…” என்று பத்திரத்தை நீட்டி கண்ணீரோடு தளிர் அவரை பார்த்த பார்வையில் அதற்குமேலும் அவளை கடிய முடியாதவர் அப்போதைக்கு அதை வாங்கி வைத்து கொண்டார்.
ஆனால் ‘இது எங்கே எப்படி சென்று முடியுமோ..?’ என்ற அச்சத்துடனே இதுநாள் வரை அமைதி காத்து வந்தவரின் அச்சத்தை அதிகரிப்பது போல இப்போது மகனும் ‘உடனே செய்ய வேண்டுமா..?’ என்றதில் பெரிதும் பரிதவித்து போனார்.
“ப்பா நான் தான் சொன்னேன்! ஆனா இப்படி அடுத்த நாளேன்னு சொல்லலையே… முதல்ல எனக்கு தளிர் கிட்ட பேசணும்”
“பேசணுமா..? அதுதான் பிரச்சனை முடிஞ்சதே உதய் இன்னும் என்ன பேசணும்..? எனக்கு புரியல.. ஏன் தளிருக்கு வேறே ஏதாவது பிரச்சனையா..? இல்ல உங்களுக்குள்ள பிரச்சனையா..?” என்று தந்தை பதறுவதை கண்டவன்,
“ப்பாஆ.. ப்பா அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா நீங்க வைங்க நான் வீட்டுக்கு வந்து பேசுறேன்” என்ற போது தான் தளிர் அங்கே வந்தது.
ஆனால் அவள் பேசி முடித்து சென்றதில் என்ன முயன்றும் மட்டுபடுத்த முடியாத கோபத்தோடு அமர்ந்திருந்தவன் அதன்பின் யாருடைய அழைப்பையும் ஏற்கவில்லை.
**********************
இங்கே ராஜியை பேசிவிட்டு நிவியின் அறைக்குள் நுழைந்து கைபேசியை சார்ஜரில் போட்டுவிட்டு அமர்ந்த ராகவனுக்கு கோபம் அத்தனை சீக்கிரம் குறையவில்லை.
‘என்ன பெண்மணி இவர்..! எப்படி அடுத்தவரின் அந்தரங்கத்திற்குள் நுழையலாம்..? இப்போது தளிர் உதய் விஷயத்தில் தான் இப்படியா இல்லை முன்பிருந்தேவா..? எப்படி மற்றவர்களுக்கு இவரின் போக்கு தெரியாமல் போனது..?’ என்று கோபத்தோடு நடைபோட்டவன் அம்பலவாணனுக்கு அழைத்து விட்டான்.
“நான் நம்ம வீட்ல தான் இருக்கேன் மாமா. நீங்க வாங்க நான் வைட் பண்றேன்” என்றவன் அப்படியே மெத்தையில் சாய்ந்து கண்களை மூடிட இப்போது அவன் மனதில் காலை நிகழ்வுகள் படையெடுத்து இதுவரை வீடியோவை பார்க்காத நண்பன் மீது அவன் கோபம் திரும்பி இருந்தது.
“ஆம் வீடியோ தான்..!”
தளிர் உதய்யை பேசிவிட்டு கிளம்பிய பின்னர் நிவியை சமாதானபடுத்தி வீட்டிற்கு அழைத்து செல்ல அவளும் குழந்தைக்கு பால் கொடுத்து மாமியாரிடம் விட்டுவிட்டு சுஜியை அழைத்துக்கொண்டு தளிர் வீட்டிற்கு வர அங்கு அவள் இருந்த கோலத்தை கண்டு ராகவன் பெரிதும் மிரண்டு போனான்.
பின்னே இதுநாள் வரை அவன் கண்ட தளிருக்கும் இப்போது கண்ணீரும் கதறலுமாக தென்றலிடம் மனதை திறந்து அனைத்தையும் கொட்டிக்கொண்டு இருந்தவளுக்குமான வித்யாசம் அவனை வெகுவாக மிளர செய்ய உடனே உதய்க்கு வீடியோ கால் செய்தான்.
ஆனால் கோபத்தில் உதய் மூன்று அழைப்புகளையும் ஏற்க மறுத்த ஆதங்கம் மிகுந்த போதும் தளிரின் பேச்சில் நெகிழ்ந்திருந்த போதும் சட்டென சாதூரியமாக செயல்பட்டவன் தளிர் தென்றலிடம் பேசுவதை காணொளியாக பதிவு செய்ய தொடங்கிவிட்டான்.
சுஜியும் நிவியும் தளிர் பேச்சில் வசப்பட்டு கண்ணீரோடு நின்றிருந்ததில் இவன் வீடியோ எடுத்ததை கவனிக்கவில்லை. சுஜி ஓடிசென்று தளிரை அணைத்துக்கொண்டு பேசுவதையும் பதிவு செய்து உடனே வீடியோவை உதய்க்கு அனுப்பியவன் “மச்சான் எமெர்ஜென்சி உடனே வீடியோவை பாருடா ப்ளீஸ்!!” என்று மெசேஜ் அனுப்பிவிட்டே அறையினுள் நுழைந்திருந்தான்.
அதன்பிறகு தான் வேறு இடம் மாறபோவது குறித்தும், கவின்மலர் குறித்தும் பேசிய தளிர் எதையும் உதய்யிடம் சொல்லக்கூடாது என்று அவர்களிடம் சத்தியம் பெற்றது..
அப்போதும் ராகவன் கைபேசியை எடுத்து பார்க்க அதுவரையிலும் உதய் வீடியோவை பார்க்கவே இல்லை. அப்போது மட்டுமல்ல தளிர் முகம் கழுவ செல்லவும் ‘உதய் பார்த்துவிட்டானா..?’ என்று நொடிக்கொரு முறை ராகவன் ஆராய்ந்து கொண்டே தான் இருந்தான்.
அதன்பின் காரில் செல்லும் போது ராஜியிடம் பேசிவிட்டு தளிரோட பேசிக்கொண்டு வந்தவன் அவள் கொண்டிருந்த வேதனையிலும் கண்ணீரிலும் அதை மறந்தே போனான்.
இப்போது ராஜியிடம் பேசி விட்டு அறையில் வந்து கைபேசியை உயிர்பிக்க அது உயிரை விட்டிருந்தது. உடனே சார்ஜரில் போட்டுவிட்டவனுக்கு தளிர் வெளியில் வரும் வரை நொடிக்கு நொடி பதற்றம் கூடிக்கொண்டே போனது.
தளிர் கீழே செல்வதை கண்டவன் உடனே உதய் அறைக்குள் நுழைந்து, “மச்சான் என் ஃபோன் கால் கூட அட்டென்ட் பண்ண முடியாதளவு அப்படி என்னடா கோபம்..? தளிர் பாவம் மச்சான் நீ.. நீ கோபத்துல தளிரை எதுவும் பேசிடலை தானே” என்று பதைபதைப்போடு கேட்டவாறே உதய்யை நெருங்கியவன் அடுத்த நொடி விழியகல அதிர்ச்சியில் உறைந்து போனான்.
“டேய் என்ன..டா இது..?”
“சொல்றேன் மச்சான்! நீ முதல்ல போய் அவளை பாரு..” என்று உதய் சொன்னது அவன் காதில் விழவே இல்லை அந்தளவு உதய் முகத்தில் இருந்த பற்தடத்திலும் ஆங்காங்கே எட்டி பார்த்திருந்த ரத்தத்திலும் நிலைகுத்தியிருந்தது அவன் விழிகள்.
“சொல்றேன் அதுக்கு முன்ன அவளை பத்திரமா வீட்ல கொண்டு போய் விட்டுட்டு வா” என்று ராகவனை அனுப்ப அவனோ ‘தளிர் தானே சென்று கொள்வேன்..’ என்றதில் அவசரவசரமாக உதய் அறைக்கு விரைய கதவு தாளிடப்பட்டு இருந்தது.
***************************
‘அவளளித்த அதிர்ச்சி குறையவும் தன் பொய்யை வெகு சீக்கிரமாகவே உதய் கண்டுகொள்வான்’ என்று இளந்தளிர் உதயாதித்தனை மிகச்சரியாகவே கணித்திருந்தாள்.
ஆம் முதலில் அவள் காண்பித்த சர்டிஃபிகேட்டிலும் அதற்கு அவன் தான் காரணம் என்றதிலும் காயப்பட்டு போனவனின் சிந்தையை அதன் பின் தளிரின் வார்த்தைகள் வசப்படுத்தியதில் அவனால் எதையுமே சரியாக உள்வாங்கி கிரகிக்க முடியவில்லை.
கட்டுகடங்காத சீற்றத்தோடு இருந்தவன் அவள் சென்ற சில நிமிடங்களிலேயே அன்று சரத்திடமே ‘தன்னை கணவன் என்றும் தனக்கு அவள் மீது உரிமை உண்டு என்றும் பேசிவிட்டு வந்தவள் திடீரென இப்படி பேச காரணமென்ன..? நிச்சயம் தன்னை அவள் வாழ்வில் இருந்து வெளியேற்றும் முயற்சி அல்லாமல் வேறு எதுவுமில்லை’ என்று வெகு விரைவிலேயே கண்டுகொண்டான்.
‘தன்னை பற்றி நன்கு தெரிந்திருந்தும் எப்படி அவளால் இப்படி ஒரு குற்றச்சாட்டை சுமத்த முடிந்தது..?’ என்ற கோபத்தோடு சர்டிஃபிக்கேட்டை எடுத்து கிழிக்க போனவன் அப்போது தான் அதில் இருந்த தேதியை பார்க்க தளிர் மீதான கோபம் இன்னுமே கூடியது.
‘பின்னே ஐந்து மாதங்களுக்கு முன்னே எடுத்ததை வைத்து இன்று பேசி விட்டு சென்றதற்கு என்ன அர்த்தம்..? என்னை என்ன முட்டாள்னு நெனச்சிட்டு இருக்காளா..?’ என்றெண்ணிய உதய்க்கு வெர்ஜினிட்டி டெஸ்ட் ஐந்து மாதத்திற்கு முன்பு அல்ல அதற்கும் முன்னமாகவே எடுத்துவிட்டது தெரியாது.
“என்ன தைரியம் இருந்தா நான் அவ மனசை தொடலைன்னு என்கிட்டே பொய் சொல்லுவா..?” என்று வாய்விட்டு சொல்லிக்கொண்டவனுக்கு இப்போது தான் “இல்லை” என்ற பதிலை சொன்ன போது வழக்கம் போல தளிரின் இதழும் விழிகளும் பொய் சொல்வதற்குள் என்ன பாடுபட்டது என்பது நினைவு வர இன்னுமே கோபம் கூடியது.
“அதோட நிற்காம ஸோ கால்ட் லவ்..! அவ மனசை பற்றி எனக்கு கவலை இல்ல, பொண்டாட்டின்னு சொல்லி தேடி வரகூடாதுன்னு ஆர்டர் வேற..! தக்காளி நீ யாருடி எனக்கு ஆர்டர் போட..?” என்று கொதித்து போனான்.
“எவ்ளோ ஈஸியா என்னை பிடிக்கலை, நான் வேண்டாம், அவ மனசை தொடலை, அவ மேல இருக்கிறதுக்கு பேர் காதல் இல்லைன்னு பொய் மேல பொய்யா சொல்றா..! அதைவிட என்னை பிரிஞ்சு நிம்மதியா, சந்தோஷமா இருந்துடுவாளா..?” என்று கோபத்தோடு காரின் வேகத்தை அதிகரித்து கிட்டத்தட்ட பறக்க விட்டிருந்தான்.
“எது கேட்டாலும் எல்லாத்துக்கும் ஒரு குறளையும் கதையையும் வச்சிருக்கிறவளுக்கு பொய் சொல்றது தப்புன்னு தெரியாதா..? ஒரு பொய்யா இரண்டு பொய்யா என்கிட்டே வாயை திறந்தாலே பொய் மட்டும் தான் சரளமா வருது. இவளே இப்படி இருந்தா இவ கிட்ட படிக்கிற ஸ்டூடண்ட்ஸ் எப்படி இருப்பாங்க…?” என்று வழி நெடுக அவளை வறுத்தெடுத்து கொண்டே தான் வந்தான்.
அதே கோபத்தோடு வீட்டிற்கு வந்தவன் ராஜியிடம் உணவை மறுத்துவிட்டு அறைக்கு சென்றான்.
ஆற்றாமையோடு கட்டிலில் விழுந்தவன் எத்தனை நேரம் அவளை அர்ச்சித்து கொண்டிருந்தானோ தெரியாது செல்வத்திடம் இருந்து அழைப்பு வரவும் எடுத்து பேசியவன் அப்போது தான் அதில் ராகவனின் பல அழைப்புகள் கூடவே “அவசரம்!! ப்ளீஸ்” என்ற குறுஞ்செய்தியும் இருப்பதை கண்டான்.
உடனே உதய் திறக்க அவன் அனுப்பிய காணொளியில் தளிர் கதறிக்கொண்டு இருந்தாள்…
அதை பார்த்தவனின் விழிகளில் பெரிதாக ஆச்சர்யமோ அதிர்ச்சியோ இல்லை. மாறாக தன்னை காயபடுத்தி தன்னை விடவும் அதிக வலியை அனுபவிப்பவள் இதை தான் செய்து கொண்டிருப்பாள் என்றும் அவனுக்கு தெரியும்.
என்ன ஒன்று இதுநாள் வரை தன் முன்னே கூடுமானவரை கண்ணீர் சிந்தாமல் தைரியமாக இருப்பதாக காட்டிக்கொண்டவள் அண்ணாமலையிடம் அழுதது குறித்து அவனும் அறிவான் தான். ஆனால் அவை எல்லாம் அவன் கேட்டது தான் ஒருபோதும் அவள் இப்படி கதறி பார்த்திறாதவனுக்கு இப்போது தளிர் படும் வேதனையை கண்டு கோபம் மறைந்து அவன் நெஞ்சிலும் சொல்லென்னா வலி எழுந்தது.
பின்னே எத்தனை எத்தனை நாள்கள் அவள் தன்னிடம் மனம் திறக்க வேண்டும் என்று போராடியிருப்பான் ஆனால் அழுத்தக்காரி எதற்கும் அசைந்து கொடுக்காமல் இப்போது கதறிக்கொண்டு இருக்கிறாளே.. அவள் மனதில் புதைந்திருக்கும் ரகசியங்களையும் அறிந்திருப்பவனிடம் அனைத்திற்கும் தீர்வு உண்டு.
ஆனால் அதற்கு அவள் ஒப்புக்கொள்ள மாட்டாள் என்பதாலேயே அவனும் தன் செயல்களை அவளுக்கு தெரியாமல் மறைக்க வேண்டியதாகி போனது.
இப்போது அவளின் ஒவ்வொரு வார்த்தையிலும் அவன் நெஞ்சில் வலி எழுந்து கண்கள் கலங்கி போவதை அவனால் தடுக்க முடியவில்லை அதோடு சேர்த்து அவள் கொண்டிருக்கும் பிடிவாதத்தில் அவன் கோபம் கூடுவதையும் தடுக்க முடியவில்லை.
‘இனியும் அவள் போக்கிற்கு விடக்கூடாது’ என்ற முடிவோடு முகத்தை அழுந்த துடைத்துகொண்டவன் குளித்துவிட்டு அவளை நேரில் பார்க்க முடிவு செய்து குளியலறைக்கு சென்றான்.
ஆனால் ஷவரை திறந்து விட்டு நின்றவனால் அடுத்து எதையும் செய்ய முடியாதளவு அவள் நினைவுகள் முட்டி மோதி அங்கேயும் அவள் கண்ணீர் அவனை வெகுவாக தடுமாற செய்தது.
‘அவருக்காக அவரையே இழக்க தயாரா இருக்கேன்! ஐ ஆம் மேட்லி இன் லவ் வித் ஹிம்..! அவரை தாண்டி யோசிக்க முடியலை, இவ்ளோ நடந்ததுக்கு நான் செத்திருக்கலாம் ஏன் உயிரோடு இருக்கேன், சேர முடியாத எங்களை ஏன் கடவுள் பார்க்க வைக்கணும், நான் ஜெயிக்கறதை விட என்னால உதய் எங்கயும் தோத்துடக்கூடாது, என் தப்புக்கு என் உயிரை விலையா கொடுப்பேன் ஆனா உதய்யை கொடுக்க மாட்டேன், ஆசைப்பட தகுதி வேணும் ஆனா நான் அவருக்கு தகுதியில்லாதவ, எனக்கு அருகதை இல்ல..’
‘அவர் மட்டும் தான் என் புருஷன்! வேற யாருக்கும் என் மனசுல இடமில்லை, ஐ லவ் ஹிம் மோர் தென் எனிதிங் அந்தளவு பைத்தியக்காரத்தனமா லவ் பண்றேன்’ என்றவளின் வார்த்தைகள் அவன் செவியில் சுழன்று அவள் கண்ணீர் முகம் மனக்கண்ணை விட்டு அகலாது போக,
“உனக்கு என்மேல எந்தளவு பைத்தியம் முத்தி போயிருக்கு உனக்கு முன்னாடியே எனக்கு தெரியும்டி..!” என்று கசந்த முறுவலோடு சொல்லிக்கொண்டவனுக்கு அவள் கதறலில் இருந்து இன்னுமே மீள முடியாது போக திறந்திருந்த தண்ணீரோடு சத்தமேயில்லாமல் அவன் கண்ணீரும் கலந்தது.
கனத்த மனதுடனே ஒருவழியாக குளித்து வெளியில் வந்தவன் தளிர் அவனறைக்கே வருவாள் என்பதை கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.