அந்த விமானத்தின் நுழைவாயிலில் வரவேற்று அவன் பயண சீட்டினை சரிப்பார்த்து உள்ளே அனுப்பிய ஏர்ஹோஸ்டஸை ஒரு புன்னகையோடு கடந்து தோளில் சுமந்திருந்த பேக்கினை தனக்கு கொடுப்பட்டுள்ள இருக்கையின் மேல் வைத்துவிட்டு அமர்ந்தான் ஜோஷ்வா.
மற்ற காயங்கள் ஆறி மறைந்து இருந்தாலும் கால் மட்டும் இன்னும் பழையபடி வரவில்லை. அதை மறந்து அவன் வழக்கமான வேக நடையிட்டு வந்ததால் அமர்ந்தவுடன் காலில் லேசாய் வலி எடுக்க,
“தாத்தா.. எல்லாம் உன்னால தான்..” என்று மானசீகமாய் அவரை வறுத்து எடுத்தான். ஏனெனில் இப்பயணத்திற்கு முழு முதற்காரணம் அவனின் தாத்தா ரெமிஜியஸ் தான்.
அன்று மருத்துவமனை வந்துசென்ற தேவிப்ரியா மனம் பொறுக்காமல் தன் தந்தையை அழைத்து அழுது தீர்த்தார் என்று தான் சொல்ல வேண்டும். தன் மனபாரத்தை யாரிடமும் பகிர முடியாததால் தன் தந்தையிடமே சரணடைந்தார்.
“நீங்க தானே அவனை அவன் இஷ்டத்துக்கு விட்டீங்க.. எப்பவும் எதாவது செஞ்சு எல்லார் உயிரையும் எடுத்தது போதாதுனு இப்ப தானும் அடிப்பட்டு ஹாஸ்பிட்டலில் இருக்கான்.. என்னை அவன் கிட்டவே நெருங்க விடல.. நீங்க வந்து பாருங்க ப்பா.. ப்ளீஸ்..”
என்ற மகளின் புலம்பலில் குன்னூரில் இருந்து மறு விமானத்திலே புறப்பட்டு ஜோஷ்வாவிடம் வந்து சேர்ந்திருந்தார் ரெமி.
தாத்தாவை கண்டதுமே அது தன் அன்னையின் வேலையாக தான் இருக்கும் என்று புரிந்தது. அவரை தவிர யாரும் ரெமிஜியஸிடம் தன் விபத்து குறித்து கூறியிருக்க மாட்டார்கள் என உணர்ந்து பல்லை கடித்தவன் அவரிடமும் அதேபோல் எரிந்து விழுக அவனை வளர்த்தவர் ஆகிற்றே அதற்கெல்லாம் அசருபவரா..??
“இத்தனை நாள் உன்னை கண்டுக்காம விட்டதே தப்பா போச்சு.. நான் உன் தாத்தாடா.. என்னையே போக சொல்லுவியா நீ.. நான் இங்க தான் இருப்பேன்.. உன்னோட இந்த கோல்மால் வேலை எல்லாம் என்னிடம் ஆகாது.. உன்னால ஆனதை பார்த்துக்க..”
என பிடிவாதமாக இருந்ததில் அவன் தான் தழைந்து போக வேண்டியது ஆகிற்று. மற்ற எல்லோரிடமும் நக்கலாய் எள்ளாய் பேசி திரியும் ஜோஷ்வா தன் தாத்தனிடம் அடங்கி போனான் என்றே சொல்லலாம்.. ரெமிஜியஸ் ஒரு மாதமாய் இருந்து கவனித்து கொண்டாலும் அதற்குமேல் இருக்க முடியாமல் அவரின் வேலைகள் அணிவகுத்து நின்றது.
அதிலும் தன் தொழில்களில் மிக முக்கியமாய் கருதும் அவர் இயக்கி வரும் பள்ளியின் இருபத்தி ஐந்தாம் ஆண்டினை முன்னிட்ட வெள்ளி விழா இன்னும் சில வாரங்களில் நடைப்பெற உள்ளது. அதற்காக ஏற்பாடுகள் முழுவதையும் அவரே பார்ப்பதால் அங்கே செல்ல வேண்டிய கட்டாயம்..!! அதேசமயம் உடல் முடியாத போதும் வேலையிலே மூழ்கி கிடக்கும் பேரனை அப்படியே விட்டு செல்லவும் மனம் வரவில்லை. தானும் இல்லை என்றால் இன்னும் இஷ்டபடி திரிவான் என்று தெரியும்..
என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தவர் இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தவராய் அவனையும் தன்னோடு வர சொல்லி கட்டாயப்படுத்த ஜோஷ்வாவின் கொஞ்ச நஞ்ச பொறுமையும் பறந்தது.
“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க.. நீங்க என்ன சொன்னாலும் கேட்டுட்டு ஆடுவேன்னா..!! இல்ல இன்னும் சின்ன பையன்னா..? என் ஃபீனிக்ஸோடு லெவல் தெரியுமா உங்களுக்கு..?? நான் இருக்க பிரச்சனை என்ன.. நான் பிண்ணி வைச்சுருக்க திட்டம்.. அதோட சிக்கல்னு ஒரு நிமிஷம் உட்கார நேரம் இல்லாம ஓடிட்டு இருக்கேன்.. எதுவும் புரியாமல் அஃப்டரால் உங்க ஸ்கூல் சில்வர் ஜூபிலியன் ஃபங்க்ஷனுக்கு நான் வந்து உங்களுக்கு ஒத்தாசையா இருக்கணுமா…? நீங்க போகணும்னா தாராளமா போங்க.. என்னையும் வர சொல்ற வேலை எல்லாம் வேண்டாம்.. எல்லாத்துக்கும் ஒரு லிமிட் தான் தாத்தா..”
அவன் பொரிந்து தள்ளியதில் அமைதியாய் சில கணங்கள் அவனை நோக்கிய ரெமி தாத்தா பின்,
“பேசுவடா.. உன் விருப்பத்துக்காக உன் அம்மா – அப்பா எல்லாரையும் சமாளிச்சு உன்னை என்னோடவே வைச்சு கண்ணுக்கு கண்ணா பார்த்துகிட்டேன் பார்.. என்னை பார்த்து இதுவும் பேசுவ.. இன்னமும் பேசுவ..!! என் தொழில் அனுபவத்தில கால் பாகம் பெருமா உன் ஃபினிக்ஸ்.. நேத்து முளைச்ச நீ எல்லாம் என்ன கேள்வி கேட்குற.. எல்லாரும் சொல்றா மாதிரி நீ சுயநலவாதினு என்னுட்டையும் காட்டிட்டேல.. நல்லா இருடா..”
என்று வலிக்க பேசியவர் அதன்பின் அங்கே நிற்காமல் புறப்பட்டுவிட்டார்.
ஆனால் அதன்பின் அவனுக்கு தான் எந்த வேலையும் ஓடவில்லை. வாழ்வில் முதன்முறையாய் தன் நடத்தைக்காக வருந்திய ஜோஷ்வா அதனை சரிப்படுத்த வேண்டி குன்னூர் செல்ல முடிவெடுத்தான்.
அதன் பொருட்டு மற்ற பொறுப்புகளை தன் செயல் அதிகாரியிடம் ஒப்படைத்தாலும் ராமகிருஷ்ணனோடான சில வேலைகளை தானே இருந்து முடித்த பின்பு அரைமனதோடே இப்பயணத்தினை மேற்கொண்டுள்ளான்.
பக்கத்து இருக்கையில் யாரோ அமரும் அரவம் உணர்ந்தாலும் லட்சியம் செய்யாமல் வலி தெரியாமல் இருக்க தன் காலை வசதியாக வைத்து கண்களை மூடி படுக்க முயன்றவன் திடீரென என்ன தோன்றியதோ திரும்பி பார்க்க அவன் பார்க்கவே காத்திருந்தது போல் அனிச்சையாய் ஓர் புன்னகையோடு ‘ஹாய்..’ என்று கையாட்டி அருகில் அமர்ந்திருந்தது சாட்சாத் ஜென்சியே தான்.
விழியில் தோன்றிய ஆச்சரியம் பின்பு அழுத்தமாய் அவள்மீது படிந்து,
“நான் ஜோஷ்வா… மறுபடியும் மாத்தி நினைச்சு பேசிட்டு அப்புறம் வருத்தபட வேண்டாம்..” என்று சொல்லவும் அவள் முகம் சுருங்க,
“நீன்னு தெரிஞ்சு தான் பேசினேன்..”
என்று அவள் முனங்க, “ஹோ.. அப்படியா.. ரொம்ப சந்தோஷம்..” என்று போலியாய் புன்னகைத்து திரும்பிக் கொண்ட ஜோஷ்வா அவளுக்கு புதிதாய் தெரிந்தான்.
அவள் முறைத்தாலும் திட்டினாலும் எப்பவும் சிரிப்புடனே பதில் அளிக்கும் ஜோஷ்வா இன்று கத்தரித்தாற்போல் பேசியது அவளுக்கு என்னவோ போல் இருக்க மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாகி விட்டாள்.
விமானம் வானேறிய சில நிமிடங்கள் கடந்து அவள் பார்வை அடிக்கடி அவனிடம் படிந்து மீள்வதை உணர்ந்த ஜோஷ்வா,
“இப்படி பார்த்தால்..?? நான் என்ன சொல்லணும்னு எக்ஸ்பெக்ட் பண்ற ஜென்சி..”
அவளிடம் பார்வையை திருப்பாமலே வெகு கேஷ்வலாய் கேட்க,
“ஹாஸ்பிட்டல் ஏன் வரலைனு நீ கேட்க மாட்டேனு தெரியும்.. அட்லீஸ்ட் இப்ப எங்க போறன்னு ஆச்சும் கேட்பேன்னு நினைச்சேன்…”
என்றாள் அவனை போலவே..
“கேட்டு…? என் பர்ஷனலில் நீ ஏன் தலையிடுறனு மூக்கு உடைக்கவா..?? நீ மதிக்கலேனாலும் திரும்ப திரும்ப பேசுறேனு எனக்கு செல்ஃப் ரெஸ்பெக்ட்டே இருக்காதுனு நினைச்சுட்டியா ஜென்சி..?”
என்ன முயன்றும் அவன் குரலில் வழக்கமான ‘கூல்னஸை..’ கடைப்பிடிக்க முடியவில்லை.
மருத்துவமனையில் விளையாட்டாக கூறினாலும் அவள் மீண்டும் வருவாள் என்று உறுதியாக நம்பியவனுக்கு அவள் வராதது பெரிய ஏமாற்றம் தான்..! எதன் அடிப்படையில் அந்த எதிர்பார்ப்பை வளர்த்துக் கொண்டோம் என்று அவனே அறிந்திருக்கவில்லை.
இதுவரை இணக்கமாக அவள் பேசியது இல்லை என்றாலும் கண்ணுக்கு தெரியாமல் ஏதோ ஒரு பந்தம் இழைவதாய் நினைத்திருந்தவனுக்கு அவளின் இந்த புறகணிப்பு அப்படி இல்லை என்பதை பளீச்சென்று காட்ட அவன் இருந்த பிரச்சனைகளின் நடுவில் இவ்விஷயமும் சேர்ந்து மூளையை குடைந்தது. ‘எதற்கு தன்னிடம் இந்த அலட்சியம்..’ என அவள் மீது முதல் முறையாய் அவனுக்கு கோபம் வந்தது. அந்த கோபமே இன்று அவனின் வார்த்தைகளில் வெளிப்பட்டது.
“நான் சாதாரணமா தானே பேசுறேன்.. இப்ப எதுக்கு இந்த கோபம் ஜோஷ்வா…”
“ஸீ.. உன் லவ் ஸ்டோரி சொல்லு சொல்லுனு உன்னை சுத்தி வந்து டிஸ்டர்ப் பண்ணது என் தப்பு தான்… நான் பேசுனா ரொம்ப அட்வாண்டேஜ் எடுத்து தான் பேசுறேன்.. உன்னிடம் அப்படி தான் எனக்கு வருது… ஃபார்மலா ‘ஹாய்..’ ‘ஹலோ..’ ‘பை’நு அளவா பேச வராது.. அதுக்கு பெட்டர் நாம பேசாமலே இருந்திடலாம்..”
என்று கூறியவன் அவ்வளவு தான் என்பதுபோல் கண்மூடி சாய்ந்துவிட அவன் கோபத்தில் திகைத்தாள் ஜென்சி.
‘பேசவே வேணாமா..? அப்போ கோய்ம்புத்தூர் வந்ததும் நானும் இவனோட தான் குன்னூர் வர போறேன் தெரிஞ்சா என்ன செய்வானோ தெரியலையே..’
என்று அரற்றிய மனதினை,
“நாம ரெமி தாத்தாவோட கெஸ்ட்டா போறோம்.. இவன் என்ன பெருசா செய்திடுவான்.. என்ன வந்தாலும் பார்த்துகலாம் ஜென்சி..”
என்று சமாதானம் செய்து தன் வழக்கமான அமைதியோடு அடுத்த இரண்டு மணிநேரத்தை நெட்டி தள்ள காத்திருந்தாள்.
மனக்கண்ணில் அன்று ஜோசஃப்போடு பேசியவை மீண்டும் ஓடியது.
**
“பேசணும்னு சொல்லிட்டு அமைதியாவே இருந்தால் என்ன அர்த்தம் ஜோ..”
அவனின் அலுவலக அறையில் அமர்ந்திருந்த ஜென்சி கேட்க பெருமூச்சு விட்டவன் ஒரு முடிவுடன் எழுந்து பேச தொடங்கினான்.
“அன்னைக்கு ஹாஸ்பிட்டலில் ஒன்னு சொன்னேல ஜென்சி.. ‘பிரச்சனை உள்ளையே இருந்து பார்க்காமல் வெளி ஆளா யோசிச்சு பார்னு’ அது என் மைண்ட்ல உறுத்திட்டே இருந்துச்சு.. நீ யோசிக்காமல் பேசுற ஆள் கிடையாது. அதனால உன் வார்த்தையை என்னால அலட்சியம் படுத்த முடியல.. ஸோ நீ சொன்னா மாதிரி ஜோஷ்வாவோட எல்லா செயல்களையும் வேற ஒரு கோணத்தில் இருந்து பார்க்க ஆரம்பிச்சேன். எங்களை தவிர மற்ற விஷயங்களையும் தோண்டி துருவினேன்.. ஆனா அதுக்கு கிடைச்ச பதில் எல்லாம் என்னால நம்பவே முடியாத ஒன்னா இருந்துச்சு..”
என்று அவன் சொன்னபோது புருவங்கள் சுருங்க இறங்கிய கண்ணாடியை சரி செய்தபடி, “என்ன அது..” என்றாள் ஆராய்ச்சி குரலில்..
அதற்கு விடையாய் தன் மடிக்கணினியை அவளிடம் திருப்பிய ஜோ,
“இதுல உள்ள எல்லா ப்ராடெக்ட்ஸ் அண்ட் கம்பெனிஸை பார்..” என்று கூறி கர்சஸரை நகர்த்த அது போய் கொண்டே இருந்தது. அவற்றில் சிலவை அவளுக்கு நன்கு பரிச்சயம் ஆனது. சிலவை எங்கோ கேள்வி பட்டது.. சிலவை கேள்வியே படாதது என்ற அந்த வரிசை மிக பெரியதாய் இருந்தது.
“இது எல்லாமே ஜோஷால பாதிக்கப்பட்டது.. இதுல பாதி கூட இப்ப மார்கெட்ல இல்ல.. இன்னும் சிலது இப்பவோ அப்பவோனு இருக்கு..”
என்று சொல்ல, “வாட்..?” என்று அதிர்ச்சியில் விழி விரித்தாள்.
“உண்மை தான் ஜென்சி.. அவன் எங்கமேல க்ரெஜ் வைச்சு எட்டீயை மட்டும் தான் தாழ்த்த நினைக்கிறதா நினைச்சேன்.. ஆனால் மத்த கம்பெனிஸில் அவனால ஏற்பட்ட பாதிப்புகளை பார்க்கும் போது எங்க இது ஒன்னுமே இல்ல.. இந்த லிஸ்ட்ல பாதி அவனால ஷேர்ஸ் இழந்து கம்பெனி நடத்தமுடியாம திவால் ஆனது… இன்னும் சில கம்பெனிஸோட ப்ராடெக்ஸ்ட் மேல கேஸ் போட்டு ரொம்ப தீவிரமா நடந்துட்டு இருக்கு.. அதில் அவன் வக்கீல் ஃப்ரெண்ட் ஒருத்தன் இருக்கான்.. ராமகிருஷ்ணனு அவனும் கூட்டு..!! இந்தியா ஃபுல்லா பெரிசு,சின்னதுனு பாரபச்சம் இல்லாம பல ப்ராண்டை நொறுக்கி இருக்காங்க.. போத் இன் லீகல் அண்ட் இல்லீகல் வே..!!!
இப்படி மனசாட்சியே இல்லாம எப்படி இத்தனை பேர் பொழப்பை கெடுத்தான்னு என்னால நம்பவே முடியல.. அடுத்தவங்களை அழிச்சு முன்னேற நினைச்சு இதெல்லாம் பண்ணினா அவனைவிட கேவலமானவன் யாரும் இருக்க முடியாது. முன்னாடியா இருந்தால் அவன் அப்படிதானு நினைச்சு அருவெறுத்து ஒதுக்கி இருப்பேன்.. ஆனால் உன் வார்த்தை மட்டுமே கொண்டு தான் இன்னும் விஷயங்களை ஆழமா ஊடுருவினேன் ஜென்சி..
இந்த எல்லா கம்பெனிஸ் பின்னாடியும் காமனா ஒரு பிரச்சனை இருந்திருக்கு.. அதாவது இந்த நிறுவனங்களோட ப்ராடெக்ட்ஸ் மேல சாமானிய மக்களால புகார் கொடுக்கப்பட்டுள்ளது.”
“புகார்னா.. என்ன மாதிரி..?”
“இது மோஸ்ட்லீ எல்லாமே உணவு பொருள் தாயாரிக்கும் நிறுவனம் தான் ஜென்சி.. சிலவை நம்ம மக்கள் அன்றாடம் யூஸ் பண்ணும் காஸ்மெடிக்ஸ்… அப்படியான ப்ராடெக்ட்ஸ் தரமானது இல்ல.. அதனால பாதிக்கப்பட்டுள்ளதா நிறைய இடங்களில் கம்ப்ளைன்ஸ் பதிவாகி இருக்கு.. ஆனால் பெருசா யார் கவனத்தையுமே கவராமல் அப்படியே கேட்பார் அற்று போயிருக்கு.. அவங்க சொல்ற கம்ப்ளைண்ட்ல சொல்லி இருக்க பாதிப்பு எல்லாம் ரொம்ப கொடுமையா இருக்கு.. இவ்வளவு தூரம் பாதிப்பு தந்துள்ள பொருள் எல்லாம் எப்படி நம்மிடைய ரொம்ப சாதாரணமா உலாவுச்சுனு நினைச்சாலே அதிர்ச்சியா தான் இருக்கு.. அந்த வகைல பார்க்கும்போது ஜோஷ்வா நல்லது தான் பண்ணி இருக்கான் ஜென்சி..
இது கோ இன்ஸிடெண்டா கூட இருக்கலாம்.. ஆனால் ஒருவேளை… ஒருவேளை… இதன் காரணமாக தான் ஜோஷ்வா செய்றான்னு சொன்னான்..”
என்று நிறுத்தியவன் தன் பேச்சை அதிர்ச்சியாய் உள்வாங்கி அமர்ந்திருந்த ஜென்சியை நோக்கி, “எங்க எட்டீ மேலையே சந்தேகம் வருது ஜென்சி..” என்றான் உள்ளே சென்றுவிட்ட குரலில்..
“புரியல ஜோ.. என்ன சொல்ல வர..”
என்ற அவள் கேள்வியில் ‘உடைத்து சொல்’ என்ற பாவணை இருக்க,
“இதோ பார்.. இதுல ஒருத்தர் தான் சரியா இருக்க முடியும்.. இன்கேஸ் ஜோஷ்வா சரி என்றால் நாங்க தான் தப்பு ஜென்சி.. எனக்கே தெரியாம ஏதோ நடக்குதுனு தான் அர்த்தம்.. இந்த விஷயம் தெரிஞ்சதில் இருந்து எனக்கு தூக்கமே இல்ல… அப்பா சித்தப்பானு யாரை பார்த்தாலும் சந்தேகமா இருக்கு..யாரிடமும் இதை பத்தி பேச கூட தயக்கமா இருக்கு..”
என்றவன் குரலில் வருத்தமும் குற்றவுணர்வும் வியம்பி இருந்தது.
ஜோசஃப் மனதால் கூட யாருக்கும் தீங்கிழைக்க நினைக்காத வெள்ளை மனதுடையவன் என்பது ஜென்சிக்கு நன்றாக தெரியும்.. ஆதலால் தன்னை மீறி நடக்கும் பாவங்களுக்கு தானும் ஒருவகையில் துணை நின்றுவிட்டோமோ என்ற பரிதவிப்பு அவனிடம் இருப்பதை நன்றாக உணர்ந்தாள்.
ஆதலால் மனதில் சுழன்ற ஜோஷ்வா பற்றிய எண்ணங்களை ஒதுக்கி,
“டோண்ட் கெட் எமோஷ்னல் ஜோ.. எமோஷ்னலான மற்ற விஷயங்களை உன்னால் தெரிஞ்சுக்க முடியாது.. எதையும் மறைக்க முயலாம உள்ளதை உள்ளபடியே பேசுறீயே அதுவே உன் நேர்மையை காட்டுது.. தப்பு பண்ணிட்டோமோனு சோர்ந்து போகாம தப்பு எங்க நடக்குதுனு பார் ஜோ..”
தோழியாய் அவனுக்கு ஆறுதல் சொல்ல தெளிவான அவள் பேச்சு அவனையும் சற்று தெளிவடைய செய்தது.
“என் சந்தேகங்களுக்கு எல்லாம் விடை ஒன்னு ஜோஷ்வாவிடம் மட்டும் தான் இருக்கும் ஜென்சி.. அவன் வாய் திறந்தால் தான் எதுவுமே என்னால செய்ய முடியும்..”
“அப்ப அவனை மீட் பண்ணி பேசலாம்ல..” என்று அவள் கேட்டதற்கு அவன் மௌனமாய் இருக்க,
“அவனிடம் இறங்கி போய் பேச ஈகோ தடுக்குதா ஜோ..” என்றாள் புருவம் உயர்த்தி..!!
“தெரியல.. ஆனால் இத்தனை நாள் நான் ரொம்ப சரினு இருமாப்போட இருந்தேன்.. அப்போ அவனை சந்திக்க எந்த தயக்கமும் இருந்தது இல்ல.. இப்ப.. இப்ப ஏதோ உறுத்துது.. அப்படியே நான் போய் பேசினாலும் அவன் ஏறுக்கு மாறா தான் பேசுவானே தவிர.. உண்மையை என்னுட்ட சொல்ல மாட்டான்.. அவனை மனசு திறந்து பேச வைக்கிறது அவ்வளவு ஈஸி இல்ல ஜென்சி..” என்று ஜோசஃப் சொல்ல சமந்தமே இன்றி,
“சொல்லணும் அவ்வளவு தானே.. சொல்லலாம்.. சொல்றேன்..” என்று ஜோஷ்வா தன்னிடம் சொன்ன வரியை அவள் மனம் ஞாபகப்படுத்த அதனை தட்டி மீண்டும் உள்ளே தள்ளினாள். அதேபோல் ஜோஷ்வாவின் நோக்கம் சரியானதாய் இருக்க கூடும் என்று அறிந்ததில் தன் மனம் ஏன் இத்தனை நிம்மதி அடைகிறது என்று தெரியவில்லை. ஆனால் நெஞ்சை அழுத்திய பாரம் ஒன்று இறங்கியது போல் இருந்தது.
“நீங்க ட்வின்ஸ் தானே ஜோ.. அப்புறம் ஏன் இரண்டு பேரும் எதிர் எதிர் துருவமா இருக்கீங்க.. அவனோட இந்த அடாவடியான குணத்துக்கு பின்னாடி எதாவது காரணம் இருக்கா ஜோ.. சின்ன வயசுல இருந்தே இப்படி தானா? (pascuccirestaurant.com) உங்களோட இல்லாம ஏன் தாத்தாவிடம் வளரணும்…”
ஜோஷ்வாவின் தனிப்பட்ட விஷயங்கள் தனக்கு எதுக்கு என்று அவள் வைத்திருந்த கோட்பாடுகளை எல்லாம் உடைத்து எல்லாவற்றையும் தெரிந்துக் கொள்ளவேண்டும் என்ற உந்துதலோடு கேட்டாள்.
அவள் சிந்தனை ஓட்டத்தை தடை செய்வதுபோல் விமானம் தரை இறங்குவதற்கு அறிவிப்பு வர அவனை திரும்பி பார்க்க அவன் அதே போல் தான் இன்னமும் இருந்தான்.
‘வந்தாச்சு.. ஒரு கை பார்த்திடலாம் ஜென்சி..’
என்று எண்ணியவளாய் நிமிர்ந்தமர்ந்தாள்.