“திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி” எனச் சம்பந்தரும், “தண் பொருநைப் புனல்நாடு” எனச் சேக்கிழாரும், “பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி” என்று கம்பரும் பாடிய முப்போகம் விளையும் பூமி, பிரசித்திபெற்ற நெல்லையப்பர் ஆலயம் வீற்றிருக்கும் நகரம்.
கிமு இரண்டாம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாகத் திகழ்ந்த, தமிழகத்தின் தெற்கே, தன்பொருனை எனப்படும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருநெல்வேலி நகரம்.
பகலவன் தன் பாரிய பொற்கதிர்களால் பூமியை வாரிச் சுருட்ட முயன்ற விடிகாலைப் பொழுதில் அல்வாவுக்கு மட்டுமல்லாது அரிவாளுக்கும் பெயர் போன அந்த திருநெல்வேலி நகரத்தை ஒட்டி இருந்த பூஞ்சோலை கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்டிருந்த பிரமாண்ட திருமண மண்டபம் முழுதும் ஜனக்கூட்டத்தில் சலசலத்திருந்தது.
உள்ளே மணமேடையில் ஆர்கிட் மலர் அலங்காரங்களோ காண்போர் கண்களைப் பறிக்க, அங்கு ஒலித்த மேளதாள வாத்தியங்களோ அனைவரின் செவித்திரையையும் வருடிக் கொடுக்க, குங்குமம், சந்தனம், பன்னீர் போன்ற வாசனைப் பொருட்களின் நறுமணங்கள் அங்கு குழுமியிருந்தோரின் நாசியை நிறைத்த வண்ணம் தான் இருக்க…
“நாழியாயிடுத்து பொண்ண அழச்சிண்டு வாங்கோ” என்ற ஐயரின் கூற்றில் மணமகள் அறையில் இருந்து அழைத்து வரப்பட்டாள், ராஹித்யா.
ஐந்தடி இரண்டு அங்குல உயரத்தில், தங்கத்தாலும் வைரத்தாலும் இழைத்த ஆபரணங்கள் பூட்டப்பட்டு மணப்பெண் அலங்காரத்தில் உறவுகளும், தோழிகளும் புடைசூழ தங்கப் பதுமையென அசைந்து வந்து மணமேடையில் மணமகன் அருகில் அமர்ந்தவள் மெல்ல வெட்கத்தோடு தன்னருகே இருந்தவனை ஏறிட்டு நோக்க, அங்கே வீற்றிருந்த அவளுடைய மாமன் மகனோ அவளை நோக்கி, “செம்மையா இருக்க ராஹி” என்று கிசுகிசுத்த வண்ணம் மலர்ந்த புன்னகையை உதிர்த்தவன், தன் கையிலிருந்த “கேட்பரீஸ் டைரி மில்க்” சாக்கலேட்டை புடவையின் மறைவில் அவள் கையில் திணித்தான்.
மணப்பெண் கோலம் பூண்டு தேவதையாய் தன்னருகே அமர்ந்திருந்தவளிடம் அவள் மாமன் மகன் அவளுக்கு மிகவும் பிடித்தமான அந்த சாக்கலேட் பாரை அவள் கையில் வைத்ததும் தான் மணப்பெண்ணாக அமர்ந்திருப்பதைக் கூட மறந்து தன் முறை மாமனை நோக்கி “தாங்க்ஸ் ஆது மாமா” என்று தெத்துப்பல் தெரிய சிரித்தவள்….
“ஏய் இப்ப நீ கல்யாணப் பொண்ணு அதனால கொஞ்சம் அடக்க ஒடுக்கமா இருடி” என்ற தன் இரட்டையின் கூற்றில் திரும்பி முன்னே இருந்தவர்களை நோக்கினாள்.
அங்கு மணமேடையை பார்வையிட்டவாறு குழுமியிருந்த அஸ்வின் மற்றும் யுவாவின் குடும்பத்தினரோடு ஊர் மக்களும் கூட அட்சதை பூக்களோடு தயாராக நிற்க…
ஐயரோ, “கெட்டிமேளம், கெட்டிமேளம்” என்று உரைத்தார்.
ஆத்விக்கும் தன் கையிலிருந்த மங்கள நாணை ராஹியின் கழுத்தருகே கொண்டு சென்ற வேளை ராஹியின் பார்வை அவளையும் அறியாமல், தன்னெதிரே, அஸ்வினை விட உயரமாக நின்றிருந்த ஆதித்யாவின் மேல் ஒரு கணம் படிய, அவனோ அவளைப் பார்த்து ஸ்டைலாக ஒரு கண்ணை அடித்துச் சிரிக்க, அதைப் பார்த்த பெண்ணவளுக்கோ தூக்கி வாரிப்போட்டு, “ராமா” என்ற கதறலோடு எழுந்து அமர்ந்தாள் ராஹித்யா.
தம்பியின் கையால் தாலி வாங்க அமர்ந்திருப்பவளை நோக்கி அண்ணன் கண்ணடித்துச் சிரிக்கவும் அதிர்ச்சியில் வாரிச் சுருட்டி எழுந்த பெண்ணவளோ சுற்றி முற்றியும் பார்க்க, அந்த அறையோ சற்று முன்னர் இருந்த எந்த கோலாகலங்களும் இல்லாமல் வெறுமையாக இருந்தது.
கண்களை கசக்கி விட்டுக் கொண்டே அறையை மட்டுமல்லாது, தன்னையும் குனிந்து பார்த்துக் கொண்டவளுக்கு அப்பொழுதுதான், தான் தன்னறை படுக்கையில் உறங்கி விழித்திருப்பது புரிபட, அவளோ “ச்சே எல்லாம் கனவா.?” என்று தலையில் தட்டிக் கொண்டாள்.
இத்துணை நேரம் நடந்தது அனைத்தும் கனவு என்று உணர்ந்து கொண்டவளுக்கு கனவில் வந்த திருமண நிகழ்வும் அதில் தோன்றிய ஆத்விக்கின் முகமும் அவளிதழில் சிறு புன்னகையை உற்பத்தி செய்ய….
ராஹியோ, “காலையில கண்ட கனவு பழிக்கும்னு சொல்வாங்கல்ல” என்று கேட்டு சிரித்துக் கொண்டவாறு படுக்கையில் இருந்து எழப் போனவளுக்கு கனவில் இறுதியாகத் தோன்றிய ஆதித்யாவின் முகமும் ஞாபகம் வர…
அவளோ “அய்யோ ராமா” என்று மீண்டும் படுக்கையிலே விழுந்து, தன் வெண்டை பிஞ்சு விரலில் கிரீடம் போல் இருந்த நகங்களைக் கடிக்கத் தொடங்கினாள்…
“கனவுல ஆது மாமா தாலி கட்ட வந்தாங்க சரி ஆனா இந்த ஆதி டெவில் எதுக்கு என்னப் பாத்து கண்ணடிச்சான் அவனுக்கும் எனக்கும் சின்னப்புள்ளயிலயே ஆகாதே, காலைல கண்ட கனவு வேற பலிக்கும்னு சொல்லுவாங்களே… கடவுளே இப்ப நா என்ன செய்வேன்” என்று புலம்பிக் கொண்டே அமர்ந்திருந்தவள்… திருநெல்வேலி பூஞ்சோலையைச் சேர்ந்த யுவராஜ் மலர்விழியின் இரட்டை தேவதைகளில் ஐந்து நிமிடம் முந்திப் பிறந்தவள்.
சுண்டக் காய்ச்சிய பாலில் ஒரு பொட்டு குங்குமப் பூவை இட்டால் அதில் கிட்டும் சந்தன வண்ணத்தில், சற்றே பூசிய உடல் வாகோடு யுவாவின் புன்னகை தவழும் வசீகர வதனத்தின் சாயல் மட்டுமல்லாது, அவனுடைய குறும்புடன் கூடிய அரவணைக்கும் தன்மையும், கூடவே தந்தையின் சொத்தான பிடிவாத குணத்தையும் குத்தகைக்கு எடுத்து பிறந்து வளர்ந்தவள் ராஹித்தியா….
திருநெல்வேலி சென் சேவியர் கலைக் கல்லூரியில் போன வருடம் தான் தன்னுடைய பி காம் படிப்பை ஒரு வழியாக முக்கி முக்கி முடித்திருக்கும்
22 வயது பூம்பாவை…
விடிந்தது கூடத் தெரியாது சற்று முன்னர் வரை நன்கு உறங்கிக் கொண்டிருந்த ராஹித்யா திடீரென்று “ராமா” என்று அலறும் சப்தம் கேட்டு…
அங்கிருந்த குளியலறைக் கதவைத் திறந்து வெளிபட்ட சாஹித்தியா… “ஏய்… என்னாச்சுடி.?” என்று தமக்கையிடம் வினவினாள்.
ராஹியை விட ஐந்தே நிமிடங்கள் பிந்திப் பிறந்த சாஹி பார்ப்பதற்கு அப்படியே ராஹியின் நகல் போல இருந்தாலும், நிறைய விஷயங்களில் அவளுக்கு எதிர்மறை குணம் கொண்ட, சாஹியின் தோற்றம் கூட ராஹியைப் போல் அல்லாது வளைவு நெளிவுகளை அழகாக எடுத்துக் காட்டும் சற்றே ஒடிசலான தேகம் கொண்டு, மலர்விழியின் அன்று கறந்த பாலின் நிறத்தோடு அவளின் மென்மை குணங்களையும் தனதாக்கிப் பிறந்து வளர்ந்திருப்பவள், ராஹி படித்த சென் சேவியர் கல்லூரியின் கிளைக் கல்லூரியில் (cse) எனப்படும் தன்னுடைய இன்ஜினியரிங் படிப்பின் இறுதியில் இருக்கிறாள் அதே 22 வயதுப் பொற்ப்பாவை.
தன் கேள்வியைக் கூட உணராது ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்தவளின் தோளில் தட்டியவள், “டீ ராஹி ஏண்டி கொஞ்சம் முன்ன அப்டி கத்துண.?” என்று மீண்டும் வினாத் தொடுக்க…
ராஹியோ அப்பொழுது தான் சுயநினைவு பெற்று, “ஹான்” என்று தன் இரட்டையை ஏறிட்டு நோக்கியவள் “அது வந்து, வந்து ஒரு ஒரு க…க… கனவுடி சாஹி” என்று திணறினாள்…
மற்றயவளோ, “கனவா.! அதுக்கா உயிர் போற மாறி கத்துண.? இப்டி கத்துற அளவு கனவுல என்ன பிசாசையா பாத்த.?” எனக் கேட்டு இதழ் பிரித்துச் சிரித்தவள் கருமை வண்ண அருவியாய் வழிந்த தன் நீளக் கூந்தலை அவிழ்த்து துவட்டத் தொடங்கியவாறே, “அப்டி என்ன கனவுடி.?” என்று வினவினாள்.
சாஹியின் பிசாசு என்ற சொல்லில், சிறு வயதில் ஆதி தன்னை டெவில் என்று திட்டியது நினைவில் வர, அத்துணை நேரம் கனவை நினைத்து அதிர்ந்திருந்தவளின் முகமோ நிமிடத்தில் கோப உணர்ச்சிக்கு இடம் பெயர்ந்தது.
ராஹியோ, ‘நீ சொன்னாலும் சொல்லாட்டியும் கனவுல வந்தது கிட்டதட்ட பிசாசுதாண்டி’ என்று எண்ணிக் கொண்டவளுக்கு அந்த பிசாசு செய்த காரியமும் கண் முன்னே வந்து செல்ல…
அவளோ தலையை உலுக்கி தன்னை சமன்படுத்திக் கொண்டவள், தங்கையை நோக்கி, “கனவு கெடக்கட்டும் நீ என்ன இவ்ளோ சீக்கிரம் எங்க கெளம்பிட்டிருக்க, உனக்கு எக்ஸாம் கூட நேத்தே முடிஞ்சிர்சில்ல.?” எனக் கேட்டாள்.
சாஹித்யாவும், “எக்ஸாம் முடிஞ்சிட்டு ராஹி… ஆனா இது பைனல் இயர் இல்லியா, அதான் இன்னிக்கு காலேஜ்ல கேம்பஸ் இன்டெர்வியூ நடக்குது, அதுல செலக்ட் ஆனா பெரிய பெரிய கம்பெனீஸ்ல கூட வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கு” என்று விழிகள் மின்னக் கூறியவளை ஆதூரமாகப் பார்த்த ராஹியும் அனைத்தும் மறந்து…
“ஹேய்… ஆல் தி பெஸ்டி, நீ கண்டிப்பா செலக்ட் ஆவடி” என்று தங்கையின் கை குலுக்கி வாழ்த்த…
அவளும், “தாங்க்ஸ்டி” என்று சொல்லிக் கொண்டவளும் கல்லூரிக்குச் செல்ல ஆயத்தமாக, ராஹித்யாவும் தந்தையின் தொழிற்சாலைக்குச் செல்ல குளித்துத் தயாராகி வந்தாள்.
ரோஜா வர்ணத்தில் எம்பிராய்டரி ஒர்க் செய்யப்பட்ட, உடைத்த காப்பிக் கொட்டை வண்ண அனார்கலிச் சுடிதாரில் இருவரும் ஒன்று சொன்னார் போல் தயாராகி, தேவதைகள் போல் இறங்கி வந்தவர்களை, அங்கு குழுமி இருந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் விழி எடுக்காது பார்த்திருக்க…
அப்பொழுதுதான் தங்கள் அறையிலிருந்து வெளிப்பட்டு உணவு மேஜை நோக்கி வந்து கொண்டிருந்த யுவாவும் மலரும் கூட தங்கள் இருவரின் நடை உடை பாவனைகள் அனைத்தும் கலந்து செய்த தங்களின் கயல்விழிக் காரிகைகளை பூரிப்போடுதான் பார்த்தபடி வந்தனர்.
இருபது இருக்கைகள் போடப்பட்டிருந்த நீள்வட்ட உணவு மேஜையில் ராஹி சாஹியோடு அவர்களின் மொத்த குடும்பமும் குழுமியிருக்க, அனைவருக்கும் சேர்த்து…
“குட்மார்னிங்” உரைத்தபடி அமர்ந்த நங்கைகளோ தங்கள் எதிரே அமர்ந்த தந்தைக்கும் தனியாக, “குட்மார்னிங் யுவிப்பா” என்று சொல்ல…
அவனும், “வெரி குட்மார்னிங்டா பட்டூஸ்” என்று பதிலுரைத்தவன்…
“என்ன ரெண்டு பேரும் இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரமே கிளம்பிட்ட மாறி இருக்கு.?” என்றும் வினவினான்.
யுவாவின் கேள்வி என்னவோ இருவருக்கும் பொதுவாகத்தான் என்றாலும் அவன் பார்வை என்னவோ ராஹியின் மேலேயே புன்னகையோடு படிந்திருக்க, அவன் பார்வை புரிந்த மற்றயவர்களும், “அதானே… ராஹிம்மாவே இன்னிக்கு இவ்ளோ சீக்கிரம் எந்திரிச்சி கிளம்பிருக்குன்னா பூஞ்சோலை முழுசும் மழை பிடிச்சு ஊத்தப் போகுது போலவே” என்று சொல்லிச் சிரிக்க…
ராஹியோ, “போங்க பெரிம்மா, போங்க பாட்டி” என்று செல்லமாய்ச் சிணுங்கினாள்.
சிறு பிள்ளையாய்ச் சிணுங்கிய பெரியவளின் தலை தடவிச் சிரித்த மலரும், “ஏண்டாமா இன்னிக்கு உனக்கு காலேஜ் இருக்கா என்ன.?” என்று தன் கல்லூரிப் பையோடு அமர்ந்திருந்த இளையவளிடம் வினவ…
அவளைப் பார்த்த யுவாவின் விழிகளும் மனைவியின் கேள்வியை ஆமோதிக்க….
பெற்றோரை நோக்கிய சாஹியோ, “ஆமாமா காலேஜ் இருக்கு… இன்னிக்கு கேம்பஸ் இன்டெர்வியூப்பா” என்று அன்னையிடம் தொடங்கி தந்தையிடம் முடித்தாள் பெண்.
சாஹியின் பதிலில் அங்கே உணவருந்திக் கொண்டிருந்த இரட்டைகளின் தம்பியும் யுவாவின் தவப் புதல்வனுமான பிரித்திவ்ராஜோ, “உங்க ஒன்றயண்ணா காலேஜ்ல கேம்பஸ் இன்டெர்வியூலா நடக்குதா சாஹிக்கா.?” என்று கிண்டல் செய்ய…
அவன் அருகில் அமர்ந்திருந்த யுவாவின் அண்ணன் தனாவின் இளைய மகன் நவீனோ, “அப்டி கேளுடா பிரித்திவ்” என்று அவனுக்கு ஹைபை அடித்துக் கொள்ள…
அதை பார்த்த ராஹித்யாவோ “டேய் வாலுகளா உங்களுக்கு வாய் ரொம்ப ஜாஸ்தியாகிசிச்சுடா, இருங்கடா வாய்லயே போடுறேன்” என்று அவர்களை அடிப்பதற்குத் துரத்தினாள்.
சிறு வயது யுவாவையும் தனாவையும் பிரதி எடுத்தார் போல் பதின்ம வயதின் மத்தியில் இருந்த அவர்களின் புதல்வர்கள், தங்கள் தமக்கை ராஹியின் கரங்களில் சிக்கி சில பல கொட்டுக்களை வாங்கிக் கொண்டு, “சுஜாக்கா காப்பாத்து” என்று அனைவருக்கும் மூத்தவளான தனாவின் மகளிடம் ஓடி வந்தவர்களை “உங்களுக்கு நல்லா வேணும்டா” என்று மீண்டும் ராஹியிடம் பிடித்துக் கொடுத்த சுஜாவோ…
“இன்னும் ரெண்டு போடு ராஹி” என்றும் சொல்லிச் சிரித்தவள் சாஹித்யாவிடம் திரும்பி, “பிரசன்டேசன்லா பிரிப்பேர் பண்ணிட்டியா சாஹி.?” என்று வினவினாள்.
சாஹியும், “பண்ணிருக்கேன்க்கா” என்று பதில் கொடுத்தவளும் தன் உடன் பிறப்புகளின் கலாட்டாவை ரசித்த வண்ணம் உண்டு முடித்து கை கழுவி எழுந்து கொள்ள…
பெரியவர்களும் அவளுக்கு “பெஸ்ட் ஆப் லக்” சொல்லி அனுப்பி வைக்க…
அடுத்த பத்து நிமிடங்களில் தன் இரட்டை கதிர்களோடு, அந்த அரண்மனை வீட்டின் அடுத்த ஆண் வாரிசுகளையும் சுமந்து கொண்டு யுவாவின் ராங்குலர் திருநெல்வேலி நோக்கி அவன் கைகளில் சீறிப் பாயத் தொடங்கியது.