செந்தூராவின் பாதத்தை குனிந்து பார்த்த வம்சி கிருஷ்ணா தான் மாட்டி விட்ட மெட்டி செருப்பின் உபயத்தால் இன்னும் அழுத்தம் கூட்டி அவள் விரல் சிவந்து போய் தெரிந்ததில், வம்சி கிருஷ்ணா மெட்டியை கழட்ட நினைத்தான்..
மகன் செந்தூரா பாதம் தொட்டு என்ன செய்கிறான் என்று பார்த்து கொண்டே வந்த கோசலை மகன் மெட்டியை கழட்ட நினைக்கிறான் என்று தெரிந்ததும்..
“வம்சி.. என்ன செய்யிற..?” என்று மற்றவர்களின் காதில் விழாத வண்ணம் மகனிடம் பேச்சு இருந்தாலுமே பார்வை கோபமாக மருமகளை பார்த்தது..
இந்த முறை செந்தூராவுக்கு மாமியார் ஏன் முறைக்கிறார் என்பது தெரிந்து விட்டது.. மகன் என் கால் பிடித்து கொண்டு இருப்பதை பார்த்து தான் என்று புரிந்து கொண்ட செந்தூரா..
“இல்ல அத்தை நான் வேண்டாம்.. என்று தான் சொன்னேன்..” என்ற மருமகளின் பேச்சை காதில் வாங்காது மகனிடம்.. “என்ன வம்சி இது.” என்று குறைப்படுவது போல் கேட்டவர்.
பின்.. சலிப்பது போல்.. “இப்போ எதுக்கு மெட்டி கழட்ட பார்த்த..?” என்று கேட்டார்..
“இது போல செருப்பு போட்டு இவளுக்கு பழக்கம் இல்ல. எந்த பிரகஸ்பதி போடு என்று சொன்னாங்க என்று தெரியல. போட்டுட்டு இப்போ கால் வலியும் எடுத்து இருக்கு சிவந்தும் போய் இருக்கு.” என்று சொன்னவனிடம்..
“நான் தான் அந்த செருப்பு வாங்கி கொடுத்தது.. போடவும் சொன்னது.. உன் உயரத்துக்கு நிற்க வேண்டாமா..? அப்போ தானே பார்க்கிறவங்களுக்கு ஜோடி பொருத்தம் நல்லா இருக்கும்..” என்று சொன்னதுமே..
வம்சி கிருஷ்ணா.. “அம்மா இப்போ பார்க்கிறவங்க அபிப்பிராயம் ரொம்ப முக்கியமா..?” என்று கேட்டவனிடம்..
“என்ன வம்சி கொஞ்ச நேரம் இந்த செருப்பை போட்டு நிற்க முடியாதா. அவளுக்கு உன் கிட்ட முடியாது என்று சொன்னாளா…” என்று கோசலை கோபத்துடம் மருமகளை பார்த்தார்.
“அம்மா..” என்ற மகனின் அழுத்தமான அழைப்பில் தன் கோபத்தை கை விட்டு.. “சாப்பிட தான் கூப்பிட வந்தேன்.. இனி நிற்க வேண்டாம்..” என்று சொன்னவர் போகும் போது முனு முனுப்பாக..
“இதோ கொஞ்ச நேரம்.. முடிந்து விட்டது… இதுக்கு இந்த ஆர்ப்பாட்டம்..” என்று சொல்லி விட்டு தான் சென்றார்.. அந்த வார்த்தை பின் வந்த வம்சி செந்தூரா இருவரின் காதிலும் வழவும் தான் செய்தது.
இந்த கோசலை அத்தை. ஏன் இப்போ எல்லாம் எதுக்கு என்றாலும் என்னையே குறை சொல்றாங்க. முதல் எல்லாம் அப்படி இல்லையே என்ற யோசனையோடு தான் செந்தூரா வம்சியோடு சாப்பிட சென்றது..
முன் செந்தூரா கோசலைக்கு வெரும் நாத்தனார் பெண் மட்டுமே.. அதுவும் எந்த பிக்கல் பிடுங்கல் இல்லாது நாத்தனார் இறந்து விட.. அவ்வப்போது விடுமுறைக்கு மட்டுமே வந்து செல்லும் பெண்..
ஆனால் இப்போது அப்படி இல்லையே தன் மகனை திருமணம் செய்து கொண்டு மருமகளாக வந்த பின் முன் கண்ணுக்கு தெரிந்த சின்ன விசயங்கள் அனைத்துமே இன்று பெரியதாக தானே பார்க்க தோன்றும்.. ஏன் என்றால் அவள் தானே அவர்கள் வீட்டு குடும்ப கவுரவம்..
கோசலை அத்தையின் பேச்சுக்கு வம்சி ஏதாவது சொல்வான் என்று கணவன் முகத்தை பார்க்க.. அவனோ தன் பக்கம் நடந்து வந்து கொண்டு இருந்த அவனின் தந்தை கிருஷ்ண மூர்த்தியிடம்..
“தொழில் துறை அமைச்சரிடம்.. பேசினிங்கலாப்பா..” என்று ஏதோ கேட்டு கொண்டு இருந்தான்.. பின் அவளின் கவனம் கணவன் மீது இருந்து உணவு மீது வந்து விட்டது.. அன்றும் ஏதோ விரதம் என்று சொல்லி விட்டனர்..
இத்தனை விருந்து சமைத்து வந்தவர்களுக்கு போட்டு விட்டு.. இவர்களுக்கு விரதம் என்று சொல்லி விட்டனர்.. நல்ல வேளை இன்று பழங்கள் சாப்பிடலாம் என்று விட்டனர். தப்பித்தேன் இல்லை என்றால் செந்தூரா தாலி கட்டும் முன் மயக்கம் போட்டு விழுந்து இருப்பது உறுதி.. ஏன் என்றால் செந்தூராவின் பசி தாங்கும் தகுதி அவ்வளவே..
சாப்பிட்டு முடித்து விட்டு வீடு வந்து.. அந்த சாங்கியம் இந்த சாங்கியம் என்று செய்ய வைத்து தம்பதியர்களை ஒரு வழி செய்து விட்டனர்.. இத்தனை செய்தும் வம்சி கிருஷ்ணா ஒய்ந்து போகாது திடமாகவே தெரிந்தான்.. ஆனால் செந்தூராவுக்கு தான் முடியவில்லை.. இது எல்லாம் எப்போதுடா முடியும் என்று இருந்தவளை..
ஸ்வேதா “வா வந்து ரெஸ்ட் எடு.” என்று தான் வந்தால், தங்கும் அறைக்கு அழைத்து சென்றாள்.. கூட விந்தியாவுமே. இந்த முறை வர்ஷாவுக்கு அவர்கள் கூட்டணியில் தடா.. என்று ஸ்வேதா சொல்ல..
வர்ஷா ஏன் நான் வந்தே ஆவேன் என்று அடமாக நின்று கொண்டாள்..
“உனக்கு இன்னும் மேரஜ் ஆகல வர்ஷா. நீ சின்ன பெண்.. “ என்று கிண்டல் செய்ய..
பழக்க தோஷத்தில் வர்ஷா.. “நான் சின்ன பெண்ணா.. என்னோடு சின்னவ செந்தூராவிடம் பேசுவிங்க என் கிட்ட பேச மாட்டிங்கலா..” என்று விளையாட்டு பேச்சு போல் தான் வர்ஷா இதை சொன்னது..
அதற்க்கு ஸ்வேதாவுமே அதே விளையாட்டாக..” சின்ன பெண் என்றாலும் அவளுக்கு மேரஜ் ஆகிடுச்சி.. உனக்கு நாங்க பேசுறது கேட்டு நீ கெட்டு போயிட்டேனா..” என்று பேச. வர்ஷாவும் விடாது..
“இப்போ இல்லை என்றாலும் எப்போவாவது கல்யாணம் ஆகி தானே தீரும்.. அதனால் உங்க பேச்சில் நான் இருக்கலாம் தப்பு இல்லை..” என்று அடமாக அவர்களுடன் அறைக்கு சென்று விட்டாள்..
இந்த பேச்சுக்கள் ஹாலில் அனைவரும் கேட்க தான் நடந்தது.. கேட்ட அனைவர்களுக்குமே ஒவ்வொரு விதத்தில் அந்த பேச்சுக்கள் பாதிக்க செய்தது.
கோசலையே… “இனி என்ன அத்தை வர்ஷாவுக்கு சீக்கிரம் ஒரு நல்ல இடமா பாருங்க.. இனி பிரச்சனை இருக்காது என்று நினைக்கிறேன்..” என்று வர்ஷாவின் அத்தையே இந்த பேச்சை கேட்டு சொல்லும் போது பெத்த தாய் பத்மினியின் மன நிலை என்ன மாதிரி இருக்கும்..
மகளின் திருமணம் நின்றது.. அடுத்து அவர் உடல் நிலை சீர்கெட்டு போனது.. இதோ இன்று வந்த உறவுகள் ஒருவர் விடாது கேட்டது.
“செந்தூரா உன் மகளோடு சின்ன பெண் தானே. கல்யாண மேடை வரை வந்த பெண்ணை ரொம்ப நாள் வீட்டில் வைத்து இருக்க முடியாது.. அதோடு தன்னோடு சின்ன பெண் புருஷன் கூட வாழும் போது அதை பார்க்கும் பெண் மனது கெட செய்யும்.” என்று இது போல் வார்த்தைகள் சொல்வது உண்மையில் அக்கறையிலா…? இல்லை மற்றவர்களின் கஷ்டத்தை பார்த்து குளிர் காய்வதற்க்கா என்று தெரியாது போல் தான் அவர்கள் சொன்ன விதம் இருந்தது..
செந்தூராவை அழைத்து கொண்டு ஸ்வேதா தங்கி இருந்த அறைக்கு வந்த மூன்று பெண்களின் பேச்சு சில சமயம்.. 18+ தொட்டு தொட்டு தான் வந்தன..
சில வார்த்தைகளில் செந்தூரா ஒரு மாதிரி கூச்சத்துக்கு ஆளாகியும் போனாள் தான்.. ஆனால் அதை எல்லாம் சிரித்து கொண்டோ.. வெட்கம் கொண்டு முகத்தை குனிந்து கொண்டே கடந்து விட்டாள்.. காரணம். அவர்கள் மூன்று பேரும் அவளின் ஒத்த வயதுடைய பெண்கள் என்பதினால் இருக்கலாம்..
ஆனால் அன்று இரவு சடங்குக்கு என்று அவளை ஸ்வேதா விந்தியா அலங்கரித்து கொண்டு இருந்தனர்.. இதற்க்கு வர்ஷா வர கூடாது என்று தாத்தா பாட்டி அழுத்தி சொல்லி விட்டதால், வர்ஷா முன்பே சாப்பிட்டு விட்டு தன்னுடைய அறைக்குள் சென்று விட்டாள்..
வர்ஷா சொல்லும் பேச்சு கேட்கும் பெண்ணா ஸ்வேதா கூட கிண்டலாக கேட்டாள்.. ஆனால் உண்மை காரணம் வர்ஷாவின் உள்மனது மட்டும் அறிந்த ரகசியம் அது.. மதியம் ஸ்வேதா அறையில் அந்த 18+ பேச்சுக்கள் பேசும் போது முதலில் அவளுமே கலந்து கொண்டு ஸ்வேதா விந்தியா பேச்சை கேட்டு கொண்டு தான் இருந்தாள்..
ஆனால் பேச்சுக்கள் போகும் திசையில் வர்ஷாவின் இளம் மனம் கொஞ்சம் ஏக்கம் கொள்ள தான் செய்தது. புது மணப்பெண்ணாக அமர்ந்து இருந்த செந்தூராவை பார்த்து. இவள் என்னோடு சின்ன பெண் என்ற அந்த நினைவும்.. அவள் மனதில் ஒரு வெறுமையை கூட்டியது.
அதனால் தான் பாட்டி சொன்னதுமே தன் அறைக்குள் சென்று விட்டாள்..வர்ஷா சங்கடத்தில் இருந்து தப்பித்து கொண்டு விட்டாள்.. ஆனால் இங்கு செந்தூரா..
ஸ்வேதா விந்தியா செந்தூராவை அலங்கரித்து சிறு சிறு பேச்சு கிண்டல்கள் என்று அனைத்திற்க்குமே செந்தூரா சின்ன சிரிப்பு மட்டுமே பதிலாக கொடுத்து இருக்க.
விந்தியா தான் ஸ்வேதாவிடம்.. “என்ன ஸ்வே இவள் இப்படி இருக்கா…பாவம் அண்ணன் ரூமை வருண் ஆள் வைத்து டெக்ரேஷன் செய்து கொண்டு இருக்கான். இவளை பார்த்தால், அது எல்லாம் வேஸ்ட் ஆகிடும் போல.” என்று சொல்ல..
ஸ்வேதா .. “நாம எல்லாம் பேச்சு மட்டும் தான்.. ஆனா செந்தூரா போல ஆளுங்க செயல் என்று வந்துட்டா. நீ வேணா பாரு.. எண்ணி பத்துமாசத்துல என்னை பெரியம்மாவாகவும்.. உன்னை அத்தையாகவும் ஆக்குறாளா இல்லையான்னு பாரு.” என்ற இந்த பேச்சு பேசும் போது இருவருக்கும் தெரியவில்லை..
பேசி முடித்த பின்.. அதுவும் விந்தியா தன் கையை அடி வயிறு மீது வைத்து ஸ்வேதாவை பார்க்க ஸ்வேதாவுமே ஒரு மாதிரியாக தான் விந்தியாவை பார்த்தது.. இருவருக்குமே கரு உண்டாகி கலைந்தது தான் அவர்களின் இருவரின் நியாபகத்திற்க்கும் வந்தது.
நல்ல வேலை அவர்களின் அந்த சங்கடத்தை போக்க கோசலை “அந்த அறைக்கு கையில் ஒரு நகையை எடுத்து வந்து செந்தூராவின் கழுத்தில் மாட்டி விட்டார்..
அது பார்க்க புது நகையாக தெரிந்தது.. விந்தியா தான் செந்தூராவின் கழுத்தில் இருந்த அந்த கழுத்து மாலையை தூக்கி பிடித்து கொண்டு.. தன் அன்னையிடம்..
“புதுசா மா..?” என்று கேட்டதற்க்கு. “ ஆமாம்..” என்று மகளிடம் பதில் சொன்னவர் .. மருமகளிடம்..
“இதை கழட்ட கூடாது செந்தூரா..” என்றும் கூறினார்..
அந்த கழுத்து மாலையை கைyiல் பிடித்து கொண்டு இருந்த விந்தியா.. “போட்டு படுத்தா நகை நசுங்கி விடும் மா..” என்று சொன்னதற்க்கு கோசலை.
“நசுங்கினா பரவாயில்லை..” என்று மகளிடம் கூறிய கோசலை மீண்டும் மருமகளை பார்த்து. “சொன்னது நியாபகம் இருக்கட்டும் செந்தூரா. தூங்கும் போது கூட இதை கழட்ட கூடாது. நசுங்கும் எல்லாம் பார்க்காதே.. இன்னும் கேட்டால் இந்த மாலை நசுங்கினா தான் எனக்கு சந்தோஷம்..” என்ற இந்த பேச்சு அனுபவம் வாய்ந்த ஸ்வேதா விந்தியாவுக்கு ஏன் என்று புரிந்து விட்டது..