பூர்ணிமா அவள் வாழ்க்கையிலேயே மிகவும் அடம்பிடித்தது என்றால் இந்த கல்லூரியில் சேருவதற்காகத்தான். அதில் வெற்றி அடைந்தாலும் புது இடம் எப்படி இருக்குமோ என்ற பயம் இருந்தது.இந்த மூவர் நட்பு கிடைத்ததும் அது விலகியதும் அவளுக்கு நடந்த இன்னொரு அற்புதமான ஓர் விஷயம்.
அவளுக்கு அருண், புவன், சிரன் மூன்று பேரும் உடன்பிறவா தம்பிகள் ஆனார்கள்.அவளுக்கு ஏற்றது போல் அவர்களின் போக்கை மாற்றிக் கொள்வதை பார்க்க அவர்களின் மீது இன்னமும் அன்பும் பாசமும் பெருகும்.
பூர்ணிமாவுக்கு புரியாத புதிரென இருப்பது இந்த தமயந்திதான். சட்டென பழக பயப்படும் பெண் யார் உதவி கேட்டாலும் செய்வாள். அடுத்தவர் கஷ்டப்படக்கூடாது என நினைப்பவள் சில நேரம் ஒதுங்கி போவாள். சில நேரம் ஆறுதலாக இருப்பாள் பலநேரம் எதோ யோசனையிலேயே இருப்பாள். நட்பென்று கொண்டாட இடம் அளிக்கவில்லை என்றாலும் யாரோ எவரோ என்று போகாமல் பட்டும் படாமல் இருக்கிறாள். தம்பிகள் மூவரும் அவளை அவர்களுடன் சேர்க்க பாடுபடுவதும் அவள் அவர்களை ஒதுக்கி தள்ளுவதும் பார்க்க பார்க்க சிரிப்பாக இருக்கும்.
பூர்ணிமா “சிரன் ஏதாச்சும் மூவி போகலாம் இந்த வீக் எண்ட்”
சிரஞ்சீவி “யக்காவ் சிரஞ்சீவி அழகான பேருக்கா”
புவன் “சிரன் மிஸ்டர் சிரன் கார் கொஞ்சம் ஓரம் நிறுத்துங்க சிரன்” சிணுங்களாக பேசி கிண்டல் செய்தான்.
பூர்ணிமா “அதெல்லாம் தெரியாது நீ எனக்கு சிரன் தான்.அருண்,புவன்,சிரன் ரைமிங்கா இருக்கு மேன் அப்படி கூப்பிட”
சிரஞ்சீவி “என்னமோ போங்க ஐ ஆம் பீலிங் பேட்”
புவன் “எனக்குலாம் ஜாலியாதான் இருக்கு”
சிரஞ்சீவி “அருண் கிட்ட கேளுங்க அவங்க தியேட்டர்க்கே போகலாம்”
பூர்ணிமா “கமான் காய்ஸ் ஒரு மூவி போலாம்” கேட்டாள் ஆர்வமாக
அருண் “ஏற்பாடு பண்ணிடலாம்”
அவர்கள் கல்லூரிக்கு வந்து சேர்ந்ததும் அருணும் அவளும் சீக்கிரமே வகுப்பறைக்கு வந்து சேர்ந்தனர்.
அவள் மேஜைக்கு வந்தவள் வகுப்பிற்கு தயாராகிக் கொண்டிருக்கிற நேரம் தமயந்தி அவள் இருக்கைக்கு வந்தாள்.
அவள் பின்னாடியே வந்த அந்த ‘மாடல்’ மாலதி தமையந்தி முதுகில் ஓங்கி அடிக்க திரும்பியவள் தமயந்தி “எதுக்கு அடிக்கிற” கேட்டாள் அதிர்ச்சியில்
மாலதி “எதுக்குடி என் சான்ஸ் திருடுன”
தமயந்தி “திருடினனா நான் எதையும் திருடல” கோபமாக பேசினாள்
மாலதி “ஏபி நார்மல் பிராண்டுக்கு நீ தானே மாடலிங் பண்ணிருக்க அது என்னோடது” ஆத்திரமாய் பேசினாள்
அருண் மாலதியை பார்த்தான். அடக்கிய குரலில் “யாரும் யாருதும் திருடல உன் இடத்துக்கு போ” என்றான் அதிகாரமாய்
மாலதி “என்ன அருண் மிரட்றியா பூமிக்கு சொல்லவா என்ன ஆகும் தெரியும்ல” கீரிச்சிட்டாள்.
அவள் பேச்சில் தமயந்தி கண்கள் பயத்தில் விரிந்து அவனை பார்க்க. தமயந்தி பார்வையில் அவன் என்ன கண்டானோ பதிலுக்கு எதுவும் பேசாமல் அவளை கோபமாக மட்டுமே பார்த்தான்.
தமயந்தி “இப்போ என்ன பிரச்சனை உனக்கு”
மாலதி “வெக்கமா இல்ல உனக்கு” என்று கை ஓங்க
தமயந்தி “இன்னொரு வாட்டி அடி விழுந்தது கை இருக்காது” மிரட்டியவள் அவள் நோட்டில் இருந்து பேப்பர் கிழித்து தமயந்தியை மாடலிங்க்கு அழைத்த பிராண்ட் மேனேஜர் கைபேசி எண்ணை எழுதி “இதுதான் அந்த மேனேஜர் நம்பர் போ போய் பேசிக்கோ” என்று அவள் முகத்தில் வீசி எறிந்தாள்.
அந்நேரம் அங்கே வந்து சிரஞ்சீவி மாலதியின் பின்னந்தலையில் அடித்து “என்ன வழி மறைச்சிட்டு நிக்கிற” அகங்காரமாக கேட்க மாலதியால் அவனை முறைக்கத்தான் முடிந்தது.
தமயந்திக்கு உச்சகோபத்தில் கை கால் எல்லாம் நடுங்கியது
சிரஞ்சீவி “தம் தம் தமயந்தி வாயேன் ஒரு ஐஸ்கிரீம் சாப்ட்டு வருவோம்”
தமயந்தி “இல்ல எனக்கு வேணா” என்றவள் வகுப்பறையை விட்டு வெளியே சென்றுவிட்டாள்.
சிரஞ்சீவிக்கோ யாரிந்த கிறுக்கி என்றே தோன்றியது. இதே இந்த இடத்தில் வேறெந்த பெண் இருந்திருந்தாலும் உடனே அவனிடம் புலம்பி அழுது ஆர்ப்பாட்டம் செய்திருப்பாள். அருண் முகம் கடுகடுவென இருந்தது. அவனிடம் முழுதாக நடந்ததை விசாரிக்கவும் முடியாத நிலை.
இரண்டு மணி நேர வகுப்பில் தமயந்தி இல்லாமல் அவள் அமரும் இடம் காலியாக இருக்க, அவளுக்கு என்ன ஆனதோ என்கிற படபடப்பு பூர்ணிமாவுக்குள்.
பிரேக் முடிந்து வந்தவள் முகம் கொஞ்சம் தெளிவாக தெரிய
“யூ ஓகே” பூர்ணிமா கேட்க
தமயந்தி “குட்” என்றாள் சின்ன சிரிப்புடன்.
உணவு மேஜையில் பூர்ணிமா “தம்ஸ் வீக் எண்ட் படத்துக்கு போலாம் வரியா” என்று கேட்க தமயந்தி சட்டென அதிர்ந்து முழித்தாள்.
“ஐயோ அது… இப்போ தான் வேற ஒரு ஃப்ரெண்ட் கூட போக பிளான் பண்ணேன். நீங்க எங்க கூட ஜாயின் பண்ணிக்கறீங்களா” தமயந்தி சமாதானமாக கேட்க
பூர்ணிமா மூவர் கூட்டணியை பார்த்து “என்ன காய்ஸ்” என்று கேட்க தமயந்திக்குள் ஓர் பூகம்பம்.
புவன் “ நாங்க ரெடி பா”
பூர்ணிமா “சொல்லு எந்த தியேட்டர்”
தமயந்தி “அது…” தயங்க
சிரஞ்சீவி “விண்டேஜ் தியேட்டர் தானே”
தமயந்தி “ஆக்சுவலி இன்னும் பிக்ஸ் ஆகல” சமாளிக்க முடியாமல் இழுத்தாள்
புவன் “அதான் இன்னும் ரெண்டு நாள் இருக்கே பிக்ஸ் பண்ணிக்கலாம் விடுங்க ” என்றான் கூலாக
பூமிகாவும் தமயந்தியும் ஞாயிற்றுக்கிழமை முழுக்க ஊர் சுற்ற திட்டமிட்டிருக்கிறார்கள். பூமிக்கு பிடித்தது போல ஒரு படம், பூமிக்கு பிடித்தது போல ரெஸ்டாரண்டில் சாப்பாடு, பூமிக்கு பிடித்த மாதிரி டிரஸ் எடுத்த பின்பு பூமி திருவாரூர் கிளம்பப் போகிறாள் இவள் ஹாஸ்டல் வந்து விடுவாள். இந்த திட்டத்தில் இப்போது எங்கிருந்து பூர்ணிமாவை உள்ளே நுழைப்பது. பூர்ணிமா மட்டும் என்றால் பரவாயில்லை, கூடவே மூன்று குரங்குகளும் வருகிறதே. அதில் ஒன்று கிறுக்கு, இன்னொன்று மூர்க்கம் மற்றொன்று அமைதி என்றாலும் ஆர்ப்பாட்டம்தான். பூமிகாவுக்கோ பெயர் தான் பூமி ஆனால் கொஞ்சமும் பொறுமை இல்லாதவள்.இவர்களெல்லாம் ஒருவரை ஒருவரை சந்தித்தால் தமயந்திக்கு ஒரு குரங்கு சரணாலயத்தையே சமாளித்தாக வேண்டிய நிலை வருமே!
தமயந்தி பெரிதாக எதற்கும் பிடி கொடுக்காமல் இரண்டு நாட்களை தட்டி கழிக்க அவர்களும் பெரிதாக எதுவும் பேசாததில் பிளான் கான்செல் போல என்ற முடிவுக்கு வந்தாள்.
தமயந்தி சனிக்கிழமை கல்லூரி முடிந்ததும் பூமி வீட்டுக்கு போனவள் தான். பூமியின் ஆரவார கூத்தாட்டதில் எல்லாமே மறந்தது.
பூமிகா “தம்மு அந்த ஊர் தண்ணி எனக்கு ஒத்துக்கும் தானே! ஸ்கின் டான் ஆச்சி இல்ல பிம்பிள்ஸ் வந்தா நான் திரும்பி வந்திருவேன் பார்த்துக்கோ. நீ வீக் எண்ட் உங்க ஊருக்கு வரும்போது என்னை வந்து பார்க்கணும் என்ன?”
தமயந்தி ” வரேன் கண்டிப்பா வந்து பார்ப்பேன்”
பூமி “எனக்கு போகவே பிடிக்கல தெரியுமா”
தமயந்தி “சூப்பரா இருக்கும் மீபூ போயிட்டுவா”
பூமி “நீ சொல்றதால தான் போறேன். ஆனா அங்க போய் சளி பிடிச்சிட்டா”
தமயந்தி “சூடு தண்ணியே குடி பச்ச தண்ணி குடிக்காத”
பூமி “நான் யார் துணையும் இல்லாம உன்ன மாதிரி வேற ஊருக்கு போக போறேன். எக்ஸைட்டிங்கா இருக்கு”
தமயந்தி “ஆமா ஜாலியா இருக்கும்”
இருவரும் பேசிக்கொண்டே வழக்கம் போல ஒரு கொரியன் டிராமா எடுத்து வைத்து அமர்ந்தனர். அடுத்தநாள் காலை ஆறு மணிக்கு படம் பார்க்க டிக்கெட் புக் செய்திருக்கிறாள் பூமி.
தமயந்தி”ஆறு மணிக்கு தியேட்டர் போனுமா”
பூமி “நீ வேற ஆறு மணிக்கு ஷோ. நாம அஞ்சரைக்குள்ள கிளம்பிடலாம்”
தமயந்தி “அடியே எங்கூர்ல எல்லாம் கோயிலுக்கு போகதான்டி அஞ்சு மணிக்கு புறப்படுவோம்”
பூமி “அதுவும் கோயில் தான்டி. சினிமா கோயில். நீ வந்து பாரு உனக்கு அந்த இடம் ரொம்ப பிடிச்சிரும்”
அந்த இரவு ஒவ்வொரு எபிசோட் போக போக இங்கே சிப்ஸ், பிஸ்கட், நூடுல்ஸ் என்று உள்ளே சென்றுகொண்டே இருந்தது.
நான்கு மணிக்கு தூங்கி, ஐந்து மணிக்கு எழுந்து, தயாராகி படம் பார்க்க சென்றனர் இருவரும்.
தமயந்தி “பூமி தூக்கம் வருதுடி. சத்தியமா நான் படம் பார்க்க போறது இல்லடி ”
அவள் ஆசை வாகனத்தை செலுத்தி கொண்டே பூமிகா “தாராளமா நீ தூங்கலாம். நாம மட்டும் தான் தியேட்டர்ல இருப்போம் நினைக்கிறேன்”
தமயந்தி“என்னது நாம மட்டு பாக்கறதுக்கு எதுக்குடி தியேட்டர்.வீட்லே பாக்கலாம் தானே”
“அங்க அப்படி பார்த்தாதான்டி நல்லா இருக்கும்”
இவர்கள் தியேட்டர் வந்தபோது ஊரே தூக்கத்தில்தான் இருந்தது. தமயந்தி “இந்த நேரத்துக்கெல்லாம் எவனாவது தியேட்டர் வருவானா” புலம்பிக்கொண்டே இருந்தாள்.
ஒரு பெரிய கட்டிடத்திற்குள் நுழைந்தவர்கள் கீழிருந்து ஒவ்வொரு தளமாக சென்று அங்கே முதன்முதலில் சினிமா எடுக்க பயணப்பட்ட கமெரா, சிவாஜி எம்.ஜி.ஆர் கால ஆடைகள், படமெடுக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் எல்லாம் பார்த்து வியந்து ரசித்து கடைசித் தளத்தில் இருக்கும் தியேட்டர்க்குள் நுழையும் போது மணி ஆறை கடந்திருந்தது.
இருவரும் உள்ளே நுழைந்த நிமிடம் திரையில் படம் ஓட தொடங்க இருட்டில் சீட் இடுக்கில் இருந்து எழுந்து பலூன் உடைத்து பூர்ணிமா “சர்ப்ரைஸ்” என்று கூவினாள்.
தமயந்திக்கும் பூமிக்கும் அதிர்ச்சிதான் என்றாலும் தமயந்தி “ஹே பூர்ணிமா” என்று சிரிக்க பூமி சுதாரித்தாள்.
திரை வெளிச்சம் அரங்கு முழுதாக பரவ கடைசி வரிசையில் மூவர் கூட்டணி தீவிரமாக திரையை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்.
சிரஞ்சீவி “ஹாய் தமயந்தி” என்றான்
பூமிகாவுக்கு எரிச்சல் மண்டியது.
மீண்டும் அவனே “எங்க வரமாட்டியோ நெனச்சோம்” என்றான்
பூமி சீட்டில் அமர்ந்து மெதுவாக கேட்டாள் “என்னடி சொல்றான் அவன்”
“அது அவங்க படத்துக்கு கூப்ட்டாங்க. நான் வரல தான் சொன்னேன். ஆனா அவங்க எப்படி இங்க வந்தாங்க தெரியல பூமி”
பூமிக்கு கண்களில் நீர் குளம் கட்டியது.
படம் தொடங்கி திரைக்காட்சிகள் எல்லாம் பார்க்க பார்க்க தமயந்திக்கு அட! இந்த படம் நாம வீட்லே டிவிலே பார்த்திருக்கோம் தானே என்ற எண்ணமே எழுந்தது. அதையே அவள் பூமியை கேட்க “இந்த தியேட்டர் பெயரே வின்டேஜ் தியேட்டர் தான்.இங்க பழைய படம் தான் போடுவாங்க. இந்த சூப்பர்மேன் படம் எனக்கு ரொம்ப புடிக்கும். இன்னிக்குதான் கடைசி. மத்தியான ஷோவே வேற படம் போட்டுருவாங்க. அதுக்கு தான் காலைல புக் பண்ணேன்” என்றாள் இறுகிய குரலில்.
சில நேரம் பூமியின் மூளை எப்படி வேலை பார்க்கும் என்றே தெரியாது.சட்டென எதையும் தூக்கியெறியும் பழக்கம் உண்டு. பிடித்ததே என்றாலும் கோபத்தில் தூக்கி எறிந்துவிட்டு அழும் ஆள். அம்பிகா ஆன்ட்டி மகளுக்கு என்று யார் யாரையோ பிடித்து அவளுக்கென பிரத்யேக ராகம் சொல்லிக்கொடுக்க பிரத்யேக பாட்டு டீச்சர் பிடித்திருக்கிறார்.இந்த கோபத்தில் ‘நான் திருவாரூர் போகல’ சொல்லி விடுவாளோ என்கிற பயம் பிடித்தது தமயந்திக்கு.
தமயந்தி “சாரி மிபூ” என்றாள் ஆழ்ந்த குரலில்
சட்டென அழுதுவிட்டவள் “ஐயோ தம்மு ப்ளீஸ் சாரி எல்லாம் சொல்லாத. இது உன் லைஃப். நீ என்ன வேணா செய்யலாம். யார் கூட வேணா பழகலாம்”
தமயந்தி “நான் அவங்க கூடலாம் பிரெண்ட்ஷிப் வச்சிக்கல பூமி, அழாத”
பூமிகா “நான் அழல படம் மட்டும் பார்க்கலாம் ப்ளீஸ்” என்றவள் நெருப்பின் மேல் அமர்ந்திருப்பது போல் அமர்ந்திருந்தாள்.
இடைவேளையின்போது மற்ற நால்வரும் அரங்கம் விட்டு வெளியே போக கடைசி வரிசைக்கு வந்தனர் தோழிகள் இருவரும். அவன்கள் கண்படும் இடத்தில் அமர அவளுக்கு இஷ்டமில்லை.
அவர்கள் ஆர்டர் செய்யாமலே தமயந்திக்கும் அவளுக்கும் காபி,பன் அதுவும் பூமிகாவிற்கு பிடித்த ஜாம் பன் வந்தது. தமயந்திக்கு பசியில் அது உள்ளே வேகமாய் இறங்க, பூமி கஷ்டப்பட்டு சாப்பிட்டாள்.
அவள் அசௌகரியம் தெரிந்தோ என்னவோ கடைசி வரிசைக்கு வராமல் அரங்கத்தின் கதவுகள் பக்கமே மூவர் கூட்டணியும் பூர்ணிமாவும் சென்று அமர்ந்துகொண்டனர்.
நேரம் செல்ல செல்ல பூமிகா தளர்ந்தவள் பேச தொடங்கினாள்.
பூமி “அவங்க கூட பழகாதன்னு சொல்ல முடியல தம்மு என்னால ஆனா அவங்க பிரண்ட்ஷிப் நல்லது இல்லன்னு சொல்றேன்”
தமயந்தி அவளை திரும்பி பார்க்க
பூமி “அவங்கள எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும். பேமிலி பிரெண்ட்ஸ் தான் எல்லோரும். நான் படிச்ச ஸ்கூல்ல தான் படிச்சாங்க. ஒரு வருஷம் சீனியர்” என்றாள்.
தமயந்திக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
“அவங்கள்ல அருண் இருக்கான்ல அவன் யார் தெரியுமா? இந்த தியேட்டரே அவங்களுதுதான்”
கேட்டவள் அதிர்ந்தாள்.
பூமி “அருண் அண்ணான்னு கூப்பிடுவேன். பயங்கர ஷார்ப் அவன். கண், மூக்கு, நாக்கு, மூளை எல்லாமே ரொம்ப ஷார்ப் அவனுக்கு. அவன் கண்ணுல இருந்து எதுவும் தப்பாது. அருந்ததீ ஃபிலிம் கார்ப்பரேஷன், ஏ.என்.ஆர் தியேட்டர்ஸ், ஏ. என். ஆர் ஸ்டூடியோஸ்,தீம் பார்க் எல்லாம் அவங்களதுதான். அவன் அப்பா கூட பாலிவுட்ல பெரிய ஆளுன்னு கேள்வி பட்டுருக்கேன்”என்றாள்.
தமயந்திக்கு விஷயத்தை கிரகித்துக்கொள்ள நேரம் எடுத்தது.
மேலும் தொடர்ந்தாள் பூமி “ நம்ம வீட்டுக்கிட்ட பெருசா யானை பொம்மை வெச்ச கல்யாண மண்டபம் ஒன்னு உனக்கு பிடிக்கும் தானே! அது இந்த புவன் ஃபேமிலியோடது தான். சின்னய்யா செல்லம்மாள் அவன் தாத்தா பாட்டிதான். அருண் அண்ணா ஃபேமிலிக்கு சினிமான்னா இவன் ஃபேமிலிக்கு இல்லாத பிஸ்னெஸ்ஸே இல்லை. சிமெண்ட் பேக்டரி, பால் பண்ணை, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஸ்டார் ஹோட்டல், கல்யாண மண்டபம், ரியல் எஸ்டேட்ன்னு எக்கச்சக்கமா இருக்கு. தாமரை ஹாஸ்பிடல் ஓனர் இவன் சித்தப்பாதான். இவன் அப்பா அம்மா பிலிம் போர்ட்ல பெரிய பொசிஷன்ல இருக்காங்க. அவங்க இவனை கண்டுக்கமாட்டாங்க, இவன் அவங்களை கண்டுக்கமாட்டான். இவனை இவன் தாத்தா பாட்டிதான் வளர்த்தாங்க. அவங்க போன அப்பறம் சிரஞ்சீவி வீட்ல தான் இருக்கான். அடுத்து சிரஞ்சீவி. இவங்க மூணுபேரும் என்னமோ இந்த சிட்டியே அவங்க இஷ்டப்படி தான்னு நடந்துக்க காரணமே சிரஞ்சீவியோட அப்பா கபிலன் அங்கிளால தான். அவர தெரியாம அவருக்கு தெரியாம இந்த சிட்டில வாழ்ந்துட்டு போறதுதான் நல்லது. கட்ட பஞ்சாயத்து, அடிதடி, கூட்டத்துக்கு ஆள் சேர்த்துறது, விஐபி ஆட்களுக்கு அவங்க பின்னாடி நின்னு செய்ய்யக்கூடாத வேலை எல்லாம் செஞ்சு தர்றதுன்னு அந்த அங்கிள் எல்லா வேலையும் செய்வார். பெரிய ரவுடி அந்த அங்கிள்.அவன் அம்மா டெலிவெரிலே இறந்துட்டாங்க அதனால பையன்னா அவ்ளோ செல்லம். அவன் என்ன கேட்டாலும் நடக்கும். பத்தாவது படிக்கும் போது நம்மகிட்ட கீர் சைக்கிள் இருந்தாலே பெரிய விஷயம் இவனுங்ககிட்ட ஜப்பான்ல இருந்து வந்த இம்போர்ட்டட் கார் இருந்தது. அதுல தான் ஸ்கூல்க்கு வருவானுங்க ”.
“அப்படியா” என்று தமயந்தி வாயை பிளக்க,
“அந்த அங்கிள்க்கு லீகல் பிஸ்னஸ்ன்னா சரக்கு லாரி அதாவது லாஜிஸ்டிக்ஸ் இங்க போர்ட்ல இருந்து ஊர் ஊரா லாரில அனுப்புறது,அப்பறம் சினிமா பைனான்ஸ் பண்றது மட்டும்தான். இப்போ ஸ்கூல்ஸ்ல காலேஜ்ல எல்லாம் ஷேர் வாங்கி போட்டுட்டு இருக்கார்ன்னு கேள்விப்பட்டேன். நீ படிக்குற காலேஜ்ல கூட ஷேர் இருக்கு அவர்க்கு.எல்லா எடத்துலையும் அவருக்கு ஆள் பலம் உண்டு. இந்த சிட்டில அந்த அங்கிள் லோ-க்ளாஸ் மக்களுக்கும் ஹை-க்ளாஸ் மக்களுக்கும் நடுவான ஆளு. ரெண்டு பக்கமும் இணைச்சுவிட்டு வேலை பார்ப்பார். ஆனா கொஞ்சம் நல்ல மனுஷன் நிறைய ஹெல்ப் எல்லாம் பண்ணுவார் ”
பூமியின் பேச்சில் ‘லோ க்ளாஸ் ஹை க்ளாஸ்” வார்த்தை தமயந்தியை என்னமோ செய்தது. அவள் முகம் சுணங்கியது கூட பார்க்காமல் அவள் கதையை தொடர்ந்தாள் பூமி “அந்த அங்கிள் செம ரவுடியான ஆளு. நாங்க சின்ன வயசுல இருந்தப்போ ஒரு ஸ்டார் ஹோட்டல்ல எதோ ஒரு ஈவென்ட்க்கு போனோம். நான், புவன், அருண் ,சிரஞ்சீவி எல்லாரும் இருந்தோம். அங்க ஸ்னாக்ஸ்க்கு ஒரு ஸ்டால் வச்சு ஸ்வீட் காபி கொடுத்துட்டு இருந்தாங்க. சின்ன பசங்க எல்லாம் ஸ்வீட் எடுத்து எடுத்து சாப்பிட்டுட்டே இருந்தோம். புவன் எடுக்க போகும் போது அந்த சர்வர் எடுக்காதன்னு அவன் கைய தட்டிவிட்டான். சிரஞ்சீவிக்கு கோவம் வந்து அங்க பக்கத்துல ஸ்வீட் கொடுக்க வச்சிருந்த கிண்ணத்த எல்லாம் தட்டிவிட்டான் பாரு, பாத்திரம் விழுந்த சத்தத்துக்கு எல்லோரும் அங்க வந்துட்டாங்க. அருண் நடந்தத சொல்ல அந்த அங்கிள் மானேஜர்க்கு விட்டார் பாரு அறை ஒன்னு.அடுத்து ஈவென்ட் முடிஞ்சு போகும்போது அவங்க காருக்கு ட்ரே ட்ரேவா ஸ்வீட் போச்சு. அதுக்கு அப்பறம் எங்க ஸ்கூல்ல ஈவென்ட்க்கு கூட அந்த ஸ்வீட் தான் கொடுப்பாங்க” என்றவள் “அவனுங்க பிரெண்ட்ஷிப் வேணாம் தம்மு.அவனுங்க மேல க்ரஷ் வர்றத தடுக்க முடியாது அது கொடுக்கிற இம்சை எல்லாம் அனுபவிக்க முடியாது. நீ ரொம்ப இன்னசென்ட், உன் நோக்கம் ஒரு லட்ச ரூபா சம்பளம் கொடுக்கிற வேலை வாங்குறது.அதுல மட்டும் கவனமா இரு” சொல்லிவிட்டு அழுதாள்.
தமயந்தி “எதுக்குடி அழற? அழாத”
பூமி “எனக்கு தெரியல தம்மு ஒரே ஸ்கூல் மெமரீஸா ஓடுது மண்டைக்குள்ள”
தமயந்தி“சரி வா வீட்டுக்கு போலாம்”
பூமி “வேண்டாம்” என கத்தியவள் “வேண்டாம் அந்த வீட்டுக்கு வேணவே வேண்டாம்” என்றவள் மண்டையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.